திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 59 & 60


தீபங்களின் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் அடியேனின் நல்வாழ்த்துக்கள்.. அடுத்த பாடலைக் காண்பதற்கு முன்...
வைரவம் எனும் திருத்தலத்தில் அன்னை சிவகாமி நிகழ்த்திய திருவிளையாடலை இன்றையதினம் உரைப்பதாக எழுதியிருந்தோம்... தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் தட்டார்மடத்திற்கு அருகே உள்ள ஊர்தான் வைரவம் என்றழைக்கப்படும் வைராபுரி பட்டணம். இவ்வூரானது பார்புகழும் திருச்சீரலைவாயிலிருந்து தென்மேற்கில் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்விடத்தில் அன்னை சிவகாமி உடனுறையும் ஞானாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. கி.பி 9 & 10ம் நூற்றாண்டுகளில், கொம்மடிக்கோட்டை சிற்றரசன் ராயன், அழகிய சுந்தரபாண்டியன் மற்றும் 7 மழவ சிற்றரசர்கள் கூடி இவ்வாலயத்தை அமைத்ததாக ஆலய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.  தமிழகத்தில் ஈசனை மூலவராகக் கொண்ட திருக்கோயில்கள் 5200க்கும் மேற்பட்டன உள்ளன. அவ்வாலயங்களில் உறையும் ஈசனாரின் திருநாமங்களில் ஞானாதீஸ்வரர் எனும் திருநாமத்தில் ஐயன் உறையும் ஆலயம் இது ஒன்றே என்பது ஆலயத்தின் தனிச்சிறப்பு. சரி அன்னை சிவகாமி நிகழ்த்திய சிறு விளையாட்டினைக் காண்போம்.. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள், அரசு அதிகாரி ஒருவர் இவ்வாலயத்திற்கு வந்திருந்தார். தான் வழிபடும் நேரம் முடியும் வரை பிறரையெல்லாம் வெளியிலிருக்க உத்தரவிட்டார். அவ்வமயம் கண்பார்வை குறைந்த பாலசுப்பிரமணிய கவிராயர் என்பவரும் வந்து சேர்ந்தார். அன்றாடம் அன்னையைப் பாடும் ஏழைப்புலவர் அவர். அவர் வந்த சமயம் ஆலயத் திருக்கதவு தாளிட்டிருந்தது.. தன்னை உள்ளே அனுமதிக்கும்படி வேண்டினார். ஆனால் அனுமதி மறுக்கப் பட்டது.. உடனே கவிராயர், "சீவனுக்குத்தான் தெரியவில்லை. சிவனோ சிவனே என்றிருக்கிறான்.. சிவகாமியே உனக்குமா தெரியவில்லை?" என்று கேட்க, தாளிட்ட கதவு தானே திறந்தது. கவிராயர் உள்ளே நுழைந்ததும், அதிகாரிக்குக் கோபம் தலைக்கேறியது. தாளிட்ட கதவு தானே திறந்தது என்ற நிகழ்வை அவர் நம்பவில்லை. கவிராயரை மிகவும் தூற்றினான். தான் ஒரு பூமாலையை அன்னையின் திருவாயிலில் கட்டுவதாகவும், பாட்டாலேயே கதவைத்திறந்த புலவன் தன் பாமாலையால், இப்பூமாலையை மூன்று துண்டாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டான். பாடவைப்பவளின் சக்தியையும், பாடுபவனின் பக்தியயையும் அறிந்தவனா அவன்? ஆயினும் கவிராயருக்குத் தெரியாமல் ஒரு இரும்புச்சங்கிலியை பூமாலைக்குள் வைத்துக் கட்டிவிட்டான். தொங்கும் மாலை மூன்று துண்டாக வேண்டும் என்று அவன் பணிக்க, புலவனோ " நாலடி பாட மாலை நாலு துண்டாகும்" என்றான். இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட மாலை எங்கே துண்டாகப் போகின்றது என்றெண்ணிய அவ்வதிகாரி, நான்காவது துண்டைத் தன் தலையில் ஏற்பதாகவுரைத்தான். கயமையை அறியாத கவிஞனும் பாட்டைத் துவங்கினான்.
"ஞாலம் புகழும் ஞானாதி ஈஸ்வரப்பா
பாதி நித்திய கல்யாணி சிவகாமி பதியில் வாழும் சிவகாமியம்மையே நீ
வீர்சடாரி விளங்கு ரத்னமாரி வாலசிவகாமி
உன்வாசலில் கட்டிய மாலை துண்டு"
என்றதும் பூமாலையின் ஒரு பகுதி இரும்புச் சங்கிலியோடு துண்டாகி விழுந்தது. கீழே விழுந்ததும் உலோகச் சத்தம் கேட்டது கூடியவர் அனைவரும் விக்கித்துப் போயினர்.. புலவனோ தொடர்ந்தான்.
"துண்டு" என்க இரண்டாம் துண்டு விழுந்தது.
"துண்டு" என்க மூன்றாம் துண்டு விழுந்தது.
நான்காவது துண்டைத் தன் தலைமேல் ஏற்பதாகக் கூறிய அதிகாரி பதைபதைத்தான். ஓடிவந்தான். அறம்பாடும் கவியின் வாயைப் பொத்தினான். பாட்டை நிறுத்தும்படி வேண்டினான். தன்னைக் காப்பாற்றினால் அரச போக வாழ்வைத் தருவதாக வாக்களித்தான்.
புலவனோ,
"பொன் வேண்டாம், பொருள் வேண்டாம்,
பகலில் இரு கட்டி, இரவு ஒரு கட்டி" என்றான். மூன்று வேளை உணவு மட்டுமே இவ்வுயிர் வாழ்வதற்குப் போதும் என்பதை உணர்த்தினான். ஆனபோதிலும் அறப்பாட்டை முடித்தே தீருவேன் என்றும் கூறிவிட்டான். மன வருத்தத்தில் ஆழ்ந்த அதிகாரியின் கதறல் புலவனை இரங்க வைத்தது.  எனவே நான்காவது முறை "துண்டு" என்னாமல், "சாலவே" என்று பாட்டை முடித்தான். எனவே பூவோடு விழுந்த சங்கிலி அதிகாரியின் தலையைத் தாக்காமல், அன்னையின் திருவருளால் தலைப்பாகை மீது பட்டு விழுந்தது. அகங்காரத்தால் வந்த வினை, அகங்காரத்தின் அடையாளமான தலைப்பாகையுடன் புலவனின் கருணையால் நின்றது..
சரி.. இனி அபிராமியைக் கவனிப்போம்..

பாடல் ஐம்பத்தொன்பது
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே

விளக்கம் : தனிப்பெருமை பெற்ற நீண்ட கரும்பு வில்லையும், ஐந்து மலரம்புகளையும் கொண்டு நிற்கும் அபிராமி அன்னையே... உன்னை விடுத்து வேறு தஞ்சம் இல்லையென்று அறிந்திருந்தும்,உன்னையடையும் தவநெறிகளை நெஞ்சத்திற்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று நினையாமலேயே இருக்கின்றேன்.. பஞ்சை விட மெல்லிய பாதங்களைக் கொண்ட பெண்டிர், தம் மக்கள் செய்த தவறுகளுக்காக அவர்களை அடிக்க மாட்டார்கள் அன்றோ?? அதுபோல் நீயும் என்னைத் தண்டியாது அருள வேண்டும்.
பெற்ற தாய் தாம் பெற்ற மக்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை அடிப்பதில்லை... அவர்களின் அன்பு மிகுதியால் அக்காரியத்தை அவர்கள் செய்வதில்லை.. மானுடக்குலத்தில் உதித்த இப்பெண்களே இவ்வாறெனின், அன்னையே... நீ உலக மாந்தருக்கெல்லாம் தாய்... என்னை நீ தண்டிப்பாயோ??? இல்லவே இல்லை..அது நீ பெருங்கருணை பெற்றவள். எனவே என்னைத் தண்டிக்க நீ விரும்புவதில்லை என்பது பாடலின் உட்கருத்து..
மனிதர்களின் அன்பு மற்றும் தெய்வத்தின் அன்பு இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.. மானுடர் என்றாகிலும் ஓர்நாள் தாம் அன்புவைத்தவர் மீது, வெறுப்பு ஏற்படும் நிலைக்குத் தள்ளப் படலாம். ஆனால் அன்னை அபிராமியானவள் நம் மீது வைத்துள்ள அன்பு கரையற்ற கடல் போன்றது. அதனால்தான் அவளை "கருணாசாகரி.." எனப் போற்றுகின்றனர்.. கருணைக் கடல் அவள்.. புனித விவிலியத்தில் இயேசு நாதர் ஓர் உவமை சொல்கின்றார்.."உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?"
இறைவனது அன்பு மேலானது.. "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்பது போல் அன்னை நம் மீது வைத்துள்ள அன்பை மானுடராகிய நம்மால் அறிந்து கொள்ள இயலவில்லை.. எனவேதான் மாற்றுப்பாதையில் சென்று விழுந்து விடுகின்றோம்.. அவ்வமயமும் அவள் நம்மைக் கைவிடுவதில்லை.. நம்மைக் கைதூக்கி விடுபவளும் அவளேதான். "ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் " ஒரு நீண்ட கரும்பு வில்லையும் - அது தனித்தன்மை வாய்ந்த வில்.. ஐந்து மலரம்புகளையும் கொண்டு நின்றவளே..அபிராமியே... ."தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று " உன்னை விடுத்து.. உன் திருவடித்தாமரைகளை விடுத்து வேறு தஞ்சமே இல்லை என்று அறிந்திருந்தும், "உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்" உன்னை அடைவதற்குரிய தவ நெறிகளைப் பயில என் நெஞ்சத்தில் நினையாதிருக்கின்றேன்.. "அறியார் எனினும்" அறியாதவர் ஆனபோதிலும் "பஞ்சு அஞ்சு மெல்லடியார்" பஞ்சை விட மென்மையான பாதங்களையுடை மானுடப் பெண்டிர் ... பஞ்சும் அஞ்சும்படியான பாதங்களையுடையோர்....”அடியார் பெற்ற பாலரையே” தாம் பெற்ற குழந்தைகளை அடிக்க மாட்டார்களே..! அன்னையே...நீயோ உலகத்திற்கே அன்னை... நானோ தவறிழைக்கும் கடை மானுடன்.. என்னையும் நீ தண்டிக்காது அரவணைத்திட வேண்டும்...

பாடல் அறுபது
பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை
வார்ச்சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே

விளக்கம் : பாலினும் இனிய சொற்களையுடைய அபிராமி அன்னையே... குளிர்ச்சியான உன் திருவடித்தாமரைகளை வைக்க, திருமாலை விட, அமரர்கள் அனைவராலும் வணங்கப் படும் கொன்றைப் பூவை சடைக்கணிந்த சிவபெருமானின் சடையையும் விட, உன்னடியின் கீழ் நின்று உன் புகழினைப் பாடும் நான்கு வேத பீடங்களையும் விட, நாயைப் போன்ற அடியேனான எனது நாற்றம் வீசும் தலை சிறந்ததோ??
அன்னை தனது திருவடித்தாமரைகளை அபிராமிப் பட்டரின் தலைமேல் வைத்ததாகப் பலமுறை குறிப்பிட்ட அவர், இவ்விடத்து, என்றன் தலைமீது உந்தன் திருப்பாதங்களை வைத்தமைக்கு அது என்ன சிறப்பைப் பெற்றதம்மா? என வினவுகின்றார்.. “பாலினும் சொல் இனியாய்” பாலைவிட இனிமையான சொற்களைப் பேசும் அபிராமி அன்னையே... “பனி மாமலர்ப் பாதம் வைக்க” குளிர்ச்சியான மலரினைப் போன்ற உனது திருப்பாதங்களை வைக்க... “மாலினும் “ திருமாலை விட “தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும்” கொன்றைப்பூவை தனது சடையின் மேல் அணிந்து,அமரர்கள் அனைவராலும் வணங்கப்படும் சிவபெருமானின் சடையின் மேல் பாகத்தை விட, “கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் “ உனது திருவடியின் கீழ் நின்று பாடும் பண்பையுடைய வேத பீடங்கள் நான்கை விட, “சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே” நாயைப் போன்ற அடியேனான எனது நாற்றம் நிறைந்த தலை சிறந்ததோ? நீ உன் திருவடித்தாமரைகளை என் தலை மீது வைத்து விட்டாயே... என் தலை நாயின் தலை போன்றது... நாற்றம் நிறைந்தது... வேதங்களின் மேல் உந்தன் திருவடிகளை வைத்தாய்... ஈசனாரின் சடைமுடி மீது உந்தன் திருவடிகளை வைத்தாய்... ஆயினும் என்றன் தலை மீதும் வைத்து விட்டாயே.. அவற்றுடன் ஒப்பிடத்தகுந்ததா அடியேனின் தலை... ? என அன்னையை வினவுகிறார் அபிராமிப் பட்டர்.
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்...

கருத்துகள் இல்லை: