சனி, மார்ச் 26, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

நண்பர்கள் வந்தார்கள். தாங்கள் சென்ற திருத்தலங்களின் பெருமைகளைக் கூற
ஆரம்பித்தார்கள். திருஅன்பில் திவ்ய தேசத்தில் அபிஷேகமும் காணப் பெற்ற
பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. கரிகால சோழன் கட்டிய
கல்லணையைக் கண்டு புகைப்படம் எடுத்து வந்திருந்தார்கள். கண்டு
மகிழ்ந்தோம். கோவிலடி அப்பாலரங்கனையும், திருஅன்பில் சுந்தர ராஜனையும்
காணும் பேறு எங்களுக்கு வாய்க்கவில்லையே என்று எண்ணிக் கவலையுற்றோம்.
ஆயினும் எங்கள் நண்பர்கள் எங்களுக்காகவும் வேண்டி வந்த மகிழ்ச்சி...
நண்பர்கள் சற்று இளைப்பாறினார்கள்.

மாலை நான்கு மணிக்கு அறையிலிருந்து புறப்பட்டோம். ஓர் ஆட்டோவில்
அருகிலிருந்த திருவானைக்காவலில் (திருவானைக்கா, திருவானைக் கோவில்,
T.V.கோவில்) உள்ள காட்டழகிய சிங்க பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.
ஆலயத்தின் பெயரே மூலவர் யாரென்பதை உணர்த்துகின்றது அல்லவா? ஆம்.
இவ்வாலயத்தில் பெருமாள் லெட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகின்றார் என்று
சொல்லி அழைத்துச் சென்றான் விஜயராகவன். சற்றே கொளுத்தும் வெயிலில் உள்ளே
நடந்து சென்றோம். இச்சமயத்தில் தாங்கள் வழிபடும் ஆலயத்தைப் பற்றிச் சொல்ல
ஆரம்பித்தான் விஜயராகவன்.

அவர்கள் தங்களின் குடும்ப ஆலயமாக வழிபட்டுக் கொண்டு வரும் தலம் அஹோபிலம்.
இத்தலம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.. பெருமாள் நரசிம்ம அவதாரம்
எடுத்து இரணியனை அழித்த தலம் இதுதான். அங்கே பெருமாள் தோன்றிய தூண்
உள்ளதாம். அதைப் பற்றிக் கேட்கையிலேயே எமக்கு அங்கே சென்று நரசிம்மரைக்
காண வேண்டும் என்ற ஆவல் உண்டானது. "ஒருமுறையாவது அழைத்துச் செல் நண்பா"
என்று கேட்டுக் கொண்டேன். நிச்சயம் அழைத்துச் செல்வதாகக் கூறினான்.
நண்பன் விக்ரம் "அங்கே பெண்கள் எல்லாம் செல்லக் கூடாது " என்று சொல்ல அதை
மறுத்த விஜயராகவன் "அப்படியெல்லாம் இல்லை. எல்லோரும் செல்லலாம். ஆனால்
மலையில் ஏறிச் செல்ல வேண்டும். எங்க மன்னி அங்கே போய்ட்டு வந்த
பின்னாடிதான் அவ கர்ப்பமா இருக்கறதே கன்பார்ம் ஆச்சு.. அந்த நிலையிலயும்
அவளே ஏறி இறங்கிட்டா...எல்லோரும் போகலாம்" என்று சொன்னான்.

இந்நிலையில் நமக்கு ஒரு ஐயம் எழுந்தது.. இரணியன், பிரகலாதன் இவர்களது
இடம் ஆந்திராவென்றால் அவர்களது வம்சாவழியான மகாபலியின் இடமும் அங்கேயே
அல்லவா இருக்க வேண்டும். ஏன் கேரளாவில் உள்ளது...? மனத்தில் உள்ள வினாவை
சிறுவனைப் போல் கேட்டுவிட்டேன். "அப்படியில்லை நண்பா.. அந்த காலத்தில்
அனைத்தும் ஒரே இடமாகத்தான் இருந்தது" என்று சொல்லி பெருமாளின்
பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தான் விஜயராகவன்.. பெருமாள் நரசிம்ம அவதாரம்
எடுத்து இரணியனை வதைத்த பின்னர் பிரகலாதனுக்கு ஓர் வாக்குக் கொடுத்தார்.
உன் பரம்பரையில் இனி யாரையும் நான் கொல்வதில்லை என்று.. இச்சமயத்தில்
நமக்கு கம்பனின் கவிதை நினைவுக்கு வந்தது...
"கொல்லேன் இனி உன் குலத்தோரை குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்
நல்லேன் உனக்கு என்னை நாணாமல் நான் செய்வது
ஒல்லை உளதேல் இயம்புதியால்" என உரைத்தான்
என்று நரசிம்மம் சொல்வதாகக் கம்பன் பாடுவானில்லையா... அப்பாடல்
நினைவுக்கு வந்தது... பக்தன் ஒருவனுக்காக அவன் பரம்பரையையே மன்னித்த
குணமுடையோனைக் காணும் ஆவலில் உள்ளே நுழைந்தோம். பிரகலாதனின்
நற்குணத்தாலும் பக்தியாலும்தான் மகாபலியை இறைவன் கொல்லவில்லை.. அவனை
பாதாள லோகம் அனுப்பினார் என்று விஜயராகவன் சொல்லிக் கொண்டு வந்தான்.

உள்ளே நுழைந்தோம். நடை சாற்றப் பட்டிருந்தது. எங்கள் மூட்டை முடிச்சுகளை
ஓரமாக வைத்து விட்டு பிரகாரம் சுற்றி வரலாம் என்று வெளியே வந்தோம்.
வருகையில் ஒரு அன்பர் எதிர்ப்பட்டார். அவரிடம் ஆலயத்தைப் பற்றி
விசாரித்தோம். "ஐயா.. இந்தக் கோயிலக் கண்டு எல்லோரும்
பயங்கொண்டிருந்தாங்க... நான் கூட இதோ பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில
தான் படித்தேன். அப்பல்லாம் நாங்க இங்க வருவதற்கே பயப்படுவோம்.
நரசிம்மர்னா அவ்ளோ உக்ரம் என்ற எண்ணம் இருந்தது. பின்னர்தான் அவர்க்
கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம் என்பதை பக்தர்கள் புரிந்து
கொண்டார்கள்" என்று சொல்லி மேலும் சொல்ல ஆரம்பித்தார். பக்தர்களின்
அனுபவங்களால்தான் இந்த ஆலயத்தின் சிறப்பு வெளியே பரவ ஆரம்பித்தது
என்றுரைத்தார்.

"எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்து விட்டார்.
இருந்த அனைத்தையும் இழந்து விட்டு வாழ வழியில்லாமல் தற்கொலை செய்யலாம்
என்று முடிவெடுத்து விட்டு இந்தக் கோயிலுக்கு வந்தார். சாமியை வணங்கி
விட்டு வெளியே போய் தற்கொலை செய்யலாம் என்று வெளியேறியபோது அவரது நண்பர்
அமெரிக்காவில் இருந்து வந்தார். இவர் தனது சோகத்தைச் சொன்னவுடன் அந்த
நண்பர் தனது சொந்தச் செலவில் இவருக்காகத் திருச்சியில் ஒரு கம்பெனி
ஆரம்பித்துக் கொடுத்தார். இன்றைக்கும் இவர் நல்ல நிலையில் உள்ளார்."
என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அது உண்மைதான் என்று உணர்த்தும்
வகையில் கௌலி சத்தமிட்டது.. சொல்லிக் கொண்டிருந்த அன்பர் உணர்ச்சிவசப்
பட்டார் "பாருங்கோ.. நான் சொல்றது உண்மை.. அந்த பெருமாளே சொல்லிட்டார்"
என்று உணர்ச்சி பொங்க பேசிய காட்சி இன்னமும் கண்களை விட்டு அகலவில்லை..
மேலும் அவர் "குருக்கள் வந்து நடையைத் திறந்தவுடன் நாம் சென்று தரிசனம்
செய்யக் கூடாது. அவர் விளக்கேற்றிய பின்னர் அழைப்பார். பின்னர்தான் செல்ல
வேண்டும்" என்று கூறினார்.

வெளியே பிரகாரம் சுற்றும்போது அங்கே ஒன்பது துளசிமாடங்கள்
வைத்திருந்தார்கள். "அது என்ன விஜய்..? நவக்கிரகங்களுக்காகவா?" என்று
நான் கேட்டபோது "எனக்குத் தெரியாது நண்பா" என்று சொல்லிவிட்டான். உடன்
வந்திருந்த ஆனந்த்.. "பாருங்கோ நாகராஜ். பெருமாளை சேவிச்சிண்டா சனி
தோசமெல்லாம் ஓடியே போயிடும் தெரியுமோல்லியோ?" என்று சொல்ல, "நமது
தோசங்களும் நீங்க வேண்டும் பெருமாளே" என்று வணங்கிக் கொண்டே அந்த ஒன்பது
துளசி மாடங்களையும் சுற்றி வந்தோம். அப்படியே ஆலயத்தைச் சுற்றி மீண்டும்
உள்ளே நுழைந்து அமர்ந்தோம். ஆலய சுவற்றில் நரசிம்மரின் பல்வேறு படங்கள்
வரையப் பட்டிருந்தன.. அப்போது அவற்றைப் பற்றி விஜயராகவன் சொல்லிக்
கொண்டிருந்தான்.
கோபத்தில், உக்கிரத்தின் உச்சியில், பக்தர்களைப் பாடாய்ப் படுத்தும்
இரணியனை வதைக்க நரசிம்மம் வெளியே வந்தது முதல், இரணியனை அழித்தது, சாந்தி
அடைந்தது, அன்னை மகாலெட்சுமியைத் தன் மடியில் இருத்தியது, பிரகலாதனை
அன்போடு நோக்கியது போன்றவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறினான்...நமக்கோ
கம்பன் தன் பாடல்களால் நரசிம்மத்தை விளக்கியதை நேரில் கண்டது போல்
இருந்தது.. இதற்கு முன்னால் நரசிம்மரின் இத்தனை படங்களை நான் கண்டதே
இல்லை..

"நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும்
ஆக்கையும் தாளும் ஆகி எங்கனும் தானே ஆகி
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா
மேக்கு உயர் சீயம் தன்னைக் கண்டனர் வெருவுகின்றார்" என்று நரசிம்மத்தைக்
கண்டவர்கள் அனைவரும் அஞ்சியதாகக் கம்பன் பாடியது செவிகளில் ஒலித்தது..

பக்தன் என்றால் அது பிரகலாதனை மட்டுமே அல்லவா குறிக்கும்? சிறுவயதில்
அத்தனை பக்தியை அத்தனை நம்பிக்கையை இறைவன் மேல் வைக்க பிரகலாதனையன்றி
யாரால் இயலும்? உலகமே இரணியனைக் கண்டு அஞ்சி அவனை வணங்குகின்றது. ஆனால்
இந்த சின்னஞ்சிறு பாலகன் திருமாலேயன்றி வேறொரு தெய்வம் இல்லை என்று
எத்தனைத் தீர்மானமாக இருந்தான்..பக்தி என்றால் அது பக்தி...திருமாலைத்
தெய்வம் என்று கொண்டாடுவதன் மூலம் தன்னையும், தன் குலத்தையும் பாதுகாத்த
பெருமை கொண்டவனல்லவா?

"என்னை உய்வித்தேன். எந்தையை உய்வித்தேன், நினைய
உன்னை உய்வித்து, இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி"என்றான்
என்று பிரகலாதன் தனது குருநாதரை நோக்கி வினவுவதாகக் கம்பன் பாடுவானில்லையா?

குரு என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டும். அதை அப்படியே பின்பற்ற
வேண்டும். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" எனவே தந்தையார் என்ன
சொன்னாலும் அதைத் தட்டாது செய்வது தனயனின் கடமை.. ஆனால் குரு சொன்னது
"உனது தந்தையே இறைவன்" தந்தை சொன்னது "நாராயணனை வணங்காதே" ஆனால் இந்த இரு
கூற்றுக்களையும் எதிர்த்து நாராயணனே உலகின் கடவுள். அவனையன்றி வேறுயாரும்
தெய்வமாக முடியாது.. நமோ நாராயணாய எனும் பதமே உலகை உய்விக்கும் பதமென்று
பாடிய பிரகலாதனின் பாடல் செவிகளில் ஒலித்தது..

"காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடு உறச்செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய"
பக்தர்களின் தலைவா பிரகலாதா... தங்களின் பக்தியில் கோடியில்
ஒருபங்கையாவது எங்களுக்குத் தந்து உதவக் கூடாதா? நாங்களும் உங்களோடு
பக்தர் கூட்டத்தில் இணைவோமே... நமோ நாராயணாய... நமோ நாராயணாய... மனம்
பிரகலாதனின் பக்தியை எண்ணி பரவசத்தைத் தேடிக் கொண்டிருந்தது...

கதைகள் பேசிக்கொண்டிருந்தோம்.  இச்சமயத்தில் அர்ச்சகர் அழைத்தார்...
மூலவரைக் காண உள்ளே சென்றோம்...

ஆஹா... என்ன பாக்கியம் செய்து விட்டேன் இத்திருக்கோலத்தைக் காண...
உக்கிரம் தணிந்த வேளையில் அன்பு பொங்குமல்லவா?? அந்த அன்போடு நாவை மேலே
நோக்கி நீட்டி தன் மடியில் லெட்சுமியை இருத்தியிருந்தார்... நரசிம்மரின்
கோபந்தணிந்த திருக்கோலம்.. அன்பு பெருக்கெடுத்த திருக்கோலம்... பக்தனை
மீட்ட பெருமிதத்தில் பக்தர்களுக்கருள் புரியும் திருக்கோலம். உன்
வேதனைகள் அனைத்தையும் நீக்கிவிட்டேன் அன்பா... இரணியனின் கோலம் அழிந்தது
போல் உன் வேதனைகளும் அழிந்து போயின என்று சொல்லும் திருக்கோலம்.. இதோ என்
மனையாள் என் தொடையில் இருப்பதால் என்னுள் பொங்கும் அன்பைக் காண் என்று
சொல்லும் திருக்கோலம்... அப்பப்பா.... காட்டழகிய சிங்க பெருமாளின்
தரிசனத்துக்குக் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்....

"செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தா விளக்கை நறுந்தாள் இளங்கொழுந்தை
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பொன்று இல்லாதான்"
தனது சினந்தணிய தன்னை நோக்கி வந்து தன் மடியில் இருந்த லெட்சுமியை
நரசிம்மனார் அளவற்ற அன்போடு நோக்கியதைக் கம்பன் பாடியது நினைவுக்கு
வந்தது.... மகளின் நோய் தீர்க்க வேண்டி நின்றோம்..

ஏற்கெனவே விஜயராகவன் சொல்லியிருந்தான்.. "தாயாருடன் பெருமாள்
இருக்கும்போது அவர் கிட்ட என்ன கேட்டாலும் கொடுத்துடுவார்... ஏன்னா
தாயாரின் அன்பு அவருக்கும் இருக்கும்.. தாயாரின் முன் நல்லது செய்வதைத்
தான் அவரும் விரும்புவார்" என்று.....

அத்தனை நோய்களும் தொலைந்தன... அத்தனை தொல்லைகளும் விட்டொழிந்தன... என்னை
உன் மனத்தில் இருத்திப் போய்வா என்றுரைப்பது போலிருந்தது காட்டழகிய சிங்க
பெருமாளின் திருக்கோலம்...  கண்ணீர் மல்கி ஆனந்தத்துடன் வெளியே வந்தோம்..

மீண்டும் பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கே நாகர்களின் சிலைகள் இருந்தன..
அப்படியே வந்து சக்கரத்தாழ்வாரை வணங்கி வந்தோம். ஒரு தூணில் காட்சியளித்த
வீர ஆஞ்சனேயரை தரிசித்தோம். நெஞ்சில் நீங்காத நினைவுகளுடன் ஆலயத்தை
விட்டு வெளியே வந்தோம்... அடுத்த திவ்ய தேசம் உறையூர்.... அதைப் பற்றி
அடுத்த மடலில்...காட்டழகிய சிங்கனே கற்பனைக் கெட்டாத வல்லோனே... கல்லிலும், மண்ணிலும்,
காணும் இடமெல்லாம் காட்சி தரும் இனியோனே.. பக்தர்களைக் காக்கும்
பரந்தாமனே... உலகத்தை உய்வித்து, அனைவருக்கும் நன்னிலை அளிப்பாயாக.....
நமோ நாராயணாய....

கருத்துகள் இல்லை: