திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 41 & 42

பாடல் நாற்பத்தொன்று



புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்


கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்


நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்


பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

விளக்கம் : புதிதாய் மலர்ந்த குவளைப்பூவைப்போன்ற கண்களையுடை அன்னை அபிராமியும், சிவந்த மேனியையுடைய அவளது கணவரான சிவபெருமானும் இணைந்து நம்மைக் காணவேண்டும் என்ற காரணத்திற்காக இங்கே வந்து தமது அடியார்களின் கூட்டத்தில் நம்மை நடுவே இருக்கச் செய்து, தமது திருவடித் தாமரைகளை நம் தலைமீது நிலை நிறுத்திடவே என்ன புண்ணியம் செய்திருக்கின்றாய் என் மனமே...

நேற்றையதினமே இன்றைய பாடல்கள் பற்றிய சிறு குறிப்பினைக் கொடுத்திருந்தோம். "தனந்தரும்" எனத்துவங்கும் பாடலும், "ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை" எனத்துவங்கும் நூற்ப்யனும் மட்டுமே மனப்பாடச் செய்யுளாகக் கற்றிருந்த நமக்கு, ஒருமுறை "குணா" எனும் திரைக்காவியத்தைக் காணும் வாய்ப்பு கிட்டியது.. எப்பொழுதும் அபிராமி அபிராமி என புலம்பும் ஒரு கதாபாத்திரத்தை திரு. கமல்ஹாசன் அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்.. அத்திரைக்காவியத்தில்தான் இப்பாடலை அவர் தனக்கேயுரிய பாணியில் சிறப்பாகப் படித்திருப்பார்.. பாடலின் இறுதியில் அவர் ஒற்றைக்காலில் நிற்கும் காட்சி இன்றும் கண்களை விட்டு அகலாதது விந்தை... அச்சமயம்தாம் என் மனத்தில் இதென்ன இத்தனை அழகிய கவிதை... யார் எழுதியது? என்ற வினா எழுந்தது..என்னவென்று நோக்குங்காலை அபிராமிப் பட்டரின் கவிதைகள் என்பது புரிந்தது.. பின்னரே அபிராமி அந்தாதியை முழுதும் கற்றோம்... சரி பாடலுக்கு வருவோம்..

"புதுப் பூங் குவளைக் கண்ணியும்" புதிதாய் மலர்ந்த குவளை மலரையொத்த கண்களையுடை அன்னை அபிராமியும்... "செய்ய கணவரும்" சிவந்த மேனியையுடைய அவளது கணவரான சிவபெருமானும் "கூடி" இணைந்து "நம் காரணத்தால்" நம்மைக் காணவேண்டும்.. நம்மைக் காக்க வேண்டும்... நம்மை அருளாட்சி செய்ய வேண்டும்... நம்மைத் தன் மகவு என்ற உண்மையை உலகுக்குணர்த்த வேண்டும்.. என்ற காரணத்தால்... "நண்ணி இங்கே வந்து" மிகவும் விரும்பி இங்கே வந்து... நம் பக்தி சிறப்பானதாக இருந்தால் அம்மையும் அப்பனும் நம்மைக் காண்பதற்காக மிகவும் விரும்பி ஓடி வருவார்கள்... அபிராமிப் பட்டரின் பக்தி அளப்பரியது.. எனவேதான் அவரைக் காண தந்தையும் தாயும் இணைந்து ஓடி வந்தனர்... "தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி.." நம்மைத் தமது அடியார்களின் நடுவிருக்கச் செய்து... "நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே" நமது தலையின் மீது தங்களின் திருவடித் தாமரைகளை நிலை நிறுத்திடவே.... எவ்வளவு பெருமை மிகுந்த காரியம் இது?? கீழோன்... மானிடப் பிறவி.... கடையேன்... பித்தனென்று ஊரும் உலகும் தூற்றும் பண்பு படைத்தவன்... இப்படிப் பட்ட என்னை, அம்மையும் அப்பனும் விரும்பி இங்கே வந்து தமது அடியார்களைக் கூடி வரச் செய்து.. அவர்களின் நடுவே நம்மை நாயகமாக நிறுத்தி... எந்தன் தலைமீது தங்கள் திருவடித் தாமரைகளை நிலை நிறுத்தினரே...இதற்கு... "புண்ணியம் செய்தனமே-மனமே. " நீ என்ன புண்ணியம் செய்து விட்டாய் எந்தன் மனமே....

பாடல் நாற்பத்திரண்டு


இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து


வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை


நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்


படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே



விளக்கம் : உலகத்தோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற்கொள்கையைக் கொண்ட எங்கள் நாயகியே.... நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடையவளே... அபிராமி அன்னையே...குளிர்ச்சியான சொற்களையுடைய அபிராமி அன்னையே... வேதங்களை சிலம்புகளாகத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே.... தகுந்த இடத்தைக் கொண்டு பெருமிதத்தால் விம்மும் ஒன்றுக்கொன்று இணையாக இறுகியும் மென்மையால் இளகியும் முத்துமாலையை அணிந்துமிருக்கும் உனது கொங்கை மலைகள், வலிமை மிகுந்த நெஞ்சத்தைக் கொண்ட சிவபெருமானின் நெஞ்சத்தையும் ஆட்டுவிக்கின்றன..

இந்த பாடலும் இளையராஜாவின் இசையில் குணா திரைக்காவியத்தில் இடம் பெற்றது... யேசுதாசின் இனியகுரலில் வாலியின் வைரவரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது இடையே பாடற்குழுவினர் பாடும் பாடலாக இணைத்திருப்பார் இளையராஜா... இந்தப் பாடலும், ஐம்பதாவது பாடலான "நாயகி நான்முகி" எனத்துவங்கும் பாடலும் இளையராஜாவின் இசையில் கேட்பதற்கு மிக அருமை..

"கொள்கை நலம் கொண்ட நாயகி" நலமிக்க கொள்கைகளைக் கொண்ட எங்கள் தலைவியே... அபிராமி அன்னையே... அன்னையின் நோக்கமெல்லாம் அன்பரைக் காத்தருள வேண்டுமென்ற நற்கொள்கைகளே... அன்னையின் பெருமைகளைத் திரைப்படங்கள் வாயிலாகச் சொல்கிறோம் என்று ஒரு இயக்குனர் (யார் என்பதைப் புரிந்து கொள்க) எடுத்த திரைப்படங்களைக் காணும் போது அன்னையின் பெயரை இப்படி ஏன் கேவலப் படுத்துகிறார் என்று கோபம் எழும்... உலகத்தைக் கட்டியாளும் அன்னையை எந்த ஒரு தீயசக்தியாலும் எதிர்த்து நிற்க இயலாது என்பதே தீர்க்கமான உண்மை... நாம் அன்னைமீது பக்தி கொண்டு நற்செயல்கள் புரிந்துவரின் எந்த வித தீய சக்தியாலும் நம்மை நெருங்க இயலாது... இது சத்தியம்... ஆனால் அன்னையை ஒரு தீய சக்தி தடுக்க நினைப்பது போன்ற காட்சிகள்.. அவள் எதுவுமே செய்ய இயலாதவள் போல் அமர்ந்த காட்சிகள் எல்லாம் மனத்தை மிகவும் வேதனை செய்யக்கூடியவை... சரி நமக்கு அது வேண்டாம்... பாடலைக் கவனிப்போம்...அன்னையே... மக்களைக் காத்தருள வேண்டும் என்ற நல்லதொரு கொள்கையைக் கொண்ட எங்கள் தலைவியே.... "நல் அரவின் படம் கொண்ட அல்குல்" நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலைக் கொண்டவளே... "பனி மொழி " குளிர்ச்சியான சொற்களைப் பேசுபவளே... அன்னையானவள் தம் மக்களான நம்மிடத்துப் பேசும் பேச்சுக்கள் மிக இதமானவை... மிகுந்த அன்போடும், அக்கறையோடும் பேசும் பேச்சுக்கள் குளிர்ச்சியானவை..."வேதப் பரிபுரையே" வேதங்களை காலில் சிலம்பாக அணிந்தவளே... இப்பதம் அன்னையானவள் வேதங்களின் தலைவி என்பதைக் குறிக்கும்...

"கொங்கை மலை.." உனது கொங்கை மலை.. "இடங்கொண்டு விம்மி..." தகுந்த இடத்தினைப் பெற்று அப்பெருமிதத்தால் விம்மி... "இணை கொண்டு இறுகி இளகி" ஒன்றுக்கொன்று இணையாக இறுகிப் பின்னர் இளகி.... வலிபொருந்திய மார்பினள் என் அன்னை... எனவே அவளது தனங்கள் இறுகியன... எம்மைப் போன்ற பிள்ளைகள் மேல் அன்பு மிகவுடையவள் என் அன்னை... எனவே எமக்காக அவளது தனங்கள் இளகின.... "முத்து வடங்கொண்ட " முத்துக்களால் ஆன மாலையை உனது அழகிய தனங்கள் சுமந்து கொண்டிருக்கின்றன.... "கொண்டு" இப்படிப் பட்ட பெருமைகளைக் கொண்ட உனது தனங்களால்.... "இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட .." இறைவனான எம்பெருமான் சிவனது வலிமை மிகுந்த நெஞ்சைத்தை நீ ஆட்டிவைக்கின்றாய்.. உலகத்தை ஆட்டுவிக்கும் ஈசன், வலிமை மிகுந்தவன்... அவனது நெஞ்சம் மிகுந்த வலிமை கொண்டது... அவனது நெஞ்சத்தை நீ ஆட்டுவிக்கின்றாய் என் அபிராமி அன்னையே....

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்...

கருத்துகள் இல்லை: