வெள்ளி, மார்ச் 25, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

உத்தமர் கோவில் என்னும் இத்திவ்ய தேசமானது ஸ்ரீரங்கத்திலிருந்து
திருவெள்ளறை செல்லும் வழியில்தான் உள்ளது. திருவெள்ளறை செல்லும் வழியில்
உள்ள பாலத்தின் மேல் பேருந்து செல்கையில் ஆலயத்தைக் கண்டதாக விஜயராகவன்
குறிப்பிட்டான்.

திருவெள்ளறை ஆலயத்தின் மகிமைகளைக் கேட்டுணர்ந்து அந்த செந்தாமரைக்
கண்ணனின் அருள் பெற்று வெளியே வந்தோம். துறையூர் சாலைக்குச் செல்லும்
வழியில் ஓர் பெரியவர், "இங்கேயே வெய்ட் பண்ணுங்கோ.. பஸ் இப்ப வந்துடும்"
என்றுரைத்தார். அங்கே காத்திருந்தோம். இச்சமயத்தில் மகளின் கண் வலி
அதிகமாகியது. (மெட்ராஸ் ஐ என்பதை எங்கள் ஊரில் கண் வலி என்றுதான்
அழைப்போம்). கண்கள் மேலும் சிவந்து கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.
காத்திருந்தோம். பேருந்து வந்தபாடில்லை.. மாலை 7.50 மணிக்கு உத்தமர்
கோவிலில் நடை சாற்றிவிடுவார்கள் என்பதால் நடக்க ஆரம்பித்தோம்.

துறையூர்  சாலையில் பேருந்துக்காகக் காத்திருந்தோம். வரும் பேருந்துகளில்
விசாரித்த பொழுது அவை எதுவும் உத்தமர் கோவில் அருகே நிற்காது
என்றுரைத்தார்கள். இச்சமயத்தில் எங்கள் திருமகள் உதவினாள். ஒரு
பேருந்தில் ஏறி அமர்ந்து ஓட்டுனரிடம் குழந்தையோடு வந்திருக்கின்றோம்
என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அவரும் நிறுத்துவதாக வாக்களித்தார்.
உத்தமர் கோவிலில் இறங்கினோம்..

ஓங்கி உலகளந்த உத்தமனை இந்த உத்தமர் கோவிலில் காணலாம் என்று ஆவலோடு உள்ளே
நுழைந்தோம். இவ்வாலயத்தைப் பற்றிய சிறப்பு விஜயராகவனால் எங்களுக்குச்
சொல்லப் பட்டது. பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்த சிவனாருக்கு அடக்க
இயலாத பசி உண்டாயிற்று. பிரம்மனின் தலையும் அவரது கையில் ஒட்டிக்
கொண்டது. அத்தோசத்தைப் போக்க அவர் பிட்சாடனாராக திருக்கோலம் பூண்டார்.
இத்திருத்தலத்தில் அன்னை மஹாலெட்சுமி தனது திருக்கரத்தால் ஈசனாருக்கு
பிச்சையிட அவரது தோசம் நீங்கியது.. எனவே இத்திருத்தலத்தின் தாயாருக்கு
பூரணவல்லி என்று பெயர்..

ஆலயத்தின் உள் நுழைந்து பூரணவல்லித் தாயாரை மனமுருகி வேண்டினோம். உள்ளே
நுழைகையில் ஆச்சரியம்.. இங்கே ஈசனாருக்கும் திருக்கோவில்.
பிரம்மாவுக்கும் திருக்கோவில்.. விஜயராகவன் "உங்க ஆளு கோயில்
இருக்குப்பா. போய் தரிசனம் பண்ணிட்டு வா.." என்றுரைத்தான். ஆனால் மகளின்
அழுகை அதிகமாகிக் கொண்டிருந்தபடியால் உத்தமரை மட்டும் தரிசனம் செய்து
விட்டு வரலாம் என்று சொல்லி விட்டு மூலவரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

இங்குள்ள மூலவருக்கு புருஷோத்தமன் என்ற திருநாமம். சயனத்திருக்கோலத்தில்
காட்சியளிக்கின்றார். திருவரங்கனைக் காணும் பேறில்லையே என்று எண்ணிய
எமக்கு இந்த உத்தமர் கோவிலில் புருஷோத்தமனாகக் காட்சியளித்து எம்
மனக்குறையைத் தீர்த்தருளினார். நாங்கள் உள்ளே சென்றிருந்த சமயத்தில் திரை
போட்டிருந்தார்கள். சற்றே காத்திருந்து உத்தமரின் தரிசனம் பெற்றோம்.
புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டிருந்த பெருமாளைக் கண்டு ஆனந்துற்று
மகளுக்காக வேண்டிக் கொண்டோம். எனக்குரிய பிரச்சனை என்னவெனில் ஆலயத்தில்
இறைவனை வணங்கும் வேளையில் என்னால் எனக்கு இது வேண்டும் அது வேண்டும்
என்று கேட்பதற்குத் தோன்றுவதில்லை. இறைவனின் திருக்காட்சியைக் கண்டதும்
மெய்மறந்து, மனமுருகி தரிசனம் செய்வது மட்டுமே நினைவில் நிற்கின்றது..
ஆலயத்தை விட்டு வெளியே வரும்போதுதான் "அயயோ மறந்து போனோமே.." என்று
மனந்துடிக்க ஆலயத்தின் திருவாசலை நோக்கி வேண்டிக் கொண்டு வருவேன்..

உத்தமர் திருக்கோவிலில் அந்த புருஷோத்தமனையும், பூரணவல்லித் தாயாரையும்
தரிசித்து விட்டு அறைக்கு வந்து சேர்ந்த சமயத்தில் மகளின் அழுகை மிகவும்
அதிகமாகி இருந்தது. என்ன செய்தும் சமாதானப் படுத்த இயலவில்லை.
மிகச்சிறுவயதில் அவளுக்குத் தொல்லைகள் தருகின்றோமோ என்று ஒரு எண்ணம்
தோன்றியது.. இல்லையில்லை... அவளது சிறுவயதில் இது நாம் அவளுக்குத் தரும்
பேறு என்று மனத்தை மாற்றிக் கொண்டேன்..

இரவில் தம்பதியராகக் காட்சியளிக்கும் ரங்கநாதரையும், ரங்கநாயகி
நாச்சியாரையும் காணச் செல்லலாம் என்று எண்ணியிருந்த வேளையில் முன்பு
ஒருமுறை எடுக்கப் பட்ட புகைப்படம் ஒன்றை விஜயராகவன் அளித்தான். மகளின்
அழுகையைக் கட்டுப்படுத்த இயலாததால், நண்பர்களிடம் "நீங்கள் மட்டும்
சென்று தம்பதியரைத் தரிசித்து வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி அறையில்
தனித்திருந்தோம். மனதுக்குள் வாட்டம். காலையில் ஒரு மாமி
"வயசாயிருந்தாலும் இன்னைக்குக் கையப் பிடிச்சிட்டு வந்துடுவா...
இன்னைக்கு பெருமாளையும் தாயாரையும் சேவிச்சா ரொம்ப புண்ணியம்." என்று
சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.. நமக்கு இந்த புண்ணியம் இல்லையே
என்று இருவரும் நொந்து கொண்டோம்.

விஜயராகவன் தந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு இருவரும் அமர்ந்து கண்களை
மூடி வேண்டினோம்.. "ஐயனே... நீங்கள் சேர்ந்திருக்கும் திருக்கோலத்தை
எங்களால் காண வர இயலவில்லை... ஆயினும் உங்கள் தலத்திலேதான் உள்ளோம்..
எங்களுக்கும் திருவருள் புரியும்" என்று வேண்டிக் கொண்டிருந்தோம்.
அச்சமயத்தில் எனக்கு ஒரு காட்சி தென்பட்டது. அதன் உட்பொருள் விளங்கவே
இல்லை... ரங்கநாயகி நாச்சியாரின் சன்னதிக்கு எதிரே உள்ள வெளியில் பல
யானைகளைக் கண்டேன். அக்கணமே என் மனத்தில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடியது. அதனை அப்பொழுதே மனையாளிடம் பகிர்ந்து கொண்டேன். மூலவரையும்
கற்பனை செய்து தரிசித்தேன். மிகப்பெரிய நம் பெரிய பெருமாளைக் கற்பனையில்
மட்டுமே தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது...

இச்சமயத்தில் மகளும் சமாதானம் ஆகி உறங்க ஆரம்பித்து விட்டாள். "சரி
இன்றைக்கு இரவு முழுதும் திருக்காட்சி இருக்குமல்லவா? இரவில் மகள்
விழிக்கும் வேளையில் அழாமல் இருந்தால், நாமும் போய் தரிசித்து விட்டு
வரலாமா?" என்று மனையாள் கேட்க, நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.

இச்சமயத்தில் நண்பர்களும் திரும்பி வந்தனர். "வரிசை பெரிய கருடன் வரை
நீண்டிருக்கின்றது. எனவே தரிசனம் செய்யாமலேயே வந்து விட்டோம்"
என்றுரைத்தனர். ஐயோ நம்மோடு வந்த பாவம் இவர்களுக்கும் புண்ணியமில்லாமல்
போயிற்றே என்று நொந்து கொண்டேன். "சரி விஜய்.. நாம கொஞ்சம் லேட்டா போய்
பார்ப்போமா?" என்று வினவ "அப்படியில்லை நண்பா.. ஒருமுறை தூங்கி
எழுந்தால், குளித்த பிறகே ஆலயம் செல்ல வேண்டும்" என்று விஜய் சொல்லி
விட்டான். பிறகென்ன.. தூங்கி காலையில் எழலாம்.. என்று எண்ணி உறங்கச்
சென்றோம்..

மறுநாள் நாங்கள் கண்ட திவ்ய தரிசனங்களைப் பற்றி... அடுத்த மடலில்....

அன்புடை நெஞ்சம் அனைத்தும் அந்த அரங்கனுக்கே அர்ப்பணம்...திருவரங்கத்தில்
பள்ளி கொண்ட பெருமாளே... எம் நெஞ்சத்திலும் நீங்காது பள்ளி கொண்டு எம்மை
வழிநடத்தும்.... வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

கருத்துகள் இல்லை: