சனி, ஜனவரி 29, 2011

இராமன் எனையாளும் தெய்வம்

காப்பு
தென்னவனின் தோளேறித் தென்னிலங்கை வென்றவனை
மன்னுபுகழ் பாரதத்தின் மக்கள்புகழ் நாயகனை
பண்சமைத்துப் பாடிடுவோம் பக்தர்களே நாமும் கூடி
கண்ணிணைகள் காப்பாமே கலியுகத்து மாந்தருக்கு..

நூல்
1. தசரத கோசலை ஈன்ற தர்மத்தின் தலைவனாம்
தசமுகன் இலங்கை வென்ற சத்திய வரதனாம்
அசைவறு மனத்தாலொன்றி அவன்தாள் தொழுவோருக்குத்
திசையெலாம்புகழும் வாழ்வைத் திண்ணமாய் அளிப்பவனாம்

2. சனகனார் கண்டெடுத்த மிதிலையின் நாயகியைக்
கனகத்தால் தாலிதந்துத் தன்வசம் ஈர்த்தவனாம்
ஈசனார் வில்லொடித்து இமையோரும் வியந்திடவே
பாசமாய் சீதைதனை மனையாளாய்க் கொண்டானாம்.

3. பொல்லாள் கைகேயி வஞ்சகத்தால் நாடிழந்து
வல்லானும் சென்றானே வனவாசம் தானும்நாடி!
கண்ணானைத் தானும் நீங்கா கண்ணாள்தன்னுடனே
அண்ணாவை நீங்காத இலக்குவனும் நகர்நீத்தான்.

4. கங்கைநதிக் கரைதனிலே கள்ளமில்லா அன்புகொண்ட
அங்கைக்கனி குகனும்தான் ஆதரவு தந்திட்டானே..
பரதாழ்வான் தானும் நாடி பாதுகையை வேண்டிடவே
இரங்கினான் கலைபுகழும் காவியத்தின் நாயகனே!

5. அகிலத்து ராசனவன் அயோத்தி இராமனுக்கு
மகிழ்வான மனம்தானே கானகத்து எங்கனுமே
சித்திரங்கள் தோற்கும் எழில் சீதைக்கும் இராமனுக்கும்
புத்திரனாய்த் தானிருந்து மகிழ்ந்தானே இலக்குவனும்.

6. சலனமில்லா வாழ்வழிக்க வந்தாளொரு சூர்ப்பனகை
சலனத்தால் காமங்கொண்டு இலக்குவனைத் தானும் நாடி!
அறுபட்டாள் தன் மூக்கு, காதிரண்டும் அரக்கியவள்!
வெறுப்போடு தானும் சென்றாள் தன்னண்ணன் நகர் நோக்கி!

7. தீந்தமிழ்ப் பாவலனாம் தென்னிலங்கைக் கோமானும்
செந்தமிழால் ஈசனையே சேவிக்கும் இராவணனாம்
காமத்தால் மதியிழக்கும் காமுகனைத் தன் சொல்லால்
காமத்தின் விதிவழிக்கே வீழ்த்திட்டாள் தங்கையுமே

8. மைதிலியின் பேரழகைக் கேட்டெழுந்த இராவணனும்
மாதிறத்தால் தன்னிலங்கை மாநரம் சேர்த்திடவே
மாரீசன் என்னுமொரு மாயனைத் தன் துணைக்கொண்டான்
பேரிடியாய்த் தன்னகரம் பெருமழிவு கண்டிடவே!

9. மாயமான் பின்சென்ற அண்ணலையும், தம்பியையும்
மாயத்தால் ஏய்த்த இராவணனும் சீதைதனை
சிறைசெய்து பறந்தானே சிங்கார நகரம் நோக்கி
மறையெலாம் அழுதனவே அன்னையவள் குரல்கேட்டு!

10. மாமனின் தோழனவன் மன்றம்புகழ் சடாயுவுமே
காமுகனைத் தடுத்திடவே கடுஞ்சினம்தான் கொண்டானே
முதுமைகொண்ட கழுகாலே முடியாது போனதய்யா..
பதுமையான சானகியைப் பார்த்தவரால் ஆகலியே!

11. கண்ணுக் கினியாளைக் காணாத இராமனுமே
கண்கலங்கி நின்றானே! கலைகளெலாம் அழுதனவே!
தம்பியவன் கரம்பிடித்துத் தேடுகின்றான் தென் திசையில்
நம்பியோர்க் கெல்லாம் நலம்புரியும் நாயகனே.

12. சிறகொடிந்து வீழ்ந்திருந்த சடாயுவுமே வழிபகர்ந்து
அறஞ்செய்து மாண்டானே அண்ணலவன் திருமுன்னே!
தந்தையின் காரியத்தைத் தவிர்த்திட்டத் தலைமகனும்
விந்தையிங்கே புரிந்தானே தந்தையின் தோழனுக்கு!

13. தென்னிலம் நோக்கி வந்த அண்ணலுக்கும் ஆருயிர்க்கும்
சென்னிகுனி சேவகத்தால் அன்புசெய்தார் வானரரே!
வாயுமைந்தன் வான்புகழும் வலிமைமிகு மாருதியும்!
வாலியொடு பிணங்கி நின்ற தம்பியவன் சுக்ரீவனும்!

14. வாலியின் கதை முடித்துத் தம்பிக்கு வளந்தந்த
தாலிவரே நாயகராமெனவேக் கொண்டனரே வானரரே!
நாயகனின் தேவியினைத் தேடிவர நாற்றிசையும்
பாய்ந்தனரே பலங்கொண்ட வானரரும் தலைவனுமே!

15. அனுமன் சென்று மீண்டான் அரக்கர்தம் தென்னிலங்கை
கனிமொழிதானும் தந்தான் கற்புடை நாயகிக்கே!
அரக்கர் நகரழிய ஆணைசெய் ஆஞ்சநேயன்
சிரத்தால் தொழுது நின்றான் சீர்மிகு இராமனையே!

16. வானரப் படைகளன்று வானவரும் பயங்கொள்ளும்
கானரக்கர் நகர் நோக்கிக் கால்நடையாய்ச் சென்றனவே!
கடற்கரை வந்து நின்ற கலைபுகழும் நாயகனைக்
கடல் தாண்டித் தொழுது நின்றான் கள்ளரக்கன் தம்பியுமே!

17. வீடணனைத் தம்பியென்றான் வில்லேந்தும் இராமனுமே!
காடணையும் வானரரும் கற்பாலம் கட்டினரே!
இராமநாமஞ்சொல்லும் வானரசேனை அன்று
இராவணன் நகருக்குள் நாசஞ்செய்யப் புகுந்தனரே!

18. கொன்றழித்தான் தசமுகனைத் தசரத மைந்தனுமே!
வென்றதே இராமசேனை! வெல்கவே இராமநாமம்!
காதலர் மீண்டும் கூடிக் களித்தனர் வாழியவே!
ஆதலால் தாமும் ஆடிக் களித்தனர் வானரரே!

19. அண்டமெலாம் மகிழும்படி அயோத்தி மீண்டனரே
பண்போற்றும் இராமனுடன் இலக்குவ சீதையரே!
மண்ணுலகம் போற்றும் நல்ல மணிமகுடம் சூடித் தானும்
விண்ணுலகும் போற்றும் வண்ணம் வாழ்ந்தானே இராமனுமே!

20. ஆளுகின்றான் இன்று எந்தன் மனத்திருந்து - வருவினைகள்
மாளுகின்ற மாயமது அறியேனே அகிலத்தோரே!
இராமனே எனையாளும் தெய்வம் என்றேன்! இரகு குல
சோமனவன் வாழியவே! பாடிடுவீர் பக்தர்களே!

(முற்றும்)

கருத்துகள் இல்லை: