வியாழன், ஜனவரி 26, 2012

பாரதக் குடியரசே வாழி!

பாரதக் குடியரசே வாழி!

எங்கும் நிறைந்தருள் தேவி
எனையாளும் பாரத தேவி
நின்றன் இணையடி போற்றும்
கந்தன் வாய்மொழி கேளாய்...

தன்னிலை மறந்தோர் கையில்
நின்றனைத் தந்தோம் யாமே!
தந்ததால் வந்ததே தொல்லை
சொந்தமாம் பாரதம் அவர்க்கே!

எவ்விடம் காணினும் செம்மையென
அவ்விடம் அவரே மொழிந்தார் ஆயின்
இவ்விடம் காணும் ஏழ்மை தனை
எவ்விடம் போவெனச் சொல்வேன்?

அன்னம் சமைத்திட அரிசி அதுபெற
கன்னம் வைத்திடும் கள்வர் மிகை
பொன்னும் பொருளும் போகும் இவ்
வின்னல் களைவார் யாரோ?

பொய்யொடு களவும் சூதும் இங்கு
மெய்யென உள்ளது கண்டே
இன்புறும் மாந்தர் கண்டு இன்று
என்பு தோலானோம் யாமே!

முடியாட்சி முடிந்து  இங்கு
குடியாட்சி வந்த பின்னும்
முடியாத சோகம் இன்னும்
வடியாத நீராய்த் தானே!

மொழியாலே பிளவு சொல்லி
இழிவான நிலைக்குச் செல்லும்
பழி தாங்கும் பரத தேவி
சுழி மீளும் நாள்தான் யாதோ?

எங்கும் சுதந்திரம் என்றிட்ட போது
பொங்கு தமிழர்க்கு இல்லையே ஆழியில்!
நம்மவர் செல்லும் தோணி மீளும்
நம்பிக்கை யில்லை நிதமே!

"என்னவோ குடியரசு தினமாம்"
எதிர் வீட்டுப் பையன் சொன்னான்.
"என்னடா அது?" வென வினவ
"அன்னதும் அரசினர் விடுப்பே"
என்றவன் மொழிந்திடல் கேட்டு
இன்றைக்கு நகைத்தோம் யாமும்
இன்னலைத் தீர்த்திடும் நாளை
என்றைக்குக் காண்போம் நாமும்?

வல்லவர் மட்டும் வாழும் என்றும்
நல்லவர் தீதே காணும் எங்கள்
பரதக் குடியரசே வாழி.......
வாழ்க பாரதம்...

வெள்ளி, ஜனவரி 13, 2012

ஓர் இசைப்பாட்டு (பொங்கல் வாழ்த்துக் கவிதை.. ஐயா நடராசனிடமிருந்து)

நம் கவிதைக்கு இசைவாக அழகுதமிழில் நல்லதொரு கவிதையினை வடித்துள்ளார் ஐயா
கல்பட்டு நடராசன் அவர்கள்.. நண்பர்களுக்கா அன்னாரது கவிதை....
From: Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

அபிராமி மகன் கந்த சாமி
நாக ராஜன் அழைத்தால்
சிவகாமி பேரன் கல்பட்டு
நட ராஜன் நானும் அழைத்திடல் வேண்டாமோ
அத் தை மகளை

வா வா தை மகளே வா வா
வா வா என் அத்
தை மகளே வா வா

சிந்தை யெல்லாம் உன் மேல் வைத்தேன்
முந்தைப் பிறவியில் நீ யெந்தன்
இல்லாளாய் இருந்திருக்க வேண்டும்

இத் தை பிறந்தால்
உன் கை பிடிப்பேன்
சொத்தாய் நானுனைக் காப்பேன்

வா வா தை மகளே வா வா
வா வா என் அத்
தை மகளே வா வா

--
நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

வா வா தை மகளே!!!


எற்றைக்கும் குன்றாத புகழோடு - எமை
ஏற்றாளும் எம் அன்னைத் தமிழோடு
வற்றாத நல்லுள்ளம் தான் கொண்டு நமைப்
பெற்றோரும்  உற்றாரும் வாழ்ந்தோங்க
செந்தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் அது
சிந்தையினில் தந்திடுமாம் புத்துணர்வு.

வளமோடு வாழ்வு தர வா வா தை மகளே!
உளமெலாம் பொங்கும் வழி தா தா தமிழ் மகளே!!
புலியெனவே தமிழ் மறவர் தமது நிலையறிந்திடவே
வலிமை தரும் நல்ல தினம் தந்திடு எம் தை மகளே!.

செந்தமிழில் வைதாலும் நல்வரமே தந்திடுவான்
சுந்தரனாம் எங்களன்பு சங்கரனின் தாள் பணிதும்.
வல்வினைகள் தன்னோடு வருவினைகள் மாய்த்திடவே
நல்லதிந்த நாளினிலே நமக்கருளைத் தந்திடுவான்..

மலைமகளாம் எங்களன்னை மீனாளின் தாள் பணிதும்.
கலைகளெலாம் தோன்றிடவே காத்தருள்வாள் கடைக்கண்ணால்..
மாமதுரை தனையாளும் மதங்கர் குலத் தலைமகளே
தாமாளும் தண்டமிழர் நாடிதனைக் காத்திடுவாள்..

தரணியில் தமிழிசை பாடி தைமகளை வரவேற்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
அடியேன் மற்றும் இல்லத்தாரின் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்...