திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 73&74

பாடல் எழுபத்து மூன்று
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

விளக்கம் : அபிராமி அன்னையே.. நீ அணியும் மாலை கடம்ப மலர்களால் ஆனது. உனது படைகளோ ஐவகை மலரம்புகள். உனது வில் கரும்பு வில். வைரவர் உன்னை வணங்கும் நேரம் நள்ளிரவு. நீ எனக்கென்று வைத்திருக்கின்ற செல்வங்களாவன.. உனது திருவடித் தாமரைகள், செம்மையான உனது நான்கு திருக்கரங்கள், ஒளிபொருந்திய செம்மையான தாயே உன் திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம், இவற்றோடு உனது மூன்று திருக்கண்கள்.
அன்னை கொண்டுள்ள வில், அம்புகள், அவள் அணியும் மாலை, வைரவநாதர் அவளை வணங்கும் நேரம் இவையெல்லாம் அன்னையே உன் பெருமைகள்.. எனக்கென்று நீ தந்துள்ள செல்வம்.. நீதான்.. நீயே பெரும் செல்வம்... என அபிராமிப் பட்டர் உரைப்பது சிறப்பு. குழந்தைப் பேற்றை வேண்டுவோர் இத்திருப்பாடலைத் தினமும் பாட வேண்டும் எனப் பெரியோர்கள் கூறுவார்கள்.
"தாமம் கடம்பு" அன்னையே நீ அணிந்துள்ள மாலையானது கடம்ப மாலை.. "படை பஞ்ச பாணம்" உனது படைகளோ ஐவகை மலரம்புகள்... "தனுக்கரும்பு" உனது  வில்லோ கரும்பு வில். "யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது" வைரவர் உன்னை வணங்கும் நேரமானது நள்ளிரவு... சிவாலயங்களை இரவில் காக்க வேண்டிய பொறுப்பு வைரவரிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே வைரவர் அன்னையை வணங்கும் நேரம் நள்ளிரவே.. "எமக்கு என்று வைத்த சேமம்" இத்தனை பெருமைகளையுடைய அன்னையே.. நீ எமக்கென்று வைத்துள்ள செல்வங்களாவன...  "திருவடி" உனது திருவடிகள்... "செங்கைகள் நான்கு" அபயந்தந்து வரமளிக்கும் உனது செம்மையான நான்கு திருக்கரங்கள்..."ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை " ஒளிபொருந்திய, செம்மையான அம்மையே... உனது திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்.. "ஒன்றோடு இரண்டு நயனங்களே" உனது மூன்று திருக்கண்கள்.. இவையே நீ எமக்களித்த செல்வங்களாகும்...
உனது பெருமைகள் நீ கடம்ப மாலை அணிந்து, பஞ்ச பாணங்களை படைகளாகக் கொண்டு, கரும்பு வில்லையேந்தியிருப்பது.. அகிலத்தைக் காக்கும் உந்தன் ஆலயத்தைக் காக்கும் வைரவர் உன்னை வணங்கும் நேரமோ நள்ளிரவு... எனக்கு நீ அளித்த செல்வமோ... நீதான்... நீயே என் செல்வம்.... என் சேமம்.... உன் திருவடிகள், உனது திருக்கரங்கள், உன் திருநாமம், உன் திருக்கண்கள்.. அபிராமியே... காத்தருள்வாய்....
பாடல் எழுபத்து நான்கு
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே

?

விளக்கம் : மூன்று கண்களையுடைய சிவபெருமானும், வேதங்களும், திருமாலும், பிரம்மனும் போற்றி வணங்கும் அபிராமி அன்னையின் திருவடிகளையே தங்கள் பயன் என்று கொண்டவர்கள், தேவமகளிர் ஆடிப்பாட, பொற்கட்டிலுடைய பொற்காட்டில் தங்கி மகிழும் பயனை விரும்புவரோ?
"இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று அரங்கனைப் பாடிய ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வருகின்றது.. பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும், வேதங்களும் போற்றி வணங்கக்கூடிய அன்னையபிராமியின் திருவடிகளைப் பற்றினோர்க்கு எல்லா செல்வங்களும் கிட்டும். ஆயினும் அவர்களுக்கு அச்செல்வங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல... அவர்கள் அவற்றை விரும்புவதும் இல்லை...
"நயனங்கள் மூன்றுடை நாதனும் " மூன்று கண்களையுடைய சிவபெருமானும், "வேதமும்" நால்வகை வேதங்களும், "நாரணனும்" நாராயணனும், "அயனும்" பிரம்மனும் "பரவும்" வணங்கிப் போற்றும் "அபிராமவல்லி அடியிணையைப்" அபிராமி அன்னையின் திருவடிகளை... "பயன் என்று கொண்டவர்" தங்களின் பயன் என்று கொண்ட அடியவர்கள் "பாவையர் ஆடவும் பாடவும்" மகளிர் ஆடிடவும், பாடிடவும், "பொன் சயனம் பொருந்தும்  "  பொன்னாலான கட்டிலினையுடைய "தமனியக் காவினில்" பொற்காட்டினில், இந்திரலோகத்தில்.... "தங்குவரே?" தங்கி இன்புறும் மகிழ்ச்சியினை விரும்புவார்களோ???
மானுட மனமானது சிற்றின்பத்தை நாடுகின்றது.. இந்திரலோகம் என்பது சிற்றின்பத்தின் கனவு.. பொன் நிறைந்த காட்டினில், பொன்னாலான படுக்கையில் படுத்திருக்கும் வேளையில், தேவ மகளிர் வந்து ஆடிப்பாடி நம்மை மகிழ்விக்கும் ஒரு நிகழ்வு என்பது சிற்றின்பத்தை நாடும் மனது வேண்டுவது... ஆனால் அதுவோ நிலையான இன்பம்? அன்னை அபிராமியின் திருவடிகளை அபயம் எனப் பற்றி, அவளுக்கே அன்பு செய்து, அவள் அன்பைப் பெற்று அவள் அடியாராகும் இன்பமே பேரின்பம்.. அதுவே நிலையானது.. ஆகவேதான் உலகம் போற்றும் நால்வகை வேதங்களும் அவள் திருவடிகளே சரணமென்று பாடுகின்றன.. படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலைப் புரியும் மும்மூர்த்திகளும் அவள் திருவடிகளையே போற்றிப் பாடுகின்றனர்.. மனமே... நீயும் அவள் திருவடிகளையே பற்று.. அவளே அபயம் என்பதை உணர்... அவளையே சரணடை... அவளே உன்னைக் காப்பாள்.. உன்னைத் தன் அன்பர்க் கூட்டத்தில் ஒருவனாக ஆக்கி பேரின்ப வாழ்வுதனை உனக்களிப்பாள்... அபிராமியின் திருவடியிணைகளே சரணம்........
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த பாடலில். மீண்டும் சந்திப்போம்...

கருத்துகள் இல்லை: