திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 43 & 44

பாடல் நாற்பத்து மூன்று



பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்


திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்


புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை


எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே

விளக்கம் : சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளையுடைய அபிராமி அன்னையே.... பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே... ஐந்துவித அம்புகளைக் கொண்டவளே.. இனிமையான சொற்களைப் பேசும் திரிபுரசுந்தரியே... செந்தூரவண்ண மேனியையுடையவளே... முப்புரங்களையும் ஆண்ட தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த அசுரர்களை, அவர்கள் அஞ்சும்படியாக மேருமலையை வில்லாக ஏந்திய, எரியும் நெருப்பினையொத்த மேனியையுடைய ஈசனது இடப்பாகத்தில் அமர்ந்தவளே... அபிராமியே....

"பரிபுரச்சீறடி" சிலம்பினை அணிந்த சிறிய திருவடிகளையுடையவளே... உலகத்தைப் படைத்த அன்னையின் வடிவு மிகப்பெரிது.. ஆயினும் நம் போன்ற சிறியோர்களும் காணும் வண்ணம் அவள் அழகிய சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்.. அன்னையை சிறு குழந்தை வடிவில் மனத்தில் எண்ணிப் பாருங்கள்.. ஆஹா... எத்தனை அழகிய திருக்காட்சி இது... "பாசாங்குசை பஞ்சபாணி" பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே... ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை உடையவளே... அன்னையின் கையில் பாசம் எதற்காக? அங்குசம் எதற்காக?? உலகியல் பந்தங்களில் நம்மைப் பிணைப்பதற்காக பாசத்தையும், பின்னர் அப்பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக அங்குசத்தையும் ஏந்தியிருக்கின்றாள்.. சரி ஐந்து வித மலரம்புகள் எதற்காக?? முன்னரே இதைப் பற்றிப் பேசியிருக்கின்றோம்... அவளைச் சரணடைந்தால், நமது ஐந்து வித புலன்களையும் அடக்கியாள்பவள் அவளே... இதையே பஞ்சபாணி எனும் திருக்காட்சி உணர்த்துகின்றது. "இன்சொல் திரிபுரசுந்தரி" இனிமையான சொற்களைப் பேசும் திரிபுர சுந்தரியே... அன்னை என்றென்றும் மக்களிடம் அன்பு பூணுபவள்.. எனவே இன்சொல்லையுடையவள்.. "சிந்துர மேனியள் " செந்தூரவண்ண மேனியைக் கொண்டவள். "தீமை நெஞ்சில்புரி புர வஞ்சரை அஞ்ச" தீமையான நெஞ்சம் கொண்டவர்கள்... முப்புரங்களையும் ஆண்ட அசுரர்கள்.. வஞ்சகர்கள்.... "அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர்" வஞ்சகர்களான அசுரர்கள் அஞ்சும்படி மேருமலையை வில்லாக வளைத்து ஏந்திய கையையுடையவரும்... எரியும் நெருப்பினையொத்த திருமேனியைக் கொண்டவருமான ஈசன் சிவபெருமானின்.... "செம்பாகத்து இருந்தவளே " சரிபாதியாக இடப்பாகத்தில் அமர்ந்தவளே... அபிராமி அன்னையே...



பாடல் நாற்பத்து நான்கு


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்


அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்


இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்


துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே

விளக்கம் : தவம்புரியும் எங்கள் அபிராமியன்னையானவள் எங்கள் சங்கரனாரின் துணையாகி அவர் இல்லத்து மங்கலமானவள். அவளே பராசக்தியாக சங்கரனாரின் தாயுமானவள். ஆகையால் இவளே தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமாவாள். எனவே இனிமேல் நான் வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அவர்கட்குத் தொண்டு செய்து துவளமாட்டேன்...

அன்னையின் மூன்று வித்தியாசமான நிலைகள் வியப்பைத்தருகின்றன... அவை.

1. தவம் செய்பவள்..

2. சங்கரனாரின் மனைவி...

3. சங்கரானாரின் தாய்...

தவம் செய்யும் வாழ்க்கையை ஏற்றோர் குடும்பவாழ்வில் ஈடுபடுவதில்லை. எனவே முதற்கூற்று இரண்டாம் கூற்றோடு முரண்படுகின்றது.. மனைவியானவன் அக்கணவனுக்குத் தாயாக முடியாது. எனவே இரண்டாம் கூற்றோடு மூன்றாம் கூற்று முரண்படுகிறது. ஆனால் அதுதான் அன்னை அபிராமியின் பெருமை... ஆதிபராசக்தியான அவள் "மாத்தவளே..." என்று முன்னரொரு பாடலில் அபிராமிப் பட்டரால் குறிப்பிடப் பட்டாள்... உலகைப் படைத்தவளும் அவளே.. தனக்குத் துணையாக மும்மூர்த்திகளைப் படைத்து அவர்கட்குத் தாயானவளும் அவளே... பின்னர் முப்பெருந்தேவியராக உருக்கொண்டு அம்மும்மூர்த்திகளுக்கும் துணையாக நின்றவளும் அவளே...

"எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்" மனைவியே மனைக்கு மங்கலமானவள்.. எனவேதான் "பெண்ணிற்பெருந்தக்க யாவுள.." என்று பாடினான் அய்யன் திருவள்ளுவன். ஆனால் உலகையே படைத்த அன்னை ஆதிபராசக்தியானவள் ஈசனது மனைவியானாள். அவன் இல்லத்துக்கு மங்கலமானாள்.. எத்தனை பெரிய பேறு பெற்றான் எங்கள் சங்கரன்... "அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்" உமையவளாய் நின்ற ஆதிபராசக்தியே சங்கரானாருக்கு அன்னையும் ஆனவள்... "ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்" உலகமே வணங்கும் தன்மை பெற்ற சங்கரனாரைப் பெற்ற தாயாகி நின்றதால், எங்கள் அபிராமியே தெய்வங்கள் எல்லோருக்கும் மேலான தெய்வமானவள்... தெய்வங்களையெல்லாம் படைத்த தெய்வமானதால் இவளே மேலான தெய்வம்... "இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே" "துவளேன்" எங்கள் அன்னை அபிராமியே தெய்வம் என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் நான் இனி வேறு எந்த தெய்வத்துக்கும் என் மெய்யால் தொண்டு செய்து துவள மாட்டேன்.. எத்தனை தெய்வங்களய்யா....?? அறிவைக் கொடுக்க கலைமகள்... செல்வத்தைக் கொடுக்க அலைமகள்... வீரத்தைக் கொடுக்க மலைமகள்... அவர்தம் மனையோர்... முழுமுதற்கடவுளான ஆனைமுகன்.. அவனது தம்பியான ஆறுமுகன்... நவக்கிரகங்கள்... திக்குக்களையாளும் தேவதைகள்... பஞ்சபூதங்கள்... என்று முப்பத்து முக்கோடித் தேவர்களையும் பட்டியலிடலாம்... ஆனால் எல்லாரையும் படைத்து நமக்களித்த அன்னை அபிராமியே நமக்கு அன்பு செய்யும் படி அருகில் வந்த பின்னர் வேறு தெய்வங்களுக்கு நான் ஏன் தொண்டு செய்ய வேண்டும்? ஒவ்வொரு தேவைகட்கும் ஏன் அவர்கட்கு தொண்டு செய்து துவள வேண்டும்.. இனி இப்படி நான் துவளமாட்டேன்.. அன்னையே உன்னை மட்டுமே வணங்குவேன் என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்...

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம் அன்பர்களே.. நன்றி...



கருத்துகள் இல்லை: