திங்கள், ஜனவரி 24, 2011

உங்களோடு சில நிமிடங்கள்...

உங்களோடு சில நிமிடங்கள்...
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. அன்னையின் பெருமைகளைப் பற்றிப் பேசலாம் என்றுரைத்த வேளையில் அபிராமி அந்தாதியைப் பற்றி எழுது என்றுரைத்த அண்ணல் தமிழன் வேணு அவர்கள் என் இதயத்தில் நீங்காத இடம் பெற்று விட்டார்.. ஏனெனில், நவராத்திரியின் முதல் நாளில் இருந்து இன்றைய நாள் ஐம்பதாவது நாள்.. இடையிடையே ஓரிரு நாள் விடுத்து (விடுபட்ட நாளின் பாடல்கள் அடுத்த நாளில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது) மற்ற அனைத்து நாட்களிலும் என்னைத் தொடர்ந்து எழுதும்படி வைத்த அபிராமியின் கருணைக்கு என்னை ஆளாக்கியவர் அல்லவா? நான் ஒரு போதும் இப்படித் தொடர்ச்சியாக எழுதியதே இல்லை. நான் தொடங்கிய பல காரியங்கள் பலமின்றி இடையில் நின்று போயிருக்கின்றன.. ஆனால் அபிராமி அந்தாதி பற்றிய உரைகளோ எப்படியும் எழுதியே தீர வேண்டும் என்ற தீராத தாகத்தை என்னுள் ஏற்படுத்தியது... நான் இவற்றை ஓதும் வேளையில் எனக்குத் தென்பட்ட அர்த்தங்களை விட இப்போது எழுதுகையில் சற்றே மாறுபட்டும் ஆழமாகவும் அர்த்தங்கள் தோன்றியமைக்குக் காரணம் அன்னையேயன்றி வேறில்லை...
இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில்தான் எங்கள் அன்பு மகளும் பிறந்தாள். அம்மகிழ்வையும் அன்னையின் அன்புப் பரிசு என்றேதான் கருதுகின்றேன்... இவ்வுரைகளை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், அன்னை குறித்து எழுதிய இரு கவிதைகளும், எங்கள் திருமகளுக்கென்று நான் எழுதிய இரு தாலாட்டுக்களையும் தவிர (அதிலும் ஒன்று சுட்டது) என்னுடைய தனிப்பட்ட படைப்புக்கள் எதுவுமே வெளிவரவில்லை... எனவே எந்த ஒரு கவனச் சிதறலுக்கும் ஆளாகாமல் காத்து அபிராமி அந்தாதி உரைகளை எழுதச் செய்த அன்னை அபிராமிக்குக் கடன் பட்டிருக்கின்றேன்.
டிசம்பர் ஐந்தாம் நாள் திருக்கடவூருக்குச் செல்ல உள்ளோம் அல்லவா? சென்று வந்த பின்னர் அவள் காட்சியைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.. அதை நான் எழுதுவதை விட முனைவர். காளைராசன் அவர்கள் தனது சீர்மிகு எழுத்துக்களால் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார். (சரிதானே ஐயா?)
இன்னுமொரு செய்தி... மிகுந்த மகிழ்ச்சியோடு அபிராமி அந்தாதியை முடித்திருக்கின்றோம்..  எங்கள் திருமகள் பிறந்தும் சரியாக நாற்பது நாட்கள் ஆகிவிட்டன... எங்கள் திருமண நாளும் வருகின்றது.. கடந்த ஆண்டு மாவீரர் தினத்தன்றுதான் எங்கள் திருமணம் நடந்தேறியது.. இந்த இரண்டாமாண்டு துவங்கும் வேளையில் அன்பு மகளும் அருகிருப்பது அகம் மகிழச் செய்கின்றது....
நவம்பர் 27ல் சந்திக்கலாம் என்று பெங்களூர் நண்பர்கள் பேசியிருந்தோம் (ஸ்வர்ணா அக்காமட்டுமே?) எங்கள் மணநாளான அன்று என் தமைக்கையார் இல்லம் செல்லலாம் என்று முடிவு செய்துள்ளோம்.. எனவே இன்னுமொரு நாளில் நாம் சந்திக்கலாம்...
மேலும் எனது பணி முடிவடைந்தது... இனி இதை அழகுறத் தொகுத்து அழகிய மின் நூலாக நண்பர் திரு. பிரசாத் வேணுகோபால் அவர்கள் தருவார்கள்.. அன்னாருக்கும் எனது நன்றிகள்...
மீண்டும் நல்லதொரு படைப்போடு சந்திப்போம்... எழுதும் ஆற்றலை அன்னையே தர அவள் திருப்பாதங்களைச் சரணடைகின்றேன்...
1) அறியாத பிள்ளையடி உன்தன் மேலென்றுமன்பு
அகலாத பிள்ளையடி கயமை சூழ் கவினுலகில்
அல்லல் தீரவேண்டியுன் அருமடிகள் சேர்ந்தேன்
அல்லியங் கமலாசனத் தபிராமித் தெய்வமே

2) தெய்வமெலாந் தொழுந் தெய்வத்தைத்
தேடியின்று கண்டு கொண்டேன் - அது
ஆதிக்கடவூர்ப் பதியில் ஆனந்த நடனஞ்செய்யும்
பாதிப் பரமனுடலேற்ற அபிராமி நீயல்லவோ?

3) அல்லவை செய்தேன் அறத்துக்கண் சென்றே
பல்லுடை பட்டேன் பஞ்சமா பூதங்கள்
மல்லுக் கிழுத்தவேளை அவைதம்மை
வெல்லும் வழியென்று இன்றுனைக் கண்டேன்.

4) கண்ணுறக்கம் மறந்தேன் கற்ற கலைப்
பண்களெல்லாம் மறந்தேன் உன்தன்னையே
மண்ணுலகில் தஞ்சமென்றடைந்தேன் - அன்று
விண்ணோர்க்கு அமுதீந்த ஆனந்த வல்லியே....

5) ஆனந்தந் தந்திடும் அருட்கடலுமையாள் கடம்பக்
கானகத் தலைவி எங்கள் ஈசனார் அன்று
தானரசாண்டிடத் தாலியேற்ற அம்பிகையே மெய்யருட்
பானகம் தந்தெனை ஈர்த்தாள் தன் சேவடிக்கே...

6) சேவடியே பரமென்று பற்றி நின்றேன் இன்று
காவடியேற்கும் கந்தனின் கரங்களுக்கன்று
சாவடிக்கும் வேல் தந்த உமையே உனைப்
பாவடிக்கும் புலவன் இப்பூவுலகிலே.....
7) பூவுலகம் பெற்ற அன்னை தன் புன்னகையால்
பூவளித்தாள் தன் மாந்தருக்கு - கமலப்
பூவுதித்த பிரமனும், நாரணனும், ஈசனுமீந்த
பூக்களையேத் தன் வளைக்கரத்தாற் பற்றி

8) வளைக்கரம் பற்றிய சங்கரனார் தன் மகன்
வளைவாழும் எலி வாகனன், வள்ளி
வளைக்கரம் பற்றும் கந்தன் தன்னோடு
வளையே நின் திருவடி சேர்ந்ததுமே..

9) சேர்ந்தேன் நின் சமயத்தே அன்பர்தமைச்
சேர்த்தேன் நின் திருவடிக்கே அளவிலாச் செல்வம்
சேர்க்கும் அலைமகளும், கலைமகளும் வந்து
சேர்ந்தே தொழும் முத்தார வல்லியே

10) முத்தாரவல்லி யுந்தன் குலசைமாநகரம் வந்து
பித்தம் தெளிந்தேன் பிறை சூடும்
பித்தரும் நீயும் அமருங்கோலங் கண்டு
சுத்தமானேன் கலையெலாந் தொழுங் கமலவேணியே..

11) கமலத்துதித்த அயனும் தந்தையும் அவர்தம்
கர்வமழித்திட்ட அரனும் வந்திசை பாடிக்
கண்குளிரக் காணும் நின் கோலத்தைக்
கண்டேன் இவ்விடத்து நீ ஆடியவண்ணம்..

12) ஆடிய நடங்கண்டிடும் அவனியோரெலம்
ஆரணங்கே யுன்தாள் பணிவர் - அன்று
அமரர் இடர் தீரக் கடுவிடமுண்ட வெள்ளி
அம்பலத்தாடுவனின் அயர் தீர்த்த கயலே..

13) கயல்விழி கொண்டு கவினுலகீன்ற கலையே
கயமை கொள் நின் மகற்கு கவித்திறன் ஈந்த உமையே
கயத்தின் மீதேறிக் கானகம் ஆண்டிடுந் தவளே.
கயலரசாளுங் காசி மாநகரத் திருவே...

14) திருவுந் தொழுந் திருவாகி நின்ற பரமேயுன்
திருவடி தொழுவோர்த் தீங்கினைத் தீர்த்திடு மறமே
அருமறைகள் தொழுதேத்தும் அங்கைத் தேனே நின்
அருள் தந்தெனை யாண்ட அம்மையுன் பதமே

15) பதந்தரு மறமும் பண்டை எனை ஈர்த்த நின்
இதந்தரு மனமும் இன்னலெலாந் தீர்க்கும்
கதந்திருக் கரமும் கரமேற்குங் கருப்பு வில்லும்
உதந்திருக் கமலத் தமரம்மே நின் பேரளியே...


16) அளியார்க்குங் கொன்றைச் சடையன் திருவிட
மளித்தான் நின் கொங்கையிற் வீழ்ந்து - நெஞ்சத்
தொளியே கற்றோர் தமக்கு அவர் பாவிஞ்சுங்
களியே கற்பகமே கடம்ப வனத்தான் காதலியே

17) காதலிற் பிறிதென்ன வேண்டவோ? கங்கைத்தலை
ஆதலின் நின்பதம் பற்றும் பரமன் அடியார்க்குச்
சாதலிற் பெருவின்னல் வருங்காலை அவைதம்மை
மோதலிற் றூசாக்கும் என்னம்மை நெஞ்சகத்தே...

18) நெஞ்சகத் தமர்ந்தாண்டிடும் அன்னையே நின்
நெஞ்சங்கவர் கள்வனும் நீயுமே வந்தென்முன்
அஞ்சேலென்றே அருட்கரம் நீட்டி அணைத்தெடுத்துன்
நெஞ்சத்திற் சாய்த்துப் பரந்தரு வரந்தருதியோ?

19) வரமும் வேண்டுவரோ புவனத்தெங்கனுமே வேம்பு
மரமாகி நின்ற அன்னைதன் அருளை வேண்டிடும்
கரமும் கமண்டலமும் காவியுடையும் சடைநீளும்
சிரமும் கருணை மனமுங் கொண்ட மாத்தவரே

20) மாத்தவளாம் தன் கயல்விழியால் அகிலமெல்லாம்
காத்தவளாம் அயனொடு அரனரி என மூர்த்திகளைப்
பூத்தவளாம் புவனியிற் தோன்றிடும் தெய்வங்களில்
மூத்தவளாம் என்றும் இளைய கன்னியெனும் ஆரணங்கே...

21) ஆரணங்கிவள் அடியேன் எந்தன் அன்னையெனுங்
காரணத்தால் தானே வந்து தாள்தந்தாள் கானக
வாரணத்தின் மீதேறியே- கலியாடும் வெம்மையுலகில்
பூரணங்கண்டிட இவள்தாள் பணிமீர் உலகத்தீரே...

22) உலகம் யாவையும் பெற்றாள் உயர் பச்சைக்கிளி
அலகால் உரசும் தோளாள் பணிமறந்து மற்றைக்
கலகம் செய்வார் தமக்கும் இரங்கி அருள்செய்
வல் அகம் வாழும் மெல்லிடைப் பூங்கொடியே...

23) கொடியிடையாளை எங்கோமளவல்லியை எஞ்சென்னி
அடியெனக் கொண்டாளை எங்கும் நிறைந்தவளை ஏதமற்றுப்
படியளக்கும் பார்வதிதேவியை பரமனிடப் பாகம் கொண்டாளை
அடித்தொழுவார் தமக்கு  அகிலமெங்கும் புகழாரமே..

24) புகழாரம் சூடிப்பாடும் புலவனல்லேன் நிந்தோளிணைக்குப்
புகுமாரம் சூடித்தரும் புண்ணியனல்லேன் நின் திருக்கோயில்
அகலேற்றும் அன்பனுமல்லேன் அளியேன் அறிவீனம்
அகலக் கடவூரிற் காட்சி தந்தமையென் புண்ணியமே...

25) புண்ணியமென் செய்தேன் நின்புன்னகைக் கண்டிடவே
மண்ணுயிரில் எளியேன் என்மனக்கோயில் வந்தவளே.
பண்சமைக்கும் பாவலனாய் நின்பதியிற் ஏற்றவளே
கண்ணிணைகள் களித்திடவே களிக்காட்சி தந்தவளே...

கருத்துகள் இல்லை: