திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 71&72

பாடல் எழுபத்தொன்று
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே

விளக்கம் : தன் அழகுக்கு ஒப்புமையாக யாருமே இல்லாதவள்  அன்னை அபிராமி.  அருமையான வேதங்கள் எப்போதும் பழகிக் கொண்டிருப்பதால் சிவந்த திருவடித்தாமரைகளையுடையவள். குளிர்ச்சியான இளம்பிறையைத் தன் திருமுடியிலே அணிந்த பச்சை நிறங்கொண்ட கோமளவல்லியான அன்னை உனக்குக் கொம்பு போல் துணையாக இருக்க, மனமே நீ எதையும் இழந்து ஏக்கம் கொள்ள வேண்டாம். உனக்கென்ன குறையுண்டு?
அருமையான பாடல். மனக்குறையைத் தீர்க்கும் அருமருந்தான பாடல். அன்னை அபிராமி அருகிருக்க ஏன் அழுகிறாய் நெஞ்சே... மனமே உனக்கென்ன குறையுண்டு...? என மனத்தினை அமைதி செய்யும் அருமையான பாடல் இது...
"அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" தன்னுடைய பேரழகுக்கு இணையாக ஒப்புமை கூறும்படி இவ்வுலகில் யாருமில்லாத தன்னிகரற்ற அழகுடைய அன்னை அபிராமி... அன்னையின் பேரழகுக்கு யாரையாவது ஒப்புமை சொல்ல இயலுமா? அவளின் அழகு ஈடு இணையில்லாதது.. "அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்" அருமையான வேதங்கள் பழகுவதால் சிவந்த திருவடித் தாமரைகளையுடையவள்.. வேதங்களைத் தனது சிலம்பாக அணிந்தவள் என முன்னர் குறிப்பிட்ட அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவை எப்போது அவளின் திருவடிகளை ஒன்றியே இருப்பதால், அன்னையின் திருப்பாதங்கள் சிவந்தன என்று குறிப்பிடுகின்றார். "பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க "குளிர்ச்சியான இளம் பிறையைத் தன் திருமுடியிலே அணிந்த பச்சை வண்ணக் கோமளவல்லி எனும் கொம்பு போன்ற துணையிருக்க.. இளம் நிலவை இத்தனை அழகாக யாரேனும் பாடியுள்ளனரா என்பது ஐயமே... "பனிமாமதியின் குழவி" குளிர்ச்சியான பெரு நிலவின் குழந்தை எனும் பொருள் பொருள் படுகின்றது. அன்னையின் திருமுடியில் காணும் பிறை நிலவு அபிராமிப் பட்டருக்கு பெருநிலவின் குழந்தை எனத் தோன்றுகிறது.. அதைத்தான் இவ்வண்ணம் உரைக்கின்றார். "இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் " இழந்து இழந்து வருத்தமுறும் என் மனமே... ஏக்கம் கொள்ளாதே... மனத்தின் இயல்பு இது.. சிறுவயது தொடங்கி மரணமடையும்வரை மனமானது இழந்தவற்றிற்கெல்லாம் ஏக்கம் கொண்டு அழுகின்றது. ஏ மனமே... நீ ஏன் அழுகின்றாய்... எல்லாவற்றையும் நீ இழந்தாலும், உன்னைத் தாங்க கொம்பு போன்ற துணையாக அன்னை அபிராமி இருக்கின்றாள்.. ஏக்கம் கொள்ளாதே... "உனக்கு என் குறையே" உனக்கு என்ன குறையுண்டு? உன்னைத் தாங்கும் கொம்பாக அன்னை அபிராமியிருக்க உனக்கென்ன குறையுண்டு என் மனமே... நீ கலங்காதிரு.... இளம் கொடி பற்றிப் படரக் கொம்பொன்று அவசியம். கொம்பில்லையெனில் அக்கொடியின் நிலை பரிதாபமே... மனமே...நீ பற்றிப் படர உனக்கு அபிராமி எனும் கொம்பு உன் அருகேயுள்ளது. பற்றிக் கொள்.. நீ இழந்த எதை எண்ணியும் வருந்தாதே.. அழாதே.. உனக்கெந்த குறையும் இல்லை...

பாடல் எழுபத்திரண்டு
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே


விளக்கம் : நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றும் மின்னலை விட மெலிந்த சிறந்த இடையையுடைய மென்மையான அன்னை அபிராமியே... தன் குறைகள் எல்லாம் தீர்வதற்காக எங்கள் ஐயன் சங்கரனார் தன் திருமுடி மீது வைந்த உந்தன் திருவடித் தாமரைகளையே நானும் எனது குறைகள் எல்லாம் தீர்ந்து போகும் படி நின்று வணங்கிப் போற்றுகின்றேன். இனிமேலும் எனக்கு ஒரு பிறவி வந்தால் அது உன் குறையே... வேறு யார் குறையுமல்ல...
அன்னை மேல் எவ்வளவு உரிமை கொண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பார்.? உன்னை.. உன் திருவடித் தாமரைகளை நான் போற்றி வணங்குவதால் இனி எனக்குப் பிறவி இல்லை... மீண்டும் நான் பிறந்தால், அது உன் குற்றம்தான்... வேறு யாருடைய குற்றமுமல்ல என அன்னை மேல் தான் கொண்டிருக்கும் உரிமையைப் பறைசாற்றுகிறார்.
"இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்" நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றுகின்ற மின்னலையும் குறைசொல்லும்படி மெலிந்த சிறந்த இடையினைக் கொண்ட மென்மையான அன்னை அபிராமி.. மின்னல் தனது ஒளியின் தன்மையில் வலிமை பெற்றிருந்தாலும், அதை நாம் நோக்கும் போது அது மிகவும் மெலிந்தது என்பதை அறிகின்றோம். எனவேதான் முன்னர் ஒருமுறை மின்னலையொத்த இடையையுடையவளே எனப் பாடினார் அபிராமிப் பட்டர். நம் கவிஞர்கள் பலரும், பெண்ணின் இடையை மின்னலுக்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கின்றனர். ஆனால் இப்பாடலில், அம்மின்னலைக் குறை சொல்லும்படி இன்னும் மெலிந்த சிறந்த இடையையுடைய மென்மையானவள் என்று அம்மையைப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர். "தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே " தனது குறைகள் எல்லாம் தீர்ந்து போக எங்கள் தலைவனான சிவபெருமான் தனது சடைமுடி மேல் வைத்த உனது திருவடித் தாமரைகளையே... "என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் " நானும் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போகும்படி நின்று வணங்கிப் போற்றுகின்றேன்.. "இனி யான் பிறக்கின்" இனிமேலும் நான் பிறந்தால்... எனக்கு மீண்டும் ஒரு பிறவி உண்டானால்... "நின் குறையே அன்றி யார் குறை காண்" அது உனது குறையே அன்றி வேறு யாருடைய குறை? இப்பிறவியில் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போக உனது திருவடித் தாமரைகளை வணங்கிப் போற்றுகின்றேன்.. உன்னை வணங்குவதால் எனக்கு மீண்டும் பிறவி உண்டாகாது.. நான் மீண்டும் பிறந்தால் அது வேறு யாருடைய குற்றமுமல்ல... உன்னுடைய குற்றம்தான்.. அன்னையே.. என் குறைகளெல்லாம் தீர்த்து என் பிறவியை அறுத்துவிடு.. மீண்டும் என்னை பிறவாமல் செய்து விடு....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.... நன்றி...

கருத்துகள் இல்லை: