ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கிறிஸ்துமஸ் கதை நண்பர்களுக்காக....

நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..
எமது பள்ளி நாட்களில் பகிரப்பட்ட கதையொன்றை நண்பர்களுக்காக இவ்விடத்துப் பகிர்கின்றேன்..
ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய நாடகத்துக்காக பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது..
இயேசுவின் பிறப்பு பற்றிய சம்பவம் நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும், என்றென்றும் தெவிட்டாத அவ்வின்பத் தேனை மீண்டும் ஒருமுறை சுவைப்போமே...
யோசேப்பு என்ற தச்சருக்கும், மரியாள் என்ற கன்னிகைக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது... இச்சமயத்தில் இறைவனுடைய திருவருளால் கன்னிமரியாள் கர்ப்பமுற்றாள். திருமணமாகாமல் தான் கர்ப்பமுற்ற காரணம் குறித்து பயந்த சமயத்தில் இறைத்தூதன் அவள் முன் தோன்றி அவளைத் தேற்றினார். தூய ஆவியானவரின் திருவருளால் அவள் கர்ப்பமுற்றதாகவும், இறைமைந்தனே அவளுக்குப் பிறக்கப் போகதாகவும் அறிவித்தார்.
இதை அறியாத யோசேப்பு, மரியாளைத் திருமணம் செய்யாமல் தள்ளிவிடலாம் என்று எண்ணுகையில் இறைத்தூதர் அவருக்கும் வெளிப்பட்டு அவரையும் தேற்றினார். யோசேப்பும் கன்னி மரியாளை ஏற்றுக் கொண்டார்.
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வேளையில் தங்கள் சொந்த ஊருக்கு அவர்கள் இருவரும் பயணப்பட்டனர்.
அந்த மார்கழி மாத பனியிரவில் அவர்கள் பயணம் செய்யும் போது மரியாளுக்கு பிரசவ வலி எடுத்தது... சத்திரங்கள் எதிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. கடைசியாக தேவ மைந்தன் ஓர் மாட்டுக் கொட்டிலில் மரியாளுக்கு மகனாகப் பிறந்தார்.... தேவதூதர்கள் அவர் பிறந்ததை அனைவருக்கும் அறிவிக்க, அனைவரும் கொண்டாடினர்..
இந்த சம்பவத்தை நாடகமாக அரங்கேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது... அந்த கிறிஸ்துமஸ் மாலை வேளையும் வந்தது...
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது...
மரியாள் கருவுற்றது, தேவதூதன் தேற்றியது.. யோசேப்பு அவளை ஏற்றுக் கொண்டது... இப்படி எல்லாம் நல்லபடியாக நடந்தது..
யோசேப்பு மரியாளை அழைத்துக்கொண்டு பயணம் செய்கையில் அவளுக்குப் பிரசவ வலி எடுத்தது...
யோசேப்பு அவளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சத்திரத்துக்குச் சென்றார்.. இடமில்லை என திருப்பி அனுப்பி விட்டனர்..
மீண்டும் இன்னொரு சத்திரத்துக்குச் சென்றார்.
"ஐயா.. என் மனைவி நிறைமாத கர்ப்பிணி.. அவளுக்குப் பிரசவ வலி வந்து விட்டது. தயவு செய்து இடம் தாருங்கள்"
"இடமில்லை ஐயா... "
"ஐயா.அவள் வலியில் துடிக்கிறாள். கொஞ்சம் கருணை காட்டுங்கள்... "
"உண்மையிலேயே இடமில்லை ஐயா...தயவு செய்து போய்விடுங்கள்"
"ஐயா நிறைமாத கர்ப்பிணி ஐயா.. பிரசவ நேரம் வேறு.. எங்கும் இடம் இல்லை.. எங்கே ஐயா போவோம் நாங்கள்... கொஞ்சம் இடம் தாருங்கள்.."
"இடம் இல்லை ஐயா.. போய்விடுங்கள்..."
"சரி ஐயா. நாங்கள் போகிறோம்.." என்று அவர்கள் திரும்பினார்கள்..
இந்த இடத்தில்தான் நம் கதை முக்கியத்துவம் பெறுகின்றது...
சத்திரக்காரனாக நடித்த மாணவன், யோசேப்பாக நடித்தவனையும், மரியாளாக நடித்தவனையும் கண்டு கலங்கி விட்டான்... மிகவும் உணர்ச்சிவசப் பட்டவனாய்....
"ஐயா கொஞ்சம் நில்லுங்க..."
"என்ன ஐயா..?"
"இந்த சத்திரத்தில் இடம் இல்லை.... ஆனால் எனக்கென்று கொடுக்கப் பட்ட அறையை நான் உங்களுக்குத் தருகின்றேன்.. வாருங்கள்" என்று அவன் அழைக்கவும், நாடகத்தில் நடித்தவர்களும், அங்கிருந்த அத்தனை பார்வையாளர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்....
யாருமே எதிர்பார்க்காத காட்சி அது...
எங்கள் ஆசிரியர் கூறியது இதுதான்.. "யாரும் எதிர்பாராத வேளையில் கதையில் அதைப் போன்ற முடிவெடுத்த மாணவன் முடிவு பார்வையாளர்களைப் பொறுத்தவரை தவறுதான்... ஆயினும், கிறிஸ்துவின் உண்மையான பிறப்பு என்பது அதைப் போன்ற நல்லிதயங்களில்தான் ஜொலிக்கின்றது... அவன் மனதில் இரக்கம் உண்டானது... கதையை மறந்தான்.. தன்னிலை மறந்தான்... அவர்களை அழைத்தான்... மனிதர்களுக்கு நல்வழி காட்டிட இரக்கம் கொண்டுதான் இறைமகன் பூமியில் அவதரித்தார்.... இதைப்போன்ற நல்லிதயங்கள் அனைத்திலும் அவர் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்... எளியோருக்கு இரங்குவதும், உண்மையுள்ளவர்களாக வாழ்வதும் மட்டுமே இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதன் பொருள்... எனவே.. அன்றைக்கு அந்த மாணவன் தன் அறையை இயேசுவின் பெற்றோருக்காகக் கொடுத்த சம்பவத்தைப் போல், நாமும் நம் மனத்தில் இயேசுவுக்கும் அவரது கொள்கைகளுக்கும் இடம் கொடுப்போம்"...
நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. நன்றி ..

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

பக்தியில் திளைப்போம் நவராத்திரியில்...

அடியேனை வரவேற்றருளிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... தங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற நடையில் இத்தொடரை, எளியேன் அளித்திட இயலுமா என்பது ஐயமே... ஆயினும் என்றென்றும் என்னுள்ளே இருந்து எம்மை வழிநடத்தும் அன்னையின் திருப்பாதங்களில் சரணடைந்து அவள் புகழ் பாடுகின்றேன்...

பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பலருடைய வாழ்வை உதாரணம் காட்டலாம்.

கடந்த ஆண்டு திருக்கடவூரில் அன்னை அபிராமியின் திருக்கோவிலில், ஐயா காளைராசன் அவர்களைச் சந்தித்த போது, அன்னார் பகிர்ந்த நிகழ்வொன்றை இவ்விடத்துத் தருகின்றேன்...

அபிராமிப் பட்டர் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதற்கொண்டு அன்னை அபிராமியையே தனக்குரிய உலகமாகக் கொண்டு வாழ்ந்தார்... அவளைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவர்க்கில்லை... அப்படிப் பட்ட பெரும்பக்திக்குத் அருட்செய்யவே அன்னை தானணிந்த தோடொன்றை வானில் வீசி அமாவாசை இரவை பௌர்ணமியாக்கிக் காட்டினாள்...

ஐயா அவர்கள் இன்னொரு நிகழ்வையும் சுட்டிக் காட்டினார்.

கண்ணப்பன் அதுவரை சிவலிங்கம் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து வந்தான்.. சிவலிங்கம் என்றால் என்ன? சிவம் என்றால் என்ன? என்று அவனுக்குத் தெரிந்த முதற்கொண்டு தன் மனத்தில் சிவசிந்தனையன்றி மற்ற சிந்தனைகள் இல்லாது வாழ்ந்தான்.. ஆகவேதான் சைவ சமய நாயகனுக்கு அசைவப் படையலிட்டும் அது ஏற்றுக் கொள்ளப் பட்டது.. அதைத் தொடர்ந்து வந்த சோதனைகளையும் அவன் எதிர்கொண்டு நாயன்மார்களில் ஒருவனாக ஆனான்...

இப்படியாகக் காணும் இடமெல்லாம் இறைவடிவைக் கண்டு தொழும் பக்திக்கு சோதனைகள் வந்தாலும், வலுமிக்க மெய்யான பக்தியால் அச்சோதனைகளே வரலாற்றில் நீடிக்கும் சாதனைகளாக ஆகின்றன..

தசராத் திருவிழாவின் முதல் நாளான இன்று, குலசேகரன் பட்டினத்தில் வீற்றிருந்து உலகாளும் நாயகியான அன்னை முத்தாரம்மன், துர்க்கையாக உற்சவம் வருகின்றாள்...

சும்ப நிசும்பர்களை வதைத்து, மகிடனை அழித்துத் தக்கோரைக் காக்க தேவி கொண்ட வடிவைக் கண்டு உலகமே நடுங்கியது... ஆனால் அன்பே உருவான அன்னை, அத்தகைய கொடிய மனம் படைத்தவளா என்ன? மக்களைக் காக்க அவள் கொண்ட கோலம், அசுரகுணம் கொண்டோரை விடுத்து, என்றென்றும் அவள் மேல் பக்தி கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நல்லதையே நல்கிடும்... இதனை அவள் மேல் அழியாத பக்தி கொண்ட அன்பர்கள் நன்கு உணர்வார்கள். ஆகவேதான், அன்னையின் திருக்கோலம் கண்டு அஞ்சாது அவளிடத்து வரங்கள் கேட்கும் தன்மையைக் கவிஞர்கள் பெற்றிருந்தனர்.

வரங்கள் கேட்பது கவிஞனின் உரிமை... தவறாது அளிப்பது அன்னையின் கடமை...

அப்படி அன்னையின் அருள் பெற்ற மகா கவிஞன் ஒருவனது கவிதையை இவ்விடத்துக் காண்போமா? அனைவருக்கும் தெரிந்த கவிதைதான்... அடிக்கடி படித்த கவிதைதான்... ஆனால் அன்னையின் திருவருளோடு, அவள் திருவடி நிழலில் நின்று பாடிய மகா கவிஞன் என்ன துணிச்சலோடு அவளிடத்து இந்த வினாவை எழுப்பியிருப்பான்??

என்றென்றும் உன் திருப்பாதங்களே சரணமென்றெண்ணி நான் செய்த பூசனைகளுக்கெல்லாம் என்ன பதில் தந்திட்டாயடி காளி? நான் கேட்கும் வரத்தினைத் தந்திட விரைந்து வந்திடுவாய்....இதனைக் கேட்டல் என்றன் உரிமை.... நீ தந்தே ஆள வேண்டும் என்ற மனவுறுதியோடு கேட்ட கவிஞனின் அழியாத மகா கவிதையொன்றைக் காண்போமா?



"விண்ணும் மண்ணும் தனியாளும் -- எங்கள்


வீரை சக்தி நினதருளே -- என்றன்


கண்ணும் கருத்தும் எனக் கொண்டு -- அன்பு


கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்


பண்ணும் பூசனைகள் எல்லாம் -- வெறும்


பாலை வனத்திலிட்ட நீரோ? -- உனக்கு


எண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ -- அறி


வில்லாது அகிலம் அளிப்பாயோ?


நீயே சரணமென்று கூவி -- என்றன்


நெஞ்சிற் பேருறுதி கொண்டு -- அடி


தாயே எனக்குமிக நிதியும் -- அறந்


தன்னைக் காக்குமொரு திறனும் -- தரு


வாயே என்று பணிந்தேத்திப் -- பல


வாறா நினது புகழ் பாடி -- வாய்


ஓயேனாவதுணராயோ?-நின


துண்மை தவறுவதோர் அழகோ?


காளீ வலிய சாமுண்டி -- ஓங்


காரத் தலைவி யென்னிராணி -- பல


நாள் இங்கெனையலைக்கலாமோ? -- உள்ளம்


நாடும் பொருளடைதற்கன்றோ -- மலர்த்


தாளில் விழுந்த பயங்கேட்டேன் -- அது


தாராய் எனில் உயிரைத் தீராய் -- துன்பம்


நீளில் உயிர் தரிக்க மாட்டேன் -- கரு


நீலி என் இயல்பறியாயோ?






தேடிச் சோறு நிதந்தின்று -- பல


சின்னஞ்சிறு கதைகள் பேசி -- மனம்


வாடித் துன்பமிக உழன்று -- பிறர்


வாடப் பல செயல்கள் செய்து -- நரை


கூடிக் கிழப்பருவம் எய்தி -- கொடுங்


கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல


வேடிக்கை மனிதரைப் போலே -- நான்


வீழ்வேன் என்று நினைததாயோ?






நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை


நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்


முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்


மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி


என்னைப் புதியவுயிராக்கி- எனக்


கேதுங்கவலையறச் செய்து -- மதி


தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்


சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.






தோளை வலியுடைய தாக்கி -- உடற்


சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி


வாளைக் கொண்டு பிளந்தாலும் -- கட்டு


மாறா உடலுறுதி தந்து -- சுடர்


நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி


நண்ணித் திகழுமுகந் தந்து -- மத


வேளை வெல்லுமுறை கூறித் -- தவ


மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.






எண்ணுங் காரியங்கள் எல்லாம் -- வெற்றி


யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்


பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்


பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை


நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக


நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல


பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்


பாடத் திறனடைதல் வேண்டும்.






கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்


கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்


புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றிப்


போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை


வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் -- என


விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்


தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி


சூழும் வீரமறி வாண்மை


கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்


கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை


நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த


நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்கக் -- கலி


சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி


தாயே உனக்கரியது உண்டோ? -- மதி


மூடும் பொய்ம்மையிருள் எல்லாம் -- எனை


முற்றும் விட்டகல வேண்டும்;






ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை


அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல


பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்


பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை


உய்யக் கொண்டருள வேண்டும்-அடி


உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி


வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை


வாழி, நின்னதருள் வாழி.


ஓம் காளி வலிசாமுண்டீ


ஓங்காரத் தலைவி என்இராணி"



மிக நீண்ட பாடல்... நாடி நரம்புகளில் எல்லாம் மறைந்திருக்கும் நம் சக்தியை தேடி இழுத்துத் திறனாக வெளியேற்றும் கவிதை இது... ஆம்... மறைந்தாலும் என்றைக்கும் தமிழ்த்தாயின் செல்லக் கவிஞனாய், தமிழ் கூறும் நல்லுலகின் கவி வேந்தனாய் நம் மனத்தை ஆளும் மகா கவிஞன் பாரதியின் கவிதை....கண்களை மூடி அன்னை பராசக்தியைத் தியானித்து இக்கவிதையைப் பாடும் வேளை நம்மை அறியாது புத்தொளியொன்று நம் மனத்தில் புகுவதைக் காணலாம்... இப்படி வரங்கேட்ட பாரதிதான் "தசையினைத் தீச்சுடினும் தாய் சிவசக்தியைப் பாடும் நல் வரம்" கேட்டான். அன்னையைப் போற்றி, எனக்குப் பொருள் வேண்டும், புகழ் வேண்டும், அழியாத மகா கவிதையை யான் அருளல் வேண்டும் என்று பாடியோன், அன்னையைப் பாடும் நல் வரங் கேட்கும் தன்மையும் பெற்றிருந்தான்... தான் கேட்ட வரங்களனைத்தும், தனக்கென்று மட்டுமல்லாது, தன்னையீன்ற அன்னை பூமியை வளங்கொள்ளச் செய்திடும் வரமெனக் கேட்டான்.... இவையெல்லாம் அன்னையின் பக்தர்களின் மனத்தன்மை.. காளியை, சாமுண்டியைக் கண்டு அஞ்சாது வரம் கேட்கும் தன்மை, அவள் பக்தர்களுக்குத் தாமே வந்து சேரும்....

"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது நம் சொல் வழக்கு.. ஆனால் கம்பனோ அன்னையை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவிபாடும் என்று பாடி விட்டான்... அதுதான் அன்னையின் பேரருள்.... அன்னை தானே நேரில் வந்து லீலை செய்து, சமையல் செய்யும் சாதாரண மானுடன் ஒருவனை பெருங்கவியாக்கிய கதையொன்றை நாளை பகிர்கின்றேன்.... (அறிந்தோர்கள் பலரிருக்கும் அவையில் அடியேனின் சொல் அவமாயினும் பொறுத்தருள வேண்டுகின்றேன்..)

"கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரோடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே"

- ஸ்ரீ அபிராமிப் பட்டர்...



"நிலையிலா நிழலுலகில்

நித்தம் உந்தன் பதம் தேடும்

பக்தனாய் வாழ்வளிப்பாய் எந்தன்

பகைவர்க்கும் வாழ்வளிப்பாய்..



நித்தம் நித்தம் உனைத்தொழுது

நினதருளே சொந்தமென்னும்

பித்தனாய் வாழும் தன்மை

எத்தனாம் எமக்கும் அருளேன்..."

சனி, ஜூலை 16, 2011

இரவின் மடியில் (நிறைவுப் பகுதி)

இரவின் மடியில் (நிறைவுப் பகுதி)

மஞ்சளாடை உடுத்தி மங்கல நாண்பூட்டி செந்தூரான் ஆலயத்தில் மணம் முடித்து
இல்லம் செல்வதற்காக ஆலயத்திலிருந்து வெளியே வந்தோம்... எங்கள் வாகனம்
அருகில் வந்தது... வாகனத்தில் ஏறும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக அது
நிகழ்ந்தது...
நான் காவல்துறையில் சேர்ந்த பின்னர் எடுத்த களைகளில் ஒன்று
எஞ்சியிருந்ததை மறந்ததன் விளைவு....
முடிகொடுக்கும் மண்டபத்திலிருந்து அவன் ஓடி வந்தான்.... கையில் ஓர் வெட்டரிவாள்...
என்னவென்று சுதாரிக்கும் முன்னராக அவனது கையிலிருந்த அரிவாளை ஓங்கி வீசினான்....
அது என் மீது பட்டு விடும் என்ற அச்சத்தில் என்னைத் தள்ளிய என்
தங்கத்தின் கழுத்தில் வீழ்ந்தது....
மஞ்சளாடை செவ்வாடையாகி மண்ணில் சாய்ந்தது என் உலகம்....
அரிவாளை வீசியவன் ஓட, அவனைத் துரத்தவா??, வீழ்ந்து கிடக்கும் என்
தங்கத்தைக் காணவா??
மனம் மதியற்றுப் போனது...
மண்ணில் சாய்ந்த என் மனையாளை மடிமீது சுமந்தேன்...
"உனக்கொன்றும் ஆகாது கண்ணே.... உன்னை நான் காப்பேன்..." உரைத்தேன்...
வெட்டு கழுத்தில் வீழ்ந்ததால், அவளால் பேச இயலவில்லை....
செய்கைகள் செய்தாள்....
அவளை அப்படியே தூக்கி வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்குச் செலுத்தச் சொன்னேன்...
துடித்தேன்...
கண்மணியே ... தைரியம் கொள்... உனக்கொன்றும் நேராது என்றுரைத்தேன்....
எனக்கு விரித்த வலையில் நீ வீழ்ந்தாயே.... ஐயோ என மனம் நொந்தேன்....
விதி எனக்கெதிராக சதி செய்தது....
மருத்துவமனையை நெருங்கிய நேரத்தில், தன்னறிவு மறந்து விழுந்தாள்...
உள்ளே எடுத்துச் சென்றால், அவளது ஆருயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்
உரைத்தார்....
நொடிந்து விழுந்தேன்....
என் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது...
விதியே விதியே.... நீ ஏன் என் வாழ்வில் சதி செய்து போனாய்???
இல்லை... இது பொய்...
என் கண்மணி மரிக்கவில்லை.... அவள் என்னோடு இருக்கும்போது அவளால் எப்படி
மரிக்க இயலும்? இதோ என் தலை முதல் பாதம் வரை எங்கும் நிறைந்திருக்கும்
அவளால் எப்படி என்னைப் பிரிய இயலும்....?
செங்குருதியில் நனைந்த மஞ்சளாடையுடன் பிதற்றினேன்...
கைகளை சுவற்றில் அறைந்து அழுதேன்....
எதிர்ப்பட்டோரையெல்லாம் என் தங்கத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்டுத்
தாக்கினேன்...
என்னைப் பிணைத்தார்கள் சங்கிலியில் பித்தனென்று சொல்லி....
என் கண்ணெதிரே என் கணமணியைத் தகனம் செய்தார்கள்...
நெருப்பிலே விழுந்து அழுதேன்... என்னைப் பற்றி இழுத்து ஆறுதல் படுத்தினார்கள்....
என்னை யாரால் ஆறுதல் செய்ய இயலும்?? என் காயத்தை எந்த மருந்துதான் ஆற்றும்??
இதோ இதோ.. இந்த கடற்கரையில்தானே நீயும் நானும் உலவி மகிழ்ந்தோம்...
இன்றைக்கு என்னைப் பிரிந்து நீ மட்டும் எங்கு போனாய்???? என் கண்ணீர்
கடலை நிறைக்குமளவுக்கு அழுதேன்....
ஓடி விளையாடிய இடங்களிலெல்லாம் அவள் முகம் தோன்றி மறைந்தது...
பேசி மகிழ்ந்த இடங்களிலெல்லாம் அவள் குரல் எனக்குத் தெளிவாகக் கேட்டது....
அவளோடு நான் பேசும்போது என்னை உலகத்தோர் பைத்தியம் என்று இகழ்ந்தார்கள்..
ஒரே நிமிடத்தில் அழுகையும் சிரிப்பும் எனக்குள் மாறி மாறி எழுந்தது...
அவள் முகம் தோன்றும்போது சிரித்தேன்... அவள் இல்லாததை எண்ணி அழுதேன்...
அவள் குரல் கேட்கும்போது சிரித்தேன்.... அவள் என்னை விட்டு நீங்கியதை
எண்ணி அழுதேன்...
காதல் வானில் சிறகடித்துப் பறந்த வண்ணப் பறவைகளைப் பிரித்து வேடிக்கை
காட்டும் இறைவனே.... இதே மண்ணில்தானே நீயும் காதல் மணம் புரிந்தாய்.??
காதலின் வலியறியாதவனா நீ????
"கனவுக்குள் நீ வந்து போனாய்.... என்
கவிதைக்குக் கருவாக ஆனாய்...
தொடராதோ நம் காதல் மண்ணில்?
தொலையட்டும் அக்கடவுள் விண்ணில்..." என்று இறைவனை சபித்தேன்....
காணும் முகங்களிலெல்லாம் என் கண்மணியைத் தேடியலைந்தேன்....
தோன்றும் அலைகளிலெல்லாம் அவள் துள்ளலைத் தேடியலைந்தேன்...
அவளை அள்ளியணைத்திடச் செல்கையில் என் கைவிலங்கு என்னைத் தடுத்தது....
அவளை நோக்கி நான் ஓடுகையில் என் கால்விலங்கு என்னைத் தடுத்தது...
இடறி விழுகின்றேன்... மீண்டு எழுகின்றேன்....
என் வேதனை புரிந்தவர் யாருமிலர்...
என் சோதனை தீர்ப்பவர் யாருமிலர்...
காதல் புனிதமானது என்று மொழியும் காதலர்களும் என்னைக் கண்டு அஞ்சி ஓடுகின்றனர்...
காதலுக்குக் கவிபாடும் கவிஞர்களும் என்னைக் கண்டால் கலவரமடைகின்றனர்...
விளக்கின் ஒளியில், நிலவின் மடியில் அவள் முகம் தேடித் தேடி என் தேடல்
இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது...
பகலவன் விளக்கில், பரிதியின் மடியில் அவளைத் தேடும் என் தேடலுக்கு விடை
தருவார் யாருமில்லை...
பசியுமில்லை... உணவுமில்லை...
பகலுமில்லை... இரவுமில்லை....
எங்கும், எப்பொழுதும் அவள் முகம் தேடுதல் அன்றி வேறு வேலை எனக்கில்லை.....
ஆறுதல் தேடி இரவின் மடியில் தலைசாய்த்துத் துயில்கின்றேன்.........
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என் தேடல் நிறைவு பெறுமா?????

(முற்றும்)

திங்கள், ஜூன் 20, 2011

இரவின் மடியில்.......

7.
தென்னகத்துக் காதலர்களின் பேரெதிரி சாதித் தீயில் எங்கள் காதல் எரிந்து சாம்பலாகுமோ என்று அச்சங்கொண்டேன்.
சரி அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று எண்ணி, அவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன்...
சொன்னாள்...
தூத்துக்குடி வ.உ.சி தெருவில் இருந்த அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்த போது என்னை மறந்து துள்ளினேன்....
நான் பிறந்ததாகச் சொல்லப் படும் சாதியில் பிறந்திருந்தாள் அவளும்....
என் தந்தையாரும் அவளது தந்தையாரும் ஏற்கெனவே அறிமுகம் ஆகி இருந்தனர்...
சாதியும் நமக்குத் தடை விதிக்கப் போவதில்லை. நம் குடும்பத்தாரும் நம் காதலை ஏற்பார்கள் என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்...
மெதுவாக என் தாயார் மூலம் தந்தையாரிடம் பேசி அவள் தந்தையிடம் பேசச் சொன்னேன்...
இருவீட்டாரின் சம்மதமும், ஆசியும் எங்கள் காதலின் அடுத்த அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டது...
வைகாசி விசாகத்திருவிழா முடிந்த பின்னர் செந்தூரான் ஆலயத்தில் வைத்து திருமணம் என்று நிச்சயம் செய்யப் பட்டது..
வள்ளி மணாளனே எங்கள் வாழ்க்கைக்கு வழிகாடியதாக நம்பினோம்...
நாள் நிச்சயம் செய்யப் பட்டது...
முகூர்த்தப் பட்டோலை எழுதப்பட்டது...
திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டது..
திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
எங்கள் அக வாழ்க்கைத் துவங்கப் போகும் மகிழ்ச்சியில் கனவில் மிதந்தோம்...

உயிருக்கு உயிரானவள்.... என்
கவிதைக்குக் கருவானவள்....
மாசறு பொன்னும் வலம்புரி முத்தும்
மண் நோக்கும் வடிவானவள்....
நெஞ்சத்தில் இனிக்கின்றவள்...மண
மஞ்சத்தில் மணக்கின்றவள்...
என்றென்றும் எனதானவள்...அவள்
எனக்கென்றென்றும் உறவானவள்..

திரும்பும் திசையெங்கும் திருமணக் கனவுகள்தான்.... கம்பனும் இளங்கோவும் எழுத மறந்த காவியம் எங்கள் காவியம்தான்... கம்பன் நம் காதலைக் கண்டிருந்தால் என்ன காவியம் பாடியிருப்பான்?? சிலம்புக்குப் போட்டியாக சிலம்பாட்டம் ஆடியிருப்ப்பான்...
அலுவல்களுக்கு மத்தியிலும் எங்கள் அகத்தைப் பற்றிய சிந்தனைதான்...
எங்கள் வாழ்வின் பொன்னாளை நோக்கி நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தோம்...
அந்த நாளும் வந்தது...
மங்களம் தரும் மஞ்சளாடை உடுத்தி, உற்றார் புடைசூழ செந்தூர் பயணித்தோம்....
மங்கையவளும் மஞ்சள் சேலையிலே மங்களம்புக வந்தாள்...
திருச்செந்தூரான் திருமுன்னில் திருமணம்....
மங்கள வாத்தியம் முழங்க, மங்கள நாணை மறையோன் எடுத்துத் தர, மணத்திற்கான முடிச்சுக்களை அவள் கழுத்தில் நான் கட்டினேன்...
அட்சதைகள் தூவி அனைவரும் வாழ்த்தினர்...
பொன்மகளின் பொற்கரம் பற்றி திருக்குமரன் ஆலயம் திருவலம் வந்தோம்.
வசந்த மண்டபத்தில் திருமண விருந்து....
திருமண விருந்து உண்டு பிரகாரம் சுற்றி நடந்தோம்....
அன்றைக்கு எங்களுக்கு அடைக்கலம் தந்த கடற்கரை நோக்கி நடந்தோம்...
கடலரசன் எங்களுக்கு வாழ்த்தலைகள் அனுப்பினான்...
மனமுவந்து அவன் அலைகளை ஏற்றோம்....
அன்றைக்கு எங்களைப் பொறாமையுடன் கண்ட கடலலைகள் இன்றைக்கு இன்சொல் தந்தன...
கடலில் பாதம் நனைத்துக் கரை வந்தோம்...
நண்பர்களின் கேலியலைகளின் மீண்டும் நனைந்தோம்....
இல்வாழ்க்கை இனிதே துவக்கம்.....
பொற்கரங்கள் பற்றி கடற்கரை தாண்டி பிரகார மண்டபத்தில் நடந்து வந்து வாகனம் ஏறி எங்கள் ஊருக்குச் செல்ல யத்தனித்தோம்...
வாகனத்தில் கால் வைத்த நொடி.....

ஞாயிறு, ஜூன் 19, 2011

இரவின் மடியில்.......

6.
காமத்துப் பாலில், களவியல் முடிந்து கற்பியல் துவங்கும் காலத்துக்கு
வந்தோம்...இடைப்பட்ட நாட்களில் நடந்தவை இன்னமும் அழியாத காவியங்கள்....
என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்தது.. அவளோ இன்னமும் படித்துக் கொண்டிருந்தாள்...
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் காவல்துறைப் பணிக்குச் செல்லவேண்டும் என்ற
என் பேராவலை அவளுக்குச் சொன்னேன்...
"காவலனே என் காதலனாகிவிடில் பெருமையே எனக்கு" என்றுரைத்தாள்..
"கவிஞன் காவலன் ஆவது காலம் செய்த திருக்கோலம்" என்றுரைத்தாள்..
காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்காக என்னைத் தயார் செய்து
கொண்டிருந்தேன்..
ஊக்கமளித்து உற்சாகப் படுத்தினாள்...
தினமும் அவளது திவ்ய திருக்காட்சி கிடைக்கவில்லை...
ஆனால் கனவில் தினமும் என்னைக் களிப்பூட்டிக் கொண்டிருந்தாள்...
மாதம் ஒருமுறை சந்திப்பு....
வாரம் ஒருமுறை கடிதப் பகிர்வு...
இவ்வாறாக எங்கள் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்...
முதல்நிலைத் தேர்வில் தேறினேன்...
அகம் மகிழ்ந்தாள்... தன் தோழிகளிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள்...
இடையில் ஓர் நாள் சந்திப்பில் நிகழ்ந்தது...
அன்றைக்குச் செந்தூரான் ஆலயம் சென்று வரலாம் என்று தீர்மானித்தோம்...
பேருந்திலிருந்து இறங்கி இளவெயிலில் அவளோடு நடந்த சுகம் இன்றைக்கும்
நெஞ்சத்தில் இனிக்கின்றது...
செந்தூரான் சேவடி பணிந்து எங்கள் காதல் வெல்ல வழி செய் என்று வேண்டினோம்..
கந்தனின் காதலை வெல்ல வைத்த வள்ளி குகை கண்டு மெய்சிலிர்த்தோம்... மெல்ல
நகைத்தோம்...
கடற்கரை மணலில் கால்புதைத்து நடந்தோம்..
காலை வெயில் இதம்தர அமர்ந்தோம்...
எதிர்காலத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது..
"என்னை மறந்து விடுவீர்களா?"
"ஆம் மறப்பேன்... நீ வேறு என்பதை மறப்பேன்.. என்னுள் நீ நானாக இணைந்த
பிறகு, உன்னை நான் நினைப்பதென்பதேது? மறப்பதென்பதேது? என்னுள் நீ நானாகவே
வாழ்வதை என்றுமே மறப்பதில்லை"
ஆனந்தக் கண்ணீர் அரும்பித் துளிர்த்து...
என் தோளில் தலை சாய்த்து மௌனித்தாள்...
அவளது மௌனம் எனக்குச் சொன்ன செய்திகள் பல...
காதலில் மௌனத்தை விட சிறந்த செய்தி பரிமாற்றம் ஏதுமில்லை..
மஞ்சளாடை உடுத்தி கடலில் நீராடும் புதுமணத்தம்பதியரில் எங்களைக் கண்டோம்...
நமக்கும் மணமாகிய பின்னர் நாமும் இப்படித்தானே கடல் நீராடுவோம் என்று
பேசி மகிழ்ந்தோம்...
கடற்கரையில் விளையாடும் சிறு குழந்தைகளைக் கண்டு நகைத்தோம்...
அவளின் பஞ்சுப் பாதங்களைத் தொடமுயன்று தோற்ற கடலலைகள் என் மேல் கோபங்கொண்டன...
கோபத்தில் மீண்டும் மீண்டும் அலையம்புகளைத் தொடுத்தும் தோற்றன...
கடலலைகள் என் மீது கோபங்கொள்வதைக் கண்டு இரங்கிய என் தேவதை, தன்
பாதங்களைக் கடலில் நனைக்கச் சென்றாள்...
மகிழ்ந்த கடலலைகள் அவள் பாதங்களைத் தொட்டுத் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன...
என் பாதங்களை நன்றியுடன் நனைத்துத் திரும்பின....
கடற்கரையில் காதலியின் கரம்பற்றி நடக்கும் இனிமை உலகில் பிறிதேது?
நம் ஆடைகள் நனைந்தாலும் ஆனந்தக் குறைவுண்டோ?
இனிமையாய் அன்றைய நாள் நிறைந்தது...
இன்னும் சில தினங்களில் இறுதித் தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்...

இறுதித் தேர்விலும் தேறினேன்...
என் தேர்வினைக் கண்டு அவள் மகிழ்வுற்ற சமயம் அவளுக்கும் கல்லூரி இறுதியாண்டு...
தூத்துக்குடி மாவட்டத்திலேயே வேலை வாய்ப்பு...
துணை ஆய்வாளர் பணி என்பது அத்தனை எளிதல்ல...
துன்பங்கள் தோன்றும் வேளையில், அவள் முகம் என் கண்களில் தோன்றி இன்பத்தை
அளித்தது...
எங்கள் காவல் நிலைய ஆய்வாளர் எனக்கு உறுதுணையாய் இருந்தார்... மாவட்டக்
காவல்துறைக் கண்காணிப்பாளரும் இளைஞர்களுக்கு ஊக்கமாய் இருந்தார்.
இவர்களின் துணைகொண்டு சில சமூகவிரோதக் கும்பல்களைக் களை எடுத்தோம்..
தினசரியில் என் புகைப்படம் பார்த்து மகிழ்ந்த அவள் எனக்குத் திருஷ்டி கழித்தாள்...
இந்நிலையில் அவளது கல்லூரி படிப்பும் முடிந்தது...
கற்பியல் உலகம் எங்களை அழைத்துக் கொண்டிருந்தது...
இனி வீட்டில் காதலைப் பற்றிப் பேசி விட வேண்டும் என்று எண்ணிய
வேளையில்தான் தென்னகத்துக் காதலர்களின் சாபக் கேடு நினைவுக்கு வந்தது..
தென்னகத்துக் காதலர்களின் பரம எதிரி சாதிதான்...
அவளைக் கண்ட நாள் முதற்கொண்டு இன்று வரை அவள் என்ன சாதி என்பது எனக்குத்
தெரியாது...
இந்நிலையில் அவளை மணம் முடிப்பதென்பது சாத்தியம்தானா? என்ற வினா என்னைப்
பாடாய்ப் படுத்தியது...
சாதிகளில் நம்பிக்கையற்ற எனக்கு, அவளது பெற்றோரும், உற்றாரும் இதை எப்படி
ஏற்பார்கள் என்ற ஐயம்...
தென்தமிழகமோ சாதிக் கலவரங்களில் துடித்துக் கொண்டிருந்தது...
கலவரங்களை அடக்கும் கடமையுள்ள காவலனான நான் ஓர் கலவரத்துக்குக் காரணமாகி
விடுவேனோ?? என்று அஞ்சினேன்...
சாதியை வென்று அவளை மணங்கொண்டேனா? அல்லது சாதித் தீயில் மரணங்கொண்டேனா???

சனி, ஜூன் 18, 2011

இரவின் மடியில்.......

5.
தேவதை என்னிடம் மீண்ட அந்த பொன்னாளை என் வாழ்வின் ஏடுகளில் வைரங்களால் குறித்து வைத்திருக்கின்றேன்... என்றும், எப்பொழுதும் அவள் நினைப்பிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் எதிர்பாராத தருணமொன்றில் அவளே என்னைத் தேடிவந்தாள்...
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவினையொட்டி அவரது கட்சியினர் மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் நடைபெற்ற அந்தத் திருவிழாவிற்கு எங்கள் கல்லூரியின் சார்பில் நான் அனுப்பப்பட்டேன். பரிசுகள் வென்றேன்.
பரிசுகள் வென்று கல்லூரிக்குத் திரும்பியதும், அது ஓர் சுற்றறிக்கையாக அனைத்து வகுப்புகளுக்கும் அனுப்பப் பட்டது. அன்று மாலை நடைபெற்ற விழா ஒன்றில் நான் பெற்ற பரிசினை மீண்டும் எனக்களிக்க மேடையேற்றினார் கல்லூரி முதல்வர்...
தமிழக முதல்வர் அளித்த பரிசினை, கல்லூரி முதல்வரின் கரங்களால் பெற்றுத் திரும்பும் வழியில் மீண்டும் சந்தித்தேன் அப்பொன்விழிகளை...
முதல் சந்திப்பு நிகழ்ந்ததும் இது போன்றதொரு தருணத்தில்தான்... அச்சமயத்தில் என்னைக் கைது செய்த அவளது விழிகள் இன்றைக்கு ஏதோ ஒரு செய்தியை வைத்திருந்தது...
அவள் விழிகளின் ஓரத்தில் நீர்...
கண்ணீரே அவள் காதலை எனக்கு உணர்த்தியது...
கல்லூரியின் கரவொலிகள் என் செவிகளில் விழவில்லை.. அவளது மௌனம் எனக்குத் தெளிவாகக் கேட்டது...
அன்று நான் மீண்டும் பிறந்தேன்...
காதல் உலகம் எங்களை மீண்டும் கரம் நீட்டி அழைத்துக் கொண்டது...
காதல் வானம் நான் இழந்த சிறகுகளை மீண்டும் எனக்களித்து அவளைச் சுமந்து பறந்து வா என்றது...
காதல் மீண்டும் மலர்ந்தது....
என் பசலையும் நீங்கியது...
"காரணமேதுமின்றி என்னைத் தவிக்க விட்டது ஏன் தோழி?" வினவினேன்...
நீர் நிறைந்த கண்களுடன் என் காதலி பதிலுரைத்தாள்... என்னுடன் பயிலும் பெண்ணொருத்தியிடம் நான் காதல் கொண்டிருப்பதாக, என்னுடன் பயிலும் மற்றொரு பெண்ணுரைத்தாளாம்... நான் தற்செயலாக அவளிடம் பேசிக் கொண்டிருந்ததை இவளும் பார்த்தாளாம். நம்பினாளாம்... எனவேதான் என்னை விட்டு விலகினாளாம்... என்னை வெறுத்தாளாம்...
காரணங்களைச் சொல்லும் போது என் மடியில் முகம் புதைத்து அழுதாள்... "என்னை மன்னிப்பாயா?" என்று அவள் கேட்கும் முன்னரே என் மனது அச்சம்பவங்களை மறந்தே விட்டது...
காதலர்க்குப் பகை கர்வம்....
காதலை வாழ வைக்கும் தாரக மந்திரம் "மன்னிப்போம்! மறப்போம்!!" ..
"சரி பின்னர் என்னை எப்படி உணர்ந்தாய்?" இருந்த சந்தேகத்தைக் கேட்டேன்...
இதோ அவள் மொழி.....
"நான் வகை நுண்கணித நூலெடுக்க நூலகம் சென்றிருந்தேன்.. அந்த நூலகப் பணியாளர் என்னை வியப்புடன் பார்த்தார். "என்ன அண்ணா சேதி" என்றேன்... "நீ முன்னர் திருப்பிக் கொடுத்த புத்தகத்தை அவன் வாங்கிச் சென்றான். திருப்பித் தரவில்லை... புத்தகத்திற்கான அபராதம் செலுத்தினான்" என்றுரைத்தார்... உங்களுக்கு எதற்கு நான் பயன்படுத்திய நூல் என்று வியந்தேன்... நீங்கள் அறியாது உங்களைத் தொடர்ந்தேன்... கல்லூரி தோட்டத்தில் நீங்கள் தனியே அமர்ந்து அந்நூலுடன் பேசுவதைக் கண்டேன்.. மனமுடைந்தேன்... எட்டிப் பிடிக்கும் தொலைவில் எண்ணிலாப் பெண் தோழியர் உமக்கு.... ஆயினும் என்னை ஏன் சிந்திக்க வேண்டும்? இது ஓர் நடிப்பு என்று எண்ணிக் கொண்டேன்... மற்றொரு நாள் உங்களைக் காதலிக்கிறாள் என்று சொல்லப் பட்ட பெண் ஏற்கெனவே மணமானவள் என்றறிந்தேன்... அவளிடம் நேரடியாகவே கேட்டேன்.. அவளோ "போடி பைத்தியம்.. அன்றைக்கு நான் அவனிடம் வேறு ஏதோ கேட்டுக் கொண்டிருந்தேன்" என்றாள்... அன்றைக்கே என் மனம் மரித்துப் போனது.... இந்த வேளையில் நீங்கள் என்னைத் தேடி வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்... ஆனால் நீங்களோ என்னைத் தேடிவருவதை விடுத்தீர்கள்... எப்படி உங்கள் முகம் நோக்குவேன் என்று எண்ணி அழுது கொண்டிருந்தேன்... தொலைவில் உங்களைக் காணும்போதெல்லாம் உங்கள் கைகளில் தவழும் அந்த நூலே உங்கள் காதலை எனக்கு உணர்த்திக் கொண்டிருந்தது... ஆயினும் உங்களைக் கண்டு பேச அச்சம்... கோபத்தில் ஏதேனும் சொல்லி விடுவீர்களோ என்று அஞ்சினேன்.... ஆனால் தமிழக முதல்வர் நம் காதலை சேர்த்து வைத்தார்..."
இருவரும் நகைத்தோம்... அத்துன்ப நாட்களை மறந்தோம்... இன்பத்தில் திளைத்தோம்...
இனிமேல் எங்களுக்குள் ஊடலே வாராது அல்லவா??
எங்கள் காதலை மீட்டுத்தந்த ஆறுமுகனாருக்கும், ஐசக் ஐயாவுக்கும், அவர்கள் தந்த வகைநுண்கணித நூலுக்கும், பிறந்தநாள் கொண்டாடிய தமிழக முதல்வருக்கும் வாழ்த்துப் பாக்கள் பாடினேன்...
காமத்துப் பாலில், களவியல் முடிந்து கற்பியல் துவங்கும் காலம்.... அதைப் பற்றி....

வெள்ளி, ஜூன் 17, 2011

இரவின் மடியில்.......

4.
பசலை என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்த வேளையில் ஓர் நாள் அவளை எம் கல்லூரி நூலகத்தில் கண்டேன்..
தானெடுத்த நூலொன்றை திருப்பிக் கொண்டிருந்தாள். மறைந்திருந்து கவனித்தேன்...
அவள்தான் என்னிடம் பேச மறுக்கின்றாள்.. அவள் படித்த நூலாவது என்னிடம் பேசுமா? ஏக்கத்தோடு காத்திருந்தேன்..
நூலைக் கொடுத்து விட்டு அவள் சென்றாள்..
மெதுவாக நூலகப் பணியாளரை அணுகினேன்... "அண்ணா... அவள் திருப்பிக் கொடுத்த நூல் எனக்கு வேண்டுமே!!" வேண்டினேன்...
என்னை விநோதமாகப் பார்த்த அவர், சற்று யோசித்தார்.. பின் எனக்கு அந்தக் காதல் பரிசையளித்தார்...
அது ஓர் கணித நூல்...
நெல்லை நகரப் பேராசிரியர்கள் ஆறுமுகமும் ஐசக்கும் எழுதிய வகைநுண்கணிதத்தின் ஆங்கிலப் பதிப்பு...
ஏ நூலே! நீ எத்தனை பாக்கியம் செய்து விட்டாய் என் தேவதையின் கைகளில் தவழ்ந்திடவே...
இதோ இந்தப் பக்கங்களை அவள் கண்கள் பார்த்திருக்கும் அல்லவா?? பக்கங்களே உங்களுக்குக் கோடி முத்தங்கள் கொடுத்தாலும் தகுமா???
நூலின் அனைத்துப் பக்கங்களிலும் அவளது விழிகளைக் கண்டேன்...
இதோ இந்த தேற்றத்தை அவள் படித்திருப்பாள் அல்லவா???
தேற்றமே என்னைத் தேற்றேன்....!!!!
இதோ இந்த வரையறுத்தலை அவள் படித்திருப்பாள் அல்லவா??? இதோ இந்த நிரூபணத்தை அவள் படித்திருப்பாள் அல்லவா??? என்று அந்த நூலின் பக்கங்களில் திளைத்து மகிழ்ந்தேன்...
ஏற்கெனவே நாம் கற்றுணர்ந்த நூல்தான் ஆயினும், இந்நூல் என் தேவதையின் கரங்களில் தவழ்ந்து மீண்டதால் அது எனக்கு சொர்க்கத்தைக் காட்டியது...
"நண்பா உனக்குத்தான் எந்தப் பாடமும் நிலுவையில் இல்லையே.. பின்னர் ஏன் முதலாமாண்டு பாடநூலை சுமக்கின்றாய்?" வினவிய நண்பர்களுக்குப் புன்னகையைப் பரிசளித்தேன்...
அந்நூலை நான் ஆராய்ந்தேன்...
கணிதவியல் ஆராய்ச்சியல்ல...தடயவியல் ஆராய்ச்சி....
அந்நூலில் எங்கேனும் என் தேவதையின் தடங்கள் கிடைக்குமா என்ற ஆராய்ச்சி...
சில சமயங்களில் கணிதவியல் நூலில் குறிப்புகள் எடுப்போர் காகிதத்தை நூலின் மேல் வைத்து எழுதும் பழக்க்முண்டு...
அப்படி என் தேவதை இந்நூலின் மேல் வைத்து குறிப்பெடுத்திருந்தால் அவள் எழுத்தின் தடம் இந்நூலின் பக்கங்களின் மேல் விழுந்திருக்குமல்லவா என்ற ஆராய்ச்சி....
ஆயிரம் பெண்கள் சேர்ந்து வரும் வேளையில் அவள் காலடி ஓசையை மட்டும் தனியே கண்டுபிடித்துவிடும் எனக்கு இது அப்படி ஒன்றும் சிரமத்தைக் கொடுத்து விடவில்லை...
அந்நூலைப் படித்து ஆராய்ந்த கணித மேதைகளின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதோ இல்லையோ... என் ஆராய்ச்சி வெற்றி பெற்றது...
சில பக்கங்களில் அவளது கையெழுத்து நன்றாகப் பதிந்திருந்தது... அந்தப் பக்கங்களில் முத்தமிட்டேன்.. அவளையே முத்தமிடுவது போன்ற உணர்வு...
ஆனால் இது நூலகத்து புத்தகமல்லவா? திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணம் பாடாய்ப் படுத்தியது...
நூலகப் பணியாளரிடம் நூல் தொலைந்து போனதாகப் பொய்யுரைத்து அபராதம் செலுத்தினேன்...
இனி இந்நூல் எனக்கே எனக்கு... மகிழ்ச்சியில் கூத்தாடினேன்
தேவதையின் கைகள் தொட்டுப் புரட்டிய பக்கங்களைத் தொடும்போதெல்லாம் அவளின் மெல்லிய சிறு விரல்களைப் பற்றி நடப்பது போன்ற உணர்வு...
அவளைப் பற்றிய எண்ணங்களில் திளைத்து மகிழ்ந்தேன்...
அவளைத் தேடிச்சென்றால் புறக்கணிக்கின்றாள்.... எனவே அவளைத் தேடிச்செல்வதை விடுத்து, ஆறுமுகனாரும், ஐசக் ஐயாவும் தந்த வகைநுண்கணித நூலில் என் காதல் இன்பத்தை நுகர்ந்தேன்....
எந்த ஒரு காதல் காவியத்தைப் படித்தாலும் பெற்றிராத மகிழ்வினை இக்கணித நூல் எனக்குத் தந்தது....
பசலையின் பாதிப்பிலிருந்து சற்றே மீண்டுக் கொண்டிருந்தேன்...
தொலைந்த என் புன்னகைகள் மீண்டும் என்னைத் தேடி வந்தன....
ஊடல் அப்படியே தொடர்ந்து விடுமா என்ன???
தேவதை திரும்பி வரும் நாளும் வந்தது...
என்னால் சபிக்கப் பட்ட தேவர்களும் தேவதைகளும் தங்கள் சாப விமோசனத்துக்காக அவள் மனத்தை மாற்றினர் போலும்....
காதல் உலகத்தில் தேவதையோடு நான் மகிழ்ந்துறவாட வேண்டும் என்று காதல் உலகம் என்னை நோக்கி அழைத்தது... "எங்கள் மேல் நீ தந்த சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்... வா... நீயும் எங்கள் காதல் உலகத்தில் ஐக்கியமாகு..." காதல் உலகம் கோடி இன்பத்தை என்னைக் கொள்ளை கொள்ள அழைத்தது...
ஆம்....
நான் எதிர்பாராத தருணமொன்றில் அவளே என்னைத் தேடி வந்தாள்....
அந்த நாள்.....

வியாழன், ஜூன் 16, 2011

இரவின் மடியில்.......

3
காதலியலில் ஊடலியல் ஓர் அனுபவப் பாடம்... ஊடலில்லாத கூடலில் சுகம் இல்லை....
எங்கள் காதலியலில், ஊடல் பாடம் கற்பிக்கும் ஆசிரியையாக அவள்.... தண்டனை ஏற்கும் மாணவனாக நான்...
திடீரென்று ஒரு நாள்...
அவள் என்னைக் கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருந்தாள்....
இதென்ன கொடுமை...?
கன்னியின் கடைப்பார்வையும் கடையேன் மேல் விழவில்லை..
நேற்றுவரை அன்பாயிருந்தவள், திடீரென்று முகம் மாறிச்செல்வதன் காரணம் புரியவில்லை...
பேருந்தில் வைத்து யாரோ மூன்றாம் நபரைக் காணும் போது செல்வது போல் சென்றதைக் கண்டு எனக்கு மூக்கு வியர்த்தது...
கோபம் பொங்கி எழுந்தது...
காரணம் புரியாமல் தவித்தேன்...
அவள் வகுப்பறை சன்னலில் எப்போதும் என் முகம் தேடும் அவள் கண்கள், அன்றைக்கு நான் நின்றிருந்ததையே கவனிக்கவில்லை... (கவனித்தாளாம்... பின்னர் நாங்கள் சேர்ந்தபோதுதான் இதை அறிந்தேன்)
என்ன ஆயிற்று என் தோழி..??
காரணம் பகர்ந்தால் கவிஞன் தவற்றைத் திருத்திக் கொள்வானில்லையா??
காரணமில்லாமல் காதல் நழுவிச்செல்லும் சூழலில் காளையர் மனது திண்டாடுவதைக் கன்னியர் ஏன் புரிந்து கொள்வதில்லை...?
என்னிடம் நீ பேச வேண்டாம்...
என்னை ஒரு பார்வை பார்த்தாலே போதுமே!!!
உன் கடைவிழிப் பார்வையில் ஓர் முகிழ்நகை தந்தால் காலமெல்லாம் நிம்மதியடைவேனே நான்...!!!
எங்கெல்லாம் அவளைத் தொடர்ந்தேனோ, அங்கெல்லாம் அவமானத்தைச் சந்தித்தேன்...
காண்போரிடமெல்லாம் என் காதல் தோல்வியின் காரணம் புரியாமல் அழுது வடித்தேன்..
தேற்றுவதற்கு யாருமில்லை...
சரி அவளை நெருங்க முடியவில்லை... அவள் தோழியரை நெருங்கிக் காரணம் கேட்கலாம் என்று முடிவு செய்து, அவள் தோழியொருத்தியை நாடினேன்... "என் தங்கம் என்னைத் தவிக்கவிடுவதன் காரணம் சொல் தோழி!!" என் கெஞ்சல் அவள் முகத்தில் கவலையை வரவழைத்தது... "அறியேன் அண்ணா! என்னை மன்னியுங்கள்" சொல்லிவிட்டு ஓடிப்போனாள்...
அட... இவளுக்கும் தெரியவில்லை.... அவளின் மனது அவளன்றி யாரும் அறிந்திருக்கவில்லை...
காதல் உலகம் என்னால் சபிக்கப் பட்டது...
தேவர்கள் அனைவரும் என்னைத் தேடிவந்து சாபமேற்றனர்...
பூவுலகே நீ எரிந்து போ....
காதலியின் கண்களைக் காணாத வாழ்வு இருந்து என்? இல்லாது என்?
பட்டினத்தாரின் பாடல்களின் பொருள் அனுபவத்தோடு புரிந்தது....
ஆயினும் என்னால் அவளை வெறுக்க இயலவில்லை...
வகுப்பில் பேராசிரியர் உரைப்பது கேட்கவில்லை...
வீட்டில் பெற்றோர் உரைப்பதும் கேட்கவில்லை...
கற்பனையுலகில் அவளோடு சுற்றித் திரிந்த நாட்களை மட்டுமே எண்ணி நின்றேன்...
கேட்பதெல்லாம் அவள் குரலாக, காண்பதெல்லாம் அவள் முகமாக....
பசலை நோயின் பக்குவம் அறிந்தேன்...
வார்த்தை தவறி விட்ட கண்ணம்மாவைப் பாடிய பாரதியைச் சரணடைந்தேன்...
உலகமெலாம் இன்புற்றிருக்கும் வேளையில் பிரிவென்னும் நரகில் நான் மட்டும் துன்புறுவது என்ன நியாயம்?
"நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?" என்ற கானமே செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது...
காதலில் தோல்வியுற்ற மற்ற காளையரின் மனது புரிந்தது...
"அவள் வருவாளா?" பாடினேன்... வரவில்லை...
காரணமில்லாமல் காதலைத் தொலைத்தவன் அழுது புரண்டேன்...
கன்னியரின் கண்ணீர் காளையரைக் கரைக்குமென்பார்கள்...
காளையரின் கண்ணீர் கன்னியரைக் கரைக்குமோ??
இல்லவே இல்லை...
பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள்...
ஆனால் பெண்ணாணவளோ என்றும் இரங்குவதே இல்லை... பேரிடர் தரும் பசலையில் முற்றிய நிலை...
என் உடல் நலம் குன்றியது...
என் மனம் வாடி உழன்றது...
உயிரோ அவளைத் தேடி அலைந்தது...
நண்பர்கள் காரணம் கேட்டனர்...
சொல்ல மறுத்தேன்...
பேராசிரியர்கள் தனியே அழைத்துக் கேட்டனர்..
அப்போதும் மறுத்தேன்...
பெற்றோரும் துன்பத்தில் உழன்றனர்... காரணம் புரியாது தவித்தனர்...
அவள் மனத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை... என் மனத்தை யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை...
காதல் வானில் சிறகடித்துப் பறக்கும் அன்றில்கள் எனக்குப் பொறாமையை மூட்டின... என்னால் சபிக்கப் பட்டன...
இரவில் அவள் முகத்தை எனக்குக் காட்டிய நிலவு இந்த இரவுகளில் என்னை எரித்துக் கொண்டிருந்தது...
அவள் உடுத்தும் ஆடைகளாகத் தெரிந்த விண்மீன்கள் எல்லாம் என் கண்களைத் தைக்கும் ஊசிகளாகக் குத்தின...
அவளோடு நடைபயின்ற மரத்தின் நிழல் எனக்கு அனல்மேல் நடக்கும் உணர்வைத் தந்தது...
அன்றைக்கு ஒருநாள்...
நூலகத்தில் அவளைக் கண்டேன்...
தானெடுத்த நூலொன்றை அவள் திருப்பிக் கொண்டிருந்தாள்...
மறைந்திருந்து அவளைக் கவனித்தேன்..
அப்பொழுது......

செவ்வாய், ஜூன் 14, 2011

இரவின் மடியில்.......

2.
என்றைக்கும் இல்லாதத் திருநாளாக அன்றைக்கு எங்கள் இல்லத்துக் கருப்புத்
தொலைபேசி இனிமையான இசையை ஒலித்தது... இதென்ன விந்தை என்று வியந்தபடியே
எடுத்துக் காதில் வைத்தால் அந்தக் காதல் தேவதை..... அந்த கருப்புத்
தொலைபேசி அவளது அழகிய குரலைச் சுமந்து வந்தது. அன்று அது தானொலித்ததும்
இசையே.... சுமந்து வந்த குரலும் தேனிசையே...
"நான் உங்கள் குரலுக்கு ரசிகை" என்று சொன்னவளின் குரலுக்கு நான்
ரசிகனாகிப் போனேன்..
இந்த பூவுலகம் படைக்கப் பட்டது எங்களுக்காகத்தான் என்றும் நாங்கள் இருவர்
மட்டுமே இறைவனால் படைக்கப் பட்ட காதலர்கள் என்றும் பேசி மகிழ்ந்தோம்.
காதல் என்னும் பேருலகில் காலடி எடுத்து வைக்கும் கவிதைகளானோம்....
விண்ணும் மண்ணும் எங்களுக்காகவே.... எங்கள் காதல் மொழிகளைக்
கேட்பதற்காகவே காத்திருப்பதாகத் தோன்றியது....
அவள் மொழி கேட்டபின் என் தாய்மொழியில் நான் பிதற்றியவை எல்லாம் கவிதைகளாயின...
வள்ளுவனின் காமத்துப் பாலைத் தீண்டத்தகாது என்று ஒதுக்கி வைத்த நான்,
அவள் மூலம் அன்றைக்கு மூன்றாம் பாலின் சுவையுணர்ந்தேன்....
வானவியல் கற்றுத் தந்த பேராசிரியையால் தினமும் இரவில் வான் நோக்கி
கணக்குப் போடும் நண்பர்களுடன் அன்றைக்கு அமர்ந்திருந்தேன்... இன்றைக்கு
இந்த நட்சத்திரம் இந்தத் திசையில் தெரியும்... நிலவிலிருந்து இத்தனைத்
தொலைவில் கண்டால் குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் காணலாம்... வானவியல்
கற்கும் ஆவலோடு இரவில் மொட்டைமாடியில் வாசம்....
அன்றைக்கென்னவோ பேராசிரியை கற்றுத் தந்த வானவியல் மறந்தேன்....
எனக்கென்னவோ நிலவு அவள் முகத்தைப் பிரதிபலித்தது.... எந்த ஒளியியலும்
கற்றுத்தராத புதிய பாடம் இது....
விண்மீன்களெல்லாம் அவள் உடுத்தியிருந்த ஆடையின்மேல் தீட்டப்பட்ட வண்ண
ஓவியங்களாகத் தெரிந்தன...
வானவியலுக்கும், ஒளியியலுக்கும் அப்பாற்பட்ட காதலியல் இது...
பார்க்குமிடங்களிலெல்லாம் அவளது தோற்றத்தையே கண்ட எனது கண்கள் தன்
பார்வைத்திறனை இழந்து விடவில்லை...
வாரம் ஒருமுறை தொலைபேசியில் பேச்சு....
தினமும் கல்லூரியில் கண்களால் பேச்சு....
அவள் செல்லும் வழியில் நின்று நோக்குவேன் யான்... என்னைக் கண்டதும் அவள்
முகத்தில் தோன்றும் குதூகலத்தைக் காண்பதற்காகவே.......
சிறுமுறுவல்.... பெருங்கவிதை அது....
விழிகளின் மொழிகளோ புதுக்கவிதை.....
நாட்கள் சென்றன....
காதல் வளர்ந்தது....
கவிதைகள் புதிது புதிதாய் பிறந்தன....
அவளின் வண்ணச்சீறடிகளைப் பற்றித் தாங்கும் மண்மகளைப் பாடினேன்....
அவளின் வண்ணக் கூந்தலை அழகு செய்யும் பூக்களைப் பாடினேன்....
அவளின்அழகுக் கரங்கள் அருமையாய் சுமக்கும் புத்தகங்களைப் பாடினேன்....
என்னோடு வந்தாள்...
எனக்காகவே வந்தாள்....
"வாழ்க்கை ஓடத்தில் பயணிக்க நீங்கள்தான் மாலுமி... நான் மட்டுமே பயணி..."
என்றாள்...
ஊடலே இல்லாத கூடலா???
எங்கள் காதலியலில் ஊடல் பாடம் கற்கும் வேளை வந்தது....

திங்கள், ஜூன் 13, 2011

இரவின் மடியில்.......

இரவு நீண்டு வெளிச்சத்தை முற்றும் இழந்து விட்டிருந்தாள் பூமித்தாய்...
இரவே உன் மடியில் நான் படுத்துறங்கும் வேளையில் மட்டும் அந்த நினைவுகள்
மீண்டும் முளைத்தெழுகின்றனவே.... உலகெங்கும் உல்லாசத்தைக் கொடுக்கும்
இரவுகள் எனக்கு மட்டும் வேதனையை அள்ளித் தரும் கொடுமையை
என்னவென்றுரைப்பது....
பூமாதா நீ வெளிச்சத்தை இழந்தாய்.... நான் நிம்மதி இழந்தேன்... உறக்கத்தை
இழந்தேன்....
பகலில் வெளிப்படாத அந்த நினைவுகள் உலகம் உறங்கும் இந்த இரவுகளில் மட்டும்
வெளிப்பட்டு என்னை வஞ்சிப்பதன் காரணம்???
நினைவுகளை சற்றே பின்னோக்கி நகர்த்தினேன் என் காதல் காலத்தைக் காண....
விளையாட்டுப் பருவம் அது...
வேடிக்கையே பொழுதாய் கழியும் தருணங்கள்....
பள்ளிக்குச் செல்லும்போது உடன் வரும் கல்லூரி அண்ணன்மார்கள், உடன்
பயிலும் பெண்களைப் பற்றி விசாரிக்கும் போது கேவலமாய் அவர்களைப் பார்த்த
காலமது...
ஆங்காங்கே நின்று கண்களாலேயே கடலை போடும் மாமேதைகளின் தனி உலகத்தைப்
பற்றி வியந்த நேரமது....
நாம் என்றைக்கும் இந்த பெண்களின் கண்வலைகளில் சிக்கி விடக்கூடாது
என்பதில் உறுதியாய் இருந்தது மனது.... (நம்மை எவள் ஏறெடுத்துப் பார்க்கப்
போகிறாள் என்ற எண்ணமும்...)
இந்த இதயத்தை உடைப்பதற்கும் புறப்பட்டு வந்தன இரு விழிகள்...
பள்ளி முடிந்து கல்லூரிப்பருவம்...
கலைகளின் திருவிழா....
கலைகளை ஊக்குவிக்கும் திறமைகள் திருவிழா....
கலைப்போட்டிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன....
ஓவியப்போட்டிக்கு நாம் கிறுக்கியிருந்த ஓர் ஓவியம் பரிசுக்குரியதாய் ஆனது
ஆச்சரியம்...
சொற்பொழிவுப் போட்டி.....
அனைத்துத் தரப்பினரும் தங்கள் சொற்பொழிவைப் பொழிய, நம்மை அழைத்தபோது மேடை
ஏறினேன்... என்னை மறந்தேன்... கொடுத்த தலைப்பு "வல்லரசை உருவாக்குவதில்
இளைஞர்களின் பங்களிப்பு"
"ஊழலை ஒழிப்பதில்தான் வல்லரசின் அடித்தளம்... ஊழலை ஒழிப்பதற்கு இளைஞர்கள்
முன்வந்தால் வல்லரசை உருவாக்கி விடலாம்" என்ற சாராம்சத்தில் மொழிந்தேன்..
வெடித்தேன்....
உரையை முடித்த போது அரங்கம் அதிர்ந்தது... கரவொலிகள் ஒலித்தன... மேடையை
விட்டு இறங்கி எனது இருக்கைக்கு வரும் வழியில்தான் சந்தித்தேன் அந்த
இருவிழிகளை.... என்னைக் கொன்ற அந்த அம்புகளை.....
இதென்ன.......
எனக்குள் ஓர் மாற்றம்....
எனது விழிகளும் என்னையறியாது இடப்பக்கம் திரும்பி அவளைத் தேடின....
அவள் யார் அறியேன்... அவள் பேரென்ன அறியேன்.... ஆயினும் இவள் ஏன் என்னை
ஈர்க்கிறாள்... ? அதுவும் அறியேன்....
அவளும் நம்மை நோக்கிட விழியின் மொழிகள் புரிந்ததில், எனது மொழிகளை நான்
மறந்து போனேன்...
சற்று நேரத்திற்கெல்லாம் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப் பட்டன....
சிறுகதை, கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில்
பரிசுக்குத் தேர்வானோர் பட்டியலில் எனது பெயர் வாசிக்கப் பட, அவள் மிக
உற்சாகமாய் கரங்களைத் தட்டினாள்....
அரங்கத்தோரில் அத்தனைக் கரவொலிகளின் மத்தியிலும் அவளது கரங்களிலிருந்து
எழுந்த ஒலிகள் தனியாக என் செவிகளில் வந்து விழுந்தன....
கண்களாலேயே வாழ்த்து சொன்னாள்.... அந்த கவிதையின் பொருளும் புரிந்தது....
என்னை மறந்து நின்றேன்...
இதயத்தை உடைத்த இரும்பு விழிகளை, அவளது இனிக்கும் விழியின் மொழிகளை
அறிந்த மனது அவளையே பார்த்துக் கொண்டிருக்கத் துடித்தது.....
விழா முடிந்தது....
அவள் சென்று விட்டாள்....
இனி அவளை எங்கே காண்பது?
காதலிக்கும் தோழர்களின் மனத்தவிப்பு அன்றுதான் புரிந்தது...
நானும் அவளும் ஒரே கல்லூரியானாலும், காணும் பெண்டிரில் அவளை எப்படிக்
கண்டுபிடிப்பது??
சிரமமான காரியமல்லவா??
பூவையரைத் தேடிச்செல்லும் காளையரைக் கிண்டலடித்த மனது இன்று ஒரு
பூவைக்காகத் தவித்தது....
தவித்த மனதின் தாகத்தையும் அவளே தீர்த்தாள்..
நோயுமானாள் நோய்க்கு மருந்துமானாள் என்னும் பொருளில் வள்ளுவன் பாடிய
குறளுக்கு இலக்கணமானாள்... என் குரலுக்கு ரசிகையானாள்..
பசலை என்னைப் பற்றுதற்கு முன்னர், அவளது அழைப்பு வந்தது எங்கள்
இல்லத்துத் தொலைபேசிக்கு..

அன்பே வா அருகிலே...(6)

கதைக்குள் நுழைவதற்கு முன்னால்....
நண்பர்களே... கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு அலுவலகத்தில் வேலைப்பளு
மிகுதியால் இணையப் பக்கம் வருவதற்கு இயலவில்லை... தாமதமாக அடுத்த
அத்தியாயத்தைத் தந்தற்கு அனைவரும் மன்னிக்க....
தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தாருங்கள்... இதற்கு முன்னரும் தொடராமல்
விட்டிருந்த இழைகளையும் அன்னையின் பேரருளுடன் தொடர்கின்றேன்.....
இனி கதையைத் தொடரலாம்...

அத்தியாயம் 6

பதற்றத்துடன் ஓடி வந்த அவனை ஏறெடுத்துப் பார்த்த மலையாண்டி, "என்னலே...
என்னாச்சி?" என்று வினவினார்.
"அங்க... நம்மூர்ல... "
"சொல்லுல..."
"ஆத்துல ரெண்டு முண்டம் கெடக்கு"
"என்ன?" வியப்புடன் எழுந்தார் மலையாண்டி...
"யோவ் ஏட்டு போய் ஜீப்ப ரெடி பண்ணு.. போய்ட்டு வந்துருவோம்.. ஏம்மா
நீயும் வாறியா?" என்று அகல்யாவைக் கேட்டார்.. அவளும் "சரிங்க சார்.
நானும் வர்றேன்" என்று ஒத்துக் கொண்டாள்.
காவல்துறை வாகனத்தில் அனைவரும் கரையடி நல்லூரை நோக்கிப் புறப்பட்டனர்..
அங்கே...
மணிமுத்தாற்றில் தலையற்ற இரண்டு உடல்கள் மிதந்து கொண்டிருந்தன... ஆற்றின்
பிரவாகம் குறைவாக இருந்ததாலும்,  அல்லிக் கொடிகள் மிகுதியாக
இருந்ததாலும், அல்லிக் கொடிகளில் சிக்கிக் கொண்டிருந்தன அந்த உடல்கள்...
கரையடியில் நின்று கொண்டிருந்த தலையாரியும் கிராம்சும் மலையாண்டியை
சோகமாக எதிர் கொண்டனர்..
"பாத்தீங்களா ஐயா நம்மூர்ல இப்பிடில்லாம் நடக்க ஆரம்பிச்சிட்டு... மொதல்ல
வெட்டுப்பட்ட ஒரு தல அங்கன கெடந்துச்சி.. இவ்ளோ நாள் கழிச்சி இன்னிக்கு
ரெண்டு முண்டம் நம்ம ஆத்துல மெதக்கு. என்னதான் நடக்கோ" தலையாரி
சோகப்பாட்டு பாட அவருக்குப் பதில் சொல்லாமல் ஆற்றினை நோக்கி நடந்தார்...
"யோவ் ஏட்டு... அந்த ரெண்டு பிரேதங்களையும் எடுத்து வெளிய போடச்சொல்லு...
அந்த சக்கிளியன்வ வந்துருக்கான்வல்லா... இங்கெயே அறுத்துப் போடச்சொல்லு..
பாடி டீகம்போஸ் ஆயிருக்கும்..." உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே
எஸ்.பிக்கும் தகவல் தந்தார்.
இதற்குள் ஊரின் துப்புரவுப் பணியாளர்கள் வந்து தலையற்ற அந்த இரு
உடல்களையும் எடுத்துக் கரையில் போட்டனர்..
வீச்சமடித்தது.
அனைவரும் மூக்கைப் பொத்திக் கொண்டனர்..
காவலர்கள் அங்கு கூடியிருந்த பொது மக்களை விரட்டிக் கொண்டிருந்தன்ர்.
இதற்குள் அரசு மருத்துவரும், மருத்துவப் பணியாளர்களும் வந்து விட அந்த
இடம் திரைகளால் சூழப்பட்டது.
....
அந்த இடத்திலிருந்து வரும் வாடை குமட்டிக் கொண்டு வந்தது தலையாரிக்கு...
"ஐயா கொஞ்சம் பாத்துக் கிடுங்க... நான் வீடு வரைக்கும் போய்ட்டு வாறேன்"
என்று கிராம்சிடம் சொல்லியபடி நகர்ந்தார்.
மலையாண்டி அந்த இடத்தைச் சுற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார்..
திடீரென நினைவுக்கு வந்தவராய், "ஏம்மா அகல்யா இங்க வா" என்று அந்த
சென்னைப் பெண்ணை அழைத்தார்.
"சொல்லுங்க சார்"
"ஒங்க கைடுன்னு சொன்னால்லா... அந்தாளு பேரு என்ன? அவரு அட்ரசக் கொடு. "
"சார் அவர் பேரு மணிமாறன். எங்க காலேஜுல அவர் வேலை பாத்திட்டிருந்தார்.
இப்போ என்ன பண்றாருன்னு தெரியாது."
"சரி.. நான் வெசாரிக்கச் சொல்றேன்" என்று சொல்லியபடி கட்டுப்பாட்டு
அறைக்குத் தகவல் அனுப்பினார்.

இதற்குள் பிரேதப் பரிசோதனை முடிந்து மருத்துவர் வெளியே வந்தார்..
மலையாண்டி அவரை நெருங்கினார்..
"வணக்கம் டாக்டரம்மா"
"வணக்கம் சார். சொல்லுங்க..."
"ரிப்போட் என்ன சொல்லுது"
"என் கணிப்புப்படி சாவு நடந்து ஒரு மாசத்துக்கும் மேல இருக்கும்... மத்த
படி அந்த தலைக்குரிய உடம்பு எதுன்னு லேப் ரிப்போர்ட் வந்த பின்னாடிதான்
தெரியும்.. பார்க்கலாம். வேற பிரேதமாவும் இருக்கலாம்... சரி நான்
வாறேன்." என்று சொல்லியபடி நகர்ந்தார்.

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஒரு கேஸ். முதலில் வெட்டுப்பட்ட ஒரு
தலை... கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அழுகிய நிலையில் இரு உடல்கள....
அது யாரென்றும் தெரியவில்லை... அந்த ஊரிலிருந்து யாரும் காணாமலும்
போகவில்லை... பிறகெப்படி....?
சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஆறுமுகத்தைக் காணவில்லை என்றொரு தகவல்
கிடைத்திருந்தது... ஆனால் அவனுக்கோ குடும்பம் இல்லாததால் ஊரில் யாரும்
அதைப் பற்றிக் கவலைப் படவில்லை... மேலும் அவன் காணாமல் போன பிறகு சாராயம்
காய்ச்சுவது நின்று போன மகிழ்ச்சி ஊர் மக்களுக்கு...
ஒருவேளை அவனுடைய உடல்தானோ?? அப்படின்னா தலை எங்கே போனது?? கேள்விகள்
தலையைக் குடைந்தன...
இதற்குள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வந்தது.. சட்டக் கல்லூரிப்
பேராசிரியர் மணிமாறன் சென்னையில் இல்லை என்றும், அவர் கேரளாவில் உள்ள ஓர்
வெளிநாட்டுக் கம்பெனிக்கு சட்ட ஆலோசகராக பணியில் சேர்ந்து விட்டதாகவும்
தகவல். கேரள போலிசாருக்குத் தகவல் அனுப்பியிருந்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் அந்த உடல்களை அருகிலிருந்த
இடுகாட்டிலேயே அடக்கம் செய்ய உத்தரவிட்டார். "அகல்யா... நீ மட்டும்
தனியாவா வந்துருக்கே.? நீ எங்க தங்குவா?" என்று அகல்யாவிடம் கேட்டார்
மலையாண்டி..
"இந்த கிராமத்துலேயே தங்கி விசாரிக்கலாம் இல்லியா? இங்க யார்
வீட்டிலயாவது சொல்லி விடுங்களேன்" என்று அவரிடம் கெஞ்சினாள்.
"சரி.. தலையாரிகிட்ட சொல்லிருதேன். அவர் வீட்டிலேயே தங்கிக்க.." என்று
சொல்லிவிட்டு கிராம்சிடம் விசயத்தைச் சொன்னார். அவரும் அகல்யாவை
அழைத்துப் போனார்.
"பத்திரமா இரும்மா" என்று அவளிடம் சொல்லியபடி தன் வாகனத்தை நோக்கிப் போனார்..
ஜீப் புறப்ப்பட்டு விட்டது...
கிராம்ஸ் அகல்யாவை தலையாரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
தலையாரியின் மகளுக்கு அகல்யாவைப் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது..
"எக்கா உங்க பேரன்ன?"
"ம்.. அகல்யா.. உம்பேரன்ன?"
"எம்பேரு வடிவம்மா..."
"சரி நீ என்ன படிக்கறே?"
"எட்டாப்பு படிக்கேன்" அவர்கள் உரையாடலை ரசித்தபடி அங்கிருந்து அகன்றார்
கிராம்ஸ்...
"சரி நாளைக்குக் காலையில் இந்த ஊருக்குள் சென்று இதைப்பற்றி ஆராயலாம்."
என்று எண்ணியபடியே உறங்குவதற்குத் தயாரானாள் அகல்யா...
வீட்டின் தார்சாவில் தலையாரி படுத்துக்கொள்ள உள்ளறையில் அவரது மனைவியும்,
மகளும், அகல்யாவும் படுத்துக் கொண்டனர்...
பயணக்களைப்பால் படுத்ததும் உறங்கிப் போனாள்...
நடுநிசி...
திடீரென ஏதோ சத்தம் கேட்டு விழித்தாள் அகல்யா...
சலங்கைச் சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது...
குதிரையின் காலடி சத்தமும் கேட்டது...
"இதென்ன சத்தம். யார் இரவு நேரத்தில் குதிரையில் போவது?" என்று
எண்ணியபடியே படுக்கையிலிருந்து எழுந்தாள் அகல்யா..
மற்றவர்களின் உறக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக அடியெடுத்து
வைத்து வெளியே வந்தாள்... தார்சாவில் தன்னை மறந்து உறங்கிக்
கொண்டிருந்தார் தலையாரி..
ஓசைப்படாமல் நகர்ந்து கதவின் தாழ்ப்பாளை விலக்கிய நொடி.....

(தொடரும்)

திங்கள், மார்ச் 28, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

காட்டழகிய சிங்கபெருமாளின் ஆசியைப் பெற்று விட்டு ஆலயத்தை விட்டு வெளியே
வந்தோம். அங்கிருந்து பேருந்தில் உறையூர் புறப்பட்டுச் சென்றோம். முதல்
நாள் திருவரங்கத்தானை ரங்கநாயகி நாச்சியார் உள்ளே விட மறுத்த காரணம் அவன்
இந்த உறையூர் வந்து தாமதமாக சென்றதால்தான்... உறையூர் நம் சோழர்களின்
தலைநகரமாக விளங்கியது அல்லவா? நரைதரித்து உரைசொன்ன கரிகால சோழனின்
தலைநகரமும் இந்த உறையூர் அல்லவா? (சோழர்களின் அரண்மனை இங்கு
காணக்கிடைக்கின்றதா? நாங்கள் ஆலயத்தைத் தரிசித்து விட்டு தொடர் வண்டி
நிலையத்துக்கு உடனே சென்று விட்டதால், இதைப் பற்றி யாரிடமும் கேட்க
இயலவில்லை)

ஆலயத்தைப் பற்றி நண்பன் விஜயராகவன் சொன்ன வரலாறு. சோழ மன்னனின் மகள்
கமலவல்லி நாச்சியார் திருவரங்கத்தான் மீது காதல் கொண்டாள். அவனை
அடைவதற்குரிய விரதங்களை மேற்கொண்டாள். எனவே திருவரங்கத்தான் தானே
எழுந்தருளி கமலவல்லித் தாயாரை மணமுடித்தான். வருடத்திற்கொருமுறை இந்த
பங்குனி உத்திரத்திருவிழாவின் போது திருவரங்கத்தான் அங்கிருந்து இங்கு
வந்து கமலவல்லித் தாயாருடன் இணைந்து பக்தர்களுக்கருள்கின்றான். இங்கு
எழுந்தருளி இருக்கையில் நம்பெருமாளுக்கு திருவரங்கத்து பங்குனி உத்திரத்
திருவிழா நினைவுக்கு வருகின்றது.. எனவே இங்கிருந்து புறப்பட்டுச்
செல்கின்றான். ஆனால் ரங்கநாயகி நாச்சியார் ஊடல் கொள்கின்றாள்.. இதைத்தான்
நாம் நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோமே...

இதனை விஜயராகவன் சொல்லிக் கொண்டிருக்கையில், நண்பன் விக்ரம் பாபு "பாரு
நாகராஜ். இந்தாளு போற இடத்துல எல்லாம் ஒரு பொண்டாட்டி கட்டிட்டிருந்தா,
அந்த அம்மாவுக்கு கோபம் வராம என்ன செய்யும்" என்றான். நகைத்தோம்.
அப்போது இன்னொரு செய்தியும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. நம் திருவரங்கத்து
பெருமாளை முஸ்லீம் அரசர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அந்த
முஸ்லீம் மன்னனின் மகளும் திருவரங்கத்தான் மீது காதல் கொண்டாள். அவளையும்
மணந்தான். அவளையே "துலுக்க நாச்சியார்" என்று அழைக்கின்றார்கள்..

இதற்குள் ஆலயம் வந்து விட்டது. மூட்டைமுடிச்சுகளை  பத்திரமாக வைத்து
விட்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்தோம். கொடிமரத்தை வணங்கி விட்டு இடப்புறமாக
உள்ளே சென்றால், நம்மாழ்வார் சன்னதி... "உங்க ஊர்க்காரர்தாம்பா..
பாத்துக்கோ" என்று விஜயராகவன் நகைத்தான். ஆழ்வார்களில் நம்மாழ்வாருக்குத்
தனி இடம்.. அத்தனை ஆழ்வார்களும் ஊர் ஊராகத் தேடிச்சென்று பாடினார்கள்..
ஆனால் எல்லா ஊரின் பெருமாள்களும் நம்மாழ்வாரைத் தேடிச்சென்று பாடல்
பெற்றார்கள்.. நம் ஊருக்கு மிக அருகிலேயே இவரது திருத்தலம் இருந்தும்,
விஜயராகவன் அழைத்துச் செல்லும் வரை அந்த பகுதிகளையெல்லாம் தரிசிக்காமல்
இருந்தது நான் செய்த பிழை என்று நொந்து கொண்டேன்.

நமது தாமிரபரணிக்கும் பெருமை இருக்கின்றது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத்
தொகுத்த நாதமுனிகள் தாமிரபரணிக் கரையில் தவமிருந்துதான் நம்மாழ்வாரின்
தரிசனம் பெற்றார். நம்மாழ்வார் மூலமாகத்தான் நாலாயிரம் பாடல்களும்
மீண்டும் கிடைக்கப் பெற்றன..

நம்மாழ்வார் சன்னதி சென்றோம். சுவற்றில் அழகிய படங்கள்
வரையப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிலரின் பெயர்களும் அவர்களின் காதலர்களின்
பெயர்களும் கிறுக்கப்பட்டிருந்தது வேதனை அளித்தது.. படங்களை விஜயராகவன்
புகைப்படம் எடுத்தபோது தடுக்கப் பட்டான். தடுத்தவர் சென்ற பின் "நான்
போட்டோ எடுக்குறப்போ வந்து தடுக்கறான்.. இந்த மாதிரி
கிறுக்கிட்டிருந்தப்போ என்ன பண்ணிட்டிருந்தானாம்?" என்று ஆவேசப்பட்டான்
விஜயராகவன்....

நம்மாழ்வாரை வணங்கி விடைபெற்றோம். அடுத்ததாக திருப்பாணாழ்வார் சன்னதி
இருந்தது. திருப்பாணாழ்வார் பற்றி விஜய் ஆனந்த் சொல்ல ஆரம்பித்தார்.
"நாகராஜ் பாருங்கோ. இவர் பிராமணாள் இல்ல... ஆனாலும் ஸ்ரீரங்கன் மீது அளவு
கடந்த பக்தி வச்சிருந்தார். " என்று திருப்பாணாழ்வார் பற்றி உரைத்தார்.
திருப்பாணாழ்வார் தன்னோட கால் ஸ்ரீரங்கம் மண் மேல பட்டுவிடக்கூடாது
என்பதற்காக காவேரியின் இக்கரையில் நின்றே வணங்குவார். திருவரங்கனுக்கு
பூஜை செய்யும் ஒரு பட்டர் காவேரியில் நீர் எடுத்துக் கொண்டு செல்கையில்
திருப்பாணாழ்வார் மனமுருகி பாடிக் கொண்டிருந்தார். அவரை நகர்ந்து
செல்லுமாறு இவர் சொல்ல, பக்திப் பரவசத்தில் மூழ்கியிருந்த
திருப்பாணாழ்வாருக்கு இவர் உரைத்தது கேட்கவில்லை. எனவே அவர் நகரவில்லை.
எனவே ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார் பட்டர். அவரது
நெற்றியிலிருந்து இரத்தம் பொங்கியது. சுயநினைவுக்கு வந்த
திருப்பாணாழ்வார் வருந்தி வழிவிட்டார்..

தன் பக்தனைக் கல்லால் அடித்தவன் தனக்கு அமுது செய்ய வந்தால் அதைக் கட்டு
நம் திருவரங்கத்தான் பொறுப்பானா? ஆலயம் சென்ற பட்டருக்கு அதிர்ச்சி
காத்திருந்தது. அங்கே திருவரங்கத்தானின் நெற்றியிலிருந்தும் இரத்தம்
வழிந்து கொண்டிருந்தது.. கண்ணன் ஆவேசமாய் இன்னொரு அந்தணர் மேல்
இறங்கினான். தன் பக்தன் திருப்பாணாழ்வாரைக் கொண்டு வந்தால்தான் துளசி
தீர்த்தமாவது உட்கொள்வேன் என்றுரைத்தான்.. கல்லால் அடித்த பட்டர்
ஓடினார்... திருப்பாணாழ்வாரை அழைத்த போது அவரோ "எனது கால்கள்
திருவரங்கத்து மண்ணில் படலாமா? நான் சூத்திரனாயிற்றே எனப் புலம்ப, அவரைத்
தன் தோள் மீது இருத்தி சுமந்து வந்தாராம் பட்டர்... திருப்பாணாழ்வார்
தரிசனம் செய்த பின்னரே திருவமுது உண்டானாம் திருவரங்கத்தான்... என்னே
உனது எளிமை கண்ணா... எளியோர்க்கு எளியோனாய் இரங்குகின்றாய்...எளியோரின்
பக்திப் பெருமையை உலகறியச் செய்கின்றாய்... எங்கள் திருவரங்கத்தம்மாவே
உன் கருணையே கருணை....

திருப்பாணாழ்வாரை வணங்கி வெளி வந்த போது மூலவர் சன்னதி இன்னமும்
திறந்திருக்க வில்லை.. எனவே தெப்பக்குளத்தருகே காத்திருந்தோம்.
இச்சமயத்தில் விஜயராகவனும், விஜய் ஆனந்தும் தங்கள் சந்தியாவந்தனத்தை அந்த
தெப்பத்திலேயே செய்தனர். நாங்கள் குழந்தையுடன் விளையாடிக்
கொண்டிருந்தோம். அவர்கள் சந்தியாவந்தனம் செய்து முடித்து வந்தார்கள்..
சற்று நேரத்துக்கெல்லாம் நடை திறக்கப் பட்டு விட்டது.

மூலவர் சன்னதிக்குள் நுழைந்தோம். ஆஹா... என்ன ஒரு அழகு... இவர் அழகைக்
கண்டுதான் இவருக்கு அழகிய மணவாளர் என்று பெயரிட்டார்களோ? நின்ற
திருக்கோலத்தில் அழகிய மணவாளரும், நின்ற திருக்கோலத்தில் கமலவல்லித்
தாயாரும்... இருவரும் நின்று திருக்கோலம் காண்பிப்பதை இப்போதுதான்
முதன்முறையாகக் காண்கின்றேன்.. பக்தியில் மெய்மறந்து கை கூப்பி வணங்கி
நின்றோம். அழகிய மணவாளனே, கமலவல்லித் தாயாரே எங்கள் வாழ்க்கையையும் எந்த
இடரும் வராமல் காத்தருள வேண்டும் என்று வேண்டி விடைபெற்றோம். அப்படியே
பிரகாரம் சுற்றி வந்து சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறினோம்.. மீண்டும்
ஒருமுறை நம்மாழ்வார் சன்னதி சென்று வணங்கி விடைபெற்றோம்.

உறையூர் கமலவல்லித் தாயார், அழகிய மணவாளரைத் தரிசத்தமையுடன் எங்கள்
திருவரங்கச்செலவு நிறைவு பெற்றது. அங்கிருந்து புறப்பட்டு
திருச்சிராப்பள்ளி தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தோம்..கதைகள் பேசிக்
கொண்டு தொடர்வண்டிக்காகக் காத்திருந்தோம்...

நண்பன் விஜயராகவன் கேட்டான்.. "என்ன நாகராஜன்.. திருப்திதானே..? ஒரு
குறையுமில்லையே...?"

என்னதான் பதில் சொல்வது... ? யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு?
யாருக்குக் கிடைத்திருக்கும் இப்படி ஒரு நட்பு? தாம் அறிந்தவற்றை
அறியாதோருக்கும் பகிர்பவனே அந்தணன் என்று கற்றோம்.. ஆனால் வெளி உலகில்
நாம் கண்ட அந்தணர்களுள் அப்படிப்பட்டவர்களைக் கண்டதே இல்லை.... வெகு
சிலரைத் தவிர.. ஆனால் என் நண்பனோ..... நான் கண்ட அந்தணர்களில் உயர்ந்து
நின்றான்... திருமால் பக்திக்கு என் மனத்தில் அடித்தளம் இட்டதும் அவனே...
எங்கள் ஊருக்கு அருகிலுள்ள நவதிருப்பதி திவ்யதேசங்களுக்கு என்னை
அழைத்துச் சென்றதும் அவனே... இப்படிப்பட்ட நண்பன், எனக்காகத் தன் படிப்பு
வேலைகளையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு திருவரங்கம் வந்து
திவ்யதேசங்களைக் காட்டி விட்டு என்ன குறையுளது என்று கேட்டால் என்ன
இயம்புவது???

என் மனத்தில் எழுந்த ஒற்றை வரியை உதிர்த்தேன்... "உலகுக்கு இராமானுஜன்..
எனக்கு விஜயராகவன்..."

தடுத்தான்... "என்னைப் போய்  அவரோடல்லாம் ஒப்பிடலாமா?? அவர் தகுதிக்கு
முன்னாடி நானெல்லாம் எதுவுமே இல்ல..." என்று அவன் மறுத்தாலும், நான்
சமுதாயப் புரட்சி செய்த அந்த இராமானுசனை என் நண்பனுள் கண்டு களித்தேன்...
தனக்குக் குரு உபதேசித்தவற்றைத் தான் நரகுக்குப் போனாலும் பரவாயில்லை
என்று உலகத்து மாந்தருக்கு உரைத்த இராமானுசனாகத்தான் விஜயராகவன்
தென்பட்டான்.... அவனுக்கு இந்த ஒற்றை வார்த்தைகளை விடுத்து இந்த
ஏழைக்கவியால் என்னதான் செய்திட இயலும்??? கோடானு கோடி ஜென்மங்கள் எடுத்து
தீர்த்தாலும், அவன் செய்த உதவிக்கு நன்றி பகர்ந்திட இயலுமா??

வார்த்தைகள் வர மறுக்கின்றன... நன்றி என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லி என்
நட்பினை சமாதானம் செய்திட இயலுமோ?? அந்த பள்ளி கொண்டானை... எங்கள்
திருவரங்கத்தம்மானை... ஏழையின் கவிகட்கிரங்கியவனை.... எங்கள் நண்பர்கள்
நலமுடன் வாழப் பிரார்த்தித்து விடை பெற்றோம்.. தொடர் வண்டி வந்தது... ஏறி
அமர்ந்தோம்......... பிரியா விடை பெற்றோம்....

நாராயணனை... நம்பினோர்க்கும், நல்லோர்க்கும் அருள் புரியும் உத்தமனை...
அண்டமெல்லாம் காக்கும் அரங்கனை... எங்கள் பெருமானை.... கூடாரை வெல்லும்
கோவிந்தனை.... வங்கக் கடல் கடைந்த மாதவனை... கேளிக்கைகள் செய்து
மகிழ்விக்கும் கேசவனை... செந்தமிழ்ப்பாசுரங்கள் போற்றும் செந்தாமரைக்
கண்ணனை... உலகத்தோர் அனைவருக்கும் நன்மை புரிய வேண்டி தங்களிடமிருந்தும்
விடைபெறுகின்றோம்...

பொறுமையாக படித்து மகிழ்ந்த அன்பர்களுக்கு நன்றி....
நமோ நாராயணாய... நமோ நாராயணாய... நமோ நாராயணாய....

சனி, மார்ச் 26, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

நண்பர்கள் வந்தார்கள். தாங்கள் சென்ற திருத்தலங்களின் பெருமைகளைக் கூற
ஆரம்பித்தார்கள். திருஅன்பில் திவ்ய தேசத்தில் அபிஷேகமும் காணப் பெற்ற
பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. கரிகால சோழன் கட்டிய
கல்லணையைக் கண்டு புகைப்படம் எடுத்து வந்திருந்தார்கள். கண்டு
மகிழ்ந்தோம். கோவிலடி அப்பாலரங்கனையும், திருஅன்பில் சுந்தர ராஜனையும்
காணும் பேறு எங்களுக்கு வாய்க்கவில்லையே என்று எண்ணிக் கவலையுற்றோம்.
ஆயினும் எங்கள் நண்பர்கள் எங்களுக்காகவும் வேண்டி வந்த மகிழ்ச்சி...
நண்பர்கள் சற்று இளைப்பாறினார்கள்.

மாலை நான்கு மணிக்கு அறையிலிருந்து புறப்பட்டோம். ஓர் ஆட்டோவில்
அருகிலிருந்த திருவானைக்காவலில் (திருவானைக்கா, திருவானைக் கோவில்,
T.V.கோவில்) உள்ள காட்டழகிய சிங்க பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.
ஆலயத்தின் பெயரே மூலவர் யாரென்பதை உணர்த்துகின்றது அல்லவா? ஆம்.
இவ்வாலயத்தில் பெருமாள் லெட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகின்றார் என்று
சொல்லி அழைத்துச் சென்றான் விஜயராகவன். சற்றே கொளுத்தும் வெயிலில் உள்ளே
நடந்து சென்றோம். இச்சமயத்தில் தாங்கள் வழிபடும் ஆலயத்தைப் பற்றிச் சொல்ல
ஆரம்பித்தான் விஜயராகவன்.

அவர்கள் தங்களின் குடும்ப ஆலயமாக வழிபட்டுக் கொண்டு வரும் தலம் அஹோபிலம்.
இத்தலம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.. பெருமாள் நரசிம்ம அவதாரம்
எடுத்து இரணியனை அழித்த தலம் இதுதான். அங்கே பெருமாள் தோன்றிய தூண்
உள்ளதாம். அதைப் பற்றிக் கேட்கையிலேயே எமக்கு அங்கே சென்று நரசிம்மரைக்
காண வேண்டும் என்ற ஆவல் உண்டானது. "ஒருமுறையாவது அழைத்துச் செல் நண்பா"
என்று கேட்டுக் கொண்டேன். நிச்சயம் அழைத்துச் செல்வதாகக் கூறினான்.
நண்பன் விக்ரம் "அங்கே பெண்கள் எல்லாம் செல்லக் கூடாது " என்று சொல்ல அதை
மறுத்த விஜயராகவன் "அப்படியெல்லாம் இல்லை. எல்லோரும் செல்லலாம். ஆனால்
மலையில் ஏறிச் செல்ல வேண்டும். எங்க மன்னி அங்கே போய்ட்டு வந்த
பின்னாடிதான் அவ கர்ப்பமா இருக்கறதே கன்பார்ம் ஆச்சு.. அந்த நிலையிலயும்
அவளே ஏறி இறங்கிட்டா...எல்லோரும் போகலாம்" என்று சொன்னான்.

இந்நிலையில் நமக்கு ஒரு ஐயம் எழுந்தது.. இரணியன், பிரகலாதன் இவர்களது
இடம் ஆந்திராவென்றால் அவர்களது வம்சாவழியான மகாபலியின் இடமும் அங்கேயே
அல்லவா இருக்க வேண்டும். ஏன் கேரளாவில் உள்ளது...? மனத்தில் உள்ள வினாவை
சிறுவனைப் போல் கேட்டுவிட்டேன். "அப்படியில்லை நண்பா.. அந்த காலத்தில்
அனைத்தும் ஒரே இடமாகத்தான் இருந்தது" என்று சொல்லி பெருமாளின்
பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தான் விஜயராகவன்.. பெருமாள் நரசிம்ம அவதாரம்
எடுத்து இரணியனை வதைத்த பின்னர் பிரகலாதனுக்கு ஓர் வாக்குக் கொடுத்தார்.
உன் பரம்பரையில் இனி யாரையும் நான் கொல்வதில்லை என்று.. இச்சமயத்தில்
நமக்கு கம்பனின் கவிதை நினைவுக்கு வந்தது...
"கொல்லேன் இனி உன் குலத்தோரை குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்
நல்லேன் உனக்கு என்னை நாணாமல் நான் செய்வது
ஒல்லை உளதேல் இயம்புதியால்" என உரைத்தான்
என்று நரசிம்மம் சொல்வதாகக் கம்பன் பாடுவானில்லையா... அப்பாடல்
நினைவுக்கு வந்தது... பக்தன் ஒருவனுக்காக அவன் பரம்பரையையே மன்னித்த
குணமுடையோனைக் காணும் ஆவலில் உள்ளே நுழைந்தோம். பிரகலாதனின்
நற்குணத்தாலும் பக்தியாலும்தான் மகாபலியை இறைவன் கொல்லவில்லை.. அவனை
பாதாள லோகம் அனுப்பினார் என்று விஜயராகவன் சொல்லிக் கொண்டு வந்தான்.

உள்ளே நுழைந்தோம். நடை சாற்றப் பட்டிருந்தது. எங்கள் மூட்டை முடிச்சுகளை
ஓரமாக வைத்து விட்டு பிரகாரம் சுற்றி வரலாம் என்று வெளியே வந்தோம்.
வருகையில் ஒரு அன்பர் எதிர்ப்பட்டார். அவரிடம் ஆலயத்தைப் பற்றி
விசாரித்தோம். "ஐயா.. இந்தக் கோயிலக் கண்டு எல்லோரும்
பயங்கொண்டிருந்தாங்க... நான் கூட இதோ பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில
தான் படித்தேன். அப்பல்லாம் நாங்க இங்க வருவதற்கே பயப்படுவோம்.
நரசிம்மர்னா அவ்ளோ உக்ரம் என்ற எண்ணம் இருந்தது. பின்னர்தான் அவர்க்
கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம் என்பதை பக்தர்கள் புரிந்து
கொண்டார்கள்" என்று சொல்லி மேலும் சொல்ல ஆரம்பித்தார். பக்தர்களின்
அனுபவங்களால்தான் இந்த ஆலயத்தின் சிறப்பு வெளியே பரவ ஆரம்பித்தது
என்றுரைத்தார்.

"எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்து விட்டார்.
இருந்த அனைத்தையும் இழந்து விட்டு வாழ வழியில்லாமல் தற்கொலை செய்யலாம்
என்று முடிவெடுத்து விட்டு இந்தக் கோயிலுக்கு வந்தார். சாமியை வணங்கி
விட்டு வெளியே போய் தற்கொலை செய்யலாம் என்று வெளியேறியபோது அவரது நண்பர்
அமெரிக்காவில் இருந்து வந்தார். இவர் தனது சோகத்தைச் சொன்னவுடன் அந்த
நண்பர் தனது சொந்தச் செலவில் இவருக்காகத் திருச்சியில் ஒரு கம்பெனி
ஆரம்பித்துக் கொடுத்தார். இன்றைக்கும் இவர் நல்ல நிலையில் உள்ளார்."
என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அது உண்மைதான் என்று உணர்த்தும்
வகையில் கௌலி சத்தமிட்டது.. சொல்லிக் கொண்டிருந்த அன்பர் உணர்ச்சிவசப்
பட்டார் "பாருங்கோ.. நான் சொல்றது உண்மை.. அந்த பெருமாளே சொல்லிட்டார்"
என்று உணர்ச்சி பொங்க பேசிய காட்சி இன்னமும் கண்களை விட்டு அகலவில்லை..
மேலும் அவர் "குருக்கள் வந்து நடையைத் திறந்தவுடன் நாம் சென்று தரிசனம்
செய்யக் கூடாது. அவர் விளக்கேற்றிய பின்னர் அழைப்பார். பின்னர்தான் செல்ல
வேண்டும்" என்று கூறினார்.

வெளியே பிரகாரம் சுற்றும்போது அங்கே ஒன்பது துளசிமாடங்கள்
வைத்திருந்தார்கள். "அது என்ன விஜய்..? நவக்கிரகங்களுக்காகவா?" என்று
நான் கேட்டபோது "எனக்குத் தெரியாது நண்பா" என்று சொல்லிவிட்டான். உடன்
வந்திருந்த ஆனந்த்.. "பாருங்கோ நாகராஜ். பெருமாளை சேவிச்சிண்டா சனி
தோசமெல்லாம் ஓடியே போயிடும் தெரியுமோல்லியோ?" என்று சொல்ல, "நமது
தோசங்களும் நீங்க வேண்டும் பெருமாளே" என்று வணங்கிக் கொண்டே அந்த ஒன்பது
துளசி மாடங்களையும் சுற்றி வந்தோம். அப்படியே ஆலயத்தைச் சுற்றி மீண்டும்
உள்ளே நுழைந்து அமர்ந்தோம். ஆலய சுவற்றில் நரசிம்மரின் பல்வேறு படங்கள்
வரையப் பட்டிருந்தன.. அப்போது அவற்றைப் பற்றி விஜயராகவன் சொல்லிக்
கொண்டிருந்தான்.
கோபத்தில், உக்கிரத்தின் உச்சியில், பக்தர்களைப் பாடாய்ப் படுத்தும்
இரணியனை வதைக்க நரசிம்மம் வெளியே வந்தது முதல், இரணியனை அழித்தது, சாந்தி
அடைந்தது, அன்னை மகாலெட்சுமியைத் தன் மடியில் இருத்தியது, பிரகலாதனை
அன்போடு நோக்கியது போன்றவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறினான்...நமக்கோ
கம்பன் தன் பாடல்களால் நரசிம்மத்தை விளக்கியதை நேரில் கண்டது போல்
இருந்தது.. இதற்கு முன்னால் நரசிம்மரின் இத்தனை படங்களை நான் கண்டதே
இல்லை..

"நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும்
ஆக்கையும் தாளும் ஆகி எங்கனும் தானே ஆகி
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா
மேக்கு உயர் சீயம் தன்னைக் கண்டனர் வெருவுகின்றார்" என்று நரசிம்மத்தைக்
கண்டவர்கள் அனைவரும் அஞ்சியதாகக் கம்பன் பாடியது செவிகளில் ஒலித்தது..

பக்தன் என்றால் அது பிரகலாதனை மட்டுமே அல்லவா குறிக்கும்? சிறுவயதில்
அத்தனை பக்தியை அத்தனை நம்பிக்கையை இறைவன் மேல் வைக்க பிரகலாதனையன்றி
யாரால் இயலும்? உலகமே இரணியனைக் கண்டு அஞ்சி அவனை வணங்குகின்றது. ஆனால்
இந்த சின்னஞ்சிறு பாலகன் திருமாலேயன்றி வேறொரு தெய்வம் இல்லை என்று
எத்தனைத் தீர்மானமாக இருந்தான்..பக்தி என்றால் அது பக்தி...திருமாலைத்
தெய்வம் என்று கொண்டாடுவதன் மூலம் தன்னையும், தன் குலத்தையும் பாதுகாத்த
பெருமை கொண்டவனல்லவா?

"என்னை உய்வித்தேன். எந்தையை உய்வித்தேன், நினைய
உன்னை உய்வித்து, இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி"என்றான்
என்று பிரகலாதன் தனது குருநாதரை நோக்கி வினவுவதாகக் கம்பன் பாடுவானில்லையா?

குரு என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டும். அதை அப்படியே பின்பற்ற
வேண்டும். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" எனவே தந்தையார் என்ன
சொன்னாலும் அதைத் தட்டாது செய்வது தனயனின் கடமை.. ஆனால் குரு சொன்னது
"உனது தந்தையே இறைவன்" தந்தை சொன்னது "நாராயணனை வணங்காதே" ஆனால் இந்த இரு
கூற்றுக்களையும் எதிர்த்து நாராயணனே உலகின் கடவுள். அவனையன்றி வேறுயாரும்
தெய்வமாக முடியாது.. நமோ நாராயணாய எனும் பதமே உலகை உய்விக்கும் பதமென்று
பாடிய பிரகலாதனின் பாடல் செவிகளில் ஒலித்தது..

"காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடு உறச்செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய"
பக்தர்களின் தலைவா பிரகலாதா... தங்களின் பக்தியில் கோடியில்
ஒருபங்கையாவது எங்களுக்குத் தந்து உதவக் கூடாதா? நாங்களும் உங்களோடு
பக்தர் கூட்டத்தில் இணைவோமே... நமோ நாராயணாய... நமோ நாராயணாய... மனம்
பிரகலாதனின் பக்தியை எண்ணி பரவசத்தைத் தேடிக் கொண்டிருந்தது...

கதைகள் பேசிக்கொண்டிருந்தோம்.  இச்சமயத்தில் அர்ச்சகர் அழைத்தார்...
மூலவரைக் காண உள்ளே சென்றோம்...

ஆஹா... என்ன பாக்கியம் செய்து விட்டேன் இத்திருக்கோலத்தைக் காண...
உக்கிரம் தணிந்த வேளையில் அன்பு பொங்குமல்லவா?? அந்த அன்போடு நாவை மேலே
நோக்கி நீட்டி தன் மடியில் லெட்சுமியை இருத்தியிருந்தார்... நரசிம்மரின்
கோபந்தணிந்த திருக்கோலம்.. அன்பு பெருக்கெடுத்த திருக்கோலம்... பக்தனை
மீட்ட பெருமிதத்தில் பக்தர்களுக்கருள் புரியும் திருக்கோலம். உன்
வேதனைகள் அனைத்தையும் நீக்கிவிட்டேன் அன்பா... இரணியனின் கோலம் அழிந்தது
போல் உன் வேதனைகளும் அழிந்து போயின என்று சொல்லும் திருக்கோலம்.. இதோ என்
மனையாள் என் தொடையில் இருப்பதால் என்னுள் பொங்கும் அன்பைக் காண் என்று
சொல்லும் திருக்கோலம்... அப்பப்பா.... காட்டழகிய சிங்க பெருமாளின்
தரிசனத்துக்குக் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்....

"செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தா விளக்கை நறுந்தாள் இளங்கொழுந்தை
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பொன்று இல்லாதான்"
தனது சினந்தணிய தன்னை நோக்கி வந்து தன் மடியில் இருந்த லெட்சுமியை
நரசிம்மனார் அளவற்ற அன்போடு நோக்கியதைக் கம்பன் பாடியது நினைவுக்கு
வந்தது.... மகளின் நோய் தீர்க்க வேண்டி நின்றோம்..

ஏற்கெனவே விஜயராகவன் சொல்லியிருந்தான்.. "தாயாருடன் பெருமாள்
இருக்கும்போது அவர் கிட்ட என்ன கேட்டாலும் கொடுத்துடுவார்... ஏன்னா
தாயாரின் அன்பு அவருக்கும் இருக்கும்.. தாயாரின் முன் நல்லது செய்வதைத்
தான் அவரும் விரும்புவார்" என்று.....

அத்தனை நோய்களும் தொலைந்தன... அத்தனை தொல்லைகளும் விட்டொழிந்தன... என்னை
உன் மனத்தில் இருத்திப் போய்வா என்றுரைப்பது போலிருந்தது காட்டழகிய சிங்க
பெருமாளின் திருக்கோலம்...  கண்ணீர் மல்கி ஆனந்தத்துடன் வெளியே வந்தோம்..

மீண்டும் பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கே நாகர்களின் சிலைகள் இருந்தன..
அப்படியே வந்து சக்கரத்தாழ்வாரை வணங்கி வந்தோம். ஒரு தூணில் காட்சியளித்த
வீர ஆஞ்சனேயரை தரிசித்தோம். நெஞ்சில் நீங்காத நினைவுகளுடன் ஆலயத்தை
விட்டு வெளியே வந்தோம்... அடுத்த திவ்ய தேசம் உறையூர்.... அதைப் பற்றி
அடுத்த மடலில்...காட்டழகிய சிங்கனே கற்பனைக் கெட்டாத வல்லோனே... கல்லிலும், மண்ணிலும்,
காணும் இடமெல்லாம் காட்சி தரும் இனியோனே.. பக்தர்களைக் காக்கும்
பரந்தாமனே... உலகத்தை உய்வித்து, அனைவருக்கும் நன்னிலை அளிப்பாயாக.....
நமோ நாராயணாய....

வெள்ளி, மார்ச் 25, 2011

செந்தூர் கடலோர நினைவலைகள்...

செந்தூர் கடலோர நினைவலைகள்...

உன்
நனைந்த பாதங்களை
நாணச்செய்த
நாணத்தால்
திரும்பிய கடலலைகள்...

அருகில்
முடி இறக்கிய குழந்தையின்
அழுகையால்
உன் கண்களிலும்...

ஒருவர் மேலொருவர்
மண்ணெறியும் சிறுவர்களைக்
கண்டு
கைகொட்டி சிரித்தாய்...
அப்பாவியாய்
அருகில் நான்....

அன்னாசி பழம் விற்ற
அண்ணாச்சியை
அடிக்கவும் சென்று விட்டாய்..
பழம் சுவையற்ற காரணமா?
ஏக்கத்தோடு பார்த்த
ஏழைச்சிறுமியை
அவர் விரட்டிய காரணமா?

கிளி ஜோசியனைக்
கிலியடையச் செய்யும் கேள்வி...
"கிளிக்கு எப்போது விடுதலை?"
உனக்கு மட்டுமே
தோன்றுமோ
இதுபோன்ற கேள்விகள்..?

வசந்த மண்டபத்தின்
அசுத்தம் கண்டு
அகோரியானாய்...
இன்னமும் உன்னுடன்
பிரகாரம் சுற்ற
பயமாய்த்தான் இருக்கின்றது...

சுடலைமாடன் கதை (5)

தூத்துக்குடி மாவட்டம் ஏரலின் அருகே உள்ள ஊர் ஆறுமுக மங்கலம். இங்குள்ள
சுடலமாடசுவாமி மிகவும் பிரசித்தம். ஓடாத பேய்களையும் ஓடவைப்பதும், தீராத
வினைகளைத் தீர்ப்பதுமாக அவர் அருள்பாலிக்கின்றார். மேலும் செய்வினை என்று
சொல்லக் கூடிய பில்லி சூனிய விவகாரங்களுக்கும் தீர்வு இந்த ஊரில்
கிடைக்கும்.
நம்முடைய ஊர்களில் யாருக்காவது "மகராஜன்" என்று பெயர் வைத்தால் அது
சுடலைமாட சாமியின் பெயர்தான். அவரைத்தான் மகாராஜா என்று அழைப்பார்கள்.
ஆறுமுகமங்கலத்தின் சுடலைமாடனுக்கு ஹைகோர்ட் மகராஜா என்றும் ஓர் பெயர்.
எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்தப் பெயருடனேயே வாழ்கின்றனர். அவருக்கு
ஏன் அந்தப் பெயர் வந்தது.. அது ஒரு வரலாறு..
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் அது..
ஆறுமுகமங்கலத்தைச் சார்ந்த ஒருவனை (பெயர்களெல்லாம் யாருக்கும்
தெரியவில்லை) ஓட ஓட விரட்டிக் கொலை செய்திருக்கின்றார்கள் பகைவர்கள்..
அவனை வெட்டும் போது அவன் தன்னை விட்டு விடும்படி கதறி இருக்கின்றான்..
அவர்களோ மறுத்து அவனை வெட்டினார்கள். "யாருமில்லாத காட்டில் உன்னைக் கொலை
செய்திருக்கின்றோம். எங்களுக்கு எதிராக யார் சாட்சி சொல்வார்கள்?" என்று
கொக்கரித்தார்கள். அவனோ "என்னைக் கொலைசெய்தால் அந்த சுடலைமாடசாமியே
உங்களைப் பழிவாங்குவார். அவர்தான் நீங்கள் என்னை வெட்டியதற்கு சாட்சி"
என்று சொல்லி சரிந்து விழுந்தான்...
கொலை செய்தவர்கள் போய்விட்டார்கள் தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று...
ஆனால் காட்டில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் இதை நேரில் பார்த்து
விட்டான்.. ஆனால் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல சற்றே பயம். ஆனால்
சுடலைமாட சாமியை நம்பி காவல்துறையினரிடம் கொலை செய்தவர்களின் பெயர்களைக்
கொடுத்து விட்டான். அவர்களும் பிடித்து விட்டார்கள்..
நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்றது.
இவன் சாட்சி சொல்லப் போகவேண்டும்..
குற்றவாளிகளின் உறவினர்கள் இவனை அழைத்துச் சென்று அடித்து ஓர் இடத்தில்
கட்டி வைத்து விட்டார்கள்.. சாட்சி வரவில்லை என்றால் வழக்கு தள்ளுபடி
செய்யப் படும் என்று நம்பினார்கள்..
வழக்கு விசாரணைக்கு வந்தது..
நீதிபதி வந்தமர்ந்தார்..
குற்றவாளிகளை விசாரித்தார். மறுத்தார்கள்..
சாட்சியை அழைத்தார்...
சாட்சி வந்தான்... கம்பீரமாக... அவர்களைக் கை காட்டினான்.. கொலையைத் தானே
நேரில் கண்டதாகக் கூறினான்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது...
கட்டிவைக்கப் பட்ட சாட்சி தப்பி ஓடிவந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்னதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்..
ஆனால் கட்டி வைக்கப் பட்டவன் அங்கே அப்படியே கிடந்தான்..
அப்படியானால் வந்து சாட்சி சொன்னது யார்?
அப்போதுதான் இவன் சொன்னான்.. மரிக்கும் போது அவன் சுடலைமாடசாமியே சாட்சி
என்று சொன்னதாக...
நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னது நம் சுடலைமாடசாமியே என்பது தெளிவானது..
எனவே மகாராஜாவை நீதிமன்றத்தின் பெயரால் அழைக்க ஆரம்பித்தார்கள்.. அது
ஹைகோர்ட் அல்ல... ஆனாலும் நம் சுடலைமாடனுக்கு இன்னும் பெருமை சேர்க்க
வேண்டும் என்ற ஆவலிலும், அவன் மேல் கொண்ட பாசத்திலும் "ஹை கோர்ட் மகராஜா"
என்றழைக்க ஆரம்பித்தார்கள்.. அது இன்றும் தொடர்கின்றது...
சுடலைமாடசாமியின் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தேன்.. இன்றுடன்
முடிக்கின்றேன்.. பிழைகளைப் பெரியோர்கள் யாரேனும் காண்பீர்களேயாயின்
பொறுத்தருள்வீர்களாக...
தங்கள் பகுதி சுடலைமாடசாமியின் பெருமைகளை இந்த இழையில் பகிர்ந்து சுவை சேருங்கள்...
நன்றி வணக்கம்..

சுடலைமாடன் கதை (4)

யாரோ ஒரு கிழட்டுப் பண்டாரம் தன் வாசலில் பிச்சை கேட்டு வந்து பின்னர்
தன் மகளைக் கற்பழிக்க நாள் குறித்ததை எண்ணி வேதனையில் ஆழ்ந்தான்
காளிப்பெரும்புலையன். அஞ்சன மையெடுத்து யாரென்று பார்த்தால் அவனால்
எதையும் கண்டு பிடிக்கமுடியவில்லை.. மாந்திரீகத்தில் பெரியவன் என்று
பெயரெடுத்த என்னையே ஒருவன் ஏமாற்ருகிறான் என்றால், நாம் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும் என்று முடிவு செய்து மாவிசக்கிக்கு மந்திரக் காவல்
அமைத்தான்.
ஏழு அறைகளை அடுக்கடுக்காக அமைத்து நடுவறையிலே பெண்ணை அமரச்செய்தான்...
யாரும் அதனை நெருங்க இயலாத வண்ணம் தன் மாந்திரீகத்தால் வளையம்
அமைத்தான்...
ஆனாம் நம் சுடலைமாட சாமியை எந்தக் காவல்தான் தடுத்து நிறுத்தும்?
இரவிலே எறும்பு உருக்கொண்டு மாவிசக்கியின் அறையை அடைந்தார் சுடலைமாட சாமி...
அவள் அறியாமலேயே அவளைக் கற்பழித்தார். வந்த சுவடு இல்லாமல் வெளியேறினார்.
மறுநாள் காலையில் மகளை எழுப்ப வந்த புலக்கொடியாள் மகளில் நிலையக் கண்டு
அதிர்ந்தாள்..
மாவிசக்கியும் கண்ணாடியில் தன் கோலம் கண்டு அழத்துவங்கினாள்.
பெரும்புலையன் அதிர்ந்தான்... தன் மாந்திரீகம் பொய்த்ததை எண்ணி பயந்தான்.
வந்தவன் மிகப்பெரிய ஆள். தன்னால் அவனை எதிர்க்க இயலாது என்பதைப் புரிந்து
கொண்டான்.
ஆயினும் அவன் மனத்தில் வந்தவன் யாரென்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது...
மைபோட்டு பார்த்தான்.. ஏவல் தேவதைகளிடம் கேட்டான்.. யாராலும் சொல்ல முடியவில்லை...
மாவிசக்கி கர்ப்பமானாள்...
இத்தோடு விட்டாரா சுடலைமாடன்?
என் அன்னையின் ஆலயத்தில் புகுந்து திருடியவனைக் குடும்பத்தோடு
பழிதீர்ப்பேன் என்று சபதம் செய்தாரில்லையா? எனவே பெரும்புலையனைக்
குடும்பத்தோடு அழிக்க நாள் பார்த்துக் காத்திருந்தார்.
மாவிசக்கி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்...
ஆலடிப்புதூரிலே காக்காச்சி மலை தாண்டி பளியன்மார்கள் விவசாயம் செய்து
வந்தார்கள்.  அவர்கள் விவசாயம் செய்யும் சோலையை நாசம் செய்தால், புலையன்
நேரில் வருவான். அவனைப் பழிவாங்கலாம் என்று எண்ணிய சுடலைமாட சுவாமி,
பளியன்மார்கள் விவசாயம் செய்து வந்த ஓர் நாள் இரவு சோலைக்குள் புகுந்து
அதனை முற்றிலும் நாசம் செய்தார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த பளியன்மார்கள் அதிர்ச்சியில் புலையனிடம்
ஓடி வந்தார்கள்..
புலையனும் தானே நேரில் வந்து பார்ப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
புலையன் காக்காச்சி மலைக்கு செல்ல இருப்பதை அறிந்த புலக்கொடியாள் அவனைத் தடுத்தாள்.
"போகவேண்டாம் அன்பரே.. நான் பொல்லாத கனவு கண்டேன்." என்று சொன்னாள்.
"யாராலும் என்னை எதுவும் செய்ய இயலாது.. நீ என்னைத் தடுக்காதே" என்று
சொல்லிவிட்டு புலையன் புறப்பட்டுச் சென்றான்..
பளியர்களின் சோலையில் அமர்ந்து மை போட்டு பார்த்த போது அவனால் எதுவும்
கண்டு பிடிக்க முடியவில்லை.பிறகு சுடலைமாடன் தானே அவன் நேரில் பிரசன்னமானார்..
தான் யார் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தினார்.
"என் அன்னையின் ஆலயம் புகுந்து கொள்ளையடித்த பெரும்புலையா.... உன்னை
சந்திக்கவே நேரம் காத்திருந்தேன்..:" என்று அவன் கையிலிருந்த திரு
நீற்றுத் தாம்பூலத்தைப் பிடுங்கி அவன் சென்னியில் ஒரே அடி.
நடுங்கிப்போனான் காளிப்புலையன்.
"ஐயா உன் பலம் அறியாது உன் காவலில் இருந்த திரவியங்களைக் கொள்ளை கொண்டு
வந்து விட்டேன். என்னை மன்னித்து விடு... நாம் பங்காளிகளாக இருப்போம்"
என்று சுடலைமாடனிடம் பேரம் பேச ஆரம்பித்தான் காளிப்புலையன்.
"என்ன? என்னுடன் பங்காளியா? எனக்கு உன்னால் கொடை கொடுக்க இயலுமா?" என்று
கேட்டார் சுடலைமாடன்.
"என்ன வேண்டுமானாலும் தருகின்றேன்.." என்றான் புலையன்.
"ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம்
வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு
பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில்
செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே
படைப்பாகவும் போட வேண்டும்"
"அப்படியே செய்கிறேன்.. என்னை விட்டு விடு. "
"அது மட்டுமல்ல... ஏழாவது பரணிலே ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை எனக்குப்
பலி கொடுக்க வேண்டும். அவளும் தன் தகப்பனுக்கு ஒரே பெண்ணாக இருக்க
வேண்டும். அவளுக்கு அது முதல் குழந்தையாக இருக்க வேண்டும்" என்றார்.
மேலும் "அப்படி நீ எனக்குப் பலி கொடுத்தால், மூன்றே முக்கால் நாழிகைக்கு
உன் சிமிழுக்குள் நான் அடைபடுவேன்" என்று வாக்கும் கொடுத்தார்.
இதில் மயங்கிய  பெரும்புலையன் பலி கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான்.
பரண்கள் அமைத்தான்.. ஆடுகளும், பன்றிகளும், எருமைகளும், கிடாக்களும்
கிடைத்தன... நிறைமாத கர்ப்பிணிக்கு எங்கு செல்வது என்று யோசனை செய்த போது
மாவிசக்கியின் நினைவு வந்தது... தனக்கு மகளை விட மாந்திரீகமே முக்கியம்
என்று எண்ணி அவளையே பலியிடத் தீர்மானித்தான் பெரும்புலையன்.
வீட்டுக்கு வந்தான். மகளை அழைத்தான்.
"மகளே மாவிசக்கி.. நம் குலதெய்வத்துக்குப் பலி கொடுக்கப் போகின்றேன்..
நீயும் வா.. நாம் செல்லலாம்" என்று அழைத்தான்.
"அப்பா.. நானோ நிறைமாத கர்ப்பிணி.. நான் அதைப் போன்ற பலி
கொடுப்பதையெல்லாம் காணக் கூடாதல்லவா? நான் வரவில்லை" என்று மறுத்தாள்.
அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.
ஏழாவது பரணிலே அவளை ஏற்றி அவளது கைகளையும், கால்களையும் கட்டினான்.
மாவிசக்கியும் புரிந்து கொண்டாள்.
"அடேய் சண்டாளா.. பெற்ற மகளென்றும் பாராமல், என்னையும் கொலைசெய்து
பலியிடத் துணிந்து விட்டாயே.. நீ உருப்படுவியா.... நான் மரித்து ஏழு
நாட்களுக்குள் நீயும் செத்துப் போவாய்." என்று சாபமிட்டு அழுதாள்..
அதையெல்லாம் காதில் வாங்க வில்லை காளிப்புலையன்.
அத்தனை ஆடுகளையும், எருமைகளையும், பன்றிகளையும், கிடாக்களையும் பலி
கொடுத்தான்.. ஏற்றுக் கொண்டார் சுடலைமாட சுவாமி.. ஒரு கோட்டை
புழுங்கலரிசி சோற்றையும் ஏற்றார். இறுதியாகத் தனது மகளையும் நெஞ்சைக்
கிழித்துப் பலி கொடுத்தான். அதையும் ஏற்றார்.
பின்னர் தான் சொன்னது போல் அவனது சிமிழுக்குள் அடைபட்டார்...
சுடலைமாடனை அடைத்து விட்டோம். இனி பகவதி கோயிலில் உள்ள அனைத்துத்
தங்கங்களையும் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய புலையன், சுடலைமாடனை
அடைத்த சிமிழை அங்குள்ள குளத்தில் புதைத்து வைத்தான்.
குளத்திலிருந்து சுடலைமாடனால் மீள முடியாது என்று நம்பிவிட்டான்.
வீட்டுக்கு வந்தான்..
புலக்கொடியாள் தண்ணீர் எடுக்கக் குளத்துக்குச் சென்றாள். குடத்தில் நீரை
மொண்டாள்.. அந்த நீரில் சிமிழும் வந்து விட்டது. வீட்டுக்கு வந்தாள்..
புலையனுக்கு சாப்பாடு வைத்தாள்.
குடத்திலிருந்த நீரை ஒரு செம்பில் அவனுக்கு ஊற்றி வைத்தாள்.
நீரருந்த செம்பை எடுத்த புலையன் கண்களில் அந்த சிமில் பட்டது.
"ஐயோ... இந்த சிமில் இங்கு வந்து விட்டதே" என்று அவன் பரிதவித்த நொடியில்
மூன்றே முக்கால் நாழிகை முடிவடைந்து விட்டது.
சிமில் வெடித்தது..
ஆங்கார சொரூபமாக வெளிப்பட்டார் சுடலைமாட சுவாமி..
"அடேய் பெரும்புலையா... ! தங்கத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே
பலிகொடுத்த சண்டாளா... உன்னைப் போன்ற பெரும்பாவிகள் உயிரோடு இருக்கலாமா?
என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன்
என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனை
அடித்தார்...
அருகே நின்றிருந்த புலக்கொடியாளையும் அடித்தார்..
தன் அன்னையின் ஆலயத்திலிருந்து புலையன் கொள்ளையடித்துச் சென்ற
திரவியங்களை மீட்டு கொட்டாரக்கரை திரும்பினார்..
அவற்றை மீண்டும் அன்னையிடமே சேர்ப்பித்தார்..
"அன்னையே... இப்போது புரிந்ததா உன் மகனின் பராக்கிரமம்?" என்று அன்னை
பகவதியை வணங்கி நின்றார்.
"மெச்சினோம். மகனே... ஆனால் நீ இப்படிப் பழிவாங்குவதெல்லாம் கூடாதப்பா...
தெய்வங்கள் எல்லோரும் மனிதர்களை ரட்சிக்கத்தான் வேண்டும்... நீயும்
வரங்கொடுக்கும் தெய்வமாக வேண்டும்" என்று அவனை ஆசீர்வதித்தாள்.
"அப்படியே செய்கின்றேன் அன்னையே.. எனக்கு விடை கொடு" என்று சொல்லி
அன்னையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொட்டாரக்கரையை விட்டுப் புறப்பட்டார்.
நேராக குற்றாலம் வந்து சேர்ந்தார்.
குற்றால அருவியில் குளித்து விட்டு திருக்குற்றால நாதரையும்,
அம்பிகையையும் வணங்கினார்...
பின்னர் குற்றாலப்பதியிலேயே அருளும் தெய்வமாகி வரமருள ஆரம்பித்தார்...
அங்கு வருவோரும் போவோரும், குற்றாலத்திலிருந்து பிடிமண் எடுத்துக் கொண்டு
தங்கள் பதிகளில் கோயில் கட்டி சுடலைமாடனைத் தெய்வமாக வைத்து வழிபட
ஆரம்பித்தனர்..
இவ்வாறு தென்னாடு முழுமைக்கும், எல்லா கிராமங்களிலும் சுடலைமாடன்
விதவிதமான பெயர்களில் வணங்கப் படுகின்றார்.  சுடலைமாடன், பெரியசுவாமி,
புலமாடன், வேம்படி மாடன், கரடிமாடன் (கரையடிமாடன் என்பதைத்தான் கரடிமாடன்
என்று அழைக்கின்றார்கள்), கொம்பு மாடன் என்று விதவித பெயர்கள்
அவருக்கு... எங்கள் சுப்பிரமணியபுரத்தில் வடலடிசுவாமி என்ற பெயர்
சுடலைமாடனுக்கு..
குதிரையில் இரவில் ஊர்வலம் செல்வதும், ஊரைக்காப்பதுமான காவல் தெய்வம்
இவர்.. அவருக்குக் கொடை கொடுக்கும் நாளில் அவர் குதிரையைக் கட்டும்
குத்துக்கல்லுக்குப் பெண்களும், ஆண்களும் நீராட்டி வழிபடுவார்கள். மற்ற
இடங்களை விடச்சிறப்பு என்னவென்றால் எங்கள் கிராமத்தில் அவனுக்கு
உருவமில்லை... பீடமும் இல்லை...  வடக்கு மற்றும் தெற்காக இரண்டு
வாயில்கள்.. வடக்கு வாசலில் நின்றுதான் வழிபடுவார்கள்... அங்கிருந்து
பார்த்தால் தென் திசைக் கதவுதான் தெரியும்... உள்ளே சந்தனக்கல்லால் பீடம்
மட்டும் உள்ளதாக சொல்வார்கள்.. அடியேன் பார்த்ததில்லை.. தென் திசை வாசலை
ஒட்டித்தான் சாலை... சாலையில் செல்வோர்கள் வடலடியானை வணங்க
மறப்பதில்லை... யாருடைய வீட்டில் விசேடம் என்றாலும் வடலடியானுக்குத்
தேங்காய்ப் படையல் போட்டு பிறகுதான் விசேடங்கள் நடக்கும். அதனால்
"தேங்காய் உடைக்கிற கோயில்" என்றும் பெயர் உண்டு. கிழக்கத்தியார்
கோயிலில் இருந்து தேங்காய்களை வடலடியான் கோயிலுக்குக் கொண்டு சென்று
உடைத்து அந்த கோவிலின் படிகளில் படைப்பார்கள்.. பிறகு அவற்றை பாயில்
போட்டு பெரியவர்கள் அமர்ந்து கீறுவார்கள். பிறகு அனைவருக்கும்
கொடுப்பார்கள்.
நான் முதலூர் பள்ளியில் படிக்கும் போது தினமும் வணங்கிச்செல்வோம்.
அங்கிருந்த உண்டியலின் திருநீற்றுக் கொப்பரையில் திருநீறு
இல்லாவிட்டாலும் குனிந்து மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வோம்...
எதிர்ப்புறத்தில் ஓர் அழகிய ஆலமரம் இருந்தது... அருகே நல்ல கிணறு
ஒன்று... முன்னர் கொடைவிழாவின் போது அந்த கிணற்றிலிருந்து தோண்டி மூலம்
நீர் இறைத்துத்தான் பெண்கள் நீர் கொண்டு வந்து அந்த குத்துக்கல்லிற்கு
அபிசேகம் செய்வார்கள்.. ஒரு புயலின் போது ஆலமரம் சரிந்து விழுந்து
விட்டது...
கிணற்றிற்கும் செல்ல முடிவதில்லை... எனவே ஆலயத்திலேயே ஆழ்துளைக் கிணறு
அமைத்து விட்டார்கள்.. அங்கிருந்து மோட்டார் மூலம் நீர் பிடித்து தங்கள்
நேர்ச்சைகளை மக்கள் பூர்த்தி செய்கின்றார்கள்..

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரலின் அருகில் ஆறுமுகமங்கலம் என்றொரு ஊர்
இருக்கின்றது.. நமது பகுதியில் சுடலைமாடனைப் பற்றிய பிரசித்தம் இந்த
ஊர்தான். பேய்கள் ஆடுவதும், ஓடிப்போவதுமாக மெத்தப் பிரசித்தம். அங்கே
சுடலைமாடனை செல்லமாக "ஹைகோர்ட் மகராஜா" என்றழைக்கின்றார்கள்.. நம்முடைய
பகுதியில் நிறைய குழந்தைகளுக்கும் சுவாமியின் பெயரை வைத்து ஹைகோர்ட்
மகராஜா என்று பெயர் சூட்டி மக்கள் மகிழ்ந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி
அவருக்கு அந்த பெயர் வந்தது என்பதைப் பற்றி அடுத்த மடலில் காணலாம்...

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

உத்தமர் கோவில் என்னும் இத்திவ்ய தேசமானது ஸ்ரீரங்கத்திலிருந்து
திருவெள்ளறை செல்லும் வழியில்தான் உள்ளது. திருவெள்ளறை செல்லும் வழியில்
உள்ள பாலத்தின் மேல் பேருந்து செல்கையில் ஆலயத்தைக் கண்டதாக விஜயராகவன்
குறிப்பிட்டான்.

திருவெள்ளறை ஆலயத்தின் மகிமைகளைக் கேட்டுணர்ந்து அந்த செந்தாமரைக்
கண்ணனின் அருள் பெற்று வெளியே வந்தோம். துறையூர் சாலைக்குச் செல்லும்
வழியில் ஓர் பெரியவர், "இங்கேயே வெய்ட் பண்ணுங்கோ.. பஸ் இப்ப வந்துடும்"
என்றுரைத்தார். அங்கே காத்திருந்தோம். இச்சமயத்தில் மகளின் கண் வலி
அதிகமாகியது. (மெட்ராஸ் ஐ என்பதை எங்கள் ஊரில் கண் வலி என்றுதான்
அழைப்போம்). கண்கள் மேலும் சிவந்து கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.
காத்திருந்தோம். பேருந்து வந்தபாடில்லை.. மாலை 7.50 மணிக்கு உத்தமர்
கோவிலில் நடை சாற்றிவிடுவார்கள் என்பதால் நடக்க ஆரம்பித்தோம்.

துறையூர்  சாலையில் பேருந்துக்காகக் காத்திருந்தோம். வரும் பேருந்துகளில்
விசாரித்த பொழுது அவை எதுவும் உத்தமர் கோவில் அருகே நிற்காது
என்றுரைத்தார்கள். இச்சமயத்தில் எங்கள் திருமகள் உதவினாள். ஒரு
பேருந்தில் ஏறி அமர்ந்து ஓட்டுனரிடம் குழந்தையோடு வந்திருக்கின்றோம்
என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அவரும் நிறுத்துவதாக வாக்களித்தார்.
உத்தமர் கோவிலில் இறங்கினோம்..

ஓங்கி உலகளந்த உத்தமனை இந்த உத்தமர் கோவிலில் காணலாம் என்று ஆவலோடு உள்ளே
நுழைந்தோம். இவ்வாலயத்தைப் பற்றிய சிறப்பு விஜயராகவனால் எங்களுக்குச்
சொல்லப் பட்டது. பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்த சிவனாருக்கு அடக்க
இயலாத பசி உண்டாயிற்று. பிரம்மனின் தலையும் அவரது கையில் ஒட்டிக்
கொண்டது. அத்தோசத்தைப் போக்க அவர் பிட்சாடனாராக திருக்கோலம் பூண்டார்.
இத்திருத்தலத்தில் அன்னை மஹாலெட்சுமி தனது திருக்கரத்தால் ஈசனாருக்கு
பிச்சையிட அவரது தோசம் நீங்கியது.. எனவே இத்திருத்தலத்தின் தாயாருக்கு
பூரணவல்லி என்று பெயர்..

ஆலயத்தின் உள் நுழைந்து பூரணவல்லித் தாயாரை மனமுருகி வேண்டினோம். உள்ளே
நுழைகையில் ஆச்சரியம்.. இங்கே ஈசனாருக்கும் திருக்கோவில்.
பிரம்மாவுக்கும் திருக்கோவில்.. விஜயராகவன் "உங்க ஆளு கோயில்
இருக்குப்பா. போய் தரிசனம் பண்ணிட்டு வா.." என்றுரைத்தான். ஆனால் மகளின்
அழுகை அதிகமாகிக் கொண்டிருந்தபடியால் உத்தமரை மட்டும் தரிசனம் செய்து
விட்டு வரலாம் என்று சொல்லி விட்டு மூலவரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

இங்குள்ள மூலவருக்கு புருஷோத்தமன் என்ற திருநாமம். சயனத்திருக்கோலத்தில்
காட்சியளிக்கின்றார். திருவரங்கனைக் காணும் பேறில்லையே என்று எண்ணிய
எமக்கு இந்த உத்தமர் கோவிலில் புருஷோத்தமனாகக் காட்சியளித்து எம்
மனக்குறையைத் தீர்த்தருளினார். நாங்கள் உள்ளே சென்றிருந்த சமயத்தில் திரை
போட்டிருந்தார்கள். சற்றே காத்திருந்து உத்தமரின் தரிசனம் பெற்றோம்.
புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டிருந்த பெருமாளைக் கண்டு ஆனந்துற்று
மகளுக்காக வேண்டிக் கொண்டோம். எனக்குரிய பிரச்சனை என்னவெனில் ஆலயத்தில்
இறைவனை வணங்கும் வேளையில் என்னால் எனக்கு இது வேண்டும் அது வேண்டும்
என்று கேட்பதற்குத் தோன்றுவதில்லை. இறைவனின் திருக்காட்சியைக் கண்டதும்
மெய்மறந்து, மனமுருகி தரிசனம் செய்வது மட்டுமே நினைவில் நிற்கின்றது..
ஆலயத்தை விட்டு வெளியே வரும்போதுதான் "அயயோ மறந்து போனோமே.." என்று
மனந்துடிக்க ஆலயத்தின் திருவாசலை நோக்கி வேண்டிக் கொண்டு வருவேன்..

உத்தமர் திருக்கோவிலில் அந்த புருஷோத்தமனையும், பூரணவல்லித் தாயாரையும்
தரிசித்து விட்டு அறைக்கு வந்து சேர்ந்த சமயத்தில் மகளின் அழுகை மிகவும்
அதிகமாகி இருந்தது. என்ன செய்தும் சமாதானப் படுத்த இயலவில்லை.
மிகச்சிறுவயதில் அவளுக்குத் தொல்லைகள் தருகின்றோமோ என்று ஒரு எண்ணம்
தோன்றியது.. இல்லையில்லை... அவளது சிறுவயதில் இது நாம் அவளுக்குத் தரும்
பேறு என்று மனத்தை மாற்றிக் கொண்டேன்..

இரவில் தம்பதியராகக் காட்சியளிக்கும் ரங்கநாதரையும், ரங்கநாயகி
நாச்சியாரையும் காணச் செல்லலாம் என்று எண்ணியிருந்த வேளையில் முன்பு
ஒருமுறை எடுக்கப் பட்ட புகைப்படம் ஒன்றை விஜயராகவன் அளித்தான். மகளின்
அழுகையைக் கட்டுப்படுத்த இயலாததால், நண்பர்களிடம் "நீங்கள் மட்டும்
சென்று தம்பதியரைத் தரிசித்து வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி அறையில்
தனித்திருந்தோம். மனதுக்குள் வாட்டம். காலையில் ஒரு மாமி
"வயசாயிருந்தாலும் இன்னைக்குக் கையப் பிடிச்சிட்டு வந்துடுவா...
இன்னைக்கு பெருமாளையும் தாயாரையும் சேவிச்சா ரொம்ப புண்ணியம்." என்று
சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.. நமக்கு இந்த புண்ணியம் இல்லையே
என்று இருவரும் நொந்து கொண்டோம்.

விஜயராகவன் தந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு இருவரும் அமர்ந்து கண்களை
மூடி வேண்டினோம்.. "ஐயனே... நீங்கள் சேர்ந்திருக்கும் திருக்கோலத்தை
எங்களால் காண வர இயலவில்லை... ஆயினும் உங்கள் தலத்திலேதான் உள்ளோம்..
எங்களுக்கும் திருவருள் புரியும்" என்று வேண்டிக் கொண்டிருந்தோம்.
அச்சமயத்தில் எனக்கு ஒரு காட்சி தென்பட்டது. அதன் உட்பொருள் விளங்கவே
இல்லை... ரங்கநாயகி நாச்சியாரின் சன்னதிக்கு எதிரே உள்ள வெளியில் பல
யானைகளைக் கண்டேன். அக்கணமே என் மனத்தில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடியது. அதனை அப்பொழுதே மனையாளிடம் பகிர்ந்து கொண்டேன். மூலவரையும்
கற்பனை செய்து தரிசித்தேன். மிகப்பெரிய நம் பெரிய பெருமாளைக் கற்பனையில்
மட்டுமே தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது...

இச்சமயத்தில் மகளும் சமாதானம் ஆகி உறங்க ஆரம்பித்து விட்டாள். "சரி
இன்றைக்கு இரவு முழுதும் திருக்காட்சி இருக்குமல்லவா? இரவில் மகள்
விழிக்கும் வேளையில் அழாமல் இருந்தால், நாமும் போய் தரிசித்து விட்டு
வரலாமா?" என்று மனையாள் கேட்க, நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.

இச்சமயத்தில் நண்பர்களும் திரும்பி வந்தனர். "வரிசை பெரிய கருடன் வரை
நீண்டிருக்கின்றது. எனவே தரிசனம் செய்யாமலேயே வந்து விட்டோம்"
என்றுரைத்தனர். ஐயோ நம்மோடு வந்த பாவம் இவர்களுக்கும் புண்ணியமில்லாமல்
போயிற்றே என்று நொந்து கொண்டேன். "சரி விஜய்.. நாம கொஞ்சம் லேட்டா போய்
பார்ப்போமா?" என்று வினவ "அப்படியில்லை நண்பா.. ஒருமுறை தூங்கி
எழுந்தால், குளித்த பிறகே ஆலயம் செல்ல வேண்டும்" என்று விஜய் சொல்லி
விட்டான். பிறகென்ன.. தூங்கி காலையில் எழலாம்.. என்று எண்ணி உறங்கச்
சென்றோம்..

மறுநாள் நாங்கள் கண்ட திவ்ய தரிசனங்களைப் பற்றி... அடுத்த மடலில்....

அன்புடை நெஞ்சம் அனைத்தும் அந்த அரங்கனுக்கே அர்ப்பணம்...திருவரங்கத்தில்
பள்ளி கொண்ட பெருமாளே... எம் நெஞ்சத்திலும் நீங்காது பள்ளி கொண்டு எம்மை
வழிநடத்தும்.... வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

புதன், மார்ச் 23, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

மகளை உறங்கவைத்து விட்டு திருவரங்க பங்குனி உத்திர வைபவத்தில் எமக்கு
ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி மனையாளுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
மேலும் நண்பர்கள்  எப்போது வருவார்கள் என்று  அவர்களுக்காக
காத்திருந்தோம்.. அனைவரும் வந்து சேர்ந்தார்கள். பிரசாதம் உண்டு விட்டு
மதிய உணவை முடித்தோம்.. ஐயா காளைராசன் அவர்கள் பெருமாளின் ஆலயங்களில்
தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். திருப்பூவணத்து
பெருமாளின் ஆலயத்தில் உள்ள திருவுருவங்கள் சென்னை அருங்காட்சியகத்தில்
இருப்பதாகவும், அவற்றை மீட்பதற்கு வடகலை, தென்கலை என்னும் பிரிவுகள்
தடையாக இருப்பதாகவும், தாம் பணியில் இருக்கும் காலத்திலேயே இது
நிகழ்ந்தேற வேண்டுமென்பதாக ராமானுசரை வேண்டிக் கொண்டதாகக்
குறிப்பிட்டார்.
தன்னை ராமானுசரின் வழிவந்தவன் என்று குறிப்பிட்ட விஜயராகவனும் தனது
கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக பல கருத்துப்
பரிமாற்றங்கள் மூலம் புதிதாக பல செய்திகளை அறிந்து கொண்டோம். சற்றே
இளைப்பாறி விட்டு திருவெள்ளறை என்னும் திவ்யதேசத்துக்குச் செல்லலாம்
என்று விஜயராகவன் உரைத்தான். தான் உறையூரில் தரிசனம் முடித்துக்கொண்டு
ஊருக்குத் திரும்புவதாக ஐயா காளைராசன் தெரிவித்தார். மாலை நான்கு மணி
அளவில் அறையை விட்டு கிளம்பினோம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஐயா காளைராசன் அவர்களையும்,
அம்மா நாகலெட்சுமி அவர்களையும் வழியனுப்பி வைத்தோம். பேருந்தில்
திருவெள்ளறை சென்றடைந்தோம். பேருந்தில் இறங்கி சற்று தூரம் நடந்து
சென்றோம்.
திருவெள்ளறையானது ஸ்ரீரங்கத்தை விட பழமையானது. இதனால் இது ஆதி வெள்ளறை
என்றும் போற்றப் படுகின்றது. ஆலய பலி பீடத்திற்கருகே ஒரு தெப்பம் உள்ளது.
அதனை பார்த்துக் கொண்டே தாயார் சன்னிதிக்குச் சென்றோம். செண்பகவல்லித்
தாயாராக அன்னை காட்சியளிக்கின்றாள். உற்சவ மூர்த்திக்கு பங்கஜவல்லி என்று
திருநாமம். அம்மையே எங்களைக் காத்து வழி நடத்துமம்மா என்று வேண்டிக்
கொண்டு பிரகாரம் சுற்றிக் கொண்டே மூலவர் சன்னிதிக்குச் சென்றோம்.
மூலவரின் சன்னிதிக்குச் செல்ல இரு வாயில்கள். ஆறு மாதங்கள் இடப்புறமுள்ள
வாயிலிலும், ஆறு மாதங்கள் வலப்புறமுள்ள வாயிலிலும் செல்ல வேண்டுமாம்.
தட்சராயணம், உத்தராயணம் என்று கால நிலைக்கேற்ற வழிகள். படிகளில் ஏறிச்
செல்லவேண்டும். படிக்கட்டுக்களின் தத்துவத்தை ஆலய குருக்கள்
தெரிவித்தார். அவை கீதாச்சாரத்தையும், வேதங்களின் தத்துவத்தை உள்வாங்கி
நிற்பதாகவும் தெரிவித்தார்.
மூலவர் புண்டரிகாக்ஷன் என்னும் திருநாமத்தைத் தாங்கி நின்ற
திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். உற்சவர் செந்தாமரைக் கண்ணன்..
இங்கே பிரம்மனுக்கும் சிவனுக்கும் செந்தாமரைக் கண்ணன் காட்சியளித்து
அருளியதாக ஆலய அர்ச்சகர் தெரிவித்தார்.
பெருமாள் சயனத்திருக்கோலத்தில் காட்சியளித்தால் படுக்கையாகவும், அமர்ந்த
திருக்கோலத்தில் காட்சியளித்தால் சிம்மாசனமாகவும், நின்ற திருக்கோலத்தில்
காட்சியளித்தால் வெண் கொற்றமாகவும் காட்சியளிக்கும் ஆதிசேடன்
இத்திருத்தலத்தில் மானுட உருவில் காட்சியளிப்பது சிறப்பு.  மூலவரின்
எதிரில் மார்க்கண்டேய மாமுனிவர் பெருமாளை வணங்கிய நிலையில்
காட்சியளிக்கின்றார்.
சிபிச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட இவ்வாலயம் மிகவும் பெருமை வாய்ந்தது.
வடநாட்டில் இருந்து மூவாயிரத்து எழுநூறு வைணவர்களை அழைத்து வந்து
குடியேற்றி இவ்வாலயத்தை சிபிச்சக்கரவர்த்தி கட்டினான். ஆலயத்தின்
மூலவரின் கண்களைத் திறக்கும் நாளன்று எதிரில் நிற்கும் பலிபீடம் தலைகீழாக
சுழன்று ஆடியதாம். இதனால் இவ்வாலயத்தின் பலிபீடத்துக்கும் தனிச்சிறப்பு..
ஆலய கும்பாபிடேகத்துக்குப் பிறகு மூவாயிரத்து எழுநூறு வைணவர்களில் ஒருவர்
இறந்து விடவே சிபிச்சக்கரவர்த்தி வருத்தமுற்றான். அச்சமயத்தில் திருமால்
தானே ஓர் வைணவனாக வடிவெடுத்து வந்து சக்கரவர்த்தியின் மனக்குறையைத்
தீர்த்தான்.
நாதஸ்வரம் இசைக்கும் கலைஞர் ஒருவரை ஆலயத்தில் கூடியிருந்தோர் "நீர்
வாசிப்பது நன்றாக இல்லை" என்று கூறிவிடவே வருத்தமுற்ற அவர் தனது நாவை
வெட்டி அந்த பலிபீடத்தில் எறிந்தார். அன்றைய தினம் நைவேத்தியத்தை
பெருமாள் புறந்தள்ளினார். தன் பக்தனான அந்த நாதஸ்வர கலைஞருக்கு நாவை
வளரச்செய்து அருளினார். பின்னரே திருவமுது உண்டார். பக்தர்களின் பக்தி
மேன்மையை உலகுக்கு உணர்த்திய செந்தாமரைக்கண்ணனின் திருத்தலம் இது.
நாங்கள் முதலில் மூலவரைத் தரிசிக்கச் செல்கையில் மகள் அழுது
கொண்டிருந்ததால், மனையாள் அவளை சமாதானப்படுத்திக் கொண்டு வெளியில்
அமர்ந்திருந்தாள். மகளின் அழுகை நின்றபின் அவர்களோடும் ஒருமுறை உள்ளே
சென்று செந்தாமரைக் கண்ணனைத் தரிசித்தேன். ஆலய அர்ச்சகர்
திருமங்கையாழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பாடினார்.
ஆலயத்தின் தீர்த்தங்கள் பற்றியும் அறிந்தோம். இங்கே ஏழு புண்ணிய
தீர்த்தங்கள் உள்ளன.. அவற்றின் பெயரையும் அர்ச்சகர் மொழிந்தார். மனம்
முழுதும் கண்ணனின் பால் ஈடுபட்டிருந்ததால் அவற்றின் பெயர் மனத்தில்
நிற்கவில்லை. ஒரு புண்ணிய தீர்த்தம் புத்திரபாக்கியம் தரவல்லதாம். வைணவ
உபன்யாசர் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் பெற்றோர்களும்,
இத்தீர்த்தத்தில் நீராடிய பின்னரே தங்களின் பேர் பெற்ற மகனை
ஈன்றெடுத்தார்களாம்.
வராக அவதாரத்துக்குரிய திருத்தலமாக இது போற்றப் படுகின்றதென்று
அறிந்தோம். ஆலய பலிபீடத்தருகேயுள்ள தீர்த்தத்தில் மழை நீர்தான்
தீர்த்தமாக உள்ளது. பண்ணிய பாவங்களையெல்லாம் தீர்க்கும் தீர்த்தம் இது.
இது ஆலயம் கட்டிய நாள் முதற்கொண்டு இதுவரை வற்றியதில்லையாம். வறண்டு நீர்
குறைந்து கொண்டு போகும் வேளையில் மழையை அனுப்பி இதை நிரப்பி விடுவார்
பெருமாள். தினமும் பெருமாளுக்கு அபிடேகத்திற்குரிய நீரை இத்தீர்த்ததில்
இருந்துதான் கொண்டு செல்கின்றார்கள். மேலும் உற்சவத்தின் போது,
பொதுமக்கள் எல்லோரும் உற்சவரின் திருப்பாதத்தைத் தொட்டு வணங்கும் பேறும்
கிட்டுகின்றதாம்..
விஜயராகவனும், விஜய் ஆனந்தும் தங்கள் மாலை சந்தியாவந்தனத்தை இந்த
தீர்த்தத்தில் செய்தனர். இத்தீர்த்ததில் நமது பாதங்கள் படக்கூடாது.
ஏனெனில் இதன் நீர்தான் பெருமாளுக்கு அபிடேகத்திற்கு கொண்டு செல்லப்
படுகின்றது. அவர்கள் தங்கள் சந்தியாவந்தனத்தை நிறைவு செய்ய, நாங்களும்
சற்றே நீரை எடுத்து எங்கள் தலையில் தெளித்துப் பாவங்களைப் போக்கிக்
கொண்டோம்.  அங்கிருந்து புறப்பட்டோம்...
அடுத்த திவ்ய தேசம் உத்தமர் கோவில்.. அதைப் பற்றி அடுத்த மடலில்...
"ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம்
வேறுவேறாக வில்லது வளைத்தவனே யெனக்கருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த
தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றோனே..." இது
திருமங்கையாழ்வாரின் திருமொழி...