செவ்வாய், நவம்பர் 02, 2010

அபிராமி அந்தாதி 37 & 38

பாடல் முப்பத்தேழு


கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன

மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்

பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்

திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.



விளக்கம் : அபிராமி அன்னையே.. எட்டுத்திசைகளையும் ஆடைகளாக அணியும், எல்லா செல்வங்களையும் உள்ளடக்கிய சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே... நீ உன் திருக்கரங்களில் அணிவது கரும்பும் மலர்களும்... தாமரை போன்ற உன் அழகிய திருமேனிக்கு நீ அணிவது வெண்ணிற முத்து மாலைகள். விஷம் நிறைந்த நாகத்தின் படம் போன்றிருக்கும் உன் இடையில் நீ அணிவது பல்வித மாணிக்கங்களால் ஆன மேகலையும், பட்டும்.

இந்த பாடலில் அன்னை அபிராமி அணியும் அணிகலன்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.. கன்னல் எனும் பதம் கரும்பினைக் குறிப்பதாகும். அன்னையே.. நீ உன் திருக்கரங்களில் அணிவது இனிமை தரும் கரும்பும் மணம் வீசும் மலர்களும்... கரும்பினாலான வில்லைத் தமது ஆயுதங்களாகக் கொண்டவர்கள் இருவர்... அன்னை ஆதிபராசக்தியும், மன்மதனுமாகிய இவர்களே... அன்னையானவள் தனது கரத்தில் கரும்பு வில்லையும், ஐந்து மலர்க்கணைகளையும் வைத்திருப்பது எதற்காக??? அன்னையின் கையிலுள்ள கரும்பு வில் நம் மனத்தினைக் குறிக்கின்றது. மனித மனம் இனிமையானது. மேலும் இந்திரியங்களுக்காக எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது.. இப்படிப் பட்ட நமது மனது அது போன போக்கில் வளைந்து கொண்டிருந்தால் என்ன நடக்கும்? ஐம்புலன்களின் கட்டுபாட்டில் மனம் இயங்கத் தொடங்கிவிட்டால் சிற்றின்பத்தில் திளைத்து நாம் மானிடராய்ப் பிறந்ததற்கான காரணத்தை மறந்து போவோம்... அன்னையே... என் மனத்தை உன் கரங்களில் சேர்ப்பிக்கிறேன்.. உன் இச்சைப்படி அதை வளைத்துக் கொள்... என் ஐம்புலன்களை ஐந்து மலர்க்கணைகளாக உனது கரத்திலேயே சமர்ப்பிக்கிறேன்.. நீயே அவற்றை உன் இச்சைப்படி ஏவு... என்ற வேண்டுதல்களுக்காகத்தான் அன்னை தனது கையில் கரும்பு வில்லையும், மலர்க்கணைகளையும் தரித்துள்ளாள். மாறாக நம் மனம் மன்மதனின் கைக் கரும்பாக மாறி விட்டால் என்னவாகும்?? மனம் இந்திரிய சுகங்களில் ஈடுபட்டு தன்னிலை மறந்து போகும்.. எனவே நம் மனத்தை அன்னையின் கையில் ஒப்படைப்போம்...

"கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை" அழகிய தாமரை போன்ற நின் திருமேனியில் நீ அணிவது வெண்ணிற முத்துமாலை... முத்துக்களால் ஆன மாலைகளை அன்னை அபிராமி தனது திருமேனியில் அணிவது எதற்காக? முத்துக்களைப் போன்ற உயர்ந்த மனத்தவனாக இரு என்று நம்மை அறிவுறுத்துவதற்காகத்தான்.

"விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும்" விஷங்கொண்ட நாகத்தின் படத்தை ஒத்திருக்கும் உனது இடையில் நீ பல்வேறு மாணிக்கங்களாலான மேகலையையும் பட்டையும் அணிந்திருக்கின்றாய்...

"எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. " நீ விலைமதிப்பற்ற அணிகலண்களை அணிந்திருக்கிறாய்... ஆனால் எல்லா செல்வங்களையும் கொண்டிருக்கும் ஈசனோ எட்டுத்திக்குக்களையே தன் ஆடையாகக் கொண்டிருக்கின்றான்.. அந்த ஈசனது இடப்பாகத்தில் சேரும் என் அபிராமி அன்னையே.... நீயோ சகல ஐஸ்வர்யங்களையும் காண்பிக்கும் உயர்ந்த அணிகலன்களை அணிந்திருக்கின்றாய்.. ஆனால் எல்லா செல்வங்களையும் உடையவனான (உன்னையும் சேர்த்து) ஈசன் மிக எளிமையான தோற்றம் கொண்டவனாக இருக்கின்றான். நீ அவனது இடப்பாகத்தில் சேர்ந்திருக்கின்றாய்....



பாடல் முப்பத்தெட்டு

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்

தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்

துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்

அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே



விளக்கம் : எங்கள் அன்னை அபிராமி பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த வாயினை உடையவள். முத்து போன்ற பற்கள் தெரியும் படியான குளிர்ச்சி தரும் புன்னகை புரிபவள். தனது மெல்லிய இடை நோகும்படியான திருமுலைகளைக் கொண்டவள்.. இவற்றின் துணையாகக் கொண்டு எங்கள் ஈசனாம் சங்கரனைத் துவண்டு போகும்படி செய்தவள்... அவளைப் பணிந்தால் அமரலோகம் ஆளலாம்.. உலகத்தோரே... எங்கள் அன்னையைப் பணியுங்கள்...

அன்னையின் பேரழகினை இப்பாடலில் அழகுற வர்ணனை செய்கிறார் அபிராமிப் பட்டர். அன்னையின் பேரழகு சங்கரதேவனின் தவத்தைக் கலைத்ததாம்.. முன்னரொரு பாடலில் அபிராமிப் பட்டர் என்ன உரைத்தார்? எல்லாவிடத்தும் வெற்றி பெறும் மன்மதனின் வெற்றியெல்லாம் தோல்வியுற்ற சங்கரனும் உன்னிடத்துத் தோல்வியுற்றான் என்று அன்னையைத் துதித்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து... "எங்கள் சங்கரனைத் துவளப் பொருது" என்கிறார், எங்கள் தந்தையான சங்கரனைத் துவளச்செய்தாய்...அவன் தவத்தைக் கலைத்தாய்... எவற்றின் துணையைக் கொண்டு இதைச் செய்தாய்??? பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த இதழ்கள்."பனி முறுவல் தவளத் திருநகை" முத்து போன்ற பற்கள் தெரியும்படியான குளிர்ச்சியான புன்னகை.... "துடியிடை சாய்க்கும் துணை முலை" மெல்லிய இடையைக் கீழே விழச்செய்யும் பாரமான திருமுலைகள்... இவற்றின் துணையோடு எங்கள் ஈசனை துவண்டு போகச் செய்தாள் எங்கள் அன்னை அபிராமி... "அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே" அவளைத் தொழுங்கள் உலகத்தாரே.... ஏன் தெரியுமா அவளைத் தொழுதால் அமரலோகம் ஆளும் பேறு பெறலாம். எனவே... அனைவரும் எங்கள் அன்னை அபிராமியைத் தொழுங்கள்.....

என்று உலகத்தாருக்கு அன்புக் கட்டளையிடுகிறார் அபிராமிப் பட்டர்...

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி...

கருத்துகள் இல்லை: