சனி, ஜனவரி 29, 2011

இராமன் எனையாளும் தெய்வம்

காப்பு
தென்னவனின் தோளேறித் தென்னிலங்கை வென்றவனை
மன்னுபுகழ் பாரதத்தின் மக்கள்புகழ் நாயகனை
பண்சமைத்துப் பாடிடுவோம் பக்தர்களே நாமும் கூடி
கண்ணிணைகள் காப்பாமே கலியுகத்து மாந்தருக்கு..

நூல்
1. தசரத கோசலை ஈன்ற தர்மத்தின் தலைவனாம்
தசமுகன் இலங்கை வென்ற சத்திய வரதனாம்
அசைவறு மனத்தாலொன்றி அவன்தாள் தொழுவோருக்குத்
திசையெலாம்புகழும் வாழ்வைத் திண்ணமாய் அளிப்பவனாம்

2. சனகனார் கண்டெடுத்த மிதிலையின் நாயகியைக்
கனகத்தால் தாலிதந்துத் தன்வசம் ஈர்த்தவனாம்
ஈசனார் வில்லொடித்து இமையோரும் வியந்திடவே
பாசமாய் சீதைதனை மனையாளாய்க் கொண்டானாம்.

3. பொல்லாள் கைகேயி வஞ்சகத்தால் நாடிழந்து
வல்லானும் சென்றானே வனவாசம் தானும்நாடி!
கண்ணானைத் தானும் நீங்கா கண்ணாள்தன்னுடனே
அண்ணாவை நீங்காத இலக்குவனும் நகர்நீத்தான்.

4. கங்கைநதிக் கரைதனிலே கள்ளமில்லா அன்புகொண்ட
அங்கைக்கனி குகனும்தான் ஆதரவு தந்திட்டானே..
பரதாழ்வான் தானும் நாடி பாதுகையை வேண்டிடவே
இரங்கினான் கலைபுகழும் காவியத்தின் நாயகனே!

5. அகிலத்து ராசனவன் அயோத்தி இராமனுக்கு
மகிழ்வான மனம்தானே கானகத்து எங்கனுமே
சித்திரங்கள் தோற்கும் எழில் சீதைக்கும் இராமனுக்கும்
புத்திரனாய்த் தானிருந்து மகிழ்ந்தானே இலக்குவனும்.

6. சலனமில்லா வாழ்வழிக்க வந்தாளொரு சூர்ப்பனகை
சலனத்தால் காமங்கொண்டு இலக்குவனைத் தானும் நாடி!
அறுபட்டாள் தன் மூக்கு, காதிரண்டும் அரக்கியவள்!
வெறுப்போடு தானும் சென்றாள் தன்னண்ணன் நகர் நோக்கி!

7. தீந்தமிழ்ப் பாவலனாம் தென்னிலங்கைக் கோமானும்
செந்தமிழால் ஈசனையே சேவிக்கும் இராவணனாம்
காமத்தால் மதியிழக்கும் காமுகனைத் தன் சொல்லால்
காமத்தின் விதிவழிக்கே வீழ்த்திட்டாள் தங்கையுமே

8. மைதிலியின் பேரழகைக் கேட்டெழுந்த இராவணனும்
மாதிறத்தால் தன்னிலங்கை மாநரம் சேர்த்திடவே
மாரீசன் என்னுமொரு மாயனைத் தன் துணைக்கொண்டான்
பேரிடியாய்த் தன்னகரம் பெருமழிவு கண்டிடவே!

9. மாயமான் பின்சென்ற அண்ணலையும், தம்பியையும்
மாயத்தால் ஏய்த்த இராவணனும் சீதைதனை
சிறைசெய்து பறந்தானே சிங்கார நகரம் நோக்கி
மறையெலாம் அழுதனவே அன்னையவள் குரல்கேட்டு!

10. மாமனின் தோழனவன் மன்றம்புகழ் சடாயுவுமே
காமுகனைத் தடுத்திடவே கடுஞ்சினம்தான் கொண்டானே
முதுமைகொண்ட கழுகாலே முடியாது போனதய்யா..
பதுமையான சானகியைப் பார்த்தவரால் ஆகலியே!

11. கண்ணுக் கினியாளைக் காணாத இராமனுமே
கண்கலங்கி நின்றானே! கலைகளெலாம் அழுதனவே!
தம்பியவன் கரம்பிடித்துத் தேடுகின்றான் தென் திசையில்
நம்பியோர்க் கெல்லாம் நலம்புரியும் நாயகனே.

12. சிறகொடிந்து வீழ்ந்திருந்த சடாயுவுமே வழிபகர்ந்து
அறஞ்செய்து மாண்டானே அண்ணலவன் திருமுன்னே!
தந்தையின் காரியத்தைத் தவிர்த்திட்டத் தலைமகனும்
விந்தையிங்கே புரிந்தானே தந்தையின் தோழனுக்கு!

13. தென்னிலம் நோக்கி வந்த அண்ணலுக்கும் ஆருயிர்க்கும்
சென்னிகுனி சேவகத்தால் அன்புசெய்தார் வானரரே!
வாயுமைந்தன் வான்புகழும் வலிமைமிகு மாருதியும்!
வாலியொடு பிணங்கி நின்ற தம்பியவன் சுக்ரீவனும்!

14. வாலியின் கதை முடித்துத் தம்பிக்கு வளந்தந்த
தாலிவரே நாயகராமெனவேக் கொண்டனரே வானரரே!
நாயகனின் தேவியினைத் தேடிவர நாற்றிசையும்
பாய்ந்தனரே பலங்கொண்ட வானரரும் தலைவனுமே!

15. அனுமன் சென்று மீண்டான் அரக்கர்தம் தென்னிலங்கை
கனிமொழிதானும் தந்தான் கற்புடை நாயகிக்கே!
அரக்கர் நகரழிய ஆணைசெய் ஆஞ்சநேயன்
சிரத்தால் தொழுது நின்றான் சீர்மிகு இராமனையே!

16. வானரப் படைகளன்று வானவரும் பயங்கொள்ளும்
கானரக்கர் நகர் நோக்கிக் கால்நடையாய்ச் சென்றனவே!
கடற்கரை வந்து நின்ற கலைபுகழும் நாயகனைக்
கடல் தாண்டித் தொழுது நின்றான் கள்ளரக்கன் தம்பியுமே!

17. வீடணனைத் தம்பியென்றான் வில்லேந்தும் இராமனுமே!
காடணையும் வானரரும் கற்பாலம் கட்டினரே!
இராமநாமஞ்சொல்லும் வானரசேனை அன்று
இராவணன் நகருக்குள் நாசஞ்செய்யப் புகுந்தனரே!

18. கொன்றழித்தான் தசமுகனைத் தசரத மைந்தனுமே!
வென்றதே இராமசேனை! வெல்கவே இராமநாமம்!
காதலர் மீண்டும் கூடிக் களித்தனர் வாழியவே!
ஆதலால் தாமும் ஆடிக் களித்தனர் வானரரே!

19. அண்டமெலாம் மகிழும்படி அயோத்தி மீண்டனரே
பண்போற்றும் இராமனுடன் இலக்குவ சீதையரே!
மண்ணுலகம் போற்றும் நல்ல மணிமகுடம் சூடித் தானும்
விண்ணுலகும் போற்றும் வண்ணம் வாழ்ந்தானே இராமனுமே!

20. ஆளுகின்றான் இன்று எந்தன் மனத்திருந்து - வருவினைகள்
மாளுகின்ற மாயமது அறியேனே அகிலத்தோரே!
இராமனே எனையாளும் தெய்வம் என்றேன்! இரகு குல
சோமனவன் வாழியவே! பாடிடுவீர் பக்தர்களே!

(முற்றும்)

வியாழன், ஜனவரி 27, 2011

அய்யாவின் தவமும் போதனைகளும்

முத்துக்குட்டி கடலுற்சென்று வைகுண்டம் கண்டு மீண்டு வைகுண்டப் பண்டாரமாய் தென்னகம் நோக்கி நடக்கலானார். தன் தாய்க்கு மட்டுமே வைகுண்டத்தின் காட்சியைக் காண்பித்து அதை யாருக்கும் உரைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தனது பிறப்பிடத்திற்கு அவர் சென்ற போது அவரை எதிர்த்தவர்கள் பலர். ஆயினும் பூவண்டர் எனும் இடையர் தனது தென்னந்தோப்பை அய்யாவுக்குக் கொடுத்தார். அய்யாவும் அத்தென்னந்தோப்பை மகிழ்வுடன் ஏற்றார். அனைத்தையும் துறந்து வைகுண்டப் பண்டாரம் அத்தோப்பில் தனது தவவாழ்க்கையை ஆரம்பித்தார். அதிகாரத்தந்தை அவதார மகனுக்கு இட்ட கட்டளையே இந்த தவ வாழ்க்கை என்று கூறி ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.
முதல் இரு ஆண்டுகள் கலியுகம் அழிந்து தரும யுகம் தோன்றுவதற்காகவும், இரண்டாம் இரு ஆண்டுகள் சாதிக்கொடுமைகள் நீங்கவும், மூன்றாம் இரு ஆண்டுகள் பெண்ண்டிமை தீர்வதற்கும், நல்ல வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் என்றுரைத்தார். இதனை அவரே
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"
என்று பாடுகின்றார்.
அய்யாவின் முதல் இருஆண்டுகள் தவ வாழ்க்கை ஆறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் நிகழ்ந்தது. இரண்டாம் இரு ஆண்டுகள் தவவாழ்க்கையை வீராசனம் இட்டுத் தரைமேல் நிகழ்த்தினார். மூன்றாம் இருஆண்டுகள் தவமோ கடுமையான மௌனதவம். இதனை ஓர் பீடத்தை அமைத்து அதன் மேல் அமர்ந்து நிகழ்த்தினார்.
அய்யா தனது தவ வாழ்க்கையின்போது பச்சரிப் பாலை மட்டுமே அருந்தினார்.
வைகுண்டர் உரைத்த ஆறு ஆண்டுகள் தவவாழ்க்கை முடிவுற்றது.. அய்யா தவமிருந்த காலத்தில் அவரைத்தேடி பதினெட்டு சாதி மக்களும் வந்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அய்யா இவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணங்கொண்டார்.
அந்த சமயத்தில் பொதுக்கிணற்றில் வருணாசிரமத்தைச் சாராத இந்த பதினெட்டு சாதியினருக்கும் தண்ணீரெடுக்க அனுமதியில்லை.. எனவே தனது பூவண்டன் தோப்பில் ஓர் கிணற்றை ஏற்படுத்தினார். அது முந்திரி கிணறு என்றழைக்கப் பட்டது. அந்த கிணற்றை பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.
தன்மானம் மட்டுமே கலியை அழிக்கவல்ல ஆயுதம் என்று அய்யா போதித்தார். "தன்மானத்தைத் தாங்கியிரு என் மகனே" என்று பாடினார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப் பட்டிருந்த காலம் அது. தாழ்த்தப் பட்டோர் சிறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். இதை அய்யா எதிர்த்தார். திருமால் ஒருவனே தெய்வம், அவனை விடுத்து வேறு பேய் பிசாசுகளை வணங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவோர் மேலாடை கழற்றி, இடுப்பில் துண்டு கட்டி வழிபாடு நிக்ழ்த்தினர். ஆனால் அய்யா தனது பதிக்கு வரும் அன்பர்களை மேலாடை அணிந்து வரச்செய்தார். தலைக்குத் பாகைக் கட்டி தன்மானத்தோடு வா என்றுரைத்தார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் போன்று தாழ்த்தப்பட்டோரும் திருவிழாக்களைக் கொண்டாடி வந்தனர். வழிபாட்டின் பேரில் பணத்தை விரயம் செய்யாதீங்கோ என்றுரைத்த அய்யா கடவுளின் பெயரால் பணத்தைக் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்றுரைத்தார்.
உருவவழிபாட்டை அய்யா மிகக்கடுமையாக எதிர்த்தார். இறைவன் அன்பு வடிவானவன் என்றும் அவன் அனைவருள்ளும் இருக்கின்றான் என்றும் உரைத்த அய்யா தனது பதியின் பள்ளியறையில் ஓர் கண்ணாடியை மட்டும் நிறுவினார். உன்னிலே இறைவனைக் காண் என்பது அதன் மறை பொருள்.
நியாயம் தவறாமல் நேர்மையோடு யாருக்கும் அஞ்சாத வாழ்க்கை வாழ்வதே இறைவனுக்குப் பிரியமானது என்றுரைத்த அய்யா அதன்படி வாழும்படி தன் மக்களுக்குப் போதித்தார்.
அய்யா தனது வழியை அன்பு வழி என்று அழைத்தார். தன் மக்களை அன்புக்கொடி மக்கள் என்றழைத்தார். இது போன்று புதுமையான கருத்துக்களை அய்யா மொழிந்ததால் நாள்தோறும் அவரைக்காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. அதே சமயத்தில் வைதீக மதத்தின் ஆடம்பர வழிபாட்டு முறைகளுக்கு அய்யாவின் உரைகள் ஓர் சம்மட்டியாக விழுந்தது.
தன்னைத் திருமாலின் அவதார மகன் என்றுரைத்தது ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. மகாவிட்ணுவின் அவதாரம் என்று கூறி மக்களைத் திசைதிருப்புகின்றார் என்ற குற்றச்சாட்டு அய்யாவின் மேல் சுமத்தப் பட்டது.
மேலும் கிறித்தவர்களாக மதம் மாறத்துவங்கிய காலக்கட்டத்தில் மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியதும் அய்யாவின் செயல்தான். ஆனாலும் தனது போதனைகளில் ஏசுவைப் பற்றியும் மொழிந்தார். இசுலாத்தைப் பற்றியும் மொழிந்தார். இதனால் கிறித்தவப் பாதிரிமார்கள் ஆத்திரம் அடைந்தனர். அய்யாவைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பத் துவங்கினார்.. ஆனாலும் அய்யா எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. தனது பணியை செவ்வனே செய்தார்.
தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதியினருக்குள்ளும் ஏற்றதாழ்வுகள் இருந்தன. இதனை முதலில் களைய வேண்டும் என்று எண்ணிய அய்யா சமபந்தி போஜனத்தை ஆரம்பித்து வைத்தார். முதலில் மறுத்த பலரும், அய்யாவின் அருளுரைகள் கேட்டுத் திருந்தி ஒற்றுமையாக உணவருந்தினர்.
அச்சமயத்தில் ஏற்கெனவே உரைத்தது போல் தாழ்த்தப்பட்ட சாதியின் பெண்கள் மேலாடை அணிய அனுமதியில்லை.. இதனை எதிர்க்க அய்யா நிகழ்த்திய தோள்சீலைப் போராட்டத்தைப் பற்றி அடுத்த மடலில் காண்போம்.

புதன், ஜனவரி 26, 2011

அய்யாவின் முற்பிறப்பும் அவதார நோக்கமும்

கடலுள் மறைந்த அய்யா மூன்றாவது நாள் திரும்பி வந்தார். புத்தம் புது
உடலோடு.. தன்னை அணைக்க வந்த அன்னையைத் தடுத்து "நான் உன் மகன் அல்லேன்.
கலியுகத்தை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன்" என்றுரைத்த
போது அதனை அன்னையார் நம்பவில்லை... எனவே தனது முற்பிறவியைப் பற்றிய
உண்மையை அய்யா அவர்கள் தன் தாயாருக்கு இயம்ப வேண்டியதாயிற்று.
அமரர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் குரோணி என்னும்
அசுரனைப் படைத்தார். இவ்வசுரன் அனைத்துலகத்தையும் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றான். வைகுண்டத்தை வெற்றி கொள்ள
குரோணி சென்றபோது கோபங்கொண்ட திருமால் குரோணியைக் கொன்றார். அவனது உடலை
ஆறு துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தின் சிறப்பை
உணர்த்துவதற்காக குரோணியின் உடல் ஒவ்வொரு அசுரனாகப் பிறந்தது.
சதிர்யுகம், நெடியுகம், கிருதயுகம், திரேதாயுகம், துவாபாரயுகம் என்னும்
ஐந்து யுகங்களிலும் அசுரனாகப் பிறந்தான். திருமால் பல்வேறு அவதாரங்களை
எடுத்து குரோணியை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டினார்.
ஆறாவது யுகமான கலியுகத்தில், குரோணி மாயையாக உடலற்றுப் பிறந்தான்.
அதன்படி மக்களின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தி அதன் மூலம்
அதர்மத்தை வளர்த்த கலிநீசன்தான் குரோணியின் ஆறாவது துண்டு.
கலிநீசனின் செய்கைகளைக் கண்காணிக்க சம்பூரண தேவன் என்பவனைத் திருமால்
பூலோகத்துக்குச் செல்லக் கட்டளையிட்டார். சம்பூரண தேவனுக்கு எமலோகத்தைச்
சேர்ந்த பரதேவதையின் மேல் காதல் இருந்தது. அவளுக்கு ஏற்கெனவே மணமாகி
இருகுழந்தைகள் இருந்தன. ஆனாலும் அவளும் சம்பூரண தேவன் மீது காதல்
வயப்பட்டாள்.
எனவே சம்பூரணதேவன் திருமாலிடம் தன் காதலியும் தன்னோடு பூலோகம் வரவேண்டும்
என்று வரம் வேண்டினான். அமரனாகப் பிறந்த சம்பூரணதேவனுக்கு அவள்
பொருத்தமற்றவள் என்றும், மாற்றான் மனைவி என்றும் திருமால்
அறிவுறுத்தினார். ஆனால் சம்பூரண தேவன் திருமாலிடம் மிக உருக்கமாக
வேண்டிக் கொண்டான். எனவே அவனைத் தவம் செய்ய பணித்தார். "உன் தவத்தின்
வலிமை கண்டு உனக்கு வரம் தருவேன்" என்றுரைத்தார்.
எனவே சம்பூரண தேவனும், பரதேவதையும் தவம் புரிந்தார்கள். அவர்களது தவம்
பூரணம் அடையும் வேளையில் சிவபெருமானும், திருமாலும் அவர்களுக்கு வரம்
வழங்க வந்தனர். அவர்களை வரவேற்க அமரர் குல அதிபதியான இந்திரனும் வந்தான்.
இந்திரனைக் கண்டதும் இந்திரபதவியின் மேல் மோகம் கொண்டான் சம்பூரண தேவன்.
தன் காதலியுடன் பூலோகம் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தவம்
தேவேந்திர பதவி வேண்டும் என்ற பேராசையில் முடிந்தது.
இதனைக் கேட்ட திருமால் கோபம் கொண்டார். அவர்கள் இருவரையும் பூமியில்
பிறக்க ஆணையிட்டார்.
பரதேவதை ஏற்கெனவே தனது கணவன் மற்றும், குழந்தைகளுக்குத் துரோகம்
இழைத்ததால், கலியுகத்தில் அந்தக் கணவனோடு சேரவேண்டும் என்றும்,
குறிப்பிட்ட காலத்தில் தன் கணவனை இழப்பாள் என்றும் சாபமிட்டார். ஆயினும்
சம்பூரணதேவன் உனக்காகப் பிறப்பான். உன்னை மணப்பான். என்றும் கூறினார்.
சம்பூரண தேவனுக்கும் அவன் பேராசைப் பட்டதால் அதற்குத் தண்டனை நிச்சயம்
உண்டு என்றும் பூலோகத்தில் பிறந்து 22 வயது வரை சாதாரண மானுட வாழ்க்கை
வாழ வேண்டும் என்ரும், கணவனை இழந்த பரதேவதையை மணக்க வேண்டும் என்றும்
கூறினார். அச்சமயத்தில் தீராத நோய்க்கு ஆளாகி மரணத்தில் விளிம்பில்
நிற்கும்போது தானே சம்பூரண தேவனின் உடலில் இறங்கி அவனை மீட்டுக்
கொள்வதாகவும், அவ்வுடல் மூலம் தர்மத்தை நிலைநாட்டப் போவதாகவும் கூறினார்.
அய்யா அவர்கள் தானே அந்த சம்பூரண தேவன் என்றும், கடலில் தன்னை திருமாலின்
தூதர்கள் வைகுண்டம் அழைத்துப் போனார்கள் என்றும் அங்கே திருமால் தனக்கு
கலியை அழிக்கும் வழியைப் போதித்தார் என்றும் உரைத்தார். அங்கிருந்து
திருமால் தன்னை அவரது மகன் என்று உரைத்தமை பற்றிக் கூறிய அய்யா அவர்கள்
அவர் எப்போதும் தம்மோடு இருப்பதாகவும் கூறித் தன்னை வைகுண்டர் என்று
பூலோகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அய்யா தெரிவித்தார்.
தன் அன்னையாருக்குக் கடலில் வைகுண்டத்தின் காட்சியைக் காணச்செய்து இதை
யாருக்கும் உரைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதே சமயத்தில் அய்யா இன்னொரு உண்மையையும் எடுத்துரைத்தார். பொன்னுமாடன்
நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த குழந்தை பிறந்த சிறு
நேரத்திலே இறந்து விட்டதாகவும் அச்சமயத்தில்தான் சம்பூரணதேவன் அவ்வுடலுள்
செலுத்தப் பட்டதாகவும் கூறினார். இதனைத் தாயாரும் ஒப்புக் கொண்டார்.
பிறந்த குழந்தை சிறிது நேரம் சலனமில்லாமல் கிடந்ததையும், பின்னர்
அழுததையும் அன்னை நினைவு கூர்ந்தார்.
அய்யா வைகுண்டர் திருமாலிடம் கலிநீசன் வாங்கி வந்த வரத்தைப் பற்றி
உரைத்தார். அதன்படி கலியை அழிக்கவும் ஆட்டுவிக்கவும் பண்டார வடிவங்கொண்டு
திருமாலே வைகுண்டராக அவதரித்தார். பண்டார உருக்கொண்டு அன்னைக்கு
உபதேசித்துப் பின்னர் தென் திசை நோக்கி நடக்கலானார்.
தென் திசை நோக்கி நடந்த அய்யா என்ன செய்தார்? என்னவெல்லாம் போதித்தார்?
அடுத்த மடலில் காணலாம்.

செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலுற்சென்று மீண்ட அய்யா வைகுண்டரானார்

அய்யா அவர்களுக்கு வந்த நோய் அவரை மிகவும் பாதித்த படியால் இரண்டு ஆண்டுகள் அய்யா படுக்கையில் இருந்தார். இச்சமயத்தில்தான் அய்யாவின் அன்னையின் கனவில் நாராயணர் தோன்றி அய்யாவை செந்தூருக்கு அழைத்து வரச்செய்தார். தமிழ் 1008ம் ஆண்டு மாசி மாதத்திருவிழாவிற்கு திருச்செந்தூருக்கு அய்யா அவர்கள் எடுத்துச் செல்லப்பட்டார். தூளியிலே அவரைக் கட்டி சுமந்து கால்நடையாகவே திருச்செந்தூர் சென்றனர்.
திருச்செந்தூரை அடைந்தவுடன் அவரைக் கடலில் நீராட்ட விரும்பினார் அன்னை வெயிலாள் அம்மாள். ஆனால் அய்யாவால் எழுந்து நடக்க இயலாது அல்லவா? எனவே ஓர் பாத்திரத்தில் கடல் நீரைக் கொண்டு வந்து அய்யாவின் மேல் தெளித்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. யாரும் எதிர்பாராத வேளையில் அய்யா எழுந்து கடலை நோக்கி ஓடினார். சமுத்திரராஜன் அய்யாவை உள்ளே இழுத்துக் கொண்டான்.
அன்னைக்கு மகன் எழுந்து நடந்த மகிழ்ச்சி... ஆனால் உள்ளே சென்ற அய்யா திரும்பி வரவில்லை. அனைவரும் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். ஆனால் அய்யா திரும்பவில்லை. அன்னை வெயிலாள் அம்மாள் அழுது புலம்புகின்றார். அய்யாவின் மனையார் திருமாலம்மாளும் புலம்புகின்றார். ஆனால் அய்யா வரவில்லை. ஏற்கெனவே தீராத நோயில் விழுந்த என் மகனை இந்தக் கடல் கொண்டு சென்றுவிட்டதே... அவன் இறந்திருப்பான் என்றே தந்தை பொன்னுமாடன் முடிவு செய்தார்.
அய்யாவின் உடலைத் தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். எங்கெங்கு தேடினும் அய்யாவின் உடலும் கிடைக்கவில்லை. இதனால் உடன் வந்த உறவினர்கள் ஊருக்குத் திரும்பலாம் என அறிவுறுத்தினர். ஆனால் அய்யாவின் அன்னையோ தான் திரும்பப் போவதில்லை என்று திடமாக மறுத்து விட்டார். மகனை இழந்த துக்கத்தில் தாயின் மனநிலை பேதலித்து விட்டதாக எண்ணி உறவினர்கள் திரும்பிச் சென்றனர்.
அன்னையோ தன் மகனுக்காகக் காத்திருந்தார். மூன்றாவது நாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மாசி மாதம் 20ம் நாள் அய்யா அவர்கள் கடலிலிருந்து வெளிப்பட்டார்கள். புத்தம் புது உடலோடு....
இந்நிகழ்வை அகிலத்திரட்டு அம்மானை இவ்வாறு தெரிவிக்கின்றது...
“கடலை மிகத்தாண்டிக் கரையதிலே செல்லும் முன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறையம் இட்டனரே
ஆவலாதியாக அபயமிட்டர் தேவரெல்லாம்
வைகுண்டருக்கே அபயம் முறையம் இட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
தேவாதி தேவரெல்லாம் பூச்சொறிய
கடலன்னை கைதாங்கி கரையில் விட்டது முத்துக்குட்டியை...
இல்லையில்லை... வைகுண்டரை!”
முத்துக்குட்டியாக கடலுற்சென்ற அய்யா, வைகுண்டராகத் திரும்பினார்.
இனி உன் மகன் திரும்பப் போவதில்லை என உறவினர்களின் மொழி தனது செவியில் விழுந்து கொண்டிருந்த வேளையில் நோய் நீங்கி புது மனிதனாகத் தன் மகனைக் கண்ட வெயிலாளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஓடோடிச்சென்றாள். தன் மகனை ஆவியோடு அணைத்துக் கொள்வதற்கு ஓடிச்சென்ற அன்னையைத் தடுத்து நிறுத்தினார் அய்யா.
"நான் உன் மகனில்லை... கலியை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன் - வைகுண்டர்" என்று தன் அன்னைக்கு உரைத்தார்.
"இதென்ன சோதனை... நான் காண்பது என் மகன் முத்துக்குட்டியல்லவா? மகனே இந்த இடத்திலல்லவா நான் உன்னைத் தொலைத்தேன்.? இங்கே பார். உன்னை நாங்கள் கட்டிக் கொண்டு வந்த தூளி... " என்றெல்லாம் மன்றாடினாள். ஆனால் அய்யாவோ...
"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"


என்றுரைத்தார். ஆயினும் அன்னையால் நம்ப இயலவில்லை.. எனவே அவருக்குத் தனது முற்பிறப்பின் கதையை உரைக்கத் துவங்கினார் அய்யா...
அய்யா அவர்கள் அன்னைக்குக் கூறிய கதை என்ன? அய்யாவின் திருஅவதார நோக்கம் என்ன? தொடர்ந்து வரும் மடல்களில் காண்போம்..

திங்கள், ஜனவரி 24, 2011

அய்யா வழி என்னும் அன்பு வழி

அய்யா அவர்களின் திருஅவதாரமும் இளமைப் பருவமும்
பதினெட்டாம் நூற்றாண்டில் அய்யா அவர்கள் திருஅவதாரம் செய்த வேளையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சாதிக்கொடுமைதான் முக்கியப் பிரச்சனையாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரின் அடிமைகளாகக் கருதப்பட்டனர். இந்த அடிமைகளை விலைக்கு விற்பனை செய்யவும் முடியும், வாங்கவும் முடியும். அவர்களின் சொந்த நிலங்களிலேயே அவர்கள் அடிமைகளாக்கப் பட்ட கொடுமை வேறெங்கும் நிகழ்ந்திருக்குமா? அவர்களுக்கு மிகக் குறைவான பணம் கூலியாக வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் வரி என்ற பெயரில் அவர்களிடமிருந்து பிடுங்கப் பட்டது. ஆண்களின் அடையாளமான மீசைக்கும், தாடிக்கும், பெண்களின் அடையாளமான முலைகளுக்கும், தாலிக்கும் வரிகள் விதிக்கப்பட்டன. வரிகளை செலுத்த இயலாதோர் முதுகில் பெரிய கல்லை ஏற்றி வெயிலில் நிறுத்தி விடுவார்கள். இக்கொடுமைகளால் இறந்தோர் பலர்..
இந்த வரி வசூல் செய்யும் நிகழ்வை அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை இவ்வாறு பாடுகின்றது.
“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”
சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார் குலத்தோரை அய்யா அவர்கள் சான்றோர்கள் என்றழைத்தார். இவர்களின் முக்கிய தொழில் பனைமரம் ஏறுதல். மேலும் பனைத் தொழில் ஆண்டு முழுதும் இருக்காது. பனைத்தொழில் இல்லாத சமயத்தில் விறகு வெட்டுதல் போன்ற மற்ற தொழில்களையும் இவர்கள் செய்து வந்தனர். திருவிதாங்கூரில் தொழில் இல்லாத சமயத்தில் இவர்கள் பாண்டிக்குச் சென்று விடுவார்கள். பாண்டி என்பது சாத்தான் குளம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளைக் குறிக்கும் சொல். மீண்டும் மலையாளம், பாண்டி என்று இவர்கள் நாடோடிகளாய்த் திரிந்தனர். இப்படிக் கொடுமைக்கு ஆளாகியிருந்த சான்றோர் குலத்தில்தான் அய்யா அவர்கள் பிறப்பெடுத்தார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் முன்னர் சான்றோர் குலத்தைச் சார்ந்தோர் நுழைவதற்கே அனுமதி இல்லை. பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் இம்மரபு உடைக்கப் பட்டது. ஆனால் இன்றோ ...? சான்றோர் குலத்தைச் சார்ந்த திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள்தான் முருகனது தேரை முன்னின்று இழுத்துத் திருவிழாவைத் தொடங்கி வைக்கின்றார். ஆனால் மக்களின் நிலையோ வேறு விதமாகி விட்டது. பணம் செலுத்துவோர் முருகனை அருகிருந்து காணலாம். மற்றையோர் தொலைவிலிருந்து காணவேண்டும். இது போன்ற கொடுமைகள் தமிழக இந்து ஆலயங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. இவையெல்லாம் ஒழியும் நாள் எந்நாளோ? (புதிய தகவல். திருச்செந்தூர் ஆலயத்தில் பணம் கொடுத்து நுழைவோருக்குப் புதியதோர் வழியை ஏற்படுத்த ஆலயக் கட்டடத்தில் மாற்றம் செய்யப் போகின்றார்களாம். இன்னொரு இழையில் இதைப் பற்றி எழுதுவோம்).
சாதிக்கொடுமைக்கு மாற்றாக மக்கள் மதம் மாறத்தொடங்கினர். ஆங்கிலேய கிறித்தவப் பாதிரிமார்கள் இவற்றைத் தங்களுக்கு உபாயமாகக் கொண்டனர். எண்ணற்றோர் மதம் மாறினர். இந்து ஆலயங்களுக்கு உங்களுக்கு நுழைவுரிமை இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். ஆலயம் உள்ளே வந்து வழிபடுங்கள். உங்களுக்கு மேலாடை அணியும் உரிமை இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். கோட் அணியலாம். செருப்பு அணியும் உரிமை உங்களுக்கு இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். சூ அணியலாம்.  இதைப் போன்ற செய்திகள் முன்மொழியப் பட்டதால் பலரும் கிறித்தவத்தைத் தழுவினர். ஆயினும் அவர்களும் ஆதிக்க சாதியினரால் தாக்கப் பட்டனர். இச்சமயத்தில்தான் சென்னை நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. கிறித்தவர்களாக மதம் மாறிய தாழ்த்தப் பட்டோர் மேலாடை மற்றும் காலணி அணியும் உரிமைகளை உடையவர்களாக ஆகின்றனர். ஆனால் தாழ்த்தப் பட்ட இந்துக்களுக்கு இந்த உரிமை இல்லை. என்று..... எனவே திரளானோர் கிறித்தவ சமயத்தை நாடினர்..
இந்த சமயத்தில்தான் சமுதாயத்தைக் காப்பதற்காக அய்யா அவர்கள் பிறந்தார்கள். சாஸ்தான் கோவில் விளை என்னும் ஊரில், கி.பி. 1809ம் ஆண்டு பொன்னு மாடன் நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த அய்யா அவர்களுக்கு "முடி சூடும் பெருமாள்" என்ற அழகிய பெயரை இட்டார்கள்.. தற்சமயம் இந்த ஊர் சாமித்தோப்பு என்று அழைக்கப் படுகின்றது. அங்கிருந்த வழக்கப் படி தாழ்த்தப் பட்டோர் தங்கள் குழந்தைகளை குரங்கு என்றும், மாடு என்றும்தான் அழைக்க வேண்டும். இந்நிலையில் மகாவிஷ்ணுவின் பெயர் தாங்கிய நமது முடிசூடும் பெருமாளின் பெயரைப் பதிவு செய்ய பொன்னுமாடன் சென்றார். அங்கிருந்தோரோ அவரை மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து தன் மகனுக்கு "முத்துக்குட்டி" என்று பெயர் மாற்றம் செய்தார் பொன்னுமாடன்.  பொன்னுமாடன் சிறந்த பெருமாள் பக்தர். முத்துக்குட்டியும் சிறந்த பெருமாள் பக்தராகவே விளங்கினார்.
கல்விகற்பதற்கு அனுமதியில்லை. எனவே அய்யா அவர்கள் கல்விக்கூடம் செல்லவில்லை. ஆதிக்க சாதியினரின் ஆலயங்களுக்குள் இவர் நுழைவதற்குத் தடை விதிக்கப் பட்டிருந்ததால் தனது இல்லத்திலேயே சிறு மேடை ஒன்று அமைத்து இறைவனை வணங்கலானார்.  சிறுவயது முதலே இவர் கண்டு வந்த சாதிக்கொடுமை அவரை சிந்திக்க வைத்தது... தந்தையார் செய்த குலத்தொழிலான பனைத் தொழிலையே அய்யா அவர்களும் செய்யத் துவங்கினார். தான் கண்ட கொடுமைகளை அய்யா அவர்கள்
“பனை கேட்டு அடிப்பான் பதநீர் கேட்டே அடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டடிப்பான்
நாரு வட்டி ஓலை நாடோறும் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய் கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டை கேட்பான் நெட்டோலைதான் கேட்பான்
குளம் வெட்டச் சொல்லி கூலி கொடுக்காமல்
களம் பெரிய சான்றோரை கைக்குட்டை போட்டடிப்பான்...”
என்று பாடுகின்றார். சமூக சிந்தனையாளராக வளர்ந்த அய்யா அவர்களின் இளமைக் காலத்தை அகிலத்திரட்டு அம்மானை கீழ்க்கண்டவாறு பாடுகின்றது..
“ஊருக்குத் தலைவன் உடைய வழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவன் என்று அன்னை பிதா வளர்த்தார்
ஞாயமிருப்பதனால் நாடாள்வானென்று சொல்லி
தாய் மக்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நலவளமை
பல்லாக்கு ஏறிடுவான் பார் முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
ஈவதற்கு தர்மன் என எளியோரை கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிக வளர்ந்தார்...”
உடல் உறுதிமிக்கவராய்த் திகழ்ந்தார். தங்கள் விளைநிலங்களை ஆதிக்க சாதியினர் பிடுங்கிக் கொள்ள வெகுண்டு எழுந்தார். இளைஞர்களைத் திரட்டி வீரமூட்டும் பேச்சுக்களை பேசினார். "மாடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது" என்று அவர் பேசிய பேச்சு மக்களை உசுப்பி விட்டது.  விதவைப் பெண்களைக் கண்டு வாடினார். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அய்யா அவர்களை மிகவும் பாதித்தது.
இவற்றைக் கண்டு வாடியதால்தான் ஓர் விதவைப் பெண்ணையே மணம் முடிக்க எண்ணினார். அதன்படியே தனது 17வது வயதில் திருமால் எனும் பெயர் கொண்ட ஓர் விதவைப் பெண்ணை மணம் முடித்தார். அவருக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருந்தன. இச்செயலானது அக்காலத்தில் சமுதாயத்திற்கு ஏற்றதாக இல்லை. எனவே தனது சமுதாயத்தினரால் அய்யா அவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். அய்யா அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர்களும் புறக்கணித்தனர். இதனால் வறுமையில் வாடினார் அய்யா. பனைதொழிலில் வரும் வருமானமும் வரி என்ற பெயரில் பிடுங்கப் பட்டதால், குடும்பம் பட்டினியால் தவித்தது. அய்யாவின் வாட்டத்தைக் கண்ட பெற்றோர் மீண்டும் அவரோடு வந்து இணைந்தனர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது..
இந்நிலையில்தான் அய்யா அவர்களை கொடிய நோய் தாக்கியது. அய்யா அவர்கள் படுத்த படுக்கையானார். யாராலும் அவரைக் குணப்படுத்த இயலவில்லை. அய்யா அவர்கள் படுத்த படுக்கையாகி இரு வருடங்கள் ஓடிவிட்டன. இந்த வேளையில்தான் வெயிலால் அம்மாள் ஓர் கனவு கண்டார். அவரது கனவில் நாராயணன் தோன்றி முத்துக்குட்டியைத் திருச்செந்தூர் அழைத்துச் செல்ல பணிக்கின்றார். இக்கனவை அய்யாவே பாடுகின்றார்.
“வந்து சொன்ன உத்தரவை மகனே நீ கேளு என்று
விந்து வழிக் கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்க
சொல்லுகிறாள் அந்த சொற்பனத்தை அன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுகிறாள் அன்போரே
ஆயிரத்து எட்டு ஆண்டு இதுவாம் இவ்வருடம்
மாசியென்னும் மாதமிது வாய்த்த தேதி பத்தொன்பது
இம்மாதம் இத்தேதி ஏற்ற திருச்செந்தூரில்
நம்மாணைக் கொடியேற்றி
நல்ல திருநாள் நடக்கும்
அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால்
எங்குளோரும் அறிய இப்பிணியும் தீர்த்து
நல்ல பேறும் கொடுப்போம்
நம் ஆணை தப்பாது...”
இதன்படி தமிழ் ஆண்டு ஆயிரத்து எட்டு மாசி மாதம் பத்தொன்பதாம் தேதியில் செந்தூரில் நடைபெறும் மாசித்திருவிழாவிற்காக அய்யாவை அழைத்து வரச்சொல்லி ஆணை. மகனுக்கு சுகம் கிடைத்து விடும் என்று மகிழ்ந்த பெற்றோரும் அய்யா அவர்களைத் தூளியில் கட்டித் திருச்செந்தூர் புறப்பட்டனர்.
அய்யா அவர்கள் குணமடைந்தார்களா? வெயிலாள் அம்மாள் கண்ட கனவு பலித்ததா?
தொடர்ந்து வரும் மடல்களில் காண்போம்...

அய்யா வழி என்னும் அன்பு வழி

தென் தமிழ்நாட்டின் அன்றைய நிலை
இந்தியத் திருநாட்டிற்கு இயற்கையளித்த நற்கொடையான மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டப் பகுதிதான் இன்றைய கேரளமும், நமது தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரி மாவட்டமும்.  "கடவுள்களின் நாடு" என்று அழைக்கப்படும் பரசுராமரால் தோற்றுவிக்கப் பட்ட இக்கேரளம்தான் சுவாமி விவேகானந்தரால் "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்றும் அழைக்கப் பட்டது. பகுத்தறிவுப் பகலவன் என்று புகழப்படும் பெரியார் அவர்களும் இக்கேரளத்தின் வைக்கம் எனும் இடத்தில் நிகழ்த்திய கோயில் நுழைவுப் போராட்டத்தின் மூலம் வைக்கம் வீரர் என்னும் பெயரைப் பெற்றார்.
நன்செய்நாடான நம் நாஞ்சில் நாட்டிலும் கேரளத்தின் தாக்கம் இருந்தது. சூத்திரர்களுக்கும் கீழ்ப்பட்டோர் எனக்கருதப்பட்ட அவருணர்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாகியிருந்த நேரத்தில்தான் புத்தொளி ஒன்று பிறந்து சமத்துவத்துக்கு வழிகாட்டியது. திரளான மக்கள் கிறித்தவ சமயத்துக்கு மாறுவது மட்டுமே நம்மை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று எண்ணி கிறித்தவர்களாக மாறிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில் மதமாற்றத்தை அந்த ஒளி தடுத்து நிறுத்தியது.. நமது தேசப்பிதாவான மகாத்மாகாந்திக்கு முன்னரே அகிம்சை வழியில் ஆன்மீகப்போராட்டத்தையும் அவ்வொளி நிகழ்த்திக் காட்டியது. அந்த ஒளியின் வரலாற்றையும், நம் நன்செய் நாட்டின் அன்றைய நிலை, அவர் ஏற்படுத்திய சமுதாய மறுமலர்ச்சி போன்றவற்றை நாம் இவ்விழையில் தொடர்ந்து காண்போம்...
அச்சமயத்தில் நன்செய் நாடானது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அறிவியல் வளர்ச்சியில் அயல்நாடுகள் முன்னேறிக் கொண்டிருந்த அவ்வேளையில் நம் நாடு மிகவும் கேவலமான நிலையில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகை வருண சாதிகளும், அவர்களுக்கும் கீழோராகக் கருதப்பட்ட அவருணர்கள் என்றழைக்கப் பட்ட சாதியினருமாக சமுதாய அமைப்பு முறை இருந்தது.. ஆதிக்க சாதியினர் பிற சாதியினரை அடக்கித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அவர்களை சிறுமைப்படுத்தி மிகவும் கேவலமான நிலைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தனர். தங்கள் இன்னல்களுக்கு ஓர் விடிவெள்ளி என்று தோன்றும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அய்யா வைகுண்டர் உதித்தார். தனது ஆன்மீக சமுதாய சீர்திருத்தப் போராட்டத்தால் கீழ்த்தட்டு மக்களை ஒன்றிணைத்துப் போராடினார். அவரைப் பற்றித்தான் நாம் இங்கே காணவிருக்கின்றோம். அதற்கு முன்னால் கீழ்ச்சாதியினர் அனுபவித்த இன்னல்களை சிறிது பார்த்து விடலாம்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் இருந்தன. நம்பூதீரிகள்தான் சமுதாயத்தின் மிக உயர்ந்த சாதியினராகக் கருதப்பட்டனர். அவர்களுக்குத் துணையாக நாயர்களும், வேளாளர்களும் மற்ற சாதியினரும் இருந்தனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட சாதியினராக 18 சாதிகள் அறிவிக்கப் பட்டிருந்தன. அந்த சாதிகளை அய்யா அவர்களே தனது பாடலால் பட்டியலிடுகின்றார்.
"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை.
இவர்கள் எல்லோரும் உயர்சாதியினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் விதிக்கப் பட்டன. அத்தனையும் கொடூரமானவை. அவற்றுள் சில.
1. உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் இவர்கள் நடமாடக் கூடாது
2. இவர்கள் காலணி அணியக் கூடாது
3. குடை பிடித்துக் கொள்ளக் கூடாது.
4. வேட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்துக் கொண்டுதான் நடமாட வேண்டும்.
5. உயர்சாதியினரை (சிறு குழந்தைகள் என்றாலும்) சாமி என்றோ, அய்யா என்றோதான் அழைக்க வேண்டும்.
6. இவர்களை உயர் சாதியினர் அடிமைகளாக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் கூலி கிடையாது
7. இவர்கள் உயர் சாதியினரிடம் இத்தனை அடி தொலைவில் நின்றுதான் பேசவேண்டும். (சரியான தூரத்தினை விரைவில் சொல்கின்றேன்).
8. புலையர்கள் உயர்சாதியினரைப் பார்ப்பதே குற்றம். பிராமணர்களின் கண்ணில் இவர்கள் பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை. இதனால் அவர்கள் வெளியில் செல்லும் போது சத்தமிட்டுக் கொண்டே செல்லவேண்டும். பிராமணர் வருவதாக பதில் சத்தமிட்டால், மறைந்து கொள்ள வேண்டும்.
9. ஆதிக்க சாதியினரின் கோயில்களுக்குள் இவர்கள் செல்ல அனுமதி இல்லை. (கர்ம வீரர் காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் இம்முறை ஒழிக்கப் பட்டது)
10. ஊரின் குளம், கிணறு மற்றும் பொதுச்சாலைகளை இவர்கள் பயன்படுத்தக் கூடாது
11. ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளக் கூடாது. பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக் கூடாது
12. தங்கள் குழந்தைகளுக்கு ஆதிக்க சாதியினர் வைத்துள்ள பெயர்களை வைத்துக் கொள்ள உரிமை இல்லை.
13. பசுமாடு வளர்க்கக் கூடாது
14. பெண்கள் நீர்க்குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.
15. பெண்கள் முலை வரி செலுத்த வேண்டும். செலுத்தாதோரின் முலைகள் அறுத்தெரியப் பட்டன.

இன்னும் இது போன்று பல அடக்குமுறைகள் கீழ் சாதியினர் மேல் திணிக்கப் பட்டன. மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாகினர்.  இச்சாதியினருள் சாணார் என்றழைக்கப் பட்ட நாடார் சாதியினர் பனையேறும் தொழில் புரிந்து வந்தனர். இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஏணி, தளைநார் போன்றவற்றிற்கு வரி செலுத்த வேண்டும். வீட்டின் கூரையை மாற்றினால் கூட அதற்கும் வரி செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஆதிக்க சாதியினரின் தெய்வங்களைத் தங்கள் இல்லத்தில் வைத்தும் வணங்குவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது.
ஐவகைத் தொழில் புரிந்து வந்த பஞ்ச கம்மாளர்கள் தாங்கள்தான் உண்மையான பிராமணர்கள் என்று போராடி நீதிமன்ற வழக்கிலும் வென்றுள்ளனர். இவர்கள் தங்கள் இல்லத்துத் திருமணங்களை உயர்சாதியினரைப் போல் நடத்திக் கொள்ளும் உரிமையையும் போராடிப் பெற்றனர். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரும் இவர்களுக்கு ஓர் இன்னல் காத்திருந்தது. அன்றைய முதலமைச்சராக இருந்த ராஜாஜி இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் "ஆச்சாரி" என்று அடைமொழியை வைத்துக் கொள்வது தவறு என்று அறிவித்தார். இவர்கள் "ஆசாரி" என்றே அழைக்கப் படவேண்டும். ஆச்சாரி என்று அழைக்கப் படக்கூடாது என்றார். இந்த உரிமையையும் அவர்கள் போராடிப் பெற்றனர்.
இப்படி சாதிக்கொடுமை தலை விரித்தாடிய காலத்தில், அடிமைச் சாதியினராகக் கருதப்பட்ட சாணார் (நாடார்) குலத்தில் பொன்னுமாடன் என்பவருக்கும் வெயிலால்  அம்மாளுக்கும் மகனாக கி.பி. 1809ம் ஆண்டில் அய்யா என்று அழைக்கப்படும் வைகுண்டர் பிறந்தார். பொன்னுமாடன் நாடார் ஓர் பெருமாள் பக்தர். ஆதிக்க சக்தியினருக்குத் தெரியாமல் தன் இல்லத்தில் பெருமாளை வணங்கி வந்தார். எனவே பெருமாளின் அருளால் பிறந்த இக்குழந்தைக்கு "முடிசூடும் பெருமாள்" என்று பெயரிட்டார். இது ஆதிக்க சாதியினரால் எதிர்க்கப் பட்டது.  தண்டனைக்குப் பயந்து மகனுக்கு "முத்துக் குட்டி" என்று பெயர்மாற்றம் செய்தார்.
முத்துக் குட்டியும் இளம்பிராயம் முதலே பெருமாளை வணங்கும் பக்தனாக இருந்தார். சமுதாயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த சாதிக்கொடுமைகள் அவரை மனம் வருந்தச் செய்தது. சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர அவர் என்ன செய்தார்.? சமுதாயம் மாறியதா? அய்யாவின் வரலாறு என்ன? தொடர்ந்து வரும் நாட்களில் காணலாம். மீண்டும் சந்திப்போம்.

உங்களோடு சில நிமிடங்கள்...

76). கண்ட பொழுதிற் களித்தேன் கடையேன்! அன்று
தண்ட பாணியைத் தமிழ்க் கடவுளாக்கி அவன்
வண்டு கையளாம் வள்ளியை ஏற்றிட
பண்டேயவனுக் கருள்செய்த வல்லியே!

77) வல்லியின் வல்லபத்தைப் பாட ஒரு மொழியில்லை
செல்லுமிடமெல்லாம் தோன்று மவள் தோற்றத்தைக்
கல்லிலும் கண்டோமே கடவூர்ப்பதியினிலே! - எந்தன்
சொல்லில் நடமாடும் சுந்தரியின் வண்ணமெலாம்!

78) வண்ணத் திருக்கோலம் வரைந்தழைக்கும் பெண்டிருக்கு
எண்ணமெலாம் ஈடேறச் செய்திடுவாள் என்னன்னை! அன்று
மண்ணுலகும் விண்ணுலகும் ஈரடியால் அளந்தவனாம் மாயக்
கண்ணனவன் திருத் தங்கை புகழ்பாடல் எம் பணியே!

உங்களோடு சில நிமிடங்கள்...

51) சக்தியென்றும் சிவமென்றும் நின்றவளே உனையென்றும்
பக்தி செய்யும் பாமரர்தம் பற்றுப்பாய்! பாரில் என்றும்
முக்தி தரும் நின்னடியைத் தொழுவோர்தம் நெஞ்சினுக்கு
சக்தி கொடு சங்கரனார் சத்தியத்தின் திருவுருவே!

52) உருவாய் உனைக்கண்டு பக்தி செய்யினும் எங்கும்
அருவாய் நின்ற அம்மே! ஆழிசூழ் அவனியின் மேல்
பருவரைக ளெல்லாம் நின்புகழ் பாட எமக்கெலாம்
தரு தருவென நின்ற நின் அருளினைச் செப்புவதே!

53) செப்புவரே தோத்திரங்கள் சேவடியே சரணமென்று
முப்புரங்கள் தகனஞ்செய் நாதனொடு நாரணனும்
அப்புறத்தில் சிரமிழந்த அயன்வழியே அமரர்களும்
வெப்பு துயர் நீக்கியருள் வேப்பிலையின் ஆடையம்மே!

54)  அம்மே என்றுனையான் தொழுது அமுது செய்து
செம்மே யெங்கடன் தீர்ந்தழிந்து மீண்டும்
சும்மே யிருப்பது சுமையென்றுணர்ந்துனைக்
கொம்பே யெனப்பற்றிப் பற்றறுத்தேன் பண்டேயானும்!

55) பண்டேயுனைப் பாடு நல்பாட்டனின் பாடல்வழியின்று
கண்டேன் கடவூரில் கலைகளெலாம் கற்றோரைத் துணைக்
கொண்டே! கண்டதும் எனையாண்ட அம்மே உனக்கேயன்பு
பூண்டேன்! இனி வேறெதுவும் வேண்டேன் அம்பிகையே!

56) அம்பிகையே அண்டமெலாந்தொழும் ஆனந்த வல்லியே
தும்பியினைத் தூதுவிடு ஈசனுக்கு சமபாகம் ஈந்தவளே!
நம்பியுனைத் தொழுவோர் நாவில் நடமாடும் நாயகியே!
எம்பிறப்பறுத்து ஏற்றுக்கொள் ஏதிலியே நானுமிங்கே!

57) நானென்ற நினைப்பழிப்பாய்! நல்லோர்தம் துணையளிப்பாய்
தானென்ற கர்வங்கொண்ட மகிடனைச் சங்கரித்து இவ்
வானெலாம் விரிந்து நின்ற காளியே! வலுவிலா என்
ஊனெலாம் நிறைந்த நின் பேரருளுக் கிணையேனோ?

58) இணையிலாதாள் எங்கள் தாய் என்றும் எமக்குத்
துணை நிற்பாள்! பண்புடை வேதங்களும் அவைதம்
பணைகளும் தொழுதேத்தும் வடிவோ கருப்புச்சிலையும்
கணைகளோரைந்தும் ஏந்தும் எந்தாயின் கடைவிழியே!

59) விழியால் அருள்செய்யும், பக்தர்க்கருள் செய்தவர்
பழியெலாம் நீக்கும். பாரில் என்றும் பிறந்து அழுந்தும்
சுழியிடை மீளுதற்கு வழியாம் இவளைத் தொழுதிடில்
அழியா நிலை யருளும் எங்கள் அபிராமித் திருநாமமே!

60) திருநாமஞ்சொல்லி யழுதேன். தொழுதேன் என்னை
ஒருபோதும் பிரியாதே அபிராமி.! அன்றே என் அன்னைக்
கருப்பை யிருந்த காலத்தே யெனைத் தேடி வந்த நின்
உருவை இன்றன்றோ கண்டேன் நாராயணி!

61) நாராயணி நல்லோர் நாவில் நடமாடும் நங்கை நல்லாள்
ஓராறு முகங்கொண்ட வேலனுக்கு அம்மையாம் அவள்
வாராதிருப்பாளோ வல்வினைகள் களைந்திடவே.. பின்
ஆராவமுதளித்து அன்பொடு என்னை ஏற்றிடாளோ?

62) ஏற்றுயர்க் கொடியுடை ஈசனார் இல்லாளே
போற்றுதுமே நின்புகழ் புவியெலாம!  மலராரங்கள்
சாற்றுதுமே சங்கரனை நடனச் சமருக்கழைத்த நின்
பொற்றாமரை அடியிணைக்கே! பொல்லாப்பறுத்தவளே!

63) பொல்லாத பிள்ளைகட்கும் இரங்கு நல்லன்னையே நீ
இல்லாத இடமும் உண்டோ நீண்ட இவ்வுலகினிலே! கல்வி
கல்லாத கடையேன் என் உள்ளத்தே ஒளிரும் ஒளியே!  நெறி
நில்லாத சிறியோனை யேற்றமை அம்மே! நின் தண்ணளியே!

64) தண்ணளியும் தவநெறியும் தந்தே யெனையாண்ட
பெண்ணரசி பெருந்தவத்தாள் இவள்தன்னால் யான்
கண்ணிறைந்து கண்டேன் கலியுகத்து விந்தையெலாம்!
மண்ணாளும் அரசி மங்கைநல்லாள் மாதவன் நற்றங்கையே!

65) தங்கையால் தரணி காப்பாள் தவம் செய்வோர்க்கு
செங்கையால் சேடளிப்பாள். நாடோறும் தொழும்
மங்கையர்தம் மங்கலம் காத்து மாறா நிலைதந்து
அங்கையால் அமுதிடும் எந்தாய் அன்னபூரணியே!

66) அன்னமிடும் அடியவர்க்கு அன்பால் அருட்செய்யும்
கன்னஞ்சிவந்தாளைக் கண்டேனே கடவூரில்! நான்
பொன்னும் வேண்டிலேன்!. பொருளேதும் வேண்டிலேன்!
மன்னவரெலாந்தொழும் நின் இணையடிகள் சாலவே!

67) சாலவமுதீந்து சங்கரனைத் தானே காத்தாள்
ஆலகாலத்தை அமுதாக்கும் அதிசயத்தால்
நீல கண்டங்கொண்டான் நித்திய சோதியனே!
பாலருந்தும் பாலகந்தன் கண்ணீரழித்தவளே!

68) கண்ணீராறாகக் கண்டதும் வந்தே நின்றாள். என்
புண்ணியத்தால் கண்டேனிவளை? புவனத்தோரும்
விண்ணுலகத்தோரும் காணா விந்தையைக் கண்டதும்
பண்ணெழுவதும் விந்தையே பாமரன் என் நாவில்!

69) நாவில் நடம்புரியும் நாயகியே! ஆதி சங்கரனார்
ஆவியிற்கலந்த அருட்சோதியுனைத் தேடியே
காவில் தவமியற்றும் கமண்டலத்தார் தமைவிடுத்து
பாவியெனைத் தேடி வந்தமை யென் சிறப்போ?

70) சிறப்பே யிவள்தமைப் பாடும் பாட்டெல்லாம்! என்றும்
இறப்பேயிலாத நிலையருளும் இன்சொலாள்! தொழுமவர்
பிறப்பறுக்கும் குணம்பாடி பின்னுமொரு நிலையடைந்தேன்
அறம்செய்யும் அன்பே நின் அகத்துப் பிள்ளை யானே!

71) பிள்ளைபடும் பாடு கண்டு பொறுக்காது வந்து உந்தன்
வெள்ளை மனத்தால் கள்ளமழித்தாய்!. கலைகளின் முதல்
பிள்ளையாரைத் தந்து வேதங்காத்த நின் ஈரடிக்குப்
பிள்ளை பாடும் போற்றிகள் ஏற்பாய் பிணிதீர்ப்பவளே!

72) பிணியெலாம் போயொழிந்து புத்துயிரானேன் நின்னை
அணிசெய்தே பாடியென் துயரெலாமொழித்தேன்! அன்று
கணிசொன்ன சனியெந்தன் அகம் வந்தநாளில் நிந்தாள்
பணிந்தே யவன் செய்கை இல்லாமற்செய்தேன் என்னம்மே!

73) என்னம்மை என்றிவள்தாள் பணியும் நல்லோர்
இன்னலெலாம் தானேயழிவதைக் கண்டோர் தாமும்
கன்னமழித்துத் தேடிவந்தார் கண்டேன் அம்மே! அவர்
சின்னவரேயானாலும் சீர்தருமே நின்பெருஞ்சீர்!

74) சீர்தரும் இணைவிழிக்கே பண்ணிசைத்தான் என் பாட்டன்!
பேரெடுத்தான் தானேயவள் செல்லப் பிள்ளை என்றேயவன்!
பார்புகழும் பட்டன் சொன்ன செந்தமிழால் பாடுவோர்தம்
ஊரெலாம் செழிக்கும் வகை செய்திடுதல் அன்னைதன் கடனே!

75) கடனே யெங்கள் சங்கரியைப் பாடுதல் என்றும் எமக்கு! அன்று
இடபங் கொண்டானின் இடப்பாகம் பறித்த அன்னை
விடத்தை அமுதாக்கிக் காக்கும் அதிசயத்தால்தானே
படங்காட்டும் பாம்பும் இவள் தேராவது கண்டீர்!

உங்களோடு சில நிமிடங்கள்...

26) தந்தவளெமக்குத் தன்னிணை அடிகளையே ஆதி
அந்தமென நின்ற அன்புடை அன்னையுமே. அன்று
கந்தனுக்கு வேலீந்த கற்பகமே கவினுலகிலென்
பந்தமறுக்கப் பற்றினேன் பரமென் றுனையே..

27) உனையே போற்றும் பித்தன் எமக்கு அமுதம்
தனையே ஈந்தாய் அன்றெந்தன் நாவில்  ஈடாய்
எனையே தந்தேன் கடவூர்ப்பதியில் என்றும் எந்தை
மனையே! மலையோன் பெற்ற மரகதக் கொழுந்தே!

28) கொழுவாய் எனைத்தாங்கும் கொடியே கோவைப்
பழவாய் தான் கொண்ட பிடியே - நெறி
வழுவா உள்ளத்தே நீங்காத நின் அடியை நானும்
தொழவே என் செய்தேன் அம்மே அகிலத்தரசியே...

29) அகிலத்தரசியை அன்பொடு அமுதீந்த அங்கயற்கண்ணியை
அகில்சேர் மலர்நாறும் அருந்தோள் வல்லியை என்றும்
அகிலத்தோர் ஏத்தும் ஆனந்த மல்லியை அடித்தொழுவார்
அகிலம் ஏழும் ஏத்தும் ஆனந்தம் பெறுவர் சத்தியமே...

30) சத்தியவடிவே சகலகலையேத்தும் சங்கரி உமையே
புத்தியிலாப் பித்தனுக்கும் முத்திதருநிலையைப் புவியில்
எத்திசையும் கண்டிலேன் கடவூரன்றி ! காளையரசொடு
அத்திசைக்கெமை யழைத்த அம்மே! அற்புத சுந்தரியே!

31) சுந்தரவடிவு கண்டோர் சுழல்பிணி உழலுவரோ வையைப்
பந்தலில் சொக்கர்தனைச் சோர்வுறச் செய்தவளே! எனை
அந்தகன் அழைக்குங்காலை அல்லலும் அயரும் தீர்க்க
வந்தருள் தாயே உன் திருவடிக்கே சரண் புகுந்தேன்.

32) சரணங்கள் செப்புவரே போதிலுதித்த பிரமனும்,
நாரணனும், நற்றமிழ்ச் சங்க சங்கரனும் வெண்
வாரணம் ஏறிடும் தேவர்தம் கோனும், இமையோருமே!
காரணம் கண்டேன் அம்ம நீயே அவர்தம் தாயே!

33) தாய் உதரத்துதித்த பொழுதே தன்னகத்தே ஈர்த்து
ஏய்க்கும் உலகத்தோர் பற்றறுத்தாய் பண்டொருநாள்
மாய்க்கும் பணிகொண்ட ஈசன் இடப்பாகம் கொண்டவன்
வாய்க்கும் அமுதீந்த அன்பினை என்சொல்வேன்?

34) சொல்தந்தாய் உனைப்பாடச் செந்தமிழில! உனைக்
கல்லென்னும் மடையருக்கும் கவிதந்தாய்! அவர்தம்மை
வெல்வதற்குக் கலைதந்த கலாமயிலே! கற்றோர்தம்
சொல்வாழும் கற்பகமே! கற்பனைக்கெட்டாத நின்னருளே!

35) அருள்தர வந்தாய் அன்பொடு எந்தன் மனத்
திருள் நீக்கிச் சென்றாய் அன்னையே மாய
மருளகற்றும் நின் கடைவிழியால் நஞ்சுண்ட
கருங்கண்டனுக்கு வாழ்வளித்தமை நின் பெருமையே!

36) பெருங்குறையோடு போற்றும் பித்தனுக்கன்று உந்தன்
அருட்குறையின்றி அளந்த அபிராமியே! உனையெண்ணி ஆயிரம்
திருநாமங்கள் செப்பிடுவோருள ராயினும் அன்பொடு
ஒருநாமம் செப்பும் அளியேனுக் கிரங்கிய நின்னெளிமையே!

37) எளிதிற் கிட்டிடும் நின் சேவடிக்கெந்தன் சென்னிதந்தேன்
ஒளிசேர் திருமுகமும் ஒன்பது கோள்களாளும் திருக்கரமும்
களிப்பூட்டும் திருநாமமும் கலைகள் தொழும் கண்ணிணைகளும்
வெளியெங்கும் விரியும் நின் திருவுருவும் என்றுமெனை ஆள்கவே

38) ஆளுகை செய்யும் அன்னைத் திருக்கோயில் அருகிருக்க
வாளுடன் வரும் கூற்றெனை என்செய்யும்? குறைசொல்லும்
கோள்களு மெம்மிடத்து நெருங்குமோ அபிராமியின்
தாளிணைக்கே சரணமென்று அன்றேயான் வீழ்ந்தபின்னும்?

39) வீழ்ந்திடும் பகைவர் கண்டேன் விந்தையெனத் திகைத்தவேளை
பாழுமவர் செய்த பாவம் பக்கத்தில் நிற்கக் கண்டேன். வெண்ணிற
ஆழியிற்றுயில் மாதவன் தங்கைதனை அன்பொடு தொழுதிடவே
ஏழேழ் பிறவி கேட்டேன் என்னம்மைத் திருவடிக்கே!

40) அடித்தொழும் அன்பர்தம் அல்லலெல்லாம் நீக்கும்
படியன்றே யுனைப் பாடிய பட்டன் வழி இன்றுயானும்
படித்தேனவன் அந்தாதியுன் திருமுன்னே அம்மே நின்
மடிக்கெனை யேற்பாய் என்றும் எந்தன் தாய் நீயே!

41) நீயே கதியென்று உனைத் தொழும் அன்பருக்கு
மாயே மாயாத வாழ்வளிப்பாய். மண்ணோர்க்குத்
தாயே மலையத்துவசன் பெற்ற மாணிக்கமே! இப்
பேயேனை மகனென்ற பெருமைதனைப் பாடிடவோ?

42) பாடிப் பரவசத்தில் ஆடிப் பற்றறுத்துப் பின்னுனை
நாடிவரும் அன்பர்குறை தீராயோ? என்றுமுனைத்
தேடி வாடும் ஏதிலியின் ஏக்கந்தனைப் பாராயோ? சடுதியில்
ஓடி வந்தணைத்து மகனே என்னும் நாள் எந்நாளோ?

43) எந்நாளும் பாடுவது எந்தன் அன்னைத் திருப்புகழே!
அந்நாளில் எந்தன் பாட்டன் பாடித் தந்த அந்தாதியே!
இந்நாளில் நான் கண்ட இன்னமுதுத் திருவுருவை
எந்நாளும் எங்கண்கள் ஏற்கும் அருமருந்தைத் தா!

44) மருந்தே இவள் மண்ணுலகின் துயருக்கெல்லாம்! மாசிலா
விருந்தே என்றும் எந்தை ஈசன் திருமனைக்கு! எந்நோய்க்கும்
பொருந்தும் நின் சேவடியைத் தொழும் அன்பரென்றும்
வருந்தா வகை செய்யும் வல்லமையைப் போற்றுதுமே!

45) போற்றிகளாயிரம் பாடுவார் பண்டையுனக்கு மாலை
மாற்றிய சங்கரனும் மாலும் அயனுமே! பக்தர் பிணி
ஆற்றும் ஆதிசக்தியே! அவனியில் உன்புகழ் மாலை
சாற்றிய பட்டனைச் சான்றோனாக்கிய சங்கரியே!

46) சங்கரி சகலகலா வல்லி நான்மறைகள் தொழும்
அங்கயற் கண்ணி அகிலமெல்லாம் பெற்றதாயே!
வெங்காலன் விடும் தூதென்னை  வேதனை செய்ய
இங்கே வரும் வேளை நின் இணையடிகள் தாராயோ?

47) தாராயோ நின்னருளைத் தரணியின் மாந்தருக்கு!
வாராயோ நின்மக்கள் துயர்களைய வல்லவளே!
பாராயோ பாடியழும் பாவலனின் பக்திதனை!
தீராயோ எங்குறைகள் தில்லையூரின் நாயகியே!

48) நாயகி யிவளெனக் கொண்ட எம் ஈசனார்தம்
தாயகம் தானெழில் கண்டிடச் செய்தவளே! இவ்
வையகமும் வானகமும் வளஞ்செய்யும் தாயிவளே
நாயகியாம் நான்மறைக்கும் நான் சொல்லும் சேதியிதே!

49) சேதிசொல்லும் நாரதனும் தேவியுனைப் பணிந்திடுவான்
பாதியுடல் ஈசனுக்குப் பாகந்தந்த பைங்கிளியே! நல்
வேதியரும் வேள்வி செய்வார் வேண்டியுந்தன் அருளினையே!
ஆதிசக்தி அம்பிகையின் அடியென்னைக் காத்திடுமே!

50) காத்திடுமே கற்பனைக் கெட்டாத் துயர் வரினும் நான்
காத்திருக்கும் கழலிணைகள் கற்பிக்ககுமே கவியெனக்கு!
சாத்திரங்கள் சொல்லி மாளும் சதிகாரர் சந்தையிலே
பாத்திறத்தால் வென்றிடுவேன் பக்தியெனும் சக்தியாலே!

உங்களோடு சில நிமிடங்கள்...

உங்களோடு சில நிமிடங்கள்...
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. அன்னையின் பெருமைகளைப் பற்றிப் பேசலாம் என்றுரைத்த வேளையில் அபிராமி அந்தாதியைப் பற்றி எழுது என்றுரைத்த அண்ணல் தமிழன் வேணு அவர்கள் என் இதயத்தில் நீங்காத இடம் பெற்று விட்டார்.. ஏனெனில், நவராத்திரியின் முதல் நாளில் இருந்து இன்றைய நாள் ஐம்பதாவது நாள்.. இடையிடையே ஓரிரு நாள் விடுத்து (விடுபட்ட நாளின் பாடல்கள் அடுத்த நாளில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது) மற்ற அனைத்து நாட்களிலும் என்னைத் தொடர்ந்து எழுதும்படி வைத்த அபிராமியின் கருணைக்கு என்னை ஆளாக்கியவர் அல்லவா? நான் ஒரு போதும் இப்படித் தொடர்ச்சியாக எழுதியதே இல்லை. நான் தொடங்கிய பல காரியங்கள் பலமின்றி இடையில் நின்று போயிருக்கின்றன.. ஆனால் அபிராமி அந்தாதி பற்றிய உரைகளோ எப்படியும் எழுதியே தீர வேண்டும் என்ற தீராத தாகத்தை என்னுள் ஏற்படுத்தியது... நான் இவற்றை ஓதும் வேளையில் எனக்குத் தென்பட்ட அர்த்தங்களை விட இப்போது எழுதுகையில் சற்றே மாறுபட்டும் ஆழமாகவும் அர்த்தங்கள் தோன்றியமைக்குக் காரணம் அன்னையேயன்றி வேறில்லை...
இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில்தான் எங்கள் அன்பு மகளும் பிறந்தாள். அம்மகிழ்வையும் அன்னையின் அன்புப் பரிசு என்றேதான் கருதுகின்றேன்... இவ்வுரைகளை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், அன்னை குறித்து எழுதிய இரு கவிதைகளும், எங்கள் திருமகளுக்கென்று நான் எழுதிய இரு தாலாட்டுக்களையும் தவிர (அதிலும் ஒன்று சுட்டது) என்னுடைய தனிப்பட்ட படைப்புக்கள் எதுவுமே வெளிவரவில்லை... எனவே எந்த ஒரு கவனச் சிதறலுக்கும் ஆளாகாமல் காத்து அபிராமி அந்தாதி உரைகளை எழுதச் செய்த அன்னை அபிராமிக்குக் கடன் பட்டிருக்கின்றேன்.
டிசம்பர் ஐந்தாம் நாள் திருக்கடவூருக்குச் செல்ல உள்ளோம் அல்லவா? சென்று வந்த பின்னர் அவள் காட்சியைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.. அதை நான் எழுதுவதை விட முனைவர். காளைராசன் அவர்கள் தனது சீர்மிகு எழுத்துக்களால் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார். (சரிதானே ஐயா?)
இன்னுமொரு செய்தி... மிகுந்த மகிழ்ச்சியோடு அபிராமி அந்தாதியை முடித்திருக்கின்றோம்..  எங்கள் திருமகள் பிறந்தும் சரியாக நாற்பது நாட்கள் ஆகிவிட்டன... எங்கள் திருமண நாளும் வருகின்றது.. கடந்த ஆண்டு மாவீரர் தினத்தன்றுதான் எங்கள் திருமணம் நடந்தேறியது.. இந்த இரண்டாமாண்டு துவங்கும் வேளையில் அன்பு மகளும் அருகிருப்பது அகம் மகிழச் செய்கின்றது....
நவம்பர் 27ல் சந்திக்கலாம் என்று பெங்களூர் நண்பர்கள் பேசியிருந்தோம் (ஸ்வர்ணா அக்காமட்டுமே?) எங்கள் மணநாளான அன்று என் தமைக்கையார் இல்லம் செல்லலாம் என்று முடிவு செய்துள்ளோம்.. எனவே இன்னுமொரு நாளில் நாம் சந்திக்கலாம்...
மேலும் எனது பணி முடிவடைந்தது... இனி இதை அழகுறத் தொகுத்து அழகிய மின் நூலாக நண்பர் திரு. பிரசாத் வேணுகோபால் அவர்கள் தருவார்கள்.. அன்னாருக்கும் எனது நன்றிகள்...
மீண்டும் நல்லதொரு படைப்போடு சந்திப்போம்... எழுதும் ஆற்றலை அன்னையே தர அவள் திருப்பாதங்களைச் சரணடைகின்றேன்...
1) அறியாத பிள்ளையடி உன்தன் மேலென்றுமன்பு
அகலாத பிள்ளையடி கயமை சூழ் கவினுலகில்
அல்லல் தீரவேண்டியுன் அருமடிகள் சேர்ந்தேன்
அல்லியங் கமலாசனத் தபிராமித் தெய்வமே

2) தெய்வமெலாந் தொழுந் தெய்வத்தைத்
தேடியின்று கண்டு கொண்டேன் - அது
ஆதிக்கடவூர்ப் பதியில் ஆனந்த நடனஞ்செய்யும்
பாதிப் பரமனுடலேற்ற அபிராமி நீயல்லவோ?

3) அல்லவை செய்தேன் அறத்துக்கண் சென்றே
பல்லுடை பட்டேன் பஞ்சமா பூதங்கள்
மல்லுக் கிழுத்தவேளை அவைதம்மை
வெல்லும் வழியென்று இன்றுனைக் கண்டேன்.

4) கண்ணுறக்கம் மறந்தேன் கற்ற கலைப்
பண்களெல்லாம் மறந்தேன் உன்தன்னையே
மண்ணுலகில் தஞ்சமென்றடைந்தேன் - அன்று
விண்ணோர்க்கு அமுதீந்த ஆனந்த வல்லியே....

5) ஆனந்தந் தந்திடும் அருட்கடலுமையாள் கடம்பக்
கானகத் தலைவி எங்கள் ஈசனார் அன்று
தானரசாண்டிடத் தாலியேற்ற அம்பிகையே மெய்யருட்
பானகம் தந்தெனை ஈர்த்தாள் தன் சேவடிக்கே...

6) சேவடியே பரமென்று பற்றி நின்றேன் இன்று
காவடியேற்கும் கந்தனின் கரங்களுக்கன்று
சாவடிக்கும் வேல் தந்த உமையே உனைப்
பாவடிக்கும் புலவன் இப்பூவுலகிலே.....
7) பூவுலகம் பெற்ற அன்னை தன் புன்னகையால்
பூவளித்தாள் தன் மாந்தருக்கு - கமலப்
பூவுதித்த பிரமனும், நாரணனும், ஈசனுமீந்த
பூக்களையேத் தன் வளைக்கரத்தாற் பற்றி

8) வளைக்கரம் பற்றிய சங்கரனார் தன் மகன்
வளைவாழும் எலி வாகனன், வள்ளி
வளைக்கரம் பற்றும் கந்தன் தன்னோடு
வளையே நின் திருவடி சேர்ந்ததுமே..

9) சேர்ந்தேன் நின் சமயத்தே அன்பர்தமைச்
சேர்த்தேன் நின் திருவடிக்கே அளவிலாச் செல்வம்
சேர்க்கும் அலைமகளும், கலைமகளும் வந்து
சேர்ந்தே தொழும் முத்தார வல்லியே

10) முத்தாரவல்லி யுந்தன் குலசைமாநகரம் வந்து
பித்தம் தெளிந்தேன் பிறை சூடும்
பித்தரும் நீயும் அமருங்கோலங் கண்டு
சுத்தமானேன் கலையெலாந் தொழுங் கமலவேணியே..

11) கமலத்துதித்த அயனும் தந்தையும் அவர்தம்
கர்வமழித்திட்ட அரனும் வந்திசை பாடிக்
கண்குளிரக் காணும் நின் கோலத்தைக்
கண்டேன் இவ்விடத்து நீ ஆடியவண்ணம்..

12) ஆடிய நடங்கண்டிடும் அவனியோரெலம்
ஆரணங்கே யுன்தாள் பணிவர் - அன்று
அமரர் இடர் தீரக் கடுவிடமுண்ட வெள்ளி
அம்பலத்தாடுவனின் அயர் தீர்த்த கயலே..

13) கயல்விழி கொண்டு கவினுலகீன்ற கலையே
கயமை கொள் நின் மகற்கு கவித்திறன் ஈந்த உமையே
கயத்தின் மீதேறிக் கானகம் ஆண்டிடுந் தவளே.
கயலரசாளுங் காசி மாநகரத் திருவே...

14) திருவுந் தொழுந் திருவாகி நின்ற பரமேயுன்
திருவடி தொழுவோர்த் தீங்கினைத் தீர்த்திடு மறமே
அருமறைகள் தொழுதேத்தும் அங்கைத் தேனே நின்
அருள் தந்தெனை யாண்ட அம்மையுன் பதமே

15) பதந்தரு மறமும் பண்டை எனை ஈர்த்த நின்
இதந்தரு மனமும் இன்னலெலாந் தீர்க்கும்
கதந்திருக் கரமும் கரமேற்குங் கருப்பு வில்லும்
உதந்திருக் கமலத் தமரம்மே நின் பேரளியே...


16) அளியார்க்குங் கொன்றைச் சடையன் திருவிட
மளித்தான் நின் கொங்கையிற் வீழ்ந்து - நெஞ்சத்
தொளியே கற்றோர் தமக்கு அவர் பாவிஞ்சுங்
களியே கற்பகமே கடம்ப வனத்தான் காதலியே

17) காதலிற் பிறிதென்ன வேண்டவோ? கங்கைத்தலை
ஆதலின் நின்பதம் பற்றும் பரமன் அடியார்க்குச்
சாதலிற் பெருவின்னல் வருங்காலை அவைதம்மை
மோதலிற் றூசாக்கும் என்னம்மை நெஞ்சகத்தே...

18) நெஞ்சகத் தமர்ந்தாண்டிடும் அன்னையே நின்
நெஞ்சங்கவர் கள்வனும் நீயுமே வந்தென்முன்
அஞ்சேலென்றே அருட்கரம் நீட்டி அணைத்தெடுத்துன்
நெஞ்சத்திற் சாய்த்துப் பரந்தரு வரந்தருதியோ?

19) வரமும் வேண்டுவரோ புவனத்தெங்கனுமே வேம்பு
மரமாகி நின்ற அன்னைதன் அருளை வேண்டிடும்
கரமும் கமண்டலமும் காவியுடையும் சடைநீளும்
சிரமும் கருணை மனமுங் கொண்ட மாத்தவரே

20) மாத்தவளாம் தன் கயல்விழியால் அகிலமெல்லாம்
காத்தவளாம் அயனொடு அரனரி என மூர்த்திகளைப்
பூத்தவளாம் புவனியிற் தோன்றிடும் தெய்வங்களில்
மூத்தவளாம் என்றும் இளைய கன்னியெனும் ஆரணங்கே...

21) ஆரணங்கிவள் அடியேன் எந்தன் அன்னையெனுங்
காரணத்தால் தானே வந்து தாள்தந்தாள் கானக
வாரணத்தின் மீதேறியே- கலியாடும் வெம்மையுலகில்
பூரணங்கண்டிட இவள்தாள் பணிமீர் உலகத்தீரே...

22) உலகம் யாவையும் பெற்றாள் உயர் பச்சைக்கிளி
அலகால் உரசும் தோளாள் பணிமறந்து மற்றைக்
கலகம் செய்வார் தமக்கும் இரங்கி அருள்செய்
வல் அகம் வாழும் மெல்லிடைப் பூங்கொடியே...

23) கொடியிடையாளை எங்கோமளவல்லியை எஞ்சென்னி
அடியெனக் கொண்டாளை எங்கும் நிறைந்தவளை ஏதமற்றுப்
படியளக்கும் பார்வதிதேவியை பரமனிடப் பாகம் கொண்டாளை
அடித்தொழுவார் தமக்கு  அகிலமெங்கும் புகழாரமே..

24) புகழாரம் சூடிப்பாடும் புலவனல்லேன் நிந்தோளிணைக்குப்
புகுமாரம் சூடித்தரும் புண்ணியனல்லேன் நின் திருக்கோயில்
அகலேற்றும் அன்பனுமல்லேன் அளியேன் அறிவீனம்
அகலக் கடவூரிற் காட்சி தந்தமையென் புண்ணியமே...

25) புண்ணியமென் செய்தேன் நின்புன்னகைக் கண்டிடவே
மண்ணுயிரில் எளியேன் என்மனக்கோயில் வந்தவளே.
பண்சமைக்கும் பாவலனாய் நின்பதியிற் ஏற்றவளே
கண்ணிணைகள் களித்திடவே களிக்காட்சி தந்தவளே...

அபிராமி அந்தாதி 99, 100 & நூற்பயன்

அன்பர்களுக்கு வணக்கம்...
அன்னையின் திருவருளால் அனைவரும் நலமே என நம்புகின்றேன். இன்றைக்கு ஐம்பதாவது நாள்... இறுதி இரு பாடல்களையும் நூற்பயனையும் பார்த்து விடலாம். பின்னர் தங்களுடன் உரையாடுகின்றேன்.

பாடல் தொண்ணூற்றொன்பது
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
விளக்கம் : கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான் மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய்..
அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில் காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில்  குயிலாகவும், கயிலையில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.
சிறு வயதில் கற்ற ஓர் பாட்ல் நினைவுக்கு வருகின்றது. "அழகிய மயிலே அபிராமி... அஞ்சுக மொழியே அபிராமி... ஆதிக்கடவூர் அபிராமி... ஆனந்த வடிவே அபிராமி" என்று தொடரும் அப்பாடல்... மதுரை மாநகரில் இன்னிசை பாடும் குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும் காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய வடிவில் தென்படுகின்றாள் அல்லவா?
"அன்று" "கயிலாயருக்கு" "இமவான் அளித்த கனங்குழையே" முன்பொருநாள் கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே.... "கடம்பாடவியிடை " "குயிலாய் இருக்கும்" கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்... "இமயாசலத்திடை" "கோலவியன் மயிலாய் இருக்கும்" இமயத்தில் அழகிய மயிலாய் இருக்கின்றாய். "விசும்பில்" "வந்து உதித்த வெயிலாய் இருக்கும்" விரிந்த ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் "கமலத்தின் மீது அன்னமாம்" அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.

பாடல் நூறு
குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே
விளக்கம் : காதில் அணிந்துள்ள குண்டலங்களைத்த் தொடும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையை அணிந்து அம்மலர்களால் மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே. கழையை ஒத்த நின் அழகிய நெடுந்தோள்களும், உன் கரும்பு வில்லும், இன்பப் போருக்குத் தேவையான திறனுடைய தேன் நிறைந்த ஐந்து மலர்க் கணைகளும், வெண்ணிறப் புன்னகையும், மானையொத்த விழிகளும் என் நெஞ்சத்தில் எப்போதும் இருக்கின்றன...
உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கிய அந்தாதியை உதிக்கின்றவே என அழகுற நிறைவு செய்தார் அபிராமிப் பட்டர். அன்னையின் திருவுரு எப்போதும் என் நெஞ்சத்தில் உதித்துக் கொண்டே இருக்கும். அவளை எப்போதும் நான் தொழுது கொண்டே இருப்பேன். இதை விடுத்து எனக்கு வேறு எதுவும் இல்லை என்பது பட்டரின் கொள்கை...
"குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி" காதில் அணிந்துள்ள குண்டலங்களைத் தொடும்படியான கொன்றை மாலையை அணிந்து அக்கொன்றை மலர்களால் மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே... தடித்ததொரு கொன்றை மாலையை அன்னை அணிந்திருப்பதாக அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். அதன் பருமனால் அது அவள் காதில் அணிந்த குண்டலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது. அவளது மார்பகங்கள் கொன்றை மாலையைச் சுமப்பதால், கொன்றை மலரின் மணம் அவளது திருமுலைகளில் வீசுகின்றது... இவ்வரிகளை இன்னொரு நோக்கிலும் பொருள் கொள்ளலாம். கொன்றை மலரினை தன் சடையில் அணிந்த சிவபெருமான் அழகிய குண்டலங்களை அணிந்த அன்னை அபிராமியைத் தழுவும்போது அக்கொன்றை மலர்கள் இருவர் நடுவிலும் வீழும்போது அது அன்னையின் மார்பில் பட்டு அதனால் அது கொன்றை மலரின் மணம் வீசுகின்றது என்றும் பொருள் பகர்வோர் உண்டு.  "கழையைப் பொருத திருநெடுந்தோளும் " கழையை ஒத்த உனது நெடுந்தோள்களும்... கழை என்பது மூங்கிலைக் குறிக்கும். இது கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ள சொல். "கருப்பு வில்லும்" உனது திருக்கரத்தில் நீ ஏந்திய கரும்பு வில்லும்,  "விழையப் பொரு திறல் வேரி அம்பாணமும் " இன்பப் போருக்குத் தேவையான திறன் கொண்ட தேன் நிறைந்த ஐந்து மலர்க்கணைகளும், "வெண் நகையும்" வெண்ணிற உன் புன்னகையும்... முத்து போன்ற உன் பற்கள் உன் புன்னகையால் வெளி தோன்றுவதால் உன் புன்னகை வெண்ணிறமெனத் தோன்றுகின்றது... "உழையைப் பொரு கண்ணும் " மருளும் மானையொத்த உன் திருவிழிகளும், "நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே" எனது நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொரு காலையும் கதிரவன் எங்ஙனம் புதிதாய்த் தோன்றுகின்றானோ, அது போல் உன் திருவுருவும் என் நெஞ்சத்து எப்போதும் புதிதாய் உள்ளது... அன்னையே நீ என் நெஞ்சத்தை விட்டு நீங்குவதில்லை... உன்னை நான் என்றும் மறப்பதில்லை...
அம்மா. அபிராமியே... அபிராமிப் பட்டரின் நெஞ்சத்தில் நிலையாகக் குடிகொண்ட நீ எங்கள் நெஞ்சத்திலும் வந்து எங்களை அருளாட்சி செய்தருள்வாயாக...
நூற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே

விளக்கம் : அன்னையை, எங்கள் அபிராமி தேவியை, இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்தவளை, மாதுளம் பூ நிறங்கொண்டவளை, இப்பூமியைக் காப்பவளை, ஐவகை மலரம்புகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் தன் திருக்கரங்களில் ஏந்தியவளை, முக்கண்ணியை வணங்குவோர்க்கு எந்தத் தீங்கும் இல்லை....

அபிராமி அந்தாதி நூலைத் தினமும் ஓதுவதால் கிட்டும் பலனை இப்பாடல் மொழிகின்றது... அன்னையைத் தொழுவோர்க்கு ஒரு தீங்குமில்லை... விளைவதெல்லாம் நன்மையே... ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக பலன் சொல்வார்கள்... அனைத்தும் அறியேன்.. அறிந்தவற்றை அப்பாடல்களிலேயே குறிப்பிட்டுள்ளேன். அறிந்தவர்கள் நமக்குரைத்தால் மகிழ்வேன்.

"எங்கள்" "ஆத்தாளை" எங்கள் அன்னையை "அபிராம வல்லியை" அபிராமியை "அண்டமெல்லாம் பூத்தாளை" இந்த அண்ட சராசரங்களைப் பெற்றெடுத்தவளை.... "மாதுளம் பூ நிறத்தாளை" மாதுளம் பூவின் நிறங்கொண்டவளை... "புவி அடங்கக் காத்தாளை" இப்பூமியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து காப்பவளை.. "ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை " தனது திருக்கரங்களில் ஐந்துவகை மலர்க்கணைகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் ஏந்தியவளை.. "முக்கண்ணியை" மூன்று நயனங்கள் கொண்டவளை... "தொழுவார்க்கு" தொழுதிடும் அடியவர்களுக்கு.. "ஒரு தீங்கில்லையே" எந்த ஒரு தீங்கும் இல்லவே இல்லை... அவர்கட்கு விளைவதெல்லாம் நன்மையே என்னும் உறுதியோடு தனது அபிராமி அந்தாதியை நிறைவு செய்கின்றார் அபிராமிப் பட்டர்...
அண்டமெல்லாம் படைத்து அதனைக் காத்து, தீயனவற்றை அழிக்கும் மூன்று நயனங்கள் படைத்த எல்லாம் வல்ல அன்னை அபிராமியே நம் அனைவருக்கும் வரும் தீங்கினை விலக்கிக் காத்திடட்டும். எங்களைக் கடைக் கண் கொண்டு பார் தாயே..... உன் திருவடி இணைகளே சரணம்... சரணம்......
இவ்வுரைகளை எழுதப் பணித்த ஐயா தமிழன் வேணு அவர்களுக்கும், ஐம்பது நாட்களும் பொறுமை காத்து இதை ஓதிய அன்பு உள்ளங்களுக்கும், ஊக்கமளித்த நல்லுங்களுக்கும், இதனை மின் நூலாகத் தொகுத்துத் தருவதற்காக இசைந்திருக்கும் திரு. பிரசாத் வேணுகோபால் அவர்களுக்கும் இதனைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் கூகிள் தமிழ்க்குழும நிர்வாகிகளுக்கும் (தமிழ்த் தென்றல், தமிழ் உலகம், தமிழ்ப் பிரவாகம், தமிழ் ஒளி மற்றும் மின் தமிழ்) அடியேனின் சிரந்தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்... அன்னையின் ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்.. நன்றி.. வணக்கம்..

அபிராமி அந்தாதி 97&98

பாடல் தொண்ணூற்று ஏழு
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே
விளக்கம் : சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், அமரர்களின் தலைவன் இந்திரன், திருமாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன், முப்புரங்களை அழித்த சிவபெருமான், முரனை அழித்த திருமால், பொதியமலை வாழ் முனிவன் அகத்தியன், போரிடும் பெரும்படையை ஒத்த பலம் மிக்க கந்தன், அவன் அண்ணன் முதற்கடவுள் கணபதி, காமன் முதலிய சாதனை படைத்த புண்ணியம் மிக்க எண்ணற்றோர் எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்.
அத்தனை தெய்வங்களையும் இப்பாடலில் குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் என் அன்னையைப் போற்றுவார்கள் எனக் குறிப்பிடுகின்றார் அபிராமிப் பட்டர்... ஒரு பாடல் உண்டு "கந்தன் காலடியை வணங்கினால், கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே.." என்று... இவ்விடத்து அனைத்துக் கடவுள்களையும் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் அன்னையை வணங்குகின்றனர் எனக் குறிப்பிடுதலால், இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிடில் என்ன புண்ணியம் வருமோ அது அன்னையை மட்டும் வணங்கினாலே வரும் என்பது இப்பாடலின் மறைபொருள்..
"ஆதித்தன்" சூரிய பகவான், "அம்புலி" சந்திர பகவான் "அங்கி" அக்கினி, "குபேரன்" குபேரன், "அமரர் தம் கோன்" அமரர்களின் அரசன் இந்திரன் "போதிற் பிரமன்" மாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன் "புராரி" முப்புரங்களை அழித்த சிவபெருமான் "முராரி" முரன் எனும் அசுரனை வதைத்தத் திருமால், "பொதிய முனி" பொதியமலை வாழ் தமிழ் முனி அகத்தியன் "காதிப் பொரு படை கந்தன்" போரிடும் பெரும்படையை ஒத்த வலிமை மிக்க முருகன் "கணபதி" கந்தனின் அண்ணன் முழு முதற்கடவுள் கணபதி "காமன்" காமக் கடவுள் மன்மதன் "முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் " இவர்கள் முதலான சாதனைகள் பல படைத்த புண்ணியம் செய்த எண்ணற்றோர் "போற்றுவர் தையலையே" எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்...
பாடல் தொண்ணூற்று எட்டு
தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே

விளக்கம் : உண்மை நிறைந்த நெஞ்சத்தைத் தவிர்த்து ஒரு போதும் வஞ்சகரின் பொய் நெஞ்சில் புகுதற்கறியாத அழகிய பூங்குயிலே... எங்கள் அபிராமி அன்னையே... உனது திருவடித் தாமரைகளைத் தனது தலைமேல் அணிகலனாகச் சூட்டிய சங்கரனாரின் கையிலிருந்த அக்கினிச் சட்டியும், தலைமேலிருந்த கங்கையும் எங்கே மறைந்தன?
அன்னையை மணம் முடிக்க சங்கரனார் வருகின்றார்.. எந்நேரமும் சுடலையில் தியானத்தில் மூழ்கியிருக்கையில் அவர் பெருஞ்சடையில் கங்கையானவள் ஒட்டிக் கொண்டாள். அவரது கையிலோ அவரது கோபத்தையொத்த அக்கினிச் சட்டி... அன்னையின் திருப்பாதங்களைத் தனது சிரசில் சூடி அவளையே மணம் முடிக்க வேண்டி வருகின்றார்.. காண்போர் என்ன பகர்வர்? இவனா மணம் முடிக்கச் செல்லும் மணமகன்.? இதென்ன தவக்கோலம்? சுடலைக் கோலம்? என எள்ளி நகையாட மாட்டார்களா? எனவே தனது தவக்கோலத்தை மறைத்து இராச அலங்காரத்தில் வருகின்றார்... அவர்தம் கையில் நெருப்புச் சட்டியிருந்தால் அழகிய பூங்குயில் போன்ற அன்னைக்குத் தகுமா? எனவே அதை எங்கேயோ மறைத்து விட்டார்... தனது சடைமுடிமேல் கங்கையிருந்தால் அன்னை பொறுப்பாளா? இவள் எனக்குச் சக்களத்தியா? என்று சங்கரனாரிடம் சண்டை பிடிப்பாளில்லையா? அதற்காக கங்காதேவியையும் எங்கேயோ மறைத்து விட்டார்.. இப்போது அழகிய அரசகோலத்தில் அன்னையை மணம் முடிக்க வந்து கொண்டிருக்கின்றார்... பட்டருக்கு இக்காட்சித் தென்படுகின்றது.. என்னடா இது இவர் கையில் ஓர் அக்கினிச் சட்டியைக் கண்டோமே? இவர் சடையில் கங்கை குடிகொண்டிருந்தாளே...? எங்கே போயின அவை? என் அன்னையை நீ உன் தலையில் சூடிக்கொண்டதால் அவை எங்கே மறைந்து போயினவோ?? என சங்கரனாரிடம் கேட்கின்றார்... நீ இப்படிச் செய்கின்றாயே... என் அன்னையோ உண்மை பேசுவோர் நெஞ்சத்துள் மட்டுமே குடிபுகுவாளேயன்றி ஒருபோதும் பொய்யுரைக்கும் வஞ்சசர் நெஞ்சத்தில் குடிபுகுவதே இல்லையே... உன்னை எப்படியடா தன் கணவனாக ஏற்றாள்? என ஈசனைக் கிண்டலடிக்கின்றார்...அகிலத்தைப் படைத்த ஆதிபராசக்தியே ஆனாலும் அவளுக்கும் பெண்ணுக்குரிய குணங்கள் இருப்பதாலேயே நீ இப்படிச் செய்கின்றாயோ? எனவும் வினவுகின்றார். அன்னையிடமும் நீ உண்மை பேசுவோரை விடுத்து, வஞ்சகர்களின் பொய் பேசும் நெஞ்சத்தில் குடியிருப்பதில்லையே... உன்னை ஏய்க்கும் பொருட்டு சங்கரனார் வேடமிட்டு வந்திருக்கின்றானே... இவனை நீ எப்படி ஏற்றாய்? அன்னையிடமும் கேள்விக்கணையைத் தொடுக்கின்றார்.
"மெய் வந்த நெஞ்சின் அல்லால் " உண்மை பேசுவோர் நெஞ்சத்தைத் தவிர்த்து "ஒருகாலும்" ஒருபோதும் "விரகர் தங்கள்" வஞ்சகர்களின் "பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே" பொய் பேசும் நெஞ்சத்தில் புகுவதற்கறியாத அழகிய பூங்கியிலே... எங்கள் அபிராமி அன்னையே... "தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு" உன் திருவடித் தாமரைகளைத் தனது சிரசின் மேல் அணிகலனாக சூடிய சங்கரனாரின் "கை வந்த தீயும் " கையிலிருந்த அக்கினிச் சட்டியும் "தலை வந்த ஆறும்" சடைமேலிருந்த கங்கை நதியும் "கரந்ததெங்கே?" எங்கே மறைந்து போயின? அன்னை உன்னைக் கோபித்துக் கொள்வாளென்று எங்கே மறைத்து விட்டு வநதீர் சங்கரனாரே..? உம் கோலம் எல்லோருக்கும் தெரியுமய்யா... எங்கள் தாயை நீர் எப்போதும் ஏமாற்ற இயலாதய்யா....
தொடரும் இறுதி இரு பாடல்களின் விளக்கமும், அபிராமி அந்தாதி நூற்பயனின் விளக்கமும் நாளைய மடலில்... மீண்டும் சந்திப்போம்... நன்றி...

அபிராமி அந்தாதி 95&96

பாடல் தொண்ணூற்று ஐந்து
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே

விளக்கம் : அழியாத நல்ல குணங்களின் குன்றாக விளங்குபவளே... அருள் நிறைந்த கடலாக இருப்பவளே... மலையரசன் இமவான் பெற்ற கோமளமே... எங்கள் அபிராமி அன்னையே.... எனக்கென்று உள்ளதெல்லாம் நான் அன்றே உனக்கென்று அர்ப்பணித்து விட்டேன்.. இனி எனக்கு நல்லது நடந்தாலும் தீயது நடந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.... எனக்கு நீயே கதி...
அனைத்தையும் அன்னைக்கே அர்ப்பணித்து விட்ட பின்னர் நன்மையால் வரும் மகிழ்வும் இல்லை... தீமையால் வரும் துன்பமும் இல்லை.. அன்னையையே பரம் என்று கொண்ட மனம் விருப்பு, வெறுப்பு அற்ற நடுநிலை கொண்டதாகின்றது.. குணங்களில் குன்றாகவும், அருட்பெருங்கடலாகவும் இருக்கும் அன்னை அத்தகைய நல்மனத்தினை நமக்குத் தந்தருள்கின்றாள். அன்னையே நம்மை வழி நடத்தும்போது நம் வாழ்வில் தீமைகள் ஏது..? எல்லாம் நன்மையே அல்லவா?
"அழியாத குணக் குன்றே " அழியாத நற்குணங்களின் குன்றே.... "அருட்கடலே" அருளெனும் கடலே... "இமவான் பெற்ற கோமளமே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த கோமளமே.. எங்கள் அபிராமி அன்னையே... "எனக்கு உள்ளதெல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் " எனக்கென்று உரிமையுள்ள அனைத்தையும் அன்றே நான் அவையெல்லாம் உனதே என்று அர்ப்பணித்து விட்டேன்.. என்று? என்றைக்கு நீ என்னை உன் மகனென்று அறிந்தாயோ அன்று... "நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை " இனிமேல் எனக்கு நன்மை நடந்தாலும், தீமை விளைந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.. அவற்றின் மகிழ்ச்சியோ துக்கமோ என்னைப் பாதிக்காது... "உனக்கே பரம்" ஏனெனில் எனக்கு நீயே கதி.....
ஆழ்ந்த மனத்துயரில் இருக்கும்போதெல்லாம் அறியாமல் என் மனது பாடும் பாடல் இது... இப்பாடலைப் பாடும் போது மனம் இலகுவாகி நான் துயரங்களிலிருந்து எளிதில் வெளிவருவேன்.... மிக அருமையான பாடல்.
பாடல் தொண்ணூற்று ஆறு
கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே
விளக்கம் : மென்மையானவளை, அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறப் பேரழகியை, குற்றமில்லாதவளை, எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்டவளை, சகல கலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை, எங்கள் அபிராமியை தம்மால் இயன்ற அளவுக்குத் தொழுபவர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு பெறுவார்கள்...
ஆலயம் சென்று அன்னையை வணங்கும் போது கண்ணீர் மல்கி, கரங்கள் கூப்பி, சிரங்குனிந்து தொழுதிடல் வேண்டும்.. ஆனால் இன்றைய கலாச்சாரமோ ஆலயத்திற்கு வெளியில் நின்று (சிலர் நிற்பது கூட இல்லை) ஒரு கையை மட்டும் தூக்கி வணங்கி விட்டு செல்கின்றனர்... இது முறையல்ல.. தம்மால் இயன்ற அளவுக்குத் தொழ வேண்டும்... அதனால்தான் பெரியோர்கள் தரையில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்குகின்றனர்... அப்படி அவளைத் தொழுவோர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு பெறுவார்கள்... இது அபிராமிப் பட்டர் வாக்கு... இன்னோர் பொருளும் கொள்ளலாம்.  அதை இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் உரைத்த கதை ஒன்றின் மூலம் விளக்குகின்றேன்.... பக்தியிற் சிறந்தவர் யாரென ஒருமுறை நாரதர் திருமாலிடம் வினவினார்.. ஓர் ஏழைக் குடியானவனைக் காண்பித்து "இவனே என் பரம பக்தன்" என உரைத்தார் திருமால். "அல்லும் பகலும் இடையறாது "நாராயணா" என உன் திருநாமத்தைச் செப்பும் என்னை விட இந்த ஏழைக் குடியானவன் எவ்வகையில் உயர்த்தியானவன்?" என நாரதர் வினவ...திருமால் புன்னகை பூத்தவாறே "நீ சென்று அவனது அன்றாட நடவடிக்கைகளை ஒரு நாள் மட்டும் கவனித்து வா" என்று அனுப்பி வைத்தார். நாரதரும் சென்று கவனித்தார். அக்குடியானவன் காலையில் எழுந்தான் "ஸ்ரீ ஹரி" என்றான்.. தனது காலைக் கடன்களை முடித்தான்.. கலப்பையை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றான். வழக்கம்போல் வேலைகளைச் செய்தான்.. மாலை இல்லம் திரும்பினான்.. குளித்தான். தன் மனைவி மக்களோடு உரையாடினான். ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்தான். இரவு படுக்கையில் படுக்கச் சென்றான். "ஸ்ரீ ஹரி" என்றான். உறங்கிவிட்டான்.. இது நாரதர் கவனித்த தினத்தில் நிகழ்ந்தது. திருமாலிடம் திரும்பிய நாரதர் இதை உரைத்தார். திருமாலும் சிரித்தவாறே "இன்றல்ல நாரதா. என்றுமே அவனது வழக்கமான செயல்கள் இவைதான்" என்றுரைத்தார்.. "பின்னர் எப்படி அவனைத் தங்களது பரமபக்தன் என்று உரைத்தீர்கள்?" என நாரதர் வினவ...பகவான் நாரதன் கையில் ஒரு எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தைக் கொடுத்து "நாரதா. இந்த பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இதில் உள்ள எண்ணெய் ஒரு சொட்டளவும் சிந்தாமல் இந்த வைகுண்டத்தை ஒரு முறை சுற்றி வா. பிறகு பதிலுரைக்கிறேன்" என்றார். நாரதரும் சுற்றி வந்தார். "பாருங்கள் பகவானே.. ஒரு சொட்டளவும் சிந்தவில்லை.. தங்கள்  ஆணையை அப்படியே நிறைவேற்றி விட்டேன். இப்போது சொல்லுங்கள் யார் பக்தியில் சிறந்தவரென்று?" என பகவானிடம் வினவினார் ..பகவான் "நாரதா.. இந்த வைகுண்டத்தைச் சுற்றி வருகையில் எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை முறை என் நாமத்தை உரைத்தாய்?" என பதிலுக்கு ஒரு வினாவை எழுப்பினார் "அதெப்படி... என் கவனமெல்லாம் இந்த எண்ணெய் துளியளவும் சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது.. ஒரு முறை கூட தங்களை நினைக்கவில்லை.. அதெப்படி நினைக்க இயலும்? என் கவனம் உங்கள் மேல் வந்து விட்டால் நான் பரவசமாகி விடுவேன். எண்ணெய் சிந்தியிருக்குமே?" என்று நாரதர் பதிலுரைக்க... "இந்த சிறு பாத்திரத்தைச் சிந்தாமல் சுமக்கும் வேளையில் ஒரு முறை கூட நீ என்னை நினைக்கவில்லை...ஒரு முறை கூட என் திருநாமத்தைச் செப்பவில்லை.  ஆனால் அவனைப் பார்.. ஏழை... அவனுக்குச் சுமைகள் பல... குழந்தைகள் பல... ஆயினும் காலை எழுந்தவுடன் ஒரு முறை... இரவில் உறங்குமுன் ஒருமுறை ... என நாளொன்றுக்கு இருமுறை என் திருநாமத்தையுரைத்து என்னை நினைக்கின்றானல்லவா? தனது இல்வாழ்க்கையெனும் பாத்திரத்தையும் அவன் ஏந்தி வந்த பொழுதும் அவனது கவனங்களெல்லாம் மனைவி, குழந்தைகள் என்றிருந்த போதும் தினமும் மறவாது என் நாமத்தை உரைக்கின்றானே...அவனல்லவா என் பரமபக்தன்" என சிரித்தவாறே உரைத்த திருமாலைக் கண்டு நாணிக் கொண்டே வெளியேறினார் நாரதர்..
நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையைத் தொழவேண்டும். உலகின் பந்தங்களில் கட்டுண்டோம்.. சுமைகள் சுமக்கின்றோம்... அந்நிலையிலும், நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையின் நினைவில் நிற்க வேண்டும்.. அவளைத் தொழுதிடல் வேண்டும்... இவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்குத் தொழும் அடியவர்கள் ஏழுலகிற்கும் அதிபர்கள் ஆவர்...
"கோமளவல்லியை " மென்மையானவளை..."அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமளவல்லியை " அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறத்தவளை... கற்பனையில் அன்னையின் திருவுருவைக் கண்டு மகிழுங்கள்... "ஏதம் இலாளை" குற்றங்குறைகள் இல்லாதவளை... "எழுதரிய சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை" எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்ட சகலகலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை... எங்கள் அபிராமி அன்னையை... "தம்மால் ஆமளவும் தொழுவார்" தங்களால் இயன்ற அளவுக்குத் தொழுகின்ற அடியவர்கள்.. "எழு பாருக்கும் ஆதிபரே" ஏழுலகையும் ஆளும் அதிபர்கள் ஆவார்கள்.. ஏழுலகும் அவர்கட்குச் சொந்தமாகும்...
அன்னையின் வழிபடுதலால் ஏற்படும் பயனைச் சொல்லும் பாடல் இது... இப்பாடலைத் தொடர்ந்து பாடி வந்தால் சென்றவிடத்தெல்லாம் வெற்றி பெறலாம் எனப் பெரியோர்கள் உரைப்பார்கள்...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம் நன்றி...

அபிராமி அந்தாதி 93&94

அடுத்த பாடலுக்கு முன்னர்....
அன்பர்களே... இன்றோடு சேர்த்து இன்னும் நான்கு நாட்களில் அபிராமி அந்தாதி உரைகளும் விளக்கங்களும் பூர்த்தியாகிவிடும்... ஏற்கெனவே சொன்னது போல் நண்பர் பிரசாத் வேணு கோபால் அவர்கள் இதனைத் தொகுத்து மின் நூலாக வெளியிட ஆர்வம் கொண்டுள்ளார். இந்த உரைகளுடன் அன்பர்களின் விளக்கங்களையும் இணைத்து வெளியிட வேண்டும் என்பது அடியேனுடைய ஆவல். எனவே அன்பர்கள் அபிராமி அந்தாதி பற்றிய தங்களது மேலான கருத்துக்களை இந்த இழையில் பதிவு செய்யலாம்.. அல்லது எமக்குத் தனிமடலில் அனுப்பலாம். அல்லது பிரசாத் வேணுகோபால் அவர்களுக்குத் தனிமடலில் அனுப்பலாம். (அவரது மின்னஞ்சல் முகவரி prasathtf@gmail.com)  குழும நிர்வாகிகள் குழுமத்தின் சார்பில் வாழ்த்துரைகள் வழங்கி இம்முயற்சிக்கு ஆதரவளிக்கும்படி அன்புடன் வேண்டுகின்றேன். மேலும் தனிமடலில் இதனைப் பெறும் அன்பர்களும், பெரியோர்களும் இம்முயற்சி வெற்றிபெற அன்னையை வேண்டிக் கொள்ளுங்கள்..தங்களின் கருத்துரைகளையும் எதிர்பார்க்கின்றோம்.. இனி இன்றைய பாடல்களைப் பார்க்கலாம்...
பாடல் தொண்ணூற்று மூன்று
நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே

விளக்கம் : இந்த அகிலத்தையெல்லாம் பெற்றெடுத்த அன்னை அபிராமியின் திருமுலைகள் மொட்டினைப் போன்றுள்ளதென்றும் அவளது திருக்கண்கள் மான்களைப் போன்றுள்ளதென்றும் புகழ்வது நகைப்புக்குரிய செயல்.. எல்லையில்லாத வடிவையுடைய அபிராமியை  மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகள் என்று விளிப்பதும் வம்பே. இவளது தகைமைகளை நாம் நாடிச் சென்று அறிய விரும்புவதும் மிகையான செயல்களே...
குருடர்கள் ஆனையைத் தடவிக் கண்ட கதைதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகின்றது... தான் அன்னையைத் துதித்துப் பாடிய பாடல்கள், அவளை வர்ணித்த வர்ணனைகள் இவையெல்லாம் நகைப்புக்குரியன என்றும், தகாதன என்றும் அவள் குணங்களை அறிய முற்படுவது மானுடரின் சக்திக்கு மிகையான செயல் என்றும் குறிப்பிடுவது நம்மை விழியுயர்த்த வைக்கின்றது.. ஒரு கோயிலைக் கட்டி அதனுள் ஒரு விக்கிரகத்தை வைத்து அதுதான் அன்னை அபிராமி என்று வழிபடுவதும் கூட ஒருவகையில் நகைப்புக்குரிய செயல்தான். ஏனெனில் அவள் முடிவற்ற வடிவுடையவள்.. அப்படியாயின் கோவிலகள் எதற்கு?? வழிபாட்டு முறைகள் எதற்கு??? இவை அன்னையைப் பற்றிய சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்தவும், அவளே நம்மைப் படைத்தவள் என்பதை நமக்கு நினைவூட்டவும்தான்... ஆலயங்கள் மனித மனங்களை நெறிப்படுத்தவும், மனித சிந்தனைகளை ஒரே நேர்க்கோட்டில் கொணரவுமே கட்டப்பட்டன... ஆனால் அன்னையானவளோ இவற்றையெல்லாம் தாண்டி நிற்பவள்.. இருக்கும் இடத்திலிருந்து "அபிராமி" என்றழைத்தால், ஓடிவந்து கருணை செய்யும் அன்னை எளியவள்... இவள் எளியவள் என்றெண்ணி இவளை நான் அறிந்து கொண்டேன்.. என்று பெருமை பேசும் மூடருக்கு அவள் பெரியவள்.. அகிலமே அன்னையாக இருக்கையில் அங்கென்றும், இங்கென்றும் அவளைத் தேடி, அவள் அழகை மற்றவற்றோடு ஒப்பிட்டு வர்ணித்தல் அபிராமிப் பட்டருக்கு நகைப்பை ஏற்படுத்துகின்றது... உலகைப் பெற்றெடுத்தவளை, இவள் மலையரசன் பெற்றெடுத்த மலைமகள் என விளிப்பது தகாத செயல்.. அது வம்புக்குரிய செயல் என்று பகர்கின்றார்.
பெரியோர் ஒருவரது உரையில் கேட்டது. இராமனைப் பற்றி அவர் உரைத்ததன் சாரத்தை இவ்விடத்துப் பதிவுசெய்கின்றேன்.. "எந்த இடத்தில் பெருமையும், எளிமையும் இணைந்திருக்கின்றதோ அதுதான் இறைவன்.. இறைவன் பெருமை நிறைந்தவனாகவும் இருக்கின்றான். அதே சமயம் நாம் அழைத்தால் வந்து அருள் செய்யும் எளியவனாகவும் இருக்கின்றான்.. உலகத்து வழக்கில் பெருமை இருக்குமிடத்தில் எளிமை இல்லை... எளிமை இருக்கும் இடத்தில் பெருமை இல்லை... இந்த தேசத்து உயர் பதவியில் இருப்பவர் பெருமை பெற்றவர்.. ஆனால் அவரை நம்மால் அவ்வளவு எளிதில் சந்திக்க இயலுமா? இயலாது. எனவே பெருமை இருக்கும் இடத்தில் எளிமை இல்லை... தெருவோரம் குப்பை நிறைந்திருக்கின்றது. எளிதில் நெருங்கி விட எளிமையாக இருக்கின்றது என்று அதனைப் பெருமை கொண்டாட இயலுமா? எனவே எளிமை இருக்குமிடத்தில் பெருமை இல்லை... ஆனால் இறைவனின் திருவடிகளோ மிகப் பெருமை வாய்ந்தது... அதே சமயம் நமக்கருள் செய்யும் வகையில் அத்தனை எளிமையானது... " இது அந்த பெரியவர் இராமனின் பெருமையையும் எளிமையையும் பற்றி உரைத்தது... அதையே இவ்விடத்து நினைவு கூர்கின்றேன்... அன்னையானவளை நாம் எளிமையான சொற்கள் கொண்டு வர்ணணை செய்கின்றோம்.. அது நகைப்புக்குரிய செயல்...ஆனால் அதையே ஏன் பட்டரும் செய்தார்... ? அன்னை அத்தனை எளிமையானவளாக அவருக்குக் காட்சியளித்ததால்தான். அவள் மலையரசனுக்கு மகளாகப் பிறந்தது தன் எளிமையை உலகிற்கு உணர்த்துவதற்கேயன்றி வேறெதற்கும் அல்ல...
"இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு" இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்த தலைவிக்கு.. அபிராமிக்கு.... "முகையே முகிழ் முலை " அரும்பும் மொட்டினைப் போன்ற முலைகள் உள்ளன என்பதும்... "மானே முதுகண் " மருளும் மானைப் போன்ற விழிகள் உள்ளன என்பதும் "நகையே இது" நகைப்புக்குரிய செயலே இது.. "முடிவுயில் " எல்லையில்லாத வடிவுடையவளை... எங்கள் அபிராமியை..."மலைமகள்" "பிறவியும்" "என்பதும்" "அந்த வகையே" "வம்பே" மலையரசன் பெற்றெடுத்த மகளல்லவா என்று மலைமகள் என்று விளிப்பதும் அதைப் போன்ற நகைப்புரிய செயலே... மேலும் அது வம்புக்குரிய செயல்.... ஏனெனில் இந்த அகிலத்தைப் பெற்றெடுத்தவளும் அவளே.... அவளை இன்னொரு மானுடனுக்குப் பிறந்தவள் என்பது வம்புக்குரிய செயலல்லவா?? "நாம்" "இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே" "மிகையே" எளியோர்களாகிய நாம் இவளது அருங்குணங்களையும், பெருமைகளையும் நாடி விரும்பி அறிந்து கொள்ள முயல்வதும் மிகையான செயலே... ஏனெனில் நம்மால் அது இயலாது.. இவள் இத்தன்மையள் என்றுரைத்தால், இன்னோரிடத்து அவள் வேறு தன்மையளாய் நிற்கின்றாள்... ஓ அதுவே அவளது தன்மை என அவ்வழி சென்றால், பிறிதோரிடத்தில் அவள் இன்னொரு தன்மையளாய் நிற்கின்றாள்.. ஆக அவளை,.. அவளது தன்மைகளை வரையறுக்க இயலாது.. அவளை நம்மால் அறிந்து கொள்ளவும் இயலாது...

பாடல் தொண்ணூற்று நான்கு
விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே

விளக்கம் : அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள் கண்களெல்லாம் கண்ணீர் மல்கி, உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, சுய அறிவினை இழந்து, தேனுண்ட வண்டைப் போல் களித்து, சொற்கள் தடுமாறி இப்படிச் சொல்லப்பட்ட செயல்கள் எல்லாம் கொண்ட பித்தரைப் போல் ஆவார்கள் என்றால் அன்னை அபிராமியை வழிபடும் சமயம் நல்லதே....
அன்னையை முழுமனதோடு எண்ணி வழிபடும் பக்தர்கள் ஆலயம் சென்று அவளைக் காணும்போது இது போன்ற செயல்களைச் செய்வது இயற்கையானதுதான்... குலசேகரன் பட்டினத்தில் கோயில் கொண்டுள்ள முத்தாரம்மனைக் காணச் செல்லும் போதெல்லாம் நானும் இது போன்ற செய்கைகளுக்குள்ளாகின்றேன்.. காரணம் புரிவதில்லை.. அதற்குரிய காரணம் அன்னை மேல் நாம் கொண்டுள்ள அதீத அன்பே... சொல்லொண்ணா ஆனந்தம் அதிகமாகி அவளையே நேரில் கண்டது போன்ற உணர்வு மேலோங்கும்போது விழி தானே நீரைச் சொரிகின்றது... மெய்யோ மயிர்சிலிர்த்து ஆடுகின்றது... சுய அறிவு அற்றுப்போகின்றது... தேனுண்ட வண்டைப் போல் மனம் ஆனந்த நடனமாடுகின்றது... இவற்றையெல்லாம் காண்போர் இவனென்ன பைத்தியக்காரனைப் போல் செயல்படுகின்றானே என இகழ்ந்துரைக்கின்றனர். அபிராமிப் பட்டரை அப்படித்தான் பித்தனென்றனர்.. ஆனால் பட்டரோ இப்பித்த நிலையை அபிராமி சமயம் எனக்குத் தருமானால் அது நல்ல சமயமே... என்றுரைக்கின்றார்...
கிறித்தவ நண்பர்களும் இதைப் படித்து வருகின்றீர்கள்... இந்துக்களின் ஆலயங்களில் தன்னை மறந்து ஆடும் பக்தர்களைப் பேய் பிடித்து ஆடுகின்றான் எனக் கிண்டல் செய்கின்றார்கள்... ஆனால் இதையேதான் "பரிசுத்த ஆவி" நிறைந்து ஆடுவதாக அவர்களும் அனுபவிக்கின்றனர்.. ஆக ஆழ்ந்த இறையனுபவம் இதைப் போன்ற செயல்களைத் தருவதாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அது தன்னை மறந்த ஆனந்த நிலை என்பது அனுபவிக்காதோருக்குப் புரியாது...
"விரும்பித் தொழும் அடியார்" அன்னை அபிராமியை விரும்பித் தொழுகின்ற அடியவர்கள் "விழி நீர் மல்கி" கண்களில் கண்ணீர் வழிந்தோட "மெய் புளகம் அரும்பித்" உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து... (இதைத்தான் கிராமத்தில் "புல்லரிப்பது" என்பார்கள்). "ததும்பிய ஆனந்தம் ஆகி" ஆனந்தம் ததும்பி "அறிவு இழந்து" தங்கள் சுய அறிவினை இழந்து "கரும்பின் களித்து" தேனுண்ட வண்டினைப் போல் களித்து "மொழி தடுமாறி" சொற்கள் தடுமாறி "முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால்" இவ்வாறு சொன்ன செய்கைகளை எல்லாம் செய்யும் பித்தர்கள் ஆவர் என்றால்.... உலகத்தோரின் பார்வையில் பைத்தியக்காரனைப் போல் ஆவார்கள் என்றால் "அபிராமி சமயம் நன்றே" அபிராமியை வழிபடுவதற்கு வழிகாட்டும் இந்த அபிராமியின் சமயம் மிகவும் நல்லதே.. உயர்ந்ததே....
இந்த பாடலைப் பாடும்போதே அந்தப் பரவச நிலை ஏற்படுகின்றது... கண்கள் மூடி அபிராமியை மட்டுமே மனத்தில் எண்ணி அவள் திருவுருவை மனத்தில் நிறுத்தி ஒரு நொடி இருந்தால் போதும் .. நம் கண்கள் பனிக்கும்... இதயம் இனிக்கும் (கலைஞரைக் காப்பியடித்துவிட்டேனோ?) 
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

அபிராமி அந்தாதி 91&92

பாடல் தொண்ணூற்று ஒன்று
மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே

விளக்கம் : மெல்லிய நுண்ணிய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளும், விரிந்த சடைகளைக் கொண்ட சிவபெருமானோடு இணைந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட பொன்னைப் போன்றவளுமாகிய அன்னை அபிராமியைப் புகழ்ந்து வேதங்கள் சொல்லிய படி அவளைத் தொழும் அடியார்களைத் தொழுபவர்களுக்கு, பல்வேறு இசைக்கருவிகள் இசை முழங்க, வெண்யானையான ஐராவதத்தின் மேலேறி உர்வலம் வரும் இந்திர பதவி வந்து சேரும்..
ஆண்டவனுக்கு சேவை செய்வதை விட அவன் அடியார்க்கு செய்யும் சேவையையே அவன் பெரிதும் மதிக்கின்றான். அதையேதான் அபிராமிப் பட்டர் இங்கு உரைக்கின்றான்... அன்னையின் அடியார்களைத் தொழுது அவர்கட்கு தொண்டு செய்வோருக்கு இந்திர பதவியே கிட்டும் என்று குறிப்பிடுகின்றார்.
"மெல்லிய நுண் இடை மின்னனையாளை " மெல்லிய நுண்ணிய இடையினை உடைய மின்னலைப் போன்றவளை... "விரிசடையோன் புல்லிய மென்முலைப் பொன்னனையாளை " விரிந்த சடைகளைக் கொண்ட சிவபெருமான் புணர்ந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட பொன்னைப் போன்றவளை, அன்னை அபிராமியை... "புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு" புகழ்ந்து வேதங்கள் சொல்லும் வழியில் அவளை வழிபடும் அடியார்களை வழிபடுவோர்க்கு... அதாவது அடியார்க்கடியார்க்கு.... "பல்லியம் ஆர்த்தெழ " பல்வேறு இசைக்கருவிகள் இசை முழங்க... "வெண்பகடு ஊரும் பதம் தருமே" வெண்யானையான ஐராவதத்தில் ஊர்வலம் செல்லும் இந்திர பதவி வந்து சேரும்... அதை அன்னையே தருவாள்... ஆகையால்தான் குருபக்தி அவசியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்... சாயாண்ணா என்று அன்போடு அழைக்கப் படும் சுவாமி சூர்யபாதா அவர்கள் சொல்வார்கள்.. "ஈசனுக்குக் கோபம் வந்தால் நீ குருதேவரிடம் அடைக்கலம் புகலாம். ஈசனது கோபத்தைத் தடுக்கும் ஆற்றல் குருவுக்கு உண்டு... ஆனால் குருவுக்குக் கோபம் வந்தால் அதை அந்த ஈசனாலும் தடுக்க இயலாது" என்று... ஆகவே அன்னையின் அடியார்களை வழிபடுவோருக்கு அன்னை அந்த இந்திர பதவியைத் தருவாள்....

பாடல் தொண்ணூற்று இரண்டு
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே
விளக்கம் : மும்மூர்த்திகள் முதலான தேவர்கள் யாவரும் போற்றும் புன்னகை நிறைந்தவளே... அபிராமி அன்னையே... உனது சொற்களிலே உருகி உன் திருவடிகளிலே மனம் ஒன்றி உனக்கு அன்பனாக வாழ்வதற்காக என்னை உன் அடியாக்கிக் கொண்டாய்.. நான் இனி வேறு எந்த ஒரு மதத்தைக் கண்டும் மதி மயங்க மாட்டேன். அம்மதத்தைச் சார்ந்தவர் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்...
அழகிய சொல் "முகிழ் நகை" தமிழில் இச்சொல் வழக்கில் இல்லாவிட்டாலும், கன்னடத்தில் "முகிழ் நகை" எனும் சொல் வழக்கில் உள்ளது... எங்கள் குருதேவர் தியானத்தில் எங்களை அழைத்துச் செல்லும் போது "முகதல்லி முகிழ் நகையிரலி" என்று சொல்வது அப்படியே நினைவுக்கு வருகின்றது. அன்னையை அழகிய புன்னகையே என வர்ணிக்கும் அபிராமிப் பட்டரின் வார்த்தைகள் நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கின்றன...
"முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே" மும்மூர்த்திகள் முதலிய தேவர்கள் அனைவரும் போற்றும் அழகிய புன்னகையே... "பதத்தே உருகி " உன் சொற்களிலே உருகி... " நின் பாதத்திலே மனம் பற்றி " உன் திருவடிகளிலேயே என் மனத்தை நிலை நிறுத்தி... :"உந்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் " உன் இஷ்டப்படி வாழ்வதற்காக... உனக்கு அன்பனாய் வாழ்வதற்காக என்னை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய்... "இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் " இனிமேல் நான் எந்த ஒரு மதத்திலும் மதி மயங்க மாட்டேன்... "அவர் போன வழியும் செல்லேன்" அம்மதத்தார் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்....
அன்னை அபிராமி மதம் இருக்க அடுத்த மதம் நமக்கெதற்கு....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்.. நன்றி.....

அபிராமி அந்தாதி 89&90


பாடல் எண்பத்து ஒன்பது
சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

விளக்கம் : சிறந்த தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பெருஞ்செல்வமே... அபிராமியே... தன்னிலை கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக அமரலோகம் அருளும் உனது கணவரும், நீயும் இணைந்து வந்து, என் உடம்பிலிருந்து உயிர் பிரியும் வேளையில் நான் சுய அறிவிழந்து நிற்கும் பொழுது உனது சேவடிகளை எனது தலைமேல் வைத்தருள என் முன்னே வந்தருள வேண்டும் என உன்னை வருந்தி அழைக்கின்றேன்...
தான் மரணமடையும் வேளையில் அன்னையைத் தன் முன்னே வந்து அவள் சேவடிகளைத் தன் தலைமேல் வைக்க வருந்தியழைக்கும் அபிராமிப் பட்டர் மீண்டும் மீண்டும் இப்படி அழைப்பதற்கான காரணமும் இப்பாடலிலேயே மறைந்துள்ளது... உடலை விட்டு உயிர் பிரியும் வேளையில் தான் யார் என்பதை உயிரானது மறந்து போகின்றது.. மற்ற உயிர்களைப் போலவே துடிக்கின்றது... அந்த வேளையில் அன்னையை அழைக்க இயலுமா என்பது ஐயத்துக்குரிய செயல். எனவே ... இப்போதே அவளை வருந்தி அழைத்து அச்சமயத்தில் உன் திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் என்று பாடுகின்றார் பட்டர்.. எத்தனை பெரிய பாக்கியம் இது.. அன்னையின் திருவடிகள் தலைமேல் பட்டால், அவ்வுயிர் மீண்டும் பிறப்படையுமோ???
"சிறக்கும் கமலத் திருவே " சிறந்த தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பெருஞ்செல்வமே.... அபிராமியே... "துறக்கம் தரும் நின் துணைவரும் " வானுலகத்தை வரமாக அருளும் உன் துணைவரான சிவபெருமானும், .. "நீயும்" அன்னையாகிய நீயும்... "துரியம் அற்ற உறக்கம் தர வந்து" நான்கு நிலைகளையும் கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக வந்து... அதென்ன நான்கு நிலைகள்.? மனித மனமானது நான்கு நிலைகளை அடைய இயலும்... விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை... விழிப்பு என்பது சாதாரண நிலை... உறக்கம் வரும் வேளையில் ஆழ்ந்த உறக்கமற்ற நிலையில் மனத்தில் உள்ள எண்ணங்கள் கனவாக வருகின்றது.. இது இரண்டாம் நிலை.. தன்னை மறந்து உறங்கும் பொழுது ஆழ்ந்த நித்திரை ஏற்படுகின்றது. இது மூன்றாம் நிலை.. சமாதி நிலை என்பது விழிப்புமற்ற, கனவுமற்ற, ஆழ்ந்த உறக்கமுமற்ற நிலை... இது ஓர் ஆழ்நிலைத் தியானம். அனுபவித்துப் பார்த்தால்தான் சமாதி நிலையின் அருமை புரியும்.. அந்நிலையில் விழிப்பும் உண்டு,,, உறக்கமும் உண்டு... நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை நம்மால் உணர இயலும்...ஆனால் நாம் அதைக் கடந்த ஒரு நிலையில் இருப்போம்.. உறங்குவது போல் இருக்கும்... ஆனால் வெளி நிகழ்வுகளை மனம் புரிந்து கொண்டுதான் இருக்கும்.. அந்நிலையில்தான் மனமானது தான் யார் என்பதைப் புரிந்து கொள்கின்றது. இதை அனுபவித்தாலன்றி புரிந்து கொள்ள இயலாது..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவங்கள் சமாதி நிலையில் கிடைத்திருக்கும்... இது நான்காவது நிலை... இந்த சமாதி நிலையையும் தாண்டிய நிலையை எனக்குத் தருவதற்காக நீயும் உன் கணவரும் என்னை நோக்கி வர வேண்டும்... எனக்கு அந்த நிலையைத் தரவேண்டும் என்கிறார். "உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது " உடம்போடு உயிரானது தான் கொண்ட உறவினை விலக்கும் சமயத்தில், நான் எனது சுய அறிவினை மறக்கும் பொழுது... அந்த சமாதி நிலையைக் கடந்த நிலையை எனக்கு நீயும் உன் கணவரும் வந்து தந்து,  என் உயிரானது பிரியும் வேளையில் என் சுயத்தை நான் இழக்கும் பொழுது.... இருவித அர்த்தங்கள் இப்பாடலில் மூலம் கிடைக்கின்றன.. ஒன்று.. எனக்கு சமாதி நிலையையும் கடந்த உறக்கத்தைத் தந்து அதன் பின்னர் எனது உயிர் பிரிய வேண்டும்... இரண்டு... என் உயிர் பிரியும் வேளையில் நீ அந்த சமாதி நிலையைக் கடந்த நிலையை எனக்குத் தந்தருள வேண்டும்... வார்த்தைகள் விளையாடுகின்றன... அபிராமிப் பட்டரின் பாடல்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலைக்கேற்ற பொருளைத் தருகின்றன.... "நின் சேவடி சென்னி வைக்க" உனது சேவடிகளை என் தலை மீது வைப்பதற்காக.. "என் முன்னே வரல் வேண்டும் " என் முன்னே நீ வர வேண்டும்... நீயும் உன் கணவராகிய சிவபெருமானும் எனக்கு அந்த ஐந்தாம் நிலை உறக்கத்தைத் தந்து அதன்பின்னர் என் உயிரானது என் உடம்பை விட்டுப் பிரியும் படி செய்ய வேண்டும்... அச்சமயத்தில் உயிர் பிரிந்து நான் என் சுய அறிவினை இழந்து கிடப்பேன்... அச்சமயத்தில் அம்மா என உன்னை அழைக்கும் அறிவும் இருக்காது... அப்பொழுது நீ உனது சேவடியை எனது தலை மீது வைப்பதற்காக என் முன்னே வர வேண்டும்.. "வருந்தியுமே" இதற்காக இப்பொழுதே உன்னை வருந்தியழைக்கின்றேன் அம்மா.....

பாடல் தொண்ணூறூ
வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே
விளக்கம் : விண்ணில் வாழும் அமரர்களுக்கு விருந்தாக பாற்கடலில் தோன்றிய அமுதத்தைத் தந்திட்ட மென்மையான அபிராமியானவள் அவளே வந்து நான் வருத்தமடையா வண்ணம் என் இதயக் கமலத்தில் புகுந்து அதுவே அவளது பழைய இருப்பிடமாக எண்ணி அமர்ந்தாள்.. இனி எனக்கு கிடைக்காத பொருளென்று எதுவும் இல்லை....
அன்னையே என் இதயத்தில் வந்து அமர்ந்த பின்னர் அதை விடப் பெரும் பொருள் ஏது உண்டு? சகல செல்வங்களையும் உள்ளடக்கிய அபிராமி எனும் பெருஞ்செல்வம் என் இதயத்து வந்தமர்ந்ததே...அதுவும் தானாக வந்தாள்...நான் கொஞ்சமும் வருத்தமடையா வண்ணம் என் இதயத்தை அவள் இதுவே தன் பழைய இருப்பிடம் என்று அமர்ந்தாள்... வேறென்ன வேண்டும் எனக்கு??
இந்த பாடலைப் பாராயணம் செய்தால் பிரிந்த தம்பதியர் கூடி வாழ்வர் என்று பெரியோர் சொல்வார்கள்...
"விண் மேவும் புலவருக்கு" விண்ணில் வாழும் அறிவிற் சிறந்த அமரர்களுக்கு "விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே" விருந்தாக பாற்கடலில் கிடைத்த அருமருந்தான அமுதத்தை அளிக்கும் மென்மையானவளே... அமுதம் வேண்டி அமரர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வெளிப்பட்ட வேளையில் சண்டையும் வரத் தொடங்கிற்று... அது அமரர்களுக்கா.. அல்லது அசுரர்களுக்கா... என... யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை... ஏனெனில் பாற்கடலைக் கடைந்த நோக்கமே அதுதான்.. அச்சமயத்தில் அமரர்களுக்கு நல்லுதவி புரிய திருமால் தானே மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை வஞ்சித்து அமரர்களுக்கு நன்மை புரிந்தார். அமுதமும் தேவர்களுக்குக் கிட்டியது... அம்மோகினியாக வந்தது திருமாலே ஆயினும், அத்திருமால் அன்னையின் ஒரு அம்சம் அல்லவா? திருமாலைப் படைத்தவளும் அன்னை ஆதிபராசக்தியல்லவா?? ஆக... அமரர்களுக்கு அமுதத்தை அளித்தது அன்னையே... அப்படிப்பட்ட அன்னையாளவள்... "வருந்தாவகை என் மனத்தாமரையில் " நான் வருத்தமடையா வண்ணம் என் மனமென்னும் தாமரையில் "வந்து புகுந்து " "பழைய இருப்பிடமாக " "இருந்தாள் " தானகவே வந்து புகுந்து என் மனத்தைத் தனது பழைய இருப்பிடமாகக் கருதி இருந்தாள்... அன்னையோ பேருரு கொண்டவள். நானோ எளியவன். என் இதயக் கமலத்தில் அவள் அமரும்பொழுது அது வலிக்கும் என்றெண்ணியிருந்தேன்.. ஆனால் நான் வருந்தாவண்ணம், எனக்கு வலியைத் தராமல் மென்மையாக அமர்ந்தாள். அதுவும் என் மனமே அவளது பழைய இருப்பிடமாகக் கருதி அமர்ந்தாள்... "இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை " இனிமேலும் எனக்குக் கிடைக்காத பொருள் என்று எதுவும் இல்லை... எல்லாமே எனக்குக் கிட்டி விட்டது அன்னையெனும் வடிவில்..இந்த அகிலமே அவளுக்குச் சொந்தம். அவளோ எனக்குச் சொந்தமானாள்.. இனி இந்த அகிலமும் எனக்கே சொந்தம்... எனக்குக் கிட்டாத பொருளென்று எதுவுண்டு?? எதுவுமில்லை...
அன்னையானவள் தானே தன் பழைய இருப்பிடத்தைத் தேடி அமர்ந்தது போன் என் மனத்தில் குடி கொண்டாளே... ஆனந்தம் ... ஆனந்தம்.... ஆனந்தக் கூத்தாடுகின்றேன்.... வேறென்ன வேண்டும் எனக்கு... இவ்வுலகத்தோர் மதிக்கும் செல்வம் எனக்குத் துச்சம்.....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம். நன்றி...
அம்மையார் கீதா அவர்களுக்கு சௌந்தர்ய லஹரி பற்றி எழுதும்படி வேண்டுகோள் விடுத்திருந்தோம்... எமது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை... மேலும் காளைராசன் ஐயா மட்டுமே திருக்கடவூர் வருகையை உறுதி செய்துள்ளார்.. வேறு யாரெல்லாம் வருகின்றீர்கள் என்பதைத் தெரியப் படுத்துங்கள்...
நன்றி...

அபிராமி அந்தாதி 87&88

பாடல் எண்பத்து ஏழு
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

விளக்கம் : தமது நெற்றிக் கண்ணால் காமதேவனை அழித்த சிவபெருமானது முடிவில்லா யோக நிலையை உலகமெல்லாம் பழிக்கும் படி செய்து அவனது இடப்பாகத்தை இடங்கொண்டு ஆளும் சிவ சக்தியே... அபிராமி அன்னையே... எந்தவொரு சொல்லுக்கும், எவர்தம் நினைவுக்கும் எட்டாத உனது திருவுருவம், எளியேன் எனது  கண்களிலும், செயல்களிலும் தென் படுகின்றதே... இதென்ன அதிசயம்??
மீண்டும் மீண்டும் ஈசன் அம்மையிடம் அகப்பட்டுக் கொண்டதைக் கிண்டல் செய்வதே அபிராமிப் பட்டரின் வழக்கமாகி விட்டது... ஆயினும் ஈசனுக்கு அது பெருமையையே தருகின்றது.. தமிழால் வைதாலும் அருள் செய்யும் ஈசன் அவனது மனைவியை ஏற்றிப் பாடுவதைக் கேட்டு அருள மாட்டானா? ஒரு புதுக்கவிஞன் பாடினானில்லையா " அப்பனைப் பாடும் வாயால் தறுதலைச் சுப்பனைப் பாடுவேனோ?" என்று... அப்பாடல் முழுக்க முருக பக்தி மணக்கும்.. ஆனால் பொருள் புரியாதோர்க்கு, அது முருகனை நிந்திப்பது போல் தோன்றும்.. அதே போல்தான் இவ்விடத்தும் அப்பனைப் பழித்து அம்மையை ஏற்றுவது, அம்மையப்பன் இருவருக்குமே பெருமையைத்தான் தருகின்றது...
"விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை" தனது நெற்றிக்கண்ணால் காமதேவனை சுட்டெரித்த சிவபெருமானது முடிவில்லாத யோக நிலையை.. அவர்தம் தவத்தை... ஈசனது தவம் என்பது முடிவில்லாதது. பிச்சாண்டித்தேவராக வரும் நிலையில் கொடுத்தருள்பவராகவும், தனது சுடலை உலகத் தவத்தில் தன்னை யாரும் நெருங்க இயலாதவராகவும் இருக்கின்றார்.  தங்கள் இன்னலையெல்லாம் திருவிளையாடல்கள் மூலம் இன்புறத் தீர்த்து வைத்த ஈசன் இன்றைக்கு எங்கள் குறை தீர்ப்பாரா என்று அமரர்கள் அவர்தம் சிவலோகம் சென்று காத்திருக்கின்றனர்.. அவரோ பாரா முகமாக, மோனதவத்தில் மூழ்கியிருக்கின்றார்... சரி காம தேவனை அனுப்புவோம்... அப்பன் விழித்து இன்புற்று நம் துயரைக் களையட்டும் என முடிவாகின்றது.. காமதேவனது மலர்க்கணைகள் ஈசனுக்கு காமத்தை வரவழைக்கவில்லை... மாறாக கோபத்தை வரவழைக்கின்றது.. விளைவு .. காமதேவன் தகனம்.... இப்படித் தனது தவநிலையில் தன்னையாரும் நெருங்க இயலாது என்ற நிலையில் .... உயர்ந்த நிலையில் இருக்கின்ற பரமன்.....பரமனது விரதம் என்ன ஆனது?? “அண்டம் எல்லாம் பழிக்கும் படி “ உலகமெல்லாம் பழிக்கும் படி... இவனென்ன தவத்திற் சிறந்தவன் என்று எண்ணியிருந்தோமே....அன்று காமனை அழித்தானே.... இன்று இவன் செய்த செயல் இப்படியாகி விட்டதே.... என உலகத்தான் ஈசனைப் பழிக்கும்படி அவன் என்ன செய்தான்...? அல்லது அவனுக்கு என்ன நேர்ந்தது? “ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே” அவ்வீசனின் ஒரு பாகத்தைக் கவர்ந்து அவ்விடத்திலிருந்து கொண்டு அவனையும் அகிலத்தையும் ஆளும் சிவசக்தியே.... இவனைக் காமத்தால் வெல்ல இயலாது என்று எண்ணியிருந்த உலகத்தார் அவன் அம்மையிடம் தோற்றுப் போய் தன் இடப்பாகத்தை இழந்த நிலையக் கண்டு வியந்து அவனைப் பழிக்கின்றனர்.. அவ்வீசனுக்கே சக்தி தரும் சிவசக்தியாகி நின்றாள் உமையாள்...  “மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் “ எந்தவொரு சொல்லுக்கும், எவர்தம் நினைவுக்கும் எட்டாத உனது திருவுருவம்... அன்னையின் திருவுருவை சொற்களால் வர்ணிக்க இயலுமா? எந்த ஒரு சொல்லால் அவளை வர்ணித்தாலும் அச்சொல்லினையும் கடந்து நிற்கும் அவளது திருவுருவம்... ஆனையைத் தடவிக்கண்ட குருடர் போலும் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு சொற்களால் அவளை வழிபடுகின்றனர்... ஆனால் அவளது திருவுருவோ எந்த ஒரு சொல்லிலும் அடைபடுவதில்லை.. யார்தம் நினைவுக்கும் அவள் எட்டுவதில்லை.... அத்தகைய பேராற்றல் கொண்டவள் அவள்.. அண்டத்தை எல்லாம் கடந்து அகிலாண்டேஸ்வரியாக நின்றவள் அவள்... அவது திருவுருவம்..... “எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்” எனது கண்களிலும், செயல்களிலும் தென்படுகின்றதே... இதென்ன விந்தை...? அன்னையே அபிராமிப் பட்டரின் கண்களில் தென்படுகின்றாள்... அன்னையே அவர்தம் செயலாகவும் செயல்படுகின்றாள்.. இதென்ன அதிசயம் என அதிசயித்துப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர்...
பாடல் எண்பத்து எட்டு
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே
விளக்கம் : தரமற்ற செயல்கள் புரிந்த அசுரர்களின் முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்தவனும், திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிர்ம்மனின் சிரத்தில் ஒன்றைக் கொய்து தம் கையில் ஏந்தியவனுமான ஈசனது இடப்பாகத்தில் சிறப்பாக இணைந்திருப்பவளே... தனியனாகிய நான் உன்னையே கதியென்று சரணடைந்தேன்... உன் பக்தர்கள் கூட்டத்தில் தரமில்லாதவன் என்று என்னைத் தள்ளிவிடாதே....
அன்னையின் அருள்கிடைக்க அருமருந்தான பாடல் இது... தினந்தோறும் அன்னையை நாடி வரும் பக்தர்கள் கோடி... அப்பக்தர்கள் கூட்டத்தில் தன்னைத் தரமற்றவன் என்று தள்ளிவிடாதே என்று அன்னையிடம் அபிராமிப்பட்டரே கெஞ்சுகின்றார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? தண்டிப்பது தந்தையின் குணம்.. மன்னித்து அணைப்பது அன்னையின் குணம். தரமற்ற செயல்கள் புரிந்த அசுரர்களின் முப்புரத்தை எரித்தவன் தந்தை... அகந்தையால் தன் உண்மை நிலை மறந்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து தண்டித்தவனும் அவனே... நீயோ அவனது இடப்பாகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றாய்.. அவனது மனநிலை உனக்கு வந்துவிடுமோ?? தரந்தாழ்ந்தவன் என்று என்னைத் தள்ளிவிடுவாயோ??? அப்படித் தள்ளி விடாதே... ஏனெனில் எனக்கு வேறு எந்த கதியும் இல்லை...நீயே கதியென்று உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.. என்னைத் தள்ளிவிட்டு விடாதே... எனப்பாடுகின்றார்...
“தரியலர்தம் புரம் “ தரமிழந்த செயல்களைப் புரிந்த அசுரர்களின் முப்புரத்தினை  “அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய” எரிப்பதற்காக முன்பொரு நாள்  மேரு மலையை வில்லாக வளைத்தவனும் ... “போதில் அயன்” திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிரம்மனின் “சிரம் ஒன்று செற்ற கையான் “ சிரங்களில் ஒன்றைக் கொய்து தன் கையில் கொண்டவனுமாகிய சிவபெருமானின் “ இடப்பாகம் சிறந்தவளே” இடப்பாகத்தில் சிறப்புற அமர்ந்தவளே... “தமியேனும்” தனியனாகிய நானும் ... யாருமற்றவனாகிய நானும்... “பரம் என்று உனை அடைந்தேன்” நீயே கதி என்று உன்னையே சரணடைந்தேன்..”உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது “ உன் பக்தர்களில் தரமில்லாதவன் இவன் என்று என்னைத் தள்ளிவிடுவது தகாது... என்னைத் தள்ளிவிடாதே தாயே.....
சுருங்கக் கூறின்
“அறமல்லது அழிப்பவன் இணையாளே...
அறமில்லா என்னைத் தள்ளாதே...
புறமொரு கதியில்லைப் பூவுலகினிலே..
மறமது மறந்தறமெனக் கருள்வாயே”
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம். நன்றி....

அபிராமி அந்தாதி 85&86

பாடல் எண்பத்தைந்து
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே
விளக்கம் : பார்க்கும் திசைகளெல்லாம் பாசமும் அங்குசமும், பனி போன்ற சிறகுகள் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் ஐந்து மலர்க்கணைகளும், கரும்பு வில்லும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுர சுந்தரி அபிராமியின் திருமேனியும், அவளது சிறு இடையும், குங்கும நிறக்கச்சையணிந்த திருமுலைகளும், அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையையுமே காண்கின்றேன்...
"எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாடினானே தமிழ்க்கவிஞன் அவனது வரிகள் நினைவுக்கு வருகின்றன. காணும் திசையெல்லாம் உந்தன் திருவுருவேயன்றி வேறொன்றும் காண்கிலேன் அம்மையே... என்னிலும் உன்னைக் காண்கின்றேன்.. எல்லோரிலும் உன்னைக் காண்கின்றேன்.. அம்மையே... நீயே எல்லாம்.. சர்வம் சக்தி மயம்.... இதுதான் அபிராமிப் பட்டரின் எண்ணம்..பக்திக் கடலில் மூழ்கியிருக்கும் பரம பக்தனுக்கே இவ்வெண்ணம் சாத்தியமாகும்... அவ்வண்ணம் இருந்ததால்தான் அபிராமிப் பட்டரைப் பித்தனென்று உலகம் இகழ்ந்தது... ஆயினும் தன் பக்திநெறியினின்று பின் வாங்காது என்றென்றும் அன்னையின் திருவுருவைத் தொழுதேத்தித் தன் பக்தியின் பெருமையை அகிலம் அறியச் செய்தார் அவர்.

"பார்க்கும் திசைதொறும் " நான் பார்க்கின்ற திசைகளெல்லாம் ?பாசாங்குசமும்" பாசமும், அங்குசமும், "பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் " பனி போன்ற மெல்லிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் புத்தம்புதிய மலர்களாலான ஐந்து அம்புகளும், "கரும்பும்" கரும்பு வில்லும் "என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும்" என் துன்பத்தையெல்லாம் போக்கிடும் திரிபுரசுந்தரி அன்னை அபிராமியின் திருமேனியும், "சிற்றிடையும்" அவளது சிறிய இடையும் "வார்க்குங்கும முலையும் " குங்கும நிறக்கச்சையணிந்த அவளது திருமுலைகளும் "முலைமேல் முத்து மாலையுமே" அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையும் ஆகிய இவற்றையே காண்கின்றேன்.. வேறெந்த காட்சிகளும் என் கண்களுக்குப் புலப்படவில்லை..
அர்ச்சுனன் கவனமெல்லாம் குறிவைத்தடிக்க வேண்டிய பொருளின் மீதிருந்ததால் அவன் வில்லுக்கொரு விஜயன் எனப் பெயரெடுத்தான்.. அபிராமிப் பட்டரின் கவனமெல்லாம் அன்னை அபிராமியின் மேலிருந்ததால் அவர்தம் பக்தியால் புகழ்பெற்றார். அர்ச்சுனன் கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை.. அபிராமிப்பட்டருக்கோ காண்பதெல்லாம் அன்னையன்றி வேறில்லை...

பாடல் எண்பத்தாறு
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே
விளக்கம் : பாலையும், தேனையும், பாகினையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே... கோபங்கொண்ட காலதேவன், விரைவாகச் செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை என் மேல் விடும்போது, திருமால், பிரம்மன், வேதங்கள், அமரர்கள் அனைவரும் தேடியும் காணக் கிடைக்காத உன் திருப்பாதங்களையும், வளையணிந்த உன் திருக்கரங்களயும் கொண்டு எனக்குக் காட்சியளிப்பாய்...
மீண்டும் ஒருமுறை தனது மரணவேளையைப் பற்றிப் பாடுகின்றார் பட்டர். ஆனால் இப்போது அவரது பாடலின் தொனி இனிமையாகவும், குதூகலம் நிறைந்தும் காணப்படுவதை நம்மால் உணர இயலுகின்றது. கடந்த பாடலில் எல்லாவிடத்தும் உன்னையே காண்கின்றேன் என்றுரைத்த பட்டர் இப்பாடலில், யாருக்கும் தென்படாத உன் திருப்பாதங்களையும், அழகிய வளையணியும் திருக்கரங்களையும் கொண்டு நான் மரணமடையும் வேளையில் என் முன்னே வந்து நில் என்றுரைக்கின்றார். ஆஹா எத்தனை இனிமையான பாடல் இது...கண்கள் மூடிப் பாடலைப் பாடி இன்புற்று மகிழுங்கள்..
"பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே " பாலையும், தேனையும், பாகையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே... "தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே" என முருகன் மீது புதுக்கவிஞன் ஒருவன் பாடினாலில்லையா... அவனுக்கு முருகனின் சொற்களை விடுத்து வேறெதுவும் இனிமையில்லை... அபிராமிப் பட்டருக்கு அன்னையின் சொற்கள் பால், தேன், சர்க்கரைப் பாகு இவற்றைப் போன்ற இனிமை நிறைந்தது.. "மால் அயன் தேட" திருமாலும், பிரம்மனும் தேடும். "மறை தேட" வேதங்கள் தேடும் "வானவர் தேட" அமரர்கள் அனைவரும் தேடும்.. "நின்ற காலையும்" இப்படி அனைவரும் தேடி நிற்கும் உந்தன் திருப்பாதங்களையும், "சூடகக் கையையும் கொண்டு" வளையணிந்த உந்தன் திருக்கரங்களையும் கொண்டு "வெங்காலன்" கோபங்கொண்ட காலதேவன் "கதித்த கப்பு வேலை " விரைவாகச் செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை "என் மேல் விடும்போது" என்னை நோக்கி செலுத்தும் வேளையில், நான் மரணமடையும் வேளையில் "வெளி நில் கண்டாய்" நீ வந்து காட்சியளித்து அருள வேண்டும்.
எத்தனை அதிகாரமாக "வெளி நில் கண்டாய்" எனக் கட்டளையிடும் தொனியில் உரைக்கின்றார். பக்தி அதிகமாகும் வேளையில் அன்னையின் மேல் உரிமையும் அதிகமாகின்றது.. நம் தாயிடம் நாம் எதையும் கேட்பதற்காக இரந்து நிற்பதில்லை.. "சாப்பாடு வை" என்றுதான் சொல்லுவோமே தவிர, "அம்மா.. பசிக்குது... சாப்பாடு போடுங்க" என்று சொல்வதில்லை... அதே தொனியில்தான் அபிராமிப் பட்டரும் உலகின் தாயான அன்னை அபிராமியைத் தான் மரணமடையும்வேளையில் வந்து நில் என்று அழைக்கின்றார்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

அபிராமி அந்தாதி 83&84

பாடல் எண்பத்து மூன்று
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே

விளக்கம் : தேன் சொரியும் புது மலர்களைக் கொண்டு மணம் வீசும் உன் திருவடித்தாமரைகளை இரவும் பகலும் வணங்கும் வலிமையுடையோர், அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக்கூடிய இந்திர பதவியையும், ஐராவதம் எனும் வெண்ணிற யானையையும், ஆகாய கங்கையையும், வலிமை மிகு வச்சிராயுதத்தையும், கற்பக வனத்தையும் உடையவர்களாக இருப்பார்கள்..
அன்னையின் திருவடியை இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையோர் எனக்குறிப்பிடுவது அது அத்தனை எளிய காரியமல்ல என்பதைக் காட்டுகின்றது. பாச பந்தங்கள் அறுத்து அன்னையை மட்டுமே எந்நேரமும் தொழுது கொண்டிருக்கும் வல்லமை அவள் அடியார்களுக்கு அவள் அருளால் மட்டுமே கிட்டும். அது ஒரு தெய்வீக அழைப்பு.. அவ்வழைப்பை அன்னை அளித்தால் மானுடன் ஒருவன் அவள் திருவடிகளை எந்நேரமும் தொழும் பக்தன் ஆகின்றான். அவன் எந்தவொரு சுகத்திற்காகவும் யாரிடத்தும் செல்லவோ வேண்டுவதோ வேண்டியதில்லை.. அவனே அனைத்தும் உடையவனாகின்றான். இந்திரபதவி என்பது கிடைத்தற்கரிய வரம். இந்திர பதவியில் இருக்கும் இந்திரன் அமரர்கள் அனைவருக்கும் தலைவனாகின்றான். அது ஒரு பதவி மட்டுமே.. அப்பதவியில் அவனது பதவிக்காலம் முடிந்தவுடன் இன்னொருவன் இந்திரன் ஆகின்றான். இப்படி அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அனைத்து அமரர்களும் இந்திரனது கட்டுப்பாட்டில் வருவதால், இயற்கையின் செயல்கள் அவனது கட்டுப்பாட்டில் வருகின்றன. அத்தகைய பதவி அன்னையை அல்லும் பகலும் இறைஞ்சுவோரிடத்துள்ளது எனப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர். இதன் மறைபொருள் என்னவெனில், அன்னையின் அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் கிட்டும். இயற்கையால் ஏற்படும் துன்பங்கள் அவர்தம்மை நெருங்காது என்பதாகும்.
"விரவும் புது மலர் இட்டு " தேன் சொரியும் புத்தம் புது மலர்களை இட்டு "நின் பாத விரைக்கமலம்" மணம் வீசும் உனது திருவடித்தாமரைகளை "இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் " இரவிலும் பகலிலும் வணங்கிடும் வலிமை படைத்தோர் "இமையோர் எவரும் பரவும் பதமும்  " அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக் கூடிய இந்திர பதவியையும், "அயிராவதமும் " அவ்விந்திரனுக்குச் சொந்தமான ஐராவதம் எனும் வெள்ளையானையையும், "பகீரதியும்" ஆகாய கங்கையையும், "உரவும் குலிசமும் " வலிமை மிக்க வஜ்ராயுதத்தையும், (வஜ்ராயுதம் என்பதற்கு அழகிய தமிழாக்கம் குலிசம்), "கற்பகக் காவும் " நினைத்தன நினைத்த பொழுதில் கிட்டும் கற்பக வனத்தையும் "உடையவரே" கொண்டவர்களாக இருப்பார்கள்... அவர்கள் என்றும் யாரிடத்தும் சென்று எதையும் இரங்கிப் பெறவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அனைத்தும் அவர்தம் உடைமையாக இருக்கின்றது... இதுவே அன்னையின் அன்பர்களுக்குக் கிட்டும் பெருவரம். ஆயினும் அவர்கள் இதையெல்லாம் மேலாக எண்ணுபவர்களா? ஒருபோதும் இல்லை... அவர்தமக்கு அன்னையின் திருவடிகளை விடுத்து வேறு எந்த செல்வமும் பெரிதல்ல...

பாடல் எண்பத்து நான்கு
உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

விளக்கம் :  உலகத்தோரே.... அனைத்தையும் உடையவளும், அசையும் செம்மையான பட்டாடை அணிந்தவளும், ஒளிரும் நிலவைனையணிந்த செம்மையான சடையைக் கொண்டவளும், வஞ்சகர்களின் நெஞ்சத்தில் தங்காதவளும், வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவளும், எங்கள் சிவபெருமானின் இடப்பாகத்தமர்ந்தவளும், இவ்வுலகில் இனிமேல் என்னைப் பிறக்காதிருக்கச் செய்தவளுமாகிய அன்னை அபிராமியை நீங்களும் மீண்டும் பிறவாதிருக்கும்படி பார்த்திடுங்கள். வணங்கிடுங்கள்.
அழகிய வர்ணனைப் பாடல் இது... பட்டரின் மொழி அழகிய விளையாட்டை ஆடியிருக்கின்றது.. தான் மீண்டும் பிறப்பதில்லை என்பது அபிராமிப்பட்டரின் அழுத்தமான நம்பிக்கை. உலகின் மக்களுக்கு அறிவுரை தருகின்றார். மீண்டும் பிறவாதிருக்கும் நிலை வேண்டுமெனில் எங்கள் அபிராமியைக் காணுங்கள். அவள் திருவுருவைத் தியானியுங்கள். அவளை வணங்குங்கள். அவளே உங்களுக்குப் பிறவாவரம் அருள்வாள்.
"உடையாளை " அனைத்தையும் உடையவளை..."ஒல்கு செம்பட்டுடையாளை" அசையும் செம்மையான பட்டுடை அணிந்தவளை... "ஒளிர்மதி செஞ்சடையாளை" ஒளிரும் நிலவினை அணிந்த செம்மையான சடையை உடையவளை.. "வஞ்சகர் நெஞ்சு அடையாளை" வஞ்சகரது நெஞ்சத்தில் தங்காதவளை... "தயங்கு நுண்ணூல் இடையாளை " வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவளை... "எங்கள் பெம்மான் இடையாளை" எங்கள் சிவபெருமானது இடப்பாகத்து அமர்ந்தவளை... "இங்கு என்னை இனிப் படையாளை" இவ்வுலகத்தில் இனிமேல் என்னைப் படைக்காதவளை.. என் பிறவிப் பிணியை முடித்தவளை... "உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே" உங்களையும் மீண்டும் படைக்காதபடிக்கு ... நீங்கள் மீண்டும் பிறவாத படிக்கு... பாருங்கள்.. தியானியுங்கள்.. வணங்குங்கள்...
பிறவிப் பிணியை அறுக்கும் சக்தி படைத்தவள் பிறப்பைக் கொடுத்த ஆதிபராசக்தியே... அவளையே எண்ணித் தியானித்திருக்கும் போது நம் பிறவிப் பிணியை அவள் நீக்குகின்றாள்.  தமிழ்ப்பாக்கள் புனைய விரும்புவோர் விரும்பிப் படிக்க வேண்டிய பாடல் இது. தமிழ்ச் சொற்களை எத்தனை அழகாகக் கையாண்டிருக்கின்றார் பட்டர்.  காணுங்கள்.. மீண்டும் ஒருமுறை ஓதி இன்புறுங்கள்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.  மீண்டும் சந்திப்போம். நன்றி......