திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 39 & 40

பாடல் முப்பத்தொன்பது



ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்


மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்


மூளுகைக்கு என் குறை, நின் குறையே அன்று முப்புரங்கள்.


மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

விளக்கம் : முன்பு ஒரு நாள் முப்புரங்களையும் அழிப்பதற்காக வில்லில் அம்பினைத் தொடுத்த ஈசனது இடப்பாகம் அமர்ந்த அழகிய ஒளி பொருந்திய நெற்றியை உடைய அபிராமி அன்னையே... என்னை ஆள்வதற்கு நின் திருவடித் தாமரைகள் உண்டு. கூற்றுவன் கையினின்று என்னை விடுவிக்க நின் கடைக்கண் பார்வை உண்டு. இவை இல்லாது போனால் என்ன குறை?... உனது குறையே...!!

பரிபூரண நம்பிக்கையை அம்பிகைமேல் வைத்த அபிராமிப் பட்டரின் மன நம்பிக்கை இவ்விடத்துத் தெரிகின்றது.. அம்மையே... என்னை ஆளுதற்கு உன் திருவடித் தாமரைகள் இருக்கின்றன... அந்தகன் - வாழ்வின் அந்தந்தைக் காண்பிப்பவன் - கூற்றுவன் - யமனிடமிருந்து தப்பிப்பதற்கு உனது கடைக் கண்பார்வை உண்டு... அன்னையின் கடைக்கண் பார்வை ஒன்றே போதும்... மரண பயத்திலிருந்து அபயம் அளித்திடும். "மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை?" எனை ஆள நின் திருவடித்தாமரைகள் இருக்கின்றன... என்னை யமனிடமிருந்து காக்க உனது கடைக்கண் பார்வை உள்ளது... ஆயினும்...... இன்றைக்கு நான் இவ்வண்ணம் நெருப்பின் மீது நின்று நின்னை அழைத்துக் கொண்டிருக்கின்றேன்.. எங்கே உனது உனது திருவடிகள்? எமை ஆள அவை வரவில்லையா??? எங்கே உனது கடைக்கண் பார்வை?? எம்மை மீட்க நீ என்னைக் காணவில்லையா?? நான் இவ்வண்ணம் பரிதவிப்பதற்கு என்ன குறையுண்டு??? "நின் குறையே" அது என் குறையல்ல.... உனது குறையே.... பரிபூரண நம்பிக்கை... இங்கே பார்... நான் நெருப்பின் மீது நடக்கின்றேன்... அது என்னை சுட்டால் அது என் குறையல்ல.. உன் குறையே... நான் மனித வாழ்வின் இந்திரிய இச்சைகளால் கட்டியாளப் பட்டால்... அதன்மூலம் துன்புற்றால்... அது என் குறையல்ல.,... உன் குறையே... உன் மகனைத் தவறிழைக்காமல் காப்பது தாயான உன் கடமையல்லவா?? உன் திருவருளை வேண்டியே இவ்வண்ணம் நெருப்பின் மேல் நின்று பாடுகின்றேன்.. விரைந்து வந்து காட்சியளிப்பாய்... என்னைக் காத்தருள்வாய்... "அன்று முப்புரங்கள் மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே." முன்பு முப்புரங்களையும் அழிப்பதற்காக அம்பினை வில்லிலே தொடுத்த ஈசனது இடப்பாகம் சேர்பவளே... அழகிய ஒளிபொருந்திய நெற்றியினைக் கொண்ட என் அபிராமி அன்னையே.....

அன்னைமேல் நாம் வைக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் பாடல் இது.. மீண்டும் ஒருமுறை ஓதிப்பாருங்கள்..

பாடல் நாற்பது


"வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்


பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்


காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு


பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. "

விளக்கம் : அழகிய ஒளிபொருந்திய நெற்றிக் கண்ணையுடைய எங்கள் அபிராமி அன்னையை.... அமரர்கள் எல்லோரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விரும்பும் எங்கள் பெருந்தலைவியயை... அறியாமை நிறைந்த நெஞ்சத்தார் காணுதற்கு இயலாத கன்னியை... காணவேண்டும்.. அன்பு கொள்ள வேண்டும் என்று என் மனத்தில் உதித்த எண்ணம் என் முற்பிறப்பில் செய்த புண்ணியமாகும்..

பூமிப்பெருவெளியில் எத்தனையோ கோடி மாந்தர்கள் பிறக்கின்றனர்.. இறக்கின்றனர்.. மாந்தரல்லாத பல்வேறு உயிரினங்களும் வந்து வாழ்ந்து மறைகின்றன... ஆனால் அன்னை அபிராமியைக் காண வேண்டும்.. வணங்கவேண்டும்.. அவள் மேல் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு எழும்? வெகு சிலருக்கு மட்டுமே... அவர்கள் யார்? முற்பிறவியில் புண்ணியம் செய்தோர்... அன்னையைக் காண்பதற்கும், அவளை வேண்டுதற்கும்.. அவள் மேல் அன்பு செய்தலுக்கும் அபிராமிப் பட்டரால் இயன்றது.. அதற்குத் தான் செய்த முற்பிறவிப் புண்ணியமே என்று இவ்விடத்து உரைக்கிறார்.."வாள்-நுதல் கண்ணியை" ஒளி பொருந்திய அழகிய நெற்றிக் கண்ணையுடைய அபிராமியன்னையை.... இதென்ன விந்தை.... ? அப்பன் ஈசனுக்கல்லவா நெற்றிக்கண் உண்டு.. இவரென்ன இவ்வண்ணம் பாடுகிறாரே...? அம்மையும் அப்பனும் ஒரே பரம்பொருளல்லவா?? அம்மையைக் குறித்தால் அது அப்பனையும், அப்பனைக் குறித்தால் அது அம்மையையுமன்றோ குறிக்கும்?

"விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை" அமரர்களெல்லாம் வந்து வேண்டி துதி செய்ய எண்ணங்கொண்டனர்.. யாரை?? எங்கள் பெருமாட்டியை... பெருந்தலைவியை... அன்பு செய்யும் அபிராமியை.... "பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை" அறியாமை இருள் குடிகொண்ட பேதை நெஞ்சத்தால் காண்பதற்கு இயலாத கன்னியை.... அன்னை மேல் நாம் அன்பு கொண்டால் நம் மனத்திருந்த அறியாமை எனும் இருள் அகலும்..அவ்விடத்து நாம் அன்னைத் தெளிவுறக் காணும் பாக்கியம் பெறலாம்... கன்னியை... என்றும் கன்னித்தன்மை கொண்ட எங்கள் அபிராமி அன்னையை...."காணும் - அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. " அப்படிப்பட்ட எங்கள் அபிராமித் தாயை... காணவேண்டும், அவள் பால் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என் மனத்தில் விதைத்தது யார்? நான் உன்னைத் தேடிவந்தேனா?? நீயே என்னைத் தேடி வந்தாய்.. வலிய வந்து உன் திருப்பாதங்களை எந்தன் தலைமீது வைத்தாய்... அவ்வழகிய திருவடிகளால் என்னை ஆண்டு கொண்டாய்... எனக்குக் காட்சியுமளித்தாய்... என்மேல் மிகுந்த அன்பையும் கொண்டாய்... உன்னைக் காண வேண்டும், தொழவேண்டும், அன்பு செய்ய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என் மனத்துள் விதைத்தது யார்?? நான் முற்பிறவியில் செய்த புண்ணியம்தான் தாயே...

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. அடுத்த பாடலானது என் மனத்துக்கு மிகவும் பிடித்த பாடல்.. குணா என்ற திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிட்டிய போது கமல்ஹாசனது குரலில் அப்பாடலைக் கேட்டேன்.. மதி மயங்கினேன்.. பின்னரே அபிராமி அந்தாதியைக் கற்கும் எண்ணம் எனக்குத் தோன்றியது... அதைத் தொடர்ந்து வரும் பாடலும் இளையராஜாவின் இசையில் அத்திரைப்படத்தில் இடம்பெற்றது.

மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

கருத்துகள் இல்லை: