திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 57 & 58

பாடல் ஐம்பத்தேழு
ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே

விளக்கம் : எம் தந்தையான சிவபெருமான் அளந்து உனக்களித்த இரு நாழி நெல்லைக் கொண்டு உலகம் எல்லாம் காக்கும்படி அறம் செய்யும் உன்னைப் போற்றிப் பாடிவிட்டு பின்னர் வேறொருவரிடம் அதே பசுந்தமிழ்ப் பாமாலையைக் கொண்டு சென்று அவரைப் போற்றிப் பொய்யையும் மெய்யையும் சொல்லவைத்தாயே... இதுதான் உனது உண்மையான அருளா?
வறுமையை நம்வாழ்விலிருந்து களையும் பாடல் இது... என்ன ஆனாலும் சரி.. அன்னையைத் தவிர வேறுயாரையும் போற்றிப் பாடமாட்டேன் என்று ஒரு புலவன் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.. உலக பந்தத்திலே அவன் ஈடுபட்டிருக்கின்றான். மனைவி, மக்கள் என்று குடும்பம் பெரிதாகி விட்டது... அன்னையை மட்டுமே துதிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் வேளை.. அவன் மனைவி இல்லத்தின் வறுமையை சுட்டிக் காட்டுகிறாள். பசியால் வாடும் குழந்தைகளின் முகம் பார்க்கும் புலவன், புரவலரைத் தேடுகின்றான். அவரிடம் இருப்பதை ஏற்றியும், இல்லாததை இருப்பதாகவும் பாடுகின்றான். பொருள் பெறுகின்றான். தன் இல்லத்து வறுமையை ஒழிப்பதற்கு அவனுக்கு அதை விடுத்து வேறு வழி இருப்பதில்லை... அதைத்தான் சுட்டிக் காட்டுகிறார் அபிராமிப் பட்டர்..  (விட்டலனைப் பாடிவந்த துக்காராமின் கதையைக் கேட்டிருக்கின்றீர்களா.??)
இதை வேறு விதமாகவும் காணலாம். மானுடராய்ப் பிறந்து விட்டோம்.. கவி எழுதும் ஆற்றலைக் கலைமகள் தந்துவிட்டாள்.. ஆனால் மனது அவளை மட்டுமா பாடுகின்றது.? அழகுள்ள மங்கையரைப் பாடுகிறது.. அவர்தம் அன்பைப் பெற இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றது... (அதாங்க மின்னல் ஒரு கோடி...) காமம் விளையாடுகின்றது... அதையும் அபிராமிப் பட்டர் காண்கின்றார்.. அன்னையே... நீயே தமிழைப் படைத்தாய்.. எனக்குக் கொடுத்தாய்.. என்னைப்போல் அவனுக்கும் கொடுத்தாய்... என்னிடம் வந்த தமிழ் உன்னைப் பாடுகின்றது... அவனிடம் சென்ற தமிழோ எவளையோ பாடுகின்றது.., இதுதான் உன்னருளா? என்று அவளிடமே கேட்கின்றார்..
"ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு " எம் தந்தையான ஈசன் அளந்த இரு படி நெல்லைக் கொண்டு ... அய்யன் அளந்த கதை காஞ்சியில் நிகழ்ந்தது.. அதைக் கொண்டுதான் அன்னையானவள் உலகுக்கு அன்னமளித்தாள் என்பார்கள்.. வரலாற்றை அறிந்தவர்கள் விரிவாக எழுதுங்களேன்..... "அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி " அகிலத்தைக் காப்பதற்காக அறம் செய்யும் உன்னையும் போற்றிப் பாடிப் பின்னர்....""ஒருவர் தம் பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு " இன்னொருவரிடத்திலும் செம்மையான பசுந்தமிழ்ப் பாமாலையைக் கொண்டு சென்று... தனது தேவைகளுக்காக இன்னொருவரிடத்திலே சென்று... "பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் " பொய்யையும் உண்மையையும் பாட வைத்தாயே... "இதுவோ உந்தன் மெய்யருளே " இதுதான் உனது அருளா?? இது உனக்குத் தகுமா? என அன்னையை வேண்டிக் கேட்கின்றார்.. சேர்ந்தே இருக்கும் வறுமையும் புலமையும் புலவனுக்கு மட்டுமே புரியும்... கலைமகள் குடிகொண்ட இடத்தில் அலைமகளைக் கொணர அவன் படாத பாடு படவேண்டியிருக்கின்றது. நல்ல தமிழ்ப் புலவரான அபிராமிப் பட்டருக்கு இவ்வேதனை புரிகின்றது.. பார் அபிராமி... அன்றைக்கு நீ இரு படி நெல்லைக் கொண்டு உலகுக்கு அன்னமளித்தாய். மாந்தர் வாழ அறம் செய்தாய்.. இன்று பார்.. .உன்னை மட்டுமே பாடிப் பிழைப்பதற்கு வழியில்லை... தமிழ்நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன... ஒரு சிலரின் பக்திப் பிடிவாதத்தால் மட்டுமே அவை உய்கின்றன... எங்கள் கிராமத்துக்கு அருகில் வைரவம் என்றொரு கிராமம் உள்ளது.. அன்னையானவள் சிவகாமியாக அருள்புரியும் பூமி அது... ஞானாதீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மனாக அவ்விடத்துக் கோயில் கொண்டுள்ளாள்.. மிகவும் பழமையான ஆலயம்.. பெரிய ஊராக இருந்த இப்பகுதி பஞ்சம் காரணமாக மக்களே இல்லாத கிராமம் ஆகிவிட்டது.. ஆயினும் அவ்வாலயத்தில் அப்பனுக்கும் அம்மைக்கும் பணிவிடைகள் செய்து வந்த அந்தணர் குடும்பம் மட்டும் அக்கிராமத்தினை விட்டு நீங்காது இருந்தது.. அவர்களுக்கும் வறுமை வந்தது.. தளரவில்லை... அம்மையையும் அப்பனையும் விட்டு அவர்கள் நீங்கவில்லை.. யாருமே செல்லாதிருந்த அவ்வாலயத்தின் மதிப்பு அவ்விடம் நிகழ்ந்த ஒரு களவால் வெளிஉலகுக்குத் தெரியவந்தது.. ஆலயத்திற்கென மன்னர்கள் அளித்ததாகக் கூறப்படும் பஞ்சலோகத்தால் செய்யப் பட்ட உற்சவ மூர்த்திகள் பல.. அவை திருடர்களால் களவாடப் பட்ட பின்னர்தான் ஆலயத்தின் மதிப்பு பிறருக்குத் தெரிய வந்தது... அந்த ஐயரும் (அவர் பெயரை மறந்து விட்டேன்.. ஆலயத்தைப் பற்றி முன்னர் நாம் எழுதிய கட்டுரை ஒன்று இந்து முன்னணியின் பசுத்தாய் பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது. திருக்கடவூரில் அபிராமிப் பட்டருக்கு நிகழ்ந்த நிகழ்வைப் போன்று இவ்வாலயத்திலும் கண்பார்வையற்ற புலவனுக்கு நிகழ்ந்த ஒரு நிகழ்வு உள்ளது.. அது அடுத்த பதிவில்...) காவல்துறையினரால் சித்திரவதைக்குள்ளானார். அவ்வமயமும் அவர் தளரவில்லை.. பின்னர் அங்கே கிடைக்கப் பெற்ற உற்சவ மூர்த்திகள் செந்தூர் முருகன் ஆலயத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.. இன்றைய தினம் பலரும் வந்து செல்லும் பேராலயமாக அது மாறி விட்டது... இது நிகழ்ந்தது அந்த அந்தணக் குடும்பத்தின் பிடிவாத பக்தியினால் மட்டுமே... பிரதோச தினத்தன்று அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது... இடைக்காலத்தில் அக்குடும்பத்தாரை வறுமையில் வாட விட்டதுதான் உன் மெய்யருளோ?? என அபிராமிப் பட்டர் அன்னையைக் கேட்கின்றார்... வந்து அருள் தந்திடம்மா.. உன் பக்தர்கள் வறுமையில் வாடுவதை நீ பொறுக்கலாமா? அன்றைக்கு உலகுக்கே படியளந்தாயே... இன்றைக்கு இவர்கள் வறுமையைக் கண் திறந்து பாரம்மா... எனப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர்.

பாடல் ஐம்பத்தெட்டு
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே
விளக்கம் : அதிகாலையில் அருணோதயத்தின் போது மலரும் தாமரையின் மீதும், எனது மனமென்னும் தாமரை மீதும் அமர்ந்திருக்கும் இளம் தாமரை மொட்டினைப் போன்ற திருமுலைகளையுடைய பெண்களில் சிறந்தவளான அபிராமி அன்னையே... தகுதியுடைய உனது கண்கள் எனும் கருணைத்தாமரையும், உனது அழகிய முகத்தாமரையும், உன் திருக்கரங்களெனும் தாமரைகளும், உனது திருவடித் தாமரைகளும் அல்லாமல் வேறொருவரிடத்திலும் நான் தஞ்சம் புகேன்...
கடந்த பாடலில் புலவர்களது தமிழ் பொருளுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் வேறொருவரிடத்துச் சென்று பொய்யும், மெய்யும் பாடுவதை சுட்டிக் காட்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து நான் உன்னைத் தவிர வேறொரு இடத்தில் தஞ்சம் புகேன் எனப் பாடுவது அவரது பக்திப் பிடிவாதத்தைக் காட்டுகின்றது.. நெருப்பின் மீது நின்று பாடுகின்றேன்.. மன்னனைச் சரணடைந்தால் உயிர் தப்பலாம்... ஆனால் நான் உன்னை மட்டுமே சரணடைவேன் என்பது இதன் உட்கருத்து...தாமரைகளையே எல்லாவிடத்திலும் உவமையாக சொல்வது பாடலின் சிறப்பு..
"அருண அம்புயத்தும்"  அருணன் என்பவன் சூரியதேவனின் சாரதி.. அவன் வரும் வேளையைத்தான் அருணோதயம் என்றழைக்கின்றோம்.. அருணன் உதயமாகும் வேளையில் மலரும் தாமரை மலரிலும்.... (அம்புயம் என்பது தாமரையைக் குறிக்கும்). "என் சித்த அம்புயத்தும்" என் மனமெனும் தாமரையிடத்தும்... "அமர்ந்திருக்கும் " வீற்றிருக்கும் ... "தருண அம்புயமுலைத் தையல் நல்லாள் " இளந்தாமரை... அதாவது தாமரை மொட்டு... தாமரை மொட்டுக்களையொத்த திருமுலைகளையுடைய பெண்களில் சிறந்தவளான அபிராமி அன்னையே... "தகை சேர் நயனக் கருண அம்புயமும்" தகுதியுடைய உனது கண்களெனும் கருணைத் தாமரையும்.."வதனாம்புயமும் " உனது திருமுகத் தாமரையும் "கர அம்புயத்தும்" உனது திருக்கரங்களெனும் தாமரைகளும் "சரண அம்புயமும்" உனது திருவடித் தாமரைகளும் "அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே" அல்லாமல் நான் வேறெந்த இடத்திலும் தஞ்சம் புகேன்...
எத்தனைத் தாமரைகள்.. தாமரையில் வீற்றிருப்பாள்... அவளது திருவடிகளும் தாமரைகள்... திருக்கரங்களும் தாமரைகள்... திருமுகமும் தாமரை... கருணை நிறைந்த திருக்கண்களும் தாமரை... திருமுலைகளோ தாமரை மொட்டுக்கள்.... அழகிய திருப்பாடல் அல்லவா??  உன்னை விடுத்து வேறெந்தவிடத்தும்... வேறு யாரிடத்தும்... தஞ்சம் புகேன்... உன் மகனான என்னை நீ காக்க வேண்டுமானால் விரைந்து வா... வந்து நிலவைக் காட்டு...
தொடரும் பாடல்களின் விளக்கத்தை அடுத்த மடலில் காண்போம்.. அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. அன்னையைத் தஞ்சமடைந்து வறுமை நீங்கி வளமெனும் ஒளியைப் பெற அன்னையின் திருப்பாதங்களை வேண்டுகின்றேன்... மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

கருத்துகள் இல்லை: