திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 79&80

பாடல் எழுபத்தொன்பது
விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே

விளக்கம் : அபிராமி அன்னையின் விழிகளிலே அருள் உண்டு. வேதங்கள் சொல்லுகின்ற வழிமுறையில் அவளை வழிபடும் நெஞ்சம் எம்மிடத்து உண்டு. ஆகவே அம்மையை வழிபடும் முறை தவிர்த்து, வீணான பழியையும் பாவங்களையுமே செய்து பாழும் நரகத்தில் அழுந்தும் கயவர்களோடு இனி நமக்கு என்ன நட்பு? அது தேவையே இல்லை...
அற்புதம் நிகழ்த்திய பாடல் இது... ஒரு தை அமாவாசை இரவில்தான் இச்சம்பவம் நிகழ்ந்தேறியது.. அபிராமிப் பட்டரைப் பற்றி மன்னனிடம் இகழ்ந்துரைத்து அவனை ஆலயத்து அழைத்து வந்தனர் கயவர்கள். அவனுக்கும் அபிராமிப் பட்டரின் பக்தி மனது புரியவில்லை. பட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது மன்னன் அன்றைய திதியைப் பற்றி வினவினான். அறியாத பட்டரோ பௌர்ணமி என்றுரைத்தார்.  கோபங்கொண்டெழுந்த மன்னனோ நிலவைக் காட்டு என்று கட்டளையிட்டான். அன்னையின் அன்பால் இன்றிரவு நிலவைக் காட்டுவோம் எனப்பதிலுரைத்த அபிராமிப் பட்டர், நெருப்பின் மீது ஒரு உறியில் நூறு கயிறுகளைக் கட்டி அதன் மீது நின்று பாடத்துவங்குகிறார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கயிற்றினை அறுத்து, நூறாவது பாடலிலும் அன்னை வெளிப்படவில்லையெனில், நெருப்பில் வீழ்ந்து மாள்வது என்பது அவருடைய எண்ணம்.. ஆனால் மனத்திலோ அபிராமி உலகைப் படைத்தவள். சூரிய சந்திரரைப் படைத்தவள். அவள் நினைத்தால் இதெல்லாம் சிறு காரியமல்லவா என்ற அசைக்க இயலாத நம்பிக்கை.. பாடிக்கொண்டே இருக்கின்றார். ஒவ்வொரு கயிறும் அறுபட்டுக் கொண்டேயிருக்கின்றது.. எழுபத்தொன்பதாவது பாடலான இப்பாடலைத் துவங்கும் போது அன்னையானவள் தோன்றுகிறாள். இப்பாடலை அவர் நிறைவு செய்யும் வேளையில் தனது காதணியை கழற்றி வானில் வீச அது நிலவென ஒளிர்கின்றது.. கூட்டம் ஆர்ப்பரிக்கின்றது.. கயவர்கள் முகவாட்டம் அடைகின்றனர். மன்னனோ ஓடிவந்து பட்டரின் கால்களில் விழுந்து மன்னிக்க வேண்டுகின்றான். நெருப்பின் நடுவிருந்து கீழிறங்குகின்றார் பட்டர். தம் மீது விழுந்த பழியைத் தன் அளவற்ற பக்தியின் மூலம் துடைத்தார். அன்னையும் தன் பாலகனைக் காத்தருளினாள். அவ்வதிசயம் இப்பாடலைப் பாடும்போதுதான் நிகழ்ந்தது..
"விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு" அபிராமி அன்னையின் திருவிழிகளிலே அருள் உண்டு.. அன்னையின் அருள் அளப்பரியது..  "வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு " வேதங்கள் சொல்லுகின்ற வழிகளிலே அவளை வழிபடும் நெஞ்சம் எமக்கு உண்டு...  "அவ்வழி கிடக்க" அன்னையை வழிபட்டு அவள் அருளைப் பெற்று உய்வதற்கு வேதங்கள் சொல்லும் நல்வழி இருக்க... "வெம்பாவங்களே செய்து " கொடிய பாவங்களை மட்டுமே செய்து "பழிக்கே சுழன்று" பழியில் அகப்பட்டு "பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்" பாழும் நரகக் குழியில் விழுந்து அழுந்தும் "கயவர் தம்மோடு" கயவர்களோடு... கொடியவர்களோடு... "என்ன கூட்டு இனியே" இனிமேலும் என்ன நட்பு வேண்டியிருக்கின்றது?  அபிராமியின் வழியிருக்கையில் மற்ற வழிகள் ஏன் தேவை? அவ்வழியில் சென்று அழுந்தும் கயவர்களின் நட்பும் நமக்கெதற்கு? அன்னையின் வழியே உத்தமம். அவள் திருவடிகளே சரணம்...

பாடல் எண்பது
கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே
விளக்கம் : பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகான என் அபிராமி அன்னையே... நீயே என்னை உன் அடியார்க் கூட்டத்தில் ஒருவனாக இணைத்துக் கொண்டாய். எனது கொடிய வினைகளையெல்லாம் ஓட்டிவிட்டாய். என்னை நோக்கி ஓடிவந்தாய். உன் திருவுருவை உள்ளபடியே எனக்குக் காட்டினாய். அத்திருவுருவைக் கண்ட என் கண்களையும், மனத்தையும் இன்புறச் செய்தாய். அக்களிப்பிலே என்னை நடமாட்டி வைத்தாய்..
இதோ அன்னை வெளிப்பட்டாள்... தன் திருவுருவினைத் தன் அன்பனான அபிராமிப் பட்டருக்குக் காட்டினாள். தன் காதணியைக் கழற்றி விண்ணில் எறிந்தாள். தை அமாவாசை அன்று அன்னையின் காதணி வானில் நிலவென நின்று ஒளிர்ந்தது. இதோ இப்பாடல்களைப் பாடும் வேளையில் நம் மனத்திலும் இத்திருக்காட்சி தென்படுவதை நாமும் உணர்கின்றோமல்லவா? தன் அடியவர்க்கு வரும் துயரை எல்லாம் துடைத்திட அன்னையானவள் தானே நேரில் வருகின்றாள்.. சந்திரனைப் படைத்ததும் அன்னைதானே... அவள் ஆணையை ஏற்று சந்திரன் அன்று வெளிப்பட்டிருக்க மாட்டானா? இயற்கையைப் படைத்தவள் அவ்வியற்கைக்கென்றே சில நியதிகளையும் நிர்ணயித்தாள்.. அந்நியமங்களை மீறுவதற்கு அவளுக்கு அதிகாரம் உண்டு.. ஆயினும் அவள் அதைச் செய்யவில்லை.  தான் நியமித்த நியமங்களை அவள் மீறவில்லை.. ஆயினும் நிலவினை விட ஒளி படைத்த தன் காதணியை எடுத்து விண்ணில் எறிந்தாள்..சந்திர சூரியரைப் படைத்த அன்னையின் காதணியும் தன் கடமையைச் செவ்வனே செய்தது. அன்றைய நாள் உலகுக்கு நிலவென நின்ற பெருமையையும் பெற்றது.. உலகத்தோர் வியந்தனர். கள்வர்கள் வெட்கித் தலை நாணினர். மன்னனும் அதிசயித்தான். விரைந்து ஓடி நெருப்பின் நடுவே நின்றிருந்த பட்டரை கீழே வரச்செய்தான். அன்னையின் திருவருளை உணர்ந்து கொண்டான். கண்கள் மூடி ஒருமுறை இப்பாடலை ஓதிப் பாருங்கள்.. அபிராமிப் பட்டரின் உள்ளத்து நெகிழ்ச்சி அவர் பாடலில் தென்படுவதை உணர்வீர்கள்.. அத்தனை மகிழ்ச்சி... அபிராமிப் பட்டர் நெருப்பின் நடுவே தான் வீழுவதைக் காத்ததற்காய் மகிழவில்லை.. அன்னையின் திருவருளை அகிலம் அறிந்து கொண்டதற்காக மகிழ்ந்தார். தனக்கு அன்னையின் திருக்காட்சி கிட்டியதற்காக மகிழ்ந்தார்... அதுதான் ஒரு பக்தனின் உண்மையான மகிழ்ச்சி...
"ஆடகத் தாமரை ஆரணங்கே" பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகியே... அபிராமி அன்னையே... "என்னைத் தன் அடியாரில்" "கூட்டியவா" என்னை உனது அடியார்களின் கூட்டத்தில் சேர்த்தவளே... "கொடிய வினை ஓட்டியவா" எனது கொடிய வினைகளை ஓட்டியவளே... "என் கண் ஓடியவா" என்னை நோக்கி ஓடி வந்தவளே.... "தன்னை உள்ள வண்ணம் காட்டியவா"  உனது திருவுருவை உள்ளபடியே காட்டியவளே... உன் திருவருளால் உன் காதணியை நிலவெனக் காட்டியவளே... "கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா" உன்னைக் கண்டதும் என் கண்களும் மனமும் இன்புறும் வண்ணம் செய்தவளே...  "நடம்" "ஆட்டியவா" அவ்வின்பத்தில் என்னை நடனமாடச் செய்தவளே.... உன் கருணையே கருணை... என் விழிகளில் உன்னைக் காட்டினாய். என் மனத்திற்கு இன்பத்தைக் கூட்டினாய். உலகிற்கு நிலவினைக் காட்டினாய்.. நீயே தெய்வம் என்பதை அனைவருக்கும் உணர்த்தினாய்.. அன்னையே... உன் கருணைப் பேராற்றில் என்னைக் கரைத்து விட்டவளே... அபிராமியே... உன்னை எப்படித்தான் போற்றுவதோ...?
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி.

கருத்துகள் இல்லை: