திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 99, 100 & நூற்பயன்

அன்பர்களுக்கு வணக்கம்...
அன்னையின் திருவருளால் அனைவரும் நலமே என நம்புகின்றேன். இன்றைக்கு ஐம்பதாவது நாள்... இறுதி இரு பாடல்களையும் நூற்பயனையும் பார்த்து விடலாம். பின்னர் தங்களுடன் உரையாடுகின்றேன்.

பாடல் தொண்ணூற்றொன்பது
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
விளக்கம் : கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான் மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய்..
அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில் காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில்  குயிலாகவும், கயிலையில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.
சிறு வயதில் கற்ற ஓர் பாட்ல் நினைவுக்கு வருகின்றது. "அழகிய மயிலே அபிராமி... அஞ்சுக மொழியே அபிராமி... ஆதிக்கடவூர் அபிராமி... ஆனந்த வடிவே அபிராமி" என்று தொடரும் அப்பாடல்... மதுரை மாநகரில் இன்னிசை பாடும் குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும் காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய வடிவில் தென்படுகின்றாள் அல்லவா?
"அன்று" "கயிலாயருக்கு" "இமவான் அளித்த கனங்குழையே" முன்பொருநாள் கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே.... "கடம்பாடவியிடை " "குயிலாய் இருக்கும்" கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்... "இமயாசலத்திடை" "கோலவியன் மயிலாய் இருக்கும்" இமயத்தில் அழகிய மயிலாய் இருக்கின்றாய். "விசும்பில்" "வந்து உதித்த வெயிலாய் இருக்கும்" விரிந்த ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் "கமலத்தின் மீது அன்னமாம்" அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.

பாடல் நூறு
குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே
விளக்கம் : காதில் அணிந்துள்ள குண்டலங்களைத்த் தொடும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையை அணிந்து அம்மலர்களால் மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே. கழையை ஒத்த நின் அழகிய நெடுந்தோள்களும், உன் கரும்பு வில்லும், இன்பப் போருக்குத் தேவையான திறனுடைய தேன் நிறைந்த ஐந்து மலர்க் கணைகளும், வெண்ணிறப் புன்னகையும், மானையொத்த விழிகளும் என் நெஞ்சத்தில் எப்போதும் இருக்கின்றன...
உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கிய அந்தாதியை உதிக்கின்றவே என அழகுற நிறைவு செய்தார் அபிராமிப் பட்டர். அன்னையின் திருவுரு எப்போதும் என் நெஞ்சத்தில் உதித்துக் கொண்டே இருக்கும். அவளை எப்போதும் நான் தொழுது கொண்டே இருப்பேன். இதை விடுத்து எனக்கு வேறு எதுவும் இல்லை என்பது பட்டரின் கொள்கை...
"குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி" காதில் அணிந்துள்ள குண்டலங்களைத் தொடும்படியான கொன்றை மாலையை அணிந்து அக்கொன்றை மலர்களால் மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே... தடித்ததொரு கொன்றை மாலையை அன்னை அணிந்திருப்பதாக அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். அதன் பருமனால் அது அவள் காதில் அணிந்த குண்டலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது. அவளது மார்பகங்கள் கொன்றை மாலையைச் சுமப்பதால், கொன்றை மலரின் மணம் அவளது திருமுலைகளில் வீசுகின்றது... இவ்வரிகளை இன்னொரு நோக்கிலும் பொருள் கொள்ளலாம். கொன்றை மலரினை தன் சடையில் அணிந்த சிவபெருமான் அழகிய குண்டலங்களை அணிந்த அன்னை அபிராமியைத் தழுவும்போது அக்கொன்றை மலர்கள் இருவர் நடுவிலும் வீழும்போது அது அன்னையின் மார்பில் பட்டு அதனால் அது கொன்றை மலரின் மணம் வீசுகின்றது என்றும் பொருள் பகர்வோர் உண்டு.  "கழையைப் பொருத திருநெடுந்தோளும் " கழையை ஒத்த உனது நெடுந்தோள்களும்... கழை என்பது மூங்கிலைக் குறிக்கும். இது கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ள சொல். "கருப்பு வில்லும்" உனது திருக்கரத்தில் நீ ஏந்திய கரும்பு வில்லும்,  "விழையப் பொரு திறல் வேரி அம்பாணமும் " இன்பப் போருக்குத் தேவையான திறன் கொண்ட தேன் நிறைந்த ஐந்து மலர்க்கணைகளும், "வெண் நகையும்" வெண்ணிற உன் புன்னகையும்... முத்து போன்ற உன் பற்கள் உன் புன்னகையால் வெளி தோன்றுவதால் உன் புன்னகை வெண்ணிறமெனத் தோன்றுகின்றது... "உழையைப் பொரு கண்ணும் " மருளும் மானையொத்த உன் திருவிழிகளும், "நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே" எனது நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொரு காலையும் கதிரவன் எங்ஙனம் புதிதாய்த் தோன்றுகின்றானோ, அது போல் உன் திருவுருவும் என் நெஞ்சத்து எப்போதும் புதிதாய் உள்ளது... அன்னையே நீ என் நெஞ்சத்தை விட்டு நீங்குவதில்லை... உன்னை நான் என்றும் மறப்பதில்லை...
அம்மா. அபிராமியே... அபிராமிப் பட்டரின் நெஞ்சத்தில் நிலையாகக் குடிகொண்ட நீ எங்கள் நெஞ்சத்திலும் வந்து எங்களை அருளாட்சி செய்தருள்வாயாக...
நூற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே

விளக்கம் : அன்னையை, எங்கள் அபிராமி தேவியை, இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்தவளை, மாதுளம் பூ நிறங்கொண்டவளை, இப்பூமியைக் காப்பவளை, ஐவகை மலரம்புகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் தன் திருக்கரங்களில் ஏந்தியவளை, முக்கண்ணியை வணங்குவோர்க்கு எந்தத் தீங்கும் இல்லை....

அபிராமி அந்தாதி நூலைத் தினமும் ஓதுவதால் கிட்டும் பலனை இப்பாடல் மொழிகின்றது... அன்னையைத் தொழுவோர்க்கு ஒரு தீங்குமில்லை... விளைவதெல்லாம் நன்மையே... ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக பலன் சொல்வார்கள்... அனைத்தும் அறியேன்.. அறிந்தவற்றை அப்பாடல்களிலேயே குறிப்பிட்டுள்ளேன். அறிந்தவர்கள் நமக்குரைத்தால் மகிழ்வேன்.

"எங்கள்" "ஆத்தாளை" எங்கள் அன்னையை "அபிராம வல்லியை" அபிராமியை "அண்டமெல்லாம் பூத்தாளை" இந்த அண்ட சராசரங்களைப் பெற்றெடுத்தவளை.... "மாதுளம் பூ நிறத்தாளை" மாதுளம் பூவின் நிறங்கொண்டவளை... "புவி அடங்கக் காத்தாளை" இப்பூமியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து காப்பவளை.. "ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை " தனது திருக்கரங்களில் ஐந்துவகை மலர்க்கணைகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் ஏந்தியவளை.. "முக்கண்ணியை" மூன்று நயனங்கள் கொண்டவளை... "தொழுவார்க்கு" தொழுதிடும் அடியவர்களுக்கு.. "ஒரு தீங்கில்லையே" எந்த ஒரு தீங்கும் இல்லவே இல்லை... அவர்கட்கு விளைவதெல்லாம் நன்மையே என்னும் உறுதியோடு தனது அபிராமி அந்தாதியை நிறைவு செய்கின்றார் அபிராமிப் பட்டர்...
அண்டமெல்லாம் படைத்து அதனைக் காத்து, தீயனவற்றை அழிக்கும் மூன்று நயனங்கள் படைத்த எல்லாம் வல்ல அன்னை அபிராமியே நம் அனைவருக்கும் வரும் தீங்கினை விலக்கிக் காத்திடட்டும். எங்களைக் கடைக் கண் கொண்டு பார் தாயே..... உன் திருவடி இணைகளே சரணம்... சரணம்......
இவ்வுரைகளை எழுதப் பணித்த ஐயா தமிழன் வேணு அவர்களுக்கும், ஐம்பது நாட்களும் பொறுமை காத்து இதை ஓதிய அன்பு உள்ளங்களுக்கும், ஊக்கமளித்த நல்லுங்களுக்கும், இதனை மின் நூலாகத் தொகுத்துத் தருவதற்காக இசைந்திருக்கும் திரு. பிரசாத் வேணுகோபால் அவர்களுக்கும் இதனைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் கூகிள் தமிழ்க்குழும நிர்வாகிகளுக்கும் (தமிழ்த் தென்றல், தமிழ் உலகம், தமிழ்ப் பிரவாகம், தமிழ் ஒளி மற்றும் மின் தமிழ்) அடியேனின் சிரந்தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்... அன்னையின் ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்.. நன்றி.. வணக்கம்..

கருத்துகள் இல்லை: