செவ்வாய், நவம்பர் 02, 2010

அபிராமி அந்தாதி 35 & 36

பாடல் முப்பத்தைந்து


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க

எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்

தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்

வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே



விளக்கம் : அபிராமி அன்னையே... திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்களையுடைய பாம்புப் படுக்கையின்மேல் துயில் கொள்ளும் பரம்பொருளே... பிறைச் சந்திரனின் மணம் வீசும் உனது சிறிய பாதங்களை எந்தன் தலைமேல் வைக்க நாங்கள் என்ன தவம் செய்தோம்...? எண்ணுதற்கியலாத அமரர்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமோ?

"திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி" பிறைச் சந்திரனின் மணம் வீசும் சிறிய பாதங்கள்... அன்னை அபிராமியைக் குழந்தையாகக் காண்கிறார் அபிராமிப் பட்டர். அபிராமிப் பெண்ணின் சிறிய திருப்பாதங்கள் பிறைச் சந்திரனின் மணம் வீசும் தன்மை படைத்தவை.. (எங்கள் சுப்பிரமணியபுரத்தில் அருளாட்சி செய்யும் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் பலருக்கும் சிறு குழந்தை வடிவில் காட்சியளித்துள்ளாள்.) பெருமை பெற்றுள்ள அன்னையின் சிறிய திருப்பாதங்கள் என்ன செய்கின்றனவாம்?? "சென்னி வைக்க" எந்தன் தலைமீது வைக்கின்றாள்.. உனது அழகிய திருப்பாதங்களை எங்கள் தலைமீது வைக்க நாங்கள் என்ன தவம் செய்து விட்டோம்?? என்று வியந்து பாடுகிறார்... அவளைத் தன் தலைமேல் ஏற்பது... ஆனால் அபிராமிப் பட்டரைப் பொறுத்தவரையில் அன்னையே அவரைத் தேடிவந்தாள்... அன்னையவள் தானே வலியவந்து தனது பொற்பாதங்களை அபிராமிப் பட்டரின் தலைமீது வைத்ததாக முன்னரொரு பாடலில் குறிப்பிட்டார் அல்லவா?? இவ்விடத்து அவள்தனது திருவடிகளைத் தன் தலைமீது வைக்க என்ன தவம் செய்தேன் என்று வியந்து பாடுகிறார்.. எண்ணிக்கையிலடங்காத அமரர்களுக்கும் இவ்வரிய பாக்கியம் கிட்டியதில்லை... ஆனால் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்தேன்!... "தரங்கக் கடலுள் வெண் கண் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே " திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்கள் படைத்த ஆதிசேடன் என்னும் பாம்பையே படுக்கையாகக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் பரம்பொருளே.... இதென்ன விந்தை.... ? திருப்பாற்கடலுள் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருப்பவன் அந்தத் திருமகளைத் தன் திருமார்பில் கொண்ட திருமால் அல்லவா?? ஆனால் ஏன் பட்டர் அன்னையை அவ்வண்ணம் விளிக்கின்றார்? என்ற வினா எழுகின்றது... அன்னை ஆதிபராசக்தியே வைஷ்ணவி என்னும் திருநாமத்தோடு திருமாலின் அம்சமாகக் காட்சியளிக்கின்றாள்..என்னும் விடையை அன்னை நமக்குத் தந்தருளுகின்றாள்...அன்னை தானே திருமாலாகவும் காட்சியளிக்கின்றாள்..

பாடல் முப்பத்தாறு

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்

மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்

அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே



விளக்கம் : அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் அம்பிகையே... அபிராமி அன்னையே... நீயே பொருளாகவும் இருக்கிறாய். அப்பொருளால் மாந்தர் பெறும் போகங்களாகவும் இருக்கின்றாய்.. அப்போகத்தால் அவர் மயங்கும் மயக்கமாகவும் இருக்கின்றாய். அம்மயக்கத்தின்பின் உண்டாகும் தெளிவாகவும் இருக்கின்றாய். என் மனத்தில் வஞ்சகம் எனும் இருளை இல்லாது நீக்கிய பேரொளியான உனது பேரருள் என்னவென்று என்னால் அறியமுடியவில்லை...

அன்னையின் பேரருள் அளப்பறியது... உலக மாந்தர்க்கு வேண்டிய பொருட்செல்வத்தை அன்னைத் தந்தருளுகின்றாள். அன்னையே அப்பொருட்செல்வமாக நிற்கின்றாள். ஆனால் நல்வழியில் செல்லவேண்டிய மனமானது பொருட்செல்வம் அதிகமானதும் போகத்தை நாடுகின்றது.. அன்னையே அப்போகமாகவும் நிற்கின்றாள். போகம் அதிகமாகும் போது மனம் மாயையில் சிக்கி மயங்குகின்றது... அச்சமயம் அன்னையே அம்மாயையாக நிற்கின்றாள். மயக்கத்தின் பின் தெளிவு உண்டாகிறது... அம்மையே அத்தெளிவாகவும் இருக்கின்றாள்... நோயும் அவளே.. நோய்க்கு மருந்தும் அவளே... இதென்ன விந்தை...! பொருட்செல்வத்தைக் கொடுத்து, போகத்தைக் கொடுத்து, மாயையில் சிக்கவைத்துப் பின்னர் தெளிவினைத் தருவதற்கு, முதலிலேயே அவள் தெளிவினைத் தந்தால் என்ன? எனும் வினா இவ்விடத்து எழுகின்றது.. பட்ட பின்னர் வரும் ஞானமே சிறந்த ஞானம் என்பது ஆன்றோர் வாக்கு... எனவே பொருளைக் கொடுத்து இறுதியில் அருளைக் கொடுத்துத் தெளிவாக்குபவள் அன்னை அபிராமியாக நிற்கும் பராசக்தி... .

"என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்" உனது அருள் என்னும் பேரொளியால் என் மனத்தில் இருந்த வஞ்சனை என்னும் இருள்... அல்லது என் மனத்தை வஞ்சித்த மாயை என்னும் இருள்... இல்லாது போனது... அப்படிப்பட்ட உனது பேரருள் என்ன என்பது எனக்குப் புரியவில்லையே அம்மா... மனித மனம் பல்வேறு நிலைகளில் மாற்றமடைகின்றது. பொருளிருக்கும் மாந்தரிடத்து அதைத் தக்கோர்ர்குத் தரவேண்டுமென்ற அருள் இருப்பதில்லை... இன்னின்னாருக்கு இதைத் தந்தருள வேண்டும் என்ற மனம் படைத்த மாந்தரிடம் அதற்குத் தகுந்த பொருள் இருப்பதில்லை... எவ்விடத்து பொருட்செல்வமும், அருட்செல்வமும் கூடி வருகின்றதோ... அவ்விடத்து அன்னையின் பேரருள் உள்ளதென்று உலகம் அறியும்... மனத்தை அடக்க வழி கற்றோரே பெரியோர் ஆவர்... மனம் அடங்குவதில்லை... ஆனால் அது அன்னையின் பேரொளியால் நிரம்பும்போது அவ்விடத்திருந்த மாயை என்னும் இருள் அகன்று போகின்றது. அன்னையே நம்மை அருளாட்சி செய்கின்றாள்... அன்னை நம்மை ஆண்டு கொண்ட பின்னர் மாயை நம்மை அண்டிடுமோ?? என் மனத்தை உனது அருளெனும் பேரொளியால் நிரப்பிய அன்னையே... உந்தன் அருள்யாது??? பொருளா?? பொருள் தந்திடும் போகமா?? அப்போகத்தால் விளையும் மருளா?? மருளழியும் வேளை வரும் தெளிவா?? என்னால் அறியமுடியவில்லையே..... அழகிய தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் அம்பிகையே... என் அபிராமி அன்னையே.....

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்... அம்மையார் கீதா அவர்களுக்கு... தாங்கள் லலிதாம்பிகையை பற்றி எழுதியுள்ளதாக உரைத்தார்கள்..எனவே அபிராமி அந்தாதியிலும் தங்களுக்கு மிகச்சிறந்த தெளிவு உண்டென நம்புகிறேன்... நான் மீண்டும் உரைப்பது இது ஒன்றேதான்... அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியவரை மட்டுமே விளக்கங்கள் தருகின்றேன்... இவற்றில் பிழையிருந்தால் மன்னித்து அவற்றைத் திருத்தி வழிநடத்தும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்று நம்புகின்றேன்... நன்றி....

அபிராமி அந்தாதி 35 & 36

கருத்துகள் இல்லை: