புதன், மார்ச் 23, 2011

அரங்கம் சென்று மீண்டோம் அவன் அருளாலே..

'யான் எத்தனை கோடி தவம் செய்தேனோ இந்த பேறு பெறுவதற்கு' என்று காதல்
பெருகி, கண்கள் தழும்பி அரங்கனைக் கண்டு மீண்டோம் அவன் பேரருளாலே!
எளியோர்க்கு எளியோனாய் இரங்கும் அன்பன் இந்த ஏழைக்கும் தன்னருளைப்
பொழிந்தான். வார்த்தைகளில் வடிக்க இயலாத அரங்கனின் பேரன்பு அடியவர்களை
எங்ஙனம் தன்பால் ஈர்க்கிறது என்பதை நேரில் கண்டு களித்து, மீள்வதற்கு
மனமில்லாமல் மீண்டு வந்தோம்.
பிறப்பில் பல்பிறவிப் பெருமானாம் எங்கள் அரங்கனைக் கண்டு களித்த பிறகு
பிறவி வேண்டாம் என்றுதான் அடியார்கள் வேண்டுவார்களாம். அடியேனோ, ஐயனே
மீண்டும் ஒரே ஒரு பிறப்பைக் கொடு.. பூகோள வைகுண்டமாம் திருவரங்கத்தில்
பிறக்கச் செய்து, என்னை எந்த பந்தத்திலும் கட்டாது, என்றைக்கும் நின்
திவ்ய தரிசனத்தைக் காணும் பேற்றைக் கொடு... இன்றைக்கு என் மனத்தில்
எழுந்த துள்ளலோடு என்றைக்கும் திருவடிகளைப் பற்றிச் சேவகம் புரியும்
புண்ணியத்தைக் கொடு என்றுதான் வேண்டினேன்... திருவரங்கத்தின் மகிமை
இது... எனக்கு இப்பேற்றைப் பெற வழிகாட்டிய விஜயராகவனுக்கு நன்றி... அவன்
மூலம் இதை அருளிச் செய்த எங்கள் பெருமாளுக்கும் நன்றி...எங்கள் பயணச்
செலவை இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்.
கடந்த மார்கழியிலேயே இதற்கான திட்டம் தீட்டப் பட்டுவிட்டது.
தொடர்வண்டியின் பயணச்சீட்டும் நண்பன் விஜயராகவனால் எடுத்து அனுப்பி
வைக்கப் பட்டது. அண்மையில்தான் தெரிந்தது தற்செயலாகக் குறித்த நாள்
பங்குனி உத்திரத் திருநாள் என்று.. நண்பனும் அச்செய்தியை மகிழ்வோடு
பகிர்ந்தான். என் மனமும் துள்ளியது...
திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை மாலை மனையாள் மற்றும் மகளோடு தொடர்வண்டியில்
ஏறி புறப்பட்டோம். நண்பர்கள் விஜயராகவன், விக்ரம் பாபு மற்றும் விஜய்
ஆனந்த் இவர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டனர். ஐயா காளைராசன் அம்மா
நாகலெட்சுமி இவர்கள் காரைக்குடியிலிருந்து புறப்பட்டனர்.
மிக அதிகாலையில் (03.45) திருச்சிராப்பள்ளி வந்தடைந்தோம். பேருந்தில் ஏறி
திருவரங்கம் சென்று கொண்டிருக்கும் போது, தாங்கள் திருவரங்கம் வந்து
சேர்ந்துவிட்டதாகவும், ராஜகோபுரம் வந்து இறங்கியவுடன் அழைக்கவும் என்றும்
நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி.. கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில்
திருவரங்கம் ராஜகோபுரம் அருகே இறங்கினோம்.
மகள் உறக்கத்திலிருந்தாள். மனையாள் அருகிலிருந்த ஓர் கட்டடத்தைப்
பார்த்துக் கொண்டே இறங்கினாள். திடீரென்று திரும்பி ராஜகோபுரத்தைக்
கண்டவள் மெய்மறந்தாள்... "ஓ... எவ்வளவு உயரம்" என்று.. நண்பனை
அழைத்தோம்... அங்கிருந்து "நான்காவது கோபுரத்தருகே வா.. அங்கே ஸ்ரீரெங்கா
ஸ்ரீ ரெங்கா ஸ்ரீரெங்கா என்று எழுதியிருப்பார்கள்" என்றான். அங்கே
சென்றடைந்தோம்.. அதிகாலையில் கோபுர தரிசனம் செய்து விட்டு, ஏற்கெனவே
பதிவு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு வந்தோம். மனையாளையும், மகளையும்
அங்கேயே தயாராகச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் (அடியேன், விஜயராகவன்,
விக்ரம் பாபு, விஜய் ஆனந்த்) காவிரி நோக்கி நடந்தோம்.
காவிரியைப் பற்றிய கற்பனைகளோடு சென்று கொண்டிருந்தேன். விஜயராகவன் ஆலயம்
பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான்.. காவிரியில் வெள்ளப் பெருக்கு
ஏற்பட்டு, ஆலயத்தின் உள்ளேயும் நிரம்பி, பல நாட்கள் வழிபாடுகள் தடைப்
பட்ட செய்தியையும், தற்சமயம் காவிரியின் நிலையையும் சொல்லிக் கொண்டே
வந்தான். அமர்ந்தாலே கழுத்தளவுக்கு வராது நீர்...
காவிரியில் நீராடினோம். விஜயராகவனும், விஜய் ஆனந்தும் சந்தியாவந்தனம்
செய்ய, அடியேனும், விக்ரம் பாபுவும் அறையை நோக்கி நடந்தோம். அங்கே
மனையாளும், மகளும் தயாராகி விட்டார்கள். காலை உணவருந்திய பிறகு ஆலயத்தை
நோக்கி நடந்தோம்...
மொட்டைக் கோபுரம், இராஜ கோபுரமாகிய செய்தியைச் சொல்லிக் கொண்டு வந்தான்
நண்பன் விஜயராகவன் (ஆசியாவின் மிக உயர்ந்த கோயில் கோபுரம் - 236 அடி).
ஒவ்வொரு கோபுரமாகக் கடந்து கொடிமர மண்டபத்தை அடைந்தோம். அங்கே விழுந்து
வணங்கி உள்ளே சென்றோம்.
"உடையவர் சன்னதி வலப்புறம் உள்ளது அங்கே செல்லலாம்" என்று வலப்புறம்
திரும்பினோம். அங்கே சுவற்றில் கேட்டாலே மனத்தை உருக்கும் ஆழ்வாரின்
பாசுரம் எழுதப் பட்டிருந்தது.. உரக்கப் படித்தேன்..
"குடதிசை முடியை வைத்துக்
                   குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
                 தென் திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை
                 அரவணைத் துயிலுமா கண்டு
உடலெனக்கு உருகுமாலோ
                என் செய்கேன் உலகத்தீரே" அற்புதமான பாசுரம் அல்லவா?
அரங்கனைக் கண்டுத் தன் மெய்யுருகும் நிலையைப் பாடிய ஆழ்வாரின் பக்தி
மனநிலை மெய்சிலிர்க்க வைத்தது. உருகும் உள்ளத்தோடே உடையவர் சன்னதி நோக்கி
நடந்தோம். தாமான திருமேனியாரைப் பற்றிய விளக்கத்தோடு அவரைக் கண்டோம்..
ஆஹா... நாராயணனை உலகத்தோர் அனைவருக்கும் பகிர்ந்திட்ட நாயகனைக் கண்டு
மெய் மறந்தேன்.. ஐயனே... நீரில்லாவிடில் இன்றைக்கு எமக்கெல்லாம் இந்தத்
திருநாள் வாய்த்திருக்குமா? நீர் வாழுங்காலத்தில் செய்த புரட்சிகளால்
என்றென்றைக்கும் எம் மனத்தில் வாழ்ந்திருப்பீர் குருவாக... என்று அவரை
வேண்டிக் கொண்டு திரும்பி வந்தோம்..
எதிரே சக்கரத்தாழ்வார் சன்னதி.. திரும்பி வருகையில் காணலாம் என்று சொல்லி
விட்டு உள்ளே நடந்தோம்.. இதோ கருடமண்டபம்.. "நாகராஜன்.. இந்தக்
கருடன்தான் பிரம்மலோகத்திலிருந்து பெரிய பெருமாளை சுமந்து கொண்டு
வந்தது.." என்று விஜயராகவன் சொல்லிக் கொண்டே கருடாழ்வாரின் பெருமைகளைக்
கூறினான்.
கண்டோம் கண்டோம்... இதோ எங்கள் கரியபிரான் வாகனனை.. எவ்வளவு உயரம்... !
ஐயனே... தங்கள் பிரானிடம் எங்களுக்கும் இரக்கம் காட்ட வேண்டிக்கொள்ளுமே
என்று அவர் பாதம் வணங்கி அங்கிருந்து புறப்பட்டோம்.. அப்படியே முன்னே
வந்தால் மூலவர் சன்னதிக்கு செல்லும் வாயில் மூடப்பட்டிருந்தது... "சுவாமி
உற்சவத்தில இருக்கா.. வாங்கோ தாயாரை சேவிச்சிட்டு வரலாம்" என்று
விஜயராகவன் முன்னே அழைத்துச் சென்றான்.. அங்கே முதலாழ்வார்களுடன்
ஆதிநாராயணன் சன்னிதியை வணங்கி விட்டு, பரமபத வாயிலைக் கண்டு களித்து
விட்டு முன்னேறினோம்.
ஆயுர்வேதத்தின் முதல் வைத்தியர் தன்வந்திரி பெருமான் சன்னதிக்குச்
சென்றோம். "ஐயனே... எங்கள் குழந்தைக்கும், அன்னைக்கும் உடல் நலத்தைத்
தா.." என்று வணங்கி விடை பெற்றோம்.. முன்னே வந்தால்... அங்கே தாயார்
சன்னிதிக்கு எதிர்ப்புறம் ஒரு மண்டபம்...
இதுதான் கம்பர் தனது இராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபம் என்றுரைத்த
விஜயராகவன் அங்கிருந்த நரசிம்மரின் சன்னதிக்கு அழைத்துச் சென்றான்...
கம்பர் தனது இராமாயணத்தை அரங்கேற்ற எதிர்கொண்ட தொல்லைகளை விஜயராகவன்
கூறினான்...
"கம்பர் தனது இராமாயணத்தை அரங்கேற்ற நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்..
சிதம்பரத்தில் உள்ள தீட்சிதர்கள் அனைவரும் வந்து அவர்கள்
முன்னிலையில்தான் அரங்கேற்ற வேண்டுமாம்.. ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை
இல்லை.. எனவே ஒருவர் வருவதாகச் சொன்னால் இன்னொருவர் மறுப்பதும்,
இன்னொருவர் வருவதாகச் சொன்னால் மற்றொருவர் மறுப்பதுமாக நாட்கள் கடந்து
கொண்டிருந்தன்... கம்பர் தவித்தார்.. இந்நிலையில் ஓர் தீட்சிதரின் மகன்
இறந்து போனான்.. அத்தனை தீட்சிதர்களும் சுடுகாட்டில் கூடினார்கள்..
கம்பர் தனது இராமாயணத்தை அங்கே சென்று பாட ஆரம்பித்தார்.... தீட்சிதர்கள்
அதைக் கேட்டு மகிழ்ந்தனர்.. பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்து
திருவரங்கத்தில் தனது இராமாயணத்தை அரங்கேற்றினார். அங்கேயும் தனது
இரணியன் வதைப் படலத்தைச் சொல்லும்பொழுது எதிர்ப்பு கிளம்பியது... ஆனால்
கம்பருக்கு ஆதரவாக இந்த நரசிம்மர் குரல் கொடுத்துத் தன் கரத்தை
உயர்த்தினார். கம்பரின் இராமாயணமும் அரங்கேறியது" என்று விஜயராகவன்
மொழிந்தான்...
கீழே இறங்கி அங்கிருந்த கிருஷ்ணனை தரிசித்து விட்டு ரங்கநாயகி நாச்சியார்
சன்னதி நோக்கி நடந்தோம். இங்கேதான் இன்னும் சற்று நேரத்தில் பெருமாள்
வருவார் காத்திருப்போம் என்று காத்திருந்தோம்.. விஜயராகவனும், விஜய்
ஆனந்தும் பெருமாளுடன் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர். நாங்கள் அங்கே
ஒரு தூண் அருகே அமர்ந்திருந்தோம்.. வயதான தாயார்கள் இருவர் எங்கள் அருகே
அமர்ந்திருந்தனர்.. என் மனையாளை நோக்கி "குழந்தேய பத்திரமா
பாத்துக்கோடியம்மா.. கூட்டம் ஜாஸ்தியானா தள்ளுவா.... " என்று
அறிவுறுத்தினார்.. காத்திருந்தோம்...
அரங்கனார் வருவார் என்று அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தது.. "பேசாதே...
சத்தம் போடாதே" என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்...
காத்திருந்தோம்...அரங்கனார் வருவதை மேளதாளங்கள் முன்மொழிந்தன....
இதோ மேளதாளங்கள் முழங்க அரங்கன் வந்து சேர்ந்தான்... ஆஹா... ஐயா.... என்ன
புண்ணியம் செய்தேன் நான் இந்நாளைக் காண்பதற்கு!.. ஆடி வந்த அரங்கனைக்
கண்டதும் மெய் மறந்தேன்... மனம் தன்னிலை மறந்தது... அவன் மேல் அன்பு
அதிகமாகியது... பக்தி பெருகப் பெருக உள்ளம் உருகியது... உருகிய உள்ளம்
களித்துக் கொண்டிருந்த கண்களின் வழியே நீராகப் பெருகியது... வாயோ
"ரங்கா.... என் ரங்கம்மா..." என்று உரக்கக் கூவியது... தாயார்
சன்னிதிக்கு முன்னே வந்து மண்டபம் உள்ளே வந்தான்... இதோ அரங்கன்
தாயாருடன் சேர்ந்து சேவை தரப்போகின்றான்...  அரங்கன் உள்ளே நுழைய வந்த
போது, அன்னையின் திருக்கதவு சாத்தப் பட்டது....
சிம்மம் ஒன்று தனது வீர நடையுடன் நடந்து செல்வதைப் போன்ற காட்சி அது...
தவறு... உலகத்தைப் படைத்துக் காத்து இரட்சிக்கும் லோக நாயகனை விலங்கோடு
ஒப்பிடுவதா? ஆனால் எளியேன் உள்ளத்துள் எழுந்த ஒப்புமை அது... தனது
ராஜநடையுடன் உள்ளே நுழைய முற்பட்ட அரங்கன் திருக்கதவை அன்னைத் தாழிடுவது
கண்டு பின்னோக்கி வந்தான்...
பக்தர்கள் பாசுரங்கள் பாடினார்கள்... (செவியில் எதுவும் விழவில்லை...
மனம் முழுக்க அரங்கனே நிறைந்திருந்தான்). மீண்டும் ஒருமுறை செல்ல
முயற்சித்தான் அரங்கன்... அன்னையோ மீண்டும் தாழிட்டாள்... இவ்வாறாக
மொத்தம் மூன்று முறை நிகழ்ந்தேறியது....
அன்னை தன் நாதனுடன் ஊடல் கொண்டாள்... அவளை சமாதானம் செய்வது யார்?
அரங்கன் தன் அன்பரான நம்மாழ்வாரை அழைத்தான்.. நேரம் கடந்தது...
நம்மாழ்வார் வந்தார்... அரங்கனிடம் பேசிவிட்டு அன்னையிடம் சென்றார்..
மீண்டும் அரங்கனிடம்... மீண்டும் அன்னையிடம்... இவ்வாறாக பேச்சுவார்த்தை
நடந்து... அன்னையின் ஊடல் முகம் தளர்ந்தது... தன் நாதனை வரவேற்றாள்...
மீண்டும் தனது ராஜநடையுடன் உள்ளே நுழைந்தான் அரங்கன்... இருவரும்
சேர்ந்து காட்சியளிப்பது வருடத்தில் இந்த நாளில் மட்டும்தானாம்..
அந்த நிகழ்வைப் பற்றிய விஜயராகவனின் விளக்கம்...
"சோழமன்னனின் மகள், அரங்கன் மீது காதல் கொண்டு, அவனையடைய தவம்
இயற்றினாள்.. அவளது பக்திக் காதல் கண்டு மெச்சி அரங்கனும் அழகிய்
மணவாளனாக சென்று அவளை மணம் புரிந்தான் உறையூரிலே... அங்கிருந்து பங்குனி
உத்திரத் திருநாளுக்காகத் திரும்பும் போது நேரமாகி விட்டது.. அரங்கனார்
வரும் வழியையும், நேரத்தையும் பார்த்துக் காத்திருந்த அன்னை
ரங்கநாயகிக்குக் கோபம்.. ஊடல் கொண்டாள். தன் திருக்கதவைத் தாழிட்டாள்..
அகிலத்தை ஆளும் அரங்கனைத் திருப்பி அனுப்பினாள்... தன் காதல் மொழிகளால்
பேசிப்பார்த்தான் அரங்கன்... முடியவில்லை... அன்னை தனது
கோபநிலையிலிருந்து  இறங்கி வரவில்லை... முயன்று முடியாத அரங்கன்
நம்மாழ்வாரைத் துணைக்கழைத்தான்... அவர் பேசி முடித்து சமரசம் செய்து
வைத்தார்.. இதோ.. இருவரும் இணைகின்றார்கள்..."
காணும் கண்களெல்லாம் களித்து நின்றவண்ணம் உருகி உருகி அவனை வேண்டி எதிரே
இருந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தோம்.. இந்நிலையில்தான் ஐயா காளைராசன்
அம்மாவுடன் வந்து சேர்ந்தார்.. அவருடனும் சென்று அரங்கனாரைத் தரிசித்து
விட்டு அங்கிருந்து புறப்பட்டு தசாவதார மண்டபம் நோக்கிச் சென்றோம்.
கொளுத்தும் வெயிலின் கொடுமையில் மகள் அழத்துவங்க, தசாவதார மண்டபம்
வந்தடைந்தோம். பூட்டப் பட்டிருந்தது. சற்று நேரம் இழைப்பாறினோம். மகளின்
அழுகை அதிகமானது... எனவே அனைவரும் மீண்டும் ஆலயம் சென்றபோது, நானும்,
மனையாளும், மகளும் ஆட்டோவில் விடுதிக்குச் சென்றோம்.. மகளை சமாதானம்
செய்து உறங்க வைத்து நண்பர்களுக்காகக் காத்திருந்தோம்...
பின்னர் நிகழ்ந்தவை அடுத்த மடலில்...
அரங்க சேவை தொடரட்டுமே..!

கருத்துகள் இல்லை: