வெள்ளி, மார்ச் 20, 2009

மனோன்மணி

எம் மனதைக் கொள்ளை கொண்ட ஒரு நாடகப் பாத்திரம் பற்றி இவ்விடம் பேசுகிறேன். மனோன்மணீயம் நூலின் நாயகி மனோன்மணியினைப் பற்றிப் படித்தால் நீங்களும் அவளுக்கு விசிறிகள் ஆகிவிடுவீர்கள். தென்பாண்டி நாட்டில் பலரது வீடுகளில் குலதெய்வமாக வணங்கப் படும் மனோன்மணியும் இவளும் ஒன்றோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இந்நாடகத்தில் வரும் நற்கதாபாத்திரங்கள் அனைத்தும் "பாண்டிய நாட்டின் குலக் கொழுந்தான" மனோன்மணியைக் காப்பதற்கே முயற்சி மேற்கொள்ளும்போது எனக்கு வியப்பு ஏற்பட்டது.. அவளிடம் ஏன் இவர்களுக்கு ஈர்ப்பு என்று.. ஆனால் கதை செல்கின்ற போக்கில் நானும் அவளால் ஈர்க்கப் பட்டேன்.சிவ வழிபாடு செய்து, அவனை நாடியிருப்பதே இன்பம் என்று அரண்மனையிலும் துறவு வாழ்க்கை வாழ்கிறாள் நாயகி. பஞ்சு மெத்தை இருக்கும் போதும் அவள் துயில் கொள்வது வெறுந்தரையில்... அவளது தோழி வாணி தன் காதலைப் பற்றியும் காதலன் நடராசன் பற்றியும் பேசும் போது, காதலை இகழும் மனோன்மணிக்கு ஓரிரவில் காதல் சுரம் ஏற்படுகிறது. கனவில் கண்ட மறவன் மாமன்னன் பெயரென்ன என்று அறியாது துடிக்கும் இம்மானுக்கு சுரமேற்பட, காரணம் அறியாது அரசன் தவிக்கிறான். குல குரு சுந்தர முனிவர் சுரத்தின் தன்மையறிகிறார். இளவரசிக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்யச் சொல்கிறார். சேரநாட்டுத் தலைவன் புருடோத்தமனை முன் மொழிகிறார். திருமண ஏற்பாடு அமைச்சன் குடிலன் சதியால் போராக மாறுகிறது. போரில் பாண்டியன் தோற்றுவிட்ட தருணத்தில் அனைவரும் மனோன்மணியைக் காக்கவே முயல்கின்றனர். அமைச்சனும் தந்திரமாகத் தமது மகனுக்கு மனோன்மணியை மணமுடித்து வைக்க அரசனைத் தூண்டும் போது மதிகெட்ட மன்னவனும் மனமிசைந்து விடுகிறான். தன் மகளிடம் இதற்காக அவன் வேண்டும் போது, அவள் மன்னனிடம் கேட்ட இருவரங்களில்தான் மனோன்மணியின் தன்மை வெளிப்படுகிறது. தனக்கு ஆபத்து நேரிட்ட போதும், தன்னை அண்டியவருக்கு நல்லது செய்ய வேண்டியது தெய்வத் தன்மை. அத்தெய்வத் தன்மை பூண்டவளாக மனோன்மணி எனக்குக் காட்சியளித்தாள். அவளைத் தெய்வமெனவேக் கொண்டாடினேன் அக்கணத்தில்,....அவள் கேட்ட வரம் இதுதான். "தனது தோழி வாணி அவள் காதலனோடு சேர்த்து வைக்கப் பட வேண்டும். சூழ்ச்சியால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தன் தோழன் நாராயணன் விடுதலை செய்யப் பட வேண்டும்" இவ்விரு வரங்களையும் அவள் கேட்ட சூழலை நீங்கள் கண்டீர்களாலானால் கண் கலங்கி விடுவீர்கள். காதலை வெறுத்த அவளுக்கும் ஒரு அறியாத அழகனோடு காதல் பிறக்க, மன்னன் மகளாலானும், மங்கையரின் காதல் சுதந்திரம் பெற்றோர் கையில் என்றறியும் வேளையில் குமுறுகிறாள். தந்தையையும் நாட்டையும் காக்கவே தன் காதலை மறந்து விட்டு, தந்தை சுட்டிய அமைச்சன் மகன் பலதேவன் இழிவானவன் என்று தெரிந்தும் அவனை மணக்க இசைகிறாள்..
"நீ உன் காதலனோடு இணையாவிட்டால் நானும் நடராசனும் மணம் புரிவதில்லை" என்று அழும் தோழிக்கு ஆறுதல் கூறி அவர்கள் மணம் முடிக்கும் நல்வாய்ப்பினை வரமாகப் பெறுகிறாள். மறவர்களின் ஆதரவோடு புரட்சியில் ஈடுபட்டான் என்ற பழியியனை சுமந்த தன் தோழனுக்கு விடுதலை பெற்றுத் தருகிறாள்.இத்தன்மைகள் அவள் பெற்றிருந்த காரணத்தால்தான் அனைவரும் அவளைத் தெய்வமெனக் கொண்டாடினார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.. ஆயினும் வழக்கம்போல் இறுதிக் காட்சியில் தன் நாயகனைக் கண்டதும் காதல் பெருகிட ஓடி சென்று அவன் மார்பில் மயங்கி விழும்போது, அறியாத ஆனந்தத்தோடு நமது கண்களும் பனிக்கின்றன. சேரமன்னனும் முன்னரே இவளைக் கனவில் கண்டு காமுற்றவனாகையால், இருவரது காதலும் இறுதி வேளையில் கை கூடுகின்ற போது, சொல்லவொண்ணா ஆனந்தமேற்படுகிறது...வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் மனோன்மணீயம் படித்துப் பாருங்கள்..

2 கருத்துகள்:

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

தந்தையின் நலனுக்காக, தன் காதலையே தியாகம் செய்து, அச்சமயத்திலும், தன் தோழர்கள் நலனுக்கென்று காரியங்கள் செய்கின்ற தன்மை யாருக்கு வரும். ?
மனோன்மணியினைப் படித்த பின் அவள் மேல் பைத்தியமானேன். இது போன்றதொரு பெண்ணைக் காண இயலுமா என்று மனம் தவித்தது....
இச்சமயத்தில்தான் எமது தமைக்கையார் தனது பெண்மகவை ஈன்றெடுத்தார். அவரிடம் மகளுக்கு "மனோன்மணி" என்று பெயரிட நான் சொன்ன போது அது நிராகரிக்கப் பட்டது..
வாழ்வில் அப்படிப் பட்ட ஒரு பெண்ணையும் சந்தித்தோம். தன் பெற்றோருக்காகக் காதலையும் காதலனையும் விட்டுப் பிரிந்த அவள் சொன்ன ஒரு வாக்கியம் இன்றும் செவிகளில் ஒலிக்கின்றது...
"இருவர் சந்தோசத்துக்காக இணைவது மட்டுமல்ல.. மற்றோர் நலனுக்காகப் பிரிவதிலும் உண்மைக்காதல் வாழ்கிறது" இதுதான் அந்தப் பெண் சொன்னது..
ஆட்டோகிராப் படத்தில் "தாய் தந்தைக்காக எனைப் பிரிய.. காதலைக் காகிதமாய்த் தூக்கி எரிய பெண்ணே உன்னால் முடிகிறதே...." என்ற பாடலைக் கேட்கும் பொழுது அவளின் நினைவுகள்தான் எழும்..

அகரம் அமுதா சொன்னது…

புதிய வலை துவங்கியிருக்கும் நண்பர் கந்தசாமி நாகராஜன் அவர்களுக்கென் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.