சனி, ஆகஸ்ட் 15, 2009

குடிமக்கள் காப்பியம்.

குடிமக்கள் காப்பியம்.
தமிழின் முதற் காப்பியம் என்னும் பெருமை பெற்று, குடிமக்கள் வரலாற்றைப் பதிவு செய்த முதல் நூல் என்னும் பெருமையையும் ஒருங்கே பெற்ற நூல் சிலப்பதிகாரம். எமது பேராசிரியர் கூறுவார் "கன்னித் தமிழின் பெருமையைக் காத்து வருவன கல்லும் சொல்லுமே" என்று.. இளவலால் சொல்லோவியத்தாலும், அண்ணலால் கல்லோவியத்தாலும் பெருமை பெற்றாள் தமிழ் நங்கை கண்ணகி. கால வெள்ளத்தில் கல்லோவியம் அழிந்தது. ஆயினும் கற்றோர் நினைவில் இன்றும் நின்று இனிமை தருகிறது சிலப்பதிகாரம் எனும் சொல்லோவியம்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையப் பெற்றது சிலம்புக் காவியம். தொடர் நிலைச் செய்யுளை முதன் முதலில் அமைத்த பெருமை, குடிமக்களை நாயகராகக் கொண்ட பெருமை என்று புரட்சி செய்தார் இளங்கோவடிகள். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிராத காலத்தில், பெண்ணுக்கு ஏற்றம் கொடுத்து அவளையே நாயகியாக்கி, பெண்ணால் இயலாதது ஏதுமில்லை என்றுணர்த்தினார் அவர்.
உயர்ந்தோர் ஏத்தும் உரைசால் பத்தினியாகக் கண்ணகியை வடித்தார். அவளையே காவியத் தலைமைப் பாத்திரமாக, தன்னிகரில்லாத் தலைவியாக அமைத்துக் காவியம் அமைத்த புதுமையும் கவர்ச்சியானதே... காவியத்தின் துவக்கத்தில் பேசப்படுவது கண்ணகியின் திறம்தான்.
"போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ"
என்று கண்ணகியின் அறிமுகம் காணப்படுகிறது.
பத்தினித் தன்மை என்பது தூய்மை என்பதன் மறுபெயர். மனமாசற்ற நிலையே அவ்வறம். அவ்வற வழிபாட்டை வலியுறுத்த வேண்டி அறவடிவான கண்ணகியின் வரலாற்றைக் கருவியாகக் கொண்டார் இளங்கோ. மேலும் கணிகையர் குலத்துதித்த மாதவியையும் கற்புக்கரசியாக்கித் துறவறத்தின் முடிமணியாகச் சிறக்க வைக்கும் சிறப்பையும் அவர் மேற்கொண்டுள்ளார். இங்கனம் மங்கையரின் மாட்சியைத் தெரிவிப்பதே சிலம்பின் உள்ளுறையாக அமைந்துள்ளது..
பொதுவாக ஒரு நாடகக் காவியம் சிறப்பது அதன் கதாபாத்திரப் படைப்பின் திறத்தாலும் அவர்தம் பண்பு வளர்ச்சி தெளிவுறக் காட்டப் பெறுதலாலுமே அமையும். கண்ணகியின் அமைதியான வாழ்க்கையைப் புகார்க் காண்டத்திலும், அவளே அநீதியை எதிர்த்துப் போராடும் தமிழ் மறத்தியாக மதுரைக் காண்டத்திலும், இன்னார் இனியார் என்று பாராது எல்லார்க்கும் அருள்செய்யும் உயர்நிலையாளாக தெய்வமாக வஞ்சிக் காண்டத்திலும் நாம் காண்கிறோம்.
"கொங்கச் செல்வி குடமலையாட்டி
தெந்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணி" என்று சாலினியால் போற்றப் படுகிறாள் நாயகி கண்ணகி.
"கற்புக்கடம் பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண்டிலமால்" என்று கவுந்தி அடிகள் மூலம் இளங்கோ தன் பாராட்டுதலைத் தெரிவிக்கின்றான். தன் கணவனிடம் "போற்றா ஒழுக்கம் புரிந்தீர்" என்று எடுத்துரைக்கும் போதும் அவள் பண்பு வெளிப்படுகிறது. பின்னர் அவள் கணவன் கொலைப் பட்ட செய்தி கேட்டு வீறு கொண்டு மதுரை வீதிகளிலே அவள் புயலெனப் புறப்படுதல் கண்டு "சிலம்பொடு வம்பப் பெருந்தெய்வம் வந்தது" என்று நகரமாந்தரெல்லாம் அஞ்சும் வண்ணம் அவள் கோபம் வெளிப்படுகின்றது. நகரின் காவல் தெய்வங்களெல்லாம் அவள் கற்புக்கு முன்னர் அடிபணிகின்றன. மன்னன் முன்சென்று தன் கணவன் நிலை உரைத்து "தேரா மன்னா.. " என்று தன் கணவன் கள்வனல்ல என்று நிரூபித்து அவன் தன் மனையாட்டியோடு உயிர் நீத்த பின்னும் அவள் சினம் தணிந்தபாடில்லை. தன் கற்புக் கனலால் மதுரை மாநகரையும் சுட்டெரிக்கிறாள். இத்தகையக கோப மனங்கொண்ட கண்ணகிதான் பின்னர் எல்லாருக்கும் அருள்செய்யும் தெய்வமாக வஞ்சிக் காண்டத்தில் காணப்படுகிறாள்.
கதையைத் துவக்கம் முதல் தொடர்ந்து நாம் படித்துவருங்காலை, கோவலன் கொலைப்படும் வேளையில் நம் அன்புக்குரியோனை நாமே இழந்தது போன்றதொரு துக்கம் நெஞ்சை அடைக்கின்றது. அத்தகைய நிகழ்வுகளை ஒருங்கே ஏற்படுத்தி நயமுறக் கதை சொல்லும் இளங்கோவின் நுணுக்கம் வியக்கத்தக்கது.
சிலம்பின் இடையிடையே கானல் வரியிலும், வேட்டுவ வரியிலும், ஆய்ச்சியர் குரவையிலும், துன்பமாலை ஊர்சூழ்வரியிலும் பின்னர் குன்றக் குரவையிலும் இனிய இசைப் பாடல்கள் நாடகப் பாங்கோடு அமைக்கப் பட்டுள்ளன.
"பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி"
இக்கானல் வரியில் சோழவேந்தன் திறத்தால் காவேரிப் பெண் இயற்கைக் கோலக் காட்சியின் இடையே ஒதுங்கிச்செல்லும் காட்சி கண் முன் தோற்றமளிக்கிறது.

"நாகம் நாறு நரந்தம் நிரந்தன
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே"
இவ்வேட்டுவ வரி காளியம்மன் புகழ் பாடுகின்றது.

"அணிமுகங்களோராறும் ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே"
குன்றக் குரவையில் குமரன் புகழ் பாடும் குறமக்கள் கவி இது. கண் முன்னர் முருகனின் காட்சி தந்து அவன் ஆற்றலையும், அவன் கைவேற் சிறப்பினையும் ஏத்திப் பரப்பும் குறமக்கள் மாண்பு நம் உள்ளம் கொள்ளை கொள்கின்றது.

இளகோவின் காப்பிய நடை தனிச்சிறப்புடையது. சீரிய கூரிய தீஞ்சொற்களால் தெளிவும் ஒளியும் பொருந்த அமைந்த தன்மையது. தாம் கருதிய கருத்தின் தன்மையை தம் நடையிலேயே விளங்க வைத்து விடுவது அவன் சிறப்பு.

புகார் நகரே வியக்கும் வண்ணம் நடந்தேரிய கோவலன் - கண்ணகி மணவிழாவினை
"நீலவிதானத்து நித்திலப்பூம் பந்தர் கீழ்
வானூர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கள் நோன்பென்னை"
என்று எளிய ஓவியமாகத் தீட்டிக் காட்டும் திறம் இளங்கோவால் மட்டுமே இயலும்.
கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளோடு பலநாள் பகலும் இரவும் நடந்து மூதுர் வந்தடைகின்றனர். மதுரை நெருங்குகையில் தென்றலின் இனிமையைத்தான் அவர்கள் உணர்கின்றனர். அது தந்த நறுமணங்கள் நுகர்கின்றனர். பின்னர் ஓசைகளும் முழக்கங்களும் கேட்கின்றன. பின்னரே காட்சி. முதலில் அவகட்குத் தோற்றமளிப்பது வையை நதி..
அவளும்
"தையற் குறுவது தானறிந்தனன் போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிச்..."
செல்கின்றாளாம். ஆற்றுக்கு இங்கனம் பரிவு எவ்வாறு வந்தது? அது புனல் ஆறு அன்று என்று அவர்களும் கருதியதாக அமைக்கின்றார் இளங்கோ. அது பொய்யாக் குலக் கொடி. அதன் இயல்பு அத்தகையது என்பார் அவர்.
"மண்ணக மடந்தையை மயக்கொழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்"
கண்ணகி கோவலனுக்கு மாதரி இல்லத்தில் தங்கிய காலத்தில் அமுது படைத்ததாகக் கூறுகின்றார். இவள் வாழ் நாளில் பின் நிகழவிருக்கும் அவலத்தை நிலமகளும் அறிந்து மயங்கினாளாம். அம்மயக்கம் களையக் கண்ணகி நீர் தெளித்தாளாம்.. எத்தகைய அருமையான கற்பனை இது...!
மனையறம் படுத்த காதையில் கயமலர்க்க்ண்ணி கண்ணகியும் காதற்கொழுநனும் நறும்பூஞ்சேக்கையில் தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் தீராக் காதலராக இன்பம் துய்த்தனரென உணர்த்தும் திறம் இளங்கோவிற்கே இயலும். இதனால்தான் இவர்போல் புலவரைக் கண்டதில்லை என்பான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.
மதுரை மாதரசி இறந்ததும் அறியாது அரசவையில் கண்ணகியின் வஞ்சினம்
"பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையும் காண்குறுவாய் நீ"
என்று வெளிப்படுகிறது. இவ்வாறே சுவைக்கேற்ற நடையழகை சிலம்பில் பல்வேறு இடங்களில் காணலாம்.
"தஞ்சமோ தோழீ! தலைவன் வரக் காணேன்
வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சன்றே?
வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்? வாழியோ தோழி!"
என்று கண்ணகி கலக்கத்தோடு கூவும்போது நம் உளம் கலங்குகின்றது. கொலைச்செய்தி கண்ணகியிடம் கூறப்படும்போது, கூறும் மாந்தரது உள்ளத்துற் தோன்றும் தயக்கம், தடுமாற்றம், அச்சம், பரிவு எல்லாமும் பேச்சிலேயும் புலப்படுமாறு அமைகின்றது பாடல்.
"அரசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரை கழல் மாக்கள் கொலை குறித்தன்ரே"
இரண்டாம் வரி திரும்பவும் அமைதலும், கொலைக் குறித்தனர் என்று நம்பிக்கைக்கு இடம் இருப்பது போன்று அமைதலும் சிறப்பு. பின் கண்ணகி பொங்கி எழுந்தாள். திங்கள் முகிலொடு வீழ்ந்தென வீழ்ந்தாள். கண் சிவப்ப அழுதாள். கணவனை "எங்கணாய்: என்று இனைந்து ஏங்கி மாழ்ந்தாள் என்று வீரமும் அவலமும் கலந்த கலவையாகக் காட்டப் படும் பாடல் உணர்வுக் கொப்பளிப்பு. ஊர்சூழ்வரியில் அவள் அரற்றுரையால் அவள் வீரமும், மக்கள் உரையால் அவலமும் புலப்பெடுத்தப் படுகின்றன. மாலைப் பொழுதில் கொலைப்பட்ட கோவலனைக் காண்கின்றாள். இவள் துன்பம் காணாதானாய்க் கதிரவன் மலைமேற் சென்று ஒளிந்தானாம். கால நிலையோடு மாலை நிலையைக் காட்டி அவலத்தை அதிகரிக்கின்றார் இளங்கோ. காலைவாய்க் கொழுநன் குஞ்சியில் அணியும் மாலையைத் தன் வார்குழலில் கொண்டு, அவனைத் தழுவிக்கொண்டாள். மாலையிலோ புண்தாழ் குருதி புறஞ்சோர அவன் தன்னைக் காணாத கடுந்துயரம் கண்டாள் என்கின்றார். "காய் சினந்தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்" என்று வேந்தன்பால் செல்கின்றாள். காளி போல் சென்று வீரவுரை பேசி சிலம்புடைத்டு மன்னன் உயிர்போக வஞ்சினம் கூறி மீள்கின்றாள்.
"மறுகிடை மறுகும் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆரஞர் உற்ற வீர பத்தினி"
எனும் வரிகள் அவள் மயக்க நிலையைக் காட்டும்.
மதுராபதித் தெய்வம் வந்து பழங்கதை உணர்த்தி நிகழ்வது கூறியது பின் தன் கைவளைகளைக் கொற்றவை கோயில் வாயிலில் தகர்க்கின்றாள். மதுரை நகர் விட்டுச்செல்லும்போது அவள் மனதில் ஒன்றே ஒன்று தான் நிற்கின்றது.
"கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு"
என மயங்கிக் கையற்று வைகைக் கரைபற்றி நடக்கின்றாள் என்று அவலம் விளங்க ஆசிரியர் அவளை நடத்திச்செல்கின்றார். அவலத்தை மிகுவிக்கக் கையாளும் உத்திகளுல் முன்னிலையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு நோக்குவது வாசகர் நெஞ்சைக் கரைப்பதற்காகவன்றோ...?
கண்ணகிபால் மட்டுமன்றித் தன்செயல் தவறு என்று உணர்ந்ததும் "யானோ அரசன் யானே கள்வன்" எனக் கூறி உயிர் நீக்கும் பாண்டியன் செயலிலும், அவனைப் பின்பற்றும் கோதேவியின் விரைவிலும் ஆழமான அவலச்சுவை மிகைப் படுகிறது.
முடியுடைவேந்தர் மூவரும் தமிழர் என ஓரினமாகக் காட்டி அவர்தம்முள் ஒற்றுமை உணர்வை விளைக்க எழுந்தது சிலம்ப என்றால் அது மிகையல்ல. சேர இளவலாயினும் இளங்கோ மூவேந்தர்தம் பெருமையை ஒக்கப் புகழும் திறம் இன்புறத்தக்கது. பண்டைத்தமிழர் நாகரிகம் பற்றிய பல குறிப்புகள் சிலம்பின் கண் நயம்பட அமைந்துள்ளன. பல்வேறு சமயக் கடவுள்களையும் அவர்தம் மாண்பையும் புகழ்ந்துரைப்பதன் மூலம் இக்காப்பியம் சமயப் பொதுமையைக் கனிய வைக்கின்றது.
தமிழின் முதற்காப்பிய்ம், உலகின் முதற் குடிமக்கள் காப்பியம் நம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமல்லவா???

ஈழத்துப் போர் ஒரு மோசமான முடிவுக்கு வந்தது கண்டு நெஞ்சம் பதைத்து, ஏதும் எழுதுவற்கு அறியாது மனங்குன்றினேன். இன்னமும் எமது மன அழுத்தம் ஆறியபாடில்லை. இந்திய சுதந்திர நாளான இன்று எமது பணியை மீண்டும் துவக்கியுள்ளேன். இனித் தொடர்ந்து எமது பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். மிக நீண்ட இடைவெளிக்கு நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். படித்துப் பார்த்து விட்டுத் தங்கள் பின்னூட்டங்களை எழுதுங்கள். எதிர்பார்க்கிறேன்.
நன்றி..

புதன், ஏப்ரல் 01, 2009

இலக்கியம் சுவைப்போம்..

நண்பர்களுக்கு வணக்கம். தமிழிலக்கியத்தின் சுவையை நான் சுவைத்த நோக்கில் இவ்விடம் பகிர்ந்து தர விரும்புகிறேன். உலகின் எம்மொழி இலக்கியத்தைக் கற்றாலும், தாய்மொழியாம் தமிழின் சுவை நெஞ்சத்தில் நீங்காது இருப்பது கண்டு வியப்பு. இறைவனுக்கோ தமிழின் மீது தணியாத காதல். அதனால்தான் தென் தமிழகத்தில் உதித்த தடாதகை பிராட்டியாரை மணங்கொண்டு சொக்கேசனாக மதுரை நகர் அமர்ந்து பாண்டிய நாட்டினை முறை செய்தான். "தமிழால் வைதாலும் அருள் செய்வான் சிவன்" எனும் பொருள் கொண்ட தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு. தன்னை வைதவன் தமிழால் வைதால் அது எமக்குப் பெருமையே என்று இறைவன் ஏற்றுக்கொள்வதாக அப்புலவனுக்கு நம்பிக்கை. நாம் தமிழிலக்கியத்தை முறையாகக் கற்கவில்லை, கடலின் ஆழம் சென்று முத்தெடுத்தவனில்லாயினும் கரையிற் குளித்தவனுக்கும் கடலின் பெருமை தெரியுமல்லவா? அத்தன்மைபோலே, இங்ஙனம், எம் சிற்றறிவுக்கு எட்டியவரை, யாம் சுவைத்த இலக்கியத்தின் சுவையை, நீங்களும் பெற்றிட பதிவு செய்கிறேன். படித்து இன்புறுங்கள். பின்னூட்டம் எழுதுங்கள்.
இன்றைய சுவை:-
படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே..
இந்த பாடல் பாண்டியன் அறிவுடை நம்பி இயற்றியது....
இதன் பொருள் : செல்வம் பல பெற்று, பலருடன் இணைந்து உணவு உண்ணும் செல்வம் கொண்டவராயினும், சின்னஞ்சிறிய பிஞ்சுக்கால்களால் குறுக்கே குறுக்கே நடந்து, அழகிய சிறுகைகளால் பாத்திரத்தில் உள்ள உணவை எடுத்து அது கீழே விழுந்த போதும் கூட அதனையும் எடுத்துத் தின்று வாயால் கவ்வியும், கையால் துழாவியும், நெய்ச்சோற்றை உடம்பு முழுதும் விதிர்த்தும் செய்யக்கூடிய இவ்விளையாட்டுக்களால் நம் அறிவை மயக்கும் குழந்தைகளை இல்லாதவர்களுக்கு பயனாகக்கூடிய பொருள் வேறு ஏதுமில்லை என்பதாகும்.
இந்தக் கவிதையை உற்று நோக்குகையில் அதன் சொற்சுவை மற்றும் பொருட்சுவையில் தன் நிலை மறந்து போகிறோம். எத்துனை அரிய அருமையான கருத்து இது. மக்களை வர்ணனை செய்த அக்கவிஞனின் சொல் விதைகளை நோக்குங்கள். "இடைப் படக் குறு குறு நடந்து சிறு கை நீட்டி இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்" என்று அவன் பாடுகையில் நம் எதிரே அழகிய சிறு குழந்தை ஒன்று விளையாடி ஓடிச்செல்வது போன்ற காட்சி தோன்றுகிறது அல்லவா???
நம் பெருமைக்குறிய கதா பாத்திரம் மனோன்மணியைப் பற்றி, சுந்தரனார் இவ்வாறு உரைப்பார்.
".... இமையவர்க் காக
முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி
தவசிக டனித்தனி யவிசு சொரிந்துந்
தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தி னெடுஞ்சுழி சுழித்து
மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது......"
என் நெஞ்சை விட்டு நீங்காத ஒரு காட்சி இது. தேவருக்கென மன்னன் அமைத்த வேள்வியின் தீ அமர்ந்து போனது கண்டு அனைவரும் துக்கித்திருந்த போது, மனோன்மணி தன் சிறு கரங்களால் நெய்பெய்த போது பொங்கி எழுந்தது என்று அவர் வர்ணனை செய்யுமிடத்து பாண்டியர் குழம் தழைக்கத் தோன்றிய மனோன்மணி என் கண்ணெதிரே தோன்றி, தனியொரு வேள்வி வளர்க்கும் காட்சி தெரிகிறது..
உலகுக்கெல்லாம் பொதுமறை தந்து, தமிழகத்தின் பெருமையை வானாளவ உயர்த்திய, தமிழய்யன் வள்ளுவப் பெருந்தகையின் பாடல் இது
"குழலினி தியாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்"
மக்களின் மழலைச் சொற்களுக்கு முன்னால் இசையாவது, மண்ணாவது... என்பதுபோல் முகத்திலடிக்கிறது இப்பாடல்.
கல்லூரியில் எமக்கு சிலம்புப் பாடம் எடுத்த தமிழாசிரியர் ஓர் நாள் "சிலம்பில் உள்ள குறை யாது?" என்றார்.
அனைவருக்கும் வியப்பு. நெஞ்சையள்ளும் சிலம்புக் காவியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் அடையாளச்சின்னமல்லவா.. அதில் என்ன குறை தேடுகிறார் இவ்வாசிரியர் என்றே சிந்தித்தோம்.
இளங்கோவைப் போல் ஒரு புலவன் மேதியினில் எங்கேனும் பிறந்ததில்லையென்று மார்தட்டினானே முண்டாசுக் கவிஞன்... அவன் படைப்பில் என்ன குறை இருக்க இயலும்??
அரச குலத்துதித்தும், அண்ணனுக்காகத் தன் அரச வாழ்க்கையையே தியாகம் செய்த இளவல் எழுதிய காப்பியத்தில் குறையா??
சோழ நாட்டு வணிகனொருவனைத் தவறிய முறை செய்து கொலைக் களம் காணச்செய்தது அரசியல் பிழை என்று அவன் கற்புடை மனைவி நிரூபித்த போது, தன் தவறுணர்ந்து பழிச்சொல் ஏற்க இடந்தராது, அறங்கூற்றால் தன் உயிர் நீத்த பாண்டியனின் வரலாறு சொல்லும் காப்பியத்தில் குறையா?
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்ற தத்துவம் சொல்லிக் கண்ணகி என்ற தமிழ்ப்பெண்ணை உலகம் போற்றும் பத்தினித் தெய்வமாக வடித்த காப்பியத்தில் குறையா?
இப்படியெல்லாம் நாங்கள் குழம்பித்தவித்துப் பின்னர் அவரிடமே வினவியபோது, அவர் சொன்ன பதில் சிந்திக்க வைத்தது..
சிலம்பில் மக்கட்பேறு பற்றிய சுவை இல்லை என்றார்.
கோவலன், கண்ணகி மணவிழாவில் துவங்கி கண்ணகி தெய்வநிலையை அடைந்த வரலாற்றைச்சொல்லும் காவியத்தில் காவிய நாயகருக்கு மக்களில்லாததை பெரும் குறையாகக் காட்டினார் எம் பேராசிரியர்.
ஓஹோ என்று அமைதியானோம்.
ம்ம்ம்.
மீண்டும் அடுத்த பதிவில் நெஞ்சை அள்ளும் சிலம்பின் சுவையோடு உங்களை சந்திக்கிறேன்.
நன்றி...

புதன், மார்ச் 25, 2009

மௌனமே சாட்சி....

நீள்வானம்
மழை சொரிந்த
விழா நாள் அது...

புதிதாய்ப்
பறந்த
பட்டாம் பூச்சியாய்
கண்ணுக்கு
விருந்தளித்துப் போனாய்....

காரணம்
ஏதுமின்றி
கண்கள்
சந்தித்துக் கொண்டதால்
நீல வானுக்கு உபயம்
மின்னலும் மழையும்...

நீண்ட
பல இரவுகளில்
அந்நாளின் நினைவுகள்
என்னை.....
.................................
...............................


இந்நாளில்
வான் மழை தவறினாலும்...
உன் நினைவுகளால்
கண்களில் மட்டும்..
..............
..........
......................
...................................
பலத்த மௌனமே
நம் காதலின் சாட்சியாய்.....


உறங்காது விழித்த
இரவுகளில்
உன் நினைவுகள்
மட்டுமே......
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வெள்ளி, மார்ச் 20, 2009

தமிழ்த்தாய் வாழ்த்து...

தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் "மனோன்மணீயத்தின்" மொழி வாழ்த்துப் பாடலே...
அக்காலம் தொட்டுத் தமிழர்கள் பிற திராவிட மொழிகளையும் மதித்தே வந்துள்ளனர் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்ததோர் உதாரணம். ஆயினும் அன்றைய முதல்வரும் இன்றைய முதல்வருமான கலைஞர் அவர்கள் பிறமொழிகள் பற்றிய வரிகளை நீக்கியும், இசைக்காக சில வரிகளை வரிசை மாற்றம் செய்தும் அழகு செய்தார். மெல்லசை மன்னரின் இசையில் டி. எம். சௌந்தர் ராஜனும், பி. சுசீலாவும் பாட தமிழ்த்தாய் வாழ்த்து தயாரானது. இன்றளவும் அந்தப் பாடலைக் கேட்கும் போதும், பாடும் போதும், இனம் புரியாத உணர்வு மேலிடும். எங்கள் தமிழ் எந்தன் தாய் மொழி என்ற எண்ணத்தில் திளைப்பேன்.
உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே... என்று உச்சக் குரலில் பாடும் போது, மனதில் ஏற்படும் துள்ளலோ சொல்லற்கரியது.
ஆனாலும் கல்லூரியில் மனோன்மணீயம் கற்கும் போதுதான் அந்தப் பாடலின் உண்மையான வரிகளைக் கண்டோம். தமிழன் மீது பெருமிதம் கொண்டோம்.
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன் உதரத்தினின்றே உதித்து எழுந்தன. ஒன்றே பலவாயிடினும், ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாத உன் சீரிளமைத் திறமையைக் கண்டு செயல் மறந்து வாழ்த்துகிறேன் என்று பாடுவார்.
எத்தகைய பெருந்தன்மை. ... மாற்று மொழிகளை மதியாதவர்கள், மாற்று மொழியினரை மதியாதவர்களைக் கண்ட தேசத்தில் அவர்கள் மொழியும், எந்தாயின் சேய் மொழிகள் என்று கூறி, அதன் பெருமையைப் பாடும் தன்மை, தமிழனைத் தவிர யாருக்கும் வருவதில்லை.
பாரதியோ சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்றான்.
கலைஞர் கைவண்ணத்தில் உருவான, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அறிமுக திரைக் காவியமான பராசக்தியிலும், "வாழ்த்துப் பாடல்" (அதாங்க வாழ்க வாழ்கவே... வாழ்கவே,,,, அப்படின்னு வருமே... அதேதான்....) பிற திராவிட மொழிகளையும் வாழ்த்துகிறது.
பிற திராவிட மொழிகளுக்கும் தமிழே தாய் என்பதற்கான ஆதாரங்களைக் காண்போமா?? (நாம் மொழி ஆராய்ச்சியாளன் அல்ல... ஆனபோதிலும் என் அறிவுக்கு எட்டியவரை... சிறு முயற்சி....)
இன்றைக்கு நாம் பேசிவரும் தமிழும், ஆதித் தமிழில் இருந்து முற்றிலும் மாறுபாடு கொண்டதாக அறிகிறோம். ஆயினும் தாய்த் தமிழின் பெரும்பான்மையான விடயங்களை நாமே காத்து வருவதால் நம்மைத் தமிழர் என்னலாம் (தப்பா இருந்தா மன்னிச்சிருங்க.... இதற்கு மாற்றுக் கருத்து உடையவர்கள் கோனார் தமிழ் உரையைப் பார்க்காமலேயே அல்லது தமிழ்ப் ஆசிரியராக இல்லாமலேயே சங்க இலக்கியப் பாடல்களுக்கெல்லாம் பொருள் உரைக்க வேண்டும்,,,,,,, முடியாது இல்லையா?? ஆனாலும் நாம தமிழர்தாம்யா.. என்ன விட்டுருங்க....)
தமிழகத்தில் வாழ்ந்தவரை அதன் பொருள் எமக்கும் விளங்கவில்லை. தமிழகம் தாண்டி வந்த பின்னர்தான் பிற மொழிகளோடு அறிமுகம் நேர்ந்தது. அச்சமயத்தில்தான் உண்மை உணர்ந்தோம்.
அதற்கும் மனோன்மணீயத்தில் இருந்தே சில எடுத்துக்காட்டுக்கள் வழங்குகிறேன். சில பதங்கள் வடமொழியாகவும் இருக்கக் கூடும். ஆசிரியப் பெருமக்கள் மன்னித்து அருள்க.
வதுவை - இதற்குத் திருமணம் என்று பொருள்... கன்னடத்தில் "மதுவே" என்று சொல்கின்றார்கள்...
ஓதுதல் - படித்தல். கன்னடத்திலும் இதற்கு அதுதான் பொருள்...
"ஓலை விளக்கியிட்டு" என்று பட்டினத்தார் பாடலொன்று தொடங்குறது... இவ்விடம் ஓலை என்பதற்கு காதணி (அதாங்க கம்மல்) என்று பொருள்.. கன்னடத்திலும் ஓலை என்பது காதணியையே குறிக்கின்றது..
நாம் செவி என்பதை அவர்கள் கிவி என்றழைக்கின்றனர்.
செப்புதல் என்ற பதம் அப்படியே தெலுங்கில் பயன் படுத்தப் படுகிறது.
"நென்னலே வாய் நேர்ந்தான்" என்பாள் கோதை நாச்சியார். நென்னலே என்ற சொல் நேற்றைய தினத்தைக் குறிக்கும் சொல்லாகக் கன்னடத்தில் பயன்படுகிறது. தமிழ் வழக்கில் இச்சொல் இப்போது பயன்பாட்டில் இல்லை.
"எல்லாரும் போந்தாரோ" என்பதும் திருப்பாவையே.. போந்தார் என்ற சொல் தமிழ் வழக்கில் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பயன்பாட்டில் உள்ளது.
முதலூரைச் சேர்ந்த புலவர் சத்திய ராசன் மலையாளிகளைப் புகழ்வார். தூய தமிழின் பல சொற்களை அவர்கள் பயன்பாட்டில் கொண்டுள்ளதாக சொல்வார். அவர் சொல்லும் சிறு உதாரணம்.
எழு ஞாயிறு, விழு ஞாயிறு என்பாதாகும். இத்தகைய தூய தமிழ்ச்சொற்கள் வழக்கில் இல்லையே என்ற வேதனை அவருக்குண்டு. நாம் இன்னமும் உதய சூரியன் என்றல்லவா பயன் படுத்துகிறோம்.. என்பார்.
இப்படி யோசித்து யோசித்துப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஆன போதிலும் இவை எல்லாமே சொல்லுகின்ற ஒரே உண்மை "தமிழே திராவிட நாட்டின் தாய் மொழி.. மூத்த மொழி... முதல் மொழி...."
"சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் பெயரை "பரிதிமாற்கலைஞர்" என்று தமிழாக்கம் செய்து அதனையே பழக்கத்தில் வைத்திருந்த தமிழறிஞர் எங்கே.... ஊரெங்கும் தமிழ் முழக்கம் செய்து விட்டுத் தன் இல்லத்தில் தமிழுக்கு இடம் தர மறுக்கும் தமிழ்க்குடிதாங்கிகள் எங்கே.....

இடைத் தேர்தல்

பளபளன்னு ரோடு போட்டாவ....!

படபடன்னு அமைச்சருவ வந்தாவ...!

எல்லா எம்.எல்.ஏக்களும்எங்கூருக்கு வந்துட்டாவ..!.

அமைச்சரைப் பாக்கையிலே மக்கஅழகழகா சிரிச்சாவ...!

அவிய போன பின்னாடி

அடங்கொப்புரானேன்னு மலைச்சாவ...!

ஆனாலும் செஞ்சாவய்யா..

அஞ்சு லெட்சம் எங்க கோயிலுக்கு...!

பெருமையாத்தான் இருக்கு

பக்கத்து தொகுதிக்காரன் பாவிப்பய சாவலியேன்னும் போது...!

(சாத்தான் குளம் இடைத்தேர்தலின்போது எழுதியது. நேற்றைய தினம் எனது புத்தகங்களை அடுக்கும் போது கிடைத்தது. உங்கள் பார்வைகாக.....)

மனோன்மணீயம் கதைச்சுருக்கம். (நண்பர்களுக்காக...)


ஜீவகவழுதி மதுரையில் இருந்து பாண்டிய நாட்டின் தலைநகரத்தினை நெல்லையம்பதிக்கு கொடிய அமைச்சன் குடிலனின் சூழ்ச்சியால் மாற்றியமைப்பதில் இருந்து இந்நாடகம் துவங்குகிறது..குடிலன் கொடியவன் என்று அனைவரும் அறிந்திருந்தும், மன்னனுக்கு எடுத்துரைத்தும் அவன் அதனை அறியவில்லை... ஆயினும் துன்பத்தில் காப்பது குருவின் கடமையல்லவா..? தன் கடமை செய்ய வருகிறார் அரச குரு சுந்தர முனிவர். தனக்கென்று ஒரு அறை மட்டும் பெற்றுக் கொண்டு அது தனது ரகசிய அறை என்று திறவுகோலைத் தன் வசம் வைத்துக் கொள்கிறார்..மன்னன் மகள் மனோன்மணி இந்நாடகத்தின் தலைவி. சிறுவயதிலேயே தன் தாயை இழந்து விட்ட அவளுக்குத் தன் தந்தையின் மீது அலாதி அன்பு. சிவ பக்தி கொண்ட அவள் சிவநெறியிலேயே வாழ்க்கை நடத்துகிறாள். அரண்மனையில் இருந்தும் அவள் மனது துறவையே நாடுகிறது.. அவள் தோழி வாணி, நடராசன் என்பவனைக் காதலிக்கிறாள். நடராசன் ஒரு கவிஞன். ஒரு மறவன். பலருக்கு அவனைப் புரியவில்லை. ஒரு நாங்கூழ் புழுவைக் கண்டாலும் அதனிடம் பேசுவான், கூழாங்கற்களோடும் பேசுவான். இவ்விருவர் காதலும் மென்மேலும் வளர்கிறது. தனது காதலைத் தன் தலைவியிடம் சொல்லி அகம் மகிழ்கிறாள் வாணி. மனோன்மணியோ அவளுக்கு சிவநெறியில் ஈடுபடச்சொல்லி அறிவுறுத்துகிறாள். அப்போது அவளது செவிலி வந்து "அம்மா நீ வளர்த்த புன்னை மரம் பூத்துள்ளது" என்கிறாள். வாணியோ "உனக்குக் கண்டிப்பாகக் காதல் மலரும்." என்று உறுதியளிக்கிறாள்.. மறுத்துப் பேசும் மனோன்மணிக்கு அன்றிரவு ஒரு கனவு வருகிறது. கனவில் அவள் ஒரு கட்டிளம் வாலிபனோடு காதல் கொள்கிறாள். வாணியின் கூற்று பலிக்கிறது. கனவில் கண்டாள் ஆயினும் அவ்வாலிபனோடு நனவிலும் வாழத் துடிக்கின்றாள்... சுரத்தில் விழுகின்றாள்..செவிலி உடனே மருத்துவச்சியை அழைத்து வருகிறாள். சுரம் தணிந்தபாடில்லை. ஜீவகனோ மனம் வருந்துகின்றான். அச்சமயத்தில் அவ்விடம் வரும் சுந்தர முனிவர் சுரத்தின் தன்மை அறிகிறார். மன்னவனிடம் மகளுக்கு மாலை சூடும் வேளை வந்துவிட்டதாகக் கூறுகிறார். "என் மகளுக்கு ஏற்ற துணையை எங்கு தேடுவேன்?" என்று ஜீவகன் வினவ, சேர நாட்டு மன்னன் புருடோத்தமன், மனோன்மணிக்குத் தகுந்த இணை என்று புகல்கின்றார். அரசனும், அமைச்சரிடம் இது பற்றி விவாதிப்பதாகக் கூறுகிறான். இவ்வேளையில் வாணியின் தந்தை சகடர் அரசனிடம் வந்து தன் மகள் வாணிக்கு குடிலன் மகன் பலதேவனுக்குத் திருமணம் செய்ய இருப்பதாகவும், அவள் நடராசன் என்பவனைக் காதல் செய்வதாகவும், நடராசன் ஒரு வீணன் என்றும் தன் மகள் திருமணம் செய்ய மன்னவன் அருள் புரிய வேண்டும் எனவும் வேண்டுகிறான்.
மன்னவனும் அதற்கு வாக்குறுதி அளிக்கிறான். வாணியை அழைத்து அறிவுரை செய்கிறேன். அவளோ மரணதேவனுக்கு மாலை சூடினாலும், பலதேவனை மணவேன் என்று சொல்கிறாள்.. மன்னவன் தனது மகள் திருமணம் பற்றி குடிலனுடன் ஆலோசனை செய்கிறான். குடிலன் இவ்விடத்தும் தன் சதியை மன்னனிடம் செயல் படுத்த நினைக்கிறான். மணம் பேசுவதற்குத் தன் மகன் பலதேவனை அனுப்புவதற்கு அனுமதி கோருகிறான். மன்னனும் சம்மதிக்கிறான்.சேர நாட்டுடன் பாண்டிய நாட்டுக்குச் சொந்தமான நன்செய் நாட்டினையும் (இன்றைய நாஞ்சில் நாடு அதாங்க நம்ம குமரி மாவட்டம்) அவனே ஆட்சி செய்து வருவதால், தன் மகளை மணந்து கொள்ளும் பட்சத்தில் அப்பகுதியினை அவனுக்கே தந்து விடுவதாகக் கூறும் ஓலையினை எழுதித் தன் மகனிடம் கொடுத்து அனுப்புகிறான். அதன் மூலம் போர் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறான். தற்சமய சூழ்நிலை பாண்டியனுக்குத் தக்கதாக இல்லை. எனவே போரில் நிச்சயம் அவன் தோற்று விடுவான். சேரனிடம் பேசி எப்படியாவது பாண்டிய நாட்டுக்குரிய சேர மன்னனின் பிரதிநிதியாகி விட வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறான். அவன் விருப்பம் போலவே பலதேவனும் அனந்தை (அதாங்க திருவனந்த புரம்) செல்கிறான். அங்கே....சேர மன்னன் புருடோத்தமன் கனவிலே ஒரு காரிகையைக் கண்டு காமுறுகிறான். அவள் யாரென்று அறியாது தவிக்கிறான். அவ்வமயத்தில் பலராமன் ஓலை கொண்டு வருகிறான். நன்செய் நாடு பாண்டியனுக்கு என்று சொல்லப் பட்ட செய்தியைக் கேட்டு மனம் பதைக்கிறான். முறைப் படி மணமகனே, மணமகளை நாடிச் செல்ல வேண்டும் என்றும், "உமது ஊரின் வண்டினைத் தேடி மலரினை அனுப்புவரோ" என்று ஏளனம் செய்கின்றான். இத் தவறுக்காக, பாண்டியன் மன்னிப்பு கேட்கும் விதமாக வேப்பம் பூ மாலையும், ஒரு குடம் தாமிர பரணி நீரும் தர வேண்டும். இல்லாத பட்சத்தில் நெல்லை நோக்கி படை எடுத்து வருவதாக சொல்லி அனுப்புகிறான். வந்த காரியம் சுலபமானதில் மகிழ்ச்சியுடன் நாடு திரும்புகிறான் பலதேவன்.போர் மூள்கிறது..மனோன்மணியின் நலம் விரும்பியும், படைத் தலைவனுமான நாராயணன் உள்ளம் கொதிக்கிறான். மன்னனுக்கு அறிவுறுத்துகிறான். ஆயினும் மன்னன் குடிலனின் மாயையில் இருந்து விடுபடாததல், நாராயணனை அவமானப் படுத்துகிறான்.போர்க்களத்தில் நாராயணன் இருந்தால் பாண்டியன் வெல்லக்கூடிய வாய்ப்பு வந்து விடும் என்று அஞ்சி அவனைக் கோட்டைக் காவல் செய்யப் பணிக்கிறான் குடிலன்.மனம் நொந்த நாராயணன் அதையும் ஏற்றுக்கொள்கிறான்
போர்க்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மன்னனுக்கு ஆபத்து என்ற செய்தி வர நாராயணன் களத்துக்கு விரைந்து மன்னனைக் காக்கிறான். ஆயினும் காயமடைந்த மன்னன் மயக்கமுறுகிறான்.விழித்ததும் குடிலனை சந்திக்கிறான் மன்னன். குடிலனின் வஞ்சகப் பேச்சால் நாராயணனுக்கு மரண தண்டனை என்று ஆணையிடுகிறான். போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றதும் தன்னையே மாய்த்துக் கொள்ள விழையும் மன்னனுக்கு மகள் நினைவு வாட்டுகிறது. இவ்விடம் விட்டுப் போவது எவ்வாறு என்று யோசிக்கிறான். அப்போது சுந்தர முனிவர் வருகிறார். தான் வாங்கிய்ருந்த அறையின் உள்ளே சுரங்கப் பாதை நடராசனின் உதவியுடன் அமைத்திருப்பதாகவும், அதன் வழியாக அனைவரும் தப்பிச்சென்று விடலாம் என்றும் அறிவுறுத்துகிறார்.இதையும் மன்னன், குடிலனுக்கு சொல்ல, குடிலனோ, மணமுடியாத பெண் இந்நேரத்தில் செல்வது தகாது என்றும், அவளுக்கு மணமுடித்துப் பின்னர் அழைத்துச் செல்லலாம் என்றும் சொல்கிறான். தகுந்த மணமகனாக குடிலன் மகன் பலதேவனையே தேர்வு செய்கிறான் மன்னன். சுரங்கமே மணவரங்கமாக அலங்கரிக்கப் படுகிறது. மனோன்மணியும் மறுப்பேதும் சொல்லவில்லை. தந்தையின் சொல்லினை ஏற்கிறாள். அச்சமயத்தில் மன்னனிடம் இரு வாக்குறுதிகள் பெறுகிறாள். வாணி மற்றும் நடராசனின் திருமணத்தை நடத்துவது, நாராயணனை விடுதலை செய்வது என்பவைதான் அது.வாணியோ பலதேவனை மனோன்மணி மணம் புரிந்தால், தானும் நடராசனும் மணம்செய்யப் போவதில்லை என்றுரைக்கிறாள்.சுரங்கத்தில் அனைவரும் அமர்ந்திருக்க வாணி பாடுகிறாள். இச்சமயத்தில் குடிலன் சுரங்கத்தின் முடிவுப்பாதையைத் தேடிச் செல்கிறான்.அங்கே புருடோத்தமன் தன் காதலியின் நினைவாகத் தனிமையில் இருக்கிறான். குடிலன் அவனைக் கண்டதும், வஞ்சகப் பேச்சினை ஆரம்பிக்கிறான். வஞ்சி நாட்டரசனோ அவன் வஞ்சனையை ஏற்கவில்லை. குடிலனைக் கைது செய்து சுரங்கப் பாதை வழியே வருகிறான். அங்கே மணவறையில் தன் ஆருயிர்க் காதலியைக் காண்கிறான். உடனே வெளிப்பட்டு அவளை நோக்கிச் செல்ல, அவளும் தான் கனவில் கண்டு இன்புற்றது இவனே என்றுணர்ந்து அவனுக்கு மாலையிட்டு மயங்குகிறாள். பாண்டிய வீரர்கள் அவனைத் தாக்க முயல, சேர நாட்டு வீரர்கள் அவ்விடம் சுற்றி வளைக்கிறார்கள்.புருடோத்தமன் குடிலனின் வஞ்சனையை ஜீவகனுக்குத் தெரிவிக்கிறான். ஜீவகனும் தெளிவடைய கதை இனிதே நிறைவடைகிறது............அப்பாடா...ஒரே மூச்சில சொல்லி முடிச்சிட்டேம்பா...தயவு செய்து யாராவது பின்னூட்டம் எழுதுங்க....../

மனோன்மணி

எம் மனதைக் கொள்ளை கொண்ட ஒரு நாடகப் பாத்திரம் பற்றி இவ்விடம் பேசுகிறேன். மனோன்மணீயம் நூலின் நாயகி மனோன்மணியினைப் பற்றிப் படித்தால் நீங்களும் அவளுக்கு விசிறிகள் ஆகிவிடுவீர்கள். தென்பாண்டி நாட்டில் பலரது வீடுகளில் குலதெய்வமாக வணங்கப் படும் மனோன்மணியும் இவளும் ஒன்றோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இந்நாடகத்தில் வரும் நற்கதாபாத்திரங்கள் அனைத்தும் "பாண்டிய நாட்டின் குலக் கொழுந்தான" மனோன்மணியைக் காப்பதற்கே முயற்சி மேற்கொள்ளும்போது எனக்கு வியப்பு ஏற்பட்டது.. அவளிடம் ஏன் இவர்களுக்கு ஈர்ப்பு என்று.. ஆனால் கதை செல்கின்ற போக்கில் நானும் அவளால் ஈர்க்கப் பட்டேன்.சிவ வழிபாடு செய்து, அவனை நாடியிருப்பதே இன்பம் என்று அரண்மனையிலும் துறவு வாழ்க்கை வாழ்கிறாள் நாயகி. பஞ்சு மெத்தை இருக்கும் போதும் அவள் துயில் கொள்வது வெறுந்தரையில்... அவளது தோழி வாணி தன் காதலைப் பற்றியும் காதலன் நடராசன் பற்றியும் பேசும் போது, காதலை இகழும் மனோன்மணிக்கு ஓரிரவில் காதல் சுரம் ஏற்படுகிறது. கனவில் கண்ட மறவன் மாமன்னன் பெயரென்ன என்று அறியாது துடிக்கும் இம்மானுக்கு சுரமேற்பட, காரணம் அறியாது அரசன் தவிக்கிறான். குல குரு சுந்தர முனிவர் சுரத்தின் தன்மையறிகிறார். இளவரசிக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்யச் சொல்கிறார். சேரநாட்டுத் தலைவன் புருடோத்தமனை முன் மொழிகிறார். திருமண ஏற்பாடு அமைச்சன் குடிலன் சதியால் போராக மாறுகிறது. போரில் பாண்டியன் தோற்றுவிட்ட தருணத்தில் அனைவரும் மனோன்மணியைக் காக்கவே முயல்கின்றனர். அமைச்சனும் தந்திரமாகத் தமது மகனுக்கு மனோன்மணியை மணமுடித்து வைக்க அரசனைத் தூண்டும் போது மதிகெட்ட மன்னவனும் மனமிசைந்து விடுகிறான். தன் மகளிடம் இதற்காக அவன் வேண்டும் போது, அவள் மன்னனிடம் கேட்ட இருவரங்களில்தான் மனோன்மணியின் தன்மை வெளிப்படுகிறது. தனக்கு ஆபத்து நேரிட்ட போதும், தன்னை அண்டியவருக்கு நல்லது செய்ய வேண்டியது தெய்வத் தன்மை. அத்தெய்வத் தன்மை பூண்டவளாக மனோன்மணி எனக்குக் காட்சியளித்தாள். அவளைத் தெய்வமெனவேக் கொண்டாடினேன் அக்கணத்தில்,....அவள் கேட்ட வரம் இதுதான். "தனது தோழி வாணி அவள் காதலனோடு சேர்த்து வைக்கப் பட வேண்டும். சூழ்ச்சியால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தன் தோழன் நாராயணன் விடுதலை செய்யப் பட வேண்டும்" இவ்விரு வரங்களையும் அவள் கேட்ட சூழலை நீங்கள் கண்டீர்களாலானால் கண் கலங்கி விடுவீர்கள். காதலை வெறுத்த அவளுக்கும் ஒரு அறியாத அழகனோடு காதல் பிறக்க, மன்னன் மகளாலானும், மங்கையரின் காதல் சுதந்திரம் பெற்றோர் கையில் என்றறியும் வேளையில் குமுறுகிறாள். தந்தையையும் நாட்டையும் காக்கவே தன் காதலை மறந்து விட்டு, தந்தை சுட்டிய அமைச்சன் மகன் பலதேவன் இழிவானவன் என்று தெரிந்தும் அவனை மணக்க இசைகிறாள்..
"நீ உன் காதலனோடு இணையாவிட்டால் நானும் நடராசனும் மணம் புரிவதில்லை" என்று அழும் தோழிக்கு ஆறுதல் கூறி அவர்கள் மணம் முடிக்கும் நல்வாய்ப்பினை வரமாகப் பெறுகிறாள். மறவர்களின் ஆதரவோடு புரட்சியில் ஈடுபட்டான் என்ற பழியியனை சுமந்த தன் தோழனுக்கு விடுதலை பெற்றுத் தருகிறாள்.இத்தன்மைகள் அவள் பெற்றிருந்த காரணத்தால்தான் அனைவரும் அவளைத் தெய்வமெனக் கொண்டாடினார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.. ஆயினும் வழக்கம்போல் இறுதிக் காட்சியில் தன் நாயகனைக் கண்டதும் காதல் பெருகிட ஓடி சென்று அவன் மார்பில் மயங்கி விழும்போது, அறியாத ஆனந்தத்தோடு நமது கண்களும் பனிக்கின்றன. சேரமன்னனும் முன்னரே இவளைக் கனவில் கண்டு காமுற்றவனாகையால், இருவரது காதலும் இறுதி வேளையில் கை கூடுகின்ற போது, சொல்லவொண்ணா ஆனந்தமேற்படுகிறது...வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் மனோன்மணீயம் படித்துப் பாருங்கள்..