ஞாயிறு, ஜூன் 16, 2013

குருத்தோலை

 

குருத்தோலை


-       மு. கந்தசாமி நாகராஜன்,

சுப்பிரமணியபுரம் – 628702.

   பழைய நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த என்னை, நடத்துனரின்  அந்த கணீர் குரல் தட்டி எழுப்பியது.

“சாத்தாங்குளம் எல்லாம் எறங்குங்க!”

இந்த மண்ணை மிதித்து, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. விபத்தில் தனது தந்தை, தாயைப் பறிகொடுத்து அனாதையாய் நின்ற என் காதலியைக் கரம்பிடித்த நாளில், தந்தையுடன் ஏற்பட்ட தகராறால் “இனிமேல் இந்த ஊரை வந்து எட்டிப்பாத்தேன்னா கேளுங்க!” என்று வீம்புடன் வெளியேறிய அந்த நாள் நினைவுக்கு வந்தது.

கடந்த வாரம் வரைக்கும் ஊரைப்பற்றிய நினைவே இல்லை. கடந்த வாரத்தில் என்னுடைய பேரன் வந்து “தாத்தா, நம்ம பக்கத்து வீட்டு சுரேஷ் அவங்க வில்லேஜிக்குப் போய்ட்டு வந்தானாம். அவங்க சொந்தக்காரங்களப் பத்தியெல்லாம் சொல்லிட்டிருந்தான் தாத்தா. நம்ம வில்லேஜ் எங்கே இருக்கு?” என்று அவன் கேட்ட பின்னர்தான் ‘அடடா இத்தன வருஷமா நாம நம்ம ஊரப்பத்தி நெனக்கவே இல்லியே’ என்று மனதில் உரைத்தது.

எனது மகன் கூட “டாடி. அடுத்த வாரம் நாம எல்லாம் சேர்ந்து போய்ட்டு வரலாம்” என்று கூறினான். ஆனால் நானோ பிடிவாதமாக, “மொதல்ல, நான் போய்ட்டு வந்துடறேண்டா. அப்புறமா நாம எல்லாம் ஒருவாட்டி போய்ட்டு வரலாம்” என்று கூறிவிட்டு, புறப்பட்டு வந்து விட்டேன்.

ஊர் மிகவும் மாறி விட்டிருந்தது. புதிதாக ஓர் பேருந்து நிலையம். அங்கிருந்து வீட்டிற்குச் செல்லும் வழி நன்றாகவே நினைப்பு இருந்தது. ஏனெனில் இங்கிருந்த கரையடி குளத்தில்தான் நான் நீந்திப் பழகினேன்.. என் மனைவியின் வீடும் இதற்கு அருகில் உள்ள வடக்குத் தெருவில்தான் இருந்தது. அவளைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி இந்த குளக்கரைக்கு வந்து காத்து கிடப்பேன்.. பசுமை நிறைந்த அந்த நினைவுகளை அசைபோட்டபடி, இப்போது நம் வீட்டில் யாரெல்லாம் இருப்பார்களோ, அப்பா, அம்மா இன்னும் வயதாகி எப்படி இருப்பார்களோ, அண்ணன் அவரை நன்றாகக் கவனித்துக் கொண்டிருப்பானோ இல்லையோ என்று மலையளவு கேள்விகள் மனதில்.

சரி வீட்டிற்குச் செல்லலாம் என்று நகர ஆரம்பித்த போது,

“ஐயா, சாப்பிட எதாச்சும் வாங்கிக் குடுங்க ஐயா,”

ஏற்கெனவே பரிச்சயமான குரல் போன்று இருந்தது. அந்த முதியவரால் படுத்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது. அவருக்கு அருகே தட்டுமுட்டு சாமான்கள். அந்த குடத்தில் இருக்கும் நீரையாவது குடிக்கலாம் என்று எண்ணியபடியே அவர் அதை இழுத்த போது அந்த வெறும் குடம் காற்றில் பறந்து ஓடியது.

“இருங்க ஐயா. நான் உங்களுக்கு கடையில எதாச்சும் வாங்கித் தாறேன்.” சொல்லியபடியே அருகிலிருந்த உணவகத்தை நோக்கி நடந்தேன்.

உணவக வாசலில் ஓர் மூதாட்டி, அங்கிருந்தவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். “தம்பி மிஞ்சிப் போனது எதாச்சும் இருந்தா, கொடுய்யா... ஒன் கால்ல விழுறேன்”

“போம்மா அந்தப் பக்கம், தெனந்தோறும் வந்து தொல்லை பண்ற.. போ போ..” அவனோ அவளை விரட்டிக் கொண்டிருந்தான்.

“பசில உயிரு போதுய்யா.... எதாச்சும் கொடுய்யா” அவளோ விட்ட பாடில்லை....

இறுதியில் இரங்கிய அவன் இரு இட்லிகளை எடுத்துக் கொடுத்தான்.

“தம்பி அஞ்சி இட்லி பார்சல் பண்ணிக் குடுங்க” என்று அவனிடம் கூறியபடி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

பார்சல் கட்டி வந்தவுடன் அந்த பெரியவரிடம் சென்று கொடுத்துவிட்டு திரும்பும்போதுதான் கவனித்தேன் அவரது கையில் இருந்த அந்த முத்திரைப் பச்சையை.

இந்த முத்திரை....?

இதை எங்கேயோ பார்த்திருக்கிறேனே...

“ஐயா நீங்க சாமிநாதன் ஐயாதான?”

“எம் பேரே மறந்து போய் ரொம்ப நாளாச்சி ஐயா! முன்னாடி எல்லாம் அதுதான் என் பேரு.... ஆனா இங்க இருக்கிறவங்களுக்கே எம்பேரு மறந்து போயிருக்குமே!  உங்களுக்கு எப்படித் தெரியும்?” அந்த பெரியவர் கேட்டபோது என் கண்கள் என்னையறியாமல் குளமாகின.

அந்த நாட்களில் சாமிநாதனை அறியாதவர்கள் இருக்க முடியாது. சாத்தான்குளம் பண்ணையாரின் ஒரே மகன் அவர். நான் காதல் மணம் புரிவதற்கும் அவரே தைரியம் அளித்தார். அவருடையதும் காதல் திருமணம்தான்.

எனது சிறுவயதில் இந்த குளக்கரையில் அடிக்கடி அவரை அவரது காதலியுடன் பார்த்திருக்கின்றேன். எங்கள் வட்டாரமே கண்ட முதல் கலப்புக் காதல் அது. எனக்குத் தெரிந்து திருமணத்தில் முடிந்த முதல் காதலும் அதுவே.

சாமிநாதன் தன் காதலியின் மீது உயிரையே வைத்திருந்தார்.

“பாவி முடிவான். அவ என்ன கேட்டாலும் வாங்கிக் குடுத்துருதாம்லே” என்று ஊரே பேசிக்கொண்ட்து. அவர் மனைவி கேட்ட எந்த ஒரு பொருளையும் அவர் மறுத்ததாக சரித்திரமே இல்லை...

இன்று....

இவர் ஓர் பிச்சைக்காரனை விட கேவலமாக.... என்னதான் நடந்திருக்கும்...??

அவர் அருகே அமர்ந்து என்னைப் பற்றிச் சொன்னேன். அவருக்கும் என்னை நினைவிருந்தது.

“நம்ம சுந்தர பாண்டி அண்ணாச்சி மவனா? அடயாளமே தெரியலியே ராசா. நல்லா இருக்கியா?” என்று என்னைப் பற்றிக் கேட்டபடியே இட்லியை உண்ண ஆரம்பித்தார்.

கடந்த ஆண்டின் துவக்கத்தில் தன்னைப் பக்கவாதம் தாக்கியதாகவும், அதன் பின்னர் சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்யும்படி மகன்கள் வற்புறுத்தியதால், தனக்கென்று எதையும் வைக்காமல், எல்லாவற்றையும் பாகம் பிரித்துவிட, தனது மகன்கள் தனது சொத்துக்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, தன்னையும் தன் மனைவியையும் தெருவில் விட்டு விட்டதாகக்  கூறினார்.

எனக்கோ அழுகை வந்து விட்டது.

“இங்கே பாரு ராசா.... இவளக் கல்யாணம் பண்ணுனப்போ எப்படியெல்லாம் சண்ட நடந்துச்சி... இவள விட்டுக் கொடுக்காம... இவளுக்குன்னு என்னெல்லாம் செஞ்சேன்... ஆனா பாரு... இந்த பாழாப் போன பசி எங்க காதலப் பிரிச்சிடிச்சி... அங்க பாரு .. அங்கன தனியா உக்காந்து திங்கா...... என்ன செய்ய ராசா... அவளயும் குத்தம் சொல்ல முடியுமா? அவள மகராணி மாதி தாங்கினேன்.... “ என்று அவர் சொல்லச் சொல்ல என் கண்கள் கண்ணீரை அடக்க முடியாமல் பீறிட்டன.

தனக்கென்று கிடைத்த எதையும் தன் மனையாளுக்கே முதலில் கொடுக்க வேண்டும் என்று விரும்பி, தன் காதலியைத் தன் கண்களாகப் பாவித்த இந்த மகாக் காதலன் காட்டிய திசை நோக்கினேன்.... அந்த அழகுக் காதலி இன்று அழுக்கு மூதாட்டியாய்.... உணவகத்தின் அருகில் அமர்ந்து கிடைத்த இட்லியை உண்டு கொண்டிருந்தாள்.

கண்கள் பனித்த நிலையில் என் இல்லம் இருந்த திசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். புதிதாக ஆரம்பித்திருந்த பெட்ரோல் பங்க் தாண்டியதும் அடுத்த சந்தில், ஓர் ஜோடி..

“ஏட்டி இங்க பாருட்டி... நேத்து திருனெவேலிலருந்து உனக்குன்னு வாங்கிட்டு வந்த இருட்டுக்கட அல்வாட்டி...நான் கொஞ்சம் கூட திங்காம உனக்க்குன்னு கொண்டாந்திருக்கேன். இந்தா...”

அந்த இளைஞன் தன் காதலிக்கு அன்பின் அல்வாவைத் தந்து கொண்டிருந்தான்...

அட... குருத்தோலை...