திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 53 & 54


பாடல் ஐம்பத்து மூன்று


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே




விளக்கம் : அபிராமி அன்னையே... உனது சின்னஞ்சிறு இடையினில் அணிந்த சிவந்த பட்டாடையையும், உனது பருத்த திருமுலைகளையும், அதன் மேல் அணிந்துள்ள முத்தாரத்தையும், பிச்சிப்பூக்களை அணிந்த உனது அழகிய கருங்கூந்தலையும், உனது மூன்று கண்களையும் மனத்தில் நிறுத்தி வேறெந்த நினைவுகளும் இன்றி தியானித்திருப்பதைத் தவிர சிறந்த தவம் ஏதுமில்லை...

கடந்த பாடலில் அன்னையின் திருவடிகளை எண்ணித் தவமியற்றும் அன்பர்களுக்குக் கிடைக்கும் செல்வங்களைப் பட்டியலிட்ட அபிராமிப் பட்டர், இப்பாடலில் எது சிறந்த தவம் என்று பகர்கின்றார். "சின்னஞ்சிறிய மருங்கினில்.." மருங்கு எனும் பதம் இடையினைக் குறிக்கின்றது. அன்னையின் இடை சின்னஞ்சிறியது... அச்சின்னஞ்சிறு இடையினில்... "சாத்திய செய்யபட்டும் " அணிந்த சிவந்த நிறப் பட்டாடையையும், "பென்னம்பெரிய முலையும் " மிகப்பெரிதான திரு முலைகளையும், "முத்தாரமும்.." அதன் மேல் அவள் அணிந்த முத்து மாலையையும்.... "பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும்.." பிச்சிப்பூ சூடிய உனது கருமை நிறக் கூந்தலையும், "கண் மூன்றும்" உனது மூன்று கண்களையும் "கருத்தில் வைத்துத் தன்னந்தனியிருப்பார்க்கு.." தமது மனத்தில் நிலை நிறுத்தி வேறெந்த நினைவுகளும் இன்றி தனித்திருப்பாருக்கு... இப்பாடலைப் பாடும்போது அன்னையின் அழகிய திருவுருவம் கண்ணில் தோன்றுவதை உணர்கின்றீர்களா... ? அழகிய சின்னஞ்சிறு இடைதனில், சிங்காரமாய் செந்நிற பட்டுடுத்தி, உலகைக் காப்பதற்காகத் தோன்றிய பெரிய திருமுலைகள் மீது முத்தாரத்தை அணிந்து, மணம் வீசும் பிச்சிப் பூக்களைத் தன் கன்னங்கரிய கூந்தலில் அணிந்த முக்கண்ணையுடைய அபிராமியானவள் கண்முன் தோன்றுகின்றாள். எத்தனை அழகிய தோற்றம்...! இத்தோற்றம் மனத்தில் தோன்றிய பின்னர் வேறெந்த நினைவுகள் எழும்?? தவமியற்ற யாருமற்ற வனத்துக்குச் செல்ல வேண்டுமா? இல்லவே இல்லை... கோடிக்கணக்கான மாந்தர் கூடியிருந்த போதும், வேறெந்த நினைவுகளுமின்றி அன்னையின் திருவுருவத்தை மனத்தில் தியானித்திருந்தால் அதுவே சிறந்த தவம்.. "இது போலும் தவமில்லையே" இதைப்போன்ற சிறந்த தவம் இல்லவே இல்லை...

எனவே மூன்று பாடல்களையும் இறங்குவரிசையில் பாடிப்பாருங்கள்... இப்பாடல் சிறந்த தவம் என்ன என்பதையும், முந்தைய பாடல், அத்தவமியற்றினால் என்ன கிட்டும், என்பதையும், அதற்கும் முந்தைய பாடல், தவத்தால் கிட்டிய பொருளோடு அருளிருந்தால் பிறப்பு இறப்பற்ற பெருவாழ்வு, அருளற்றுப் போனால் அழிவு...

அழகாய் இருக்கின்றது அல்லவா?



பாடல் ஐம்பத்து நான்கு


இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே



விளக்கம் : வறுமையில் துன்பப் படுபவர்களே... நீங்கள் உங்கள் வறுமையின் பொருட்டு ஒருவரிடம் சென்று உதவி கேட்டு, பின்னர் அவரால் அவமானப் படுத்தப்படும் நிலை இல்லாதிருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றினால், தவம் செய்யாத கயவர்களிடத்தில் உதவி கேட்டு செல்லும் நிலைமையை எந்த காலத்திலும் எனக்கு ஏற்படாது காத்த திரிபுரசுந்தரி அன்னை அபிராமியின் திருப்பாதங்களைச் சேருங்கள்... அவளையே தொழுங்கள்..

வறுமையைப் போக்கும் பாடல் இது... வறுமையால் துன்பப்படுவோருக்கு அன்னையின் அன்பால் ஆறுதல் சொல்லி அவளிடத்துச் சேர்க்க அபிராமிப் பட்டர் இப்பாடலைப் பாடுகின்றார்..

"இல்லாமை சொல்லி " எம்மிடம் இப்பொருள் இல்லை என்று சொல்லி... "ஒருவர் தம்பால் சென்று " இன்னொருவரிடம் சென்று கையேந்தி... "இழிவுபட்டு நில்லாமை" அவர்களால் இழிவுபடுத்தப் படும் நிலைக்குத் தள்ளப்படாமல் இருக்கும் நிலை ... "நினைகுவிரேல்" எண்ணம் தோன்றினால்... வறுமை மிகக் கொடியது... வறுமையில் வாடுபவர்களைப் பற்றி சற்றே எண்ணிப் பாருங்கள்.. வறுமை வந்திடில்... வறுமையில் பசி வந்திடில்... எந்த உறவுகளும் துணைக்கு வருவதில்லை... எந்த அன்பும் நினைவுக்கு வருவதில்லை... ஒரு சம்பவத்தை இவ்விடம் பகிர்ந்து கொள்கின்றேன்.. அதை நாண் கண்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன.. ஆயினும் இன்னமும் அக்காட்சி என் கண்களை விட்டு அகலாது நிற்கின்றது.. அதை எண்ணும்போதெல்லாம் மனம் துடிப்பதைத் தடுக்கவே இயலாது.. நான் பெங்களூருக்கு வந்த புதிதில், ஒருமுறை ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். திருவிழாக்காலம்.. நேரடியாக நெல்லைக்குச் செல்லும் பேருந்து கிட்டவில்லை. எனவே மாறி மாறி சென்று கொண்டிருந்தேன்.. கரூரில் பேருந்து நின்று கொண்டிருந்த போது பேருந்து நிலையத்தில் கண்ட காட்சிதான் இது..வயதான தம்பதியர் அப்பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர்.. அம்முதியவர் படுத்திருந்தார். அவரால் எழுவதற்கும் இயலவில்லை.. அவர் அருகில் இரு குடங்கள்.. சில சாமான்கள்... சில மூட்டைகள்.. மூதாட்டியோ அருகிலிருந்த உணவகத்தில் சென்று இரந்து கொண்டிருந்தார். அக்கடைக்காரனோ அவரை மிகவும் கேவலமான சொற்களால் திட்டிக் கொண்டிருந்தான்.. என்னால் அவ்விடத்து இறங்கவும் இயலவில்லை.. பேருந்து மெதுவாக நகர்ந்து கொண்டுதான் இருந்தது.. என்ன காரணத்தால் இவர்கள் இவ்விடம் வந்திருப்பார்கள்..? கடன் தொல்லையால் யாராவது வீட்டை விட்டு விரட்டியடித்திருப்பார்களோ?? அவர்களது புதல்வர்கள் என்ன காரணத்தாலோ அவர்களைத் துரத்தி விட்டிருப்பார்களோ??? என்ற பல எண்ணங்கள் என் மனத்தில் தோன்றின.. கடைக்காரனும் இரக்கப்பட்டு இரு இட்லிகளை அம்மூதாட்டிக்குக் கொடுத்தான். நானும் இரண்டில் ஒன்றைத் தனக்கும், மற்றொன்றைத் தன் கணவருக்கும் கொடுப்பார் என எண்ணிக் கொண்டிருந்தேன்.. ஆனால் அவரோ முதியவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டு தானே இரு இட்லிகளையும் தின்னத் தொடங்கினார். முதியவரோ "பசி.. பசி..." என அரற்ற... "சும்மா கிடயும்யா...." என்ற படி தானே தின்று கொண்டிருந்தார்.. தின்றும் விட்டார்... முதியவர் மெல்ல எழுந்து அமர்ந்து குடத்தின் நீரையாவது குடிக்கலாம் என்று அதைத் தொட்ட பொழுது அவைக் காலிக்குடங்களாதலால் உருண்டு விழுந்தன... இந்த சமயத்தில் நம் பேருந்தும் அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டது..தனது வாலிப வயதில் தன் மனைவியை எப்படியெல்லாம் நேசித்திருப்பார் அவர்? தினமும் அவருக்கு என்னென்ன இனிப்புகள் வாங்கிக் கொடுத்திருப்பார்? ஆனால் வறுமை... பசி... இன்று அந்த அன்பு நிறைந்த கணவருக்குக் கொடுக்காமல் தானே தின்னும்படி செய்து விட்டதே... இறைவா இதென்ன கொடுமை என்று அழுது கொண்டே பயணம் செய்தேன்... ஆக வறுமை கொடிது... இந்த உலகில் வறுமை நிறைந்தோருக்கு எல்லாவிடத்தும் இழிவுதான் கிடைக்கின்றது... ஆக உங்கள் வறுமை போக வேண்டுமா?? உங்கள் வறுமையின் பெயரால் இன்னொருவரிடம் சென்று கையேந்தி, அவரால் இழிவுபடுத்தப் படும் நிலை உங்களுக்கு வரவேண்டாம் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுமானால்.... "நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் " சொற்களின் விளையாட்டைப் பாருங்கள்..ஒரு முரண்தொடை... தினமும் தவம் செய்யும் செய்யாமல் இருப்பது எப்படி என்று கற்ற கயவர்களிடத்தில்... தவம் செய்யாமல் இருப்பது எப்படி என்றும் கற்பார்களோ??? முரண் வாக்கியத்தை அமைத்துப் பாடலைச் சொற்சுவை மிகுந்ததாக்குகின்றார்.. தவம் செய்வோர் தம்மிடத்து வருவோருக்கு ஈயவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள்.. மாற்றாரிடத்துச் செல்லும்போது அவர் தருவாரோ தர மாட்டாரோ என்ற எண்ணத்தோடேயே செல்ல வேண்டியுள்ளது.. அவரும் கைவிரித்து, நம்மை இழிவுபடுத்தி விடில், கேவலமான நிலைக்குத் தள்ளப் பட்டு விடுகின்றோம்.. எனவே தவமற்ற அல்லது தவம் செய்யக்கூடாது என்ற விதியைக் கற்ற கயவர்களிடத்தில்..."ஒரு காலத்தும் செல்லாமை வைத்த திரிபுரை.." எந்த காலத்திலும் உதவி கேட்டு நான் செல்லும்படியான நிலைக்கு நான் ஆளாகாமல் வைத்த திரிபுர சுந்தரியான அன்னை அபிராமியின்.. "பாதங்கள் சேர்மின்களே " திருப்பாதங்களைச் சென்றடையுங்கள்..அவளைத் தொழுங்கள்..

மீண்டும் ஒரு அழகிய இறங்கு வரிசை... வறியவர்களை நோக்கி, உங்கள் வறுமை விலகுவதற்காக அன்னை அபிராமியைத் தஞ்சமடையுங்கள் என்று சொல்வது இப்பாடல். முந்தைய பாடல் அவளை எண்ணுவதே பெருந்தவம் என்று சொல்லும் பாடல்.. அதற்கும் முந்தையது... தவமுடையாருக்குக் கிடைக்கும் செல்வங்கள்.. எனவே வறுமையால் வாடுவோர் செல்வத்தில் திளைக்கின்றார்... செல்வம் மிகுதியால் வரும் கேடும், அத்தோடு அருள் இணைந்திருந்தால் அன்னையைத் தொழுதிருந்தால் கிட்டும் பிறப்பு இறப்பற்ற பெருவாழ்வையும் அதற்கும் முந்தைய பாடல் சொல்கின்றது.. அழகியதோர் இறங்குவரிசை...

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

கருத்துகள் இல்லை: