செவ்வாய், பிப்ரவரி 08, 2011

அன்பே வா அருகிலே... (2)

கரையடி நல்லூர்..
மணிமுத்தாறு நீண்ட தூரம் ஓடிக் களைத்து உற்சாகமின்றி அமைதியாகக் கடக்கும் ஊர்..
ஊரின் பெயருக்கேற்றபடி நல்லோர்கள் வாழ்ந்திருந்தார்கள் முற்காலத்தில்.. அக்காலத்தில் மணிமுத்தாறும் உற்சாகத்தோடு கரைபுரண்டு ஓடியதாம்..
காலவெள்ளத்தில் நல்லூரின் நல்லோர்கள் மறைந்துவிட, காத்திருந்தாற்போல் மணிமுத்தாற்றின் நீரோட்டமும் குறைந்து விட்டது போலும்..
முற்காலத்தில் பெரியார் கள்ளுக்கு எதிராக புரட்சி செய்த போது, கரையடி நல்லூரின் மக்களும் திரண்டு வந்து சத்தியம் செய்த காட்சி பேச்சியம்மாளுக்கு இன்னமும் நினைவிருக்கின்றது.
அவளுக்குத் திருமணம் நடந்த ஆண்டுதான் அந்நிகழ்வும் நிகழ்ந்தேறியது..
அவளது கணவன் செல்லத்துரையும் கள் இறக்கும் தொழிலில்தான் ஈடுபட்டிருந்தான்.  அப்போதுதான் ஊருக்குள் அந்த பேச்சு நிலவியது..
"எலேய்.. நம்ம ராமசாமி நாயக்கரு அவரோட தென்னமரத்த எல்லாம் வெட்டித் தள்ளிப் புட்டாருமுல்லா?"
"என்னத்தல சொல்லுத... "
"கள் குடிக்கிறது தப்பாம்லா.. அதுக்குத்தான்..."
ஊரே பேசிக்கொண்டது... இறுதியில் ஊரின் தலைவராக இருந்த பொன்னையா நாடார் மக்களை அழைத்துப் பேசி யாரும் கள் இறக்கக் கூடாது என்றும், கள் அருந்தி விட்டு ஊருக்குள் வரக்கூடாது என்றும் அறிவித்தார்.
ஊரின் இளசுகளுக்கு அது கொஞ்சம் வருத்தமாக இருந்தது என்றபோதும், பெரிசுகளை எதிர்த்துப் பேச யாருக்கும் தைரியமில்லாததால் ஒத்துக் கொண்டனர்..
கள் இறக்கும் தொழிலை விட்டதற்கு அடையாளமாக ஊரின் நடுவில் ஓர் திடல் கட்டலாம் என்று முடிவு செய்யப் பட்டது. அதற்கும் கரையடி மாடனின் பெயரையே வைத்துக் கட்டினர்..
இன்று அந்தக் கட்டடம் சூதாடிகளின் வசத்தில்..
அந்த வழியாகக் கடைக்குச் செல்லும் போதெல்லாம் பேச்சியம்மாளின் கண்கள் கலங்கும்..
"அடப் பாவி முடிவான்வளா... எப்பிடி இருந்த ஊரை இப்பிடிச் சூதாடிக் கெடுக்கான்வளே.." என்று அங்கலாய்த்தபடி செல்வாள்..
கள்ளுக்கு எதிராக புரட்சி செய்த பொன்னுசாமி நாடாருக்கு வாரிசுகள் இல்லை...
அவரது விளைநிலங்களை எல்லாம் அவரது பங்காளிகள் பங்கிட்டுக் கொண்டனர்.
ஆனால் அவர் குடியிருந்த வீட்டை மட்டும் யாரும் பங்கு போட வரவில்லை... அங்கே பொன்னுசாமி நாடாரும் அவரின் மனைவி பால்கனியும் இன்னும் ஆவியாக வாழ்ந்து வருவதாக ஒரு வதந்தி...
மின்சாரம் கரையடி நல்லூருக்கு வந்த பிறகு பேய் பயம் குறைந்திருந்தது.. ஆனாலும் பொன்னுசாமி நாடாரின் வீட்டை நெருங்க யாருக்கும் தைரியம் வரவில்லை..
இந்த சமயத்தில்தான் ஊரில் குடியேறினான் ஆறுமுகம். அவனுக்கு இந்த பேய் பயம் இல்லை...
அவன் பொன்னுசாமி நாடாரின் வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே போனதைப் பார்த்ததாக ஊருக்குள் அனைவரும் பேசிக் கொண்டனர்..
சில நாட்களில் அந்த வீட்டிலிருந்து புகை வெளிவரத் தொடங்கியது..
விசாரித்ததில், ஆறுமுகம் சாராயங்காய்ச்சுவதில் கில்லாடியாம். எனவே அங்கே இருந்து சாரயத்தைக் காய்ச்சி விற்பதாகப் பேச்சு..
"இந்த எலவெ  எவனும் தட்டிக் கேக்க மாட்டியலா?" பேச்சியம்மாள் கேட்டாள்.. ஆனால் அவள் பேச்சைக் கேட்க யாரும் தயாரில்லை.
"நம்ம நெம்பர் வீட்டுக்குப் போய் சொல்லுதேன்" என்று அவள் ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டைத் தேடிச் சென்றாள்..
அவள் போன சமயத்தில் ஆறுமுகம் அவருக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தான்..
போனவள் அப்படியே திரும்பினாள்..
"ஏ கெளவி... நில்லு..." ஆறுமுகம் அழைத்தான்.
"என்னலே... கெளவிங்கே...?"
"பெறவு.. நீ யென்ன பதினாறு வயசுக் கொமரியா?.. இங்க பாரு... சாராயம் காச்சுவேன்.. பெட்டிசன் கொடுக்கேன் அது இதுன்னு யாரையாவது பாத்தே... கொன்னே போடுவேன்..." ஆறுமுகத்தின் குரல் இன்னமும் பேச்சியம்மாளின் காதுகளில் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றது..
உயர் மனிதர்களை நாடிப் புகாரளித்தால் பயனில்லை என்றுதான் அவள் கரையடி சுடலைமாடசாமியை நாடினாள்...
"கரையடி மவராசா... இந்த நல்லூரை நாசம் பண்ணுறத நீரும் பாத்துக்கிட்டிருக்கீறோ? இறங்கி வாருமய்யா.. இவனுவள நாசம் பண்ணும்" இவளின் வேண்டுதலுக்குப் பின்னரும் சுடலைமாட சாமி அந்த உதட்டோரப் புன்னகையோடு அப்படியேதான் நின்று கொண்டிருக்கின்றார்...

பள்ளிக்குச் சென்ற சுப்பம்மா திரும்பி வந்து விட்டாள்..
"பாட்டி நாம்போயி ஆட்டப் பத்திட்டு வந்துருதேன்..."
"பாத்துப் போலா... "
"நம்ம ராசாங்கம் பாட்டியும் இன்னிக்கு நம்ம வெளைலதான் ஆட்ட விட்டிருந்தாவ... அவியளையும் கூட்டிட்டுப் போறேன்.."
சொல்லிவிட்டு நகர்ந்தாள்..
ராசாங்கம் பாட்டியும் சுப்பம்மாவும் விளைக்குச் சென்று ஆடுகளைத் பத்திக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர்..
"ஏம்பாட்டி.. அந்த அத்தத்து வீட்டுலருந்து பொக வருதுல்லா... அங்க என்ன செய்தாவ?"
"சும்மா கெடலா... நம்ளுக்கு எதுக்கு அதெல்லாம்... வாயப் பொத்திட்டு வா..."
சுப்பம்மா எத்தனையோ முறை கேட்டும் ராசாங்கம் பாட்டி அதைப் பற்றிச் சொல்லவே இல்லை...
இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்..
"ஏலா. கரையடி வருது.. கொஞ்சம் பாத்து வா..."
"சரி பாட்டி.." சுப்பம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் திடீரென அந்த சத்தம் கேட்டது...
"காப்பாத்துங்க... காப்பாத்துங்க..."
"பாட்டி என்ன சத்தம் அது? யாரோ அலமறிக்கிற மாதி இருக்கு?"
"எலா. வெரசாப் போயிருவோம்.. கருக்கலாயிட்டு.. என்ன சத்தமின்னி தெரியல.." ராசாங்கம் பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில்தான், அது பறந்து வந்து அவர்கள் முன்னால் விழுந்தது...
அது...

(தொடரும்)

கருத்துகள் இல்லை: