வெள்ளி, பிப்ரவரி 04, 2011

அன்பே வா அருகிலே... (1)

அத்தியாயம் 1.

"எலா. எழும்புலா... ஆட்ட பத்திட்டுப் போவாண்டாமா? சீக்கிரம் எழும்புலா..."
உறங்கிக் கொண்டிருந்த தன் பேத்தியை எழுப்பிக் கொண்டிருந்தாள் பேச்சியம்மாள்..
பேத்தி சுப்பம்மாவுக்கு வயது பன்னிரெண்டு. பிறந்த அன்றே தாயை இழந்தவள்.
தகப்பனோ அவளை எரியூட்டும் முன்னரே இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டிவிட
தாயின் பிறந்த ஊருக்கு பேச்சியம்மாவால் அழைத்து வரப்பட்டவள்.
சிறுவயதிலேயே கணவனை இழந்து விட்ட பேச்சியம்மாவிற்கு இருந்த ஒரே மகளும்
இறந்து போனதால், மகளின் நினைவாக இருக்கும் பேத்தி மட்டுமே ஆதரவு.
"இரு பாட்டி... ராத்திரி கொசுக்கடி தூங்கவே வெடல... சீக்கிரம் கெடந்து
எழுப்பிட்டுக் கெடக்கிய... கொஞ்சம் சும்மா கெடயேன்.." பாட்டியைத்
திட்டிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்த சுப்பம்மாவைக் கோபத்தோடு
பார்த்தாள் பேச்சியம்மாள்.
"ஏட்டி.. நாஞ்சொல்லிக்கிட்டே கெடக்கேன்.. நீ எழும்ப மாட்டியோ.. எரும
மாடு... எழும்பு..."
முதுகில் இரண்டு வைத்த பின்புதான் கண்ணீரோடு எழுந்தாள் சுப்பம்மா.
மனத்துக்குள் பாட்டியைத் திட்டிக் கொண்டே கொல்லைப் புறம் சென்று பல்
துலக்க ஆரம்பித்தாள்.
தினமும் காலையில் பேச்சியம்மாளின் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு
செல்வதும், பேச்சியம்மாளின் மூன்றாவது விளையில் அவைகளை அடைத்து விட்டுத்
திரும்பி வந்து பள்ளிக்குச் செல்வதும் அவள் வழக்கம்.
முன்பு பேச்சியம்மாள்தான் சென்று கொண்டிருந்தாள்..
ஆனால் கடந்த மாதம் அவள் சென்று வருகையில் இசலை முள் காலில் குத்தி
விட்டதால் அதற்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் அதிக
தூரம் நடக்க இயலாது.
சுப்பம்மா தயாராகி விட்டாள்.
பட்டியிலிருந்து ஆடுகளைத் திறந்து விட்டாள்.
அவை துள்ளலோடு கிளம்பின...
கையில் கம்பை எடுத்துக் கொண்டு ஆடுகளை நடத்திக்கொண்டு சென்றாள்.
"காலையில தின்ன கம்பும்
கருத்த மச்சான் தந்ததல்லோ..
நீயிருந்து மாரடிச்சா
நிம்மதியாப் போயிருவேன்...
எங்கேயோ நீ இருக்க...
என் நெஞ்சத்த நீ அறுக்க..."
பாடலோடு ஆடுகளை மேய்த்துச் செல்வதில் பரம சுகம் சுப்பம்மாவுக்கு..
சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் அவளோடு விளைக்கு வரும் சிறுவர் கூட்டம் அதிகம்.
பேச்சியம்மாளின் மூன்றாவது விளையில் இனிப்புப் புளிய மரம் இருந்தது..
இனிப்புப் புளி தின்னவும், நொண்டங்காய்  தின்னவும் அவளோடு அன்பாகப்
பழகுவோர் அதிகம்.
ஊரின் எல்லையைக் கடந்து கொண்டிருந்தாள் சுப்பம்மா.
கரையடியைத் தாண்டி செல்லும் போது மட்டும் கொஞ்சம் அச்சப் படுவாள்.
அங்கேதான் கரையடி சுடலைமாட சாமி கோயில் இருந்தது..
சுடலையின் கம்பீர உருவம் காண்போரை அச்சப் படவைக்கும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும்தான் பண்டாரம் வந்து பூஜை
போடுவார். மற்ற நாட்களில் யாரும் இருக்க மாட்டார்கள்.
"ஏலா.. கரையடியத் தாண்டிப் போவும்போது உசாராப் போவணும். சுடலைமாடசாமி
திடீர்னு வந்துட்டார்னா அவ்ளோதான்... குளிக்காம கொள்ளாம அந்தப் பக்கம்
ஒதுங்குனாலும் தண்டனைதான்" பேச்சியம்மாளின் எச்சரிக்கை இது.
கரையடியைத் தாண்டி சற்று தொலைவில் ஓர் பாழடைந்த வீடு இருந்தது...
சுப்பம்மா பலமுறை இதைப் பற்றித் தன் பாட்டியிடம் கேட்டிருக்கின்றாள்.
பாட்டியோ அதைப் பற்றி எதுவுமே சொன்னதில்லை.. ஆனால் அந்த வீட்டைத்
திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தாள்.
சில சமயங்களில் மாலை அந்த வழியாக வரும்போது புகை மண்டலம் அந்த
வீட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கும்..
பயந்து போய் அரக்க பரக்க ஓடி வந்து விடுவாள்.
இன்றும் அதைக் கடக்கையில் சிறிது புகை வந்து கொண்டிருந்தது..
ஒருநாளும் காலை நேரம் புகை வராதே... இன்றைக்கு ஏன் வருகின்றது என்று
யோசித்துக் கொண்டே போய் விளையில் ஆடுகளை விட்டு விட்டு, விளையைப்
பூட்டித் திரும்பி விட்டாள்.
"எலா. கஞ்சி குடிச்சிட்டு பள்ளிகூடம் போ"
பாட்டி எடுத்து வைத்த கஞ்சியைக் குடித்து விட்டு, சீருடை அணிந்து, பையை
எடுத்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள்.
"பாட்டி.. அந்தத் தொங்கல் வீட்டில இப்ப வரும்போது பொக வந்துச்சி
பாட்டி... காலைலேயே வருத ஏன்?" மனத்தில் உள்ளதைப் பாட்டியிடம் கேட்டு
விட்டாள்.
"ஏலா.. அதெல்லாம் உனக்கெதுக்கு... பள்ளிக்கூடத்துக்குப் போ" பேத்தியை
விரட்டி விட்டு
"அட கரையடி மகராசா.. இதுக்கு ஒரு விடிவுகாலம் இல்லியா.. கள்ளப் பயலுவ
காலைலயே ஆரம்பிச்சுட்டானுவல... சாய்ங்காலம் ஆட்ட எப்பிடிக் கொண்டு
வாரதுன்னு தெரியலியே" புலம்ப ஆரம்பித்தாள் பேச்சியம்மாள்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: