புதன், ஏப்ரல் 01, 2009

இலக்கியம் சுவைப்போம்..

நண்பர்களுக்கு வணக்கம். தமிழிலக்கியத்தின் சுவையை நான் சுவைத்த நோக்கில் இவ்விடம் பகிர்ந்து தர விரும்புகிறேன். உலகின் எம்மொழி இலக்கியத்தைக் கற்றாலும், தாய்மொழியாம் தமிழின் சுவை நெஞ்சத்தில் நீங்காது இருப்பது கண்டு வியப்பு. இறைவனுக்கோ தமிழின் மீது தணியாத காதல். அதனால்தான் தென் தமிழகத்தில் உதித்த தடாதகை பிராட்டியாரை மணங்கொண்டு சொக்கேசனாக மதுரை நகர் அமர்ந்து பாண்டிய நாட்டினை முறை செய்தான். "தமிழால் வைதாலும் அருள் செய்வான் சிவன்" எனும் பொருள் கொண்ட தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு. தன்னை வைதவன் தமிழால் வைதால் அது எமக்குப் பெருமையே என்று இறைவன் ஏற்றுக்கொள்வதாக அப்புலவனுக்கு நம்பிக்கை. நாம் தமிழிலக்கியத்தை முறையாகக் கற்கவில்லை, கடலின் ஆழம் சென்று முத்தெடுத்தவனில்லாயினும் கரையிற் குளித்தவனுக்கும் கடலின் பெருமை தெரியுமல்லவா? அத்தன்மைபோலே, இங்ஙனம், எம் சிற்றறிவுக்கு எட்டியவரை, யாம் சுவைத்த இலக்கியத்தின் சுவையை, நீங்களும் பெற்றிட பதிவு செய்கிறேன். படித்து இன்புறுங்கள். பின்னூட்டம் எழுதுங்கள்.
இன்றைய சுவை:-
படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே..
இந்த பாடல் பாண்டியன் அறிவுடை நம்பி இயற்றியது....
இதன் பொருள் : செல்வம் பல பெற்று, பலருடன் இணைந்து உணவு உண்ணும் செல்வம் கொண்டவராயினும், சின்னஞ்சிறிய பிஞ்சுக்கால்களால் குறுக்கே குறுக்கே நடந்து, அழகிய சிறுகைகளால் பாத்திரத்தில் உள்ள உணவை எடுத்து அது கீழே விழுந்த போதும் கூட அதனையும் எடுத்துத் தின்று வாயால் கவ்வியும், கையால் துழாவியும், நெய்ச்சோற்றை உடம்பு முழுதும் விதிர்த்தும் செய்யக்கூடிய இவ்விளையாட்டுக்களால் நம் அறிவை மயக்கும் குழந்தைகளை இல்லாதவர்களுக்கு பயனாகக்கூடிய பொருள் வேறு ஏதுமில்லை என்பதாகும்.
இந்தக் கவிதையை உற்று நோக்குகையில் அதன் சொற்சுவை மற்றும் பொருட்சுவையில் தன் நிலை மறந்து போகிறோம். எத்துனை அரிய அருமையான கருத்து இது. மக்களை வர்ணனை செய்த அக்கவிஞனின் சொல் விதைகளை நோக்குங்கள். "இடைப் படக் குறு குறு நடந்து சிறு கை நீட்டி இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்" என்று அவன் பாடுகையில் நம் எதிரே அழகிய சிறு குழந்தை ஒன்று விளையாடி ஓடிச்செல்வது போன்ற காட்சி தோன்றுகிறது அல்லவா???
நம் பெருமைக்குறிய கதா பாத்திரம் மனோன்மணியைப் பற்றி, சுந்தரனார் இவ்வாறு உரைப்பார்.
".... இமையவர்க் காக
முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி
தவசிக டனித்தனி யவிசு சொரிந்துந்
தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தி னெடுஞ்சுழி சுழித்து
மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது......"
என் நெஞ்சை விட்டு நீங்காத ஒரு காட்சி இது. தேவருக்கென மன்னன் அமைத்த வேள்வியின் தீ அமர்ந்து போனது கண்டு அனைவரும் துக்கித்திருந்த போது, மனோன்மணி தன் சிறு கரங்களால் நெய்பெய்த போது பொங்கி எழுந்தது என்று அவர் வர்ணனை செய்யுமிடத்து பாண்டியர் குழம் தழைக்கத் தோன்றிய மனோன்மணி என் கண்ணெதிரே தோன்றி, தனியொரு வேள்வி வளர்க்கும் காட்சி தெரிகிறது..
உலகுக்கெல்லாம் பொதுமறை தந்து, தமிழகத்தின் பெருமையை வானாளவ உயர்த்திய, தமிழய்யன் வள்ளுவப் பெருந்தகையின் பாடல் இது
"குழலினி தியாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்"
மக்களின் மழலைச் சொற்களுக்கு முன்னால் இசையாவது, மண்ணாவது... என்பதுபோல் முகத்திலடிக்கிறது இப்பாடல்.
கல்லூரியில் எமக்கு சிலம்புப் பாடம் எடுத்த தமிழாசிரியர் ஓர் நாள் "சிலம்பில் உள்ள குறை யாது?" என்றார்.
அனைவருக்கும் வியப்பு. நெஞ்சையள்ளும் சிலம்புக் காவியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் அடையாளச்சின்னமல்லவா.. அதில் என்ன குறை தேடுகிறார் இவ்வாசிரியர் என்றே சிந்தித்தோம்.
இளங்கோவைப் போல் ஒரு புலவன் மேதியினில் எங்கேனும் பிறந்ததில்லையென்று மார்தட்டினானே முண்டாசுக் கவிஞன்... அவன் படைப்பில் என்ன குறை இருக்க இயலும்??
அரச குலத்துதித்தும், அண்ணனுக்காகத் தன் அரச வாழ்க்கையையே தியாகம் செய்த இளவல் எழுதிய காப்பியத்தில் குறையா??
சோழ நாட்டு வணிகனொருவனைத் தவறிய முறை செய்து கொலைக் களம் காணச்செய்தது அரசியல் பிழை என்று அவன் கற்புடை மனைவி நிரூபித்த போது, தன் தவறுணர்ந்து பழிச்சொல் ஏற்க இடந்தராது, அறங்கூற்றால் தன் உயிர் நீத்த பாண்டியனின் வரலாறு சொல்லும் காப்பியத்தில் குறையா?
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்ற தத்துவம் சொல்லிக் கண்ணகி என்ற தமிழ்ப்பெண்ணை உலகம் போற்றும் பத்தினித் தெய்வமாக வடித்த காப்பியத்தில் குறையா?
இப்படியெல்லாம் நாங்கள் குழம்பித்தவித்துப் பின்னர் அவரிடமே வினவியபோது, அவர் சொன்ன பதில் சிந்திக்க வைத்தது..
சிலம்பில் மக்கட்பேறு பற்றிய சுவை இல்லை என்றார்.
கோவலன், கண்ணகி மணவிழாவில் துவங்கி கண்ணகி தெய்வநிலையை அடைந்த வரலாற்றைச்சொல்லும் காவியத்தில் காவிய நாயகருக்கு மக்களில்லாததை பெரும் குறையாகக் காட்டினார் எம் பேராசிரியர்.
ஓஹோ என்று அமைதியானோம்.
ம்ம்ம்.
மீண்டும் அடுத்த பதிவில் நெஞ்சை அள்ளும் சிலம்பின் சுவையோடு உங்களை சந்திக்கிறேன்.
நன்றி...