புதன், மார்ச் 23, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

மகளை உறங்கவைத்து விட்டு திருவரங்க பங்குனி உத்திர வைபவத்தில் எமக்கு
ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி மனையாளுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
மேலும் நண்பர்கள்  எப்போது வருவார்கள் என்று  அவர்களுக்காக
காத்திருந்தோம்.. அனைவரும் வந்து சேர்ந்தார்கள். பிரசாதம் உண்டு விட்டு
மதிய உணவை முடித்தோம்.. ஐயா காளைராசன் அவர்கள் பெருமாளின் ஆலயங்களில்
தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். திருப்பூவணத்து
பெருமாளின் ஆலயத்தில் உள்ள திருவுருவங்கள் சென்னை அருங்காட்சியகத்தில்
இருப்பதாகவும், அவற்றை மீட்பதற்கு வடகலை, தென்கலை என்னும் பிரிவுகள்
தடையாக இருப்பதாகவும், தாம் பணியில் இருக்கும் காலத்திலேயே இது
நிகழ்ந்தேற வேண்டுமென்பதாக ராமானுசரை வேண்டிக் கொண்டதாகக்
குறிப்பிட்டார்.
தன்னை ராமானுசரின் வழிவந்தவன் என்று குறிப்பிட்ட விஜயராகவனும் தனது
கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக பல கருத்துப்
பரிமாற்றங்கள் மூலம் புதிதாக பல செய்திகளை அறிந்து கொண்டோம். சற்றே
இளைப்பாறி விட்டு திருவெள்ளறை என்னும் திவ்யதேசத்துக்குச் செல்லலாம்
என்று விஜயராகவன் உரைத்தான். தான் உறையூரில் தரிசனம் முடித்துக்கொண்டு
ஊருக்குத் திரும்புவதாக ஐயா காளைராசன் தெரிவித்தார். மாலை நான்கு மணி
அளவில் அறையை விட்டு கிளம்பினோம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஐயா காளைராசன் அவர்களையும்,
அம்மா நாகலெட்சுமி அவர்களையும் வழியனுப்பி வைத்தோம். பேருந்தில்
திருவெள்ளறை சென்றடைந்தோம். பேருந்தில் இறங்கி சற்று தூரம் நடந்து
சென்றோம்.
திருவெள்ளறையானது ஸ்ரீரங்கத்தை விட பழமையானது. இதனால் இது ஆதி வெள்ளறை
என்றும் போற்றப் படுகின்றது. ஆலய பலி பீடத்திற்கருகே ஒரு தெப்பம் உள்ளது.
அதனை பார்த்துக் கொண்டே தாயார் சன்னிதிக்குச் சென்றோம். செண்பகவல்லித்
தாயாராக அன்னை காட்சியளிக்கின்றாள். உற்சவ மூர்த்திக்கு பங்கஜவல்லி என்று
திருநாமம். அம்மையே எங்களைக் காத்து வழி நடத்துமம்மா என்று வேண்டிக்
கொண்டு பிரகாரம் சுற்றிக் கொண்டே மூலவர் சன்னிதிக்குச் சென்றோம்.
மூலவரின் சன்னிதிக்குச் செல்ல இரு வாயில்கள். ஆறு மாதங்கள் இடப்புறமுள்ள
வாயிலிலும், ஆறு மாதங்கள் வலப்புறமுள்ள வாயிலிலும் செல்ல வேண்டுமாம்.
தட்சராயணம், உத்தராயணம் என்று கால நிலைக்கேற்ற வழிகள். படிகளில் ஏறிச்
செல்லவேண்டும். படிக்கட்டுக்களின் தத்துவத்தை ஆலய குருக்கள்
தெரிவித்தார். அவை கீதாச்சாரத்தையும், வேதங்களின் தத்துவத்தை உள்வாங்கி
நிற்பதாகவும் தெரிவித்தார்.
மூலவர் புண்டரிகாக்ஷன் என்னும் திருநாமத்தைத் தாங்கி நின்ற
திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். உற்சவர் செந்தாமரைக் கண்ணன்..
இங்கே பிரம்மனுக்கும் சிவனுக்கும் செந்தாமரைக் கண்ணன் காட்சியளித்து
அருளியதாக ஆலய அர்ச்சகர் தெரிவித்தார்.
பெருமாள் சயனத்திருக்கோலத்தில் காட்சியளித்தால் படுக்கையாகவும், அமர்ந்த
திருக்கோலத்தில் காட்சியளித்தால் சிம்மாசனமாகவும், நின்ற திருக்கோலத்தில்
காட்சியளித்தால் வெண் கொற்றமாகவும் காட்சியளிக்கும் ஆதிசேடன்
இத்திருத்தலத்தில் மானுட உருவில் காட்சியளிப்பது சிறப்பு.  மூலவரின்
எதிரில் மார்க்கண்டேய மாமுனிவர் பெருமாளை வணங்கிய நிலையில்
காட்சியளிக்கின்றார்.
சிபிச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட இவ்வாலயம் மிகவும் பெருமை வாய்ந்தது.
வடநாட்டில் இருந்து மூவாயிரத்து எழுநூறு வைணவர்களை அழைத்து வந்து
குடியேற்றி இவ்வாலயத்தை சிபிச்சக்கரவர்த்தி கட்டினான். ஆலயத்தின்
மூலவரின் கண்களைத் திறக்கும் நாளன்று எதிரில் நிற்கும் பலிபீடம் தலைகீழாக
சுழன்று ஆடியதாம். இதனால் இவ்வாலயத்தின் பலிபீடத்துக்கும் தனிச்சிறப்பு..
ஆலய கும்பாபிடேகத்துக்குப் பிறகு மூவாயிரத்து எழுநூறு வைணவர்களில் ஒருவர்
இறந்து விடவே சிபிச்சக்கரவர்த்தி வருத்தமுற்றான். அச்சமயத்தில் திருமால்
தானே ஓர் வைணவனாக வடிவெடுத்து வந்து சக்கரவர்த்தியின் மனக்குறையைத்
தீர்த்தான்.
நாதஸ்வரம் இசைக்கும் கலைஞர் ஒருவரை ஆலயத்தில் கூடியிருந்தோர் "நீர்
வாசிப்பது நன்றாக இல்லை" என்று கூறிவிடவே வருத்தமுற்ற அவர் தனது நாவை
வெட்டி அந்த பலிபீடத்தில் எறிந்தார். அன்றைய தினம் நைவேத்தியத்தை
பெருமாள் புறந்தள்ளினார். தன் பக்தனான அந்த நாதஸ்வர கலைஞருக்கு நாவை
வளரச்செய்து அருளினார். பின்னரே திருவமுது உண்டார். பக்தர்களின் பக்தி
மேன்மையை உலகுக்கு உணர்த்திய செந்தாமரைக்கண்ணனின் திருத்தலம் இது.
நாங்கள் முதலில் மூலவரைத் தரிசிக்கச் செல்கையில் மகள் அழுது
கொண்டிருந்ததால், மனையாள் அவளை சமாதானப்படுத்திக் கொண்டு வெளியில்
அமர்ந்திருந்தாள். மகளின் அழுகை நின்றபின் அவர்களோடும் ஒருமுறை உள்ளே
சென்று செந்தாமரைக் கண்ணனைத் தரிசித்தேன். ஆலய அர்ச்சகர்
திருமங்கையாழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பாடினார்.
ஆலயத்தின் தீர்த்தங்கள் பற்றியும் அறிந்தோம். இங்கே ஏழு புண்ணிய
தீர்த்தங்கள் உள்ளன.. அவற்றின் பெயரையும் அர்ச்சகர் மொழிந்தார். மனம்
முழுதும் கண்ணனின் பால் ஈடுபட்டிருந்ததால் அவற்றின் பெயர் மனத்தில்
நிற்கவில்லை. ஒரு புண்ணிய தீர்த்தம் புத்திரபாக்கியம் தரவல்லதாம். வைணவ
உபன்யாசர் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் பெற்றோர்களும்,
இத்தீர்த்தத்தில் நீராடிய பின்னரே தங்களின் பேர் பெற்ற மகனை
ஈன்றெடுத்தார்களாம்.
வராக அவதாரத்துக்குரிய திருத்தலமாக இது போற்றப் படுகின்றதென்று
அறிந்தோம். ஆலய பலிபீடத்தருகேயுள்ள தீர்த்தத்தில் மழை நீர்தான்
தீர்த்தமாக உள்ளது. பண்ணிய பாவங்களையெல்லாம் தீர்க்கும் தீர்த்தம் இது.
இது ஆலயம் கட்டிய நாள் முதற்கொண்டு இதுவரை வற்றியதில்லையாம். வறண்டு நீர்
குறைந்து கொண்டு போகும் வேளையில் மழையை அனுப்பி இதை நிரப்பி விடுவார்
பெருமாள். தினமும் பெருமாளுக்கு அபிடேகத்திற்குரிய நீரை இத்தீர்த்ததில்
இருந்துதான் கொண்டு செல்கின்றார்கள். மேலும் உற்சவத்தின் போது,
பொதுமக்கள் எல்லோரும் உற்சவரின் திருப்பாதத்தைத் தொட்டு வணங்கும் பேறும்
கிட்டுகின்றதாம்..
விஜயராகவனும், விஜய் ஆனந்தும் தங்கள் மாலை சந்தியாவந்தனத்தை இந்த
தீர்த்தத்தில் செய்தனர். இத்தீர்த்ததில் நமது பாதங்கள் படக்கூடாது.
ஏனெனில் இதன் நீர்தான் பெருமாளுக்கு அபிடேகத்திற்கு கொண்டு செல்லப்
படுகின்றது. அவர்கள் தங்கள் சந்தியாவந்தனத்தை நிறைவு செய்ய, நாங்களும்
சற்றே நீரை எடுத்து எங்கள் தலையில் தெளித்துப் பாவங்களைப் போக்கிக்
கொண்டோம்.  அங்கிருந்து புறப்பட்டோம்...
அடுத்த திவ்ய தேசம் உத்தமர் கோவில்.. அதைப் பற்றி அடுத்த மடலில்...
"ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம்
வேறுவேறாக வில்லது வளைத்தவனே யெனக்கருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த
தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றோனே..." இது
திருமங்கையாழ்வாரின் திருமொழி...

கருத்துகள் இல்லை: