திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 61 & 62

அன்பர்களுக்கு அடியேனின் சிரந்தாழ்ந்த வணக்கம்.. கடந்த பதிவில் வைரவம் எனும் கிராமத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். தமிழகத்தில் இதைப்போன்ற பழைய திருக்கோயில்கள் நிறைய உள்ளன.. இவற்றின் பெருமைகள் உணரப்பட வேண்டும். ஆலயங்கள் புனரமைக்கப் படவேண்டும்.. நண்பர்கள் தங்கள் பகுதியில் உள்ள பழைமையும் பெருமையும் மிக்க ஆலயங்கள் பற்றி எழுதுங்கள்.. நெல்லை & தூத்துக்குடி மாவட்ட அன்பர்கள், வைரவம் சென்று அன்னை சிவகாமியின் அருள் பெற்று ஐயன் ஞானாதீஸ்வரரிடம் ஞானம் பெற்று வாருங்கள்... (மற்றவர்கள் செல்லக்கூடாது என்று சொல்லவில்லை.. அருகிலிருபோர்கள் என்ற எண்ணத்தில் சொன்னோம். மற்றவர்களும் வைரவம் சென்று வாருங்கள்). நன்றி... தொடர்ந்து நாம் அபிராமியைக் கவனிப்போம்..
பாடல் அறுபத்தொன்று
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே

விளக்கம் : அபிராமி அன்னையே... மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகளே.. சிவந்த விழிகளையுடைய திருமாலின் அன்புத் தங்கையே... நாயைப் போன்ற கீழோனான என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி, விரும்பி இவ்விடம் வந்து, நீயே நினைவில்லாது என்னை ஆண்டு கொண்டாய். உன்னை உள்ளபடியே அறிந்துகொள்ளும் ஞானத்தையும் எனக்குத் தந்தருளினாய்.. இதற்கு நான் என்ன பேறு பெற்றேன்..

மணிவாசகப் பெருமான் தனது திருவாசகத்தில் குறிப்பிடும் அடிகள் நினைவுக்கு வந்தன.. "நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே"..அதன்பொருள்தான் இப்பாடலில் மறைந்திருப்பதாக உணர்ந்தேன்.  தெருக்கோடியில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு நாய் குட்டிகளை ஈன்றிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.. நாம் அவ்விடம் போய் வரும்போது, "நம் வீட்டு நாய்க்குட்டி எவ்வளவு அழகாக இருக்கின்றது... ஆனால் இந்த நாய்க்குட்டி எவ்வளவு அசிங்கமாக இருக்கின்றது" என்று எண்ணுவோம்.. அந்நாய்க்குட்டி நம் காலைச் சுற்றி வந்தால் "தூரப்போ நாயே" என விரட்டுவோம். மாநகராட்சிக்கு அலைபேசியில் தகவல் தந்து அந்நாய்க்குடும்பத்தை இல்லாதபடி செய்து விடுவோம்.. மாநகராட்சி வண்டி வந்து அந்நாய்க்குட்டிகளைத் தூக்கிச் செல்லும் காட்சியைக் கண்டு அந்த தாய் நாய் சும்மா இருக்குமா? நாம் நமக்கென்ன என்று இருப்போம். அல்லது தெரு சுத்தமாகிறதே என்று மகிழ்வோம்.. ஆனால் அந்த தாய் நாய்.?? குரைக்காதா?? விரட்டாதா?? நாயாக இருப்பினும் அதற்கும் ஒரு தாய் உண்டல்லவா? அத்தாயின் அன்பு தன் குட்டி நாய்மீது குறைவதுண்டோ? இன்னொரு உதாரணம்.. தெருவிலே பிச்சை எடுக்கின்ற அழுக்கு உடைகளை அணிந்த சிறு குழந்தைகளைக் காணுங்கள். நம் மகிழ்வுந்தை நோக்கி அவர் வரும் வேளை, நாம் அவர்களை விரட்டி விடுவோம்.. ஆனால் அவர்களின் தாய் அவர்களை வெறுப்பதுண்டோ? நீ குளிக்கவில்லை.. அழுக்குப் பிள்ளை அருகே வராதே ! எனத் தடுப்பதுண்டோ? இல்லையல்லவா?? ஆனால் இறைவன் அத்தாயை விட சிறந்த குணம் படைத்தவன். தாயின் அன்பைவிட இறையன்பு உயர்ந்தது... அன்னை அபிராமியானவள் அபிராமிப் பட்டரை ஏன் தேடி வந்தாள்? அவர் மீது அவள் கொண்ட அன்பினாலேயே...

"தாயே" அபிராமி அன்னையே... "மலைமகளே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகளே... "செங்கண்மால் திருத்தங்கச்சியே" சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே..."பவள வாய் கமலச் செங்கண்" என்னும் ஆழ்வார்ப் பாசுரம் நினைவுக்கு வந்தது... தங்கையை தங்கச்சி என்று சொல்லலாம். அதென்ன திருத் தங்கச்சி..?? ஆதிபராசக்தியாக திருமாலைப் படைத்த தேவிதான் மலைமகளாக அவதரித்து ஈசனை மணந்து கொண்டபோது திருமாலின் தங்கையாகின்றாள். அச்சமயத்தில் அவளுக்குரிய மதிப்பை ஏற்றியுரைக்க "திருத்தங்கச்சி" என அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். மேலும் மற்ற தங்கையரிடமிருந்து நாராயணனின் தங்கை வேறுபட்டவள். உயர்ந்தவள் என்று குறிப்பதற்காகவும் இவ்வண்ணம் உரைத்தார்.  "நாயேனையும் இங்கு ஒரு பொருளாக " நாயைப் போன்ற கேவலமான என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி... இந்த காலத்தில் நாயையெல்லாம் கேவலம் என்று எண்ணுதல் தவறு என்று நினைக்கின்றேன் (தெருநாய்களைத் தவிர.. ஆனால் அவைதான் அன்பு மிக்கவை).. நம் கிராமத்தில் ஆடுகள் நிறைய வைத்திருப்போர் அவ்வாடுகளை மந்தையாக மேய்ப்பதற்கு அழைத்துச் செல்வதுண்டு.. ஆனால் ஒரேயொரு ஆடு வைத்திருப்போர், அதை ஒரு கயிற்றால் கட்டி அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு, மேய்ப்பதற்கு அழைத்துச் செல்வார்கள்.. பெருநகரில் அதிகாலை, சங்கிலியால் நாயைப் பிடித்துக் கொண்டு நடைபயிற்சி மேற்கொள்ளும் அன்பர்களைக் கண்டால் எனக்கு கிராமத்துக் காட்சிகளே நினைவுக்கு வரும்.. "ஏன் நாயை மேய்க்கிறாங்க...?" என்று வியப்பேன். மேலும் நமக்கு வீட்டுக் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கக் கூட பணம் இருக்காது.. ஆனால், அவர்கள் நாயை மகிழ்வுந்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர்... சரி.. இந்த இடத்தில் நாம பழையகாலத்தில் நாய்களுக்கு இருந்த நிலையை மனத்தில் கொள்வோம்.. "நயந்து வந்து" விரும்பி இங்கே வந்து "நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் "  நீயே நினைவில்லாது தன்னை மறந்து என்னை ஆண்டு கொண்டாய்... அதுதான் அபிராமிப் பட்டர் பெற்ற பேறு "பேயேன்" பேயேனாகிய எனக்கு ... இந்த வழக்குச் சொல் கிராமத்து மக்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.. யாரையாவது திட்டும்போது "அட பேயா" எனத் திட்டுவதுண்டு.. எங்காவது ஏமாந்து வந்து நின்றால், " நீ பேயன் தான.." என்று சொல்லும் வழக்கும் உண்டல்லவா? பேயேன் என்றால் அறிவில்லாதவன்... பேயைப் போன்றவன்... என்று பொருள் கொள்க.. "நின்னை உள்ள வண்ணம்" உன்னை உள்ளபடியே...."அறியும் அறிவு தந்தாய் " அறிந்து கொள்ளும் அறிவினை எனக்குத் தந்தருளினாய்.. "என்ன பேறு பெற்றேன்" இதனைப் பெறுவதற்கு நான் என்ன பேறு பெற்றேனோ...?
பாடல் அறுபத்திரண்டு
தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே

விளக்கம் : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தை அழித்து, மதங்கொண்டு சிவந்த கண்களையுடைய யானையின் தோலை தன் மேனியில் போர்த்திய சிவபெருமானின் திருமேனியை அடைய,  உன் திருமுலைகளை அம்பாகக் கொண்டு குறிவைத்த நாயகியே... பொன்னைப் போன்ற சிவந்த திருக்கரங்களில், கரும்பு வில்லையும், மலரம்புகளையும் கொண்ட உனது திருக்கோலம் எப்போதும் என் சிந்தையில் நிற்கின்றது...
அபிராமிப் பட்டர் அடிக்கடி ஈசனை அம்மையானவள் தோற்கடித்த விதத்தைப் பாடுகின்றார்.. யாராலும் வெல்லப்படாதவனாலும் (மன்மதனாலும்) கூட வெல்லமுடியாத  ஈசனை உன் திருமுலைகளால் வெற்றி கொண்ட அன்னையே .. எனப் பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து அன்னையின் கொங்கைகளை அம்புக்கு ஒப்பிடுகின்றார்.. ஈசன் பொன் நிறைந்த மேருமலையை வில்லாக வளைத்தான்.. முப்புரங்களை அழித்தான்.. மதங்கொண்ட யானையின் தோலையுரித்து தன் ஆடையாக்கிக் கொண்டான்.. நீ என்ன செய்தாய்.. அவனை எதிர்த்து இரு அம்புகளை விட்டாய்.. அவை... உன் கொங்கைகள்... அவனும் வீழ்ந்தான்.. அவனது இடப்பாகம் நீ குடியேறிவிட்டாய்.. என்று பாடுகின்றார்... அன்னையின் வெற்றி, ஈசனது வெற்றியை ஒன்றுமில்லாதது ஆக்கி விடுகின்றதே என வியக்கின்றார்.. (இன்னிக்கு நாட்டுல பலபேர் நிலை அதானே அப்படின்னு சிலர் முணுமுணுப்பது கேட்கின்றது)
"தங்கச் சிலை கொண்டு தான் அவர் முப்புரம் சாய்த்து" பொன்மலையாம் மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை அழித்து, "மத வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் " மதம் நிறைந்த, வெம்மையான கண்களைக் கொண்ட யானையின் தோலை தன் மேனியின் மீது போர்த்திய செஞ்சேவகனான ஈசன் "மெய்யடையக்" திருமேனியையடைய.. அவனது திருமேனியின் இடப்பாகத்தை அடைய... "கொங்கைக் குரும்பைக் குறியிட்ட  நாயகி" கொங்கையெனும் அம்பினைக் கொண்டு குறிவைத்த நாயகியே... அபிராமி அன்னையே... ஆதிபராசக்தியே... "கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் " சிறந்த பொன்னையொத்த உனது சிவந்த திருக்கரங்களில் நீ ஏந்திய கரும்பு வில்லும், மலர் அம்புகளும்.. "எப்போதும் என் சிந்தையதே" எச்சமயமும் என் சிந்தையில் நீங்காதிருக்கின்றன....
அன்னையை உன் உருவம் என் சிந்தையில் நீங்காது எனக் குறிப்பிடுகின்றார். ஏன் கரும்பு வில்லையும், மலரம்புகளையும் குறிப்பிடவேண்டும்..? ஏற்கெனவே சொன்னது போல், என் மனமென்னும் கரும்பை நீ வில்லாகக் கொள்... என் இந்திரியங்களை உன் கணைகளாகக் கொள்...அப்படி உன்னைக் காணும் திருக்கோலம்தான் நான் என்றென்றும் சிந்தையில் கொண்டிருக்கும் திருக்கோலம். என் மனமும் உன் கையில்.. என் இந்திரியங்களும், அவற்றின் இச்சைகளும் உன் கையில்... அபிராமி... நீயே வழி நடத்து....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

கருத்துகள் இல்லை: