செவ்வாய், செப்டம்பர் 07, 2010

சொல்லால் அடித்த சுந்தரி... (சிறுகதை)

சொல்லால் அடித்த சுந்தரி... (சிறுகதை)
- மு. கந்தசாமி நாகராஜன்.
"அய்யா உள்ள வரலாமா?" குரல் கேட்டு நிமிர்ந்ததும் அதிர்ந்தான் மோகன். அங்கே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
"வாங்க... உள்ளார வாங்க..." வாய் வார்த்தைகளை உதிர்த்தாலும் மனது பழைய நிகழ்வுகளை நோக்கி நகர்ந்தது..
"அய்யா. நான் செல்வராணி. இந்த சொக்கலிங்க புரத்தோட கவுன்சிலர். நேத்தைக்கு ஸ்கூல்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க.. அதான் என்னன்னு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்." அவள் வார்த்தைகள் மோகனை பழைய நினைவுகளுக்குள் போகவிடாமல் தடுத்தது.
'இன்னமும் நீ மாறலியா ராணி... அதே போராட்ட குணம் இன்னமும் உனக்குள்ள இருக்கா?' மனதுக்குள் துடித்த வார்த்தைகள் வாயைக் கடக்க மறுத்தன..
"ஆமாங்க.. நான் இங்க ஹெட்மாஸ்டரா சார்ஜ் எடுத்து ஒரு வாரம்தான் ஆச்சு. சில விசயங்கள இதுக்கு முன்னாடி இருந்தவங்க கண்டுக்காம விட்டுருக்காங்க.. ஆனா என்னால அதக் கண்டும் காணாம இருக்க முடியல. அதுக்காகத்தான் நடவடிக்கைகள் எடுத்தேன்." அவள் முகம் பார்க்காது வெளிவந்தன மோகனது வார்த்தைகள்.
"அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு செல விசயங்கள செஞ்சிர முடியாது சார். நம்ம மக்கள மாத்துறதுக்கு நாம கொஞ்ச நாள் காத்துதான் இருக்கனும். புரிஞ்சதா?"
"இல்லைங்க.. நம்ம பள்ளிக்கூடத்து பி.டி மாஸ்டர் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரரா இருக்குறதால அவர் பேச்சக் கேட்க மாட்டோம்னு சொல்றதும், அவர மரியாத இல்லாமப் பேசுறதும் ஏத்துக்கிடக் கூடிய விசயங்களா? நீங்களே சொல்லுங்க.. சாதி வேறுபாடு இல்லாம பழக வேண்டிய பள்ளிக்கூடத்துலயே இந்த வாத்தி அந்த சாதிக்காரன். அவன் பேச்ச நான் எப்படிக் கேட்க முடியும்னு ஒரு மாணவன் எப்படிச் சொல்லலாம்? இதுக்காகவே அந்த வகுப்புக்கு இதுவரைக்கும் அவர் டிரில் எடுத்ததே இல்ல.. என்னோட பிரியட்ல அப்படி நடக்க நான் விடமாட்டேன்.. இந்த ஊரு மொத்தமும் எதுத்து வந்தாலும் சரி. அவர் டிரில் எடுக்கனும். அந்த பையன் பணியணும். அவ்ளோதான். அதுக்காக கவுன்சிலர் வந்தாலும் சரி. பண்ணையார் வந்தாலும் சரி. நான் பயப்படப் போறதில்ல..." கொஞ்சம் உரக்கப் பேசினான் மோகன்.
"யாரு நீங்களா??? பயப்படப் போறதில்லன்னு பேசறது நீங்கதானா???" என்று சொல்லிவிட்டு அமைதியானாள் செல்வராணி.
மோகனின் மனது பின்னோக்கிப் போனது..

---
மோகனுக்கும் சொக்கலிங்கபுரம்தான் சொந்த ஊர். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படித்துப் பெரிய வாத்தியாராக வேண்டும் என்பது அவனது சிறுவயது ஆசை. அதற்காகவே முயற்சி எடுத்துப் படித்துக் கொண்டிருந்தான். ஒரு புறம் ஏழ்மை மறுபுறம் தனது தணியாத ஆவல். ஆயினும் தனது விடா முயற்சியால் படித்துக் கொண்டிருந்தான். இன்னொரு பக்கம் அவர்களுக்குச் சொந்தமான வயல்கள் அந்த ஊர் பண்ணையாரிடம் விலைக்குப் போய்க்கொண்டிருந்தன. கல்லூரியில் படிக்கும்போதுதான் பண்ணையார் மகள் செல்வராணி அறிமுகம் ஆனாள். இருவரும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் என்றாலும் அவளை அந்தக் கிராமத்தில் மோகன் பார்த்ததே இல்லை. அவள் நகரத்தில் உள்ள தனது சித்தியின் வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு முறை கல்லூரி நிர்வாகம் தேர்வுக் கட்டணம் கட்டாத மாணவன் ஒருவனைக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்தது. அச்சமயம் அம்மாணவனுக்காகக் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி தானே கட்டணம் கட்டி மீண்டும் சேர்க்கச் செய்தபொழுதுதான் செல்வராணியை அவன் சந்தித்தான்.
"ரொம்பவும் போல்டான பொண்ணுடா இவ" என்று நண்பனிடம் சொன்னபோது அவன் சொன்ன செய்தி இவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..
"டேய் அவளும் உங்க ஊர்க்காரிதாண்டா... :"
"என்னது . எங்க ஊர்க்காரியா?? சும்மா கதை விடாதடா. நான் எங்கூரில இதுக்கு முன்னாடி இவளப் பாத்ததே இல்ல?"
"அட ஆமாப்பா. என் கிளாஸ்மேட்தான் அவ.. முதல்நாள் அறிமுகத்திலேயே அவ சொன்னத எங்காதால கேட்டேன்.."
மனதுக்குள் பெருமிதம். நம்ம ஊர்ப் பெண் இங்கு வந்தும் ராஜாங்கம் செய்கிறாளே என்று.. அந்த வார இறுதியில்தான் அவளும் அவன் செல்லும் பேருந்திலேயே புறப்பட்டாள்.
"என்னங்க.. நீங்களும் சொக்கலிங்க புரமாமே?" வலிய சென்று பேசினான் மோகன்.
"ஆமாங்க.. நீங்க?"
"நானும் அதே ஊர்தான். இது நாள்வர உங்கள அங்கப் பாத்ததே இல்ல"
"இல்ல.. நான் எங்க சித்தி வீட்டுல இருந்து படிக்கிறேன்.. மாசம் ஒருவாட்டிதான் ஊருக்கு வருவேன். அதனால நீங்க பாத்திருக்க மாட்டிங்க.."
இப்படித்தான் ஆரம்பித்தது நட்பு.. பின்னர் அவள் சித்தி வீட்டுக்குச் செல்லும் போதும் ஒரே பேருந்தில்தான் பயணித்தனர். கல்லூரியிலும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டனர். அந்த நட்பும் ஒருநாள் காதலாக மாறியது. மோகனுக்கு ஆரம்பத்திலிருந்தே பயம் இந்தக் காதல் கை கூடுமோ கூடாதோ என்று.
"செல்வா.. நான் ஒண்ணு சொன்ன கோபப் பட மாட்டியே..."
"ஒண்ணும் பட மாட்டேன் சொல்லு"
"இல்ல.. நீ வேற சாதி.. நான் வேற சாதி.. எங்க நிலத்த எல்லாம் உங்க அப்பாகிட்ட வித்துதான் என் அப்பா என்னப் படிக்க வைக்கிறாரு.. அப்படி இருக்கையிலே நம்ம கல்யாணம் அப்படிங்கறது நெனச்சுப் பாக்கக் கூடிய விசயம்தானா?"
"அட இவன் ஒருத்தன்பா.. சாதிகளை எல்லாம் எடுத்துறலாம்னு சட்டம் போட அரசாங்கம் திட்டம் போட்டுட்டு இருக்கு. இன்னமும் அதப் பத்தியே பேசுறான்பா... அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. எங்க அப்பா என் விருப்பத்துக்கு மாறா எதுவும் செய்ய மாட்டார் போதுமா?"
செல்வராணியின் வார்த்தைகள் நம்பிக்கை தந்த போதும் மனதுக்குள் சிறு உதறல் இருந்து கொண்டே இருந்தது.
அவள் பட்டப் படிப்போடு நின்று விட, கல்வியியல் பயில்வதற்காகத் தொலை நகரத்துக்குப் போனான் மோகன். ஆயினும் அவர்கள் காதல் கடிதங்கள் மூலம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன..
ஆண்டுகள் ஓடின. மோகனின் படிப்பு முடிந்ததும் அரசுப் பணிக்காகக் காத்திருந்தான். இந்நிலையில்தான் அவர்களது காதல் செல்வராணியின் அண்ணன் மூலம் அவளது தந்தையாருக்குத் தெரிய வந்தது. மோகனை அழைத்து மிரட்டினார்.
"இங்க பாருப்பா.. நீ என்ன சாதின்னு உனக்குத் தெரியாதா? என்ன தைரியத்துல என் பொண்ண விரும்பலாம்னு நினச்சே..."
"சாதிய எடுத்துடறதுக்கு சட்டம் போடலாமான்னு அரசாங்கம் யோசிச்சிட்டிருக்கு.. நீங்க என்னய்யா முட்டாள்த்தனமா நீ என்ன சாதி அப்படி இப்படின்னு பேசறீங்க...."
"ம்ம்ம்ம் போடுவான்யா.. போடுவான்... கேக்குறவன் என்ன கேனப் பய பாத்தியா.." என்று கிண்டலோடு பேசியதோடு மட்டுமல்லாது மோகனது குடும்பத்தை அடித்தே அந்த ஊரை விட்டு விரட்டினார்.
மோகனும் தான் பயின்ற நகரத்துக்குச் சென்று அங்குள்ள தனியார் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தான். பின்னர் அவன் சொக்கலிங்கபுரம் ஊரைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. செல்வராணியின் நினைவுகளும் மெல்ல மெல்ல அவனது நினைவிலிருந்து அகன்றன. அவனுக்கும் அரசுப் பணி கிடைத்தது. அவன் பணிக்குச் சேர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது மகளையே மோகனுக்கு மணம் முடித்து வைத்தார். அவன் மனைவி நிர்மலா, மிகவும் நல்லவள். அவளிடம் திருமணத்துக்கு முன்னரே தனது பழைய காதல் பற்றிய செய்தியைச் சொல்லிவிட்டிருந்தான். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.
காலச்சக்கரம் சுழன்றது. நிர்மலா அழகியதொரு ஆண் மகவை ஈன்றெடுத்தாள். சொக்கலிங்கபுரத்திலிருந்து மோகன் விரட்டியடிக்கப் பட்டு எட்டாவது ஆண்டு, அவனுக்கு அந்த ஊர் மேல்நிலைப் பள்ளிக்கே மாற்றல் வந்தது. அதுவும் தலைமை ஆசிரியர் என்ற பதவி உயர்வோடு..
சொந்த ஊரைப் பார்க்கப் போகிற மகிழ்வு.. அந்த ஊர் தன்னை எப்படிப் பார்க்குமோ என்னும் எண்ணம். இப்படிப் பட்ட பல குழப்பமான மனநிலையோடு புறப்பட்டவனோடு அவனது பெற்றோர் வர மறுத்து விட்டனர். தனது பெற்றோரை நகரத்தில் குடிவைத்து விட்டு, மனைவி மற்றும் மகனோடு கிராமத்துக்குச் சென்றான் மோகன்...
அங்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று.. யாரிடமும் எதையும் விசாரிக்க முடியவில்லை.
ஆனால் பள்ளியில் இவனிடம் தண்டனை பெற்ற மாணவன் செல்வராணியின் அண்ணன் மகன் என்பது மட்டும் புரிந்தது..
இன்றுதான் செல்வராணியை நேரில் பார்க்கிறான்..
----
"என்ன பழைய நினைவுகள் போலிருக்கு??" கிண்டலாகக் கேட்ட செல்வராணியின் முகத்தை நோக்கினான். கழுத்தில் தாலியில்லை. ஆனால் வேறு ஆபரணங்கள் அணிந்திருந்தாள்.. ஒருவேளை இவளுக்கு மணமாகி, கணவன் இறந்திருப்பானோ...? என்ற எண்ணம் தோன்றியது..
" ஆமாங்க.. உங்களுக்குத் திருமணம் எப்போது நடந்தது? எத்தனைக் குழந்தைகள்?" அடுக்கடுக்காய் வினாக்களைத் தொடுத்தான்.
"கல்யாணமா?? எனக்கா??? வாழ்க்கையில நான் காதலிச்சது ஒருத்தரைத்தான். கல்யாணம் முடிக்கனும்னு நெனச்சது அவரோடதான். ஆனா என்ன பண்றது. அந்த ஆள் பயந்து இந்த ஊரை விட்டு ஓடிப் போய்ட்டார்... இன்னொருத்தனைக் கல்யாணம் செஞ்சிக்கறதுக்கு என் மனசு இடம் கொடுக்கல... எங்க அப்பாவும் அவர் திரும்பி வந்தா கல்யாணம் செஞ்சி வைக்கிறதா சொன்னாரு. ஆனா அவரும் வரல. எனக்குக் கல்யாணமும் நடக்கல..."
செல்வராணியின் வார்த்தைகள் சம்மட்டியாய் மோகனின் நெஞ்சில் பாய்ந்தது...
"நீ... நீங்க என்ன சொல்றீங்க..?" வார்த்தைகள் குழறின.
"நிஜத்தைத் தான் சொல்றேன்...அன்னைக்கு எங்க அப்பாவுக்குப் பயந்து இந்த ஊர விட்டுப் போனீங்க.. உங்க கிட்ட இருந்து தகவல் வருமின்னு காத்துக் காத்துக் கிடந்தேன்.. வரல... என் நிலையக் கண்டு என் அப்பாவும் அதிர்ச்சில கண்ண மூடிட்டாரு... நான் சமூக சேவகியா என்ன வளர்த்துக் கிட்டேன்.. இன்னைக்கு இந்த ஊரோட கவுன்சிலரா இருக்கேன்..."
".................."
"நீங்க தண்டன கொடுத்தது வேற யாருக்கும் இல்ல. என் அண்ணன் பையனுக்குத்தான்.. அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கிட்டு நான் உங்களோட பேசறதுக்கு வரல...இந்த ஊரு இப்படித்தான். நாமதான் கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்குப் புரிய வைக்கனும். அது ஒரு நல்ல ஆசிரியரோட கைலதான் இருக்கு.. ஒரே நாளில் அவன மாத்திரணும்னு நெனச்சா அன்னைக்கு நம்ம காதலுக்கு ஏற்பட்ட தோல்விதான் இன்னைக்கு உங்க முயற்சிக்கும் ஏற்படும்.. அவனக் கூப்பிட்டு பேசுங்க... வீட்டுல நானும் சொல்றேன்.. இத்தன நாள யாரும் இந்த விசயத்தைப் பத்திப் பேசாததால எங்களுக்கும் தெரியல.. இனிமே நாங்களும் பேசறோம்... கையாள வேண்டிய வழில கையாண்டா எல்லாப் பிரச்சனைகளுக்கும் கண்டிப்பாத் தீர்வு உண்டாகும். சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.. நான் வாறேன்..." என்றபடி எழுந்து போனவளைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.. திரு. மோகன்,. தலைமை ஆசிரியர்.....

சனி, செப்டம்பர் 04, 2010

எமது ஆசிரியர்கள்...

எதிர்மறையான நிகழ்வுகள் எம் வாழ்விலும் நிகழ்ந்தது உண்டு. உள்ளூரிலே செல்லப் பிள்ளையாக இருந்துவிட்டதால் ஆசிரியர்களிடமிருந்து எந்தவித தொந்தரவுகளும் ஏற்படவில்லை. பின்னர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமானது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது எமது சமூக அறிவியல் ஆசிரியர் மூலம். அவர்தான் ஆங்கிலம் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான ஆசிரியர். அவரது பெயரை நான் கடந்த பதிவிலும் குறிப்பிடவில்லை. இப்போதும் குறிப்பிடப் போவதில்லை. கிட்டத்தட்ட எனது கவனம் சிதறிப்போனதற்கானக் காரணமும் இவரையே சாரும். ஆங்கிலக் கட்டுரைகள் மற்றும் மனப்பாடக் கவிதைகளை நாங்களே பாராமல் எழுதி எங்களுக்குள்ளேயே திருத்திக் கொள்ள வேண்டும். ஒரு தவறுக்கு 50 பைசாவீதம் அபராதம். இச்சமயத்தில்தான் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. பெரும்பாலும் மாணவர்கள் அவர்களுக்குள்ளே பேசி வைத்துக்கொண்டு தவறுகளைக் காண்பிப்பது இல்லை. 10 தவறுகள் இருக்கும் நிலையில் ஒருதவறு என்றுதான் குறிப்பிடுவர். ஆனால் இவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. நேர்மை, நியாயம் என்று பேசிக்கொண்டு (ரொம்ப சின்னப் பையனுங்க அப்ப.. அதுனால ரொம்ப வெகுளியா இருந்துட்டேன்.) எனது கைக்கு வரும் மாணவர்களின் தாள்களில் இருக்கும் தவறுகளை அப்படியே குறிப்பிடுவேன். இதனால் மாணவர்களிடமும் சரிவர புரிதலில்லை. அவ்வாசிரியரோ நாம் நன்றாக படித்தாலும் நல்ல அழகிய வெள்ளை நிறங்கொண்ட மாணவர்களிடம் மட்டுமே அன்பாக இருப்பார். அருகிலே அழைத்து இருத்திக் கொள்வார். நாம் 95 விழுக்காடுகள் பெற்றாலும் பாராட்டு அவரிடமிருந்து வரவே வராது. இதற்கிடையில் அவரொன்று அழகிய மணவாளனாக இருக்கவில்லை. இவர்தான் ஆசிரியர்கள் பற்றிய என் எண்ணங்களில் முதல் கரும்புள்ளியாக விழுந்தவர். மாணவர்களோ எனது தாள்களைத் திருத்துவதில் வேண்டுமென்றே தவறுகள் கண்டுபிடிப்பார்கள். ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளி இல்லாவிட்டாலும் வேண்டுமென்றே தவறுகளைக் கூட்டி எழுதி அபராதத்திற்கு வித்திடுவர். அந்த அபராதத் தொகைகளை எண்ணி எடுத்து ஆண்டு இறுதியில் அதனை எங்களுக்கென்றுதான் செலவிடுவார். புரோட்டா வாங்கி உண்டோம். மேலும் இரண்டு இருக்கைகள் வாங்கியளித்தோம். இந்த சமயத்தில் நடந்த பல நகைச்சுவை நிகழ்வுகளைப் பின்னர் பதிவிடுகிறேன்..

கல்லூரி பயிலும்போதும் ஒரு பேராசிரியையினால் தொந்தரவை அனுபவித்தேன். என்றைக்குமே நான் செய்த தவறுகளுக்கு என்னைத் தண்டித்தால் அதனை நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் இவருக்கு என்மீது என்னதான் கோபமோ தெரியவில்லை. நான் செய்யாத தவறுகளுக்கும் அனைவர் முன்னிலையிலும் மிகக் கேவலமாகத் திட்டும் புத்தி. பின்னர்தான் அறிந்து கொண்டேன் அவர் மதமாறியவர் என்று. வகுப்பறையில் இருந்த ஆண் மாணவர்கள் எட்டு பேரில் நான் மட்டுமே இந்து மாணவன். இதனால்தான் அவர் அப்படி நடந்து கொண்டார் என்பது எனது கணிப்பு. ஏனெனில் வகுப்புத் தேர்வுகளில் ஒரே கணக்கைத் தவறாக செய்த இரு மாணவர்கள்களில் எனக்கு மட்டுமே அந்த ஏச்சும் பேச்சும் வந்ததென்றால் அதற்குக் காரணம் இதைத் தவிர ஏதுமில்லை. இந்த செய்திகளை எனது நண்பனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வேனேயன்றி அவரை எதிர்த்துப் பேசியதில்லை. கல்லூரியில் நடந்த பல நிகழ்வுகளில் போராட்டங்களை முன்னின்று நடத்தி ஆசிரியர்களை எதிர்த்து நின்ற போதும், இந்நிகழ்வுக்காக எந்த செயலையும் செய்ய மனம் வரவில்லை. ஒன்று ஆசிரியரிடம் ஏற்பட்ட என்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக மாணவர் கூட்டத்தை அழைப்பதை நான் விரும்பவில்லை. மற்றொன்று ஆசிரியர்களின் மற்ற செயல்களுக்காக அவரை எதிர்ப்பதில் தவறை நான் காணவில்லை. ஆனால் பாரபட்சம் காட்டும் செயலை குருவே செய்யும்போது அதனை அவரேதான் உணரவேண்டுமேயன்றி நான் சுட்டிக் காண்பிப்பது முறையல்ல என்றும் நினைத்ததுதான்.

இன்றைக்கும் சொல்கிறேன். ஆசிரியர் என்போர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மாணவரின் சமயச்சார்புடைய சிந்தனைகளை மனதில் கொண்டு அவர்களை வெறுப்பதோ அல்லது தனிமைப் படுத்துவதோ அவர்களது மனதில் ஆறாப் புண்களை ஏற்படுத்தும். பள்ளி மற்றும் கல்லூரியை விட்டு வெளியே வந்து ஆண்டுகள் பல ஆன போதும் இந் நிகழ்வுகள் ஏற்படுத்திய ஆறாத வடுக்களை இன்னமும் அழிக்க இயலவில்லை...

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

எமது ஆசிரியர்கள்...

எனது திருமணத்தின்போது எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரிய, பேராசிரியர்களை அழைத்து மேன்மைப் படுத்த வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது.. ஆனால் மிகக் குறுகிய கால கட்டத்தில் திருமண தேதி நிச்சயிக்கப் பட்டதால் வெகுசிலரை மட்டுமே அழைக்க முடிந்தது.. அவ்வருத்தம் இன்னமும் நெஞ்சத்தில் உண்டு.. ஆசிரியர்கள் என்போர் பாரபட்சமின்றி எல்லா மாணவரிடத்தும் சமநோக்கோடு இருக்கவேண்டும் என்பது விதி
.. இவ்விதிகளுக்கு உட்பட்டு அன்பு செலுத்தி எம்மை அறநெறியில் வளர்த்த ஆசிரியர்களையும், விதிகளுக்கு அப்பாற்பட்டு நம்மை வெறுத்துப் புறந்தள்ளிய ஆசிரியர்களையும் கண்டுள்ளோம். கல்லூரி நாட்களில் ஆண் மாணவர்களில் நான் மட்டுமே இந்து.. இந்த காரணத்தால் என் மீது மிகுந்த அன்பு கொண்ட பேராசிரியர்களும் உண்டு. இதே காரணத்தாலேயே எம்மை வெறுத்த பேராசிரியர்களும் உண்டு. எம்மை நற்பாதையில் வழிநடத்திய அன்புப் பேராசிரியர்களை எண்ணி அகம் மகிழ்கின்றேன். நினைவில் வாழும் பேரா. ஞானதுரை, பேரா. திரவியம் ஜெபராஜ், பேரா. கென்னடி, பேரா. பாலசாந்தி கருணாகரம், பேரா. ஸ்வீட்லின், பேரா. ஸ்வீட் லில்லி, தமிழ் கற்றுத் தந்த பேரா. ரூத் பியூலா, பேரா. பெரிய நாயகம் ஜெயராஜ், பேரா. அந்தோனி, ஆங்கிலப் பேராசிரியர்கள் பேரா. கிருபலானி, பேரா. வசந்தி, பேரா. கிஃப்ட் ஜெயக்குமார், இவர்களெல்லாம் இன்னமும் என் நினைவில் நிற்கின்றனர்.
காலச்சக்கரம் பின்னோக்கி நகர்கின்றது
. முதன் முதலில் நாம் ஆசிரியராகக் கண்டது எமது பாலர் பள்ளி ஆசிரியர்தான். அவரது பெயர் சித்ரா.. நமக்கு அப்போது எழுதப் படிக்கத் தெரியாது. ஆயினும் எமது இல்லத்துக்கு வரும் "இயேசு விடுவிக்கிறார்" என்ற பத்திரிக்கையை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டு பள்ளி செல்வோம். ஆனந்தமோ ஆனந்தம். அழகிய தோட்டம். அங்கு வளரும் வான் கோழிகள். அருமையான ஆசிரியர். அவர் சொல்லும் கதைகள் மறந்து போய்விட்டாலும் அவர் சொல்லிய விதம் இன்னமும் கண்களில் வந்து போகிறது. சேட்டைக்காரப் பிள்ளைகளை அவர் அதட்டும் விதமும் பின்னர் அன்போடு அணைக்கும் நிகழ்வும் தினமும் உண்டு. இறைவணக்கப் பாடல்கள் மட்டும் தவறாது சொல்லித் தருவார். அந்தப் பாடல் கூட இன்னமும் நினைவில் உள்ளது.. "தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ்த்த.. வருவாயே திருநாயகா.. வரம் அருள்வாயே குருவானவா.." என்ற பாடல்தான் அது..
பின்னர் நடுநிலைப் பள்ளியில் சேர்ந்த போது முதலாம் வகுப்பு ஆசிரியர் கிறிஸ்துக் கனி
.. அவர் எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மிக மிக அன்பானவர். எளிமையானவர். ஆனா.... ஆவன்னா.. என்று அவர் கற்றுக் கொடுக்கும் விதமே தனி.. ஆற்று மணலில் விரல் பிடித்து எழுதப் பழக்கினார். பின்னர் தரையில் தமிழெழுத்துக்கள் எழுதுவார். நாங்கள் புளியமுத்துக்களால் அதனை நிரப்ப வேண்டும். பாண்டி முத்துக்களும் புளியமுத்துக்களும் கரங்களில் விளையாடிய அக்காலத்தை மறக்க இயலுமா?? தற்சமயம் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். அவருக்கு ஒரே மகன். சற்றே புத்தி சுவாதீனம் குறைவானவன். அவனுக்குச்சேர வேண்டிய சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி எடுத்துக் கொண்டுவிட்டதால் முதலூர் வீதிகளில் உள்ள கடைகளில் எடுபிடி வேலை செய்து வருகிறான். இன்றும் அவனைக் காணும்போதெல்லாம் எங்கள் ஆசிரியர் கிறிஸ்துக் கனி அவர்களின் நினைவுகள் மேலோங்கும்.. முதலாம் வகுப்பு படிக்கும் போதே இரண்டாம் வகுப்பு ஆசிரியரைக் கண்டால் பயம். அவரது பெயர் வயலட். அவரது பார்வையைக் கண்டாலே மாணவர்களுக்குப் பீதி.. தவறுகளைக் கண்டுபிடித்தால் அவர் கொடுக்கும் வைத்தியமே தனி.. ஆனால் மனக் கணக்கு செய்வதற்கு எம்மைப் பழக்கியவர் அவர். மேலும் அவர்தான் தையல் பயிற்சி ஆசிரியர். அவருக்கு ஒரு பேத்தி உண்டு. என்றாவது ஒருநாள் அவளை அழைத்து வருவார். அவள் பெயர் கண்மணி. அவள் வந்துவிட்டாலே நான் எனது உடைமைகளின் மேல் அதிகக் கவனம் எடுத்துக் கொள்வேன். ஏனெனில் சரியான சேட்டைக்காரி.. இரண்டாம் வகுப்பில்தால் எனது தந்தையார் எனக்கு கல் சிலேட் வாங்கித் தந்தார். எனது முதல் சிலேட்டை உடைத்தது அந்தக் கண்மணிதான். எனவே அவளைக் கண்டால் சற்று பயமெனக்கு.
மூன்றாம் வகுப்பு ஆசிரியர்தான் ஆங்கிலம் கற்றுத் தந்தார். கடிகாரத்தில் நேரம் பார்க்கவும் கற்றுத் தந்தார். அவ்வகுப்புளில் கற்ற மனப்பாடச்செய்யுள்களும் அவர்கள் கற்றுத் தந்த உதாரணங்களும் இன்னமும் நினைவில் உள்ளன.. நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர். இவர் நம் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஜாண் ஆசிரியர் என்றால் தெரியாதவர்களே கிடையாது. எனது தாத்தா, எனது அப்பா மற்றும் எனக்குப் பாடம் எடுத்த பொதுவான ஆசிரியர் இவரே.. என்னை எனது தந்தையாரின் பெயரைச்சொல்லித்தான் அழைப்பார். எனது தந்தையாரைப் பாட்டனார் பெயர் கொண்டு அழைப்பார். தமிழ்ச்செய்யுள்களை இசையோடு சொல்லித் தருவது இவரது சிறப்பம்சம். அடியும் விழும். அன்பாகவும் இருப்பார். அவர் கற்றுத் தந்த பாடல்களை அதே இசையோடு இன்றும் நான் பாடுகிறேன். இன்று அவர் நம்மிடையே இல்லை. அவரது நினைவுகள் மட்டுமே.. அவரது மகன் அவரது பெயரில் ஒரு இணையதளம் அமைத்துள்ளார்.. இவ்விடம் காண்க.... http://www.johntr.com/ இச்சமயத்தில்தான் மேடைப் பேச்சு பழக்கமானது. புலவர் சத்தியராசன் அவர்கள் எழுதிக் கொடுத்து நான் மனனம் செய்து வாசித்ததுதான் முதல் பேச்சு..
ஏழாவது மற்றும் எட்டாவது வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர்தான் எமது கையெழுத்தையே மாற்றியவர். அவர் எங்கள் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த பின்னர்தான் பள்ளியின் நிலையே மாறியது. சிறந்த ஒழுக்கம், நல்ல கல்வி என்று மாணவர்களை மாற்றியவர். அவரது பெயர் திருமதி. ஜூலியட் டெய்சி கஸ்தூரிபாய். நான் செய்த புண்ணியம் அவர் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்தியதுதான். மிகவும் கண்டிப்பானவர் என்று பெயரெடுத்தவர்.
நடுநிலைப் பள்ளி கடந்து மேல்நிலைப் பள்ளி (தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி, முதலூர்) செல்லும்போதுதான் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. காரணம் முனைவர். கட்டளை கைலாசம் அவர்கள். தமிழாராய்ச்சி செய்து வந்த இவர்தாம் தமிழார்வத்தை என் மீது ஊட்டினார். தமிழ்ச் செய்யுள்களுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்களாலேயே தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. மேலும் மெர்சி என்றொரு தமிழாசிரியரும் தமது கல்லூரிப் பருவங்கள் பற்றிய வர்ணணைகளோடு தமிழ்க் கற்றுத் தருவார்.. "தம்பிகளா.. இந்தப் பாடலை நான் குற்றாலம் கல்லூரியில படிக்கும் போது படிச்சதுடா.. பாருங்க.. எவ்ளோ அழகா இருக்கு.." என்ற முன்னுரையோடு அவர் ஆரம்பிக்கும்போதே ஆர்வம் பிறக்கும். அச்சமயம் எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு. சௌந்தர் ராஜன் மறக்க இயலாதவர். அடிமுட்டாள்களும் அவரிடம் பயின்றால் நன்றாக பயிலும் மாணவனாகி விடுவான். ஆங்கில ஆசிரியரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவரது பெயர் திரு. ஜாண்சன் சுவாமிதாஸ். ஆனால் பெரும்பாலும் யாருக்கும் அவர் பெயரே தெரியாது. எல்லோரும் அவரை "இங்கிலிஷ் சார்" என்றுதான் அழைப்பார்கள். முதலூரில் அனைவருக்கும் பழக்கமானவர். பாடம் நடத்தும் போது அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை உதாரணம் கொடுப்பது அவரது தனித் தன்மை.. "ரீல் விடுறாரு" என்று நண்பர்கள் கிண்டல் செய்யும் போதும் அவரது பாணி அனைவருக்கும் பிடிக்கும். அவரது மனைவிதான் எங்களுக்குக் கணிதவியல் ஆசிரியர். கணித வகுப்பில் செய்யும் தவறுகளுக்கு, ஆங்கில வகுப்பில் தண்டனை உண்டு. எமது தந்தையாருக்கு நெருக்கமானவர் என்பதால், மிகுந்த பாசத்தோடு இருப்பார். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒன்பதாவது வகுப்பு. முதல் மாதத் தேர்வு முடிந்தது. விடைத்தாள்கள் இன்னமும் திருத்தப் படவில்லை. ஆங்கில ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். " என்னப்பா.. எல்லோரும் அந்த பொயெம் கரெக்டா எழுதிருக்கீங்களா? யாராவது தப்பா எழுதியிருந்தா இப்பவே சொல்லிருங்க.. இல்லன்னா பேப்பர் தரும்போது அடி பயங்கரமா விழும்.." என்றார். யாரும் எழவில்லை.. நான் ஒரே ஒரு இடத்தில் மட்டும் எழுத்துப் பிழையாக எழுதியிருந்ததால் நான் எழுந்துவிட்டேன். அருகே அழைத்து குனியச்செய்து முதுகில் ஒரு அறை விட்டார். அமைதியாக இருந்துவிட்டேன்.. ஆனால் விடைத்தாள்கள் வழங்கும்போதுதான் தெரிந்தது. யாருமே சரியாக எழுதாதது. மற்ற மாணவர்கள் யாரும் முதலில் எழும்பாததற்குக் காரணம் அப்போதுதான் புரிந்தது. (இருமுறை அடி வாங்க வேண்டுமா என்ற எண்ணம்தான்) பல வருடங்கள் கழித்த பின்னர் நெல்லை ஊசிக்கோபுரம் அருகிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதல்வராக மாறுதல் பெற்றார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த 9 மற்றும் 10ம் வகுப்பில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் இன்றும் மறக்க இயலாத வண்ணம் உள்ளன. அவற்றைப் பிந்தைய பதிவுகளில் எழுதுகிறேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும்போதுதான் புதிய தலைமை ஆசிரியர் வந்தார். திரு. நெல்சன் மாணிக்கராஜ் டேனியேல். பள்ளி முன்னேற்றத்திற்காகவும், மாணவர் நலனுக்காகவும் பல விடயங்களைச் செய்தவர். எங்களுக்கு ஆங்கிலப் பயிற்சிக்காக திருச்செந்தூரிலிருந்து பச்சை வேட்டி பால்சாமி என்ற சாமியாரை அழைத்து வந்து சிறப்புப் பயிற்சி அளித்தார். அந்த சாமியார் என்னைக் "கந்தசாமி .. நீதான் என் சொந்த சாமி.." என்று அழைத்த நிகழ்வு இன்னமும் நீங்காத நினைவாக உள்ளது.
பல்வேறு காரணங்களால் அந்தப் பள்ளியில் பத்தாவது வகுப்புக்கு மேல் தொடர இயலவில்லை. பதினொன்றாம் வகுப்பிற்காக நாசரேத் மர்காசியஸ் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். தமிழாசிரியர் ஸ்டீபன் என் தமிழார்வத்தை வள்ர்த்தார். புது மாணவன் என்பதால் கடைசி இருக்கையில்தான் இடம் கிடைத்தது. தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளையின்போது அதிகமான மாணவர்கள் வகுப்பில் இருப்பார்கள். கணிதவியல் பிரிவு மாணவர்களாகிய நாங்கள், அறிவியல் பிரிவு மாணவர்கள் மற்றும் விவசாய பிரிவு மாணவர்கள். கிட்டத்தட்ட 75 முதல் 80 மாணவர்கள் உண்டு. அனைவரையும் கண்டித்துப் பாடம் எடுப்பது என்பது சற்றே சிரமமான செயல்தான் என்றாலும் அவர் மிகச்சிறந்த முறையில் பாடம் எடுப்பார். உரைநடை பாடத்தின் போது யாரையாவது எழுந்து வாசிக்கச் சொல்வார். நான் அந்த வாய்ப்புக்காக ஏங்குவேன். முதல்முறை என்னை வாசிக்கச் சொல்லும்போது ஏற்ற இறக்கங்களோடு வாசித்ததால் வாரம் ஒருமுறையாவது எனக்கு வாய்ப்பு தருவார். மேலும் வெளியூர் பள்ளிகளில் நிகழும் போட்டிகளுக்கு எம்மை அழைத்துச்செல்வார். கடைசி இருக்கையில் இருப்பதால் மாணவர்கள் எம்மை வாசிக்க விடுவதே இல்லை.. கிச்சளம் காட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும் நன்றாக வாசித்து விடுவேன். ஆங்கில ஆசிரியர் திரு. தனபால்.. நல்ல நண்பராகப் பழகும் எண்ணம் கொண்டவர்.. காதலித்து மணமுடித்தவர். ஆனால் பள்ளியிறுதி நாளில் அவர் தந்த அறிவுரை "தம்பிகளா.. லவ் மேரேஜ் மட்டும் வேண்டவே வேண்டாம்" என்பதுதான். இயற்பியல் ஆசிரியர் முனைவர். வில்லியம் தர்மராஜா மிகவும் கண்டிப்பானவர். ஆனால் நட்பாகப் பயிலக்கூடியவர். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார் என்று நினைத்து நாம் சிரித்து விட்டால் அடி விழும்.."என்னடா பாடம் நடத்தும் போது சிரிக்கறே" என்று.. கோபமாக இருக்கிறார் என்று நினைத்து அமைதியாக இருந்தால் "ஏம்ப்பா எங்கள எல்லாம் பார்த்தா கொரங்கு மாதி இருக்கா. கொஞ்சம் சிரிச்ச முகத்தோடு இருந்தா என்ன?" என்பார். வேதியியல் ஆசிரியர் திரு. ஜோசப் ஜெபராஜ் தற்சமயம் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். திருமணத்திற்கு நேரில் வரவில்லை. வாழ்த்து அனுப்பியிருந்தார். பதின்மர் வயது மாணவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து அவர்தான். தவறான வாழ்க்கை.. அதனால் ஏற்படும் சீரழிவுகள். ஒழுக்கமான வாழ்க்கை.. இவைதான் இவர் அதிகமாக கற்றுத்தரும் பாடங்கள். நீ நன்றாகப் படிக்கிறாயோ இல்லையோ.. ஒழுக்கமானவனாக இரு என்பதுதான் இவரது பாடம். தாவரவியல் ஆசிரியர் திரு. ஜெயதாஸ் விலங்கியல் ஆசிரியர் திரு. நித்தியானந்த ராஜ் இவர்களும் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளனர்.
கல்லூரிப் பேராசிரியர்களைப் பற்றிய பதிவு இன்னொருமுறை இடுகிறேன்.. கொஞ்சம் வழவழ கொழகொழதான் ஆனாலும் இதைப் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு நன்றி.. எனக்குக் கற்றுத்தந்து ஆளாக்கிய என் தெய்வங்களை நினைவு கூறச்செய்த அன்பு நண்பர்களுக்கு நன்றி.
குருவே பிரம்மா..
குருவே விஷ்ணு
குருவே மகேஸ்வரன்
குருவே பரப் பிரம்மா.
அந்த குருவை நான் வணங்குகிறேன்.....
நன்றி