வெள்ளி, பிப்ரவரி 18, 2011

சுடலைமாடன் கதை (3)

இப்படியாக சுடலைமாடன் கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம்
தங்கப் புதையலுக்குக் காவல் இருந்து கொண்டிருந்த சமயத்தில், மலையாள
தேசத்திலே நந்தம்புனலூர் என்ற ஊர் இருந்தது.
அங்கே காளிப் பெரும்புலையன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் மாபெரும்
மந்திரவாதி. அவனால் ஆகாத செய்கைகளே இல்லையாம். மந்திரத்தால் என்ன
வேண்டுமானாலும் செய்திடுவான். அந்த ஊருக்கே அவன்தான் தலைவன். எனவே அவனது
வீடு அரண்மனையைப் போன்று இருக்கும். அவனது மனைவி புலக்கொடியாள்.
இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை..
இதனால் மனமுடைந்த புலக்கொடியாள் தன் கணவனிடம் இதைப் பற்றி வேதனையோடு
அழுதாள். அவளைத் தேற்றிய மந்திரவாதி காளிப் புலையன், அவளை பாதளகண்டி
ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் சென்று ஒருமண்டலம் விரதம் இருந்து அம்மனை வணங்கி
வரச்சொன்னான்.
மனத்தின் பாரத்தோடு புலக்கொடியாளும் தவமிருந்தாள். அந்த சமயத்தில்
ஔவையார் தவமிருந்த வீட்டிலிருந்த ஒரு மாவு உருண்டையைக் காகம் ஒன்று
கவ்விக்கொண்டு பறந்து வந்தது.. அதே சமயத்தில் கையேந்தி தவமிருந்த
புலக்கொடியாளைக் கடக்கையில் அந்த மாவு உருண்டை அவளது கைகளில் விழுந்தது.
இது இறைவனின் அருளாலே விழுந்தது என்று எண்ணிய புலக்கொடியாள் அதை உண்டாள்.
இல்லம் சென்றாள்.. அவளும் கருவுற்றாள்..
பத்தாம் மாதம் அழகிய பெண்மகவைப் பெற்றெடுத்தாள் புலக்கொடியாள்.
காளிப்புலையனின் குலதெய்வம் இசக்கியம்மன். எனவே இசக்கியின் பெயரையும்,
மாவு உருண்டைப் பிரசாதத்தால் பிறந்த குழந்தையாதலால் மாவின் பெயரையும்
இணைத்து மாவிசக்கி என்று தன் குழந்தைக்குப் பெயரிட்டான்.
மாவிசக்கியானவள் சகலகலைகளையும் கற்றுத் தேர்ந்தாள். மிகுந்த அழகுடன் விளங்கினாள்.
தன்னுடைய பன்னிரண்டாம் வயதில் பருவமெய்தினாள் மாவிசக்கி.. தன்னிடமுள்ள
ஆபரணங்களால் மகளை அலங்கரித்து மகிழ்ந்தான் காளிப்புலையன்.. இன்னமும் தன்
மகளுக்குப் பொன்னால் நகைகள் செய்து போட்டு அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசை
அவன் மனத்தில் உதித்தது..
அதுவே அவனது அழிவுக்கும் காரணமானது.
அஞ்சனமை போட்டு தங்கப் புதையல் எங்கே கிடைக்கும் என்று அவன் பார்க்கும்
போது கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் பொன் புதையலாக
இருப்பதை அறிந்தான்.
எனவே அதனைக் கொள்ளையிட வேண்டும் என்று முடிவு செய்து வந்தான்.. மாயாண்டி
சுடலைமாடன் காவல் இருப்பதைக் கண்டு அஞ்சி, இவன் இருக்கும் போது நம்மால்
கொள்ளை செய்ய இயலாது என்று எண்ணிக் காத்திருந்தான்.
வெள்ளிக்கிழமை இரவில் சுடலை மாடன் மயான வேட்டைக்குக் கிளம்பினார். அவர்
கிளம்பியதும், காளிப்புலையன் உள்ளே சென்று ஒருகடாரம் பொன்னைக்
கொள்ளையிட்டுப் போய்விட்டான்.
மயான வேட்டைக்குச் சென்ற சுடலைஈசன் திரும்பி வந்தார். தன் காவலில் இருந்த
ஏழுகடாரம் தங்கத்தில் ஒரு கடாரம் குறைந்ததைக் கண்டதும் கோபமுற்றார். யார்
இந்த பாதகத்தைச் செய்தார்கள் என்று எண்ணியவாறே அன்னை பகவதியாளிடம்
சென்றார்.
"அம்மா... நான் மயான வேட்டைக்குச் சென்றிருக்கும்போது யாரோ உன் கோவிலில்
வந்து கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றார்கள். யாரது?" என்று கேட்டார்.
அன்னை பகவதியும் "மகனே. திரவியம் போனால் போகட்டும். அவனைப் பற்றிக்
கேளாதே" என்றாள்.
அவனைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் என்று சுடலையாண்டவர் பிடிவாதம்
பிடிக்க காளிப்புலையனைப் பற்றிச் சொன்னாள் அம்மை..
"மகனே.. நந்தம்புனலூரிலுள்ள காளிப்பெரும்புலையன்தான் இந்தக் கொள்ளையைச் செய்தது.."
"அம்மா விடை கொடு.. நான் அவனை அழித்து நம் திரவியத்தை மீட்டு
வருகின்றேன்" என்று வீராவேசத்தோடு புறப்பட்டார் சுடலை.
"பாலகா. பொறு.. அவன் மந்திரவாதத்தில் தேர்ந்தவன். அவனை யாராலும் எதிர்க்க
இயலாது. அவன் செய்யும் செயல்கள் எல்லாம் விசித்திரமானவை.. பொன் போனால்
போகிறது.. என் மகனே நீ என்னை விட்டுப் போகவேண்டாம். அவன் உன்னைப்
பிடித்து சிமிலில் அடைத்து விடுவான். எனவே நீ போகவேண்டாம்" என்றாள் அன்னை
பகவதி..
"அம்மையே.. உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? நான் பரமனிடம் வரம் வாங்கி
வந்தவனம்மா.. தில்லைவன மயானத்தில் பிறந்த என்னை எந்த மாயசக்தியாலும்
எதுவும் செய்ய முடியாது... நீ ஒருவார்த்தை மட்டும் சொல். என்
காவலிலிருந்த பொன்னைக் கொள்ளை செய்தவன் குடும்பத்தை அழித்து மண்ணோடு
மண்ணாக்கி விட்டு வருகின்றேன்.." என்று முழங்கினார் சுடலை..
அன்னை மேலும் மறுத்தாள்..
"அம்மையே.. இன்னும் எட்டு நாட்களுக்குள் தெரியும்.. மாயஞ்செய்யும் அந்த
மந்திரவாதியா? அல்லது இந்த மாயாண்டியா? என்பது.. நீ விடை கொடு" என்று
பலிவேகத்தோடு ஓலமிட்டார் சுடலை..
இனியும் தன் மகனைக் கட்டுப்படுத்த இயலாது என்றறிந்த அன்னை பகவதியும்
அவனுக்குத் திருநீற்றைப் பூசி வல்லயத்தைக் கையில் கொடுத்து அனுப்பி
வைத்தாள்..
வீராவேசத்தோடு கொட்டாரக்கரையிலிருந்து கிளம்பிய சுடலை ஆண்டவர் மோசம்செய்த
மோசக்காரனை நாமும் வேசம் போட்டு மோசம் செய்வோம் என்று எண்ணங்கொண்டு
பாம்பாட்டியாக உருவம் கொண்டார்.. கானகத்தில் தான் பிடித்த பாம்புகளைக்
கொண்டு நந்தம்புனலூர் வந்தடைந்தார்.
பாம்புகளைத் தெருவில் விட்டு வித்தை காட்டிக் கொண்டிருந்தார்.
காளிப்புலையன் வீட்டிலிருந்து யாரும் வந்து பார்க்கவில்லை.. ஆனால்
காளிப்புலையனின் மகள் மாவிசக்கி தன் வீட்டின் மாடியில் நின்று இதைக்
கவனித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டார் சுடலை.. இவளுக்காகத்தானே
அந்தத் திரவியத்தைக் களவெடுத்தான் பெரும்புலையன். எனவே முதலில் இவளைப்
பலிவாங்க வேண்டும் என்று எண்ணி வயதான பண்டார உருவெடுத்து காளிப்புலையன்
வீட்டுக்கு வந்து கையேந்தி பிச்சை கேட்டார்.
யாரோ சிவனடியார் தன் இல்லம் தேடிவந்து பிச்சை கேட்பதை அறிந்த மாவிசக்கி
அன்னம் எடுத்துக் கொண்டு பிச்சையிட வாசலுக்கு வந்தாள்.
அவள் தெற்கு வாசலுக்கு வந்தால், சுடலை வடக்கு வாசலுக்குச் சென்று பிச்சை
கேட்பதும், அவள் வடக்கு வாசலுக்கு வந்தால், சுடலை தெற்குவாசலுக்கு வந்து
பிச்சை கேட்பதுமாக அவளை அலைக்கழித்தார்.
இதனால் மாவிசக்கி கோபமடைந்தாள்.. "அடேய் கிழட்டுப் பண்டாரம். பிச்சை
எடுக்க வந்தால், கொடுத்ததை வாங்கி விட்டுப் போகவேண்டியதுதானே... ஏன்
இப்படி விளையாடுகின்றாய்?" என்று கோபத்தோடு சுடலையை நோக்கிக் கேட்டாள்.
"பெண்ணே மாவிசக்கி... நான் பிச்சை கேட்டு வரவில்லை.. உன்னைப் பெண் கேட்டு வந்தேன்."
"என்னைப் பெண் கேட்டு வந்தாயா? இந்த சொல்லை மட்டும் என் தந்தை
பெரும்புலையன் கேட்டால், உன்னை இல்லாது செய்து விடுவார்... மரியாதையாக
ஓடிப்போ" என்றாள் மாவிசக்கி..
"எனக்குத் தராமல் உன்னை யாருக்குத் தருவான் உன் தந்தை? சரி எனக்குத்
தாகமாக இருக்கின்றது. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்று அதிகாரத்
தோரணையோடு கேட்டார் சுடலை.
"தண்ணீரெல்லாம் இல்லை.. தரமுடியாது.. ஓடிப்போ" என்று மாவிசக்கி சொல்ல..
"அடியே மாவிசக்கி.. உன் தகப்பனுக்கு பசும்பாலை எடுத்து அந்த அங்கே
வைத்திருக்கின்றாயே... எனக்கு நீர் கூட இல்லை என்றா சொல்கின்றாய்.. உன்
அப்பன் இருக்கும் போதே யாரும் அறியாமல் உன்னைக் கற்பழிப்பேன் பாரடி.."
என்று சொல்லி சபதம் செய்து மாயமாய் மறைந்தார் மாயாண்டி சுடலை..
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தாள் மாவிசக்கி..
தன் தந்தை வந்ததும் இதனைத் தெரிவித்தாள். காளிப் புலையனும் மை போட்டு
பார்த்தால் அவனால் வந்தது யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை..
ஆனாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தான்.'
எனவே தன் மகளைப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்தான்..
அவன் என்ன ஏற்பாடுகளைச் செய்தான் என்பதையும், நம் சுடலை மாட சுவாமி அந்த
ஏற்பாடுகளை எவ்வண்ணம் தகர்த்தெறிந்து காளிப்புலையனை பழிவாங்கினார்
என்பதையும் அடுத்த மடலில் காண்போம்..

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Very Interesting Nanba keep going

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

thanks nanbaa..