திங்கள், நவம்பர் 01, 2010

அபிராமி அந்தாதி 33 & 34

பாடல் முப்பத்து மூன்று


இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க

அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே

உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே

விளக்கம் : எம் தந்தையான சிவபெருமானின் சித்தமெல்லாம் குழையச் செய்யக்கூடிய மணம் வீசும் குவிந்த திருமுலைகளையுடைய இளமையான கோமளவல்லியே... என் அபிராமி அன்னையே... நான் செய்யும் தீய செயல்களுக்காக எனைத் தண்டிக்க காலதேவன் வந்து அழைக்கும் போது.. அன்னையே என உன்னைத் தான் நான் அழைப்பேன்.. நீயும் ஓடி வந்து அஞ்சாதே மகனே என்பாய்.

முன்னர் ஒரு பாடலில் தன்னை அழைக்க எமன் வந்திடும் வேளையில் அம்மையும் அப்பனுமாகத் தனக்குக் காட்சியளித்தருள வேண்டும் என்று வேண்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து ஓடிவந்து எம்மை அஞ்சாதே என்று சொல் தாயே என்கிறார்.

"இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது" யாருக்கு அஞ்சுகிறோமோ இல்லையோ... மரண தேவனுக்கு எல்லோரும் அஞ்சுகிறோம். நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகளுக்கேற்ப காலதேவனும் நமக்கு மரண நேரத்தில் தண்டனைகளைத் தருகின்றான். எனது கர்மங்களுக்கேற்ப கொடுமையான கால தேவன் என்னை நடுங்கச் செய்ய அழைக்கும் போது... என்னை மரணம் நெருங்கும் போது... "வந்து அஞ்சல் என்பாய்" நீ வந்து அஞ்சாதே என்பாய். "அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே" என் தந்தையான ஈசனின் சித்தத்தையெல்லாம் குழைப்பவளே... மணம் வீசும் சந்தனங்களைப் பூசிய குவிந்திருக்கக் கூடிய உனது அழகிய திருமுலைகளால் என் தந்தையின் சித்தத்தைக் குழைக்கும் இளமையான கோமளவல்லியே.... அபிராமித் தாயே...."உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே" காலன் என் வாயில் வந்து நிற்கின்றான். என் மனம் அஞ்சுகிறது. என் உயிர் உடலோடு கொண்ட நட்பைப் பிரிய இயலாத வ்ண்ணம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும் விட்டுப் பிரியலாம் என்ற நிலை... இவ்வேளையில் நான் உன்னையே நினைத்து அன்னையே என்பேன். நீ ஓடி வந்து என்னை நோக்கி அஞ்சாதே மகனே என்று என் மரண பயத்தைப் போக்குவாய்.

மரணவேளை மிக முக்கியமானது.. எதிர்பாராமல் மரணமடைபவர்களை விடுங்கள். வயதாகி மரணப் படுக்கையில் விழுந்த பெரியோர்களிடம் சென்று ஆசி வாங்குவது நம் பகுதி மக்கள் பழக்கம். அச்சமயங்களில் அவர்களின் செவிகளிலும் இறைவனுடைய திருநாமம் விழும்படிப் பார்த்துக் கொள்வார்கள். ஒரு வேடிக்கைக் கதை உண்டு. ஒரு கொடியவன் தான் மரணமடையும் வேளையில் தனது இளைய மகனான கோவிந்தனை அவன் பெயர் சொல்லி அழைத்தானாம். கோவிந்தா என்று மரண தருவாயில் கூவிய படியால் அவனது ஆன்மா திருவைகுண்டம் சென்றடைந்ததாம். அழியும் வேளையில் அறியாது அழைத்த ஒருவனுக்கே இறைவனது பெருங்கருணை கிடைக்கிறதென்றால், அவனை முழுமனதோடு அழைப்பவ்ர்களுக்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் கிட்டும்? இவ்விடம் அவள் பெயரைச் சொல்லி அழைப்பேன் என்றும் பட்டர் கூறவில்லை... 'அம்மா.." இது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயமேற்படும்போது நம் வாயினின்று புறப்படும் வார்த்தை... அபிராமி அன்னையே... நான் மரணநேரத்தில் என்னை அறியாது அம்மா என்றழைத்தால்... அது வேறு யாரையோ குறிப்பிடும் சொல் அல்ல... நான் அழைப்பது உன்னைத்தான்... என்பதைப் புரிந்து கொள் தாயே என்று முன் கூட்டியே சொல்லி வைக்கிறார் அபிராமிப் பட்டர்.

பாடல் முப்பத்து நான்கு

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்

பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்

செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே



விளக்கம் : தன்னை நோக்கி வந்து சரணம் என்று அடிபுகும் அன்பர்களுக்கு அன்போடு விண்ணுலகம் தரும் அபிராமி அன்னை தங்கியிருக்கும் இடங்களாவன... நான்முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனின் நான்கு முகங்களாக, கலைமகளாக... தேன் ஊறும் மலர்கள் கொண்ட மாலைகளையும் பெரிய மாணிக்கங்களையும் தன் மார்பின் மீது அணிந்த திருமாலின் மார்பாக... திருமகளாக... ஈசனின் ஒரு பாகமாக... மலைமகளாக... பொன்னிறத்துடன் கூடிய சுவைமிகுந்த தேனூறுகின்ற தாமரை மலரிலும், விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிடத்திலும், சந்திரனிடத்திலும் தங்கியிருக்கின்றாள்..

எங்கும் நிறைந்த அன்னை பராசக்தியை இவ்விடம் உள்ளாள் என்று குறிப்பிடத் தேவையில்லைதான். ஆயினும் உயரிய இடத்து உன்னைக் காணும்போது அவ்விடத்தில் நீ தங்கியிருப்பதை எங்ஙனம் உரையாமல் இருப்பது? நீயே கதி என்று உன்னைச் சரணமடையும் உன் அடியவர்களுக்கு நீ விண்ணுலகில் இடமளிக்கிறாய். அதுவும் மிகுந்த கருணையோடும் அன்போடும்... அவர் செய்த தீவினைகள் எல்லாம் உன் பரிவின் முன் பலனற்றுப் போய்விடுகின்றன. நீ எங்கெங்கே இருக்கிறாய்...? "சதுர் முகமும்" நான்முகங்களைக் கொண்ட பிரம்மதேவனின் நான்கு முகங்களிலும்... அவரது படைப்புத் தொழிலாக.... கலைமகளாக... "பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும..." நறுந்தேன் ஊறக்கூடிய அழகிய மலர்களையும் , பெரிய மாணிக்கங்களையும் தன் மார்பிலே அணிந்த திருமாலின் திருமார்பிலும்... அலைமகளாக... "பாகமும்" ஈசனது இடப்பாகத்திலும்... மலைமகளாக... "பொற் செந்தேன் மலரும்" பொன்னிற நறுந்தேனைக் கொண்டிருக்கும் தாமரை மலரிலும்... "அலர் கதிர் ஞாயிறும்" விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிலும்... உனது கதிர்கள் எங்கள் மனத்தில் உள்ள அறியாமையைப் போக்குகின்றன தாயே... "திங்களுமே" சந்திரனிடத்திலும்... நீ தங்கியிருக்கின்றாய் தாயே.,.. உனது கருணை சந்திரனைப் போன்று குளிர்ச்சியானது தாயே....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

கருத்துகள் இல்லை: