திங்கள், மார்ச் 28, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

காட்டழகிய சிங்கபெருமாளின் ஆசியைப் பெற்று விட்டு ஆலயத்தை விட்டு வெளியே
வந்தோம். அங்கிருந்து பேருந்தில் உறையூர் புறப்பட்டுச் சென்றோம். முதல்
நாள் திருவரங்கத்தானை ரங்கநாயகி நாச்சியார் உள்ளே விட மறுத்த காரணம் அவன்
இந்த உறையூர் வந்து தாமதமாக சென்றதால்தான்... உறையூர் நம் சோழர்களின்
தலைநகரமாக விளங்கியது அல்லவா? நரைதரித்து உரைசொன்ன கரிகால சோழனின்
தலைநகரமும் இந்த உறையூர் அல்லவா? (சோழர்களின் அரண்மனை இங்கு
காணக்கிடைக்கின்றதா? நாங்கள் ஆலயத்தைத் தரிசித்து விட்டு தொடர் வண்டி
நிலையத்துக்கு உடனே சென்று விட்டதால், இதைப் பற்றி யாரிடமும் கேட்க
இயலவில்லை)

ஆலயத்தைப் பற்றி நண்பன் விஜயராகவன் சொன்ன வரலாறு. சோழ மன்னனின் மகள்
கமலவல்லி நாச்சியார் திருவரங்கத்தான் மீது காதல் கொண்டாள். அவனை
அடைவதற்குரிய விரதங்களை மேற்கொண்டாள். எனவே திருவரங்கத்தான் தானே
எழுந்தருளி கமலவல்லித் தாயாரை மணமுடித்தான். வருடத்திற்கொருமுறை இந்த
பங்குனி உத்திரத்திருவிழாவின் போது திருவரங்கத்தான் அங்கிருந்து இங்கு
வந்து கமலவல்லித் தாயாருடன் இணைந்து பக்தர்களுக்கருள்கின்றான். இங்கு
எழுந்தருளி இருக்கையில் நம்பெருமாளுக்கு திருவரங்கத்து பங்குனி உத்திரத்
திருவிழா நினைவுக்கு வருகின்றது.. எனவே இங்கிருந்து புறப்பட்டுச்
செல்கின்றான். ஆனால் ரங்கநாயகி நாச்சியார் ஊடல் கொள்கின்றாள்.. இதைத்தான்
நாம் நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோமே...

இதனை விஜயராகவன் சொல்லிக் கொண்டிருக்கையில், நண்பன் விக்ரம் பாபு "பாரு
நாகராஜ். இந்தாளு போற இடத்துல எல்லாம் ஒரு பொண்டாட்டி கட்டிட்டிருந்தா,
அந்த அம்மாவுக்கு கோபம் வராம என்ன செய்யும்" என்றான். நகைத்தோம்.
அப்போது இன்னொரு செய்தியும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. நம் திருவரங்கத்து
பெருமாளை முஸ்லீம் அரசர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அந்த
முஸ்லீம் மன்னனின் மகளும் திருவரங்கத்தான் மீது காதல் கொண்டாள். அவளையும்
மணந்தான். அவளையே "துலுக்க நாச்சியார்" என்று அழைக்கின்றார்கள்..

இதற்குள் ஆலயம் வந்து விட்டது. மூட்டைமுடிச்சுகளை  பத்திரமாக வைத்து
விட்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்தோம். கொடிமரத்தை வணங்கி விட்டு இடப்புறமாக
உள்ளே சென்றால், நம்மாழ்வார் சன்னதி... "உங்க ஊர்க்காரர்தாம்பா..
பாத்துக்கோ" என்று விஜயராகவன் நகைத்தான். ஆழ்வார்களில் நம்மாழ்வாருக்குத்
தனி இடம்.. அத்தனை ஆழ்வார்களும் ஊர் ஊராகத் தேடிச்சென்று பாடினார்கள்..
ஆனால் எல்லா ஊரின் பெருமாள்களும் நம்மாழ்வாரைத் தேடிச்சென்று பாடல்
பெற்றார்கள்.. நம் ஊருக்கு மிக அருகிலேயே இவரது திருத்தலம் இருந்தும்,
விஜயராகவன் அழைத்துச் செல்லும் வரை அந்த பகுதிகளையெல்லாம் தரிசிக்காமல்
இருந்தது நான் செய்த பிழை என்று நொந்து கொண்டேன்.

நமது தாமிரபரணிக்கும் பெருமை இருக்கின்றது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத்
தொகுத்த நாதமுனிகள் தாமிரபரணிக் கரையில் தவமிருந்துதான் நம்மாழ்வாரின்
தரிசனம் பெற்றார். நம்மாழ்வார் மூலமாகத்தான் நாலாயிரம் பாடல்களும்
மீண்டும் கிடைக்கப் பெற்றன..

நம்மாழ்வார் சன்னதி சென்றோம். சுவற்றில் அழகிய படங்கள்
வரையப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிலரின் பெயர்களும் அவர்களின் காதலர்களின்
பெயர்களும் கிறுக்கப்பட்டிருந்தது வேதனை அளித்தது.. படங்களை விஜயராகவன்
புகைப்படம் எடுத்தபோது தடுக்கப் பட்டான். தடுத்தவர் சென்ற பின் "நான்
போட்டோ எடுக்குறப்போ வந்து தடுக்கறான்.. இந்த மாதிரி
கிறுக்கிட்டிருந்தப்போ என்ன பண்ணிட்டிருந்தானாம்?" என்று ஆவேசப்பட்டான்
விஜயராகவன்....

நம்மாழ்வாரை வணங்கி விடைபெற்றோம். அடுத்ததாக திருப்பாணாழ்வார் சன்னதி
இருந்தது. திருப்பாணாழ்வார் பற்றி விஜய் ஆனந்த் சொல்ல ஆரம்பித்தார்.
"நாகராஜ் பாருங்கோ. இவர் பிராமணாள் இல்ல... ஆனாலும் ஸ்ரீரங்கன் மீது அளவு
கடந்த பக்தி வச்சிருந்தார். " என்று திருப்பாணாழ்வார் பற்றி உரைத்தார்.
திருப்பாணாழ்வார் தன்னோட கால் ஸ்ரீரங்கம் மண் மேல பட்டுவிடக்கூடாது
என்பதற்காக காவேரியின் இக்கரையில் நின்றே வணங்குவார். திருவரங்கனுக்கு
பூஜை செய்யும் ஒரு பட்டர் காவேரியில் நீர் எடுத்துக் கொண்டு செல்கையில்
திருப்பாணாழ்வார் மனமுருகி பாடிக் கொண்டிருந்தார். அவரை நகர்ந்து
செல்லுமாறு இவர் சொல்ல, பக்திப் பரவசத்தில் மூழ்கியிருந்த
திருப்பாணாழ்வாருக்கு இவர் உரைத்தது கேட்கவில்லை. எனவே அவர் நகரவில்லை.
எனவே ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார் பட்டர். அவரது
நெற்றியிலிருந்து இரத்தம் பொங்கியது. சுயநினைவுக்கு வந்த
திருப்பாணாழ்வார் வருந்தி வழிவிட்டார்..

தன் பக்தனைக் கல்லால் அடித்தவன் தனக்கு அமுது செய்ய வந்தால் அதைக் கட்டு
நம் திருவரங்கத்தான் பொறுப்பானா? ஆலயம் சென்ற பட்டருக்கு அதிர்ச்சி
காத்திருந்தது. அங்கே திருவரங்கத்தானின் நெற்றியிலிருந்தும் இரத்தம்
வழிந்து கொண்டிருந்தது.. கண்ணன் ஆவேசமாய் இன்னொரு அந்தணர் மேல்
இறங்கினான். தன் பக்தன் திருப்பாணாழ்வாரைக் கொண்டு வந்தால்தான் துளசி
தீர்த்தமாவது உட்கொள்வேன் என்றுரைத்தான்.. கல்லால் அடித்த பட்டர்
ஓடினார்... திருப்பாணாழ்வாரை அழைத்த போது அவரோ "எனது கால்கள்
திருவரங்கத்து மண்ணில் படலாமா? நான் சூத்திரனாயிற்றே எனப் புலம்ப, அவரைத்
தன் தோள் மீது இருத்தி சுமந்து வந்தாராம் பட்டர்... திருப்பாணாழ்வார்
தரிசனம் செய்த பின்னரே திருவமுது உண்டானாம் திருவரங்கத்தான்... என்னே
உனது எளிமை கண்ணா... எளியோர்க்கு எளியோனாய் இரங்குகின்றாய்...எளியோரின்
பக்திப் பெருமையை உலகறியச் செய்கின்றாய்... எங்கள் திருவரங்கத்தம்மாவே
உன் கருணையே கருணை....

திருப்பாணாழ்வாரை வணங்கி வெளி வந்த போது மூலவர் சன்னதி இன்னமும்
திறந்திருக்க வில்லை.. எனவே தெப்பக்குளத்தருகே காத்திருந்தோம்.
இச்சமயத்தில் விஜயராகவனும், விஜய் ஆனந்தும் தங்கள் சந்தியாவந்தனத்தை அந்த
தெப்பத்திலேயே செய்தனர். நாங்கள் குழந்தையுடன் விளையாடிக்
கொண்டிருந்தோம். அவர்கள் சந்தியாவந்தனம் செய்து முடித்து வந்தார்கள்..
சற்று நேரத்துக்கெல்லாம் நடை திறக்கப் பட்டு விட்டது.

மூலவர் சன்னதிக்குள் நுழைந்தோம். ஆஹா... என்ன ஒரு அழகு... இவர் அழகைக்
கண்டுதான் இவருக்கு அழகிய மணவாளர் என்று பெயரிட்டார்களோ? நின்ற
திருக்கோலத்தில் அழகிய மணவாளரும், நின்ற திருக்கோலத்தில் கமலவல்லித்
தாயாரும்... இருவரும் நின்று திருக்கோலம் காண்பிப்பதை இப்போதுதான்
முதன்முறையாகக் காண்கின்றேன்.. பக்தியில் மெய்மறந்து கை கூப்பி வணங்கி
நின்றோம். அழகிய மணவாளனே, கமலவல்லித் தாயாரே எங்கள் வாழ்க்கையையும் எந்த
இடரும் வராமல் காத்தருள வேண்டும் என்று வேண்டி விடைபெற்றோம். அப்படியே
பிரகாரம் சுற்றி வந்து சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறினோம்.. மீண்டும்
ஒருமுறை நம்மாழ்வார் சன்னதி சென்று வணங்கி விடைபெற்றோம்.

உறையூர் கமலவல்லித் தாயார், அழகிய மணவாளரைத் தரிசத்தமையுடன் எங்கள்
திருவரங்கச்செலவு நிறைவு பெற்றது. அங்கிருந்து புறப்பட்டு
திருச்சிராப்பள்ளி தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தோம்..கதைகள் பேசிக்
கொண்டு தொடர்வண்டிக்காகக் காத்திருந்தோம்...

நண்பன் விஜயராகவன் கேட்டான்.. "என்ன நாகராஜன்.. திருப்திதானே..? ஒரு
குறையுமில்லையே...?"

என்னதான் பதில் சொல்வது... ? யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு?
யாருக்குக் கிடைத்திருக்கும் இப்படி ஒரு நட்பு? தாம் அறிந்தவற்றை
அறியாதோருக்கும் பகிர்பவனே அந்தணன் என்று கற்றோம்.. ஆனால் வெளி உலகில்
நாம் கண்ட அந்தணர்களுள் அப்படிப்பட்டவர்களைக் கண்டதே இல்லை.... வெகு
சிலரைத் தவிர.. ஆனால் என் நண்பனோ..... நான் கண்ட அந்தணர்களில் உயர்ந்து
நின்றான்... திருமால் பக்திக்கு என் மனத்தில் அடித்தளம் இட்டதும் அவனே...
எங்கள் ஊருக்கு அருகிலுள்ள நவதிருப்பதி திவ்யதேசங்களுக்கு என்னை
அழைத்துச் சென்றதும் அவனே... இப்படிப்பட்ட நண்பன், எனக்காகத் தன் படிப்பு
வேலைகளையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு திருவரங்கம் வந்து
திவ்யதேசங்களைக் காட்டி விட்டு என்ன குறையுளது என்று கேட்டால் என்ன
இயம்புவது???

என் மனத்தில் எழுந்த ஒற்றை வரியை உதிர்த்தேன்... "உலகுக்கு இராமானுஜன்..
எனக்கு விஜயராகவன்..."

தடுத்தான்... "என்னைப் போய்  அவரோடல்லாம் ஒப்பிடலாமா?? அவர் தகுதிக்கு
முன்னாடி நானெல்லாம் எதுவுமே இல்ல..." என்று அவன் மறுத்தாலும், நான்
சமுதாயப் புரட்சி செய்த அந்த இராமானுசனை என் நண்பனுள் கண்டு களித்தேன்...
தனக்குக் குரு உபதேசித்தவற்றைத் தான் நரகுக்குப் போனாலும் பரவாயில்லை
என்று உலகத்து மாந்தருக்கு உரைத்த இராமானுசனாகத்தான் விஜயராகவன்
தென்பட்டான்.... அவனுக்கு இந்த ஒற்றை வார்த்தைகளை விடுத்து இந்த
ஏழைக்கவியால் என்னதான் செய்திட இயலும்??? கோடானு கோடி ஜென்மங்கள் எடுத்து
தீர்த்தாலும், அவன் செய்த உதவிக்கு நன்றி பகர்ந்திட இயலுமா??

வார்த்தைகள் வர மறுக்கின்றன... நன்றி என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லி என்
நட்பினை சமாதானம் செய்திட இயலுமோ?? அந்த பள்ளி கொண்டானை... எங்கள்
திருவரங்கத்தம்மானை... ஏழையின் கவிகட்கிரங்கியவனை.... எங்கள் நண்பர்கள்
நலமுடன் வாழப் பிரார்த்தித்து விடை பெற்றோம்.. தொடர் வண்டி வந்தது... ஏறி
அமர்ந்தோம்......... பிரியா விடை பெற்றோம்....

நாராயணனை... நம்பினோர்க்கும், நல்லோர்க்கும் அருள் புரியும் உத்தமனை...
அண்டமெல்லாம் காக்கும் அரங்கனை... எங்கள் பெருமானை.... கூடாரை வெல்லும்
கோவிந்தனை.... வங்கக் கடல் கடைந்த மாதவனை... கேளிக்கைகள் செய்து
மகிழ்விக்கும் கேசவனை... செந்தமிழ்ப்பாசுரங்கள் போற்றும் செந்தாமரைக்
கண்ணனை... உலகத்தோர் அனைவருக்கும் நன்மை புரிய வேண்டி தங்களிடமிருந்தும்
விடைபெறுகின்றோம்...

பொறுமையாக படித்து மகிழ்ந்த அன்பர்களுக்கு நன்றி....
நமோ நாராயணாய... நமோ நாராயணாய... நமோ நாராயணாய....

சனி, மார்ச் 26, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

நண்பர்கள் வந்தார்கள். தாங்கள் சென்ற திருத்தலங்களின் பெருமைகளைக் கூற
ஆரம்பித்தார்கள். திருஅன்பில் திவ்ய தேசத்தில் அபிஷேகமும் காணப் பெற்ற
பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. கரிகால சோழன் கட்டிய
கல்லணையைக் கண்டு புகைப்படம் எடுத்து வந்திருந்தார்கள். கண்டு
மகிழ்ந்தோம். கோவிலடி அப்பாலரங்கனையும், திருஅன்பில் சுந்தர ராஜனையும்
காணும் பேறு எங்களுக்கு வாய்க்கவில்லையே என்று எண்ணிக் கவலையுற்றோம்.
ஆயினும் எங்கள் நண்பர்கள் எங்களுக்காகவும் வேண்டி வந்த மகிழ்ச்சி...
நண்பர்கள் சற்று இளைப்பாறினார்கள்.

மாலை நான்கு மணிக்கு அறையிலிருந்து புறப்பட்டோம். ஓர் ஆட்டோவில்
அருகிலிருந்த திருவானைக்காவலில் (திருவானைக்கா, திருவானைக் கோவில்,
T.V.கோவில்) உள்ள காட்டழகிய சிங்க பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.
ஆலயத்தின் பெயரே மூலவர் யாரென்பதை உணர்த்துகின்றது அல்லவா? ஆம்.
இவ்வாலயத்தில் பெருமாள் லெட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகின்றார் என்று
சொல்லி அழைத்துச் சென்றான் விஜயராகவன். சற்றே கொளுத்தும் வெயிலில் உள்ளே
நடந்து சென்றோம். இச்சமயத்தில் தாங்கள் வழிபடும் ஆலயத்தைப் பற்றிச் சொல்ல
ஆரம்பித்தான் விஜயராகவன்.

அவர்கள் தங்களின் குடும்ப ஆலயமாக வழிபட்டுக் கொண்டு வரும் தலம் அஹோபிலம்.
இத்தலம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.. பெருமாள் நரசிம்ம அவதாரம்
எடுத்து இரணியனை அழித்த தலம் இதுதான். அங்கே பெருமாள் தோன்றிய தூண்
உள்ளதாம். அதைப் பற்றிக் கேட்கையிலேயே எமக்கு அங்கே சென்று நரசிம்மரைக்
காண வேண்டும் என்ற ஆவல் உண்டானது. "ஒருமுறையாவது அழைத்துச் செல் நண்பா"
என்று கேட்டுக் கொண்டேன். நிச்சயம் அழைத்துச் செல்வதாகக் கூறினான்.
நண்பன் விக்ரம் "அங்கே பெண்கள் எல்லாம் செல்லக் கூடாது " என்று சொல்ல அதை
மறுத்த விஜயராகவன் "அப்படியெல்லாம் இல்லை. எல்லோரும் செல்லலாம். ஆனால்
மலையில் ஏறிச் செல்ல வேண்டும். எங்க மன்னி அங்கே போய்ட்டு வந்த
பின்னாடிதான் அவ கர்ப்பமா இருக்கறதே கன்பார்ம் ஆச்சு.. அந்த நிலையிலயும்
அவளே ஏறி இறங்கிட்டா...எல்லோரும் போகலாம்" என்று சொன்னான்.

இந்நிலையில் நமக்கு ஒரு ஐயம் எழுந்தது.. இரணியன், பிரகலாதன் இவர்களது
இடம் ஆந்திராவென்றால் அவர்களது வம்சாவழியான மகாபலியின் இடமும் அங்கேயே
அல்லவா இருக்க வேண்டும். ஏன் கேரளாவில் உள்ளது...? மனத்தில் உள்ள வினாவை
சிறுவனைப் போல் கேட்டுவிட்டேன். "அப்படியில்லை நண்பா.. அந்த காலத்தில்
அனைத்தும் ஒரே இடமாகத்தான் இருந்தது" என்று சொல்லி பெருமாளின்
பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தான் விஜயராகவன்.. பெருமாள் நரசிம்ம அவதாரம்
எடுத்து இரணியனை வதைத்த பின்னர் பிரகலாதனுக்கு ஓர் வாக்குக் கொடுத்தார்.
உன் பரம்பரையில் இனி யாரையும் நான் கொல்வதில்லை என்று.. இச்சமயத்தில்
நமக்கு கம்பனின் கவிதை நினைவுக்கு வந்தது...
"கொல்லேன் இனி உன் குலத்தோரை குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்
நல்லேன் உனக்கு என்னை நாணாமல் நான் செய்வது
ஒல்லை உளதேல் இயம்புதியால்" என உரைத்தான்
என்று நரசிம்மம் சொல்வதாகக் கம்பன் பாடுவானில்லையா... அப்பாடல்
நினைவுக்கு வந்தது... பக்தன் ஒருவனுக்காக அவன் பரம்பரையையே மன்னித்த
குணமுடையோனைக் காணும் ஆவலில் உள்ளே நுழைந்தோம். பிரகலாதனின்
நற்குணத்தாலும் பக்தியாலும்தான் மகாபலியை இறைவன் கொல்லவில்லை.. அவனை
பாதாள லோகம் அனுப்பினார் என்று விஜயராகவன் சொல்லிக் கொண்டு வந்தான்.

உள்ளே நுழைந்தோம். நடை சாற்றப் பட்டிருந்தது. எங்கள் மூட்டை முடிச்சுகளை
ஓரமாக வைத்து விட்டு பிரகாரம் சுற்றி வரலாம் என்று வெளியே வந்தோம்.
வருகையில் ஒரு அன்பர் எதிர்ப்பட்டார். அவரிடம் ஆலயத்தைப் பற்றி
விசாரித்தோம். "ஐயா.. இந்தக் கோயிலக் கண்டு எல்லோரும்
பயங்கொண்டிருந்தாங்க... நான் கூட இதோ பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில
தான் படித்தேன். அப்பல்லாம் நாங்க இங்க வருவதற்கே பயப்படுவோம்.
நரசிம்மர்னா அவ்ளோ உக்ரம் என்ற எண்ணம் இருந்தது. பின்னர்தான் அவர்க்
கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம் என்பதை பக்தர்கள் புரிந்து
கொண்டார்கள்" என்று சொல்லி மேலும் சொல்ல ஆரம்பித்தார். பக்தர்களின்
அனுபவங்களால்தான் இந்த ஆலயத்தின் சிறப்பு வெளியே பரவ ஆரம்பித்தது
என்றுரைத்தார்.

"எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்து விட்டார்.
இருந்த அனைத்தையும் இழந்து விட்டு வாழ வழியில்லாமல் தற்கொலை செய்யலாம்
என்று முடிவெடுத்து விட்டு இந்தக் கோயிலுக்கு வந்தார். சாமியை வணங்கி
விட்டு வெளியே போய் தற்கொலை செய்யலாம் என்று வெளியேறியபோது அவரது நண்பர்
அமெரிக்காவில் இருந்து வந்தார். இவர் தனது சோகத்தைச் சொன்னவுடன் அந்த
நண்பர் தனது சொந்தச் செலவில் இவருக்காகத் திருச்சியில் ஒரு கம்பெனி
ஆரம்பித்துக் கொடுத்தார். இன்றைக்கும் இவர் நல்ல நிலையில் உள்ளார்."
என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அது உண்மைதான் என்று உணர்த்தும்
வகையில் கௌலி சத்தமிட்டது.. சொல்லிக் கொண்டிருந்த அன்பர் உணர்ச்சிவசப்
பட்டார் "பாருங்கோ.. நான் சொல்றது உண்மை.. அந்த பெருமாளே சொல்லிட்டார்"
என்று உணர்ச்சி பொங்க பேசிய காட்சி இன்னமும் கண்களை விட்டு அகலவில்லை..
மேலும் அவர் "குருக்கள் வந்து நடையைத் திறந்தவுடன் நாம் சென்று தரிசனம்
செய்யக் கூடாது. அவர் விளக்கேற்றிய பின்னர் அழைப்பார். பின்னர்தான் செல்ல
வேண்டும்" என்று கூறினார்.

வெளியே பிரகாரம் சுற்றும்போது அங்கே ஒன்பது துளசிமாடங்கள்
வைத்திருந்தார்கள். "அது என்ன விஜய்..? நவக்கிரகங்களுக்காகவா?" என்று
நான் கேட்டபோது "எனக்குத் தெரியாது நண்பா" என்று சொல்லிவிட்டான். உடன்
வந்திருந்த ஆனந்த்.. "பாருங்கோ நாகராஜ். பெருமாளை சேவிச்சிண்டா சனி
தோசமெல்லாம் ஓடியே போயிடும் தெரியுமோல்லியோ?" என்று சொல்ல, "நமது
தோசங்களும் நீங்க வேண்டும் பெருமாளே" என்று வணங்கிக் கொண்டே அந்த ஒன்பது
துளசி மாடங்களையும் சுற்றி வந்தோம். அப்படியே ஆலயத்தைச் சுற்றி மீண்டும்
உள்ளே நுழைந்து அமர்ந்தோம். ஆலய சுவற்றில் நரசிம்மரின் பல்வேறு படங்கள்
வரையப் பட்டிருந்தன.. அப்போது அவற்றைப் பற்றி விஜயராகவன் சொல்லிக்
கொண்டிருந்தான்.
கோபத்தில், உக்கிரத்தின் உச்சியில், பக்தர்களைப் பாடாய்ப் படுத்தும்
இரணியனை வதைக்க நரசிம்மம் வெளியே வந்தது முதல், இரணியனை அழித்தது, சாந்தி
அடைந்தது, அன்னை மகாலெட்சுமியைத் தன் மடியில் இருத்தியது, பிரகலாதனை
அன்போடு நோக்கியது போன்றவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறினான்...நமக்கோ
கம்பன் தன் பாடல்களால் நரசிம்மத்தை விளக்கியதை நேரில் கண்டது போல்
இருந்தது.. இதற்கு முன்னால் நரசிம்மரின் இத்தனை படங்களை நான் கண்டதே
இல்லை..

"நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும்
ஆக்கையும் தாளும் ஆகி எங்கனும் தானே ஆகி
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா
மேக்கு உயர் சீயம் தன்னைக் கண்டனர் வெருவுகின்றார்" என்று நரசிம்மத்தைக்
கண்டவர்கள் அனைவரும் அஞ்சியதாகக் கம்பன் பாடியது செவிகளில் ஒலித்தது..

பக்தன் என்றால் அது பிரகலாதனை மட்டுமே அல்லவா குறிக்கும்? சிறுவயதில்
அத்தனை பக்தியை அத்தனை நம்பிக்கையை இறைவன் மேல் வைக்க பிரகலாதனையன்றி
யாரால் இயலும்? உலகமே இரணியனைக் கண்டு அஞ்சி அவனை வணங்குகின்றது. ஆனால்
இந்த சின்னஞ்சிறு பாலகன் திருமாலேயன்றி வேறொரு தெய்வம் இல்லை என்று
எத்தனைத் தீர்மானமாக இருந்தான்..பக்தி என்றால் அது பக்தி...திருமாலைத்
தெய்வம் என்று கொண்டாடுவதன் மூலம் தன்னையும், தன் குலத்தையும் பாதுகாத்த
பெருமை கொண்டவனல்லவா?

"என்னை உய்வித்தேன். எந்தையை உய்வித்தேன், நினைய
உன்னை உய்வித்து, இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி"என்றான்
என்று பிரகலாதன் தனது குருநாதரை நோக்கி வினவுவதாகக் கம்பன் பாடுவானில்லையா?

குரு என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டும். அதை அப்படியே பின்பற்ற
வேண்டும். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" எனவே தந்தையார் என்ன
சொன்னாலும் அதைத் தட்டாது செய்வது தனயனின் கடமை.. ஆனால் குரு சொன்னது
"உனது தந்தையே இறைவன்" தந்தை சொன்னது "நாராயணனை வணங்காதே" ஆனால் இந்த இரு
கூற்றுக்களையும் எதிர்த்து நாராயணனே உலகின் கடவுள். அவனையன்றி வேறுயாரும்
தெய்வமாக முடியாது.. நமோ நாராயணாய எனும் பதமே உலகை உய்விக்கும் பதமென்று
பாடிய பிரகலாதனின் பாடல் செவிகளில் ஒலித்தது..

"காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடு உறச்செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய"
பக்தர்களின் தலைவா பிரகலாதா... தங்களின் பக்தியில் கோடியில்
ஒருபங்கையாவது எங்களுக்குத் தந்து உதவக் கூடாதா? நாங்களும் உங்களோடு
பக்தர் கூட்டத்தில் இணைவோமே... நமோ நாராயணாய... நமோ நாராயணாய... மனம்
பிரகலாதனின் பக்தியை எண்ணி பரவசத்தைத் தேடிக் கொண்டிருந்தது...

கதைகள் பேசிக்கொண்டிருந்தோம்.  இச்சமயத்தில் அர்ச்சகர் அழைத்தார்...
மூலவரைக் காண உள்ளே சென்றோம்...

ஆஹா... என்ன பாக்கியம் செய்து விட்டேன் இத்திருக்கோலத்தைக் காண...
உக்கிரம் தணிந்த வேளையில் அன்பு பொங்குமல்லவா?? அந்த அன்போடு நாவை மேலே
நோக்கி நீட்டி தன் மடியில் லெட்சுமியை இருத்தியிருந்தார்... நரசிம்மரின்
கோபந்தணிந்த திருக்கோலம்.. அன்பு பெருக்கெடுத்த திருக்கோலம்... பக்தனை
மீட்ட பெருமிதத்தில் பக்தர்களுக்கருள் புரியும் திருக்கோலம். உன்
வேதனைகள் அனைத்தையும் நீக்கிவிட்டேன் அன்பா... இரணியனின் கோலம் அழிந்தது
போல் உன் வேதனைகளும் அழிந்து போயின என்று சொல்லும் திருக்கோலம்.. இதோ என்
மனையாள் என் தொடையில் இருப்பதால் என்னுள் பொங்கும் அன்பைக் காண் என்று
சொல்லும் திருக்கோலம்... அப்பப்பா.... காட்டழகிய சிங்க பெருமாளின்
தரிசனத்துக்குக் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்....

"செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தா விளக்கை நறுந்தாள் இளங்கொழுந்தை
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பொன்று இல்லாதான்"
தனது சினந்தணிய தன்னை நோக்கி வந்து தன் மடியில் இருந்த லெட்சுமியை
நரசிம்மனார் அளவற்ற அன்போடு நோக்கியதைக் கம்பன் பாடியது நினைவுக்கு
வந்தது.... மகளின் நோய் தீர்க்க வேண்டி நின்றோம்..

ஏற்கெனவே விஜயராகவன் சொல்லியிருந்தான்.. "தாயாருடன் பெருமாள்
இருக்கும்போது அவர் கிட்ட என்ன கேட்டாலும் கொடுத்துடுவார்... ஏன்னா
தாயாரின் அன்பு அவருக்கும் இருக்கும்.. தாயாரின் முன் நல்லது செய்வதைத்
தான் அவரும் விரும்புவார்" என்று.....

அத்தனை நோய்களும் தொலைந்தன... அத்தனை தொல்லைகளும் விட்டொழிந்தன... என்னை
உன் மனத்தில் இருத்திப் போய்வா என்றுரைப்பது போலிருந்தது காட்டழகிய சிங்க
பெருமாளின் திருக்கோலம்...  கண்ணீர் மல்கி ஆனந்தத்துடன் வெளியே வந்தோம்..

மீண்டும் பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கே நாகர்களின் சிலைகள் இருந்தன..
அப்படியே வந்து சக்கரத்தாழ்வாரை வணங்கி வந்தோம். ஒரு தூணில் காட்சியளித்த
வீர ஆஞ்சனேயரை தரிசித்தோம். நெஞ்சில் நீங்காத நினைவுகளுடன் ஆலயத்தை
விட்டு வெளியே வந்தோம்... அடுத்த திவ்ய தேசம் உறையூர்.... அதைப் பற்றி
அடுத்த மடலில்...காட்டழகிய சிங்கனே கற்பனைக் கெட்டாத வல்லோனே... கல்லிலும், மண்ணிலும்,
காணும் இடமெல்லாம் காட்சி தரும் இனியோனே.. பக்தர்களைக் காக்கும்
பரந்தாமனே... உலகத்தை உய்வித்து, அனைவருக்கும் நன்னிலை அளிப்பாயாக.....
நமோ நாராயணாய....

வெள்ளி, மார்ச் 25, 2011

செந்தூர் கடலோர நினைவலைகள்...

செந்தூர் கடலோர நினைவலைகள்...

உன்
நனைந்த பாதங்களை
நாணச்செய்த
நாணத்தால்
திரும்பிய கடலலைகள்...

அருகில்
முடி இறக்கிய குழந்தையின்
அழுகையால்
உன் கண்களிலும்...

ஒருவர் மேலொருவர்
மண்ணெறியும் சிறுவர்களைக்
கண்டு
கைகொட்டி சிரித்தாய்...
அப்பாவியாய்
அருகில் நான்....

அன்னாசி பழம் விற்ற
அண்ணாச்சியை
அடிக்கவும் சென்று விட்டாய்..
பழம் சுவையற்ற காரணமா?
ஏக்கத்தோடு பார்த்த
ஏழைச்சிறுமியை
அவர் விரட்டிய காரணமா?

கிளி ஜோசியனைக்
கிலியடையச் செய்யும் கேள்வி...
"கிளிக்கு எப்போது விடுதலை?"
உனக்கு மட்டுமே
தோன்றுமோ
இதுபோன்ற கேள்விகள்..?

வசந்த மண்டபத்தின்
அசுத்தம் கண்டு
அகோரியானாய்...
இன்னமும் உன்னுடன்
பிரகாரம் சுற்ற
பயமாய்த்தான் இருக்கின்றது...

சுடலைமாடன் கதை (5)

தூத்துக்குடி மாவட்டம் ஏரலின் அருகே உள்ள ஊர் ஆறுமுக மங்கலம். இங்குள்ள
சுடலமாடசுவாமி மிகவும் பிரசித்தம். ஓடாத பேய்களையும் ஓடவைப்பதும், தீராத
வினைகளைத் தீர்ப்பதுமாக அவர் அருள்பாலிக்கின்றார். மேலும் செய்வினை என்று
சொல்லக் கூடிய பில்லி சூனிய விவகாரங்களுக்கும் தீர்வு இந்த ஊரில்
கிடைக்கும்.
நம்முடைய ஊர்களில் யாருக்காவது "மகராஜன்" என்று பெயர் வைத்தால் அது
சுடலைமாட சாமியின் பெயர்தான். அவரைத்தான் மகாராஜா என்று அழைப்பார்கள்.
ஆறுமுகமங்கலத்தின் சுடலைமாடனுக்கு ஹைகோர்ட் மகராஜா என்றும் ஓர் பெயர்.
எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்தப் பெயருடனேயே வாழ்கின்றனர். அவருக்கு
ஏன் அந்தப் பெயர் வந்தது.. அது ஒரு வரலாறு..
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் அது..
ஆறுமுகமங்கலத்தைச் சார்ந்த ஒருவனை (பெயர்களெல்லாம் யாருக்கும்
தெரியவில்லை) ஓட ஓட விரட்டிக் கொலை செய்திருக்கின்றார்கள் பகைவர்கள்..
அவனை வெட்டும் போது அவன் தன்னை விட்டு விடும்படி கதறி இருக்கின்றான்..
அவர்களோ மறுத்து அவனை வெட்டினார்கள். "யாருமில்லாத காட்டில் உன்னைக் கொலை
செய்திருக்கின்றோம். எங்களுக்கு எதிராக யார் சாட்சி சொல்வார்கள்?" என்று
கொக்கரித்தார்கள். அவனோ "என்னைக் கொலைசெய்தால் அந்த சுடலைமாடசாமியே
உங்களைப் பழிவாங்குவார். அவர்தான் நீங்கள் என்னை வெட்டியதற்கு சாட்சி"
என்று சொல்லி சரிந்து விழுந்தான்...
கொலை செய்தவர்கள் போய்விட்டார்கள் தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று...
ஆனால் காட்டில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் இதை நேரில் பார்த்து
விட்டான்.. ஆனால் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல சற்றே பயம். ஆனால்
சுடலைமாட சாமியை நம்பி காவல்துறையினரிடம் கொலை செய்தவர்களின் பெயர்களைக்
கொடுத்து விட்டான். அவர்களும் பிடித்து விட்டார்கள்..
நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்றது.
இவன் சாட்சி சொல்லப் போகவேண்டும்..
குற்றவாளிகளின் உறவினர்கள் இவனை அழைத்துச் சென்று அடித்து ஓர் இடத்தில்
கட்டி வைத்து விட்டார்கள்.. சாட்சி வரவில்லை என்றால் வழக்கு தள்ளுபடி
செய்யப் படும் என்று நம்பினார்கள்..
வழக்கு விசாரணைக்கு வந்தது..
நீதிபதி வந்தமர்ந்தார்..
குற்றவாளிகளை விசாரித்தார். மறுத்தார்கள்..
சாட்சியை அழைத்தார்...
சாட்சி வந்தான்... கம்பீரமாக... அவர்களைக் கை காட்டினான்.. கொலையைத் தானே
நேரில் கண்டதாகக் கூறினான்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது...
கட்டிவைக்கப் பட்ட சாட்சி தப்பி ஓடிவந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்னதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்..
ஆனால் கட்டி வைக்கப் பட்டவன் அங்கே அப்படியே கிடந்தான்..
அப்படியானால் வந்து சாட்சி சொன்னது யார்?
அப்போதுதான் இவன் சொன்னான்.. மரிக்கும் போது அவன் சுடலைமாடசாமியே சாட்சி
என்று சொன்னதாக...
நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னது நம் சுடலைமாடசாமியே என்பது தெளிவானது..
எனவே மகாராஜாவை நீதிமன்றத்தின் பெயரால் அழைக்க ஆரம்பித்தார்கள்.. அது
ஹைகோர்ட் அல்ல... ஆனாலும் நம் சுடலைமாடனுக்கு இன்னும் பெருமை சேர்க்க
வேண்டும் என்ற ஆவலிலும், அவன் மேல் கொண்ட பாசத்திலும் "ஹை கோர்ட் மகராஜா"
என்றழைக்க ஆரம்பித்தார்கள்.. அது இன்றும் தொடர்கின்றது...
சுடலைமாடசாமியின் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தேன்.. இன்றுடன்
முடிக்கின்றேன்.. பிழைகளைப் பெரியோர்கள் யாரேனும் காண்பீர்களேயாயின்
பொறுத்தருள்வீர்களாக...
தங்கள் பகுதி சுடலைமாடசாமியின் பெருமைகளை இந்த இழையில் பகிர்ந்து சுவை சேருங்கள்...
நன்றி வணக்கம்..

சுடலைமாடன் கதை (4)

யாரோ ஒரு கிழட்டுப் பண்டாரம் தன் வாசலில் பிச்சை கேட்டு வந்து பின்னர்
தன் மகளைக் கற்பழிக்க நாள் குறித்ததை எண்ணி வேதனையில் ஆழ்ந்தான்
காளிப்பெரும்புலையன். அஞ்சன மையெடுத்து யாரென்று பார்த்தால் அவனால்
எதையும் கண்டு பிடிக்கமுடியவில்லை.. மாந்திரீகத்தில் பெரியவன் என்று
பெயரெடுத்த என்னையே ஒருவன் ஏமாற்ருகிறான் என்றால், நாம் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும் என்று முடிவு செய்து மாவிசக்கிக்கு மந்திரக் காவல்
அமைத்தான்.
ஏழு அறைகளை அடுக்கடுக்காக அமைத்து நடுவறையிலே பெண்ணை அமரச்செய்தான்...
யாரும் அதனை நெருங்க இயலாத வண்ணம் தன் மாந்திரீகத்தால் வளையம்
அமைத்தான்...
ஆனாம் நம் சுடலைமாட சாமியை எந்தக் காவல்தான் தடுத்து நிறுத்தும்?
இரவிலே எறும்பு உருக்கொண்டு மாவிசக்கியின் அறையை அடைந்தார் சுடலைமாட சாமி...
அவள் அறியாமலேயே அவளைக் கற்பழித்தார். வந்த சுவடு இல்லாமல் வெளியேறினார்.
மறுநாள் காலையில் மகளை எழுப்ப வந்த புலக்கொடியாள் மகளில் நிலையக் கண்டு
அதிர்ந்தாள்..
மாவிசக்கியும் கண்ணாடியில் தன் கோலம் கண்டு அழத்துவங்கினாள்.
பெரும்புலையன் அதிர்ந்தான்... தன் மாந்திரீகம் பொய்த்ததை எண்ணி பயந்தான்.
வந்தவன் மிகப்பெரிய ஆள். தன்னால் அவனை எதிர்க்க இயலாது என்பதைப் புரிந்து
கொண்டான்.
ஆயினும் அவன் மனத்தில் வந்தவன் யாரென்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது...
மைபோட்டு பார்த்தான்.. ஏவல் தேவதைகளிடம் கேட்டான்.. யாராலும் சொல்ல முடியவில்லை...
மாவிசக்கி கர்ப்பமானாள்...
இத்தோடு விட்டாரா சுடலைமாடன்?
என் அன்னையின் ஆலயத்தில் புகுந்து திருடியவனைக் குடும்பத்தோடு
பழிதீர்ப்பேன் என்று சபதம் செய்தாரில்லையா? எனவே பெரும்புலையனைக்
குடும்பத்தோடு அழிக்க நாள் பார்த்துக் காத்திருந்தார்.
மாவிசக்கி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்...
ஆலடிப்புதூரிலே காக்காச்சி மலை தாண்டி பளியன்மார்கள் விவசாயம் செய்து
வந்தார்கள்.  அவர்கள் விவசாயம் செய்யும் சோலையை நாசம் செய்தால், புலையன்
நேரில் வருவான். அவனைப் பழிவாங்கலாம் என்று எண்ணிய சுடலைமாட சுவாமி,
பளியன்மார்கள் விவசாயம் செய்து வந்த ஓர் நாள் இரவு சோலைக்குள் புகுந்து
அதனை முற்றிலும் நாசம் செய்தார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த பளியன்மார்கள் அதிர்ச்சியில் புலையனிடம்
ஓடி வந்தார்கள்..
புலையனும் தானே நேரில் வந்து பார்ப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
புலையன் காக்காச்சி மலைக்கு செல்ல இருப்பதை அறிந்த புலக்கொடியாள் அவனைத் தடுத்தாள்.
"போகவேண்டாம் அன்பரே.. நான் பொல்லாத கனவு கண்டேன்." என்று சொன்னாள்.
"யாராலும் என்னை எதுவும் செய்ய இயலாது.. நீ என்னைத் தடுக்காதே" என்று
சொல்லிவிட்டு புலையன் புறப்பட்டுச் சென்றான்..
பளியர்களின் சோலையில் அமர்ந்து மை போட்டு பார்த்த போது அவனால் எதுவும்
கண்டு பிடிக்க முடியவில்லை.பிறகு சுடலைமாடன் தானே அவன் நேரில் பிரசன்னமானார்..
தான் யார் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தினார்.
"என் அன்னையின் ஆலயம் புகுந்து கொள்ளையடித்த பெரும்புலையா.... உன்னை
சந்திக்கவே நேரம் காத்திருந்தேன்..:" என்று அவன் கையிலிருந்த திரு
நீற்றுத் தாம்பூலத்தைப் பிடுங்கி அவன் சென்னியில் ஒரே அடி.
நடுங்கிப்போனான் காளிப்புலையன்.
"ஐயா உன் பலம் அறியாது உன் காவலில் இருந்த திரவியங்களைக் கொள்ளை கொண்டு
வந்து விட்டேன். என்னை மன்னித்து விடு... நாம் பங்காளிகளாக இருப்போம்"
என்று சுடலைமாடனிடம் பேரம் பேச ஆரம்பித்தான் காளிப்புலையன்.
"என்ன? என்னுடன் பங்காளியா? எனக்கு உன்னால் கொடை கொடுக்க இயலுமா?" என்று
கேட்டார் சுடலைமாடன்.
"என்ன வேண்டுமானாலும் தருகின்றேன்.." என்றான் புலையன்.
"ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம்
வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு
பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில்
செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே
படைப்பாகவும் போட வேண்டும்"
"அப்படியே செய்கிறேன்.. என்னை விட்டு விடு. "
"அது மட்டுமல்ல... ஏழாவது பரணிலே ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை எனக்குப்
பலி கொடுக்க வேண்டும். அவளும் தன் தகப்பனுக்கு ஒரே பெண்ணாக இருக்க
வேண்டும். அவளுக்கு அது முதல் குழந்தையாக இருக்க வேண்டும்" என்றார்.
மேலும் "அப்படி நீ எனக்குப் பலி கொடுத்தால், மூன்றே முக்கால் நாழிகைக்கு
உன் சிமிழுக்குள் நான் அடைபடுவேன்" என்று வாக்கும் கொடுத்தார்.
இதில் மயங்கிய  பெரும்புலையன் பலி கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான்.
பரண்கள் அமைத்தான்.. ஆடுகளும், பன்றிகளும், எருமைகளும், கிடாக்களும்
கிடைத்தன... நிறைமாத கர்ப்பிணிக்கு எங்கு செல்வது என்று யோசனை செய்த போது
மாவிசக்கியின் நினைவு வந்தது... தனக்கு மகளை விட மாந்திரீகமே முக்கியம்
என்று எண்ணி அவளையே பலியிடத் தீர்மானித்தான் பெரும்புலையன்.
வீட்டுக்கு வந்தான். மகளை அழைத்தான்.
"மகளே மாவிசக்கி.. நம் குலதெய்வத்துக்குப் பலி கொடுக்கப் போகின்றேன்..
நீயும் வா.. நாம் செல்லலாம்" என்று அழைத்தான்.
"அப்பா.. நானோ நிறைமாத கர்ப்பிணி.. நான் அதைப் போன்ற பலி
கொடுப்பதையெல்லாம் காணக் கூடாதல்லவா? நான் வரவில்லை" என்று மறுத்தாள்.
அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.
ஏழாவது பரணிலே அவளை ஏற்றி அவளது கைகளையும், கால்களையும் கட்டினான்.
மாவிசக்கியும் புரிந்து கொண்டாள்.
"அடேய் சண்டாளா.. பெற்ற மகளென்றும் பாராமல், என்னையும் கொலைசெய்து
பலியிடத் துணிந்து விட்டாயே.. நீ உருப்படுவியா.... நான் மரித்து ஏழு
நாட்களுக்குள் நீயும் செத்துப் போவாய்." என்று சாபமிட்டு அழுதாள்..
அதையெல்லாம் காதில் வாங்க வில்லை காளிப்புலையன்.
அத்தனை ஆடுகளையும், எருமைகளையும், பன்றிகளையும், கிடாக்களையும் பலி
கொடுத்தான்.. ஏற்றுக் கொண்டார் சுடலைமாட சுவாமி.. ஒரு கோட்டை
புழுங்கலரிசி சோற்றையும் ஏற்றார். இறுதியாகத் தனது மகளையும் நெஞ்சைக்
கிழித்துப் பலி கொடுத்தான். அதையும் ஏற்றார்.
பின்னர் தான் சொன்னது போல் அவனது சிமிழுக்குள் அடைபட்டார்...
சுடலைமாடனை அடைத்து விட்டோம். இனி பகவதி கோயிலில் உள்ள அனைத்துத்
தங்கங்களையும் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய புலையன், சுடலைமாடனை
அடைத்த சிமிழை அங்குள்ள குளத்தில் புதைத்து வைத்தான்.
குளத்திலிருந்து சுடலைமாடனால் மீள முடியாது என்று நம்பிவிட்டான்.
வீட்டுக்கு வந்தான்..
புலக்கொடியாள் தண்ணீர் எடுக்கக் குளத்துக்குச் சென்றாள். குடத்தில் நீரை
மொண்டாள்.. அந்த நீரில் சிமிழும் வந்து விட்டது. வீட்டுக்கு வந்தாள்..
புலையனுக்கு சாப்பாடு வைத்தாள்.
குடத்திலிருந்த நீரை ஒரு செம்பில் அவனுக்கு ஊற்றி வைத்தாள்.
நீரருந்த செம்பை எடுத்த புலையன் கண்களில் அந்த சிமில் பட்டது.
"ஐயோ... இந்த சிமில் இங்கு வந்து விட்டதே" என்று அவன் பரிதவித்த நொடியில்
மூன்றே முக்கால் நாழிகை முடிவடைந்து விட்டது.
சிமில் வெடித்தது..
ஆங்கார சொரூபமாக வெளிப்பட்டார் சுடலைமாட சுவாமி..
"அடேய் பெரும்புலையா... ! தங்கத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே
பலிகொடுத்த சண்டாளா... உன்னைப் போன்ற பெரும்பாவிகள் உயிரோடு இருக்கலாமா?
என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன்
என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனை
அடித்தார்...
அருகே நின்றிருந்த புலக்கொடியாளையும் அடித்தார்..
தன் அன்னையின் ஆலயத்திலிருந்து புலையன் கொள்ளையடித்துச் சென்ற
திரவியங்களை மீட்டு கொட்டாரக்கரை திரும்பினார்..
அவற்றை மீண்டும் அன்னையிடமே சேர்ப்பித்தார்..
"அன்னையே... இப்போது புரிந்ததா உன் மகனின் பராக்கிரமம்?" என்று அன்னை
பகவதியை வணங்கி நின்றார்.
"மெச்சினோம். மகனே... ஆனால் நீ இப்படிப் பழிவாங்குவதெல்லாம் கூடாதப்பா...
தெய்வங்கள் எல்லோரும் மனிதர்களை ரட்சிக்கத்தான் வேண்டும்... நீயும்
வரங்கொடுக்கும் தெய்வமாக வேண்டும்" என்று அவனை ஆசீர்வதித்தாள்.
"அப்படியே செய்கின்றேன் அன்னையே.. எனக்கு விடை கொடு" என்று சொல்லி
அன்னையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொட்டாரக்கரையை விட்டுப் புறப்பட்டார்.
நேராக குற்றாலம் வந்து சேர்ந்தார்.
குற்றால அருவியில் குளித்து விட்டு திருக்குற்றால நாதரையும்,
அம்பிகையையும் வணங்கினார்...
பின்னர் குற்றாலப்பதியிலேயே அருளும் தெய்வமாகி வரமருள ஆரம்பித்தார்...
அங்கு வருவோரும் போவோரும், குற்றாலத்திலிருந்து பிடிமண் எடுத்துக் கொண்டு
தங்கள் பதிகளில் கோயில் கட்டி சுடலைமாடனைத் தெய்வமாக வைத்து வழிபட
ஆரம்பித்தனர்..
இவ்வாறு தென்னாடு முழுமைக்கும், எல்லா கிராமங்களிலும் சுடலைமாடன்
விதவிதமான பெயர்களில் வணங்கப் படுகின்றார்.  சுடலைமாடன், பெரியசுவாமி,
புலமாடன், வேம்படி மாடன், கரடிமாடன் (கரையடிமாடன் என்பதைத்தான் கரடிமாடன்
என்று அழைக்கின்றார்கள்), கொம்பு மாடன் என்று விதவித பெயர்கள்
அவருக்கு... எங்கள் சுப்பிரமணியபுரத்தில் வடலடிசுவாமி என்ற பெயர்
சுடலைமாடனுக்கு..
குதிரையில் இரவில் ஊர்வலம் செல்வதும், ஊரைக்காப்பதுமான காவல் தெய்வம்
இவர்.. அவருக்குக் கொடை கொடுக்கும் நாளில் அவர் குதிரையைக் கட்டும்
குத்துக்கல்லுக்குப் பெண்களும், ஆண்களும் நீராட்டி வழிபடுவார்கள். மற்ற
இடங்களை விடச்சிறப்பு என்னவென்றால் எங்கள் கிராமத்தில் அவனுக்கு
உருவமில்லை... பீடமும் இல்லை...  வடக்கு மற்றும் தெற்காக இரண்டு
வாயில்கள்.. வடக்கு வாசலில் நின்றுதான் வழிபடுவார்கள்... அங்கிருந்து
பார்த்தால் தென் திசைக் கதவுதான் தெரியும்... உள்ளே சந்தனக்கல்லால் பீடம்
மட்டும் உள்ளதாக சொல்வார்கள்.. அடியேன் பார்த்ததில்லை.. தென் திசை வாசலை
ஒட்டித்தான் சாலை... சாலையில் செல்வோர்கள் வடலடியானை வணங்க
மறப்பதில்லை... யாருடைய வீட்டில் விசேடம் என்றாலும் வடலடியானுக்குத்
தேங்காய்ப் படையல் போட்டு பிறகுதான் விசேடங்கள் நடக்கும். அதனால்
"தேங்காய் உடைக்கிற கோயில்" என்றும் பெயர் உண்டு. கிழக்கத்தியார்
கோயிலில் இருந்து தேங்காய்களை வடலடியான் கோயிலுக்குக் கொண்டு சென்று
உடைத்து அந்த கோவிலின் படிகளில் படைப்பார்கள்.. பிறகு அவற்றை பாயில்
போட்டு பெரியவர்கள் அமர்ந்து கீறுவார்கள். பிறகு அனைவருக்கும்
கொடுப்பார்கள்.
நான் முதலூர் பள்ளியில் படிக்கும் போது தினமும் வணங்கிச்செல்வோம்.
அங்கிருந்த உண்டியலின் திருநீற்றுக் கொப்பரையில் திருநீறு
இல்லாவிட்டாலும் குனிந்து மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வோம்...
எதிர்ப்புறத்தில் ஓர் அழகிய ஆலமரம் இருந்தது... அருகே நல்ல கிணறு
ஒன்று... முன்னர் கொடைவிழாவின் போது அந்த கிணற்றிலிருந்து தோண்டி மூலம்
நீர் இறைத்துத்தான் பெண்கள் நீர் கொண்டு வந்து அந்த குத்துக்கல்லிற்கு
அபிசேகம் செய்வார்கள்.. ஒரு புயலின் போது ஆலமரம் சரிந்து விழுந்து
விட்டது...
கிணற்றிற்கும் செல்ல முடிவதில்லை... எனவே ஆலயத்திலேயே ஆழ்துளைக் கிணறு
அமைத்து விட்டார்கள்.. அங்கிருந்து மோட்டார் மூலம் நீர் பிடித்து தங்கள்
நேர்ச்சைகளை மக்கள் பூர்த்தி செய்கின்றார்கள்..

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரலின் அருகில் ஆறுமுகமங்கலம் என்றொரு ஊர்
இருக்கின்றது.. நமது பகுதியில் சுடலைமாடனைப் பற்றிய பிரசித்தம் இந்த
ஊர்தான். பேய்கள் ஆடுவதும், ஓடிப்போவதுமாக மெத்தப் பிரசித்தம். அங்கே
சுடலைமாடனை செல்லமாக "ஹைகோர்ட் மகராஜா" என்றழைக்கின்றார்கள்.. நம்முடைய
பகுதியில் நிறைய குழந்தைகளுக்கும் சுவாமியின் பெயரை வைத்து ஹைகோர்ட்
மகராஜா என்று பெயர் சூட்டி மக்கள் மகிழ்ந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி
அவருக்கு அந்த பெயர் வந்தது என்பதைப் பற்றி அடுத்த மடலில் காணலாம்...

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

உத்தமர் கோவில் என்னும் இத்திவ்ய தேசமானது ஸ்ரீரங்கத்திலிருந்து
திருவெள்ளறை செல்லும் வழியில்தான் உள்ளது. திருவெள்ளறை செல்லும் வழியில்
உள்ள பாலத்தின் மேல் பேருந்து செல்கையில் ஆலயத்தைக் கண்டதாக விஜயராகவன்
குறிப்பிட்டான்.

திருவெள்ளறை ஆலயத்தின் மகிமைகளைக் கேட்டுணர்ந்து அந்த செந்தாமரைக்
கண்ணனின் அருள் பெற்று வெளியே வந்தோம். துறையூர் சாலைக்குச் செல்லும்
வழியில் ஓர் பெரியவர், "இங்கேயே வெய்ட் பண்ணுங்கோ.. பஸ் இப்ப வந்துடும்"
என்றுரைத்தார். அங்கே காத்திருந்தோம். இச்சமயத்தில் மகளின் கண் வலி
அதிகமாகியது. (மெட்ராஸ் ஐ என்பதை எங்கள் ஊரில் கண் வலி என்றுதான்
அழைப்போம்). கண்கள் மேலும் சிவந்து கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.
காத்திருந்தோம். பேருந்து வந்தபாடில்லை.. மாலை 7.50 மணிக்கு உத்தமர்
கோவிலில் நடை சாற்றிவிடுவார்கள் என்பதால் நடக்க ஆரம்பித்தோம்.

துறையூர்  சாலையில் பேருந்துக்காகக் காத்திருந்தோம். வரும் பேருந்துகளில்
விசாரித்த பொழுது அவை எதுவும் உத்தமர் கோவில் அருகே நிற்காது
என்றுரைத்தார்கள். இச்சமயத்தில் எங்கள் திருமகள் உதவினாள். ஒரு
பேருந்தில் ஏறி அமர்ந்து ஓட்டுனரிடம் குழந்தையோடு வந்திருக்கின்றோம்
என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அவரும் நிறுத்துவதாக வாக்களித்தார்.
உத்தமர் கோவிலில் இறங்கினோம்..

ஓங்கி உலகளந்த உத்தமனை இந்த உத்தமர் கோவிலில் காணலாம் என்று ஆவலோடு உள்ளே
நுழைந்தோம். இவ்வாலயத்தைப் பற்றிய சிறப்பு விஜயராகவனால் எங்களுக்குச்
சொல்லப் பட்டது. பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்த சிவனாருக்கு அடக்க
இயலாத பசி உண்டாயிற்று. பிரம்மனின் தலையும் அவரது கையில் ஒட்டிக்
கொண்டது. அத்தோசத்தைப் போக்க அவர் பிட்சாடனாராக திருக்கோலம் பூண்டார்.
இத்திருத்தலத்தில் அன்னை மஹாலெட்சுமி தனது திருக்கரத்தால் ஈசனாருக்கு
பிச்சையிட அவரது தோசம் நீங்கியது.. எனவே இத்திருத்தலத்தின் தாயாருக்கு
பூரணவல்லி என்று பெயர்..

ஆலயத்தின் உள் நுழைந்து பூரணவல்லித் தாயாரை மனமுருகி வேண்டினோம். உள்ளே
நுழைகையில் ஆச்சரியம்.. இங்கே ஈசனாருக்கும் திருக்கோவில்.
பிரம்மாவுக்கும் திருக்கோவில்.. விஜயராகவன் "உங்க ஆளு கோயில்
இருக்குப்பா. போய் தரிசனம் பண்ணிட்டு வா.." என்றுரைத்தான். ஆனால் மகளின்
அழுகை அதிகமாகிக் கொண்டிருந்தபடியால் உத்தமரை மட்டும் தரிசனம் செய்து
விட்டு வரலாம் என்று சொல்லி விட்டு மூலவரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

இங்குள்ள மூலவருக்கு புருஷோத்தமன் என்ற திருநாமம். சயனத்திருக்கோலத்தில்
காட்சியளிக்கின்றார். திருவரங்கனைக் காணும் பேறில்லையே என்று எண்ணிய
எமக்கு இந்த உத்தமர் கோவிலில் புருஷோத்தமனாகக் காட்சியளித்து எம்
மனக்குறையைத் தீர்த்தருளினார். நாங்கள் உள்ளே சென்றிருந்த சமயத்தில் திரை
போட்டிருந்தார்கள். சற்றே காத்திருந்து உத்தமரின் தரிசனம் பெற்றோம்.
புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டிருந்த பெருமாளைக் கண்டு ஆனந்துற்று
மகளுக்காக வேண்டிக் கொண்டோம். எனக்குரிய பிரச்சனை என்னவெனில் ஆலயத்தில்
இறைவனை வணங்கும் வேளையில் என்னால் எனக்கு இது வேண்டும் அது வேண்டும்
என்று கேட்பதற்குத் தோன்றுவதில்லை. இறைவனின் திருக்காட்சியைக் கண்டதும்
மெய்மறந்து, மனமுருகி தரிசனம் செய்வது மட்டுமே நினைவில் நிற்கின்றது..
ஆலயத்தை விட்டு வெளியே வரும்போதுதான் "அயயோ மறந்து போனோமே.." என்று
மனந்துடிக்க ஆலயத்தின் திருவாசலை நோக்கி வேண்டிக் கொண்டு வருவேன்..

உத்தமர் திருக்கோவிலில் அந்த புருஷோத்தமனையும், பூரணவல்லித் தாயாரையும்
தரிசித்து விட்டு அறைக்கு வந்து சேர்ந்த சமயத்தில் மகளின் அழுகை மிகவும்
அதிகமாகி இருந்தது. என்ன செய்தும் சமாதானப் படுத்த இயலவில்லை.
மிகச்சிறுவயதில் அவளுக்குத் தொல்லைகள் தருகின்றோமோ என்று ஒரு எண்ணம்
தோன்றியது.. இல்லையில்லை... அவளது சிறுவயதில் இது நாம் அவளுக்குத் தரும்
பேறு என்று மனத்தை மாற்றிக் கொண்டேன்..

இரவில் தம்பதியராகக் காட்சியளிக்கும் ரங்கநாதரையும், ரங்கநாயகி
நாச்சியாரையும் காணச் செல்லலாம் என்று எண்ணியிருந்த வேளையில் முன்பு
ஒருமுறை எடுக்கப் பட்ட புகைப்படம் ஒன்றை விஜயராகவன் அளித்தான். மகளின்
அழுகையைக் கட்டுப்படுத்த இயலாததால், நண்பர்களிடம் "நீங்கள் மட்டும்
சென்று தம்பதியரைத் தரிசித்து வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி அறையில்
தனித்திருந்தோம். மனதுக்குள் வாட்டம். காலையில் ஒரு மாமி
"வயசாயிருந்தாலும் இன்னைக்குக் கையப் பிடிச்சிட்டு வந்துடுவா...
இன்னைக்கு பெருமாளையும் தாயாரையும் சேவிச்சா ரொம்ப புண்ணியம்." என்று
சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.. நமக்கு இந்த புண்ணியம் இல்லையே
என்று இருவரும் நொந்து கொண்டோம்.

விஜயராகவன் தந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு இருவரும் அமர்ந்து கண்களை
மூடி வேண்டினோம்.. "ஐயனே... நீங்கள் சேர்ந்திருக்கும் திருக்கோலத்தை
எங்களால் காண வர இயலவில்லை... ஆயினும் உங்கள் தலத்திலேதான் உள்ளோம்..
எங்களுக்கும் திருவருள் புரியும்" என்று வேண்டிக் கொண்டிருந்தோம்.
அச்சமயத்தில் எனக்கு ஒரு காட்சி தென்பட்டது. அதன் உட்பொருள் விளங்கவே
இல்லை... ரங்கநாயகி நாச்சியாரின் சன்னதிக்கு எதிரே உள்ள வெளியில் பல
யானைகளைக் கண்டேன். அக்கணமே என் மனத்தில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடியது. அதனை அப்பொழுதே மனையாளிடம் பகிர்ந்து கொண்டேன். மூலவரையும்
கற்பனை செய்து தரிசித்தேன். மிகப்பெரிய நம் பெரிய பெருமாளைக் கற்பனையில்
மட்டுமே தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது...

இச்சமயத்தில் மகளும் சமாதானம் ஆகி உறங்க ஆரம்பித்து விட்டாள். "சரி
இன்றைக்கு இரவு முழுதும் திருக்காட்சி இருக்குமல்லவா? இரவில் மகள்
விழிக்கும் வேளையில் அழாமல் இருந்தால், நாமும் போய் தரிசித்து விட்டு
வரலாமா?" என்று மனையாள் கேட்க, நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.

இச்சமயத்தில் நண்பர்களும் திரும்பி வந்தனர். "வரிசை பெரிய கருடன் வரை
நீண்டிருக்கின்றது. எனவே தரிசனம் செய்யாமலேயே வந்து விட்டோம்"
என்றுரைத்தனர். ஐயோ நம்மோடு வந்த பாவம் இவர்களுக்கும் புண்ணியமில்லாமல்
போயிற்றே என்று நொந்து கொண்டேன். "சரி விஜய்.. நாம கொஞ்சம் லேட்டா போய்
பார்ப்போமா?" என்று வினவ "அப்படியில்லை நண்பா.. ஒருமுறை தூங்கி
எழுந்தால், குளித்த பிறகே ஆலயம் செல்ல வேண்டும்" என்று விஜய் சொல்லி
விட்டான். பிறகென்ன.. தூங்கி காலையில் எழலாம்.. என்று எண்ணி உறங்கச்
சென்றோம்..

மறுநாள் நாங்கள் கண்ட திவ்ய தரிசனங்களைப் பற்றி... அடுத்த மடலில்....

அன்புடை நெஞ்சம் அனைத்தும் அந்த அரங்கனுக்கே அர்ப்பணம்...திருவரங்கத்தில்
பள்ளி கொண்ட பெருமாளே... எம் நெஞ்சத்திலும் நீங்காது பள்ளி கொண்டு எம்மை
வழிநடத்தும்.... வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

புதன், மார்ச் 23, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

மகளை உறங்கவைத்து விட்டு திருவரங்க பங்குனி உத்திர வைபவத்தில் எமக்கு
ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி மனையாளுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
மேலும் நண்பர்கள்  எப்போது வருவார்கள் என்று  அவர்களுக்காக
காத்திருந்தோம்.. அனைவரும் வந்து சேர்ந்தார்கள். பிரசாதம் உண்டு விட்டு
மதிய உணவை முடித்தோம்.. ஐயா காளைராசன் அவர்கள் பெருமாளின் ஆலயங்களில்
தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். திருப்பூவணத்து
பெருமாளின் ஆலயத்தில் உள்ள திருவுருவங்கள் சென்னை அருங்காட்சியகத்தில்
இருப்பதாகவும், அவற்றை மீட்பதற்கு வடகலை, தென்கலை என்னும் பிரிவுகள்
தடையாக இருப்பதாகவும், தாம் பணியில் இருக்கும் காலத்திலேயே இது
நிகழ்ந்தேற வேண்டுமென்பதாக ராமானுசரை வேண்டிக் கொண்டதாகக்
குறிப்பிட்டார்.
தன்னை ராமானுசரின் வழிவந்தவன் என்று குறிப்பிட்ட விஜயராகவனும் தனது
கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக பல கருத்துப்
பரிமாற்றங்கள் மூலம் புதிதாக பல செய்திகளை அறிந்து கொண்டோம். சற்றே
இளைப்பாறி விட்டு திருவெள்ளறை என்னும் திவ்யதேசத்துக்குச் செல்லலாம்
என்று விஜயராகவன் உரைத்தான். தான் உறையூரில் தரிசனம் முடித்துக்கொண்டு
ஊருக்குத் திரும்புவதாக ஐயா காளைராசன் தெரிவித்தார். மாலை நான்கு மணி
அளவில் அறையை விட்டு கிளம்பினோம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஐயா காளைராசன் அவர்களையும்,
அம்மா நாகலெட்சுமி அவர்களையும் வழியனுப்பி வைத்தோம். பேருந்தில்
திருவெள்ளறை சென்றடைந்தோம். பேருந்தில் இறங்கி சற்று தூரம் நடந்து
சென்றோம்.
திருவெள்ளறையானது ஸ்ரீரங்கத்தை விட பழமையானது. இதனால் இது ஆதி வெள்ளறை
என்றும் போற்றப் படுகின்றது. ஆலய பலி பீடத்திற்கருகே ஒரு தெப்பம் உள்ளது.
அதனை பார்த்துக் கொண்டே தாயார் சன்னிதிக்குச் சென்றோம். செண்பகவல்லித்
தாயாராக அன்னை காட்சியளிக்கின்றாள். உற்சவ மூர்த்திக்கு பங்கஜவல்லி என்று
திருநாமம். அம்மையே எங்களைக் காத்து வழி நடத்துமம்மா என்று வேண்டிக்
கொண்டு பிரகாரம் சுற்றிக் கொண்டே மூலவர் சன்னிதிக்குச் சென்றோம்.
மூலவரின் சன்னிதிக்குச் செல்ல இரு வாயில்கள். ஆறு மாதங்கள் இடப்புறமுள்ள
வாயிலிலும், ஆறு மாதங்கள் வலப்புறமுள்ள வாயிலிலும் செல்ல வேண்டுமாம்.
தட்சராயணம், உத்தராயணம் என்று கால நிலைக்கேற்ற வழிகள். படிகளில் ஏறிச்
செல்லவேண்டும். படிக்கட்டுக்களின் தத்துவத்தை ஆலய குருக்கள்
தெரிவித்தார். அவை கீதாச்சாரத்தையும், வேதங்களின் தத்துவத்தை உள்வாங்கி
நிற்பதாகவும் தெரிவித்தார்.
மூலவர் புண்டரிகாக்ஷன் என்னும் திருநாமத்தைத் தாங்கி நின்ற
திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். உற்சவர் செந்தாமரைக் கண்ணன்..
இங்கே பிரம்மனுக்கும் சிவனுக்கும் செந்தாமரைக் கண்ணன் காட்சியளித்து
அருளியதாக ஆலய அர்ச்சகர் தெரிவித்தார்.
பெருமாள் சயனத்திருக்கோலத்தில் காட்சியளித்தால் படுக்கையாகவும், அமர்ந்த
திருக்கோலத்தில் காட்சியளித்தால் சிம்மாசனமாகவும், நின்ற திருக்கோலத்தில்
காட்சியளித்தால் வெண் கொற்றமாகவும் காட்சியளிக்கும் ஆதிசேடன்
இத்திருத்தலத்தில் மானுட உருவில் காட்சியளிப்பது சிறப்பு.  மூலவரின்
எதிரில் மார்க்கண்டேய மாமுனிவர் பெருமாளை வணங்கிய நிலையில்
காட்சியளிக்கின்றார்.
சிபிச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட இவ்வாலயம் மிகவும் பெருமை வாய்ந்தது.
வடநாட்டில் இருந்து மூவாயிரத்து எழுநூறு வைணவர்களை அழைத்து வந்து
குடியேற்றி இவ்வாலயத்தை சிபிச்சக்கரவர்த்தி கட்டினான். ஆலயத்தின்
மூலவரின் கண்களைத் திறக்கும் நாளன்று எதிரில் நிற்கும் பலிபீடம் தலைகீழாக
சுழன்று ஆடியதாம். இதனால் இவ்வாலயத்தின் பலிபீடத்துக்கும் தனிச்சிறப்பு..
ஆலய கும்பாபிடேகத்துக்குப் பிறகு மூவாயிரத்து எழுநூறு வைணவர்களில் ஒருவர்
இறந்து விடவே சிபிச்சக்கரவர்த்தி வருத்தமுற்றான். அச்சமயத்தில் திருமால்
தானே ஓர் வைணவனாக வடிவெடுத்து வந்து சக்கரவர்த்தியின் மனக்குறையைத்
தீர்த்தான்.
நாதஸ்வரம் இசைக்கும் கலைஞர் ஒருவரை ஆலயத்தில் கூடியிருந்தோர் "நீர்
வாசிப்பது நன்றாக இல்லை" என்று கூறிவிடவே வருத்தமுற்ற அவர் தனது நாவை
வெட்டி அந்த பலிபீடத்தில் எறிந்தார். அன்றைய தினம் நைவேத்தியத்தை
பெருமாள் புறந்தள்ளினார். தன் பக்தனான அந்த நாதஸ்வர கலைஞருக்கு நாவை
வளரச்செய்து அருளினார். பின்னரே திருவமுது உண்டார். பக்தர்களின் பக்தி
மேன்மையை உலகுக்கு உணர்த்திய செந்தாமரைக்கண்ணனின் திருத்தலம் இது.
நாங்கள் முதலில் மூலவரைத் தரிசிக்கச் செல்கையில் மகள் அழுது
கொண்டிருந்ததால், மனையாள் அவளை சமாதானப்படுத்திக் கொண்டு வெளியில்
அமர்ந்திருந்தாள். மகளின் அழுகை நின்றபின் அவர்களோடும் ஒருமுறை உள்ளே
சென்று செந்தாமரைக் கண்ணனைத் தரிசித்தேன். ஆலய அர்ச்சகர்
திருமங்கையாழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பாடினார்.
ஆலயத்தின் தீர்த்தங்கள் பற்றியும் அறிந்தோம். இங்கே ஏழு புண்ணிய
தீர்த்தங்கள் உள்ளன.. அவற்றின் பெயரையும் அர்ச்சகர் மொழிந்தார். மனம்
முழுதும் கண்ணனின் பால் ஈடுபட்டிருந்ததால் அவற்றின் பெயர் மனத்தில்
நிற்கவில்லை. ஒரு புண்ணிய தீர்த்தம் புத்திரபாக்கியம் தரவல்லதாம். வைணவ
உபன்யாசர் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் பெற்றோர்களும்,
இத்தீர்த்தத்தில் நீராடிய பின்னரே தங்களின் பேர் பெற்ற மகனை
ஈன்றெடுத்தார்களாம்.
வராக அவதாரத்துக்குரிய திருத்தலமாக இது போற்றப் படுகின்றதென்று
அறிந்தோம். ஆலய பலிபீடத்தருகேயுள்ள தீர்த்தத்தில் மழை நீர்தான்
தீர்த்தமாக உள்ளது. பண்ணிய பாவங்களையெல்லாம் தீர்க்கும் தீர்த்தம் இது.
இது ஆலயம் கட்டிய நாள் முதற்கொண்டு இதுவரை வற்றியதில்லையாம். வறண்டு நீர்
குறைந்து கொண்டு போகும் வேளையில் மழையை அனுப்பி இதை நிரப்பி விடுவார்
பெருமாள். தினமும் பெருமாளுக்கு அபிடேகத்திற்குரிய நீரை இத்தீர்த்ததில்
இருந்துதான் கொண்டு செல்கின்றார்கள். மேலும் உற்சவத்தின் போது,
பொதுமக்கள் எல்லோரும் உற்சவரின் திருப்பாதத்தைத் தொட்டு வணங்கும் பேறும்
கிட்டுகின்றதாம்..
விஜயராகவனும், விஜய் ஆனந்தும் தங்கள் மாலை சந்தியாவந்தனத்தை இந்த
தீர்த்தத்தில் செய்தனர். இத்தீர்த்ததில் நமது பாதங்கள் படக்கூடாது.
ஏனெனில் இதன் நீர்தான் பெருமாளுக்கு அபிடேகத்திற்கு கொண்டு செல்லப்
படுகின்றது. அவர்கள் தங்கள் சந்தியாவந்தனத்தை நிறைவு செய்ய, நாங்களும்
சற்றே நீரை எடுத்து எங்கள் தலையில் தெளித்துப் பாவங்களைப் போக்கிக்
கொண்டோம்.  அங்கிருந்து புறப்பட்டோம்...
அடுத்த திவ்ய தேசம் உத்தமர் கோவில்.. அதைப் பற்றி அடுத்த மடலில்...
"ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம்
வேறுவேறாக வில்லது வளைத்தவனே யெனக்கருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த
தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றோனே..." இது
திருமங்கையாழ்வாரின் திருமொழி...

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

'யான் எத்தனை கோடி தவம் செய்தேனோ இந்த பேறு பெறுவதற்கு' என்று காதல்
பெருகி, கண்கள் தழும்பி அரங்கனைக் கண்டு மீண்டோம் அவன் பேரருளாலே!
எளியோர்க்கு எளியோனாய் இரங்கும் அன்பன் இந்த ஏழைக்கும் தன்னருளைப்
பொழிந்தான். வார்த்தைகளில் வடிக்க இயலாத அரங்கனின் பேரன்பு அடியவர்களை
எங்ஙனம் தன்பால் ஈர்க்கிறது என்பதை நேரில் கண்டு களித்து, மீள்வதற்கு
மனமில்லாமல் மீண்டு வந்தோம்.
பிறப்பில் பல்பிறவிப் பெருமானாம் எங்கள் அரங்கனைக் கண்டு களித்த பிறகு
பிறவி வேண்டாம் என்றுதான் அடியார்கள் வேண்டுவார்களாம். அடியேனோ, ஐயனே
மீண்டும் ஒரே ஒரு பிறப்பைக் கொடு.. பூகோள வைகுண்டமாம் திருவரங்கத்தில்
பிறக்கச் செய்து, என்னை எந்த பந்தத்திலும் கட்டாது, என்றைக்கும் நின்
திவ்ய தரிசனத்தைக் காணும் பேற்றைக் கொடு... இன்றைக்கு என் மனத்தில்
எழுந்த துள்ளலோடு என்றைக்கும் திருவடிகளைப் பற்றிச் சேவகம் புரியும்
புண்ணியத்தைக் கொடு என்றுதான் வேண்டினேன்... திருவரங்கத்தின் மகிமை
இது... எனக்கு இப்பேற்றைப் பெற வழிகாட்டிய விஜயராகவனுக்கு நன்றி... அவன்
மூலம் இதை அருளிச் செய்த எங்கள் பெருமாளுக்கும் நன்றி...எங்கள் பயணச்
செலவை இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்.
கடந்த மார்கழியிலேயே இதற்கான திட்டம் தீட்டப் பட்டுவிட்டது.
தொடர்வண்டியின் பயணச்சீட்டும் நண்பன் விஜயராகவனால் எடுத்து அனுப்பி
வைக்கப் பட்டது. அண்மையில்தான் தெரிந்தது தற்செயலாகக் குறித்த நாள்
பங்குனி உத்திரத் திருநாள் என்று.. நண்பனும் அச்செய்தியை மகிழ்வோடு
பகிர்ந்தான். என் மனமும் துள்ளியது...
திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை மாலை மனையாள் மற்றும் மகளோடு தொடர்வண்டியில்
ஏறி புறப்பட்டோம். நண்பர்கள் விஜயராகவன், விக்ரம் பாபு மற்றும் விஜய்
ஆனந்த் இவர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டனர். ஐயா காளைராசன் அம்மா
நாகலெட்சுமி இவர்கள் காரைக்குடியிலிருந்து புறப்பட்டனர்.
மிக அதிகாலையில் (03.45) திருச்சிராப்பள்ளி வந்தடைந்தோம். பேருந்தில் ஏறி
திருவரங்கம் சென்று கொண்டிருக்கும் போது, தாங்கள் திருவரங்கம் வந்து
சேர்ந்துவிட்டதாகவும், ராஜகோபுரம் வந்து இறங்கியவுடன் அழைக்கவும் என்றும்
நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி.. கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில்
திருவரங்கம் ராஜகோபுரம் அருகே இறங்கினோம்.
மகள் உறக்கத்திலிருந்தாள். மனையாள் அருகிலிருந்த ஓர் கட்டடத்தைப்
பார்த்துக் கொண்டே இறங்கினாள். திடீரென்று திரும்பி ராஜகோபுரத்தைக்
கண்டவள் மெய்மறந்தாள்... "ஓ... எவ்வளவு உயரம்" என்று.. நண்பனை
அழைத்தோம்... அங்கிருந்து "நான்காவது கோபுரத்தருகே வா.. அங்கே ஸ்ரீரெங்கா
ஸ்ரீ ரெங்கா ஸ்ரீரெங்கா என்று எழுதியிருப்பார்கள்" என்றான். அங்கே
சென்றடைந்தோம்.. அதிகாலையில் கோபுர தரிசனம் செய்து விட்டு, ஏற்கெனவே
பதிவு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு வந்தோம். மனையாளையும், மகளையும்
அங்கேயே தயாராகச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் (அடியேன், விஜயராகவன்,
விக்ரம் பாபு, விஜய் ஆனந்த்) காவிரி நோக்கி நடந்தோம்.
காவிரியைப் பற்றிய கற்பனைகளோடு சென்று கொண்டிருந்தேன். விஜயராகவன் ஆலயம்
பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான்.. காவிரியில் வெள்ளப் பெருக்கு
ஏற்பட்டு, ஆலயத்தின் உள்ளேயும் நிரம்பி, பல நாட்கள் வழிபாடுகள் தடைப்
பட்ட செய்தியையும், தற்சமயம் காவிரியின் நிலையையும் சொல்லிக் கொண்டே
வந்தான். அமர்ந்தாலே கழுத்தளவுக்கு வராது நீர்...
காவிரியில் நீராடினோம். விஜயராகவனும், விஜய் ஆனந்தும் சந்தியாவந்தனம்
செய்ய, அடியேனும், விக்ரம் பாபுவும் அறையை நோக்கி நடந்தோம். அங்கே
மனையாளும், மகளும் தயாராகி விட்டார்கள். காலை உணவருந்திய பிறகு ஆலயத்தை
நோக்கி நடந்தோம்...
மொட்டைக் கோபுரம், இராஜ கோபுரமாகிய செய்தியைச் சொல்லிக் கொண்டு வந்தான்
நண்பன் விஜயராகவன் (ஆசியாவின் மிக உயர்ந்த கோயில் கோபுரம் - 236 அடி).
ஒவ்வொரு கோபுரமாகக் கடந்து கொடிமர மண்டபத்தை அடைந்தோம். அங்கே விழுந்து
வணங்கி உள்ளே சென்றோம்.
"உடையவர் சன்னதி வலப்புறம் உள்ளது அங்கே செல்லலாம்" என்று வலப்புறம்
திரும்பினோம். அங்கே சுவற்றில் கேட்டாலே மனத்தை உருக்கும் ஆழ்வாரின்
பாசுரம் எழுதப் பட்டிருந்தது.. உரக்கப் படித்தேன்..
"குடதிசை முடியை வைத்துக்
                   குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
                 தென் திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை
                 அரவணைத் துயிலுமா கண்டு
உடலெனக்கு உருகுமாலோ
                என் செய்கேன் உலகத்தீரே" அற்புதமான பாசுரம் அல்லவா?
அரங்கனைக் கண்டுத் தன் மெய்யுருகும் நிலையைப் பாடிய ஆழ்வாரின் பக்தி
மனநிலை மெய்சிலிர்க்க வைத்தது. உருகும் உள்ளத்தோடே உடையவர் சன்னதி நோக்கி
நடந்தோம். தாமான திருமேனியாரைப் பற்றிய விளக்கத்தோடு அவரைக் கண்டோம்..
ஆஹா... நாராயணனை உலகத்தோர் அனைவருக்கும் பகிர்ந்திட்ட நாயகனைக் கண்டு
மெய் மறந்தேன்.. ஐயனே... நீரில்லாவிடில் இன்றைக்கு எமக்கெல்லாம் இந்தத்
திருநாள் வாய்த்திருக்குமா? நீர் வாழுங்காலத்தில் செய்த புரட்சிகளால்
என்றென்றைக்கும் எம் மனத்தில் வாழ்ந்திருப்பீர் குருவாக... என்று அவரை
வேண்டிக் கொண்டு திரும்பி வந்தோம்..
எதிரே சக்கரத்தாழ்வார் சன்னதி.. திரும்பி வருகையில் காணலாம் என்று சொல்லி
விட்டு உள்ளே நடந்தோம்.. இதோ கருடமண்டபம்.. "நாகராஜன்.. இந்தக்
கருடன்தான் பிரம்மலோகத்திலிருந்து பெரிய பெருமாளை சுமந்து கொண்டு
வந்தது.." என்று விஜயராகவன் சொல்லிக் கொண்டே கருடாழ்வாரின் பெருமைகளைக்
கூறினான்.
கண்டோம் கண்டோம்... இதோ எங்கள் கரியபிரான் வாகனனை.. எவ்வளவு உயரம்... !
ஐயனே... தங்கள் பிரானிடம் எங்களுக்கும் இரக்கம் காட்ட வேண்டிக்கொள்ளுமே
என்று அவர் பாதம் வணங்கி அங்கிருந்து புறப்பட்டோம்.. அப்படியே முன்னே
வந்தால் மூலவர் சன்னதிக்கு செல்லும் வாயில் மூடப்பட்டிருந்தது... "சுவாமி
உற்சவத்தில இருக்கா.. வாங்கோ தாயாரை சேவிச்சிட்டு வரலாம்" என்று
விஜயராகவன் முன்னே அழைத்துச் சென்றான்.. அங்கே முதலாழ்வார்களுடன்
ஆதிநாராயணன் சன்னிதியை வணங்கி விட்டு, பரமபத வாயிலைக் கண்டு களித்து
விட்டு முன்னேறினோம்.
ஆயுர்வேதத்தின் முதல் வைத்தியர் தன்வந்திரி பெருமான் சன்னதிக்குச்
சென்றோம். "ஐயனே... எங்கள் குழந்தைக்கும், அன்னைக்கும் உடல் நலத்தைத்
தா.." என்று வணங்கி விடை பெற்றோம்.. முன்னே வந்தால்... அங்கே தாயார்
சன்னிதிக்கு எதிர்ப்புறம் ஒரு மண்டபம்...
இதுதான் கம்பர் தனது இராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபம் என்றுரைத்த
விஜயராகவன் அங்கிருந்த நரசிம்மரின் சன்னதிக்கு அழைத்துச் சென்றான்...
கம்பர் தனது இராமாயணத்தை அரங்கேற்ற எதிர்கொண்ட தொல்லைகளை விஜயராகவன்
கூறினான்...
"கம்பர் தனது இராமாயணத்தை அரங்கேற்ற நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்..
சிதம்பரத்தில் உள்ள தீட்சிதர்கள் அனைவரும் வந்து அவர்கள்
முன்னிலையில்தான் அரங்கேற்ற வேண்டுமாம்.. ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை
இல்லை.. எனவே ஒருவர் வருவதாகச் சொன்னால் இன்னொருவர் மறுப்பதும்,
இன்னொருவர் வருவதாகச் சொன்னால் மற்றொருவர் மறுப்பதுமாக நாட்கள் கடந்து
கொண்டிருந்தன்... கம்பர் தவித்தார்.. இந்நிலையில் ஓர் தீட்சிதரின் மகன்
இறந்து போனான்.. அத்தனை தீட்சிதர்களும் சுடுகாட்டில் கூடினார்கள்..
கம்பர் தனது இராமாயணத்தை அங்கே சென்று பாட ஆரம்பித்தார்.... தீட்சிதர்கள்
அதைக் கேட்டு மகிழ்ந்தனர்.. பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்து
திருவரங்கத்தில் தனது இராமாயணத்தை அரங்கேற்றினார். அங்கேயும் தனது
இரணியன் வதைப் படலத்தைச் சொல்லும்பொழுது எதிர்ப்பு கிளம்பியது... ஆனால்
கம்பருக்கு ஆதரவாக இந்த நரசிம்மர் குரல் கொடுத்துத் தன் கரத்தை
உயர்த்தினார். கம்பரின் இராமாயணமும் அரங்கேறியது" என்று விஜயராகவன்
மொழிந்தான்...
கீழே இறங்கி அங்கிருந்த கிருஷ்ணனை தரிசித்து விட்டு ரங்கநாயகி நாச்சியார்
சன்னதி நோக்கி நடந்தோம். இங்கேதான் இன்னும் சற்று நேரத்தில் பெருமாள்
வருவார் காத்திருப்போம் என்று காத்திருந்தோம்.. விஜயராகவனும், விஜய்
ஆனந்தும் பெருமாளுடன் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர். நாங்கள் அங்கே
ஒரு தூண் அருகே அமர்ந்திருந்தோம்.. வயதான தாயார்கள் இருவர் எங்கள் அருகே
அமர்ந்திருந்தனர்.. என் மனையாளை நோக்கி "குழந்தேய பத்திரமா
பாத்துக்கோடியம்மா.. கூட்டம் ஜாஸ்தியானா தள்ளுவா.... " என்று
அறிவுறுத்தினார்.. காத்திருந்தோம்...
அரங்கனார் வருவார் என்று அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தது.. "பேசாதே...
சத்தம் போடாதே" என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்...
காத்திருந்தோம்...அரங்கனார் வருவதை மேளதாளங்கள் முன்மொழிந்தன....
இதோ மேளதாளங்கள் முழங்க அரங்கன் வந்து சேர்ந்தான்... ஆஹா... ஐயா.... என்ன
புண்ணியம் செய்தேன் நான் இந்நாளைக் காண்பதற்கு!.. ஆடி வந்த அரங்கனைக்
கண்டதும் மெய் மறந்தேன்... மனம் தன்னிலை மறந்தது... அவன் மேல் அன்பு
அதிகமாகியது... பக்தி பெருகப் பெருக உள்ளம் உருகியது... உருகிய உள்ளம்
களித்துக் கொண்டிருந்த கண்களின் வழியே நீராகப் பெருகியது... வாயோ
"ரங்கா.... என் ரங்கம்மா..." என்று உரக்கக் கூவியது... தாயார்
சன்னிதிக்கு முன்னே வந்து மண்டபம் உள்ளே வந்தான்... இதோ அரங்கன்
தாயாருடன் சேர்ந்து சேவை தரப்போகின்றான்...  அரங்கன் உள்ளே நுழைய வந்த
போது, அன்னையின் திருக்கதவு சாத்தப் பட்டது....
சிம்மம் ஒன்று தனது வீர நடையுடன் நடந்து செல்வதைப் போன்ற காட்சி அது...
தவறு... உலகத்தைப் படைத்துக் காத்து இரட்சிக்கும் லோக நாயகனை விலங்கோடு
ஒப்பிடுவதா? ஆனால் எளியேன் உள்ளத்துள் எழுந்த ஒப்புமை அது... தனது
ராஜநடையுடன் உள்ளே நுழைய முற்பட்ட அரங்கன் திருக்கதவை அன்னைத் தாழிடுவது
கண்டு பின்னோக்கி வந்தான்...
பக்தர்கள் பாசுரங்கள் பாடினார்கள்... (செவியில் எதுவும் விழவில்லை...
மனம் முழுக்க அரங்கனே நிறைந்திருந்தான்). மீண்டும் ஒருமுறை செல்ல
முயற்சித்தான் அரங்கன்... அன்னையோ மீண்டும் தாழிட்டாள்... இவ்வாறாக
மொத்தம் மூன்று முறை நிகழ்ந்தேறியது....
அன்னை தன் நாதனுடன் ஊடல் கொண்டாள்... அவளை சமாதானம் செய்வது யார்?
அரங்கன் தன் அன்பரான நம்மாழ்வாரை அழைத்தான்.. நேரம் கடந்தது...
நம்மாழ்வார் வந்தார்... அரங்கனிடம் பேசிவிட்டு அன்னையிடம் சென்றார்..
மீண்டும் அரங்கனிடம்... மீண்டும் அன்னையிடம்... இவ்வாறாக பேச்சுவார்த்தை
நடந்து... அன்னையின் ஊடல் முகம் தளர்ந்தது... தன் நாதனை வரவேற்றாள்...
மீண்டும் தனது ராஜநடையுடன் உள்ளே நுழைந்தான் அரங்கன்... இருவரும்
சேர்ந்து காட்சியளிப்பது வருடத்தில் இந்த நாளில் மட்டும்தானாம்..
அந்த நிகழ்வைப் பற்றிய விஜயராகவனின் விளக்கம்...
"சோழமன்னனின் மகள், அரங்கன் மீது காதல் கொண்டு, அவனையடைய தவம்
இயற்றினாள்.. அவளது பக்திக் காதல் கண்டு மெச்சி அரங்கனும் அழகிய்
மணவாளனாக சென்று அவளை மணம் புரிந்தான் உறையூரிலே... அங்கிருந்து பங்குனி
உத்திரத் திருநாளுக்காகத் திரும்பும் போது நேரமாகி விட்டது.. அரங்கனார்
வரும் வழியையும், நேரத்தையும் பார்த்துக் காத்திருந்த அன்னை
ரங்கநாயகிக்குக் கோபம்.. ஊடல் கொண்டாள். தன் திருக்கதவைத் தாழிட்டாள்..
அகிலத்தை ஆளும் அரங்கனைத் திருப்பி அனுப்பினாள்... தன் காதல் மொழிகளால்
பேசிப்பார்த்தான் அரங்கன்... முடியவில்லை... அன்னை தனது
கோபநிலையிலிருந்து  இறங்கி வரவில்லை... முயன்று முடியாத அரங்கன்
நம்மாழ்வாரைத் துணைக்கழைத்தான்... அவர் பேசி முடித்து சமரசம் செய்து
வைத்தார்.. இதோ.. இருவரும் இணைகின்றார்கள்..."
காணும் கண்களெல்லாம் களித்து நின்றவண்ணம் உருகி உருகி அவனை வேண்டி எதிரே
இருந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தோம்.. இந்நிலையில்தான் ஐயா காளைராசன்
அம்மாவுடன் வந்து சேர்ந்தார்.. அவருடனும் சென்று அரங்கனாரைத் தரிசித்து
விட்டு அங்கிருந்து புறப்பட்டு தசாவதார மண்டபம் நோக்கிச் சென்றோம்.
கொளுத்தும் வெயிலின் கொடுமையில் மகள் அழத்துவங்க, தசாவதார மண்டபம்
வந்தடைந்தோம். பூட்டப் பட்டிருந்தது. சற்று நேரம் இழைப்பாறினோம். மகளின்
அழுகை அதிகமானது... எனவே அனைவரும் மீண்டும் ஆலயம் சென்றபோது, நானும்,
மனையாளும், மகளும் ஆட்டோவில் விடுதிக்குச் சென்றோம்.. மகளை சமாதானம்
செய்து உறங்க வைத்து நண்பர்களுக்காகக் காத்திருந்தோம்...
பின்னர் நிகழ்ந்தவை அடுத்த மடலில்...
அரங்க சேவை தொடரட்டுமே..!

திங்கள், மார்ச் 14, 2011

நமக்கு அறிமுகம் ஆகிய புரந்தரதாசர் மற்றும் கனகதாசர்.

புரந்தர தாசரை இறைவன் எவ்வாறு தன்னகத்தே ஈர்த்து ஆட்கொண்டான் என்பதைக் கடந்த மடலில் எழுதியிருந்தோம். புரந்தரதாசரின் காலத்திலேயே இன்னொரு ஹரிதாசரும் தன் பாடல்களின் மூலம் பக்தியை வளர்த்திருக்கின்றார். அவர்தான் கனகதாசர்.
கர்நாடக இசையில் இவரது பெயரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. குருபர கௌடா எனப்படும் ஆயர் குலத்தில் பிறந்த இவரது வாழ்க்கை வீரம் நிறைந்தது.. கனகதாசரின் இயற்பெயர் திம்மப்ப நாயக்கர். கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தின் படா என்னும் கிராமத்தில் பிறந்த இவர் இளமையில் போர்வீரனாக உருவாக்கப் பட்டார்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர் தமது வீரத்தைப் போர்க்களத்திலும் நிரூபித்தார். ஒரு போரின் போது காயப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். அதன் பின்புதான் அவரது வாழ்க்கை பக்தி நெறிக்குத் திரும்பியது. காகிநெலே என்னும் ஊரில் உள்ள ஆதிகேசவ பெருமானுக்குத் தன்னைத் தாசனாக்கிக் கொண்டார்.
பல இடங்களுக்கும் சென்று பக்தி நெறியைத் தனது பாடல்களின் மூலம் பரப்பினார்.  ஒருமுறை தனது குருவின் ஆணையை ஏற்று உடுப்பியில் உள்ள கண்ணனின் ஆலயத்துக்குச் சென்றார். 
"கண்ணா.. உன்னைக் காண வந்தேன்..." என்று ஆவலோடு அவர் ஆலயத்துக்குள் நுழைய முற்பட்ட போது, கண்ணன் அவரது பெருமையை உலகுக்கு அறிவிக்கத் திருவுள்ளம் கொண்டான்..
உள்ளே நுழைந்த கனகதாசர் ஆலய அர்ச்சகர்களால் வழி மறிக்கப்பட்டார்..
"எங்கே நுழைகின்றாய்?"
"கண்ணனைக் காண... அவன் திருவடி தொழ..."
"கீழ்ச்சாதியில் பிறந்தவனே... அப்படியே வெளியே போ... உன்னைப் போன்றோர்கள் அவனைக் காண்பதற்காகத்தான் உற்சவமே நடத்துகின்றோம். அப்போது கண்ணன் வெளியே வருவான்.. நீ அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீ உள்ளே நுழைந்து ஆலயத்தைத் தீட்டுப் படுத்தாதே.." கொடுஞ்சொற்கள் வேலாய்க் குத்தியது கனகதாசரை...
"அண்ணலே... என் ஈசனே... உன்னைக் காண்பதற்குத் தடையா... என்னைப் படைத்தவனும் நீதானே... எதற்கு இந்த சோதனை..." என்று அழுதவாறே வெளியேறினார் கனகதாசர்..
ஆலயத்தை விட்டு வெளியேறினாலும் மனது கண்ணனையே சுற்றி சுற்றி வந்தது..
"கண்ணா... நான் செய்த பிழை என்ன..? பூணூல் அணியாதா சாதியில் பிறந்தது நான் செய்த குற்றமா?" மனம் நொறுங்கியது...
தன்னை மறந்தார்...
ஆலயத்தில் வெளிப்புற மூலையின் நின்று கொண்டிருந்தார்..
"கண்ணா நீ எப்போது வெளியே வருவாய்... நீ வெளியே வரும்போதாவது உன்னைக் காண்கிறேனே..."கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது..
"கண்ணா... கதவைத் திறந்து இந்த ஏழைக்குத் தரிசனம் கொடு.." என்று கதறியழுதவாறே கீர்த்தனையைப் பாடினார்...
"பாகிலனு தெரது சேவயெனு கொடு ஹரியே..
கூகிதரு தொனி கேளலில்லவே நரஹரியே..."
கண்ணீரை வரவழைக்கும் அற்புதப் பொருள் நிறைந்த பாடல் இது... பாடல் முழுமையையும் ஓர் கன்னட அன்பரிடம் கேட்டுள்ளேன்.. அவர் தந்தவுடன் பொருளுடன் பதிவு செய்வோம்...  இந்த இருவரிகளுக்குமான பொருள் இதுதான்..
"நடை திறந்து உன் திருக்காட்சியெனும் சேவையைக் கொடு ஹரியே....
நான் அழைக்கும் குரல் உனக்குக் கேட்கவில்லையா நரஹரியே..."
தன்னை மறந்து பக்தியில் மூழ்கி கண்ணீர் மல்கி கீதம் இசைத்தார் கனக தாசர்...
அன்பர்க்கு அன்பனாம், அடியார்க்கு அடியானாம் நம் கண்ணன் கனகதாசரின் கண்ணீர் கண்டு பொறுப்பானா?
அதிசயம் நிகழ்த்தினான்.
கனகதாசரின் அன்புக்கு இரங்கினான்...
அண்டம் குலுங்கியது....
பூமி அதிர்ந்தது...
அதிர்ச்சியில் ஆலயத்தின் சுவற்றில் விரிசல் விழுந்தது... கனகதாசர் எத்திசையில் நின்று கொண்டிருந்தாரோ அத்திசையை நோக்கியிருந்த சுவர் உடைந்து விழுந்தது...
அதுவரை கிழக்கு நோக்கி நின்றிருந்த கண்ணனின் திருவுருவும் மேற்கு திசை நோக்கித் திரும்பியது..
உடைந்திருந்த சுவற்றின் வழியே கனகதாசருக்குத் தன்னைக் காட்டினான் கண்ணன்...
"கண்ணா... கண்ணா.... இந்த ஏழை தாசனுக்கு இரங்கி நீயே இப்பக்கம் திரும்பி விட்டாயா.... என்ன தவம் செய்தேன் நான்..." அதுவரை துக்கத்தோடு அழுது கொண்டிருந்த கனகதாசரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடத் துவங்கியது..
கனகதாசரைத் தடுத்து நிறுத்திய ஆலய அர்ச்சகர்கள் தலை குனிந்தனர்...
இனிமேல் அனைவருக்கும் இந்த உடைந்த சுவற்றின் வழியேதான் தரிசனம் என்று மொழிந்தான் கண்ணன்..
அந்த இடத்தில் அழகிய ஜன்னலை வைத்திருக்கின்றார்கள். இன்றைக்கும் கண்ணனை அந்த ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க இயலும். கருவறையின் வாயிலில் அவனது பின்புறம்தான் தெரியும். அந்த ஜன்னலும் "கனகதாசரின் ஜன்னல்" என்றுதான் அழைக்கப் படுகின்றது..
வெள்ளிக் கிழமைகளில் "வஜ்ரலங்காரா" என்று சொல்லி வைரங்களால் கண்ணனை அலங்கரிக்கின்றார்கள்.. நாமும் ஓர் வெள்ளிக்கிழமையன்றுதான் உடுப்பி கண்ணனின் தரிசனத்தைப் பெற்றோம்..
ஆலயமும் சுத்தமாக இருக்கின்றது.. கண்ணனுக்கு பூமாலை தொடுத்துக் கொண்டிருப்போரும் பாடல் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.. என்னவென்று வினவியபோது, அங்கே கண்ணனுக்கு செலுத்தும் அனைத்தும் பரிபூரண பக்தியுடனே படைக்கப் பட வேண்டும். பூமாலை தொடுக்கும் போது நம் கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களும் பாடல் பாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று விடை வந்தது...
நம் தமிழகத்து ஆலயத்தார் கவனிக்க வேண்டிய செய்தி இது...
கடந்த டிசம்பர் மாதம் திருக்கடவூர் ஆலயம் சென்றிருந்தோமில்லையா... அச்சமயத்தில், மாலை வாங்குவதற்காக நானும் ஐயா காளைராசன் அவர்களும் சென்றோம்.. லுங்கி உடுத்திய ஒரு மனிதர்தான் கடையில் அமர்ந்திருந்தார்.. அவரது நெற்றியிலும் திருநீறு இல்லை...
ஐயா காளைராசன் அவர்கள் "ஐயா கோயிலில் வியாபாரம் செய்கின்றீர்களே... திருநீறு அணியக் கூடாதா? வேட்டி கட்டலாம் இல்லையா?" என்று கேட்டார்..
"நான் இந்துதாங்க... லுங்கி கட்டுனதால என்ன முஸ்லீம்னு நெனைக்காதீங்க... இந்துதான்... " என்று சொன்னார்..
அவர் இந்துவா முஸ்லீமா என்பது நம் பிரச்சனை அல்ல... இந்துவானாலும், முஸ்லீம் ஆனாலும் யார் கரங்களால் கொடுத்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான்.. ஆனால் பரிபூரண பக்தி வேண்டும்... கத்தரிக்காய் மிளகாய் வியாபாரம் அல்ல ஆலயத்துக்குப் பொருட்களை விற்பனை செய்வது... இந்த பரிபூரண பக்தியை உடுப்பி கண்ணனின் ஆலயத்தில் கண்குளிர காணலாம்...
வருவோருக்கெல்லாம் அன்னதானம்...
அந்த வெள்ளியின் மதிய உணவை அங்கே உண்ணும் பாக்கியம் பெற்றோம்..
கோயிலில் உண்டால் அதற்குப் பரிகாரமாக ஏதாவது செய்யவேண்டும் என்று உடன் வந்திருந்த வாழும்கலை ஆசிரியர் சொல்ல, அங்கிருந்த மடத்திற்கு சென்றோம். மடத்தின் தலைவர் சுவாமிஜியின் கையில் காணிக்கைகள் கொடுத்தோம்..
ஒரு பலகை போட்டு அமர்ந்திருந்தார்..
காணிக்கை கொடுப்போருக்கு அவர் தனது கரங்களால் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்.
அங்குள்ளோர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..
"சுவாமியிடம் மிகவும் நெருங்கிச் செல்லக் கூடாது.. எட்ட நின்று கையை கீழே நீட்ட வேண்டும். அவர் பிரசாதம் கொடுப்பார்" என்று..
கையை நீட்டினோம்.. பிரசாதம் வந்து விழுந்தது.. நம்மைத் தொட்டு விட்டாலோ.. நெருங்கி விட்டாலோ தீட்டாம்...
"அட நம் கண்ணனே திரும்பி விட்டான்... நீங்கள் இன்னும் திரும்பாமல் இருக்கின்றீர்களே..." என்று மனத்தில் எண்ணியபடியே வெளியே வந்தேன்...
ஆக... கண்ணப்பர் சரித்திரம் ஆகட்டும்... நந்தனார் சரித்திரம் ஆகட்டும், கனகதாசரின் சரித்திரம் ஆகட்டும், யாருக்கும் இறைவனே இரங்கினாலும் சரி... மனிதர்கள் மட்டும் மாறுவதே இல்லை என்பதுதான் உண்மையாகிக் கொண்டிருக்கின்றது...
குறைந்த பட்சம் நாமாவது விழிப்புடன் இருப்போம்.. சாதி என்னும் பேயை மண்ணில் இருந்து தூர ஓட்டுவோம்..
தாசர்களில் பாடல்களில் நம் மனத்தில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பாடல்களையும், அவற்றிற்கு நம்மால் இயன்ற மொழி பெயர்ப்பையும் அடுத்த மடலில் வழங்குவோம்... மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

நமக்கு அறிமுகம் ஆகிய புரந்தரதாசர் மற்றும் கனகதாசர்.

நமக்கு அறிமுகம் ஆகிய புரந்தரதாசர் மற்றும் கனகதாசர்.
இவர்களின் பெயரை உச்சரிக்கும்பொழுதே ஓர் இனம் புரியாத உணர்வும் துள்ளலும் மனத்துனுள் எழுவதைத் தவிர்க்கவே இயலாது.. பெங்களூருக்கு வருவதற்கு முன்னர் இவர்களைப் பற்றிய அறிமுகம் நமக்கு இல்லை.. வாழும் கலையில் யோகப் பயிற்சி பெற்ற பின் வாராந்திர பயிற்சிக்காகவும், சத்சங்கத்திற்காகவும் ஜே.பி நகரில் உள்ள மா ஆனந்த மயி பவனத்துக்குச் செல்வது வழக்கமாயிற்று. அங்கேதான் அழகிய கன்னட மொழிப் பாடல்களைக் கேட்க நேர்ந்தது.. முதலில் கன்னடம் புரியவில்லை. ஆனாலும் அங்கே யாதவ் என்றொரு ஆசிரியர் தனது அழகிய குரலில் பாடுவதோடு மட்டுமல்லாது அப்பாடல்களுக்கான விளக்கத்தை ஆங்கிலத்தில் தருவார். அற்புதமான அவ்வரிகளைக் கேட்கையிலே மனத்தில் தோன்றும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது..
புரந்தரதாசரின் பாடல்கள், கனகதாசரின் பாடல்கள், பசவன்னா, அக்கமகாதேவி, குண்டப்பா இவர்களின் பாடல்கள் அனைத்தும் பக்தி ரசம் சொட்ட சொட்ட கிடைக்கும்.. (அந்த சமயத்தில் என்னுடைய வேலை நேரம் காலையில் இருந்ததால் சனிக்கிழமையன்று மாலையில் சத்சங்கம் செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தற்சமயம் மதியத்திற்குப் பின்னர் வேலை துவங்குவதால் சத்சங்கத்திற்கு போக முடியவில்லை)
திரு. யாதவ் அவர்களின் மூலமாக தாசரின் கீர்த்தனைகளில் நான் மெய் மறந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் மங்களூருக்கு அருகில் உள்ள கமலஷெலே என்னும் கிராமத்துக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது.. 2006 குரு பூர்ணிமாவை என்னால் மறக்கவே இயலாது.. கமலஷெலே கிராமத்திற்குப் போகும் வழியில் கர்நாடகாவின் பல தலங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, இவற்றையெல்லாம் கண்டுவிட்டு நமது அன்னை அரசாளக்கூடிய கொல்லூரில் மூகாம்பிகையாக அவளைத் தரிசித்தோம். பின்னர் கமலஷெலே சென்றடைந்தோம்.. அங்கே குடி கொண்டுள்ள அன்னை துர்கா பரமேஸ்வரியின் ஆலயத்தில்தான் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. 
முதல்நாள் மாலை சத்சங்கத்தில்தான் அவரைக் கண்டேன்.. அவர் சாயண்ணா என்று அன்போடு அழைக்கப் படும் சுவாமி சூர்யபாதா அவர்கள். அச்சமயத்தில் அடியேனுக்குக் கன்னடம் அந்த அளவுக்கு வராது. அவரோ தூய்மையான கன்னடத்தில் பேசிப் பாடினார். தாசரின் பாடல்களைக் கேட்கையிலே என்னை மறந்து ஆடினேன்.. பொருள் புரியாமலேயே இந்தப் பாடல்கள் நம்மை வசீகரம் செய்கின்றனவே என்று எண்ணுகையில், சுவாமி அவர்கள் ஆங்கிலத்தில் அதற்குரிய பொருளை விளக்கினார். இப்படித்தான் புரந்தர தாசரின் பாடல்கள் நமக்கு அறிமுகமானது. அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளிலும் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது.. பின்னர் வந்த ஆண்டுகளில் செல்ல முடியவில்லை... மிகவும் வருந்துகின்றேன்.. ஆனால் சாயண்ணா அவர்கள் பெங்களூரு வரும்பொழுது இங்கெல்லாம் நிகழும் ஞாயிறு சத்சங்கங்களை விடுவதில்லை...
இவை தமிழகத்திலும் பாடப்படுகின்றனவாம். ஆனால் அவற்றை சென்று கேட்டு மகிழ சங்கீத ஞானம் வேண்டுமாம்.. ஆனால் இங்கோ சத்சங்கத்தில் நாடோடிகளின் கீதமாக அனைவரும் இணைந்து பாடி இறைவனின் நாமத்தை உச்சரிக்கும்போது எழும் மகிழ்வே வேறு... நமக்கென்னவோ இந்த நாடோடி கீதமே பிடிக்கின்றது... எனது மனையாள் கருவுற்ற துவக்க நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே காளை கோயில் (புல் டெம்பிள்) சாலையில் உள்ள கோவர்த்தனா ஆலயத்திற்குச் செல்வோம். சில சமயங்களில் அங்கு வரும் பக்தர்கள் இனிமையான பாடல்களைப் பாடும்போது என்னை மறந்து கேட்டு நிற்பேன்.
சரி.. இனி புரந்தர தாசரின் கதையைக் காண்போம்..
கர்நாடகமாநிலத்தின் சிமோகா மாவட்டத்தில், தீர்த்தஹள்ளிக்கு அருகில் உள்ள க்ஷேமபுரா என்னும் ஊரில்தான் புரந்தரதாசர் வணிகக் குலத்தில் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஸ்ரீனிவாச நாயக்கர். தனது பதினாறாவது வயதில் சரஸ்வதிபாய் என்னும் பெண்ணைத் திருமணம் முடித்தார். இருபதாவது வயதில் தனது பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் தந்தையாரின் தொழிலைத் தானே ஏற்று நடத்த ஆரம்பித்தார். வைரங்களை வியாபாரம் செய்வதும், தங்க நகைகளை அடகுக்கு வாங்கிக் கடன் கொடுப்பதுமான தொழில் அது.. மிகவும் கஞ்சத்தனமானவர் ஸ்ரீனிவாச நாயக்கர். யாரேனும் பண உதவி என்று கேட்டால் அதற்கு ஈடாக எதையாவது கொடுத்தால் மட்டுமே உதவி செய்வார். இல்லையென்றால் மறுத்து விடுவார்.
அவரைத் தன் அடியவனாக்க விட்டலன் மனம் கொண்டான். அந்த நாட்களும் வந்தன... இந்நிகழ்வு நமக்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வையும், பட்டினத்தார் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வையும் நினைவூட்டுகின்றது.
ஸ்ரீனிவாச நாயக்கரின் கடைக்கு ஓர் ஏழை அந்தணர் வந்தார்.
"ஐயா வணக்கம்.. என்னுடைய மகனுக்குப் பூணூல் கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்" என்று அந்த ஏழை அந்தணர் வேண்டினார்.
"நல்லது.. அதற்கு ஈடாக ஏதாவது தங்க சாமானை வைக்க வேண்டுமே" என்று ஸ்ரீனிவாசர் கேட்க,
"என்னிடம் ஏதும் இல்லையே" என்று அந்த அந்தணர் உரைக்க "அப்படின்னா போய்விட்டு நாளைக்கு வாருங்கள்" என்று அனுப்பி விட்டார்.
இப்படியே தினமும் அந்த அந்தணர் வந்து ஸ்ரீனிவாச நாயக்கரை வேண்டுவதும், அவர் மறுப்பதுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன... இந்நிலையில் அந்த நாளும் வந்தது.. அந்த நாள்தான் உலகுக்குப் புரந்தர தாசரை விட்டலன் அறிமுகம் செய்த நாள்.. தன்னை மறந்து தனத்தில் லயித்துக் கொண்டிருந்த தன் தாசனைத் தன்னோடு இணைத்துக் கொண்ட நாள்..
அன்று அதே போல் அந்த ஏழை அந்தணர் ஸ்ரீனிவாச நாயக்கரின் கடைக்கு சென்று உதவி கேட்க அவர் மறுத்து அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். ஏற்கெனவே இதைப் பணியாள் மூலம் அறிந்திருந்த சரஸ்வதி பாய் அந்த அந்தணரைத் தன்னை வந்து காணச் சொல்லி அனுப்பி இருந்தாள். இதன்படி அந்த ஏழையும் சரஸ்வதிபாயை வந்து சந்தித்தார்.
"ஐயா.. இதோ எனது மூக்குத்தியை வைத்துக் கொள்ளுங்கள். இதை விற்று தங்கள் மகனின் பூணூல் கல்யாணத்தை சிறப்பாக நடத்துங்கள்" என்று தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தார்.
அவரும் "மிக்க நன்றி அம்மா" என்று சொல்லி விட்டு மகிழ்ச்சியுடன் ஸ்ரீனிவாச நாயக்கரின் கடையை நோக்கி ஓடினார்..
"ஐயா. தங்க நகைக்கு ஈடாக பணம் கொடுப்பதாகச் சொன்னீர்களே... என்னிடம் ஒரு நகை உள்ளது. இதற்குக் கொடுப்பீர்களா?" என்று வினவினார்.
"கொடுங்கள் பார்க்கலாம்" என்று அந்த நகையை வாங்கிய நாயக்கருக்கு அதிர்ச்சி... இது தனது மனைவியின் நகையாயிற்றே என்று எண்ணியவாறே "ஐயா சற்றே பொறுங்கள். இப்போது வந்து விடுகின்றேன்" என்று அவரைக் காக்க வைத்து விட்டு வீட்டுக்கு விரைந்தார்.
இல்லம் வந்து தன் இல்லாளிடம் "உன் மூக்குத்தி எங்கே?" என்று கேட்டார்.
"அதை சுத்தம் செய்து அங்கே வைத்திருக்கின்றேன். எதற்கு..?" என்று சரஸ்வதி பாய் கேட்க, "எடுத்து வா.. நான் பார்க்க வேண்டும்" என்று நாயக்கர் உரைக்க நடுக்கத்துடன் உள்ளே சென்றார் சரஸ்வதி பாய்.
"இறைவா... இரக்கமுள்ள மனதுக்கு இது போன்ற சோதனை வரலாமா? ஏழைக்கு இரங்கினேன்.. இதோ என் கணவனிடம் மாட்டிக் கொண்டேனே... என்னைக் காப்பாற்று" என்று வேண்டியவாறு தனது நகைப் பெட்டியைத் திறந்தார்..
என்ன ஆச்சரியம்...! அங்கே தனது மூக்குத்தி அப்படியே இருந்தது...
இதென்ன ஆச்சரியம் என்று வியந்து கொண்டே அதைத் தனது கணவருக்கு வந்து காட்டினார். அவரும் தன் கையிலிருந்த அந்த மூக்குத்தியையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்து தான் தவறாக எண்ணி விட்டோமே என்று நினைக்க, சரஸ்வதி பாய் நடந்த உண்மையைக் கூறி மன்னிப்பு கேட்டார்...
"அய்யோ அந்த ஏழைக்கு இரங்கிய உனக்கு இறைவன் இரங்கினானா... " என்று சொல்லிக் கடையை நோக்கி ஓடினார்... அங்கே அந்த ஏழை இல்லை...
"விட்டலா... நீயே வந்து என்னை சோதனை செய்தாயா... " என்று புலம்பியவாறே இல்லம் வந்து, தன் மனையாளை நோக்கி, "இத்தனை நாள் என்னைக் காணவந்தவன் அந்த விட்டலன் என்பதை அறியாது அவனை அலைக்கழித்தேனே... உன்னை அவன் வந்து சந்தித்த முதல் நாளே நீ அவனுக்குக் கொடுத்து பெருமை செய்தாயே" என்று புலம்பி... தன் சொத்துக்களையெல்லாம் ஏழை எளியர்களுக்குத் தானம் செய்தார்.. புரந்தர விட்டலனின் தாசனாக தனது பெயரை புரந்தரதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
கண்ணனின் மேல் கீதங்களை மழையாகப் பாடினார்...
இன்றும் அவரது பாடல்களைக் கேட்கையில் உள்ளம் உருகுவதைத் தவிர்க்க இயலாது.. கர்நாடக சங்கீதத்தின் தந்தையாக இவரே கருதப் படுகின்றார்...
மேலும் நாரதரின் மனுக்குல அவதாரமாகவும் போற்றப் படுகின்றார்.. தனது அனைத்துப் பாடல்களில் ஈற்றடியிலும் புரந்தர விட்டலா என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்...
அவரது பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்....வரும் நாட்களில் நான் அறிந்த அவரது சில பாடல்களையும், அவற்றிற்கான தமிழ் விளக்கத்தையும் பார்ப்போம்.. அதற்கு முன்னதாக கனக தாசரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அடுத்த மடலில் பார்த்து விடுவோம்..
மீண்டும் சந்திப்போம். நன்றி..

செவ்வாய், மார்ச் 08, 2011

ஏனடா ரங்கா... என்றைக்குத் திருக்காட்சி..?

அம்மையே....
தமிழாண்ட கோதை
அம்மையே....!
உன்னை மாலை சூட
தன்னையே தந்த ரங்கன்
என்னையும் ஏற்பானா?
மன்னற் குலத்தினில் பிறந்தவனில்லை
பொன்னோராயிரம் கொண்டவனில்லை
சிந்தையில் அவன் நாமம் செப்புதல் தவிர
மந்திரங்கள் ஏதும் கற்றவனில்லை..
வேதியற்குலத்திற் கனுப்பாமல் என்னை
சாதிகள் ஒழிக்க அனுப்பி வைத்தான்..
ஆயினும் எந்தாயே! அரங்க மாநகரம் வந்து
தாயினும் சிறந்த என் தந்தையைக் காண
கடலன்னக் காதல் கொண்டேன் - அதனைக்
கடுகென்று எண்ணி விட்டானே!..
அன்னையை வணங்கிடில்
அரங்கன் இரங்குவானாம்!
ஆரோ மொழிந்தார் என் அம்மே
ஆரென்று என்னை ஏற்பாய்?
நெஞ்சம் வாடி நின்றழுதேன்.
கொஞ்சம் கருணைக் காட்டிடம்மா...
அரங்கனை என் முன்னே வந்திடச் செய்து
ஆறுதல் செய்திடு உன் மகவை... 
ஏனடா ரங்கா... என்றைக்குத் திருக்காட்சி..?

ஏனடா ரங்கா! என்றைக்குத் திருக்காட்சி?

நின்னை வரமொன்று கேட்பேன் ரங்கா!
என்னை நின்றன் அடியவனாக்கு!
பிறப்பினைத் தகுதி சொல்லி என்னைப்
பிரிந்திரு என்று சொல்லுதல் முறையோ?
மூட மாந்தருக்குத் தெரியுமோ நம்
முந்தைய உறவு எல்லாம்?
கண்ணனாய் நீ என்றன் குருவானபோது
கண்ணற்று நின்ற பாவியடா ரங்கா!
நரசிங்கமாய் வந்து நரனையழித்தபடி
கரங்கொண்டு என்றன் குறையுமழிப்பாய்!
இனியொரு தாய்க்கு நான் கருவாக இயலுமா?
மனிதனாய் மீண்டாலும் மனந்தான் அறியுமோ?
அரங்க மாநகர் தன்னில்
அழகுறப் பள்ளி கொண்ட
எந்தை ரங்கனே!
அழைப்பாயோ என்னை நின்
அழகிய மேனி காண? இல்லை
அழிப்பாயோ இவ்வுயிர் தாங்கும்
ஆக்கையை?
கோபுரம் மட்டும் காண
கோடி ஆசை கொண்டேன்!
நின்றன்
கோலவிழியில் வீழ
கோடிமுறை தொழுது நின்றேன்!
ஏனடா ரங்கா! என்றைக்குத் திருக்காட்சி?

திங்கள், மார்ச் 07, 2011

ஏனடா ரங்கா... என்றைக்குத் திருக்காட்சி?

ஐயனே...அமுதூட்டும் ரங்கனே!
ஐயமின்றி நின் தாள் பிடித்தேன்.
அழுதேன் என்றும் உனையே
தொழுவதற்கு நான்...
காணுமிடமெல்லாம்
கண்ணனே உனையன்றிக்
கலையேதுமுண்டோ?
நாலு குலங்களமைத்தாய் - இவ்வுலகம்
நாசமடைவதற்கோ?
கன்னடத்துக்
கனகதாசனுக்குக்
கருவறையில் நீ
உருத்திரும்பி நின்றாயே! இந்தக்
கந்தனுக்கு நீ
காட்சி தரும் நாளுமுண்டோ?
துயில் எழுகையிலெல்லாம் "என்
துயர் தீர வருகிறேன் ரங்கனே! "
என்றே நானும் அழுதமைக்குச்
சான்றும் வேண்டுமோ?
மனமிரங்கித் திருக்காட்சி தர
இனமொரு தடையோ ரங்கா?
கீழ்க்குலத்தில் படைத்தவனும் நீயே!
கீழிறங்கி வரமறுப்பதுமேனோ?
வரந்தந்தால் உன்னை வந்து காண்பேன்..!
கரங்குவித்து நின் தாளில் வீழ்வேன்...!
மறுப்பதும் நீயேயானால்
வெறுப்பதற்கில்லை..
பழியை உன்மேல் சாற்றி
அழித்து விட்டுப் போவேன்...
ஏனடா ரங்கா.. என்றைக்குத் திருக்காட்சி???