திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 55 & 56

பாடல் ஐம்பத்தைந்து...
மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே


விளக்கம் : ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிரும் திருமேனியையுடைய எங்கள் அபிராமி அன்னையை, என்றென்றும் மனமகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஆனந்த வடிவானவளை, வேதங்களின் துவக்கமாய், நடுவாய், அவற்றின் முடிவுமாய்த் திகழும் முதன்மையானவளை, உலக மாந்தர் எண்ணாது அழிந்தாலும், எண்ணினாலும் அதனால் அவளுக்கு ஆகவேண்டிய பொருள் ஒன்றும் இல்லை...
உலக மாந்தர்கள் அன்னையின் முன்னால் துச்சம் என உணர்த்தும் பாடல்.. உலகைப் படைத்த அன்னையைத் தொழுதிடல் வேண்டும் என்பது மாந்தர் விதி... ஆயினும் அனைவரும் அதைப் பின்பற்றுவதில்லை... ஆலயங்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளில் முதன்மை வகிப்பவர் இறைவன் இல்லை எனும் கருத்தையுடையவர்... இதைப் போன்று பல்வேறு முகங்கள்... அனைத்தையும் படைத்தவள் அவள்... அவளை நீங்கள் எண்ணித் தொழுதாலும், எண்ணாமல் அழிந்தாலும், அக்காரணத்தால், அவளுக்கு ஆகக்கூடிய நன்மைகள் ஏதுமில்லை.. தீமைகளும் ஏதுமில்லை என்பது இதன் கருத்து..
"மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் " அழகிய கற்பனை இது... ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒளிரும் ஒரு வடிவத்தைக் கொண்டவளை... எத்தனை அழகிய கற்பனை... ! ஒரு மின்னலையே கண்ணால் காண்பதற்கு இயலவில்லை... ஆனால் ஆயிரம் மின்னல்கள்.. (நண்பர்கள் "மின்னல் ஒரு கோடி " என்று  காதலியை வர்ணித்த கவிஞரின் கற்பனை இதை விட மிகுதி என்று எண்ண வேண்டாம்.. ) ஒன்று சேர்ந்து வந்தால் அந்த ஒளியை நம்மால் காண இயலுமா?? முன்னர் ஒருமுறை சந்திர சூரியர்களுக்கு நடுவே நின்று ஒளிரும் சுடரொளி என்று அன்னையைப் பாடிய அபிராமிப் பட்டர் இப்பாடலில் அவள் ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒளிரும் வடிவுடையாள்.. அத்தனை பிரகாசம்... இதைக் கண்டதால்தான் மன்னரிடம் பௌர்ணமி என்றுரைத்து விட்டாரோ.?
"அகம் மகிழ் ஆனந்தவல்லி " என்றென்றும் மனமகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஆனந்த வடிவுடையாளை... அன்னைக்கு ஏது துக்கம்?? சர்வலோகத்தையும் படைத்துக் காத்து இரட்சிக்கும் ஆதிபராசக்தியின் மனது என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது.. ஏனெனில் அவளே ஆனந்த வல்லி... ஆனந்தவடிவுடையாள்... முன்னர் ஒரு பாடலில் அன்னையே என் ஆனந்தம் என்று பாடிய பட்டர் இவ்விடத்து அகம் மகிழ் ஆனந்த வல்லி எனப்பாடுவது சிறப்பு...
"அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி " அருமையான வேதங்களுக்குத் தொடக்கமாய், நடுவாய், முடிவாய்த் திகழும் முதன்மையானவளை... வேதங்களின் தலைவி, வேதங்களைத் தன் பாதச் சிலம்பாய் அணிந்தவள், வேதங்களின் தொடக்கமும் முடிவுமாய்த் திகழ்பவள் என்று பாடிய அபிராமிப் பட்டர், இவ்வரிகளில் வேதங்களின் தொடக்கமாய்.. நடு எங்குமாய்.. முடிவாய்த் திகழும் முதன்மையானவள் என்று வர்ணிக்கின்றார்.. (முதல்வி எனும் பதத்தை இதுவரை ஏன் தமிழக பெண் முதல்வர்கள் உப்யோகிக்கவில்லை?)  எல்லாவற்றிற்கும் முதன்மையானவள் அன்னை அபிராமியே..."தன்னை.." அவள்தன்னை... "உன்னாது ஒழியினும் " நினையாது அழிந்தாலும் .... "உன்னினும்" எண்ணி மகிழ்ந்திருந்தாலும்... "வேண்டுவது ஒன்றில்லையே" அவளுக்கு ஆகவேண்டிய காரியம் எதுவுமில்லையே...
புகழுக்கெல்லாம் பிறப்பிடத்தைப் புவியிற் பிறந்தோர் புகழினும் என்...? புகழாது ஒழியினும் என்???
பாடல் ஐம்பத்தாறு
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே

விளக்கம் : அன்னை அபிராமியானவள் ஒரே சக்தியாய் அரும்பி, பல்வேறு சக்திகளாய் விரிந்து, இவ்வுலகம் எங்கும் பரந்து நீக்கமற நிறைந்து நின்றாள்..பிற சக்திகளிடமிருந்து நீங்கி தனித்தும் நிற்பாள். இப்படிப்பட்ட தன்மையுடைய மஹாசக்தி... சிறியேனான என்றன் இதயத்தில் என்றென்றும் நீங்காமல் நின்று அருளாட்சி புரிகின்றாள்.. இதன் மாயமென்ன?? இம்மறைபொருளின் உண்மையை ஆலிலையில் துயின்ற திருமாலும், எம் தந்தையான சிவபெருமானுமே அறிவார்கள்
அழகிய ஒப்பீடு முதல் வரியில்... அன்னை ஆதிபராசக்தியானவள் உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் ஒரே சக்தியாய் நின்றிருந்தாள்... இதனை ஓர் அரும்பிற்கும்... பின்னர் அவளே மும்மூர்த்திகளைப் படைத்து, அவர்தமக்கு உதவிட, தானே முப்பெருந்தேவியராகப் பிரிந்த தன்மையை, அவ்வரும்பு பல இதழ் கொண்ட மலராக விரியும் நிலைக்கும் ஒப்பிட்டிருக்கின்றார்..
"ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் " உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் ஒரே பொருளாய்... தானே உலகாய்... மஹாசக்தியாய் நின்றாள்... பின்னர் மும்மூர்த்திகளாக, முப்பெருந்தேவியராக விரிந்தாள்... உலகெங்கும் தானாய் நின்றாள்...நிறைந்து நின்றாள்... "அனைத்தையும் நீங்கி நிற்பாள்" எல்லாவிடத்தும் சக்தியாய் நின்றாலும், அவற்றினின்று நீங்கி ஆதிபராசக்தியாய் தனிந்து நிற்பாள்... எனவே அவளது தன்மையை அறிய இயலாது... இவ்விடத்திலிருப்பாள்.. இல்லாமலும் இருப்பாள்..இரண்டும் உண்மையே... எனவே இவளது தன்மையை அறிந்து கொள்ள உலகத்தோர் தவமியற்றுகின்றனர்.. தவமியற்றுவோரும் தாம் அறிந்த தன்மையை உலகுக்குப் புரியும்படி விளக்குகின்றனரா? இல்லை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவளை அறிந்து கொண்டதாக உரைத்தனர்... எனவே இவளது தன்மை... வடிவு... அனைத்தும் பாரோர் அறிந்து கொள்ள இயலாதது... இப்படிப்பட்ட தன்மையுடைய அன்னை அபிராமியானவள்.. "என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு"  சிறியேன்... கடையேன்... மானுடனாய்ப் பிறப்பெடுத்தவன்.. பித்தனென்று உலகோரால் இகழப்படுபவனாகிய எந்தன் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்து அருளாட்சி செய்கின்றாள்... மறை நான்கையும் தெளிவுற உணர்ந்த பேரறிஞர்களாலும் அறிய இயலாத வடிவினலான என் அன்னை...எனது நெஞ்சத்தில் நீங்காது நின்று அருளாட்சி புரிகின்ற தன்மையின்.... இரகசியத்தின்... "இப்பொருள் அறிவார்" பொருளை அறிவோர்கள் யாரெல்லாம்??? எங்கும் நிறைந்து, நீங்கி நிற்கும் ஆதிபராசக்தி என்றன் நெஞ்சத்தில் நீக்கமற நிலைத்து நின்று அருளாட்சி புரியும் தன்மையின் மறைபொருளை அறிந்தவர்கள் யாரெனின்..."அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே" யுகங்கள் முடிவடையும் வேளையில் ஆலிலையில் துயில் கொண்டு எழுந்தருளிய திருமாலும், எம் தந்தையான சிவபெருமானுமே.. .வேறு யாருக்கும் இம்மறைபொருள் தெரிவதில்லை....ஈசனுக்கும், மாலுக்கும் மட்டுமே தெரியும்...
அபிராமிப் பட்டரின் நெஞ்சில் நிலைந்து நின்று அருளாட்சி புரிந்த அன்னை அபிராமியானவள் நம் நெஞ்சத்திலும் கொஞ்சம் நிற்க அவளின் திருப்பாதங்களை வேண்டுவோம்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

கருத்துகள் இல்லை: