திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 95&96

பாடல் தொண்ணூற்று ஐந்து
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே

விளக்கம் : அழியாத நல்ல குணங்களின் குன்றாக விளங்குபவளே... அருள் நிறைந்த கடலாக இருப்பவளே... மலையரசன் இமவான் பெற்ற கோமளமே... எங்கள் அபிராமி அன்னையே.... எனக்கென்று உள்ளதெல்லாம் நான் அன்றே உனக்கென்று அர்ப்பணித்து விட்டேன்.. இனி எனக்கு நல்லது நடந்தாலும் தீயது நடந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.... எனக்கு நீயே கதி...
அனைத்தையும் அன்னைக்கே அர்ப்பணித்து விட்ட பின்னர் நன்மையால் வரும் மகிழ்வும் இல்லை... தீமையால் வரும் துன்பமும் இல்லை.. அன்னையையே பரம் என்று கொண்ட மனம் விருப்பு, வெறுப்பு அற்ற நடுநிலை கொண்டதாகின்றது.. குணங்களில் குன்றாகவும், அருட்பெருங்கடலாகவும் இருக்கும் அன்னை அத்தகைய நல்மனத்தினை நமக்குத் தந்தருள்கின்றாள். அன்னையே நம்மை வழி நடத்தும்போது நம் வாழ்வில் தீமைகள் ஏது..? எல்லாம் நன்மையே அல்லவா?
"அழியாத குணக் குன்றே " அழியாத நற்குணங்களின் குன்றே.... "அருட்கடலே" அருளெனும் கடலே... "இமவான் பெற்ற கோமளமே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த கோமளமே.. எங்கள் அபிராமி அன்னையே... "எனக்கு உள்ளதெல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் " எனக்கென்று உரிமையுள்ள அனைத்தையும் அன்றே நான் அவையெல்லாம் உனதே என்று அர்ப்பணித்து விட்டேன்.. என்று? என்றைக்கு நீ என்னை உன் மகனென்று அறிந்தாயோ அன்று... "நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை " இனிமேல் எனக்கு நன்மை நடந்தாலும், தீமை விளைந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.. அவற்றின் மகிழ்ச்சியோ துக்கமோ என்னைப் பாதிக்காது... "உனக்கே பரம்" ஏனெனில் எனக்கு நீயே கதி.....
ஆழ்ந்த மனத்துயரில் இருக்கும்போதெல்லாம் அறியாமல் என் மனது பாடும் பாடல் இது... இப்பாடலைப் பாடும் போது மனம் இலகுவாகி நான் துயரங்களிலிருந்து எளிதில் வெளிவருவேன்.... மிக அருமையான பாடல்.
பாடல் தொண்ணூற்று ஆறு
கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே
விளக்கம் : மென்மையானவளை, அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறப் பேரழகியை, குற்றமில்லாதவளை, எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்டவளை, சகல கலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை, எங்கள் அபிராமியை தம்மால் இயன்ற அளவுக்குத் தொழுபவர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு பெறுவார்கள்...
ஆலயம் சென்று அன்னையை வணங்கும் போது கண்ணீர் மல்கி, கரங்கள் கூப்பி, சிரங்குனிந்து தொழுதிடல் வேண்டும்.. ஆனால் இன்றைய கலாச்சாரமோ ஆலயத்திற்கு வெளியில் நின்று (சிலர் நிற்பது கூட இல்லை) ஒரு கையை மட்டும் தூக்கி வணங்கி விட்டு செல்கின்றனர்... இது முறையல்ல.. தம்மால் இயன்ற அளவுக்குத் தொழ வேண்டும்... அதனால்தான் பெரியோர்கள் தரையில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்குகின்றனர்... அப்படி அவளைத் தொழுவோர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு பெறுவார்கள்... இது அபிராமிப் பட்டர் வாக்கு... இன்னோர் பொருளும் கொள்ளலாம்.  அதை இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் உரைத்த கதை ஒன்றின் மூலம் விளக்குகின்றேன்.... பக்தியிற் சிறந்தவர் யாரென ஒருமுறை நாரதர் திருமாலிடம் வினவினார்.. ஓர் ஏழைக் குடியானவனைக் காண்பித்து "இவனே என் பரம பக்தன்" என உரைத்தார் திருமால். "அல்லும் பகலும் இடையறாது "நாராயணா" என உன் திருநாமத்தைச் செப்பும் என்னை விட இந்த ஏழைக் குடியானவன் எவ்வகையில் உயர்த்தியானவன்?" என நாரதர் வினவ...திருமால் புன்னகை பூத்தவாறே "நீ சென்று அவனது அன்றாட நடவடிக்கைகளை ஒரு நாள் மட்டும் கவனித்து வா" என்று அனுப்பி வைத்தார். நாரதரும் சென்று கவனித்தார். அக்குடியானவன் காலையில் எழுந்தான் "ஸ்ரீ ஹரி" என்றான்.. தனது காலைக் கடன்களை முடித்தான்.. கலப்பையை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றான். வழக்கம்போல் வேலைகளைச் செய்தான்.. மாலை இல்லம் திரும்பினான்.. குளித்தான். தன் மனைவி மக்களோடு உரையாடினான். ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்தான். இரவு படுக்கையில் படுக்கச் சென்றான். "ஸ்ரீ ஹரி" என்றான். உறங்கிவிட்டான்.. இது நாரதர் கவனித்த தினத்தில் நிகழ்ந்தது. திருமாலிடம் திரும்பிய நாரதர் இதை உரைத்தார். திருமாலும் சிரித்தவாறே "இன்றல்ல நாரதா. என்றுமே அவனது வழக்கமான செயல்கள் இவைதான்" என்றுரைத்தார்.. "பின்னர் எப்படி அவனைத் தங்களது பரமபக்தன் என்று உரைத்தீர்கள்?" என நாரதர் வினவ...பகவான் நாரதன் கையில் ஒரு எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தைக் கொடுத்து "நாரதா. இந்த பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இதில் உள்ள எண்ணெய் ஒரு சொட்டளவும் சிந்தாமல் இந்த வைகுண்டத்தை ஒரு முறை சுற்றி வா. பிறகு பதிலுரைக்கிறேன்" என்றார். நாரதரும் சுற்றி வந்தார். "பாருங்கள் பகவானே.. ஒரு சொட்டளவும் சிந்தவில்லை.. தங்கள்  ஆணையை அப்படியே நிறைவேற்றி விட்டேன். இப்போது சொல்லுங்கள் யார் பக்தியில் சிறந்தவரென்று?" என பகவானிடம் வினவினார் ..பகவான் "நாரதா.. இந்த வைகுண்டத்தைச் சுற்றி வருகையில் எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை முறை என் நாமத்தை உரைத்தாய்?" என பதிலுக்கு ஒரு வினாவை எழுப்பினார் "அதெப்படி... என் கவனமெல்லாம் இந்த எண்ணெய் துளியளவும் சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது.. ஒரு முறை கூட தங்களை நினைக்கவில்லை.. அதெப்படி நினைக்க இயலும்? என் கவனம் உங்கள் மேல் வந்து விட்டால் நான் பரவசமாகி விடுவேன். எண்ணெய் சிந்தியிருக்குமே?" என்று நாரதர் பதிலுரைக்க... "இந்த சிறு பாத்திரத்தைச் சிந்தாமல் சுமக்கும் வேளையில் ஒரு முறை கூட நீ என்னை நினைக்கவில்லை...ஒரு முறை கூட என் திருநாமத்தைச் செப்பவில்லை.  ஆனால் அவனைப் பார்.. ஏழை... அவனுக்குச் சுமைகள் பல... குழந்தைகள் பல... ஆயினும் காலை எழுந்தவுடன் ஒரு முறை... இரவில் உறங்குமுன் ஒருமுறை ... என நாளொன்றுக்கு இருமுறை என் திருநாமத்தையுரைத்து என்னை நினைக்கின்றானல்லவா? தனது இல்வாழ்க்கையெனும் பாத்திரத்தையும் அவன் ஏந்தி வந்த பொழுதும் அவனது கவனங்களெல்லாம் மனைவி, குழந்தைகள் என்றிருந்த போதும் தினமும் மறவாது என் நாமத்தை உரைக்கின்றானே...அவனல்லவா என் பரமபக்தன்" என சிரித்தவாறே உரைத்த திருமாலைக் கண்டு நாணிக் கொண்டே வெளியேறினார் நாரதர்..
நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையைத் தொழவேண்டும். உலகின் பந்தங்களில் கட்டுண்டோம்.. சுமைகள் சுமக்கின்றோம்... அந்நிலையிலும், நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையின் நினைவில் நிற்க வேண்டும்.. அவளைத் தொழுதிடல் வேண்டும்... இவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்குத் தொழும் அடியவர்கள் ஏழுலகிற்கும் அதிபர்கள் ஆவர்...
"கோமளவல்லியை " மென்மையானவளை..."அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமளவல்லியை " அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறத்தவளை... கற்பனையில் அன்னையின் திருவுருவைக் கண்டு மகிழுங்கள்... "ஏதம் இலாளை" குற்றங்குறைகள் இல்லாதவளை... "எழுதரிய சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை" எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்ட சகலகலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை... எங்கள் அபிராமி அன்னையை... "தம்மால் ஆமளவும் தொழுவார்" தங்களால் இயன்ற அளவுக்குத் தொழுகின்ற அடியவர்கள்.. "எழு பாருக்கும் ஆதிபரே" ஏழுலகையும் ஆளும் அதிபர்கள் ஆவார்கள்.. ஏழுலகும் அவர்கட்குச் சொந்தமாகும்...
அன்னையின் வழிபடுதலால் ஏற்படும் பயனைச் சொல்லும் பாடல் இது... இப்பாடலைத் தொடர்ந்து பாடி வந்தால் சென்றவிடத்தெல்லாம் வெற்றி பெறலாம் எனப் பெரியோர்கள் உரைப்பார்கள்...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம் நன்றி...

கருத்துகள் இல்லை: