புதன், ஆகஸ்ட் 04, 2010

நாடோடிப் பயணங்கள்.

நாடோடிப் பயணங்கள்.
- மு. கந்தசாமி நாகராஜன்
"எலே. மாயாண்டி ... போயி நம்ம செல்லப்பா ஆசாரிய நான் வரச்சொன்னேன்னு சொல்லி கூட்டிட்டு வா. " உரத்த குரலில் மாயாண்டியை ஏவினார் அய்யாதுரை நாடார். அவர்தான் அந்தத் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர். அவர் வீட்டு முற்றத்தில் கைகட்டி ஒருவன் காத்திருந்தான். "என்னப்பா. நம்ம ஊருக்குள்ள வந்து குடிசைய போட்டுருக்கீங்க. ஒரு வார்த்த நம்ம கிட்ட சொல்லனும்ங்க்றது தெரியாத உனக்கு? உம பேரு என்ன?"
"அய்யா. எம்பேரு சொடலை... நாங்க செந்தியாத்தாரத்துல குடிசை போட்டு இருந்தொமுங்க.. நேத்து ராத்திரி அங்கன ஒரு பய குடிச்சிட்டு வந்து ஒரே சண்டை. பெண்டு பிள்ளையளோட எங்க போறதுன்னு தெரியாம அப்படியே இங்க வந்தோமுங்க.. மன்னிச்சிருங்க.. இன்னைக்கு காலி பன்னிர்றோம்.." அவன் குரல் உடைந்து போய் இருந்தது.
"பயப்படாதல.... நம்ம ஊருக்கு தஞ்சங்கேட்டு வந்த பயலுவள நாம ஆதரிச்சித்தான் அப்பியாசம். பயப்படாம இரு. நீங்க எல்லாம் என்ன வேலை பாக்கறீங்க..?" ஆறுதலோடு அவனைக் கேட்டார் அய்யாத்துரை
"அய்யா. நாங்க எந்த வேல குடுத்தாலும் செய்வோம்... " நம்பிக்கையோடும் கண்களில் எதிர்பார்ப்புகளோடும் நின்றான் சுடலை.
"சரி சரி.. நம்ம தோட்டத்துல நாளைல இருந்து வேலைக்கு வந்துருங்க... மொத்தம் எத்தன பேருப்பா இருக்கீங்க? " வினவினார் அய்யாத்துரை.
"அய்யா மொத்தம் அஞ்சி குடும்பம்."
"சரி சரி... நம்ம செல்லப்பா ஆசாரியா வேற வரச்சொல்லி இருக்கேன். அவரு கிட்டயும் யாரவது வேலைக்குப போகலாம். சரியா??"
உறுதியளித்த அய்யாத்துரை அதை நிறைவேற்றவும் செய்தார்.. ஊர் எல்லையிலுள்ள புறம்போக்கு நிலத்தில் அவர்கள் போட்டிருந்த குடிசைகளைப் பஞ்சாயத்தில் சொல்லி அவர்களுக்கே பட்டா போட்டுத தருவதாகவும் கூறினார்.
நாடோடிகளாய்த் திரிந்த அந்தக் கூட்டமும் அந்த கிராமத்திலேயே தங்கி விட்டது. யாசகம் பெற்று மட்டுமே உண்டு வந்த அவர்கள் மிகச்சிறந்த திறமைசாலிகளாக வந்து விட்டனர்.
சிலர் தச்சு வேலைக்கும் சிலர் தோட்ட வேலைகளுக்கும் பழக்கமாகி விட்டனர்.
குழந்தைகளும் அந்த ஊர் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டன.
திடிரென ஒரு நாள்..
"ஏட்டி நாடாச்சி எனக்கு கொஞ்சம் நெஞ்சு வலிக்கிற மாதி இருக்கு.. நம்ம வைத்தியர வரச்சொல்றியா?" என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்தார் அய்யாத்துரை.
"அய்யய்யோ... நான் என்ன செய்வேன்... இருங்க.. கூட்டிட்டு வாறேன்" ஓடினாள் அவரது சக தரிமினி தங்க நாடாச்சி.
ஆனால் விதியின் கணக்கு வேறு விதமாக இருந்தது. வைத்தியர் சௌந்திரபாண்டி நாடார் வருவதற்குள் அய்யாத்துரை நாடாரின் உயிர் பிரிந்து விட்டிருந்தது..
ஊரே ஓன்று கூடி அழுதது.
சுடலையோ கிழே விழுந்து புரண்டான்.
அய்யாத்துரை நாடாரின் இறுதிச் சடங்கும் நிறைவேறி முடிந்தது...
இடைத் தேர்தலும் வந்தது..
வாக்கு கேட்க வந்த ஆளுங்கட்சி வேட்பாளர் வெள்ளையாவிடம் ஓடிச்சென்று அய்யாத்துரை நாடார் சொன்னது போல் தங்களுக்கு அந்த நிலத்தைப் பட்டா போட்டுத தர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தான் சுடலை. "கண்டிப்பா செஞ்சிருவோம்..." சிரித்த படியே வாக்கு கொடுத்தார் வெள்ளையா.
தேர்தல் முடிந்தது. எதிர்பார்த்தபடியே ஆளுங்கட்சியே வென்றது. வெள்ளையா சட்டமன்ற உறுப்பினரானார்.
நன்றி தெரிவிக்க வந்தபோது ஏற்கெனவே கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதாக மீண்டும் வாக்களித்தார்.
அடுத்த நாள்...
"ஏலே யாருலே இங்க இருக்கா... இந்த இடத்துல வெளாட்டு தெடல் கட்டணும்னு அரசாங்கம் உத்தரவு போட்டுருக்கு.. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள எல்லோரும் குடிசைய காலி பண்ணனும் சொல்லிட்டேன்" பஞ்சாயத்து கிளார்க் வந்து சொன்னபோது அங்கு ஆண்கள் யாரும் இருக்கவில்லை. சுடலையின் மனைவி மாடத்தி செய்தியைச சொல்ல தோட்டத்துக்கு ஓடினாள். விபரம் அறிந்து சுடலை அங்கே வருவதற்குள் கிளார்க் போய்விட்டிருந்தார்.
உடனே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நோக்கி ஓடினான் சுடலை.
"அய்யா. நம்ம பஞ்சயாது கிளார்க் வந்து இடத்த காலி பண்ணனும்னு சொல்றாங்கய்யா.. பட்டா போட்ட்டுத்தாறேன்னு சொன்னியளே..." அழாத குறையாக வெள்ளையா முன் நின்றான் சுடலை.
"சொன்னேன்பா. ஆனா பாரு... அந்த ஊரு பயலுவ எல்லாம் வெளாட்டு தெடல் வேணும்னு மனு கொடுத்தாணுவ ... அந்த ஊருல அந்த எடத்த விட்டா வேற எடத்துக்கு நான் எங்க போறது.. சொன்ன மாதிரி காலி பண்ணிட்டு போய்டு..." என்றபடியே வேறு பக்கம் திரும்பினார்.
"பிச்சக் காரப் பயலுவளுக்கு எடத்த குடுத்தா அந்த அய்யாத்துரைய சொல்லணும்.. இப்ப பாரு கண்ட கண்ட ________ பயலுவ எல்லாம் எம். எல். ஏ ஆபிசு வரைக்கும் வர்றானுவ. " தனது உதவியாளரிடம் அவர் பேசியது சுடலையின் காதுகளிலும் விழுந்தது..
அவரை எதிர்த்துப் போராடும் தெம்பு இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த படியே குடிசை நோக்கி நடந்தான் சுடலை..
"சரி நாளைக்கு விடிஞ்சா பாத்துக்கிடலாம் பிள்ள " என்று மாடத்தியிடம் கூறிவிட்டு தோட்டத்துக்குப போய்விட்டான். மாலை வந்த பின்னர் ஊருக்குள் சென்று யாராரிடமோ மன்றாடிப் பார்த்தான்.. ஆனால் யாருக்கும் வெள்ளையாவை எதிர்க்கத் துணிவில்லை. மேலும் அங்கு விளையாட்டுத திடல் வருவது அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் அளித்தது.
துணைக்கு யாருமில்லாது என்ன செய்வதென்று அறியாது உறங்கிப் போனான்.
அதிகாலையே குரல் கேட்டது..
"யாரப்பா அங்கே டெண்டுக்குள்ளே... சீக்கிரம் காலி பண்ணுங்க. இந்த இடத்த சமப் படுத்தனும்" ஒரு மிகப்பெரிய வாகனத்திலிருந்து ஒருவன் குரல் கொடுத்தான். சத்தம் கேட்டு வெளி வந்து பார்த்த சுடலை அதிர்ந்தான்.
என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதிர்க்கவும் பலமில்லை. "சரி. போய்டுவோம்.. நமக்கு ஊர் ஊராப போற அந்த வாழ்கைதான் சரி... இதெல்லாம் ரொம்ப பெரிய மனுசங்கலுக்கானதுதான்... வாங்க போவோம்..." என்று கூறியபடியே தனது கூட்டத்தாருடன் குடிசைகளை விட்டு வெளியே வந்து குடிசைகளைப பிரிக்கத் துவங்கினான்.
தள்ளு வண்டியில் தனது கூட்டத்தாரோடு "சரி போவோம் வாருங்க" என்றழைத்த படியே முன்சென்ற அவன் பின்னே தொடர்ந்தது அந்த நாடோடிக் கூட்டம்.
யார் வீட்டிலிருந்தோ அந்த வானொலிச் செய்தி சுடலையின் காதுகளில் விழுந்தது..
"இலங்கையில் போர் காரணமாக தமிழகத்துக்கு அகதிகள் மீண்டும் மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ராமேஸ்வரத்திற்கு 40 பேர் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு மண்டபம் முகாமில் தகுந்த வசதிகள் செய்து தரப்படுமென்று தமிழக முதல்வர் உறுதியளித்தார்"
சுடலையை அந்த செய்தி நிமிரச் செய்தது.
"பாரு மாடத்தி.. எனகென இருந்து வாரவியளுக்கேல்லாம் எல்லாம் கொடுக்காவ. ஆனா இந்த மண்ணுல பொறந்த நமக்கு ஊர் ஊற சுத்துற பொழப்புதான். நாமளும் அங்க கொழும்புலையே பொறந்துருக்கலாம். அப்பயாச்சும் இந்த அரசாங்கம் நம்ம பாத்துருக்கும்" என்ற ஏக்கத்தோடு சொன்ன சுடலைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள் மாடத்தி..
என்ன நினைத்து என்ன பேசினாலும் அந்த நாடோடிக் கூட்டங்களின் பயனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகும் நாள் என்றும் வரப் போவதில்லை..

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

தேவை இன்னொரு விடுதலைப் போர்

பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. நடுநிலைப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த போது விடுதலைத் திருநாளையொட்டிய பேச்சுப் போட்டி நடை பெற்றது. நான் அப்போது மூன்றாவதோ அல்லது நான்காம் வகுப்போ படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. அவ்வயதில் நமக்கு அந்த அளவுக்கு பொது அறிவு இல்லை. ஆயினும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் மட்டுமே தலை தூக்கி நின்றது. எமது தந்தையாரிடம் ஆவலை வெளியிட்ட போது புலவர் வே. சத்தியராசனிடம் அழைத்துப் போனார். பின்னர் புலவரவர்கள் எழுதிக் கொடுத்து நான் பேசிய பேச்சுதான் நமது கன்னிப் பேச்சு. புலவரவர்களின் எழுத்து எமக்கு முதல் பரிசினைப் பெற்றுத் தந்தது. விடுதலைத் திருநாள் பேச்சுப் போட்டி என்றாலே "வானம் பொழிகிறது. பூமி விளைகிறது" என்ற கட்டபொம்மன் வசனங்களும், பாரதியின் கவிதைகளை மேற்கோள் காட்டுவதும்தான் முக்கிய நிகழ்வாக இருந்தது. முக்கியமாக "வீர சுதந்திரம் வேண்டி நின்றோர்.." என்ற பாடலும், "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்..?" என்ற பாடலும்தான். பின்னர் படிப்படியாக நம்மை வளர்த்துக் கொண்டோம். கல்லூரி நாட்களில் விடுதலைத் திருநாளின்போது நாம் கொடுத்த உரை பலரது பார்வையை நம் மேல் திருப்பியது. "ஊழலற்ற அரசாங்கம் அமைவதுதான் உண்மையான விடுதலை" என்ற கருத்தில் இடம் பெற்ற நமது பேச்சு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் பேரா. சில்வா அவர்களது கவனத்தை எம் மேல் திருப்பியது. ஒருமுறை மாணவர் போராட்டத்தின்போது முன் நின்று அவரை எதிர்த்து பேசிய எம்மை அவர் பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே இருந்தார். மதிய உணவு இடைவேளையின்போது கல்லூரி விழாவுக்காக புல்லாங்குழல் பயிற்சி செய்த எமது குழல் பறிக்கப்பட்டது. பல முரண்பட்ட எண்ணங்களை நம் மேல் கொண்டிருந்த அவரை அந்த உரை மாற்றியது. தனியே அழைத்துப் பேசினார். "தம்பி. உன்னைப் புரிஞ்சிக்கல... ரொம்ப நல்லா பேசினே... நீ பேசும்போதே உம் மனசு எனக்குத் தெரிஞ்சது. நீ ரொம்ப நல்லா வரணும்" என்றுரைத்தார். வணங்கி விடைபெற்றோம்
இன்றும் நம் கருத்து அதுதான். "ஊழலற்ற அரசு அமைவதுதான் உண்மையான விடுதலை". கண்ணெதிரே காணும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் போவதற்கு நாம் பேடிகள் இல்லை. எதிர்த்துப் பேசி நம் கருத்தில் உறுதியாக நின்றுதான் விடுதலைத் திருநாளைக் கொண்டாட வேண்டும். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களை பல்வேறு முறையில் போராடி விரட்டியடித்து அரசினை நமதாக்கிக் கொண்டோம். ஆனால் இன்று நாமே நம்மைக் கொள்ளையடிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டோமல்லவா? தனிமனித சுதந்திரத்திக்கான நிலை நம் நாட்டில் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? நடைபாதையில் கடையிட்டுள்ள சிறுவியாபாரி முதல் நகரத்தின் மிகச்சிறந்த பகுதியில் கடையிட்டுள்ள பெருவியாபாரிவரை கையூட்டு கொடாது தனது வியாபாரத்தினை நடத்த இந்த மக்களாட்சி உதவுகிறதா?? அவர்களிடம் தினமும் பெறும் ஐந்து ரூபாய் நேரடியாக அரசாங்கத்துக்குச் சென்றால் உலகின் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுமல்லவா நம் அரசு? இதனை எடுத்துரைப்போர் யார்? தகவல் தொடர்பு சாதனங்களான தொலைக்காட்சிகள் சாமியார்களின் படுக்கறைக் காட்சிகளைப் பகிரங்கமாக வெளியிடுகின்றன. ஆனால் இதுபோன்ற காட்சிகள் இதுவரை வந்ததுண்டா? வெட்ட வெட்டத் துளிர்விடும் சிறு மரம் கூட எதிர்ப்பை மீறி தனது வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் பகுத்தறிவு கொண்ட மனித இனம் இன்னமும் இந்த முட்டாள்த்தனங்களை எதிர்ப்பதற்கு முன்வராதது ஏன்? கவிஞனொருவனின் கவிதைவரிகள் நினைவுக்கு வருகின்றன.
"வேலிக்கு மேல்
தலை நீட்டிய
என் கிளைகளை
வெட்டிய தோட்டக்காரனே...!
வேலிக்கு அடியே நழுவும்
என் வேர்களை என்ன செய்வாய்?"
விடுதலைச் சிந்தனைகளை நம்முள் எழுப்பும் உன்னத வரிகள் அவை. பல்லாயிரம் உயிர்களை விதைத்து எழுந்த இந்த விடுதலை மரத்தை இன்று ஊழல் ஆந்தைகளும் கொடுமைக்கார கோட்டான்களும் ஆக்ரமித்துக் கொண்ட பேதமை நிலைதான் என்ன?
இனத்தைப் பிளவு படுத்தி அதன்மூலம் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்ட அயல் நாட்டவருக்கும், சாதியின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சாதிக்கட்சிகள் மூலம் தம் ஆட்சியை நிலை நிறுத்த முயலும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு?
பூட்டிக்கிடந்த இரும்புக்கூட்டின் கதவு இன்னும் திறக்கப் படவில்லையா?? சிறுத்தை இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கின்றதா?
மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை புற்றுநோயாகப் பரவியுள்ள இக்கையூட்டுச்சிந்தனைகளை எங்கனம் களைவது? பேரறிஞர் தலைமையில் அன்றைய இளைஞர்கள் ஒன்றுபட்டது போல், இன்றைய இளைஞர்களை ஒருங்கிணைப்பது யார்? அரசியலைச் சுத்தம் செய்ய அப்துல் கலாம் போன்ற சிந்தனைவாதிகளை மீண்டும் மக்கள் பணியில் ஈடுபடுத்த யாரால் இயலும்? பதவியை வேண்டாது மக்கள்பணிகளில் கவனம் செலுத்தப் போகும் இன்னொரு காமராசர் யார்? பொது நலச்சிந்தனைகளை மட்டுமே கொண்ட இச்சமுதாய முன்னேற்றத்திற்கான சிந்தனை விதைகளைத் தூவுவது யார் கரங்கள்? அல்லும் பகலும் அயராது போராடி நம் நாட்டினை மீட்டுத்தந்த காந்தியின் சிந்தனைகள் என்றுதான் நம் எல்லோருள்ளும் குடிகொள்ளும்?
ஆற்றிலே கரைத்த புளிபோல் ஆகிவிடுமா இச்சிந்தனைகள்..? உயர்ந்த சிந்தனைகள் கொண்ட வலுகொண்ட பாரதத்தினை உருவாக்கத் தோள் கொடுப்பீரா தோழர்களே?? காணும் சிறார்களிடமெல்லாம் இவ்வுயரிய சிந்தனை விதைகளைத் தூவுவோம்.. பணத்துக்கு வாக்கு என்ற நிலைமை மாற கட்டிளங்காளையரிடமும், மங்காத சிந்தனைகள் கொண்ட மங்கையிரிடமும் நம் உன்னதச்சிந்தனைகளை எடுத்துரைப்போம்.. என்றோ ஒரு ஆகஸ்டு 15 அல்லது ஜனவரி 26ல் மட்டுமே அல்லாது விடுதலைச்சிந்தனைகள் என்றென்றும் நம் இதயத்தில் ஒளிர வேண்டும்.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பட்டப் படிப்பு முடிந்த வருடம். எமது தமைக்கையார் தமது இரண்டாம் மகவை ஈன்றெடுத்த நாட்கள். இல்லத்தில் யாருமில்லை. அனைவரும் மருத்துவமனையில். கூடங்குளம் அணுமின் தொழிற்சாலையின் பணித்தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டியிருந்தது. நான் நிரப்பினேன். பின்னர் இருப்பிடச்சான்றிதழும், வருமானச்சான்றிதழும் பெற வேண்டியிருந்தது. கிராம நிர்வாக அலுவலர் மிகவும் பழக்கமானவர். எனவே எனது விண்ணப்பத்தினை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்திட்டு வருமான ஆய்வாளரிடம் அனுப்பி வைத்தார். இன்னமும் அந்த ஆய்வாளரின் முகம் எனக்கு நினைவுள்ளது. சாஸ்தாவி நல்லூர் (பொத்தக்காலன் விளை) ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து தட்டர்மடம் வருமான ஆய்வாளர் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் சென்றேன்.(கிட்டத்தட்ட 4 கி.மீ தூரம்) காத்திருப்போர் யாருமில்லாததால் அவ்வலுவலரை உடனடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே நுழைந்ததும் அவர் எமது விண்ணப்பத்தை ஏறிட்டே பார்க்கவில்லை. என் முகம் நோக்கினார். "தம்பி ஒரு ஐம்பது ரூபாய் பீஸு கட்டணும்" என்றார். "ஐயா. நீங்கள் இந்த விண்ணப்பத்தை ஒப்புக்கொள்வதாக ஒரு கையெழுத்து மட்டும்தானே போட வேண்டும். எதற்காக ஐம்பது ரூபாய்?" எனது கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. "உங்க வி.ஓ இத சரியா நிரப்பல.. போய் இன்னொரு விண்ணப்பம் நிரப்பிக் கொண்டா?" எனது விண்ணப்பம் அவரது குப்பைத் தொட்டிக்குப் போனது. ஒன்றும் தோன்றாது மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்றேன். "என்ன தம்பி. ஆர்.ஐ கையெழுத்துப் போட்டாச்சா?" கி.நி.அ வினவ "இல்லண்ணே.. அவரு நீங்க எழுதுனது சரியில்லன்னு கிழிச்சிப் போட்டுட்டாரு" என்றேன். " இருப்பா இன்னொரு வாட்டி அந்த பாரத்த பாத்து ஒழுங்கா எழுதித் தாறேன்..." என்று சொல்லி வேறொரு படிவத்தை நிரப்பிக் கொடுத்தார். மீண்டும் தட்டார்மடம் சென்றேன்.. "என்ன??" வ.ஆ வினவ "சார். வி.ஓ சரியா நிரப்பிக் கொடுத்துருக்காரு. பாருங்க.." என்று அந்த படிவத்தை அளித்தேன். "சரி. அந்த அம்பது ரூபாயக் கொடு" என்ற பதிலோடு என்னைப் பார்த்தார். "சார். நாளைக்குள்ள நான் அந்த வேலைக்கு அப்ளிகேசன் போட்டாகனும். வீட்டுல யாருமில்ல. எங்கையிலயும் துட்டில்ல.." என்றேன். "இங்க பாருப்பா.. அந்த வி.ஓ. இந்த பாரத்திலயும் சரியா நிரப்பல.. இதப் பாரு..." என்று ஒரு வரியினைக் காட்டினார். "போய் இன்னொருவாட்டி எழுதிக் கொண்டா" விரட்டினார். மீண்டும் பொத்தக் காலன் விளை.. "என்ன தம்பி. திரும்பவும் வந்துட்ட.?" "அண்ணே .. இதுவும் சரியில்லயாம். பாருங்க" உடைந்து போன எனது குரல் அவரை நிமிரச்செய்தது.."என்ன தம்பி அந்த பய துட்டு எதாவது கேட்குறானா?" என்றார். "ஆமான்னே.. அம்பது ரூபா வேணுமாம். பீஸு கட்டணும் அப்படிங்கறான்" என்றேன். "கொடுத்துற வேண்டியதுதானே..?" "இல்லண்ணே... வீட்டுல யாரும் இல்ல... அக்காவுக்கு குழந்த பெறந்துருக்குல்லா. எல்லோரும் ஆசுபத்திரில இருக்காங்க.." என்றேன். "நான் தாறேன்..குடுத்துரு.. அப்பாகிட்ட நான் அப்புறமா வாங்கிக்கறேன்.." என்று ஐம்பது ரூபாயை நீட்டினார். "இல்லண்ணே... அந்த வேல எனக்குக் கிடைக்காட்டியும் பரவாயில்ல. நான் துட்டு குடுக்க மாட்டேன்.." உறுதியோடு கூறினேன். "ம்ம்ம். உன் விருப்பம்... அந்த பயல பச்சமட்டயால அடிக்கணும்.. இந்தா புது பாரத்துல எழுதியிருக்கேன். எடுத்துட்டுப் போ.." என்றபடியே அப்படிவத்தைக் கொடுத்தார். மீண்டும் இங்கே திரும்பி வரக்கூடாது என்ற முடிவோடு வருவாய் அலுவலர் அலுவலகம் நோக்கி மிதிவண்டியை செலுத்தினேன்.. இம்முறை கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. என் முறை வந்தபோது உள்ளே சென்றேன்.. "என்னப்பா.. திரும்பவும் கொண்டு வந்துட்டியா??" என்றபடியே எனது விண்ணப்பத்தைப் பார்த்தார். "ஆமா சார்" "ம் சரி சரி.. நான் சொன்னது என்னாச்சு?" "என்னது சார்" "அம்பது ரூபா?" "வீட்டுல யாரும் இல்ல சார்" "அப்படியா... சரி சரி.. இந்த ரேசன் கார்டு உங்க வீட்டுல உள்ளது தானே?" "ஆமா சார்". "சரி . இந்த அப்ளிகேசன் இங்கேயே இருக்கட்டும்.. நான் உங்க ஊருக்கே வந்து விசாரிச்சுப் பாத்துட்டு கையெழுத்துப் போடுறேன்...ஒரு வாரம் கழிச்சு வா" "இல்ல சார்,, நாளைக்குக் கடைசி தேதி.. எனக்கு இன்னைக்கே வேணும்.." ஒரு முடிவோடு அவரது மேசையருகே நின்று கொண்டேன்.. அவர் எனக்குப் பின்னே வந்தவர்களையெல்லாம் வரவழைத்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டிருந்தார்.. இன்று இவரை ஒரு கை பார்த்து விட வேண்டும். தராவிட்டால் காந்தியச்சிந்தனைகளின் படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கடந்தது.. என்னைப் பார்த்தார் "என்ன நீ இன்னும் போகலியா?" "இல்ல சார். நான் தாலுகா ஆபிசுக்கும் போகணும்.. சீக்கிரம் கையெழுத்துப் போட்டுக் கொடுங்க" உறுதியோடு கூறினேன்.. என்ன நினைத்தாரோ "சரி சரி.. பெழச்சிப் போ" என்றபடியே கையெழுத்திட்டார்.. பின்னர் தாலுகா அலுவலகம் சென்று வட்டாட்சியரிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பித்தும் அப்பணி நமக்குக் கிட்டவில்லை என்பது வேறு கதை..
ஆனாலும் இச்சம்பவத்தை இவ்விடம் நினைவு கூறுவதற்கான காரணம் என்னவெனில் ஊழலற்ற சமுதாயம் அமைக்க இதுபோன்ற அதிகாரிகள்தான் தடைக்கற்களாக உள்ளனர். இல்லத்தாரோ என்னைக் கேலி செய்தனர். "எத்தனை முறை தட்டாமடத்துக்கும் பொத்தாலவிளைக்கு அலைஞ்சே..." என்று ஏளனம் செய்தனர்.
ஊழல் ஆரம்பிப்பதே இவ்விடம்தான். அலைச்சல் கூடாது.. ஆனால் நம் காரியம் ஆகவேண்டும் என்ற எண்ணம்தான் ஊழலின் விதை. இவ்விதைகள் வேரறுக்கப் பட வேண்டும். பின்னர்தான் நிம்மதியான விடுதலைத்திருநாளை நாம் கொண்டாட இயலும்.
ஊழலை வேரறுக்கும் சிந்தனைகளை உரக்க உரைப்போம். நற்சிந்தனைகள் தரும் விதைகளை நாடெங்கும் விதைப்போம்..
நன்றி..

விடுதலையின் அடையாளம்

முட்டை உருத் தோன்றி
முழுவுடலும் புழுவாகி..
எத்தனையோ தடை தாண்டி..
ஏனேனோ இரை தின்று
நித்தம் தவம் செய்து
நீளுடல் நீங்கியபின்
வண்ண மெல்லுடலும்
வாய்ப்பரிய நன்சிறகும்
சின்னஞ்சிறு கொம்பும்
சீரடிகள் ஓராறும்
கொண்டெமைக் கொள்ளை செய்யும்
சின்னஞ்சிறு வண்ணப் பூச்சி...
விண்ணைக் காணும் கண்களுக்கு
விருந்தளிக்கும் நீ...
விடுதலையின் அடையாளம்...
பரிணாம மாற்றத்தில்
பட்டம் பெற்ற உன்னை...
வைத்தீஸ்வரிக்காக
வலையில் பிடிக்க மனமில்லை...
ஏனெனில்
நான் எஜமான் இல்லை...