வெள்ளி, பிப்ரவரி 18, 2011

சுடலைமாடன் கதை (3)

இப்படியாக சுடலைமாடன் கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம்
தங்கப் புதையலுக்குக் காவல் இருந்து கொண்டிருந்த சமயத்தில், மலையாள
தேசத்திலே நந்தம்புனலூர் என்ற ஊர் இருந்தது.
அங்கே காளிப் பெரும்புலையன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் மாபெரும்
மந்திரவாதி. அவனால் ஆகாத செய்கைகளே இல்லையாம். மந்திரத்தால் என்ன
வேண்டுமானாலும் செய்திடுவான். அந்த ஊருக்கே அவன்தான் தலைவன். எனவே அவனது
வீடு அரண்மனையைப் போன்று இருக்கும். அவனது மனைவி புலக்கொடியாள்.
இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை..
இதனால் மனமுடைந்த புலக்கொடியாள் தன் கணவனிடம் இதைப் பற்றி வேதனையோடு
அழுதாள். அவளைத் தேற்றிய மந்திரவாதி காளிப் புலையன், அவளை பாதளகண்டி
ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் சென்று ஒருமண்டலம் விரதம் இருந்து அம்மனை வணங்கி
வரச்சொன்னான்.
மனத்தின் பாரத்தோடு புலக்கொடியாளும் தவமிருந்தாள். அந்த சமயத்தில்
ஔவையார் தவமிருந்த வீட்டிலிருந்த ஒரு மாவு உருண்டையைக் காகம் ஒன்று
கவ்விக்கொண்டு பறந்து வந்தது.. அதே சமயத்தில் கையேந்தி தவமிருந்த
புலக்கொடியாளைக் கடக்கையில் அந்த மாவு உருண்டை அவளது கைகளில் விழுந்தது.
இது இறைவனின் அருளாலே விழுந்தது என்று எண்ணிய புலக்கொடியாள் அதை உண்டாள்.
இல்லம் சென்றாள்.. அவளும் கருவுற்றாள்..
பத்தாம் மாதம் அழகிய பெண்மகவைப் பெற்றெடுத்தாள் புலக்கொடியாள்.
காளிப்புலையனின் குலதெய்வம் இசக்கியம்மன். எனவே இசக்கியின் பெயரையும்,
மாவு உருண்டைப் பிரசாதத்தால் பிறந்த குழந்தையாதலால் மாவின் பெயரையும்
இணைத்து மாவிசக்கி என்று தன் குழந்தைக்குப் பெயரிட்டான்.
மாவிசக்கியானவள் சகலகலைகளையும் கற்றுத் தேர்ந்தாள். மிகுந்த அழகுடன் விளங்கினாள்.
தன்னுடைய பன்னிரண்டாம் வயதில் பருவமெய்தினாள் மாவிசக்கி.. தன்னிடமுள்ள
ஆபரணங்களால் மகளை அலங்கரித்து மகிழ்ந்தான் காளிப்புலையன்.. இன்னமும் தன்
மகளுக்குப் பொன்னால் நகைகள் செய்து போட்டு அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசை
அவன் மனத்தில் உதித்தது..
அதுவே அவனது அழிவுக்கும் காரணமானது.
அஞ்சனமை போட்டு தங்கப் புதையல் எங்கே கிடைக்கும் என்று அவன் பார்க்கும்
போது கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் பொன் புதையலாக
இருப்பதை அறிந்தான்.
எனவே அதனைக் கொள்ளையிட வேண்டும் என்று முடிவு செய்து வந்தான்.. மாயாண்டி
சுடலைமாடன் காவல் இருப்பதைக் கண்டு அஞ்சி, இவன் இருக்கும் போது நம்மால்
கொள்ளை செய்ய இயலாது என்று எண்ணிக் காத்திருந்தான்.
வெள்ளிக்கிழமை இரவில் சுடலை மாடன் மயான வேட்டைக்குக் கிளம்பினார். அவர்
கிளம்பியதும், காளிப்புலையன் உள்ளே சென்று ஒருகடாரம் பொன்னைக்
கொள்ளையிட்டுப் போய்விட்டான்.
மயான வேட்டைக்குச் சென்ற சுடலைஈசன் திரும்பி வந்தார். தன் காவலில் இருந்த
ஏழுகடாரம் தங்கத்தில் ஒரு கடாரம் குறைந்ததைக் கண்டதும் கோபமுற்றார். யார்
இந்த பாதகத்தைச் செய்தார்கள் என்று எண்ணியவாறே அன்னை பகவதியாளிடம்
சென்றார்.
"அம்மா... நான் மயான வேட்டைக்குச் சென்றிருக்கும்போது யாரோ உன் கோவிலில்
வந்து கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றார்கள். யாரது?" என்று கேட்டார்.
அன்னை பகவதியும் "மகனே. திரவியம் போனால் போகட்டும். அவனைப் பற்றிக்
கேளாதே" என்றாள்.
அவனைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் என்று சுடலையாண்டவர் பிடிவாதம்
பிடிக்க காளிப்புலையனைப் பற்றிச் சொன்னாள் அம்மை..
"மகனே.. நந்தம்புனலூரிலுள்ள காளிப்பெரும்புலையன்தான் இந்தக் கொள்ளையைச் செய்தது.."
"அம்மா விடை கொடு.. நான் அவனை அழித்து நம் திரவியத்தை மீட்டு
வருகின்றேன்" என்று வீராவேசத்தோடு புறப்பட்டார் சுடலை.
"பாலகா. பொறு.. அவன் மந்திரவாதத்தில் தேர்ந்தவன். அவனை யாராலும் எதிர்க்க
இயலாது. அவன் செய்யும் செயல்கள் எல்லாம் விசித்திரமானவை.. பொன் போனால்
போகிறது.. என் மகனே நீ என்னை விட்டுப் போகவேண்டாம். அவன் உன்னைப்
பிடித்து சிமிலில் அடைத்து விடுவான். எனவே நீ போகவேண்டாம்" என்றாள் அன்னை
பகவதி..
"அம்மையே.. உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? நான் பரமனிடம் வரம் வாங்கி
வந்தவனம்மா.. தில்லைவன மயானத்தில் பிறந்த என்னை எந்த மாயசக்தியாலும்
எதுவும் செய்ய முடியாது... நீ ஒருவார்த்தை மட்டும் சொல். என்
காவலிலிருந்த பொன்னைக் கொள்ளை செய்தவன் குடும்பத்தை அழித்து மண்ணோடு
மண்ணாக்கி விட்டு வருகின்றேன்.." என்று முழங்கினார் சுடலை..
அன்னை மேலும் மறுத்தாள்..
"அம்மையே.. இன்னும் எட்டு நாட்களுக்குள் தெரியும்.. மாயஞ்செய்யும் அந்த
மந்திரவாதியா? அல்லது இந்த மாயாண்டியா? என்பது.. நீ விடை கொடு" என்று
பலிவேகத்தோடு ஓலமிட்டார் சுடலை..
இனியும் தன் மகனைக் கட்டுப்படுத்த இயலாது என்றறிந்த அன்னை பகவதியும்
அவனுக்குத் திருநீற்றைப் பூசி வல்லயத்தைக் கையில் கொடுத்து அனுப்பி
வைத்தாள்..
வீராவேசத்தோடு கொட்டாரக்கரையிலிருந்து கிளம்பிய சுடலை ஆண்டவர் மோசம்செய்த
மோசக்காரனை நாமும் வேசம் போட்டு மோசம் செய்வோம் என்று எண்ணங்கொண்டு
பாம்பாட்டியாக உருவம் கொண்டார்.. கானகத்தில் தான் பிடித்த பாம்புகளைக்
கொண்டு நந்தம்புனலூர் வந்தடைந்தார்.
பாம்புகளைத் தெருவில் விட்டு வித்தை காட்டிக் கொண்டிருந்தார்.
காளிப்புலையன் வீட்டிலிருந்து யாரும் வந்து பார்க்கவில்லை.. ஆனால்
காளிப்புலையனின் மகள் மாவிசக்கி தன் வீட்டின் மாடியில் நின்று இதைக்
கவனித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டார் சுடலை.. இவளுக்காகத்தானே
அந்தத் திரவியத்தைக் களவெடுத்தான் பெரும்புலையன். எனவே முதலில் இவளைப்
பலிவாங்க வேண்டும் என்று எண்ணி வயதான பண்டார உருவெடுத்து காளிப்புலையன்
வீட்டுக்கு வந்து கையேந்தி பிச்சை கேட்டார்.
யாரோ சிவனடியார் தன் இல்லம் தேடிவந்து பிச்சை கேட்பதை அறிந்த மாவிசக்கி
அன்னம் எடுத்துக் கொண்டு பிச்சையிட வாசலுக்கு வந்தாள்.
அவள் தெற்கு வாசலுக்கு வந்தால், சுடலை வடக்கு வாசலுக்குச் சென்று பிச்சை
கேட்பதும், அவள் வடக்கு வாசலுக்கு வந்தால், சுடலை தெற்குவாசலுக்கு வந்து
பிச்சை கேட்பதுமாக அவளை அலைக்கழித்தார்.
இதனால் மாவிசக்கி கோபமடைந்தாள்.. "அடேய் கிழட்டுப் பண்டாரம். பிச்சை
எடுக்க வந்தால், கொடுத்ததை வாங்கி விட்டுப் போகவேண்டியதுதானே... ஏன்
இப்படி விளையாடுகின்றாய்?" என்று கோபத்தோடு சுடலையை நோக்கிக் கேட்டாள்.
"பெண்ணே மாவிசக்கி... நான் பிச்சை கேட்டு வரவில்லை.. உன்னைப் பெண் கேட்டு வந்தேன்."
"என்னைப் பெண் கேட்டு வந்தாயா? இந்த சொல்லை மட்டும் என் தந்தை
பெரும்புலையன் கேட்டால், உன்னை இல்லாது செய்து விடுவார்... மரியாதையாக
ஓடிப்போ" என்றாள் மாவிசக்கி..
"எனக்குத் தராமல் உன்னை யாருக்குத் தருவான் உன் தந்தை? சரி எனக்குத்
தாகமாக இருக்கின்றது. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்று அதிகாரத்
தோரணையோடு கேட்டார் சுடலை.
"தண்ணீரெல்லாம் இல்லை.. தரமுடியாது.. ஓடிப்போ" என்று மாவிசக்கி சொல்ல..
"அடியே மாவிசக்கி.. உன் தகப்பனுக்கு பசும்பாலை எடுத்து அந்த அங்கே
வைத்திருக்கின்றாயே... எனக்கு நீர் கூட இல்லை என்றா சொல்கின்றாய்.. உன்
அப்பன் இருக்கும் போதே யாரும் அறியாமல் உன்னைக் கற்பழிப்பேன் பாரடி.."
என்று சொல்லி சபதம் செய்து மாயமாய் மறைந்தார் மாயாண்டி சுடலை..
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தாள் மாவிசக்கி..
தன் தந்தை வந்ததும் இதனைத் தெரிவித்தாள். காளிப் புலையனும் மை போட்டு
பார்த்தால் அவனால் வந்தது யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை..
ஆனாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தான்.'
எனவே தன் மகளைப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்தான்..
அவன் என்ன ஏற்பாடுகளைச் செய்தான் என்பதையும், நம் சுடலை மாட சுவாமி அந்த
ஏற்பாடுகளை எவ்வண்ணம் தகர்த்தெறிந்து காளிப்புலையனை பழிவாங்கினார்
என்பதையும் அடுத்த மடலில் காண்போம்..

வியாழன், பிப்ரவரி 17, 2011

அன்பே வா அருகிலே...(5)

அத்தியாயம் 5.

திடீரென யாரோ சிரிக்கும் குரலைக் கேட்ட அதிர்ச்சியில் நடந்து கொண்டிருந்த
மலையாண்டி அதைக் கண்டதும் அதிர்ச்சியானார்.
"கிராம்சு.. அங்க பாரும்... அது என்னான்னி தெரியுதா?"
"இதெப்படி ஐயா? நம்ம ஊருல?" என்று அதிர்ச்சியோடு அதை நோக்கிச் சென்றார் கி.மு.
மலையாண்டி தன் கையில் உள்ள டார்ச்சை அதை நோக்கி ஒளிரச்செய்தார்.
தெளிவாகத் தெரிந்தது. அதைக் குனிந்து எடுத்தார்..
"இந்த கேசுல இதுதான் முக்கியமான ஆதாரமா இருக்கப் போவுது" மனதுக்குள்
சொல்லிக் கொண்டார்.
அதைத் தெளிவாகக் கண்டதும் கி.மு.வுக்குள் நடுக்கம்.
அது ஒரு சலங்கை மணி.. தெறித்து விழுந்ததைப் போல் இருந்தது.
"இந்த ஊருல ஆட்டம் போடுறவங்க யாராவது இருக்காங்களா?"
"நம்ம ஊருல யாருமே கெடயாது. அதான் யோசிச்சிட்டிருக்கேன்"
"நல்லா யோசிச்சிச் சொல்லும்.." என்று சொல்லியபடி காலடித்தடங்களைக்
கூர்ந்து கவனித்தார்.
அந்த இடத்தில் குதிரையின் காலடித்தடங்களும் தெரிந்தன.. ஆனால் திடீரென்று
ஒரு இடத்தில் குதிரையின் காலடித்தடம் முடிந்திருந்தது...
"குதிர இங்கே இருந்து பறந்தா போயிருக்கும்?" மனத்தில் ஏகப்பட்ட கேள்விகள்..
குதிரையின் காலடித்தடங்கள் ஆற்றிலிருந்து வந்ததைப் போல் தெரிந்தது..
மனிதக் காலடித் தடங்கள் மலையாண்டி யூகம் செய்தது போல் பொன்னுசாமி
நாடாரின் வீட்டிலிருந்துதான் வந்திருந்தன..
"சரி. கிராம்சு... நாங்க போய்ட்டு வாரோம்.. ஊர்க்காவலுக்கு நம்ம
கான்ஸ்டேபிள் ஒருத்தர உட்டுட்டு போறேன். என்ன பிரச்சனைன்னாலும் சொல்லி
அனுப்புங்க.. நானோ இல்லாட்டி நம்ம எஸ்.ஐயோ வருவோம் விசாரணைக்கு" என்று
சொல்லியபடி காவலர் ஒருவரை அங்கிருக்கும்படி பணித்து விட்டு வாகனத்தில்
புறப்பட்டார்.
மறுநாள் அதிகாலை ராசாங்கம் பாட்டியின் மகன் தங்கவேலு வந்து சேர்ந்தான்.
தங்கவேலு திருமணம் செய்திருக்கவில்லை.. அவர்களுக்கு விளைநிலங்கள்
ஏராளமாய் இருந்தன. இதனால் ராசாங்கம் பாட்டி வரதட்சணை அதிகம் கேட்டுக்
கொண்டே ஒவ்வொரு பெண்ணாகக் கழித்துவந்தாள். ஒருகட்டத்தில் தங்கவேலுவின்
வயது அதிகமாகிவிட, யாரும் அவனுக்குப் பெண்தர முன்வரவில்லை..இந்நிலையில்
ராசாங்கம் பாட்டியின் கணவர் செல்லையா நாடார் இறந்து விட்டார்.
இறந்த பிறகுதான் அவர் வாங்கிவைத்திருந்த கடன் தொகைகளைப் பற்றித் தெரிந்தது..
அவர்களின் சொத்துக்கள் எல்லாம் பறிபோயிற்று. தங்கவேலுவும் திருமணத்தைப்
பற்றிய எண்ணத்தை மறந்துவிட்டு வாழ்ந்து கொண்டிருந்தான்.
யாரைச் சென்று பார்ப்பது.. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்..
"கவலப்படாத தங்கேலு... எல்லாத்தையும் பாத்துக்கிடலாம். உங்க அம்மாவ
இன்னிக்கு மத்தியானம் வாங்கிட்டு வந்துறலாம்" தைரியம் சொன்னார் தலையாரி..
அவனது உறவினர்களும் கூடி அவனுக்குத் துணையாக இருந்தனர்.
சுப்பம்மாவோ பயத்தில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை..
அவளின் ஆடுகள் காலையில் தாமாகவே அவளது வீட்டை நோக்கி வந்துவிட்டிருந்தன..
மதியம் ராசாங்கம் பாட்டியின் உடல் வந்து விட்டது..
ஊரே கூடி அழுதது.. பேச்சியம்மாள் சுப்பம்மாவைத் தனியே விட்டு விட்டு
எங்கேயும் செல்லவில்லை.
மாலை ராசாங்கம் பாட்டியின் உடல் அடக்கம் செய்யப் பட்டது.
ஊர் முழுக்க முண்டமற்றுக் கிடந்த அந்தத் தலை யாருடைய தலை என்பது பற்றிய
பேச்சுதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
நாட்கள் கடந்துகொண்டிருந்தன..
சாராயம் காய்ச்சுக் கொண்டிருந்த ஆறுமுகத்தை அதற்குப் பிறகு காணவில்லை.
அவனுக்கும் குடும்பம் ஏதும் இல்லாததால் அவனைப் பற்றி யாரும் கவலைப்
படவிலை..
எந்த ஒரு பிடிமானமும் கிடைக்காமல் காவல்துறை திணறியது. அவ்வப்போது
வருவதும், சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிடுவதும், சுப்பம்மாவை
விசாரிப்பதுமாக சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் வழக்கைப் பொறுத்தவரையில்
எந்த முன்னேற்றமும் இல்லை..
சுப்பம்மாவும் மெதுவாக அதிர்ச்சியிலிருந்து விடுபட்டாள்.
பள்ளிக்குச் செல்வதும் வருவதும்... ஆடுகளைக் கொண்டு செல்வதும் வருவதும்
அவளது வழக்கங்களாயின...
ஆனால் பொன்னுசாமி நாடாரின் வீட்டைக் கடக்கும்போதும், கரையடியைத்
தாண்டும்போதும் சிறிது பயம் எட்டிப் பார்க்கும்.. ஆனால் கரையடி சுடலை மாட
சாமியின் திருநீற்றை மடியில் கட்டி வைத்திருந்ததால் எந்த அதிர்ச்சியும்
தன்னை நெருங்காது என்று நம்பினாள்..
கரையடி மாடனுக்கு வெள்ளியும் செவ்வாயும் வழக்கம் போல் பூசைகள் நடைபெற்று வந்தன..
கரையடி நல்லூரும் கிட்டத்தட்ட அந்த சம்பவத்தை மறந்துவிட்டிருந்தது..
அந்த சமயத்தில் ஓர் நாள்...
செங்கோட்டான் மடம் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த ஆய்வாளர்
மலையாண்டியைத் தேடி ஒரு பெண் வந்தாள்..
"சார். என் பேர் அகல்யா... ஒரு ஹெல்ப் வேணும்"
"சொல்லும்மா என்ன விசியம்? நீ எந்தூரு?"
"சார். நான் சென்னையிலிருந்து வர்றேன். சட்டம் படிச்சிட்டு இருக்கேன்.
வித்தியாசமான வழக்குகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம்னு நினைத்தப்போ
முற்றுப் பெறாத சில வழக்குகளைப் பற்றிக் கேள்விப் பட்டேன். அதுல தலையும்
புரியாம, வாலும் புரியாம தள்ளாடிட்டிருக்கிற சில கேஸ்களில க்ரையடி
நல்லூர் தலைகேசும் ஒண்ணுன்னு தெரிஞ்சது.. அதான் அதைப் பற்றி எழுதலாம்னு
வந்தேன்."
"ஓ. அப்படியா... அந்த ஃபைலை பாத்தாலே தல சுத்துது... யோவ் ஏட்டு அந்த
கரையடிநல்லூர் தலகேசு ஃபைல எடுத்துட்டு இங்க வாய்யா" என்று ஏட்டை அழைத்து
விட்டு, அகல்யாவிடம் திரும்பி, "அந்த ஃபைல படிச்சிப் பாரும்மா.. உனக்கும்
எதுவும் புரியாது... நாங்க எல்லா கோணத்துலயும் அலசிட்டோம். ஒண்ணும் பிடி
படல..." என்றார்.
இதற்குள் அந்த ஏட்டு அந்த கோப்பைக் கொண்டுவந்து நீட்டினார்..
அகல்யாவும் அதை வாங்கித் திறந்தாள்.. அதிர்ந்தாள்...
"சார்... இது..... இது....." அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை..
"ஏம்மா.. இது யாருன்னி உனக்குத் தெரியுமா?"
"ரொம்ப நல்லாத் தெரியும் சார். இவர் எங்க காலேஜிலதான் வேலைபாத்திட்டிருந்தார்"
"என்னது உங்க காலேஜில வேல பாத்திட்டிருந்தாரா? எந்த ஊரு இவருக்கு?"
"எந்த ஊருனு தெரியாது சார். போனவருசங்கூட எங்களுக்கு இவர்தான் கைட்"
என்று சொன்ன அகல்யாவை நோக்கி நிமிர்ந்தார் மலையாண்டி..
அதே சமயம்..
ஒருவன் அரக்க பரக்க ஓடிவந்தான்..
அவன் கரையடி நல்லூரைச் சேர்ந்தவன்.
"ஐயா... ஐயா.."
"என்னலே.. என்னாச்சி?"
"நம்ம தலயாரி ஐயா உங்கள வெரசா வரச்சொன்னாவ"
"என்னாச்சில...?"
 "அங்க.. நம்மூர்ல...."
அவன் சொல்லத் துவங்கினான்..

(தொடரும்)

சுடலைமாடன் கதை (2)

தந்தை பரமனார் தன்னைக் கைலாயத்தை விட்டுப் போ என்று சொன்னவுடன் மகன்
சுடலை திகைத்தான்.. "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்து பேர்கொடுத்த நீங்களே
போகச்சொன்ன பிறகு நான் என்ன செய்வேன்...? நான் போகிறேன்.. எனக்குக் கொடை
கொடுத்து வரமளிக்க வேண்டும்" என்றான்.. சுடலைக்கு அப்போது வயது ஐந்து..
"உனக்கு எப்படிப் பட்ட கொடை வேண்டும்?" என்று ஈசனார் கேட்டார்.
"எட்டாத பரண் போட்டு அதில் எட்டு அடுக்குகளில் எனக்குப் படையல் இட
வேண்டும். ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கல் அரிசி சோறும், ஒரு பரணில்
சூலி ஆடுகளும், ஒரு பரணில் சூலி எருமைகளும், ஒரு பரணில் சூலி
பன்றிகளுமாக, உயிர்ப்பலிகள் படையல் இடவேண்டும்."என்று கேட்டான்.
இதைக் கேட்டதும் கைலாயம் அதிர்ச்சியானது.
சுத்த சைவக் கோட்டையான கைலாயத்தில் அசைவப் படையலா? அதுவும் ஈசனாரிடமே
இவன் கேட்டு விட்டானே என்று அத்தனை தேவாதிதேவர்களும் மலைத்தனர்.
உமையவளுக்கோ தன் பிள்ளை இப்படிப் பிணந்திண்ணிப் பிள்ளையாகி விட்டானே என்ற
வருத்தம்.
ஈசனும் இசைந்தார்.
சைவக்கோட்டையான கைலாயத்தில் அன்று மாடனுக்கு அசைவப் படையல். அதுவும் ஈசனே
ஏற்பாடு செய்தது... தேவாதி தேவர்கள் முன்னிலையில் அத்தனைப் படையல்களையும்
ஏற்றான். நடனமாடினான்... தேவமங்கைகளும் நடனமாடினர்... இறுதியில்
ஈசனாரிடம் "இந்தப் பலிகள் எனக்குப் போதாது. எனக்கு நரபலி வேண்டும்" என்று
கேட்டான்... ஈசனோ மௌனமாக தன் காலால் தரையைத் தேய்த்தார்.. அங்கே
தேவகணியன் தோன்றினான்.. தன் மகுடத்தை இசைத்து மாடனை மகிழ்வித்தான்..
ஆடினான்.. அவன் ஆட்டத்தில் மயங்கினான் மாடன்...
தன் கையைக் கிழித்தும், நாக்கைக் கிழித்தும் இரத்தத்தை மாடனுக்குப்
பலியாகக் கொடுத்தான். அதையே நரபலியாக ஏற்ற மாடனும் ஈசனாரிடம் வந்து
மீண்டும் வரம் கேட்டான்..
"ஓயாத பேய்களை அடக்கும் வரம் வேண்டும். தர்க்கம் செய்யும் பேய்களை நான்
தடிகொண்டு ஓட்ட வேண்டும். நான் கொடுக்கும் மயான சாம்பலால் தீராத
நோய்களெல்லாம் தீர்ந்து போக வேண்டும். நல்லவர்கள் என்னைப்
பணியாவிட்டாலும் அவர்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். கெட்டவர்கள்
என் பாதம் பணிந்தாலும் அவர்களை நான் கருவறுக்க வரம் வேண்டும்" என்று
சுடலை கேட்டான்.
மகன் சொல்லுக்கு தந்தையும் செவிமடுத்தார்.. "தந்தேன் மகனே... நீ
செல்லலாம்" என்று அவனை வழியனுப்பி வைத்தார்.
ஈசனிடம் வரம் வாங்கிய நம் சுடலைமாடசுவாமி கயிலாயத்தின் தென்வாசல் வழியாக
வெளியேறினார்..(வரம் வாங்கியவரை மரியாதையோடு அழைப்போம்).
வீராவேசமாக, கையில் வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தி வல்லவனாம்
மாயன் சுடலையாண்டி பூலோகம் வந்து சேர்ந்தார்.
திருக்கேதாரம் தொடங்கி சிவாலயங்களில் சென்று வழிபாடு செய்தார். காசியின்
புனித தீர்த்தங்களில் நீராடி வடநாட்டுப் புண்ணியதலங்களையெல்லாம்
தரிசித்து விட்டு நம் தென்னாடு நோக்கி வந்தார் சுடலை ஈசன்.
தென்னாட்டில் காஞ்சியில் அய்யனையும் அம்மை காமாட்சியையும் கண்டு
வணங்கினார். திருவண்ணாமலை சென்று அண்ணாமலையானையும், உண்ணாமுலையாளையும்
வணங்கி அருள் பெற்றார். வேங்கடமலை சென்று திருவேங்கடநாதனையும்
அன்னையையும் வழிபட்டார். இவ்வாறாக புண்ணிய தலங்கள் எல்லாம் சென்றுவழிபட்ட
சுவாமி நம் பாண்டி மாதேசம் வந்து சேர்ந்தார்.
மதுரைமாநகரில் ஈசனால் ஏற்படுத்தப்பட்ட புண்ணியநதியாம் வைகையில் நீராடி
சோமசுந்தரக் கடவுளையும், அன்னை மீனாட்சியையும் வணங்கினார். இவ்வாறாக
சிவாலயங்கள் 1008ம் திருப்பதிகள் 108ம் தரிசனம் செய்த சுவாமி மலையாள
தேசம் நோக்கி வந்தார்.
அங்கே குருவாயூர், திருவனந்தபுரம் என்ற புண்ணியதலங்களைத் தரிசனம் செய்து
விட்டு வரும் வழியில் பேச்சிப்பாறை அருகே கொட்டாரக் கரை என்ற ஊரை
வந்தடைந்தார்...
சுடலைமாட சுவாமி கொட்டாரக்கரை வந்து சேர்ந்த சமயத்தில் அங்கே கோயில்
கொண்டிருந்த அன்னை பகவதிக்குத் திருவிழா...
தேரோட்டம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.. தேரிலே சிம்மக்
கொடியைக் கண்டதும் தன் தாய்க்குத்தான் திருவிழா நடக்கிறது என்று அறிந்த
சுடலையாண்டவர் இவளிடம் அடைக்கலம் கேட்போம் என்று அவளை வணங்கி நின்றார்...
தேரில் பவனி வந்த அன்னையோ சுடலைமாடனைக் கவனிக்கவில்லை. அமைதியாக
இருந்தால் நம் அன்னை நம்மைக் கவனிக்க மாட்டாளென்று எண்ணி அட்டகாசம் செய்ய
முடிவுசெய்தார்.
ஒரே பாய்ச்சலாக தேரில் பாய்ந்தார். தேரின் அச்சு முறிந்தது...
தேரோட்டத்தைக் காணாமல் தேவதாசியின் ஆட்டத்தைக் கண்டு களித்துக்
கொண்டிருந்த ஒருவனது தலையைப் பிடுங்கி எறிந்தார். அது தேவதாசியின் மேல்
பட்டதால் அவளும் இறந்தாள்... அன்னைக்கு அன்றாடம் பூசைகள் செய்து வரும்
அந்தணரை ஒரே அடி... அவரும் மிரண்டு அன்னையிடம் ஓடினார்...
"தாயே பகவதி... அன்றாடம் உனக்குப் பூசனைகள் செய்து வருகின்றேன்.. என்னை
ஒருவன் அடித்துவிட்டான்.. கண் கொண்டு பாரம்மா" என்று அழ, அன்னை
வெகுண்டெழுந்தாள்..
இதற்குள் பகவதியில் கோட்டைக்குள் புகுந்துவிட்ட சுடலைமாடன் கோட்டையிலே
பொல்லாத அட்டகாசம் செய்தார். கொடிமரத்தை ஆட்டுவதும், கோபுரத்தில் நின்று
ஆடுவதுமாக செய்த அட்டகாசத்தைக் கண்ட அன்னை பகவதிக்குப் பொறுக்கவில்லை..
"யாரடா அது என் கோட்டைக்குள் அத்து மீறியது?" என்று கோபத்தோடு கிளம்பி
வந்தாள்..
தன்னை இந்தக் கோலத்தில் கண்டால், அன்னையின் கோபம் ஆறாது என்று எண்ணிய
சுடலைமாட சுவாமி ஏழு வயது பாலகனாக உருக்கொண்டு நடந்து வந்தார்...
பாலகனைக் கண்டதும் அன்னைக்குப் பாசம் வந்து விட்டது.. இந்தச்சிறுவனா என்
கோட்டையில் அட்டகாசம் செய்தது என்று எண்ணிய அன்னை அவரிடம் விசாரித்தாள்..
"பாலகா... உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்?" அன்னையின் அமுதமொழி கேட்ட
தனயனும் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறினார்.
"அம்மையே.. என்னைப் பெற்றெடுத்தாள் பார்வதியாள்.. பேர் கொடுத்தார்
பரமசிவன்.. பிறந்தது சுடலையில், வளர்ந்தது கைலாயத்தில்.. என்னைப்
பெற்றவர்கள் என்னை ஆகாதென்று விரட்டி விட்டனர். என்னை ஆதரிப்பார்கள்
யாரும் இல்லை... பூலோகத்தில் தஞ்சம் கேட்டு உன்னை நாடி வந்தேன்" என்று
சுடலை மாட சுவாமி தெரிவித்தார்.
"பார்வதியாள் பெற்றெடுத்தாள் என்ன? இந்த பகவதியாள் பெற்றெடுத்தாள் என்ன?
மகனே.. நீயும் என் மகன்தானப்பா..உனக்கு அடைக்கலம் தந்தோம்.. உனக்கு
வேண்டியதைத் தந்து பசியாற்றுவோம்." என்றாள் அம்மை பகவதி.
"அம்மா... உன் ஆலயத்தை நான் தினந்தோறும் பார்க்கின்றேன்.. உனக்கு
பச்சரிசி சாதத்தைத் தவிர வேறொன்றும் படைக்கக் காணோம்.. இதைத் தின்றால்
எனக்குப் பசியடங்காது.." என்றார் சுடலைமாடன்.
"உனக்கு வேறென்ன வேண்டும் கேள்" என்று பகவதியாள் கேட்க, "ஒரு கோட்டைப்
புழுங்கலரிசியில் சோறு பொங்கி ஒரே படையலாக இடவேண்டும்" என்றார் சுடலை
ஈசன்.
"அப்படியே தந்தோம்" என்று சொல்லி அன்னையும் சுடலைக்குப் படையல் இட
ஏற்பாடு செய்தாள். மேலும் அவளது ஆலயத்தின் ஈசான மூலையில் உள்ள ஏழு கடாரம்
தங்கத்தைக் காவல் காக்கும் பொறுப்பையும் சுடலையிடம் ஒப்படைத்தாள்.
படையலைத் தின்ற சுவாமிக்குப் பசி அடங்கவில்லை.. எனவே அன்னையின்
ஆலயத்துக்கு வரும் கொடியவர்களைக் கொன்று தின்ன ஆரம்பித்தார்.
இதைக் கண்ட பகவதிக்குப் பொறுக்கவில்லை "மகனே இங்கே பார்... என்னை நாடி
வருவோர் கெட்டோர்களென்றாலும், நல்லோர்களென்றாலும் அவர்களைக் காப்பது என்
கடமை.. நீ அவர்களை வதம் செய்யக் கூடாது" என்று எச்சரித்தாள். இதைக் கேட்ட
மாடனோ "அம்மையே நீ தரும் சைவப் படையல் எனக்குப் போதவில்லை.. என்ன செய்வது
என்னைப் படைத்த ஈசன் இப்படிப் படைத்து விட்டார்.. நாளையிலிருந்து நான்
மயானத்திற்கு வேட்டைக்குச் செல்கின்றேன். செவ்வாய் மற்றும் வெள்ளி
இரவுகளில் நான் வேட்டைக்குச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்" என்று
கேட்டார்.
அம்மையும் அனுமதி அளித்தாள்.
இவ்வாறாக மாடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச்
செல்வதும், அன்னையின் புதையலுக்குக் காவல் இருப்பதுமாகத் தனது நாட்களைக்
கழித்து வந்தார்.
அந்த சமயத்தில்தான்...
(தொடரும்)

புதன், பிப்ரவரி 16, 2011

சுடலைமாடன் கதை

சுடலைமாடன் கதை
நண்பர்களுக்கு வணக்கம்... இசக்கியம்மனின் கதையை ஆவலுடன் படித்து வந்தீர்கள்..நேற்றைய தினம் எனது நண்பனும், எனக்கு சகோதரன் உறவினனுமான செந்தில் (எ) ஆறுமுக நயினாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "எல்லாம் எழுதுற. சரி... எங்க அய்யா சுடலைமாடன் கதைய எழுத மாட்டியா?" என்று... மிகவும் சிறுவயதில் கேட்ட வில்லுப்பாட்டின் கதையை நினைவு படுத்தி எழுதலாம் என்று எனக்குத் தெரிந்த கதையை அவனுக்குக் கூறினேன்.. அவனும் சரிதான் என்று ஒத்துக் கொண்டான்.. நீ எழுது... ஏதேனும் பிழைகள் எழும் பட்சத்தில் திருத்தங்களைத் தெரிவிப்பதாகவும் கூறினான். மேலும் தன்னிடத்தில் வில்லுப்பாட்டின் ஒலிவடிவம் இருப்பதாகவும் விரைவில் அனுப்பிவைப்பதாகவும் கூறினான். அவன் அதை அனுப்பி வைத்தபிறகு அதனைப் பதிவிடுகின்றேன்.. அதுவரை அடியேன் அறிந்த சுடலைமாடன் கதை உங்களுக்காக.... (வில்லுப்பாட்டுக் கதைதான்...)
உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள். எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப் போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார் எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன் கைலாயம் திரும்பினார்.
உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்..
"ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும், இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன்.
"தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை..
"அதெப்படியாகும்? இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்" என்றார் இறைவன்.
"இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது"
"ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்"
"இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள் அந்தக் குமிழைத் திறந்தாள்..
அங்கே அந்த சிற்றெறும்புவின் வாயில் ஓர் அரிசியைக் கவ்விக் கொண்டிருந்தது..
இதைக் கண்டதும் பார்வதியாளுக்குத் தன் தவறு புரிந்தது..
"இறைவா.. என்னை மன்னித்து விடுங்கள்.. நான் தவறு செய்து விட்டேன்... எல்லோருக்கும் படியளக்கும் பரம்பொருளை சோதனை செய்து விட்டேன்" என்று ஈசனாரின் பாதங்களில் வீழ்ந்தாள்..
ஈசனோ கடுங்கோபம் கொண்டார்..
"நீ என் மனைவியாக இருந்தாலும், என்னை சோதனை செய்த படியால், பூலோகம் போ... வனப்பேச்சியாக சுற்றித் திரி..." என்று சாபமிட்டார். (இந்த இடத்தில் வில்லுப்பாட்டு அருமையாக இருக்கும்... கணவனை சோதித்ததால் காட்டுப்பேச்சியாகப் போ.... மன்னனை சோதித்ததால் மயானப் பேச்சியாகப் போ...என்று அழகாகப் பாடுவார்கள்)
மனமுடைந்த அம்மை அழுது புலம்பினாள்..
"இந்த சாபத்திற்கு விமோசனம் எப்போது தருவீர்கள்?" என்று ஈசனைக் கேட்டாள்..
"நீ என்னை நினைத்து மயானத்தில் நின்று தவம் செய்.. உரியகாலத்தில் யாமே வந்து உன்னை மீட்போம்" என்று சொல்லி பார்வதியாளை பூலோகம் அனுப்பினார்..
மயான பூமியில் அம்மை பேச்சியம்மனாக அமர்ந்தாள்.. மனம் ஒன்றி ஈசனை எண்ணி மாதவம் புரிந்தாள்..
அம்மையின் தவத்தைக் கண்ட ஈசன் இரங்கினார்.. அம்மை முன் தோன்றினார்.  அவள் சாபத்தை நீக்கினார்...
"தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொல்ல
தேவியும் "ஐயனே... தாங்கள் எனக்கு இரு புதல்வர்களை அளித்தீர்கள்.. அவர்களும் தங்கள் வயது வந்த பின்னே என்னை விட்டுப் போய்விட்டார்கள்.. தாங்களும் படியளக்கிறேன் என்று சொல்லி என்னைத் தனியே விட்டுப் போய்விடுகின்றீர்கள்.. எனவே எனக்கு ஓர் ஆண் குழந்தை வேண்டும். இப்பொழுதே வேண்டும்" என்று வேண்டினாள்..
ஈசனாரும், "தேவி..பார் அங்கே... மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா.. அப்பிணம் கொடுஞ்சுடராக எரிகையில் நீ அங்கே நின்று என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்து...உனக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கும். நீ குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயம் வந்து சேர்வாயாக" என்று சொல்லி மறைந்து விட்டாள்.
பேச்சியம்மனும் அதைப்போல் பிணமொன்று கொடுஞ்சுடராக எரியும் வேளையில் அருகில் சென்று தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் சுடலை முத்துக்கள் தெரித்து விழுந்தன. அவை உறுப்புகள் ஏதுமற்ற ஓர் சதைப் பிண்டமாக பேச்சியம்மாளின் மடியில் இணைந்தன.. பிண்டத்திற்கு உயிர் உள்ளது.. ஆனால் எந்த உறுப்புகளும் இல்லையே என்று கலங்கிய பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே" என்று புலம்ப ஈசனார் தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி அம்மையிடம் தந்தருளினார்...
அம்மையும் முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும், சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என்றும் பெயர் கொடுத்தாள்...
பின்னர் அம்மயானத்திலேயே பிள்ளைக்கு அமுது ஊட்டினாள். பிறகு தன் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தாள்.
அன்னையுடன் கயிலாயம் வந்த சுடலை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான்.
அன்னையின் அமுதுண்டு வளர்ந்துவந்த சுடலைக்கு வயிற்றுப்பசி தீரவில்லை..
ஓர் நாள்.. நடுசாமம்..
பார்வதியாள் சுடலைக்கு அமுதூட்டிவிட்டு படுக்கைக்கு சென்று விட்டாள்.
நடுசாமத்திலே சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது... அந்த வாசனை கயிலாயத்தின் தொட்டிலில் படுத்திருந்த குழந்தைக்கு எட்டியது..
சுடலை நினைத்தான் "நம் அம்மா ஊட்டும் அமுது நமக்குப் போதாது.. நாம் சென்று எரியும் இப்பிணத்தைத் தின்று வருவோம்" என்று..
தொட்டிலில் இருந்து இறங்கிய சுடலை சுடுகாடு சென்று எரியும் பிணங்களைத் தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு பேயாக சுடலை அங்கே நடனமாடினான்...
தன் தாய் தன்னைத் தேடும் வேளை வந்த போது கயிலாயம் சென்று தொட்டிலில் குழந்தையாகப் படுத்து விட்டான்.
அதோடு மட்டுமல்ல... பசியில் அழும் குழந்தைபோல் சுடலை அழ ஆரம்பித்தான்..
தன் குழந்தையின் அழுகையைக் கேட்ட பார்வதியாளும் ஓடிவந்தாள்..
வந்தவள் குழந்தையை எடுத்து அணைத்தாள்... அப்போது குழந்தையின் மேல் பிணவாடை வீசியது... இதைக் கண்ட பார்வதியாள் திகைப்படைந்து அழுதாள்.. "உம்மிடம் குழந்தை வரம் கேட்டால், இப்படிப் பிணந்திண்ணும் பேயை எனக்குத் தந்து விட்டீரே" என்று ஈசனாரிடம் கதறினாள்..
ஈசனாரும் "பிணத்தைத் தின்று வந்து விட்டதால் சைவமான என் கயிலாயத்திற்கு இவன் ஆகமாட்டான். எனவே இவனை பூலோகம் அனுப்பி வைக்க வேண்டும்" என்று சொல்லி சுடலையை அழைத்தார்.
"மகனே... நீ பூலோகம் செல்லும் காலம் வந்து விட்டது.. உனக்கு அங்கு பணிகள் பல உள்ளன.. எனவே நீ பூலோகம் செல்" என்று பணித்தார்.
சுடலையும் "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்த நீங்களே என்னை அனுப்பும்போது என்னால் என்ன செய்ய இயலும்.? நான் செல்கிறேன்.. ஆனால் என் பசிக்கு நான் என்ன செய்வேன்... நித்தம் நித்தம் பிணங்களை எதிர்பார்த்து வாழ இயலுமா?" என்றான்.
ஈசனாரும் "மாய உருக்கொண்டு பிறந்த மாயாண்டி சுடலையே...நீ பூலோகம் சென்றதும் நானே உன்னை வழி நடத்துவேன்.. பூலோகத்தார் உனக்குக் கொடை விழா கொடுக்க நான் ஏற்பாடு செய்கின்றேன்.. நீ போகலாம்" என்றார்.
இவ்வாறு உரைத்த ஈசனாரிடம் சுடலை ஓர் வித்தியாசமான வரத்தைக் கேட்டான்... அதைப் பற்றி அடுத்த மடலில்....

இசக்கியம்மன் கதை(4)

செவ்வாடை அணிந்து கையில் வெற்றிலைத்தாம்பூலம் எடுத்துக் கொண்டு நீலியானவன் ஆனந்த செட்டியை எதிர்கொண்டாள். அடர்ந்த வனத்தில் செவ்வாடை அணிந்த பெண்ணைக் கண்டதும் அதிர்ச்சியுற்றான் செட்டி. மனத்தில் சோசியனின் எச்சரிக்கை நிழலாடியது..
"காட்டு வழிப்போகும் வாணிபரே... வந்து தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்." என்று அழைத்தாள்
அவளைத் தவிர்த்து விட்டு ஊருக்குள் நுழைந்தான் ஆனந்த செட்டி.. அவன் கையில் மந்திரக் கத்தி இருந்ததால் நீலியால் அவனை நெருங்க இயலவில்லை. இதற்குள் மாலை ஆகிவிட்டது. நீலியானவள் வனத்தில் அவள் சாட்சியாய் விட்டுச் சென்ற கள்ளி மரத்தைக் குழந்தையாக மாற்றி அவனைத் தொடர்ந்து ஊருக்குள் சென்றாள்..
"அத்தான்.. அத்தான்... என்னை விட்டு எங்கே செல்கின்றீர்கள்.?"
"யாரடி உனக்கு அத்தான்... போ அந்த பக்கம்" என்று சொல்லிவிட்டு சென்று கொண்டிருந்த அவனை நோக்கி கண்ணீருடன் ஓடிக்கொண்டிருந்தாள் நீலி.
இதற்குள் ஊரில் சிலர் பார்த்துவிட்டு என்ன செய்தி என்று வினவ..
"இவர் என் கணவர்.. இது என் குழந்தை.. குழந்தை பிறந்ததும் எங்களைத் தனியாக விட்டு விட்டு ஓடி வந்துவிட்டார்.. நானும் அவரைத் தொடர்ந்து ஓடி வருகின்றேன்" என்றாள் நீலி..
அவனைத் தடுத்த ஊரார் பஞ்சாயத்தைக் கூட்டினர்.
பஞ்சாயத்தாரின் விசாரணையில் அவள் தனது மனைவி என்று சொன்னதை மறுத்தான் ஆனந்த செட்டி. மனதுக்குள்ளோ சோசியன் சொன்ன செய்திகள் நிழலாடிக் கொண்டிருந்தன.
ஆனால் நீலியோ சத்தியம் செய்தாள்.. "இவர் என் கணவர் என்பது சத்தியம்.. வேண்டுமானால் என் பிள்ளையை இறக்கி விடுகின்றேன்.. அதனிடம் அப்பா யார் என்று கேளுங்கள் அது சொல்லும்" என்று சொல்லி தனது குழந்தையை இறக்கி விட்டாள்..
குழந்தையும் "அப்பா" என்று அழுதபடியே ஆனந்த செட்டியை நோக்கி ஓடியது..
அவன் மிரண்டான்.. மறுத்தான்.. ஊராரோ நம்பவில்லை...
"பெண்ணுக்கு அநீதி செய்யாதே" என்று அறிவுறுத்தினார்கள்..
அவனோ தன் தந்தை தாயை அழைத்து வருவதாகக் கூறினான்.. "மறுவிசாரணையைக் காலையில் வைத்துக் கொள்ளலாம். இருட்டி விட்டது. இன்று இரவு நீங்கள் இந்த ஊரில் தங்கியிருங்கள்.. காலையில் விசாரிக்கலாம்" என்றார்கள் பஞ்சாயத்தார்..
நீலியோ "என்னையும் குழந்தையையும் இவரிடம் தனியாக விட்டுச் செல்கின்றீர்களே... இவரிடம் ஒரு கத்தி உள்ளது. அதை வைத்து என்னைக் கொன்றுவிடுவார்" என்று சொல்லி மேலும் அழுதாள்.. அவனை சோதனை செய்த பஞ்சாயத்தார் அவனிடமிருந்த கத்தியைப் பிடுங்க அவர்கள் மூவருக்கும் ஒரு வீட்டைக் கொடுத்து அங்கு தங்கச் சொன்னார்கள்..
சோசியன் சொன்னதெல்லாம் நடந்ததை எண்ணிய ஆனந்த செட்டி பயந்து போனான். இன்றிரவு அவள் என்னைக் கொன்று விடுவாளே என்று பயந்த படியே அவளோடு சென்றான்..
நள்ளிரவு...
நீலி அவனை எழுப்பினாள்...
அவனது முன் ஜென்மத்தை அவனுக்கு நினைவூட்டினாள்.. அவன் கதறக் கதற அவன் வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்றாள்... அவன் குடலை மாலையாக அணிந்து கொண்டு ஓலமிட்டாள்...
தான் சபதம் செய்தபடி முற்பிறவியில் தன்னைக்கொன்ற வேதியனை இப்பிறவியில் பலிவாங்கிய மகிழ்ச்சியில் திளைத்தாள்..
தன் அண்ணனைக் கொன்ற இந்த ஊரின் வேளாளர்களைத் தான் பழிவாங்க வேண்டும் என்று சபதம் செய்தது நினைவுக்கு வந்தது... அந்த ஊரையே எரித்து நாசம் செய்தாள்..
ஒரே ஒரு வேளாளர் மாத்திரம் தப்பி விட்டார்.
அவர் அதிகாலையிலேயே எழும்பி வயலுக்குச் சென்று விட்டதால் ஊரை எரித்த நெருப்பிலிருந்து தப்பி விட்டார்..
நீலி இதை அறிந்தாள்...
அவரைப் பழிவாங்க இடைச்சிறுமி உருவம் கொண்டாள்..
மதிய வேளையில் வயலுக்குச் சென்றாள்.. தலையில் மோர்ப்பானை வைத்திருந்தாள்.. அதில் விசத்தைக் கலந்திருந்தாள்..
"அய்யாவே... வெயிலு அதிகமாக இருக்கின்றது. கொஞ்சம் மோர் அருந்துங்கள்" என்று சொல்லி அவருக்குக் கொடுத்து அவரையும் கொன்றாள்..
இப்படியாக நீலியானவள் தான் செய்த சபதங்களை நிறைவேற்றி வனத்தில் இரத்த வெறியுடன் சுற்றித் திரிந்தாள்...
அதே வெறியுடனே அவள் முப்பந்தல் என்னும் இடத்திற்கு வந்து நிலைகொண்டாள்.. நீலியின் ஆவேசம் அதிகமாக இருந்ததால் சுற்றியுள்ள பகுதியின் மக்கள் தொந்தரவுக்கு ஆளானர்கள்.
அவளை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் அவள் ஈசனிடம் வரம் வாங்கியவள் அல்லவா.. ? எனவே அவளைப் பணிந்து அவளுக்குரிய சாந்திகளையெல்லாம் செய்து அவளைத் தெய்வமாக்கினர்..
அவளே இசக்கி என்னும் பெயரில் முப்பந்தலில் நிலை கொண்டாள்...
தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் அவர்களுக்கு வேண்டியதை இறைவனிடம் வேண்டி வரமாகப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றாள்...
இசக்கி வனத்தில் ஓடாடிய இடங்களிலெல்லாம் அவளால் அருள் பெற்றோர் பலர் உண்டு... அவர்கள் அந்த இடங்களிலேயே அவளுக்கு ஆலயம் கட்டி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்... ஆயினும் மூலப்பதியாக முப்பந்தல் சென்று இசக்கியை வழிபடுகின்றனர்....

முப்பந்தலைப் பற்றி...
மூவேந்தர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஔவைப் பாட்டி தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் செய்து வைத்தாள்.. அவர்கள் மூவரும் அமர்ந்து பேசிய இடம்தான் முப்பந்தல்...
இப்பதியானது வள்ளியூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது...
வாய்ப்பு கிடைக்கையில் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள்...
இசக்கியம்மனின் கதையைக் கேட்ட அனைவருக்கும் நன்றி...
(முற்றும்)

ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

இசக்கியம்மன் கதை (3)

ஈசனிடம் வரம் வாங்கிய லெட்சுமியானவளும் அவள் அண்ணனும் சோழராசனுக்குக்
குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் நீலன் நீலி எனப்பட்டனர்.
ஈசனது அருளால் பிறந்த குழந்தைகள் ஆதலால் இவர்கள் புறத்தோற்றத்திற்குக்
குழந்தைகளாகத் தென்பட்டனர். ஆனால் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது
இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர்..
தாயின் தாய்ப்பால் இக்குழந்தைகளின் பசியை ஆற்றுவதாக இல்லை..
"அண்ணா.. எனக்குப் பசி பொறுக்கவில்லை.. நீ பசியாறினாயா?"
"இல்லையம்மா. எனக்கும் பசிக்கின்றது... "
"கொஞ்சம் பொறு அண்ணா. இவர்கள் அனைவரும் உறங்கியபின் நாம் வெளியே சென்று
பசியாறி வரலாம்"
குழந்தைகள் பெரியவர்கள் உறங்கக் காத்திருந்தனர். அனைவரும் ஆழ்ந்த
உறக்கத்தில் ஆழ்ந்த பின்னர் இருவரும் வெளியேறி சென்று ஆடுகளையும்,
மாடுகளையும் கடித்து ரத்தம் குடித்துப் பசியாறித் திரும்பவும் வந்து
படுத்துக் கொண்டனர்.
மறுநாள் பார்த்த மகாராணி குழந்தைகள் மேல் ரத்த வாடை வீசுவதைக் கண்டு
அதிர்ச்சியடைந்தாள். அவளுக்குப் புரியவில்லை.. வாசனைத் திரவியங்களைக்
குழந்தைகளுக்குப் பூசினாள்.
இந்த சமயத்தில் சோழராசன் ஓர் சோசியனை வரவழைத்துக் குழந்தைகளுக்கு சாதகம்
கணிக்கச் சொன்னார்.
வந்த சோசியன் குழந்தைகள் பிறந்த நேரத்தைக் கேட்டு சாதகம் கணித்து விட்டு
"அரசே.. இக்குழந்தைகள் மானுடக் குழந்தைகள் அல்ல.. இவர்கள் பிறந்த
நேரத்தைப் பார்த்தால் பேய்க்குழந்தைகள் என்றே தோன்றுகிறது. இவர்களால்
கோட்டைக்கு ஆபத்து. எனவே இவர்களை காட்டில் விட்டு விடுங்கள்." என்று
சொன்னான்.
ஆனாலும் தான் பெற்ற மக்களைக் காட்டுக்குள் கொண்டு விட மன்னன் மனம்
ஒப்பவில்லை. எனவே அதை நிராகரித்து விட்டான்.
குழந்தைகள் தினமும் இரவில் ஆடுமாடுகளின் ரத்தத்தைக் குடிப்பதும், அவற்றை
அடித்துத் தின்பதுமாகத் தங்கள் பசியை ஆற்றிக் கொண்டிருந்தனர்.
மக்களிடமிருந்து மன்னனுக்கு இதைப் பற்றிய தகவல் வந்தது. திடீர்
திடீரென்று ஆடுமாடுகள் காணாமல் போவதைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன்
இப்பாதகத்தைச் செய்வது யாரென்று கண்டுபிடிக்கச் சொன்னான்.
சேவகர்கள் இரவில் விழித்திருந்து பார்த்தனர். இரவில் இரு குழந்தைகள்
வந்து தின்று விட்டு திரும்பி அரண்மனைக்குச் செல்வதைக் கண்டனர். அப்படியே
மன்னனிடம் தெரிவித்தனர். இதனால் மன்னன் உண்மையைப் புரிந்து கொண்டான். பல
ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் தவித்த தமக்கு இப்படிப் பேய்க்குழந்தைகள்
பிறந்து விட்டனவே என வேதனை கொண்டான். சேவகர்களை அழைத்து இரு
குழந்தைகளையும் காட்டில் போய் விட்டு விட்டு வரச்சொன்னான்.
சேவகர்கள் இரு குழந்தைகளையும் காட்டில் விட்டு வந்தனர்.
இரு குழந்தைகளும் வனத்தில் ஓர் வேப்ப மரத்தில் குடியிருந்தன. வனத்தில்
விலங்குகளை வேட்டையாடி தின்று வாழ்ந்து வந்தன. அண்ணனை ஓய்வில் வைத்து
விட்டுத் தங்கை வேட்டையாடி வருவாள். இருவரும் உண்பார்கள். தங்கையை
ஓய்வில் வைத்து விட்டு அண்ணன் சென்று வருவான்.. இவ்வாறாக குழந்தைகள்
வளர்ந்தனர். பெரியவர்கள் ஆகினர்.
ஓர் நாள் ...
"அண்ணா இன்று நான் சென்று வேட்டையாடி வருகின்றேன்" என்று சொல்லிவிட்டு
நீலி புறப்பட்டுச் சென்றாள்.
அந்த சமயத்தில் அந்த ஊரில் வாழ்ந்து வந்த வேளாளர்கள் ஆலயத்தின் கதவுக்காக
மரம் தேடி காட்டுக்குள் வந்தனர்.
அவர்களின் கண்ணில் நீலன் குடியிருந்த வேப்ப மரம் பட்டது. உடனே அதை வெட்டி
எடுத்துச் சென்றனர். இதனால் அந்த மரத்தில் குடியிருந்த நீலன் மாண்டான்.
திரும்பி வந்த நீலி வேப்பமரத்தைக் காணாது தவித்தாள். மரத்தை வெட்டி தன்
அண்ணனைக் கொன்றது அந்த  ஊரின் வேளாளர்கள் என்பதை அறிந்தாள்..
இந்த ஊரில் உள்ள அத்தனை வேளாளர்களையும் அழித்து இந்த ஊரை நாசம் செய்வேன்
என சபதம் செய்தாள்..
தன் முற்பிறவியில் தன்னைக் கொன்றவனைப் பழிவாங்க அந்த வனத்திலேயே காத்திருந்தாள்.
இன்னொரு புறம்...
காவிரிபூம்பட்டினத்தில் பெரும் வாணிபச்செட்டி ஒருவனுக்கு வேதியன் மகனாகப்
பிறந்தான். அவனுக்கு முற்பிறவியைப் பற்றிய ஞானம் இல்லை.. அவனுக்கு ஆனந்த
செட்டி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
குழந்தைக்கு சாதகம் கணிக்கும் போது சோசியன் எச்சரிக்கைகளைக் கொடுத்தான்.
"எக்காரணம் கொண்டும் உன் மகன் வியாபார நிமித்தமாக தென் திசை நோக்கிச்
செல்லக் கூடாது. எந்த காரணம் கொண்டும் வெளியூரில் தங்கக் கூடாது. அவ்வாறு
தங்க நேர்ந்தால் ஏதேனும் சிவாலயத்தில் தங்க வேண்டும். ஒரு பெண்ணால் அவன்
உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று சொன்னான். இதனால் ஆனந்த செட்டியை தென்
திசை அனுப்பாமல், வெளியூரில் தங்க வைக்காமல் வளர்த்து வந்தார்கள். அவனும்
வளர்ந்து பெரியவனானான். வாணிபத்தைத் தானே நடத்தத் தொடங்கினான். சில
சமயங்களில் வெளியூரில் தங்க நேரும்போது தந்தை தடுத்துவிடுவதைக் கண்டு
துன்புற்றான். காரணம் அறிந்து வியந்தான். அவனால் அதை ஏற்றுக் கொள்ள
இயலவில்லை.
எனவே ஓர் மந்திரவாதியிடம் சென்று இதைப் பற்றிக் கூறினான். மந்திரவாதியும்
ஓர் மந்திரக் கத்தியைக் கொடுத்து, "இந்த கத்தி உன் இடுப்பில்
இருக்கும்வரை உன்னை யாராலும் கொல்ல இயலாது" என்று சொல்லி அனுப்பி
வைத்தான்.
இதனால் பல பகுதிகளுக்கும் சென்று வணிகத்தைப் பார்க்கலானான் ஆனந்த செட்டி..
அவனுக்கு எதுவும் நேரவில்லை.. எல்லாம் மந்திரக் கத்தியின் மகிமை என்று
எண்ணிக் கொண்டான்.. விதியும் சிரித்தது..
அன்று அவன் தென் திசை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் வந்தது.. தந்தை
தடுத்தார். ஆயினும் மந்திரக் கத்தியைக் காட்டி தந்தையிடம் அனுமதி
பெற்றான். தந்தையும் "எந்த பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காது சென்று வா"
என்று கூறி அனுப்பி வைத்தான்.
தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தான்...
அவன் வந்து கொண்டிருந்த திசையில்தான் அவனைப் பழிவாங்கக் காத்திருந்தாள் நீலி...
கானகத்தில் அவன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்பட்டாள் நீலி..
செவ்வாடை அணிந்து கையில் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துக் கொண்டு அவனருகே
வந்தாள்....
அப்போது....

இசக்கியம்மன் கதை (2)

தன் மடியில் களைப்போடு உறங்கிக் கொண்டிருந்த லெட்சுமியைப் பார்த்தான் வேலவன்.
அவன் மனதோ அவளின் தாயின் சொற்களையே எண்ணிக் கொண்டிருந்தது.. என்ன
இருந்தாலும் தாசிக்குலப் பெண்தானே.. இவள் என்னையே காதலிக்கிறாள் என்று
நான் எண்ணியது முட்டாள்த் தனம் அல்லவா? தாசியின் அன்பு பணத்தின் மேலல்லவா
இருந்து விட்டது..
இன்று என்னிடம் பணமில்லை என்று இவள் தாய் விரட்டி விட்டாள். இவளோ என்னைத்
தொடர்ந்தாள்.. எதிர்காலத்தில் இவளும் மாறமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?
விநோதமான விபரீத சிந்தனைகளோடு லெட்சுமியைப் பார்த்துக் கொண்டிருந்த
வேலவன் ஓர் முடிவெடுத்தான்.
அருகிலிருந்த மணலைத் தன் தொடை உயரத்துக்குக் கூட்டினான். லெட்சுமியின்
தலையை எடுத்து அதில் வைத்தான்.. சுற்றிலும் பார்த்தான். ஓர் பெரிய
பாறாங்கல் கிடந்தது...
எடுத்தான்... என்னை மயக்கி ஏமாற்றிய தாசியே... இன்றோடு இறந்து போ...
என்று எண்ணிக் கொண்டே அந்த கல்லை எடுத்து அவள் தலையில் போட்டான்...
துடிதுடித்தாள் லெட்சுமி...
"அடேய் வேதியா... உன்னை நம்பி என் தாயை விட்டு வந்தேனடா... என்னை
ஏமாற்றிக் கொலை செய்கிறாயே... இது நியாயமா? என்னை நீ கொன்றதற்கு சாட்சி
எதுவும் இல்லை என்று எண்ணிவிடாதே... நான் பத்தினியடா.. நீ என்னைக் கொலை
செய்ததற்கு இந்தக் கள்ளி மரமே சாட்சி... எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னை வாழ விடமாட்டேன்.. உன்னைப் பழிவாங்கியே தீருவேன்.. " என்று
சபதமிட்டு இறந்து போனாள் லெட்சுமி...
இதை சட்டை செய்யாத வேலவன், அந்த நகை மூட்டையை எடுத்துக் கொண்டு நடக்கத்
தொடங்கினான்.. அந்த நகைகளை விற்று புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்பது
அவன் எண்ணம்... ஆனால் விதி?
நடந்து கொண்டிருந்தவனுக்குத் தாகம் எடுத்தது.
அருகே ஓர் கிணற்றைக் கண்டான். கிணற்றில் இறங்கி நீரருந்தலாம் என்று எண்ணி
இறங்கியவனைக் கண்டு விதி சிரித்தது.
கிணற்றுப் படிக்குள் காத்திருந்த ஓர் நாகம் அவனைத் தீண்டியது.. கிணற்றுள்
விழுந்து மடிந்தான்.

அங்கே... வீட்டிற்குத் திரும்பிய திருகண்ட நட்டுவன் தன் தாயிடம்
தங்கையைப் பற்றிக் கேட்டான். தன்னை மதிக்காமல் அந்த வேதியன் பின்னாள்
லெட்சுமி சென்றுவிட்டாள் என்றுரைத்தாள் தாய்க்கிழவி..
அவளைத் திட்டிவிட்டுத் தங்கையைத் தேடிக் காட்டுக்குள் ஓடினான் திருகண்ட
நட்டுவன்.. அங்கே தன் தங்கை தலை சிதைக்கப்பட்டு இறந்திருந்த காட்சியைக்
கண்டு பதைத்தான்..
அழுதான். துவண்டான்... "என் அன்புத் தங்கையே... உன்னை இந்த நிலைக்கு
ஆளாக்கியது யார்? என்னிடம் சொல்லியிருந்தால் அந்த வேதியனோடு உன்னை
சேர்த்து வைத்திருப்பேனே... என்ன ஆனதோ உனக்கு?" என்றெல்லாம்
புலம்பினான்.. மனம் வெதும்பி அழுத அவனது ஆவி அப்படியே பிரிந்தது.. (வேறு
சிலர் பாடும்போது அவன் அங்கே தூக்குப் போட்டு இறந்ததாகப் பாடுவார்கள்)

இறந்தும் மனந்தளராத லெட்சுமியின் ஆவி ஈசனாரிடம் சென்றது.."ஐயனே...
தாசிக்குலத்தில் பிறந்தும் பத்தினியாய் வாழ நினைத்தது என் தவறோ? எனக்கு
ஏன் இந்தத் தண்டனை?" என்று ஈசனாரிடம் முறையிட்டாள் லெட்சுமி. ஈசனும்
புன்முறுவலோடு "விதியின் வழியை வெல்ல யாராலும் இயலாது..உனக்கு வேறு என்ன
வரம் வேண்டும் கேள்." என்றார்.
"என்னைக் கொன்ற அந்த வேதியனை நான் பழிவாங்க வேண்டும், அதற்கேற்ற வரம் தாருங்கள்."
"மகளே.. உன்னைக் கொன்ற பாவத்திற்கு அவனை உடனே தண்டித்தோம்.. பார் அவனும்
பாம்பு தீண்டி உயிர் நீத்து விட்டான்.."
"இல்லையில்லை.. என் கரங்களால் நான் அவனைக் கொல்ல வேண்டும்.. அந்த வரத்தை
எனக்குத் தாருங்கள்.."
"சரி.. அப்படியே தந்தோம். அடுத்த பிறவியில் நீ யார் என்ற உண்மை உனக்குத்
தெரிந்திருக்கும்.. நீ அவனைப் பழிவாங்குவாய்..." என்று ஈசனார்
வரமளித்தார்..

வரம் வாங்கிய லெட்சுமி எப்படி அந்த வேதியனைப் பழிவாங்கினாள்? அடுத்த
மடலில் காணலாம்...

அன்பே வா அருகிலே...(4)

தனியாகத் துண்டிக்கப் பட்டு கிடந்த அந்தத் தலையைத் திருப்பிய தலையாரி
அதிர்ச்சியடைந்தார். நிலவு ஒளியில் அந்த முகம் தெள்ளத் தெளிவாக
தெரிந்தது..
"அண்ணாச்சி.. இங்க வாருங்க... " கி.மு வை அழைத்தார்..
கி.மு வும் அருகே வந்து பார்த்து விட்டு அதிர்ச்சியோடு பின்வாங்கினார்...
"இது எப்பிடி தலயாரி? என்னால நம்ப முடியல"
"அதான் அண்ணாச்சி எனக்கும் புரியல"
இதற்குள் ஊர் இளவட்டங்களும் அருகில் வந்து பார்த்தனர்.. அவர்களுக்கும் அதிர்ச்சி...
"எலேய்.. இது எப்பிடில...?"
அதிர்ச்சியில் யாருக்கும் பேச்சு வரவில்லை...
காவல்துறை வாகனம் வரும் ஒலி கேட்டது..
"எலேய்.. எல்லோரும் தூரப் போங்கல.. போலிஸ் வந்துட்டு... போ.. போ..."
சுற்றி நின்றிருந்த இளைஞர்களை விரட்டினார் தலையாரி.
வாகனத்திலிருந்து ஆய்வாளர் மலையாண்டியும், இரு காவலர்களும்  இறங்கினர்.
"வணக்கம் அண்ணாச்சி... என்ன விசியம்?"
"வணக்கம் ஐயா. வந்து பாருங்க... நீங்களே வந்துட்டிய?"  ஆய்வாளரைப்
பார்த்துக் கேட்டார் கி.மு.
"ஆமாண்ணாச்சி.. நம்ம எஸ்.ஐய ஒரு துப்புக்காக பேயங்காட்டுக்கு
அனுப்புனேன். இப்ப வந்துருவாரு.. விசயம் ரொம்ப சீரியசுன்னிதான் நானே
வந்தேன்.."
"ஆமா சீரியஸ்தான்... நீங்களே வந்து பாருங்க.."
மலையாண்டியை அழைத்துக் கொண்டு தலை கிடந்த இடத்துக்கு விரைந்தார் கி.மு.
"யாரும் எதையும் தொட்டு வைக்கலதான?"
"நம்ம தலயாரி தலயத் திருப்பிப் பாத்தாரு. அவ்ளோதான். வேற ஒண்ணுமில்ல.."
வந்து பார்த்த மலையாண்டிக்கு அது யாரென்று பிடி படவில்லை..
"யாரு அண்ணாச்சி இது.. இந்த ஊர்க்காரந்தானா?"
"ஓ உங்களுக்குத் தெரியாதின்னு நெனைக்கேன்.. நீங்க வந்து ரெண்டு வருசந்தானே ஆச்சி"
"ஆமா.. யாரு இது?"
"என்னால நம்பவே முடியல ஐயா.. இது இந்த ஊருக்குத் தலைவரா இருந்த
பொன்னுசாமி நாடார்.. ஆனா அவரு மூணு வருசத்துக்கு முந்தியே செத்துப்
போயிட்டாரு.. வயசான மனுசன்.. ஆனா இந்தத் தலயப் பாக்கும்போது ரொம்ப
இளவயசாத் தெரியுது. அதான் ஒண்ணுமே புரியல.."
தலையாரியும், "ஆமா ஐயா... அவர் செத்த பெறவு அத பதிவு ஆபிசுக்கு எழுதி
அனுப்புனதே நாந்தான்.. ஆனா.. பாருங்க.. அவரு வீட்டுல பாத்த படத்துல
இருக்குற மாதியே இருக்கு..." என்று தனது அச்சத்தைத் தெரிவித்தார்.
மலையாண்டியோ "அதெப்புடிய்யா... மூணு வருசத்துக்கு முந்தி வயசாகி செத்துப்
போன மனுசனோட தலை இப்போ.. அதுவும் ரெத்தத்தோட.. அதுவும் இள வயசா... நம்புற
மாதி சொல்லுங்க... அவருக்கு பிள்ளைல் எத்தன?" என்று கேட்டார்.
"ஐயா அவருக்குப் பிள்ளைல் யாரும் இல்ல.. அவரு சாவுறதுக்கு முந்தியே அவரு
பொண்டாட்டியும் செத்துப் போச்சி... "
"வேற தொடுப்பு எதுவும் உண்டோ?"
"ஆங்... மனுசன் ரொம்ப யோக்கியமானவரு ஐயா.. அந்த மாதில்லாம் இல்ல"
மலையாண்டி இதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க வந்த ஆய்வாளர்கள் தங்கள்
பணியைச் செய்து கொண்டிருந்தனர்..
அவர்களை தலையற்ற உடல் எதுவுக் கிடக்கின்றதா என்று சுற்றி உள்ள பகுதிகளில்
சென்று பார்த்து வரச்சொன்னார்..
அவர்களும் போய்ப் பார்த்துவிட்டு எதுவும் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னார்கள்.
"சரி.. அது யாரு... அந்த கெளவி?"
"அது இந்த் ஊரு கெளவிதான். அவளும் இன்னொரு பிள்ளையும் ஆடு மேச்சிட்டு வார
வழிலதான் இதக் கண்டுருக்காவ.. கெளவி அதிர்ச்சில இங்கெனயே செத்துட்டு.."
"அந்த பிள்ள எங்க இருக்கு?"
"வாங்க ஊருக்குப் போய் பாப்போம்"
காவலர்களுக்குத் தகுந்த உத்தரவு பிறப்பித்துவிட்டு ஊரை நோக்கி நடக்க
ஆரம்பித்தார் மலையாண்டி..
"ஆமா.. ரொம்ப நாளா ஒரு விசியம் கேக்கணும்னி இருந்தேன். உங்க ஊருல சாராயம்
காச்சுறது உண்டோ?"
"அது நடக்கத்தான் செய்து... என்ன பண்றது அவன எதுக்க யாராலயும் முடில"
"யோவ் நீரெல்லாம் கவருமெண்டு அதிகாரின்னு சொல்லாதீயும். எங்காதுக்கும்
நீசு வந்துச்சி.. நீரெல்லாம் இருக்கீறேன்னு நானும் அது பொய்யின்னி
நெனச்சிட்டேன்... இனிம பாரும் உம்மல என்ன பண்ணுதேன்னி குடிகாரப்
பயலுவளா.." மலையாண்டி கோபத்துடன் உரைத்து விட்டுத் தொடர்ந்து நடந்தார்.
அப்போதுதான் கி.மு.வும் கவனித்தார்.. பொன்னையா நாடாரின் வீட்டு கேட்
திறந்து கிடந்தது.
"ஐயா அங்க பாருங்க.. அந்த வீட்டுலதான் காச்சுறானுவ.."
மலையாண்டி தனது நடையைத் துரிதப் படுத்தினார்..
கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார்..
அங்கே..
ஒரு பெரிய அடுப்பு இன்னமும் எரிந்து கொண்டிருந்தது.. அதன் மேல்
வைத்திருந்த பானைகள் உடைத்து எறியப் பட்டிருந்தன. ஆங்காங்கே ரத்தத்
துளிகள்..
"இங்கனதான் சண்ட நடந்திருக்கும்னி நெனக்கேன். முண்டம் இங்க கெடக்குதான்னு
பாக்கச் சொல்லனும்." என்றவாறே சுற்றிலும் பார்த்தார். பின்னர் கி.மு.வை
நோக்கி
"ஆமா. காச்சுறது யாரு? இந்த ஊர்க்காரந்தான?"
"இல்ல ஐயா. அவன் பொழப்புக்காக வந்தான். அப்படியே காச்ச ஆரம்பிச்சிட்டான்.
நாங்கூட சொல்லிப் பாத்தேன்..கேக்கல"
"நாங்கெல்லாம் மயிரப் புடுங்கவா போலிஸ்டேசன் கட்டி வச்சிருக்கோம்.. ?
வந்து சொல்ல வேண்டியதுதான?"
"சொல்லிருக்கலாம். என்ன பண்ணுறது?" என்று சொன்ன கி.முவை முறைத்தார் மலையாண்டி..
"சரி வாரும் அங்க போய் பாப்போம். அந்த பிள்ளக்கிட்ட கேக்கலாம்" நடக்க
ஆரம்பித்தார். நடந்து கொண்டே தனது வாக்கி டாக்கியில் கட்டுப்பாட்டு
அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தந்தார்.
இதற்குள் தன் பேத்தியை தங்க நாடாச்சியின் வீட்டிலிருந்து அழைத்துப்
போயிருந்தாள் பேச்சியம்மாள்.
தங்க நாடாச்சியிடம் கேட்டு விட்டு பேச்சியம்மாளின் வீட்டுக்கு
மலையாண்டியை அழைத்துப் போனார் கி.மு.
"ஏலா. சுப்பம்மா இங்க வா. இன்ஸ்பெக்டரு ஐயா வந்துருக்காங்க... "
பயந்து நடுங்கிக் கொண்டே வெளியே வந்தாள் சுப்பம்மா.. அருகில் அவளது
பாட்டி.. பாட்டியின் சேலையைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
"ஏம்மா. நீதான் மொதல்ல பாத்தியா? என்ன நடந்துச்சி..?"
"நாங்க ஆட்ட பத்திட்டு வந்திட்டிருந்தோம்.. திடீர்னு யாரோ அலமறிக்கிற
சத்தம் கேட்டிச்சி. நாங்க பயந்து போய்ட்டோம். திடீர்னு அந்தத் தல வந்து
விழுந்துச்சி. பாட்டி அங்கயே விழுத்துட்டு.. நான் ஓடி வந்துட்டேன்."
விம்மி விம்மி அழுகையுடனே தெரிவித்தாள் சுப்பம்மா..
"சரிப்பு.. பயப்புடாத.. அங்க வேற யாராவது இருக்குற மாதி தெரிஞ்சுதா ஒனக்கு?"
"நாங்கண்ண மூடிட்டு ஓடி வந்துட்டேன். அங்க வேற என்னத்தையும் பாக்கல."
"என்ன சத்தம் கேட்டுச்சு?"
"யாரோ காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் கேட்டுச்சி. ஓடுற சத்தம்
கேட்டுச்சு. அவ்ளோதான்.."
"சரிப்பு. நான் அப்புறம் வாறேன்." என்று சொல்லியபடி மலையாண்டி திரும்பினார்.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இதென்ன கேஸ் என்று எண்ணியபடி
திரும்பவும் கரையடியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இதற்குள் ஊருக்குள் ராசாங்கம் பாட்டி இறந்த செய்தி பரவியது.
அவளது மகன் வெளியூருக்கு வேலைக்குப் போயிருந்தான். அவனுக்குத் தகவல்
சொல்ல ஊர்க்குடிமகனை அனுப்பி வைத்தார் தலையாரி.
மலையாண்டி கரையடிக்குத் திரும்பியிருந்த போது, அங்கு அரசு மருத்துவமனை
வாகனம் நின்றிருந்தது.
ராசாங்கம் பாட்டியின் உடலையும், தனியாகக் கிடந்த அந்தத் தலையையும்
வாகனத்தில் ஏற்றித் தயாராக வைத்திருந்தனர்.
புகைப்படக்காரர் தனது கேமிராவில் அந்த இடங்களை கோணம் பார்த்துக் கொண்டிருந்தார்.
"சரிப்பா. எப்போ அறுப்பாங்க.. டாக்டரு யாரு இருக்கா?" மருத்துவமனை
பணியாளரிடம் கேட்டார் மலையாண்டி.
"போஸ்ட் மாட்டம் நாளைக்குக் காலைலதான் சார். நம்ம அஞ்சலியம்மாதான் டூட்டி"
"சரி.. நீ போ. அம்மாவுக்கு நான் போனப் போட்டு பேசிருதேன்" என்று அவர்களை
அனுப்பி வைத்தார்.
கையிலிருந்த டார்ச்சை எடுத்துக் கொண்டு சுற்றியுள்ள பகுதிகளைப்
பார்வையிடலாம் என்று எண்ணினார்.
அருகிலிருந்தது அந்தக் கோயில் மட்டும்தான். சற்று தள்ளி பொன்னுசாமி
நாடாரின் வீடு..
கொலை எங்கே நடந்திருக்கலாம் என்று அவரால் யூகிக்க முடியவில்லை.
அப்படியே கொலை நடந்திருந்தாலும், கொலை செய்தது யார்? கொலை செய்யப்பட்டவன்
யார்? என்பதும் தலையைத் தின்னும் கேள்விகள். குழம்பிய மனதோடு
ஆற்றங்கரையில் ஏதேனும் தென்படுகின்றதா என்று பார்த்தார்.
இரண்டு ஜோடிக் காலடித் தடங்கள் தென்பட்டன.  கரையோரத்தில் நின்றிருந்த
அரசமரத்திற்கு சற்று தள்ளிக் காலடித் தடங்கள் முடிவுற்றிருந்தன.
அங்கேதான் ரத்தம் சிந்திக் கிடந்தது.. இங்கேதான் வெட்டுப் பட்டிருக்க
வேண்டும் என்று முடிவு செய்தார். இங்கே வெட்டிய தலை அங்கே சென்று
விழுந்திருக்குமானால் வெட்டியவனின் வேகத்தைக் கணக்கிட முடியவில்லை.
"ஏட்டையா.. இந்த ரத்த மண்ண கொஞ்சம் சாம்பிள் எடுத்துக்கிடுங்க... அதையும்
லேபுக்கு அனுப்பனும். அந்த போட்டோக்காரன இங்க வரச்சொல்லி இதையும், இந்த
காலடித் தடத்தயும் போட்டோ எடுக்கச் சொல்லுங்க..."
இந்தக் காலடித் தடங்களைப் பின்னோக்கிச் சென்று பார்க்கலாம் என்று
எண்ணியபடி தொடர்ந்தார்.
அவை அநேகமாக பொன்னுசாமி நாடாரின் வீட்டிலிருந்துதான் வந்திருக்கும்
என்பது மலையாண்டியின் எண்ணம்..
திடீரென்று யாரோ சிரிக்கும் குரல் கேட்டது.. மிகத் தெளிவாகக் கேட்டது.
"யாரது...?" உரத்தக் குரலோடு கேட்டார் மலையாண்டி..
பதிலில்லை... மீண்டும் அந்தக் குரல் கேட்கவில்லை..
நடந்து கொண்டிருந்தவரின் கண்களில் அது பட்டது.. அதைக் கண்டதும்
அதிர்ச்சியில் உறைந்து நின்றார்..
அது...

(தொடரும்)

வியாழன், பிப்ரவரி 10, 2011

அன்பே வா அருகிலே...(3)

அத்தியாயம் (3)
திடீரென்று அது பறந்து வந்து அவர்கள் முன்னால் விழுந்ததும் இருவரும்
திடுக்கிட்டனர்.
அதைக் கண்ட பொழுதிலேயே மயங்கி விழுந்தாள் ராசாங்கம் பாட்டி..
சுப்பம்மாவுக்கோ நா எழவில்லை... கை கால்கள் நடுங்கத் தொடங்கின... கையில்
வைத்திருந்த குச்சியைக் கீழே போட்டு விட்டு ஓடத்துவங்கினாள்.. அவளின்
ஓட்டத்தைக் கண்ட ஆடுகளும் ஒவ்வொரு திசையில் ஓடத்தொடங்கின...
வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்த தங்க நாடாச்சி ஓடி
வந்துகொண்டிருந்த சுப்பம்மாவை வியப்புடன் பார்த்து நிறுத்தினாள்..
"ஏலா. என்ன ஓடிவார? ஆட்ட எல்லாம் எங்க? என்னாச்சி?"
"அது... வந்து... பாட்டி... பாட்டி..."
"எலா.. என்னாச்சி... சொல்லுலா? நம்ம ராசாங்கமும் உங்கூடத்தானே வந்தா? அவள எங்க?"
"அது... அந்த கரையடி பக்கத்துல...." சொல்ல இயலாமல் கண்ணீருடன் மயங்கி
விழுந்தாள் சுப்பம்மா...
"எலேய்... அந்த கரையடிப் பக்கம் போய் என்னன்னிதான் பாருங்கலே... இந்த
புள்ள எதுக்கு இப்பிடி படியாவந்து விழுந்துட்டாளோ தெரியலியே..."
இதற்குள் கூட்டம் கூடிவிட்டது..
"சின்னஞ்சிறுசுகள கருக்கலாய்ட்டுன்னா கரையடிப் பக்கம் போவாதியன்னா
கேக்குறதே இல்ல... " ஒவ்வொருவரும் ஒவ்வொன்று பேச, சில இளவட்டங்கள்
கரையடிப் பக்கம் போய்ப் பார்க்கலாமென்று தைரியத்துடன் சென்றனர்.
சுப்பம்மாவுடன் பள்ளியில் படிக்கும் ராமசாமி, பேச்சியம்மாளுக்குத் தகவல்
தர ஓடினான்..
"எலேய்.. என்னலே ஆயிருக்கும்?"
"ஏ.. அந்த கரையடி மாடஞ்சாமி குதுரைல வந்துருக்கும்னு நெனைக்கேன்.. அதக்
கண்டுதான் பயந்துட்டாளோ என்னமோ.. போய்ப் பாக்கலாம்.. அந்த ராசாங்கம்
கெளவிய வேறக் காணோமாம்.."
விதவிதமான பேச்சுக்களோடு சில இளைஞர்கள் கரையடியை நெருங்கினர்...
அங்கே...
ராசாங்கம் பாட்டி விழுந்து கிடந்தாள்... அவளுக்கு சற்று முன்னால் அது கிடந்தது..
அது... உடலற்ற ஓர் மனிதத்தலை... அருகே ரத்தம் மணலில் திட்டுத் திட்டாகக்
கட்டியிருந்தது...
"ஏல.. அங்க பாரு.. அங்க ஒரு தல கெடக்கு... யாருல அது?"
"ஏ தொடாதீங்கப்பா.. நாளைக்கி போலிசுப் பயலுவ வந்தானுவன்னா கைரேவ பாப்பானுவ..."
"அந்த கெளவி வேற அங்க விழுந்து கெடக்கால.. உசுரு இருக்கா இல்லியான்னி பாரு..."
கரையடி மாடன் கோவிலில் உடைத்த தேங்காய்ச் சிரட்டைகள் அங்கே சிதறிக் கிடந்தன்..
ஒருவன் ஓடிச்சென்று ஒரு சிரட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றில் சிறிது நீர்
மொண்டு வந்தான்..
"ஏ பாட்டி.. எழும்புங்க... " ராசாங்கம் பாட்டியின் முகத்தில் நீர் தளித்த
பின்னரும் சலனமில்லை...
தொட்டுப் பார்த்தால் சில்லென்றிருந்தது..
"ஏல.. போய் நம்ம வைத்தியரக் கூட்டியாங்க... கெளவி இருக்காலா..
போய்ட்டாலேன்னே தெரியல..."
ஒருவன் திரும்பவும் ஊருக்குள் ஓடினான்..
ஊரின் நிலைமை மாறி விட்டிருந்தது.. தங்க நாடாச்சியின் வீட்டு முன்னால்
ஊரே கூடியிருந்தது.. பேச்சியம்மாளும் வந்திருந்தாள்..
அவளால் கண்ணீரைக் கட்டுப் படுத்த இயலவில்லை..
"ஏ கரையடி மவராசா... எம்பேத்திக்கி என்னாய்ட்டு பாருமய்யா.... ஏ
நாடாச்சி.. கொஞ்சம் திருனீறு தாலா..." தங்கநாடாச்சியிடம் சிறிது திருநீறு
வாங்கி சுப்பம்மாவுக்குப் பூசினாள்.. இதற்குள் சுந்தர பாண்டி வைத்தியர்
வந்து விட்டிருந்தார்..
"ஏம் பேச்சியம்மா.. என்னாச்சி"
"தெரியல வைத்தியர... நீரே பாரும்"
நாடி பிடித்துப் பார்த்தார். "எதோ பயந்த அதிர்ச்சி... அவ்ளோதான்.. நம்ம
கரையடி மாடனப் பாத்திருப்பாளோ?" என்று சொல்லிக் கொண்டே மடியிலிருந்து ஓர்
மருந்தை எடுத்து சுப்பம்மாவின் வாயில் வைத்தார்...
"கொஞ்சம் தண்ணி தா பேச்சியம்மா" சிறிது நீரையும் அவள் வாயில் ஊற்றினார்.
சிறிது நேரத்தில் எழுந்தாள் சுப்பம்மா...
"ஏலா. என்னலா ஆச்சி" பேச்சியம்மா கேட்க, சுப்பம்மாவும் நடந்ததைக் கூறினாள்..
இதற்குள் கரையடியிலிருந்து திரும்பியவனும் வைத்தியரை அழைத்தான்..
"வைத்தியர... அங்க வந்து பாரும்.. அந்தக் கெளவி இருக்காளா போய்ட்டாளான்னியே தெரியல"
"வால.. போலாம்." வைத்தியர் கரையடியை நோக்கி நகர சிலர் பின் தொடர்ந்தனர்...
கரையடியின் காட்சியைக் கண்டதும் வைத்தியருக்கே படபடவென்றிருந்தது...
ராசாங்கம் பாட்டியின் நாடியைப் பிடித்துப் பார்த்த வைத்தியர் அவள்
இறந்ததை உறுதி செய்தார்...
"எலேய். போய் நம்ம கிராம்சக் கூட்டிவாங்க... அப்படியே தலயாரியையும்
கூட்டிட்டு வாங்க.." சொல்லி அனுப்பி அங்கிருந்த சுமைதாங்கியில்
அமர்ந்தார்..
அதே சமயம்..
மணிச்சத்தம் கேட்டது... தொடர்ந்து ஓர் குதிரை ஓடும் சத்தம்..
"எலேய்.. எல்லோரும் கண்ண மூடிக்கிடுங்க... நம்ம கரையடி மாடனக்
கும்பிட்டுக் கிடுங்க..." வைத்தியர் கத்தினார். கண்களை மூடி தரையில்
சாஷ்டாங்கமாய் விழுந்தார்..
அனைவரும் அதே போல் செய்தனர்.. சிறிது நேரத்தில் சத்தம் நின்று விட எழுந்தனர்...
"ஐயா.. கரையடி மவராசா.. உம் பதிக்குள்ள வரமுடியாது.. செத்தவளத்
தொட்டுட்டேன்.. ஊருக்குள்ள எதுவும் கெட்டது நடக்காம பாத்துக்கய்யா..."
கரையடி சுடலைமாடசாமியின் கோவிலை நோக்கி வணங்கினார் வைத்தியர்...
இதற்குள் தகவல் கிராம முன்சீப்புக்கும், தலையாரிக்கும் போய்
விட்டிருந்தது... தலையாரி செங்கோட்டான் மடம் காவல் நிலையத்திற்குத் தகவல்
தர ஒருவனை அனுப்பியிருந்தார்..
கி.மு.வும், தலையாரியும் மிதிவண்டியில் கரையடியை நெருங்கியிருந்தனர்..
"யோவ் தலயாரி.. போய் அங்க கெடக்குற தல யாருக்கன்னி பாரு" கி.மு
அதிகாரத்தொனியில் கூற,
"எந்தலையெழுத்து... செத்துக் கெடக்க பொணத்துக்கெல்லாம் காவ
கெடக்கனும்னி.." அலுத்துக் கொண்டே தலையாரி சென்று அந்தத் தலையைத்
திருப்பினார். அதிர்ச்சியடைந்தார்...
அது...


(தொடரும்)

இசக்கியம்மன் கதை

இசக்கி அம்மன் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கிராமங்களில் பரவலாக வணங்கப் படும் கிராமத் தெய்வங்களில் ஒன்றாகும்.. இங்கு மட்டுமன்றி தமிழகத்தின் பிறபகுதிகளிலும், இதே பெயரிலும், வேறு பெயர்களிலும்  இவள் வணங்கப்படுகின்றாள்.. இவளின் வரலாறு ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொருவிதமாக வழங்கப் படுகின்றது.. எங்கள் சுப்பிரமணியபுரத்திலும் இரண்டு இசக்கியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரு கோயில் குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே பாத்தியப் பட்டதாயினும், கொடைவிழாவின்போது ஊரார் அனைவரும் சென்று சீதனவரி செலுத்தி சிறப்பிக்கின்றனர். இன்னொரு கோயில் சிறியது.. அது என் அக்காவின் மாமனார் கட்டியது (முன்பும் அந்த இடத்தில் கோயில் இருந்தது.. இவர் அதை எடுத்துக் கட்டினார்) இங்கும் கொடைவிழாவின் போது அவர் குடும்பமும், எங்கள் குடும்பமும், அந்த அம்மனால் பலன் பெற்ற சில குடும்பத்தாரும் வந்து கலந்து கொள்கின்றனர்..
இந்த இடத்தில் நான் பகிர்ந்து கொள்ளப் போகும் கதையானது, முதலில் குறிப்பிட்ட கோயிலின் கொடைவிழாவின்போது வில்லிசையில் கேட்டது... ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக வழங்கப்படும் கதையினை எங்கள் ஊரில் நான் கேட்டவிதமாக இவ்விடத்துப் பகர்கின்றேன்.. இனி இசக்கியின் கதையைக் காண்போம்...

பழகை நல்லூர் என்ற ஊரில் சிவகாமி என்னும் தாசி இருந்தாள்.. அவளுக்கு திருகண்ட நட்டுவன் என்றொரு மகன் இருந்தான். அவன் நன்றாகப் பாடுவான். பழகை நல்லூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் பாடிக்கொண்டிருந்தான்.. தாசிக்குப் பெண்குழந்தை வேண்டுமென்று ஆசை. அவளும் ஈசனாரை வேண்டினாள்.. ஈசனும் அருள் புரிய அருமையான பெண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள்.
தன் பெண்ணிற்கு லெட்சுமி என்று பெயரிட்டாள். மகளும் சர்வ லெட்சணங்களும் பொருந்திய மஹாலெட்சுமியைப் போன்றே இருந்தாள். நாட்டியக் கலையைத் திறம்படக் கற்றறிந்தாள் லெட்சுமி..
தாயின் தாசி வாழ்க்கை மகளுக்குப் பிடிக்க வில்லை.. கற்பு நெறியில் வாழவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் தாயோ பணத்தாசை பிடித்தவள்.. தன் மகளையும் எப்படியாவது தாசியாக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்..
அந்த ஊரின் சிவாலயத்தில் வேலவன் என்னும் வேதியன் பூசை செய்யும் பணியில் இருந்தான்.
ஓர் நாள் மாலை லெட்சுமியின் நடன அரங்கேற்றம் ஈசனார் ஆலயத்தில் நிறைவேறியது.. அவளைக் கண்ட நாள் முதல் வேலவனுக்கு உறக்கமில்லை..
அவளைக் காண வேண்டும்.. அவளோடு உரையாட வேண்டும்.. சுகிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. (அட.. இதைத்தான் காதல் என்போம்யா...)
அதே நிலைதான் லெட்சுமிக்கும்...
வேலவன் ஆவல் அதிகமாகி ஓர் நாள் சிவகாமி தாசியின் வீட்டுக் கதவைத் தட்டினான்.
வேறு யாரையோ எதிர்பார்த்திருந்த சிவகாமி, வேலவனைக் கண்டு மலைத்தாள்.. யாராக இருந்தாலும், தாசியின் இல்லம் தேடி வந்து விட்டால், மரியாதை கொடுத்தே தீரவேண்டும் இல்லையா...
"வாங்க. வாங்க..."
"இன்று தங்கள் மகளின் நடனம் கண்டேன். அற்புதம்."
"ஓ அப்படியா.. அமருங்கள். என் மகளை அனுப்பி வைக்கின்றேன்..
வேலவனை அமரவைத்துத் தன் மகளின் கையில் தாம்பூலம் கொடுத்து அனுப்பினாள்.. அதில் வசிய மருந்தையும் கலந்திருந்தாள்..
மகளும் இதை அறியவில்லை... தான் எண்ணியபடி காதலனே தன் மனையேகி வந்ததை எண்ணி மகிழ்ந்தாள்...
"அத்தான்... தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்.."
"இதோ அன்பே"
இவ்வாறாக இவர்கள் தொடர்பு வளர்ந்தது..
இப்படி இருந்தால் தன் மகள் சரிப்பட்டு வரமாட்டாள் என்று எண்ணிய சிவகாமி, தனது மகளை வேலவனிடமிருந்து பணம் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாள்.
"மகளே... இதைப் பார்... உன்னைக் காண வரும் வேலவனிடமிருந்து நீ பணத்தைப் பெற வேண்டும்.."
"அம்மா.. நான் உன்னைப் போன்ற தாசி அல்ல... அவரிடம் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன்.. தாசி வாழ்க்கை வாழ நான் தயாரில்லை... அவரை மணம்புரிந்து வாழ்வேன்.."
"நீ திருமணம் செய்தால் உன் கணவனிடமிருந்து வாங்குவாய் இல்லையா... எனவே இவனிடமும் வாங்கு" என்றுரைத்தாள் தாய்.
"சரி அம்மா. அப்படியே செய்கிறேன்" மகளும் சம்மதித்தாள்..
தினமும் மாலை ஆலய நடை சாத்தியபின் தாசியின் இல்லமே கதியெனக் கிடந்தான் வேலவன்..
அவளது அழகிலும், நடனக் கலையிலும், தாய் கொடுத்த வசிய மருந்திலும் அடிமையாகி விட்டிருந்தான்..
தினம் தினம் அவளுக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் கைப் பொருட்களையெல்லாம் இழந்தான்..
ஓர் நாள்..
லெட்சுமி குளித்துக் கொண்டிருந்தாள்.
வேலவன் வீட்டுக்குள் நுழைந்தான்..
"வாங்க.. வாங்க..."
"ம்.."
"உட்காருங்க... லெட்சுமி குளிச்சிட்டிருக்கா..."
"அப்படியா... சரி நான் அப்புறம் வரட்டுமா?"
"இல்லை.. உட்காருங்க.." உபசரித்தாள்..
"அப்புறம்.. லெட்சுமி நன்றாக நடனமாடுகின்றாள் இல்லையா?"
"ஆமாம் அத்தை... அதனால்தான் அவளை எனக்குப் பிடித்திருக்கின்றது.."
"அப்படியானால் அவள் அழகுக்கேற்ற ஆபரணங்களால் அவளை அலங்கரித்தால் எப்படியிருக்கும்,?"
"ஆஹா... அருமையாக இருக்கும்... இப்போதே சென்று நகைகள் வாங்கி வருகின்றேன்.."
எழுந்தான் சென்றான். நகைகள் வாங்கி வந்தான்.. லெட்சுமிக்குப் பரிசளித்தான்..
நாளாக நாளாக வேலவனின் கையிருப்பு தேய்ந்து கொண்டே வந்தது...
ஓர் நாள் ஆலயத்தில் இறைவனுக்கு அணிவிக்கும் நகைகளைக் கொண்டு வரவேண்டும் என்றுரைத்தாள் தாசி..
மயக்கத்திலிருந்த வேலவனும் அப்படியே செய்தான்..
இவ்வாறாக முழு அடிமையாகி விட்டான்...
அன்று..
அவன் கைகளில் ஏதுமில்லை...
தாசியின் இல்லம் நோக்கி நடந்தான்.. உள்ளே நுழைந்தான்.. வீட்டுத் திண்ணையில் தாய்க்கிழவி...
"வாங்க... என்ன கொண்டு வந்திருக்கின்றீர்கள்?"
"அத்தை... இன்று கொண்டு வருவதற்கு எதுவுமில்லை... என் லெட்சுமியைக் காண வந்தேன்.."
"அதெல்லாம் பார்க்க முடியாது... ஏதும் கொண்டு வராவிட்டால் என்னைக் காண அனுமதிக்காதே என்று சொல்லிவிட்டாள்"
"லெட்சுமியா அப்படிச் சொன்னாள்?"
"ஆம் அவள்தான் சொன்னாள்"
இதனால் மனமுடைந்த வேலவன் வந்த பாதையே திரும்பி நடந்தான்.. என்னவெல்லாமோ செய்தேனே... தாசிக் குலத்தில் பிறந்தவள் தன் புத்தியைக் காட்டி விட்டாளே... இவளுக்காக ஆலயத்தின் நகைகளையும் கொண்டு வந்தேனே... இனி ஆலயத்துள் எப்படி நுழைவேன்.. என்று புலம்பிக் கொண்டே நடந்தான்...
அதே சமயம் லெட்சுமி வெளியே வந்தாள்.
"அம்மா அவர் எங்கே?"
"எவர்?"
"அவர்தானம்மா. நம்ம வேதியர்.."
"ஓ அவனா... போய் விட்டான்.."
"போய் விட்டாரா? ஏன்?"
"ஏனென்று என்னைக் கேட்டால்? அவன் கொடுத்த நகைகளையெல்லாம் திருப்பிக் கேட்டான்..முடியாது என்றேன். போய் விட்டான்.."
"அடியே தாய்க் கிழவி.. அவரை விட இந்த நகைகளா பெரிய விசயம்? அவரில்லாமல் இந்த நகைகள் எதற்கு.. இப்போதே போய்க் கொடுத்து வந்து விடுகின்றேன்.."
லெட்சுமி வீட்டிலுள்ள நகைகளையெல்லாம் ஓர் துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு வேலவனைப் பின் தொடர்ந்தாள்..
லெட்சுமி பின் தொடர்வதைக் கண்ட வேலவன் தன் வேகத்தைக் கூட்டினான்.. லெட்சுமியும் அழைத்து அழைத்துப் பார்த்து சோர்ந்தாள்.. ஒரு கட்டத்தில் வேலவன் என்னதான் கேட்கிறாள் பார்க்கலாமே என்று நின்றான்..
"என்னை விட்டு எங்கே போகின்றீர்கள் அத்தான்?"
"ம்ம்ம்.. அத்தானா? யாரடி அத்தான்? தாசிக் குலத்தில் பிறந்த நீ உன் புத்தியைக் காட்டி விட்டாயல்லவா? உனக்காக ஆலயத்திலும் திருடினேனே?"
"அத்தான்.. இதோ நீங்கள் கொடுத்த நகைகள் எல்லாம் இதில் உள்ளன.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. என்னை விட்டு மட்டும் போய் விடாதீர்கள் அத்தான்"
"சரி அன்பே.. நாம் மீண்டும் இந்த ஊருக்கு வரவேண்டாம்.. வேறு எங்காவது போய் விடலாம்.."
இருவரும் முடிவு செய்து நகைகளுடன் மலையாள தேசம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்..
கானகத்தில் சென்று கொண்டிருக்கும் போது பயங்கர வெயில்..
"அத்தான்.. மிகவும் சோர்வாக இருக்கின்றது.. உறங்க வேண்டும் போல் இருக்கின்றது"
"அன்பே.. இந்த இடத்தில் நிழலே இல்லையே.. என்ன செய்வது?" என்று சுற்றிலும் பார்த்த வேலவன் ஓர் கள்ளிச் செடியைக் கண்டான்.
"வா அன்பே.. நாம் அந்த கள்ளிச்செடியின் நிழலில் இளைப்பாறலாம்."
லெட்சுமியை அழைத்துச் சென்று தன் தொடைமீது படுக்கவைத்தான்..
களைப்பில் தன்னை மறந்து உறங்கினாள் லெட்சுமி..
இந்த சமயத்தில்தான் வேலவனின் மனம் பல்வேறு விசயங்களை அசைபோடத் தொடங்கியது..
இதனால் பாதகமும் நிகழ்ந்தது...
அதைப் பற்றி... அடுத்த மடலில்...

(தொடரும்)

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

அன்பே வா அருகிலே... (2)

கரையடி நல்லூர்..
மணிமுத்தாறு நீண்ட தூரம் ஓடிக் களைத்து உற்சாகமின்றி அமைதியாகக் கடக்கும் ஊர்..
ஊரின் பெயருக்கேற்றபடி நல்லோர்கள் வாழ்ந்திருந்தார்கள் முற்காலத்தில்.. அக்காலத்தில் மணிமுத்தாறும் உற்சாகத்தோடு கரைபுரண்டு ஓடியதாம்..
காலவெள்ளத்தில் நல்லூரின் நல்லோர்கள் மறைந்துவிட, காத்திருந்தாற்போல் மணிமுத்தாற்றின் நீரோட்டமும் குறைந்து விட்டது போலும்..
முற்காலத்தில் பெரியார் கள்ளுக்கு எதிராக புரட்சி செய்த போது, கரையடி நல்லூரின் மக்களும் திரண்டு வந்து சத்தியம் செய்த காட்சி பேச்சியம்மாளுக்கு இன்னமும் நினைவிருக்கின்றது.
அவளுக்குத் திருமணம் நடந்த ஆண்டுதான் அந்நிகழ்வும் நிகழ்ந்தேறியது..
அவளது கணவன் செல்லத்துரையும் கள் இறக்கும் தொழிலில்தான் ஈடுபட்டிருந்தான்.  அப்போதுதான் ஊருக்குள் அந்த பேச்சு நிலவியது..
"எலேய்.. நம்ம ராமசாமி நாயக்கரு அவரோட தென்னமரத்த எல்லாம் வெட்டித் தள்ளிப் புட்டாருமுல்லா?"
"என்னத்தல சொல்லுத... "
"கள் குடிக்கிறது தப்பாம்லா.. அதுக்குத்தான்..."
ஊரே பேசிக்கொண்டது... இறுதியில் ஊரின் தலைவராக இருந்த பொன்னையா நாடார் மக்களை அழைத்துப் பேசி யாரும் கள் இறக்கக் கூடாது என்றும், கள் அருந்தி விட்டு ஊருக்குள் வரக்கூடாது என்றும் அறிவித்தார்.
ஊரின் இளசுகளுக்கு அது கொஞ்சம் வருத்தமாக இருந்தது என்றபோதும், பெரிசுகளை எதிர்த்துப் பேச யாருக்கும் தைரியமில்லாததால் ஒத்துக் கொண்டனர்..
கள் இறக்கும் தொழிலை விட்டதற்கு அடையாளமாக ஊரின் நடுவில் ஓர் திடல் கட்டலாம் என்று முடிவு செய்யப் பட்டது. அதற்கும் கரையடி மாடனின் பெயரையே வைத்துக் கட்டினர்..
இன்று அந்தக் கட்டடம் சூதாடிகளின் வசத்தில்..
அந்த வழியாகக் கடைக்குச் செல்லும் போதெல்லாம் பேச்சியம்மாளின் கண்கள் கலங்கும்..
"அடப் பாவி முடிவான்வளா... எப்பிடி இருந்த ஊரை இப்பிடிச் சூதாடிக் கெடுக்கான்வளே.." என்று அங்கலாய்த்தபடி செல்வாள்..
கள்ளுக்கு எதிராக புரட்சி செய்த பொன்னுசாமி நாடாருக்கு வாரிசுகள் இல்லை...
அவரது விளைநிலங்களை எல்லாம் அவரது பங்காளிகள் பங்கிட்டுக் கொண்டனர்.
ஆனால் அவர் குடியிருந்த வீட்டை மட்டும் யாரும் பங்கு போட வரவில்லை... அங்கே பொன்னுசாமி நாடாரும் அவரின் மனைவி பால்கனியும் இன்னும் ஆவியாக வாழ்ந்து வருவதாக ஒரு வதந்தி...
மின்சாரம் கரையடி நல்லூருக்கு வந்த பிறகு பேய் பயம் குறைந்திருந்தது.. ஆனாலும் பொன்னுசாமி நாடாரின் வீட்டை நெருங்க யாருக்கும் தைரியம் வரவில்லை..
இந்த சமயத்தில்தான் ஊரில் குடியேறினான் ஆறுமுகம். அவனுக்கு இந்த பேய் பயம் இல்லை...
அவன் பொன்னுசாமி நாடாரின் வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே போனதைப் பார்த்ததாக ஊருக்குள் அனைவரும் பேசிக் கொண்டனர்..
சில நாட்களில் அந்த வீட்டிலிருந்து புகை வெளிவரத் தொடங்கியது..
விசாரித்ததில், ஆறுமுகம் சாராயங்காய்ச்சுவதில் கில்லாடியாம். எனவே அங்கே இருந்து சாரயத்தைக் காய்ச்சி விற்பதாகப் பேச்சு..
"இந்த எலவெ  எவனும் தட்டிக் கேக்க மாட்டியலா?" பேச்சியம்மாள் கேட்டாள்.. ஆனால் அவள் பேச்சைக் கேட்க யாரும் தயாரில்லை.
"நம்ம நெம்பர் வீட்டுக்குப் போய் சொல்லுதேன்" என்று அவள் ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டைத் தேடிச் சென்றாள்..
அவள் போன சமயத்தில் ஆறுமுகம் அவருக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தான்..
போனவள் அப்படியே திரும்பினாள்..
"ஏ கெளவி... நில்லு..." ஆறுமுகம் அழைத்தான்.
"என்னலே... கெளவிங்கே...?"
"பெறவு.. நீ யென்ன பதினாறு வயசுக் கொமரியா?.. இங்க பாரு... சாராயம் காச்சுவேன்.. பெட்டிசன் கொடுக்கேன் அது இதுன்னு யாரையாவது பாத்தே... கொன்னே போடுவேன்..." ஆறுமுகத்தின் குரல் இன்னமும் பேச்சியம்மாளின் காதுகளில் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றது..
உயர் மனிதர்களை நாடிப் புகாரளித்தால் பயனில்லை என்றுதான் அவள் கரையடி சுடலைமாடசாமியை நாடினாள்...
"கரையடி மவராசா... இந்த நல்லூரை நாசம் பண்ணுறத நீரும் பாத்துக்கிட்டிருக்கீறோ? இறங்கி வாருமய்யா.. இவனுவள நாசம் பண்ணும்" இவளின் வேண்டுதலுக்குப் பின்னரும் சுடலைமாட சாமி அந்த உதட்டோரப் புன்னகையோடு அப்படியேதான் நின்று கொண்டிருக்கின்றார்...

பள்ளிக்குச் சென்ற சுப்பம்மா திரும்பி வந்து விட்டாள்..
"பாட்டி நாம்போயி ஆட்டப் பத்திட்டு வந்துருதேன்..."
"பாத்துப் போலா... "
"நம்ம ராசாங்கம் பாட்டியும் இன்னிக்கு நம்ம வெளைலதான் ஆட்ட விட்டிருந்தாவ... அவியளையும் கூட்டிட்டுப் போறேன்.."
சொல்லிவிட்டு நகர்ந்தாள்..
ராசாங்கம் பாட்டியும் சுப்பம்மாவும் விளைக்குச் சென்று ஆடுகளைத் பத்திக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர்..
"ஏம்பாட்டி.. அந்த அத்தத்து வீட்டுலருந்து பொக வருதுல்லா... அங்க என்ன செய்தாவ?"
"சும்மா கெடலா... நம்ளுக்கு எதுக்கு அதெல்லாம்... வாயப் பொத்திட்டு வா..."
சுப்பம்மா எத்தனையோ முறை கேட்டும் ராசாங்கம் பாட்டி அதைப் பற்றிச் சொல்லவே இல்லை...
இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்..
"ஏலா. கரையடி வருது.. கொஞ்சம் பாத்து வா..."
"சரி பாட்டி.." சுப்பம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் திடீரென அந்த சத்தம் கேட்டது...
"காப்பாத்துங்க... காப்பாத்துங்க..."
"பாட்டி என்ன சத்தம் அது? யாரோ அலமறிக்கிற மாதி இருக்கு?"
"எலா. வெரசாப் போயிருவோம்.. கருக்கலாயிட்டு.. என்ன சத்தமின்னி தெரியல.." ராசாங்கம் பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில்தான், அது பறந்து வந்து அவர்கள் முன்னால் விழுந்தது...
அது...

(தொடரும்)

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

அன்பே வா அருகிலே... (1)

அத்தியாயம் 1.

"எலா. எழும்புலா... ஆட்ட பத்திட்டுப் போவாண்டாமா? சீக்கிரம் எழும்புலா..."
உறங்கிக் கொண்டிருந்த தன் பேத்தியை எழுப்பிக் கொண்டிருந்தாள் பேச்சியம்மாள்..
பேத்தி சுப்பம்மாவுக்கு வயது பன்னிரெண்டு. பிறந்த அன்றே தாயை இழந்தவள்.
தகப்பனோ அவளை எரியூட்டும் முன்னரே இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டிவிட
தாயின் பிறந்த ஊருக்கு பேச்சியம்மாவால் அழைத்து வரப்பட்டவள்.
சிறுவயதிலேயே கணவனை இழந்து விட்ட பேச்சியம்மாவிற்கு இருந்த ஒரே மகளும்
இறந்து போனதால், மகளின் நினைவாக இருக்கும் பேத்தி மட்டுமே ஆதரவு.
"இரு பாட்டி... ராத்திரி கொசுக்கடி தூங்கவே வெடல... சீக்கிரம் கெடந்து
எழுப்பிட்டுக் கெடக்கிய... கொஞ்சம் சும்மா கெடயேன்.." பாட்டியைத்
திட்டிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்த சுப்பம்மாவைக் கோபத்தோடு
பார்த்தாள் பேச்சியம்மாள்.
"ஏட்டி.. நாஞ்சொல்லிக்கிட்டே கெடக்கேன்.. நீ எழும்ப மாட்டியோ.. எரும
மாடு... எழும்பு..."
முதுகில் இரண்டு வைத்த பின்புதான் கண்ணீரோடு எழுந்தாள் சுப்பம்மா.
மனத்துக்குள் பாட்டியைத் திட்டிக் கொண்டே கொல்லைப் புறம் சென்று பல்
துலக்க ஆரம்பித்தாள்.
தினமும் காலையில் பேச்சியம்மாளின் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு
செல்வதும், பேச்சியம்மாளின் மூன்றாவது விளையில் அவைகளை அடைத்து விட்டுத்
திரும்பி வந்து பள்ளிக்குச் செல்வதும் அவள் வழக்கம்.
முன்பு பேச்சியம்மாள்தான் சென்று கொண்டிருந்தாள்..
ஆனால் கடந்த மாதம் அவள் சென்று வருகையில் இசலை முள் காலில் குத்தி
விட்டதால் அதற்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் அதிக
தூரம் நடக்க இயலாது.
சுப்பம்மா தயாராகி விட்டாள்.
பட்டியிலிருந்து ஆடுகளைத் திறந்து விட்டாள்.
அவை துள்ளலோடு கிளம்பின...
கையில் கம்பை எடுத்துக் கொண்டு ஆடுகளை நடத்திக்கொண்டு சென்றாள்.
"காலையில தின்ன கம்பும்
கருத்த மச்சான் தந்ததல்லோ..
நீயிருந்து மாரடிச்சா
நிம்மதியாப் போயிருவேன்...
எங்கேயோ நீ இருக்க...
என் நெஞ்சத்த நீ அறுக்க..."
பாடலோடு ஆடுகளை மேய்த்துச் செல்வதில் பரம சுகம் சுப்பம்மாவுக்கு..
சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் அவளோடு விளைக்கு வரும் சிறுவர் கூட்டம் அதிகம்.
பேச்சியம்மாளின் மூன்றாவது விளையில் இனிப்புப் புளிய மரம் இருந்தது..
இனிப்புப் புளி தின்னவும், நொண்டங்காய்  தின்னவும் அவளோடு அன்பாகப்
பழகுவோர் அதிகம்.
ஊரின் எல்லையைக் கடந்து கொண்டிருந்தாள் சுப்பம்மா.
கரையடியைத் தாண்டி செல்லும் போது மட்டும் கொஞ்சம் அச்சப் படுவாள்.
அங்கேதான் கரையடி சுடலைமாட சாமி கோயில் இருந்தது..
சுடலையின் கம்பீர உருவம் காண்போரை அச்சப் படவைக்கும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும்தான் பண்டாரம் வந்து பூஜை
போடுவார். மற்ற நாட்களில் யாரும் இருக்க மாட்டார்கள்.
"ஏலா.. கரையடியத் தாண்டிப் போவும்போது உசாராப் போவணும். சுடலைமாடசாமி
திடீர்னு வந்துட்டார்னா அவ்ளோதான்... குளிக்காம கொள்ளாம அந்தப் பக்கம்
ஒதுங்குனாலும் தண்டனைதான்" பேச்சியம்மாளின் எச்சரிக்கை இது.
கரையடியைத் தாண்டி சற்று தொலைவில் ஓர் பாழடைந்த வீடு இருந்தது...
சுப்பம்மா பலமுறை இதைப் பற்றித் தன் பாட்டியிடம் கேட்டிருக்கின்றாள்.
பாட்டியோ அதைப் பற்றி எதுவுமே சொன்னதில்லை.. ஆனால் அந்த வீட்டைத்
திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தாள்.
சில சமயங்களில் மாலை அந்த வழியாக வரும்போது புகை மண்டலம் அந்த
வீட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கும்..
பயந்து போய் அரக்க பரக்க ஓடி வந்து விடுவாள்.
இன்றும் அதைக் கடக்கையில் சிறிது புகை வந்து கொண்டிருந்தது..
ஒருநாளும் காலை நேரம் புகை வராதே... இன்றைக்கு ஏன் வருகின்றது என்று
யோசித்துக் கொண்டே போய் விளையில் ஆடுகளை விட்டு விட்டு, விளையைப்
பூட்டித் திரும்பி விட்டாள்.
"எலா. கஞ்சி குடிச்சிட்டு பள்ளிகூடம் போ"
பாட்டி எடுத்து வைத்த கஞ்சியைக் குடித்து விட்டு, சீருடை அணிந்து, பையை
எடுத்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள்.
"பாட்டி.. அந்தத் தொங்கல் வீட்டில இப்ப வரும்போது பொக வந்துச்சி
பாட்டி... காலைலேயே வருத ஏன்?" மனத்தில் உள்ளதைப் பாட்டியிடம் கேட்டு
விட்டாள்.
"ஏலா.. அதெல்லாம் உனக்கெதுக்கு... பள்ளிக்கூடத்துக்குப் போ" பேத்தியை
விரட்டி விட்டு
"அட கரையடி மகராசா.. இதுக்கு ஒரு விடிவுகாலம் இல்லியா.. கள்ளப் பயலுவ
காலைலயே ஆரம்பிச்சுட்டானுவல... சாய்ங்காலம் ஆட்ட எப்பிடிக் கொண்டு
வாரதுன்னு தெரியலியே" புலம்ப ஆரம்பித்தாள் பேச்சியம்மாள்.

(தொடரும்)

தோள்சீலைப் போராட்டம்.

தோள்சீலைப் போராட்டம்.


இன்று தமிழகத்தின் முழு கல்வி அறிவு பெற்ற மாவட்டமாகத் திகழும் குமரி மாவட்டத்தின் அன்றைய நிலை வேறு. இயற்கை அள்ளிக்கொடுத்த செல்வங்கள் பல. ஆயினும் அன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் மிருகங்களை விடக் கேவலமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

"பறையனைத் தொட்டால் தீட்டு. சாணானைப் பார்த்தாலே தீட்டு" என்று ஓர் வழக்குச் சொல் இருந்தது. இது சான்றோர் குலத்துக்கு மட்டுமல்ல.. அய்யா அவர்கள் பட்டியலிட்ட பதினெட்டு சாதியினருக்கும் பொருந்துவதாக இருந்தது.

கீழோராகக் கருதப் படுபவர்கள் மேலோருக்கு எதிர் நிற்கையில் வெற்று மார்புடன் நிற்கவேண்டும் என்ற கருத்து மக்களிடையே நிலவி வந்தது. ஆலயத்துள் நுழையும் உரிமை பெற்றோர் உயர்சாதி ஆண்கள் மட்டுமே. அவர்கள் இறைவனுக்கு முன்னால் வெற்று மார்புடன் நின்றனர்.. எனவே அவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினர் தங்கள் முன் வரும்போது வெற்று மார்புடனே வரவேண்டும் என்று உரைத்தனர். இது ஆண் பெண் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பொருந்தும் என்றனர். இதனால் தாழ்த்தப் பட்ட சாதியினைச் சார்ந்த பெண்கள் மேலாடை இன்றி நடமாடுவது சாதாரணமாக இருந்தது.

எத்தனை காலம்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க இயலும்.? தன்மானங்கொண்டோர்களால் இதைக் கண்டு பொறுக்க இயலவில்லை. எனவே பொங்கி எழுந்தனர். அய்யாவும் இந்தப் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தாழக்கிடப்போரைக் காப்பதே தலையாய தர்மம் என்று முழங்கிய அய்யாவால் பெண்கள் இதைப் போன்று கேவலப்படுத்தப் படுவதை விரும்ப வில்லை. எனவே தனது பதிக்கு வரும் பெண்கள் கண்டிப்பாக மார்புக்கு சீலை அணிந்துதான் வரவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் கலவரங்கள் வெடித்தன. ஆதிக்க சாதியினர் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னனிடம் இதைப் பற்றிக் குறை கூறினார். இது மன்னவனுக்குக் கோபத்தைக் கிளப்பிவிட்டது. எனவே தாழ்த்தப் பட்டோர் கண்டிப்பாக மார்பை மறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டான். மார்பை மறைக்கும் தாழ்குலப் பெண்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப் பட்டன..

"பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப்

போடாதே என்றடித்தானே சிவனே அய்யா..."

என்று இதைப் பற்றி அய்யா பாடுகின்றார்...

கிறித்தவப் பாதிரிகள் இதைப் பயன்படுத்தித் தேவாலயத்துக்கு வருவோர் மேலாடை அணிந்து வரலாம் என்று அறிவித்தனர். இதனால் மதம் மாறிய தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிந்து ஆலயம் சென்றனர்.

ஆனால் தேவாலயம் செல்லும் தாழ்த்தப் பட்ட சாதிப் பெண்களின் மார்பை மறைக்கும் உடைகள் கிழித்தெறியப் பட்டன. மீட் எனும் கிறித்தவ பாதிரியார் இந்நிகழ்வை பத்மநாபபுர நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார். நீதிமன்றமும் கிறித்தவப் பெண்கள் "குப்பாயம்" எனப்படும் ஆடையை மார்பை மறைத்துக்கொள்ள அணிந்து கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் மேல்சாதி இந்துப் பெண்களைப் போன்று சேலை அணிவதைத் தடை செய்தது.

மார்பை மறைத்துக் கொண்டால் போதும் என்றெண்ணி மக்கள் திரள்திரளாக கிறித்தவத்தைத் தழுவினர். இவர்களைக் கண்டு இந்துப் பெண்களும் மார்பை மறைக்கும் ஆடைகளை அணியத் தொடங்கினர். இவர்களை அய்யா ஆதரித்தார். மேலாடை இன்றித் தனது பதிக்கு வரவேண்டாம் என்றார். தன் மானத்தோடு வாழ்ந்தால் மட்டுமே கலி நீசனை அழிக்கலாம் என்றுரைத்த அவர், மேலாடை அணிந்தால்தான் தன்மானத்தோடு வாழ இயலும் என்று அறிவுறுத்தினார்.

இது உயர்சாதியினருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இதனால் அவர்கள் காணும் இடங்களிலெல்லாம் கலவரத்தில் ஈடுபட்டனர்.

சந்தைக்கு வரும் பெண்கள், பொது இடங்களில் நடமாடும் பெண்கள் என்று பெண்கள் தாக்கப் பட்டனர். பலர் உயிரும் இழந்தனர்..

திருவிதாங்கூர் அரசியின் முன்னால் ரவிக்கை அணிந்து வந்த குற்றத்துக்காக ஒரு பெண்ணின் மார்பகங்களை அறுத்தெரிய அரசாங்கம் உத்தரவிட்டது..

இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது..

காணுமிடங்கள் எல்லாம் நாயர்களும், நாடார்களும் மோதிக் கொண்டனர்.

நாடார் சாதியில் நிலங்களைத் தங்கள் வசம் வைத்திருந்த பணக்காரர்கள், தங்கள் நிலங்களில் வேலை செய்யும் மற்ற நாடார்களைத் துன்புறுத்தினர்.

இதைத்தான் அய்யா "துரியோதனனும், பஞ்சவரும் ஒரே வயிற்றில் பிறக்கக் கண்டேன் சிவனே அய்யா.." என்று பாடினார்.

நிலைமைத் தீவிரமடைவதைக் கண்ட சென்னை ஆளுநர் இப்பிரச்சனையில் தலையிட்டார். கீழ்சாதிப் பெண்களும் மார்பை மறைத்துக்கொள்ளும் ஆடையை அணியலாம் என்றும் ஆனால் அது மேல்சாதிப் பெண்களின் ஆடையைப் போன்று ஆடம்பரமாக இருக்கக் கூடாது என்றும் ஆணையிட்டார்.

இப்படித் தோள்சீலைப் போராட்டம் முடிவுக்கு வந்தது..

தோள்சீலைப் போராட்டம் முடிவுக்கு வந்த போதும் அய்யாவின் சமுதாயப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..

தன்னைத் திருமாலின் அவதார மகன் என்று அய்யா சொல்லிக் கொண்டதும், மேல் சாதிகளுக்கு எதிராக அவர் பரப்பும் கருத்துக்களும் ஆதிக்க சாதியினரிடையே அவரைப் பற்றிய வெறுப்பினை ஏற்படுத்தியது...

அவர்கள் திருவிதாங்கூர் மன்னனை நாடினர்.. மன்னனும் அய்யாவைக் கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டான். கைது செய்யப் பட்ட அய்யா நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றி அடுத்த மடலில்...