செவ்வாய், நவம்பர் 02, 2010

அபிராமி அந்தாதி 23 & 24

எழுதிய தினம் 18.10.2010




அன்பர்களுக்கு வணக்கம்.. அன்பு மகள் பிறந்த மகிழ்ச்சியுடன் இன்றைய பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.. நேற்றைய திருநாளைப் பற்றி உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருக்கும் போது, எமது துணைவியாருக்கு பிரசவ வலி வந்தது. அச்சமயம் நானும் அவரது இல்லத்தில்தான் இருந்தேன். மருத்துவமனைக்கு விரைந்தோம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கழித்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டே கையெழுத்திட்டேன். உலகத்தைக் காத்து ரக்ஷிக்கும் அன்னையின் திருவருளால் இன்று அதிகாலை மணி 01.43 அளவில் எங்கள் திருமகள் பூவுலகில் உதித்தாள். பிரசவ சமயத்தில் என் மனைவி பட்ட பாட்டை அருகில் இருந்து கண்ட கலக்கம், மகளது திருமுகத்தைக் கண்டவுடன் உடனடியாக நீங்கியது. குட்டி முகம், பிஞ்சு விரல்கள்... அடடா... மழலைச்செல்வத்தின் இன்பத்தை எங்கனம் உரைப்பது... முன்னர் ஒருமுறை நமது பதிவில் தமிழ் இலக்கியத்தில் மழலையர் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தோம். அது இலக்கியங்களை ரசித்து எழுதியது.. அதன் உண்மையான இன்பத்தை இன்று அதிகாலை அடைந்தோம்.. இதைப் பற்றிய ஒரு நுகர்வை இன்னொரு பதிவில் தெளிவாக எழுதலாம். இப்போது அதே மகிழ்ச்சியுடன் அபிராமி அந்தாதியைக் கவனிப்போம்.



பாடல் இருபத்து மூன்று

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை

விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த

கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே



விளக்கம் : எளியேன் எனக்கு எந்தன் கண்மணியைப் போன்ற என் அபிராமித் தாயே....மூவுலகுக்கும் உள்ளே இருந்து அதனை இயக்குபவளே.. அம்மூவலகையும் தாண்டி வெளியிலும் இருப்பவளே... என் உள்ளத்துள் விளைந்த கள்ளே... அமுதமே... ஆனந்தமே ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... என் மனத்தில் நின் திருவுருவையன்றி வேறொன்றும் நினைக்க மாட்டேன். உனக்கு அன்பான அடியவர் கூட்டத்தை விட்டு என்றும் விலக மாட்டேன். உனை விடுத்து வேறொரு தெய்வத்தை வணங்கும் பிற சமயங்களை நான் விரும்ப மாட்டேன்.

அன்னையின் திருவுருவத்தை மனத்தில் நிலை நிறுத்தி தியானத்தில் ஈடுபடத் துவங்கி விட்டால், அவளின் உருவமன்றி எந்த நினைவுகளும் மனத்தில் எழாது... இது அன்பர்களுக்கு அன்னை வழங்கும் திருவரம்.. அவ்வரத்தைத் தன் வாழ்க்கையாகப் பெற்ற அபிராமிப் பட்டர் தன் மனநிலையை இவ்விடத்துத் தெளிவு படுத்துகிறார். உன் உருவம் மட்டுமே என் மனத்தில் நிலை நிற்கிறது. வேறெந்த உருவும் அவ்விடத்து வர இடமில்லை... உன்னடியார்களை விட்டு நான் என்றும் விலகவே மாட்டேன்.. எனக்கு உற்றார்கள், சுற்றார்கள் எல்லாரும் நின் அடியார்களே... என்னருகே யார் வந்தாலும் அவர்களெல்லாம் உனக்கடியார்களாகத்தான் இருக்கின்றார்கள்.. மகாபாரத்தின் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை தர்மன் உலகில் உள்ள கெட்டவர்களைத் தேடிப் புறப்பட்டானாம். ஆனால் அவன் கண்ணில் யாரும் கெட்டவர்களாகத் தென்படவே இல்லையாம். துரியோதனன் உலகில் உள்ள நல்லவர்களைத் தேடிப் புறப்பட்டானாம். ஆனால் அவன் கண்ணில் யாருமே நல்லவர்களாகப் படவில்லையாம்... ஆக அவரவர் மனத்தில் எழும் எண்ணங்களாகவே இவ்வுலகம் தென்படுகிறது. இவ்விடத்து அபிராமிப் பட்டர் அன்னையின் அன்பராகவே இருப்பதால், காண்போரெல்லாம் அவருக்கு அன்னையின் அடியவராகவேத் தோற்றமளிக்கிறது. அப்படிப்பட்ட அடியவரின் கூட்டத்தை விட்டுத் தான் என்றும் விலகுவதில்லை என்று அன்னையிடம் தெரிவிக்கிறார். "பர சம்யம் விரும்பேன்" வேறு சமயங்களை நான் விரும்புவதில்லை.. .எத்தனையோ சமயங்கள் இந்த உலகில் உள்ளன தாயே... ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை இறைவன் என்று உரைக்கின்றன... ஆனால் என் கண்ணிற்கு உன்னை விடுத்து வேறு யாரும் தெய்வமாகத் தோன்றாததால், உன் சமயத்தை விட்டு வேறு சமயத்தை நான் விரும்ப மாட்டேன். "வியம் மூவுலகுக்கும் உள்ளே" என்ன இது குழப்பம்.? ஓரிடத்து ஏழுலகங்கள் என்றார். பிரிதோரிடத்தில் பதினான்கு உலகங்கள் என்றார்.. இப்பாடலிலோ மூவுலகம் என்று பாடுகிறாரே... இதென்ன? என்ற ஐயம் நம் மனத்தில் எழுகின்றது.. ஆனால் அவ்விடத்திருந்து நீ இயக்குகின்றாய் என்ற விளக்கம் நம்மைத் தெளிவு படுத்துகின்றது.. பூவுலகின் இயக்கங்களுக்குக் காரணமாக மூன்று உலகங்கள் உள்ளன.. அவை பிரம்மனின் சத்தியலோகம், திருமாலின் வைகுண்டம், சிவபெருமானின் கயிலாயம். இவ்வுலகங்களே உலகின் முக்கிய இயக்கங்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந்தொழில்களை இயக்குகின்றன... ஆனால் தாயே.. நீ அந்த மூவுலகினையும் இயக்குபவள் அல்லவா....? என்கிறார்... மேலும் அங்கு மட்டுமல்ல, அண்டசராசரங்கள் எல்லாவிடத்தும் நிறைந்து நிற்பவளே... என் உள்ளத்தே விளையும் கள்ளே... அமுதமே... "களிக்கும் களியே.." ஆனந்தமே ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... நீ இன்பத்திற்கும் இன்பம்.. கள்ளை அருந்துவோருக்கு அது மயக்கத்தை இன்பத்தைத் தருகின்றது... ஆனால் அக்கள்ளே களிக்கும் களி... அக்கள்ளையே இன்பத்தால் மயங்க வைக்கும் பேரின்பம் நீயே அம்மா..... எளியவன் எனக்கு நீ என் கண்ணின் மணியைப் போன்றவள்....



பாடல் இருபத்து நான்கு

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த

அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்

பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

விளக்கம் : மாணிக்கமாக விளங்குபவளே... அம்மாணிக்கம் உண்டாக்கும் ஒளியாக விளங்குபவளே.. ஒளிரும் மாணிக்கங்களால் ஆன அணிகலனாக விளங்குபவளே.. அவற்றை நீ அணிவதால் அவ்வணிகளுக்கே அழகு சேர்ப்பவளே.. உன்னை வணங்காது விலகி நிற்பவர்களுக்குப் பிணியானவளே... உன்னைத் தேடி ஓடிவரும் பக்தருக்கு அப்பிணிக்கான மருந்தைப் போன்றவளே.. அமரர்களுக்கும் மாபெரும் விருந்தாய் தோன்றி நிற்கும் என் அபிராமி அன்னையே... அழகிய தாமரை மலரைப் போல் விரிந்திருக்கும் உனது பாதங்களை வணங்கிய பின்னர், இன்னொருவரை நான் வணங்க மாட்டேன்..

இந்த பாடலைத்தான் ஆதிபராசக்தித் திரைக் காவியத்தில் திரு. சௌந்தரராஜன் பாடுவார். இப்பாடலைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் இயற்றிய "சொல்லடி அபிராமி" எனத் துவங்கும் பாடல் வரும். கண்ணதாசனுக்கு மிகவும் பிரியமான பாடல் இது... (அபிராமி அந்தாதிக்கு, கவியரசர் அவர்கள் உரை எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது). ஆனால் அப்பாடலில் மணியே... என்று தனது சிம்மக் குரலில் சௌந்தர ராஜன் துவங்குவதற்கு முன்னர் ஒரு மணி ஒலி கேட்கும்... அபிராமி அந்தாதியைக் கற்பதற்கு முன்னர் நான் அம்மணியொலியைத்தான் மணியே... மணியின் ஒலியே... என்று பாடுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.. பின்னர் அபிராமி அந்தாதியைக் கற்ற பின்னர் அவ்வெண்ணம் நகைச்சுவையாகி விட்டது..

மணியே - மாணிக்கமே... மணியின் ஒளியே... மாணிக்கம் சிந்தும் ஒளியைப் போன்றவளே... அவ்வொளிதரும் மாணிக்கங்களால் செய்யப் பட்ட அணிகலனைப் போன்றவளே... "அணியும் அணிக்கு அழகே" அவ்வணிகலன் அணிவதால் அணிகலனுக்கு அழகு சேர்ப்பவளே... உன்னை அழகு செய்ய மாந்தரெல்லாம் உனக்கு மாணிக்கத்தால் அணிகலன் செய்தார்.. ஆனால் தாயே... அவ்வணிகலன்களால் உனக்கு அழகு அல்ல... உன்னால் அணியப் பட்டதால்தான் அவ்வணிகலனே அழகு பெற்றது.... எத்தனை அழகிய உண்மை..... அன்னையை மட்டுமே எண்ணும் கண்களுக்கு அவளை விடுத்து வேறெந்த ஒன்றும் திருப்தியைத் தராது.. அன்னை.. அன்னையின் திருநாமம்... அவளது புகழ்... இவை மட்டுமே அபிராமிப் பட்டருக்கு அழகாய்த் தோன்றுகிறது.. ஆகையால்தான் அம்மையால் அவ்வணிகலன் அழகு பெற்றதாய்ப் பாடுகிறார். "அணுகாதவர்க்குப் பிணியே" உன்னை அணுகாதவர்க்கு, உன்னைத் தொழாதவர்களுக்கு, அவர்களது கர்மவினைப் பயனால் ஏற்படும் பிணி நீதான்... நம் கிராமப் பகுதிகளில் வெப்பு நோயை "அம்மை நோய்" என்றழைப்பது வழக்கு... "ஆத்தா வந்திருக்காப்பா..." என்றுதான் குறிப்பிடுவார்களே விடுத்து அதற்கு வேரொரு பெயரைத் தருவதில்லை... இவ்வாறு உன்னை அணுகாதவர்களுக்கு ஏற்படும் பிணியானவளே... அப்பிணிக்கும் மருந்தானவளே... வெப்பு நோயினால் ஏற்படும் துன்பத்தைத் தீர்க்க அனைவரும் மீண்டும் அன்னையையே நாடி வருகின்றனர். இதனால் பிணியுமானாள்... அப்பிணிக்கு மருந்துமானாள் அன்னை அபிராமி... அமரர்களுக்கெல்லாம் பெரும் விருந்தாக விளங்கக் கூடியவளே... அழகிய தாமரை மலர் போன்று தோற்றமளிக்கும் உன் அழகிய பொற்பாதங்களை வணங்கிய பின்னர் இன்னொருவரை நான் பணிவது இல்லை... எத்தனை வைராக்கியம் அபிராமிப் பட்டருக்கு... அன்னை அபிராமி மட்டுமே தன் தெய்வம் .. அவள் விடுத்து வேறொரு தெய்வத்தை அவரால் கற்பனை கூட செய்ய இயலாது... அப்படிப்பட்ட வைராக்கிய பக்தி நிலையில் நின்றிருந்தார் அபிராமிப் பட்டர்... பிற தெய்வங்களை மட்டுமல்ல... யாரையுமே வணங்க மாட்டேன்... உலகில் பிறங்கு உலக இன்பங்களால் துன்புற்றிருக்கும் மாந்தர், தம் இன்பங்களுக்காக மாந்தரை வணங்குகின்றனர்.. பிற கடவுள்களையும் வணங்குகின்றனர்.. ஆனால் நான் உன்னைத் தவிர வேறொருவரையும் வணங்குவதில்லை ... என்று தன் உறுதிநிலையைத் தெளிவு படுத்துகிறார் அபிராமிப் பட்டர்..

தொடரும் பாடல்களுக்கான விளக்கம் அடுத்த மடலில்... அன்பர்கள் நமது விளக்கத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்து, அவற்றை திருத்தித் தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.. நன்றி...

நண்பர்கள் இவ்விளக்கங்களை www.chithiram.blogspot.com என்ற வலைப்பதிவிலும் படிக்கலாம்..

கருத்துகள் இல்லை: