திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 45, 46, 47 & 48

அன்பர்கள் மன்னிக்க... நேற்றையதினம் அலுவலகப் பணி மிக அதிகம். எனவே.. இணைய வர இயலவில்லை. எனவே இன்றையதினம் நான்கு பாடல்களுக்கு விளக்கம் எழுதலாம் என முற்படுகின்றேன். அன்னையே அதற்கு அருளட்டும்.. அன்பர்கள் எம்மைப் பொறுத்தருள வேண்டும்.




பாடல் நாற்பத்தைந்து


தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே


பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்


கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ


மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே




விளக்கம் : அபிராமி அன்னையே... உனக்குப் பணிவிடைகள் செய்யாது, உன் திருப்பாதங்களை வணங்காது, துணிவுடன் தங்கள் மனத்தில் பட்டதையே கடமையென பழ்ங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது... அவர்களைக் கண்டு அடியேனும் அதன்படி நடந்தால் அது சரியோ அல்லது தவறோ என்பதும் அறியேன். ஆயினும் நான் தவறே செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள் தேவி...

இறையருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல் தங்கள் இச்சைப் படியே ஞானமார்க்கத்திலும், கர்ம யோக மார்க்கத்திலும் நின்று முக்தியடைந்த ஞானிகள் பழங்காலத்தில் இருந்தனர். ஆனால் பக்திமார்க்கமே இறையருள் பெறுவதற்கு மிகவும் எளிதான மார்க்கமாகும்.. அன்னையே... உனக்கும் உனது அன்பர்களுக்கும் பணிவிடைகள் செய்யாது, உன் திருப்பாதங்களைத் தொழாது தங்கள் இச்சைப்படி கர்மயோகத்திலோ, ஞானமார்க்கத்திலோ பழங்காலத்தில் நின்றோர் இன்றும் இருக்கின்றார்களோ இல்லையோ.. நான் அதனை அறியேன்... "அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ" அடியேனும் அவர்களைக் கண்டு மனம் மாறி அவர்கள் வழி நின்றால் அது தவறோ... அல்லது சரியோ... கைதவம் - தவறு அல்லது அநீதி என்று பொருள் படும்.. செய்தவம் - நீதி என்று பொருள் படும்.. "செய்தவமின்றேல் கைதவம் ஆளும் " என்பது ஔவையார் வாக்கு. முன்னரே அன்னையை விடுத்து வேறெந்த மார்க்கத்திலும் செல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து வேறொருவர் வழியைக் கண்டு தானும் மனம் மாறிவிடுவோமோ என்று அஞ்சும்படி பாடுவது வியப்பைத் தருகின்றது.. ஆயினும் அவர் என்றும் அன்னையின் அன்பு பாலகனாகவே இருந்தார்.. மனம் மாறும் இயல்பு படைத்த மானுடராய்ப் பிறந்து விட்டோம். நாம் அன்னையை விட்டு விலகவேண்டாம் என்று நினைத்தாலும், நமது கர்மா - முன்வினைப் பாவங்கள் நம்மை நல்நெறியிலிருந்து பிரித்து வேறு பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுமோ என்ற அச்சம்தான் அபிராமிப் பட்டரை இவ்வண்ணம் எண்ணத் தூண்டுகிறது.. அவ்வாறு நான் உன்னை விட்டு விலகிச் சென்றாலும், அன்னையே.. .என்னை வெறுக்காது பொறுத்தருள்வதுதான் உன் தாயன்பை உணர்த்தும்.. எனவே அன்னையே.. என்னைப் பொறுத்தருள்,,,



பாடல் நாற்பத்தாறு


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்


பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு


கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே


மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே



விளக்கம் : அபிராமி அன்னையே... புதிதாய்த் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தையுடைய ஈசனது இடப்பாகம் அமர்ந்த பொன்னே... தம் அடியார்கள் வெறுக்கும் படியான செயல்களைச் செய்தாலும் பெரியோர்கள் அவர்களது செயல்களைப் பொறுத்து அன்பு செய்யும் வழக்கம் புதியது அல்லவே... நான் நீ வெறுக்கும்படியான செயல்களைச் செய்து உன்னை விட்டு விலகிப்போனாலும் நீ வெறுக்கும்படியான செயல்களைச் செய்தாலும், உன்னையே வாழ்த்துவேன்...

அன்னையே எவ்வழி சென்றாலும் நான் உன்னையே வாழ்த்துவேன்.. நீ என்னை மன்னித்து அருளிச் செய்வது உனது பெருந்தன்மை என மறைமுகமாக ஒரு வேண்டுதலை இப்பாடல் தருகின்றது.

"புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான்" புத்தம் புதிய நஞ்சு... அமரர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பிறந்த புத்தம் புதிய விடம்.. உலகை அழிக்க வந்தபோது அப்புது நஞ்சை அருந்தி உலகைக் காத்து தன் கழுத்தினை நீலமாக்கிக் கொண்ட... கறுப்பாக்கிக் கொண்ட ஈசன்.. சிவபெருமான்... "இடப்பாகம் கலந்த பொன்னே.." அப்பனது இடப்பாகம் அமர்ந்தவளே... சேர்பவளே... இருந்தவளே... எனப் பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து இடப்பாகம் கலந்த பொன்னே என்கிறார்.. அப்பனது இடப்பாகத்தில் கலந்து விட்டவள்... பொன்மகள்....

"வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே " உலகம் ஏற்றுக்கொள்ள இயலாத தவறுகளைத் தம் பிள்ளை புரிந்தாலு, அன்னையானவள் தன் பிள்ளையை என்றும் விட்டுக் கொடுப்பதே இல்லை.. அவனைப் பொறுத்தருள்வாள்.. தம் அடியார்கள் தாம் வெறுக்கத்தக்க செயல்களைப் புரிந்தாலும் ஞானிகள், குருமார்கள், தங்கள் சீடர்களை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றனர்.. இது பெரியோர்களின் பெருந்தன்மையைக் குறிக்கும்.. இது போன்ற நிகழ்வுகள் புதிது அல்ல என் அன்னை அபிராமியே... நானும் உலகோர் வெறுக்கும் படியான செயல்களைப் புரியலாம்.. ஆனால் என்னை மன்னிப்பது உன் கடனே... "மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.." உன்னால் மறுக்கப் படுகின்ற செயல்களைப் புரிந்தாலும் கூட,,, அன்னையே... நான் உன்னையே வாழ்த்துவேன்... உன்னையே சரண்புகுவேன்.. உன்னை விடுத்து எம்மைக் காக்க யார்தாம் உண்டு..? நீ எனக்கு அடைக்கலம் தந்தருளவேண்டும்... அது உனது நீதி...

"அன்றே தடுத்து எம்மை ஆட்கொண்டாய்" என்று தவறிழைக்கும் முன்னரே என்னை உன் அடியவனாக்கிக் கொண்டாய் என்று பாடி, உத்தமனாய் வாழ்ந்த அபிராமிப் பட்டரே.. தான் தவறிழைக்கும் நிலை பற்றிப் பாடி வேண்டுகிறார்.. அன்னையே... எங்களது பிழைகளையும் பொறுத்தருளம்மா என வேண்டி பாடலை மீண்டும் ஒருமுறை பாடிப் பாருங்கள்.. நம்மைப் பிடித்துள்ள பாவசுமைகள் விட்டொழியட்டும்...



பாடல் நாற்பத்தேழு

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்

வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்

ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே



விளக்கம் : வாழ்வதற்க்குரிய நெறிமுறையொன்றை என் மனத்தில் நான் கண்டுகொண்டென்.. அதை அறிந்த ஒருவர் அழிவதில்லை... தாம் பிறருக்குச் சொல்வதுமில்லை.. அது அத்தனை எளிமையான வழியுமில்லை.. கடலால் சூழப்பட்ட ஏழு வகை நிலங்களுக்கும், பெரிய மலைகள் எட்டுக்கும், எட்டாமல், இரவையும் பகலையும் ஒளியால் நிரப்பும் சூரிய சந்திரர்களுக்கு நடுவே நின்று சுடரும் பேரொளியான அபிராமி என்னும் ஒளி அது...

அன்னையை, ஆதிபராசக்தியை, அன்பென்னும் பெரும் பண்பால் நம்மை ஆட்கொண்டவளை, வேதத்தின் உட்பொருளை, எளியோரின் வேதமாய்த் திகழ்பவளை வர்ணணை செய்ய வார்த்தைகள் ஏது? அவளே நெறி... அவளே பாதை... அபிராமிப் பட்டர் சொல்லும் வாழ்க்கை நெறி அன்னை அபிராமி மட்டுமே... அபிராமி ... அபிராமி ... என்றழைத்தாலே போதுமே.. வாழ்வின் வழிமுறைகளை ஏற்று நெறிப்படுத்தி நடத்திச் செல்பவள் அவளே... அபிராமி அருகிருக்க வேதங்களை ஏன் ஓத வேண்டும்? அபிராமி அருகிருக்க வேள்விகள் ஏன் செய்ய வேண்டும்? எல்லா நோய்களையும் தீர்க்கும் மருந்தே நம் அருகிருக்க மருத்துவனை ஏன் நாட வேண்டும்..? அபிராமியே... எனக்கு எல்லாமும் ஆனவள் நீ... நீயே வாழ்க்கை வழிமுறை...

"வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே" நல்முறையில் வாழ்வினை நடத்துவதற்குரிய வழிமுறையொன்றை என் மனத்திலே கண்டு கொண்டேன்... அது எப்படிப் பட்டது?? "ஒருவர் வீழும் படி அன்று" மனிதரை இழுத்துச் சென்று சீரழிக்கும் அழிவு வழியல்ல அது...மேலும்... "விள்ளும் படி அன்று" அதை அறிந்தோர் மிக எளிதாக விளக்கிச் சொல்லக்கூடிய வழியும் அல்ல அது.,... அற்புதமான அனுபவமானவள் அன்னை... அவளைக் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் எனச் சொல்வார்கள்.. இறை அனுபவத்தை வார்த்தைகளில் விளக்கிச் சொல்வது என்பது எளிதானது அல்ல... மிகவும் எளிதாக இறைவனைக் கண்டேன்.. கண்டேன்... என்று பிதற்றுபவர் இறை அனுபவத்தைக் கண்டே இருப்பதில்லை... அப்படியானால் அபிராமிப் பட்டர் இதனை எங்ஙனம் விளக்குகிறார்? அவர் விளக்கவே இல்லை... அன்னையை நேரடியாக நம் கண்களுக்கே அனுப்புகிறார்.. இதைப் பாரடா மைந்தனே... இவளே உன் தாய்... இவளே உன்னைக் காப்பவள் என்று அன்னையெனும் மாபரிசினை நமக்களித்தவர் அபிராமிப் பட்டர்... சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தார் நண்பர் ஒருவர்.. எனக்கு அது புரியவே இல்லை.. ஆனால் என் அம்மா சர்க்கரைப் பொங்கலை தயார் செய்து எனக்களித்த போது அதன் செய்முறைகளைப் பற்றி நான் கவலைப் படவே இல்லை... அமிழ்தமே அருகிருக்க அதை அடைவதற்குரிய வேறு வழிமுறைகளை நாம் எதற்காகக் கற்க வேண்டும்...?

"வேலை நிலம் ஏழும் " வேலை எனும் பதம் கடலினைக் குறிக்கின்றது.. கடலால் சூழப்பட்ட நிலங்கள் ஏழும்... "பரு வரை எட்டும்" வரை எனும் பதம் மலையைக் குறிக்கும். பெரிய மலைகள் எட்டும் "எட்டாமல்" அடைய இயலாமல் "இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" இரவிலே சூழும் சுடர் சந்திரன்... பகலிலே சூழும் சுடர் சூரியன்.. இவர்கட்கு நடுவே கிடந்து சுடரும் சுடரொளி.... சந்திரன் தாமாகவே ஒளிர்வதில்லை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.. சூரியனது ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றது சந்திரன் என்று உரைப்பார்கள்.. பூமியின் இருளை நீக்க வந்த சுடர்களான இவை இரண்டுக்கும் நடுவே சுடரும் சுடரொளி... அதாவது.. சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி ஒளிர்கின்றது... சூரியனுக்கு ஒளியை அளிப்பது யார்??? அதுதான் இந்தச் சுடரொளி... அபிராமி என்னும் சுடரொளி... அபிராமியின் ஒளியை சூரியன் பிரதிபலித்து அழகிய பகலினை நமக்குத் தருகின்றது... சூரியனது ஒளியை சந்திரன் பிரதிபலித்து இனிக்கும் இரவுப் பொழுதினைத் தருகின்றது... அட முட்டாளே... இன்று பூரண அமாவாசை... இன்றெப்படி நிலவு தோன்றும் என்று என்னைக் கேட்டாயே... உலகுக்கு ஒளியை வழங்கும் சூரிய சந்திரருக்கும் ஒளியை வழங்கும் அன்னை அபிராமியே என் வாழ்க்கை நெறி... அவள் நினைத்தால் அவளருளால் இன்று நிலவு தோன்றாதா?.. தோன்றுமடா.... அது என் அன்னையின் பேராற்றல் முன்னே சிறு துளி...



பாடல் நாற்பத்தெட்டு

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்

படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்

இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே



விளக்கம் : சுடரும் பிறை நிலவு தங்கும் சடைமுடியையுடைய ஈசனின்மேல் ஒன்றிப் படர்கின்ற நறுமணம் வீசும் பசுங்கொடியைப் போன்றவளான அன்னை அபிராமியை இடர்களெல்லாம் தவிர்த்து இமைப்பொழுது நெஞ்சில் நிலை நிறுத்தி, தியானித்து இருப்போர், குடலும், இறைச்சியும், குருதியும் தோயும் இந்த மானுட பிறப்பினை மீண்டும் எய்துவாரோ?? இல்லவே இல்லை..

உலகம் என்பது மாயைகளால் நிறைக்கப்பட்ட ஒரு நாடகமேடை போன்றது... இதெல்லாம் மாயை என்று புரிந்த மனத்தில் மட்டுமே ஞானம் உதயமாகின்றது.. ஞானம் உதயமான மனது பின்னர் பிறப்பு பற்றி சிந்திப்பதில்லை. அதை விரும்புவதுமில்லை... நம் கிராமப் பகுதிகளில் ஒரு சொல்வழக்கு உண்டு.. இப்பிறவியில் யாரொருவர் ஆலய புணரமைப்புப் பணிகளில் ஈடுபடுகிறாரோ அல்லது புதிதாக ஒரு ஆலயத்தைக் கட்டுகிறாரோ அவருக்கு இதுவே ஏழாவது பிறப்பு.. அதாவது இறுதிப் பிறப்பு. மீண்டும் அவருக்கு பிறப்பு இல்லை.. என்று சொல்வார்கள்.. ஆலயத் திருப்பணிகளில் அத்தனை சுலபமாக ஈடுபட்டுவிட முடியுமா? அதற்கு இறைவனின் அழைப்பு வேண்டும்.. அது இருந்தால் மட்டுமே சாத்தியம்.. அன்னையை நம்பி அவளது திருப்பணிகளில் ஈடுபடுவது என்பது பெரும்புண்ணியம்.. இன்றைய தினம் தமிழகத் திருக்கோயில்களில் பெரும்பாலானவை சுற்றுலாத்தலங்கள் போன்றும், திரையரங்குகள் போன்றும் மாறிக்கொண்டே வருகின்றன. இறைவனை அருகிருந்து காண்பதற்கு ஒரு கட்டணம்.. அங்கே அமர்ந்திருந்து காண்பதற்கு வேறு கட்டணம். சற்றே தொலைவிலிருந்து காண்பதற்கு ஒரு கட்டணம்.. மிகவும் தொலைவிலிருந்து காண்பதற்கு கட்டணம் ஏதுமில்லை... என்னவோ இவர்களது தந்தையும் தாத்தனும் தங்கள் சொந்தப் பணத்தில் ஆலயத்தைக் கட்டி வைத்ததைப் போன்று பேயாட்டம் போடுகின்றார்கள்.. சரி.. அவ்வளவு பணம் வருகின்றதே.. வருகின்ற பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவோமே என்ற எண்ணமும் அவர்கட்கில்லை.. செந்தூர் செல்லும் போதெல்லாம் ஆலயத்தின் நிலையைக் கண்டு மனம் வருந்துவேன்.. கட்டணம் செலுத்தி அமர்ந்து குமரனைக் கண்டது ஒரேயொரு முறைதான்... திருமணம் முடிந்து கடல்நீராடி ஆலயவழிபாடு செய்யச் செல்லும்போது மட்டும்தான் அது நடந்தது. இதுபோன்ற நிலைமைகள் மாற வேண்டும்.. என்பதுதான் நமது விருப்பம். ஆலயத்திற்கென்றே வரும் வருமானம், ஆலயத்திருப்பணிகளுக்கே செலவிடப் படவேண்டும்.. ஆலயங்கள் குப்பைக் கூடாரங்களாகிவிடக்கூடாது... அங்கே திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் ஆலயத்தை அசுத்தம் செய்யும் கயவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். சரி அபிராமி அந்தாதிக்கு வருவோம்..

"சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்" ஒளிரும் பிறைச் சந்திரன் தங்கும் சடைமுடியையுடைய குன்றான சிவபெருமானின் மேல் "ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப்" ஒன்றிப் படரும் நறுமணம் வீசும் பசுங்கொடியை.... எங்கள் அன்னையை... குன்றின் மீது பசுங்கொடி எங்ஙனம் படருமோ அங்ஙனம் அன்னையானவள் ஈசன் மீது படர்கின்றாளாம்.. கற்பனை வளத்தைப் பாருங்கள்... அதுவும் நறுமணம் வீசும் பசுங்கொடியாம்... அவளைப்... "பதித்து நெஞ்சில்" நெஞ்சில் நிலைநிறுத்தி "இடரும் தவிர்த்து" இடர்களெல்லாம் தவிர்த்து... அன்னையைத் தியானிக்க வரும்போது எழும் இடர்களையெல்லாம் தவிர்த்து.... "இமைப்போது இருப்பார்" இமைப்பொழுதாகிலும் இருக்கும் தன்மை படைத்தவர்... "குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே" குடலும், இறைச்சியும், குருதியும் நிறைந்த இவ்வுடம்பினை.... மானுடப் பிறப்பினை... "பின்னும் எய்துவரோ?" இனிமேலும் அடைவார்களோ...? அதெப்படி சாத்தியம்?? அமைதியாயிருக்கின்ற மனது தியானிக்க அமரும்போதுதான் அலைபாய ஆரம்பிக்கும்.. அலைபாயும் மனதோடு அமர்ந்து, எழுகின்ற மாற்று எண்ணங்களையெல்லாம் தவிர்த்து, இமைப்பொழுதாவது... ஒரு நொடியாவது அன்னையை மனத்தில் நிறுத்தி தியானிப்போருக்கு மீண்டும் பிறப்பு இல்லை... என்பது அபிராமிப் பட்டரின் கருத்து... அப்படியாயின் அவளையே என்றென்றும் தியானித்திருக்கும் அபிராமிப் பட்டருக்கு???

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...



கருத்துகள் இல்லை: