திங்கள், மார்ச் 14, 2011

நமக்கு அறிமுகம் ஆகிய புரந்தரதாசர் மற்றும் கனகதாசர்.

புரந்தர தாசரை இறைவன் எவ்வாறு தன்னகத்தே ஈர்த்து ஆட்கொண்டான் என்பதைக் கடந்த மடலில் எழுதியிருந்தோம். புரந்தரதாசரின் காலத்திலேயே இன்னொரு ஹரிதாசரும் தன் பாடல்களின் மூலம் பக்தியை வளர்த்திருக்கின்றார். அவர்தான் கனகதாசர்.
கர்நாடக இசையில் இவரது பெயரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. குருபர கௌடா எனப்படும் ஆயர் குலத்தில் பிறந்த இவரது வாழ்க்கை வீரம் நிறைந்தது.. கனகதாசரின் இயற்பெயர் திம்மப்ப நாயக்கர். கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தின் படா என்னும் கிராமத்தில் பிறந்த இவர் இளமையில் போர்வீரனாக உருவாக்கப் பட்டார்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர் தமது வீரத்தைப் போர்க்களத்திலும் நிரூபித்தார். ஒரு போரின் போது காயப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். அதன் பின்புதான் அவரது வாழ்க்கை பக்தி நெறிக்குத் திரும்பியது. காகிநெலே என்னும் ஊரில் உள்ள ஆதிகேசவ பெருமானுக்குத் தன்னைத் தாசனாக்கிக் கொண்டார்.
பல இடங்களுக்கும் சென்று பக்தி நெறியைத் தனது பாடல்களின் மூலம் பரப்பினார்.  ஒருமுறை தனது குருவின் ஆணையை ஏற்று உடுப்பியில் உள்ள கண்ணனின் ஆலயத்துக்குச் சென்றார். 
"கண்ணா.. உன்னைக் காண வந்தேன்..." என்று ஆவலோடு அவர் ஆலயத்துக்குள் நுழைய முற்பட்ட போது, கண்ணன் அவரது பெருமையை உலகுக்கு அறிவிக்கத் திருவுள்ளம் கொண்டான்..
உள்ளே நுழைந்த கனகதாசர் ஆலய அர்ச்சகர்களால் வழி மறிக்கப்பட்டார்..
"எங்கே நுழைகின்றாய்?"
"கண்ணனைக் காண... அவன் திருவடி தொழ..."
"கீழ்ச்சாதியில் பிறந்தவனே... அப்படியே வெளியே போ... உன்னைப் போன்றோர்கள் அவனைக் காண்பதற்காகத்தான் உற்சவமே நடத்துகின்றோம். அப்போது கண்ணன் வெளியே வருவான்.. நீ அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீ உள்ளே நுழைந்து ஆலயத்தைத் தீட்டுப் படுத்தாதே.." கொடுஞ்சொற்கள் வேலாய்க் குத்தியது கனகதாசரை...
"அண்ணலே... என் ஈசனே... உன்னைக் காண்பதற்குத் தடையா... என்னைப் படைத்தவனும் நீதானே... எதற்கு இந்த சோதனை..." என்று அழுதவாறே வெளியேறினார் கனகதாசர்..
ஆலயத்தை விட்டு வெளியேறினாலும் மனது கண்ணனையே சுற்றி சுற்றி வந்தது..
"கண்ணா... நான் செய்த பிழை என்ன..? பூணூல் அணியாதா சாதியில் பிறந்தது நான் செய்த குற்றமா?" மனம் நொறுங்கியது...
தன்னை மறந்தார்...
ஆலயத்தில் வெளிப்புற மூலையின் நின்று கொண்டிருந்தார்..
"கண்ணா நீ எப்போது வெளியே வருவாய்... நீ வெளியே வரும்போதாவது உன்னைக் காண்கிறேனே..."கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது..
"கண்ணா... கதவைத் திறந்து இந்த ஏழைக்குத் தரிசனம் கொடு.." என்று கதறியழுதவாறே கீர்த்தனையைப் பாடினார்...
"பாகிலனு தெரது சேவயெனு கொடு ஹரியே..
கூகிதரு தொனி கேளலில்லவே நரஹரியே..."
கண்ணீரை வரவழைக்கும் அற்புதப் பொருள் நிறைந்த பாடல் இது... பாடல் முழுமையையும் ஓர் கன்னட அன்பரிடம் கேட்டுள்ளேன்.. அவர் தந்தவுடன் பொருளுடன் பதிவு செய்வோம்...  இந்த இருவரிகளுக்குமான பொருள் இதுதான்..
"நடை திறந்து உன் திருக்காட்சியெனும் சேவையைக் கொடு ஹரியே....
நான் அழைக்கும் குரல் உனக்குக் கேட்கவில்லையா நரஹரியே..."
தன்னை மறந்து பக்தியில் மூழ்கி கண்ணீர் மல்கி கீதம் இசைத்தார் கனக தாசர்...
அன்பர்க்கு அன்பனாம், அடியார்க்கு அடியானாம் நம் கண்ணன் கனகதாசரின் கண்ணீர் கண்டு பொறுப்பானா?
அதிசயம் நிகழ்த்தினான்.
கனகதாசரின் அன்புக்கு இரங்கினான்...
அண்டம் குலுங்கியது....
பூமி அதிர்ந்தது...
அதிர்ச்சியில் ஆலயத்தின் சுவற்றில் விரிசல் விழுந்தது... கனகதாசர் எத்திசையில் நின்று கொண்டிருந்தாரோ அத்திசையை நோக்கியிருந்த சுவர் உடைந்து விழுந்தது...
அதுவரை கிழக்கு நோக்கி நின்றிருந்த கண்ணனின் திருவுருவும் மேற்கு திசை நோக்கித் திரும்பியது..
உடைந்திருந்த சுவற்றின் வழியே கனகதாசருக்குத் தன்னைக் காட்டினான் கண்ணன்...
"கண்ணா... கண்ணா.... இந்த ஏழை தாசனுக்கு இரங்கி நீயே இப்பக்கம் திரும்பி விட்டாயா.... என்ன தவம் செய்தேன் நான்..." அதுவரை துக்கத்தோடு அழுது கொண்டிருந்த கனகதாசரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடத் துவங்கியது..
கனகதாசரைத் தடுத்து நிறுத்திய ஆலய அர்ச்சகர்கள் தலை குனிந்தனர்...
இனிமேல் அனைவருக்கும் இந்த உடைந்த சுவற்றின் வழியேதான் தரிசனம் என்று மொழிந்தான் கண்ணன்..
அந்த இடத்தில் அழகிய ஜன்னலை வைத்திருக்கின்றார்கள். இன்றைக்கும் கண்ணனை அந்த ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க இயலும். கருவறையின் வாயிலில் அவனது பின்புறம்தான் தெரியும். அந்த ஜன்னலும் "கனகதாசரின் ஜன்னல்" என்றுதான் அழைக்கப் படுகின்றது..
வெள்ளிக் கிழமைகளில் "வஜ்ரலங்காரா" என்று சொல்லி வைரங்களால் கண்ணனை அலங்கரிக்கின்றார்கள்.. நாமும் ஓர் வெள்ளிக்கிழமையன்றுதான் உடுப்பி கண்ணனின் தரிசனத்தைப் பெற்றோம்..
ஆலயமும் சுத்தமாக இருக்கின்றது.. கண்ணனுக்கு பூமாலை தொடுத்துக் கொண்டிருப்போரும் பாடல் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.. என்னவென்று வினவியபோது, அங்கே கண்ணனுக்கு செலுத்தும் அனைத்தும் பரிபூரண பக்தியுடனே படைக்கப் பட வேண்டும். பூமாலை தொடுக்கும் போது நம் கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களும் பாடல் பாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று விடை வந்தது...
நம் தமிழகத்து ஆலயத்தார் கவனிக்க வேண்டிய செய்தி இது...
கடந்த டிசம்பர் மாதம் திருக்கடவூர் ஆலயம் சென்றிருந்தோமில்லையா... அச்சமயத்தில், மாலை வாங்குவதற்காக நானும் ஐயா காளைராசன் அவர்களும் சென்றோம்.. லுங்கி உடுத்திய ஒரு மனிதர்தான் கடையில் அமர்ந்திருந்தார்.. அவரது நெற்றியிலும் திருநீறு இல்லை...
ஐயா காளைராசன் அவர்கள் "ஐயா கோயிலில் வியாபாரம் செய்கின்றீர்களே... திருநீறு அணியக் கூடாதா? வேட்டி கட்டலாம் இல்லையா?" என்று கேட்டார்..
"நான் இந்துதாங்க... லுங்கி கட்டுனதால என்ன முஸ்லீம்னு நெனைக்காதீங்க... இந்துதான்... " என்று சொன்னார்..
அவர் இந்துவா முஸ்லீமா என்பது நம் பிரச்சனை அல்ல... இந்துவானாலும், முஸ்லீம் ஆனாலும் யார் கரங்களால் கொடுத்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான்.. ஆனால் பரிபூரண பக்தி வேண்டும்... கத்தரிக்காய் மிளகாய் வியாபாரம் அல்ல ஆலயத்துக்குப் பொருட்களை விற்பனை செய்வது... இந்த பரிபூரண பக்தியை உடுப்பி கண்ணனின் ஆலயத்தில் கண்குளிர காணலாம்...
வருவோருக்கெல்லாம் அன்னதானம்...
அந்த வெள்ளியின் மதிய உணவை அங்கே உண்ணும் பாக்கியம் பெற்றோம்..
கோயிலில் உண்டால் அதற்குப் பரிகாரமாக ஏதாவது செய்யவேண்டும் என்று உடன் வந்திருந்த வாழும்கலை ஆசிரியர் சொல்ல, அங்கிருந்த மடத்திற்கு சென்றோம். மடத்தின் தலைவர் சுவாமிஜியின் கையில் காணிக்கைகள் கொடுத்தோம்..
ஒரு பலகை போட்டு அமர்ந்திருந்தார்..
காணிக்கை கொடுப்போருக்கு அவர் தனது கரங்களால் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்.
அங்குள்ளோர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..
"சுவாமியிடம் மிகவும் நெருங்கிச் செல்லக் கூடாது.. எட்ட நின்று கையை கீழே நீட்ட வேண்டும். அவர் பிரசாதம் கொடுப்பார்" என்று..
கையை நீட்டினோம்.. பிரசாதம் வந்து விழுந்தது.. நம்மைத் தொட்டு விட்டாலோ.. நெருங்கி விட்டாலோ தீட்டாம்...
"அட நம் கண்ணனே திரும்பி விட்டான்... நீங்கள் இன்னும் திரும்பாமல் இருக்கின்றீர்களே..." என்று மனத்தில் எண்ணியபடியே வெளியே வந்தேன்...
ஆக... கண்ணப்பர் சரித்திரம் ஆகட்டும்... நந்தனார் சரித்திரம் ஆகட்டும், கனகதாசரின் சரித்திரம் ஆகட்டும், யாருக்கும் இறைவனே இரங்கினாலும் சரி... மனிதர்கள் மட்டும் மாறுவதே இல்லை என்பதுதான் உண்மையாகிக் கொண்டிருக்கின்றது...
குறைந்த பட்சம் நாமாவது விழிப்புடன் இருப்போம்.. சாதி என்னும் பேயை மண்ணில் இருந்து தூர ஓட்டுவோம்..
தாசர்களில் பாடல்களில் நம் மனத்தில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பாடல்களையும், அவற்றிற்கு நம்மால் இயன்ற மொழி பெயர்ப்பையும் அடுத்த மடலில் வழங்குவோம்... மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

கருத்துகள் இல்லை: