திங்கள், மார்ச் 28, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

காட்டழகிய சிங்கபெருமாளின் ஆசியைப் பெற்று விட்டு ஆலயத்தை விட்டு வெளியே
வந்தோம். அங்கிருந்து பேருந்தில் உறையூர் புறப்பட்டுச் சென்றோம். முதல்
நாள் திருவரங்கத்தானை ரங்கநாயகி நாச்சியார் உள்ளே விட மறுத்த காரணம் அவன்
இந்த உறையூர் வந்து தாமதமாக சென்றதால்தான்... உறையூர் நம் சோழர்களின்
தலைநகரமாக விளங்கியது அல்லவா? நரைதரித்து உரைசொன்ன கரிகால சோழனின்
தலைநகரமும் இந்த உறையூர் அல்லவா? (சோழர்களின் அரண்மனை இங்கு
காணக்கிடைக்கின்றதா? நாங்கள் ஆலயத்தைத் தரிசித்து விட்டு தொடர் வண்டி
நிலையத்துக்கு உடனே சென்று விட்டதால், இதைப் பற்றி யாரிடமும் கேட்க
இயலவில்லை)

ஆலயத்தைப் பற்றி நண்பன் விஜயராகவன் சொன்ன வரலாறு. சோழ மன்னனின் மகள்
கமலவல்லி நாச்சியார் திருவரங்கத்தான் மீது காதல் கொண்டாள். அவனை
அடைவதற்குரிய விரதங்களை மேற்கொண்டாள். எனவே திருவரங்கத்தான் தானே
எழுந்தருளி கமலவல்லித் தாயாரை மணமுடித்தான். வருடத்திற்கொருமுறை இந்த
பங்குனி உத்திரத்திருவிழாவின் போது திருவரங்கத்தான் அங்கிருந்து இங்கு
வந்து கமலவல்லித் தாயாருடன் இணைந்து பக்தர்களுக்கருள்கின்றான். இங்கு
எழுந்தருளி இருக்கையில் நம்பெருமாளுக்கு திருவரங்கத்து பங்குனி உத்திரத்
திருவிழா நினைவுக்கு வருகின்றது.. எனவே இங்கிருந்து புறப்பட்டுச்
செல்கின்றான். ஆனால் ரங்கநாயகி நாச்சியார் ஊடல் கொள்கின்றாள்.. இதைத்தான்
நாம் நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோமே...

இதனை விஜயராகவன் சொல்லிக் கொண்டிருக்கையில், நண்பன் விக்ரம் பாபு "பாரு
நாகராஜ். இந்தாளு போற இடத்துல எல்லாம் ஒரு பொண்டாட்டி கட்டிட்டிருந்தா,
அந்த அம்மாவுக்கு கோபம் வராம என்ன செய்யும்" என்றான். நகைத்தோம்.
அப்போது இன்னொரு செய்தியும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. நம் திருவரங்கத்து
பெருமாளை முஸ்லீம் அரசர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அந்த
முஸ்லீம் மன்னனின் மகளும் திருவரங்கத்தான் மீது காதல் கொண்டாள். அவளையும்
மணந்தான். அவளையே "துலுக்க நாச்சியார்" என்று அழைக்கின்றார்கள்..

இதற்குள் ஆலயம் வந்து விட்டது. மூட்டைமுடிச்சுகளை  பத்திரமாக வைத்து
விட்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்தோம். கொடிமரத்தை வணங்கி விட்டு இடப்புறமாக
உள்ளே சென்றால், நம்மாழ்வார் சன்னதி... "உங்க ஊர்க்காரர்தாம்பா..
பாத்துக்கோ" என்று விஜயராகவன் நகைத்தான். ஆழ்வார்களில் நம்மாழ்வாருக்குத்
தனி இடம்.. அத்தனை ஆழ்வார்களும் ஊர் ஊராகத் தேடிச்சென்று பாடினார்கள்..
ஆனால் எல்லா ஊரின் பெருமாள்களும் நம்மாழ்வாரைத் தேடிச்சென்று பாடல்
பெற்றார்கள்.. நம் ஊருக்கு மிக அருகிலேயே இவரது திருத்தலம் இருந்தும்,
விஜயராகவன் அழைத்துச் செல்லும் வரை அந்த பகுதிகளையெல்லாம் தரிசிக்காமல்
இருந்தது நான் செய்த பிழை என்று நொந்து கொண்டேன்.

நமது தாமிரபரணிக்கும் பெருமை இருக்கின்றது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத்
தொகுத்த நாதமுனிகள் தாமிரபரணிக் கரையில் தவமிருந்துதான் நம்மாழ்வாரின்
தரிசனம் பெற்றார். நம்மாழ்வார் மூலமாகத்தான் நாலாயிரம் பாடல்களும்
மீண்டும் கிடைக்கப் பெற்றன..

நம்மாழ்வார் சன்னதி சென்றோம். சுவற்றில் அழகிய படங்கள்
வரையப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிலரின் பெயர்களும் அவர்களின் காதலர்களின்
பெயர்களும் கிறுக்கப்பட்டிருந்தது வேதனை அளித்தது.. படங்களை விஜயராகவன்
புகைப்படம் எடுத்தபோது தடுக்கப் பட்டான். தடுத்தவர் சென்ற பின் "நான்
போட்டோ எடுக்குறப்போ வந்து தடுக்கறான்.. இந்த மாதிரி
கிறுக்கிட்டிருந்தப்போ என்ன பண்ணிட்டிருந்தானாம்?" என்று ஆவேசப்பட்டான்
விஜயராகவன்....

நம்மாழ்வாரை வணங்கி விடைபெற்றோம். அடுத்ததாக திருப்பாணாழ்வார் சன்னதி
இருந்தது. திருப்பாணாழ்வார் பற்றி விஜய் ஆனந்த் சொல்ல ஆரம்பித்தார்.
"நாகராஜ் பாருங்கோ. இவர் பிராமணாள் இல்ல... ஆனாலும் ஸ்ரீரங்கன் மீது அளவு
கடந்த பக்தி வச்சிருந்தார். " என்று திருப்பாணாழ்வார் பற்றி உரைத்தார்.
திருப்பாணாழ்வார் தன்னோட கால் ஸ்ரீரங்கம் மண் மேல பட்டுவிடக்கூடாது
என்பதற்காக காவேரியின் இக்கரையில் நின்றே வணங்குவார். திருவரங்கனுக்கு
பூஜை செய்யும் ஒரு பட்டர் காவேரியில் நீர் எடுத்துக் கொண்டு செல்கையில்
திருப்பாணாழ்வார் மனமுருகி பாடிக் கொண்டிருந்தார். அவரை நகர்ந்து
செல்லுமாறு இவர் சொல்ல, பக்திப் பரவசத்தில் மூழ்கியிருந்த
திருப்பாணாழ்வாருக்கு இவர் உரைத்தது கேட்கவில்லை. எனவே அவர் நகரவில்லை.
எனவே ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார் பட்டர். அவரது
நெற்றியிலிருந்து இரத்தம் பொங்கியது. சுயநினைவுக்கு வந்த
திருப்பாணாழ்வார் வருந்தி வழிவிட்டார்..

தன் பக்தனைக் கல்லால் அடித்தவன் தனக்கு அமுது செய்ய வந்தால் அதைக் கட்டு
நம் திருவரங்கத்தான் பொறுப்பானா? ஆலயம் சென்ற பட்டருக்கு அதிர்ச்சி
காத்திருந்தது. அங்கே திருவரங்கத்தானின் நெற்றியிலிருந்தும் இரத்தம்
வழிந்து கொண்டிருந்தது.. கண்ணன் ஆவேசமாய் இன்னொரு அந்தணர் மேல்
இறங்கினான். தன் பக்தன் திருப்பாணாழ்வாரைக் கொண்டு வந்தால்தான் துளசி
தீர்த்தமாவது உட்கொள்வேன் என்றுரைத்தான்.. கல்லால் அடித்த பட்டர்
ஓடினார்... திருப்பாணாழ்வாரை அழைத்த போது அவரோ "எனது கால்கள்
திருவரங்கத்து மண்ணில் படலாமா? நான் சூத்திரனாயிற்றே எனப் புலம்ப, அவரைத்
தன் தோள் மீது இருத்தி சுமந்து வந்தாராம் பட்டர்... திருப்பாணாழ்வார்
தரிசனம் செய்த பின்னரே திருவமுது உண்டானாம் திருவரங்கத்தான்... என்னே
உனது எளிமை கண்ணா... எளியோர்க்கு எளியோனாய் இரங்குகின்றாய்...எளியோரின்
பக்திப் பெருமையை உலகறியச் செய்கின்றாய்... எங்கள் திருவரங்கத்தம்மாவே
உன் கருணையே கருணை....

திருப்பாணாழ்வாரை வணங்கி வெளி வந்த போது மூலவர் சன்னதி இன்னமும்
திறந்திருக்க வில்லை.. எனவே தெப்பக்குளத்தருகே காத்திருந்தோம்.
இச்சமயத்தில் விஜயராகவனும், விஜய் ஆனந்தும் தங்கள் சந்தியாவந்தனத்தை அந்த
தெப்பத்திலேயே செய்தனர். நாங்கள் குழந்தையுடன் விளையாடிக்
கொண்டிருந்தோம். அவர்கள் சந்தியாவந்தனம் செய்து முடித்து வந்தார்கள்..
சற்று நேரத்துக்கெல்லாம் நடை திறக்கப் பட்டு விட்டது.

மூலவர் சன்னதிக்குள் நுழைந்தோம். ஆஹா... என்ன ஒரு அழகு... இவர் அழகைக்
கண்டுதான் இவருக்கு அழகிய மணவாளர் என்று பெயரிட்டார்களோ? நின்ற
திருக்கோலத்தில் அழகிய மணவாளரும், நின்ற திருக்கோலத்தில் கமலவல்லித்
தாயாரும்... இருவரும் நின்று திருக்கோலம் காண்பிப்பதை இப்போதுதான்
முதன்முறையாகக் காண்கின்றேன்.. பக்தியில் மெய்மறந்து கை கூப்பி வணங்கி
நின்றோம். அழகிய மணவாளனே, கமலவல்லித் தாயாரே எங்கள் வாழ்க்கையையும் எந்த
இடரும் வராமல் காத்தருள வேண்டும் என்று வேண்டி விடைபெற்றோம். அப்படியே
பிரகாரம் சுற்றி வந்து சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறினோம்.. மீண்டும்
ஒருமுறை நம்மாழ்வார் சன்னதி சென்று வணங்கி விடைபெற்றோம்.

உறையூர் கமலவல்லித் தாயார், அழகிய மணவாளரைத் தரிசத்தமையுடன் எங்கள்
திருவரங்கச்செலவு நிறைவு பெற்றது. அங்கிருந்து புறப்பட்டு
திருச்சிராப்பள்ளி தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தோம்..கதைகள் பேசிக்
கொண்டு தொடர்வண்டிக்காகக் காத்திருந்தோம்...

நண்பன் விஜயராகவன் கேட்டான்.. "என்ன நாகராஜன்.. திருப்திதானே..? ஒரு
குறையுமில்லையே...?"

என்னதான் பதில் சொல்வது... ? யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு?
யாருக்குக் கிடைத்திருக்கும் இப்படி ஒரு நட்பு? தாம் அறிந்தவற்றை
அறியாதோருக்கும் பகிர்பவனே அந்தணன் என்று கற்றோம்.. ஆனால் வெளி உலகில்
நாம் கண்ட அந்தணர்களுள் அப்படிப்பட்டவர்களைக் கண்டதே இல்லை.... வெகு
சிலரைத் தவிர.. ஆனால் என் நண்பனோ..... நான் கண்ட அந்தணர்களில் உயர்ந்து
நின்றான்... திருமால் பக்திக்கு என் மனத்தில் அடித்தளம் இட்டதும் அவனே...
எங்கள் ஊருக்கு அருகிலுள்ள நவதிருப்பதி திவ்யதேசங்களுக்கு என்னை
அழைத்துச் சென்றதும் அவனே... இப்படிப்பட்ட நண்பன், எனக்காகத் தன் படிப்பு
வேலைகளையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு திருவரங்கம் வந்து
திவ்யதேசங்களைக் காட்டி விட்டு என்ன குறையுளது என்று கேட்டால் என்ன
இயம்புவது???

என் மனத்தில் எழுந்த ஒற்றை வரியை உதிர்த்தேன்... "உலகுக்கு இராமானுஜன்..
எனக்கு விஜயராகவன்..."

தடுத்தான்... "என்னைப் போய்  அவரோடல்லாம் ஒப்பிடலாமா?? அவர் தகுதிக்கு
முன்னாடி நானெல்லாம் எதுவுமே இல்ல..." என்று அவன் மறுத்தாலும், நான்
சமுதாயப் புரட்சி செய்த அந்த இராமானுசனை என் நண்பனுள் கண்டு களித்தேன்...
தனக்குக் குரு உபதேசித்தவற்றைத் தான் நரகுக்குப் போனாலும் பரவாயில்லை
என்று உலகத்து மாந்தருக்கு உரைத்த இராமானுசனாகத்தான் விஜயராகவன்
தென்பட்டான்.... அவனுக்கு இந்த ஒற்றை வார்த்தைகளை விடுத்து இந்த
ஏழைக்கவியால் என்னதான் செய்திட இயலும்??? கோடானு கோடி ஜென்மங்கள் எடுத்து
தீர்த்தாலும், அவன் செய்த உதவிக்கு நன்றி பகர்ந்திட இயலுமா??

வார்த்தைகள் வர மறுக்கின்றன... நன்றி என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லி என்
நட்பினை சமாதானம் செய்திட இயலுமோ?? அந்த பள்ளி கொண்டானை... எங்கள்
திருவரங்கத்தம்மானை... ஏழையின் கவிகட்கிரங்கியவனை.... எங்கள் நண்பர்கள்
நலமுடன் வாழப் பிரார்த்தித்து விடை பெற்றோம்.. தொடர் வண்டி வந்தது... ஏறி
அமர்ந்தோம்......... பிரியா விடை பெற்றோம்....

நாராயணனை... நம்பினோர்க்கும், நல்லோர்க்கும் அருள் புரியும் உத்தமனை...
அண்டமெல்லாம் காக்கும் அரங்கனை... எங்கள் பெருமானை.... கூடாரை வெல்லும்
கோவிந்தனை.... வங்கக் கடல் கடைந்த மாதவனை... கேளிக்கைகள் செய்து
மகிழ்விக்கும் கேசவனை... செந்தமிழ்ப்பாசுரங்கள் போற்றும் செந்தாமரைக்
கண்ணனை... உலகத்தோர் அனைவருக்கும் நன்மை புரிய வேண்டி தங்களிடமிருந்தும்
விடைபெறுகின்றோம்...

பொறுமையாக படித்து மகிழ்ந்த அன்பர்களுக்கு நன்றி....
நமோ நாராயணாய... நமோ நாராயணாய... நமோ நாராயணாய....

கருத்துகள் இல்லை: