திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 81&82

பாடல் எண்பத்து ஒன்று
அணங்கே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் என் கண் நீ வைத்த பேரளியே
விளக்கம் : அழகிய அபிராமி அன்னையே... அனைத்துத் தெய்வங்களும் உனது பரிவாரங்களே... ஆகவே அவர்கள் யாரையும் நான் வணங்க மாட்டேன். அவர்களைப் போற்ற மாட்டேன். அறிவில்லாத சிறியேன் என் மீது நீ வைத்த பேரன்பினால், நெஞ்சத்தில் வஞ்சகம் கொண்ட கொடியவரோடு நட்பு கொள்ள மாட்டேன். தங்களுடையதெல்லாம் உன்னுடையதென்றிருப்பவர்கள் சிலரே. அத்தகைய ஞானிகளோடு நான் சண்டையிட மாட்டேன். 
அன்னை காட்சியளித்த பின்னர் அபிராமிப் பட்டரின் பாடல்களில் உற்சாகம் கரைபுரண்டோடுகின்றது. அதுவரை அச்சத்திலும், அரிய நம்பிக்கையிலும் பாடிய பட்டர், இப்போது அளவற்ற ஆனந்தக் கூத்தாடுகின்றார். அதனால்தான் உன்னைத் தவிர வேறு யாரையும், எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டேன். ஏனெனில் எல்லாத் தெய்வங்களும் உனது பரிவாரங்கள்... எனவே அவர்களைப் போற்ற மாட்டேன். வணங்க மாட்டேன்.  உனது பேரன்பினால் வஞ்சகரோடு நட்பு கொள்ள மாட்டேன். உன்னையே தஞ்சமென்றடைந்த ஞானிகளிடம் பிணங்க மாட்டேன் எனப்பாடுகின்றார்.
உலகில் நம் வாழ்க்கை நல்வழியில் சென்று கொண்டிருந்தாலும், சிற்சில சமயங்களில் வஞ்சகரின் நட்பு - கூடா நட்பு நம்மை வந்தடைகின்றது. நம்மால் அவற்றை உதறித் தள்ள இயலாது. வல்லமையும் நல்நெஞ்சும் படைத்த கர்ணனே, துரியோதனின் நட்பை உதறித்தள்ள இயலாது அழிந்தான். ஆயினும் அன்னையின் பெருங்கருணையானது நம்மை அப்படிப் பட்ட நட்புக்களிடமிருந்து காத்தருள்கின்றது. தங்களின் மெய், பொருள், ஆவி அனைத்தும் உனதே என்று உன் மேல் பற்றுவைத்து வாழும் ஞானியரின் நட்பை அன்னை நமக்குத் தந்தருள்கின்றாள். அந்நட்பும் அன்னையின் அன்பால் நம்மை விட்டகலுவதில்லை...
"அணங்கே " அழகிய அபிராமி அன்னையே.... "அணங்குகள் உன் பரிவாரங்கள் " அனைத்துத் தெய்வங்களும் உந்தன் பரிவாரங்கள்.. "ஆகையினால் வணங்கேன் ஒருவரை " ஆகையால் அவர்களுள் யாரொருவரையும் நான் வணங்க மாட்டேன்..  "வாழ்த்துகிலேன் " அவர்கள் யாரையும் வாழ்த்த மாட்டேன். போற்றமாட்டேன். "நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் " நெஞ்சத்தில் வஞ்சம் கொண்ட வஞ்சகரோடு நட்பு கொள்ள மாட்டேன். "எனது உனது என்று இருப்பார் சிலர் " சிலர் மட்டுமே தங்களது மெய், பொருள், ஆவி அனைத்தும் உன்னுடையது என்று இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் ஞானிகள்.. "யாவரொடும் பிணங்கேன் " அவர்கள் யாரோடும் சண்டையிட மாட்டேன். அவர்களை விட்டு விலக மாட்டேன். "அறிவு ஒன்றும் இலேன் " அறிவே இல்லாதவன். அடி முட்டாள் (?) (பாருங்கள்.. அபிராமிப் பட்டர் அறிவில்லாதவராம்) "என் கண் நீ வைத்த பேரளியே" என் மீது நீ வைத்த பேரன்பினை என்னவென்றுரைப்பேன்..
அன்னையே அறிவில்லாத எளியேன் என் மீது நீ வைத்த பேரன்பால், வஞ்சகர் தொடர்பில்லாது ஞானியர் தொடர்பு கிட்டியது. அவர் நட்பை நான் என்றும் விலக்கேன். உன்னைத் தவிர அனைத்துத் தெய்வங்களும் உன் பரிவாரங்களே... எனவே அவர்களை நான் வணங்கேன். வாழ்த்தேன்.. உன்னை மட்டுமே வணங்குவேன். அழகிய அபிராமியே... உன்னை மட்டுமே வாழ்த்துவேன்.
 
பாடல் எண்பத்திரண்டு
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே

விளக்கம் : வண்டுகள் மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் பேரழகியே... அபிராமி அன்னையே... இவ்வுலகமெல்லாம் ஒளியாக நின்ற உந்தன் ஒளிரும் திருமேனியை எண்ணும்போதெல்லாம், எந்தன் ஆழ்மனது மகிழ்ச்சியுற்று விம்மி, மகிழ்வெள்ளத்தில் கரைபுரண்டு ஆகாயத்தோடு ஒன்றி விடுகின்றது. உனது சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன்...?
அன்னையை மறப்பதென்பது பட்டரால் இயலும் காரியமா? அவளை எண்ணும்போதெல்லாம் அவர் ஆழ்மனங்களெல்லாம்... மகிழ்கின்றனவாம். மகிழ்ச்சி வெள்ளத்தில் விம்மி கரைபுரண்டு, வெளியாகி - ஆகாயமாகி விடுகின்றனவாம். அதாவது வெளியெல்லாம் பரவி நிற்கும் அன்னையோடு ஒன்றி விடும்போது அன்னையை... அவள் சாமர்த்தியத்தை எப்படித்தான் மறக்க இயலும்? இப்பாடலைப் பாடும்போதே நமது அந்தக்கரணங்கள் அன்னையின்பால் செல்வதை உணரலாம்... ஆயின் அதை அனுபவித்துப் பாடிய அபிராமிப் பட்டர் எப்படிக் களித்திருப்பார்!!
"அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே" வண்டுகள் மொய்த்திருக்கின்ற தாமரையில் அமர்ந்திருக்கும் பேரழகியே... அபிராமி அன்னையே... "அகில அண்டமும் " அகில உலகும் "ஒளியாக நின்ற " ஒளியாய் நின்ற "நின்" "ஒளிர் திருமேனியை" உனது ஒளிர்கின்ற திருமேனியை "உள்ளுந்தொறும்" நினைக்கும்போதெல்லாம் "அந்தக் கரணங்கள்" எனது ஆழ்மனங்களெல்லாம்..."களியாகி" மகிழ்ச்சியுற்று "விம்மி " விம்மி "கரைபுரண்டு" கரைபுரண்டு "வெளியாய் விடில்" ஆகாயத்தோடு ஒன்றிவிடும்போது... ஆகாயமாய் நிற்கும் உந்தன் பேரொளியோடு ஒன்றி விடும்போது ... "எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே" என் மனத்தை இப்படி மகிழ்விக்கும் உனது சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன் அபிராமியே...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி..
நாம் தரும் உரைகளில் பிழைகளோ திருத்தங்களோ இருப்பின் பெரியோர்கள் மன்னித்து, அவற்றைத் திருத்தி இவ்விடம் பதிவு செய்யும்படி அன்போடு வேண்டுகின்றோம். நன்றி..

கருத்துகள் இல்லை: