செவ்வாய், நவம்பர் 02, 2010

அபிராமி அந்தாதி 31 & 32

அன்பர்களுக்கு அடியேனின் வணக்கங்கள்.. இன்று பதினாறாவது நாள். கடந்த பதினைந்து நாட்களாக அபிராமி அந்தாதியைக் கவனத்துடன் படித்து வரும் அன்பர்களுக்கு அன்னையின் பேரருள் என்றும் துணை நிற்க அவள் தாள் பணிந்து வேண்டுகிறேன். அன்பர் தமிழன் வேணு அவர்கள் பணித்த போது இத்தனை அரிய கருத்துக்கள் வெளிப்படும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. இத்தனை ஆழமாக நானும் அபிராமி அந்தாதியைக் கற்கின்றேன். அவற்றையே தங்களுக்கு வெளிப்படுத்துகின்றேன். என்னையும் கற்கவைத்த அவள் பேரன்பை எண்ணி வியக்கின்றேன்... தொடர்ந்து பாடல்களைக் கவனிப்போம்.

பாடல் முப்பத்தொன்று.

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

விளக்கம் : அன்னை அபிராமியும் அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஒரே உருவில் வந்து கீழோனான என்னையும் தங்கள்மேல் அன்பு செய்ய வைத்து அருள் புரிந்தார்கள். ஆகவே இனி நான் சிந்திப்பதற்கு வேறு சமயங்களும் இல்லை.. என்னைப் பெற்றெடுக்க வேறு தாயும் இல்லை.. அழகிய தோள்களுடைய பெண்கள் மேல்வைத்த காம ஆசையும் இல்லாமல் போனது.

"உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து " உமையவளாகிய அன்னை அபிராமியும், அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஓர் உருவில் வந்து... சிவசக்தி சொரூபமாய், அர்த்த நாரீஸ்வரராய் எனக்குக் காட்சியளித்தார்கள். கிடைத்தற்கரிய பேறு அல்லவா? முன்னர் ஒரு பாடலில் இவ்வுருவைத்தான் அதிசயம் என்று பாடினார் அபிராமிப் பட்டர். அன்னையையும் அப்பனையும் ஏகவுருவில் காணும் பேறு பெற்றது அபிராமிப் பட்டர் செய்த பாக்கியம் அல்லவா...? அவர்கள் வந்து என்ன செய்தார்கள் தெரியுமா? "இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்" அவர்கள் இருவரும் ஓருருவாக இங்கு வந்து, எம்மையும் - இவ்விடத்து அழுத்தம் கொடுக்கிறார் அபிராமிப் பட்டர். கீழோனான என்னையும் தம் மேல் அன்பு செய்ய வைத்தார்கள். எந்தவிதக் கெட்ட எண்ணங்களும் இன்றி, அன்னையின் மேல் முழு பக்தியாக இருந்த அபிராமிப் பட்டர், தன்னை மிகக் கீழோன் என்று குறிப்பிடுவது வியப்புக்குரியது. "இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை" இனி நான் வேறு சமயங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கில்லை... அன்னையின் பேரன்பு கிடைத்த பின்னர் வேறெந்த சமயங்கள் வேண்டும்? இந்த பூஜையை செய்தால் இறையருளைப் பெறலாம்.. இந்த மந்திரங்களைப் படித்தால் இறையருளைப் பெறலாம். இந்த வழியில் நின்றால் இறையருளைப் பெறலாம். என்று பல்வேறு சம்யங்கள் உரைக்கின்றன.. ஆனால் உங்கள் மேல்வைத்த அன்பு ஒன்றே எனக்கு உங்கள் பேரருளைப் பெற்றுத்தந்து விட்டது. இனி நான் சிந்தித்துப் பார்ப்பதற்கு வேறு சமயங்கள் இல்லை.. "ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை" இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாய் இல்லை.. இதன் பொருள் நான் பிறவிப் பெருங்கடல் நீந்தி விட்டேன். இனி எனக்கு மறுபிறப்பு இல்லை என்பது.. பலமுறை பிறப்பறுப்பைப் பற்றி அபிராமிப் பட்டர் பாடுவது குறிப்பிடத்தக்கது. இனி என்னை ஓர் தாய் ஈன்றெடுப்பாளோ? இல்லவே இல்லை.. இத்துடன் என்பிறவி முடிந்தது.. ஏனெனில் என் அன்னை அபிராமியின் பேரன்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது என தனக்கு மீண்டும் பிறவி இல்லை என அபிராமிப் பட்டர் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். அது அவரது பரிபூரண நம்பிக்கையைக் காட்டுகிறது. "அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே" அழகிய தோளுடைய பெண்டிரின் மேல்வைத்த காம ஆசையும் அமைதியுற்றது. மனிதரைப் பின் தொடர்ந்து துன்பமளிக்கும் ஓர் நோய் இக்காம நோய்.. அவற்றிலிருந்து எவ்வண்ணம் வெளிவருவது என்பதே இன்றைக்குப் பலருடைய கேள்வி.. அன்னையின் அன்பு நமக்குக் கிட்டி விட்டால் அக்காம ஆசை தானே அமைதியாகிவிடும். அன்னையே நீ உன் தரிசனத்தை எனக்குக் காட்டி என்னை உன்பால் அன்பு செய்ய வைத்து விட்டாய். இனி என் மனத்தில் நான் பெண்டிரின் மேல் கொண்ட ஆசை அப்படியே அமைதி பெற்றுவிடும்...



பாடல் முப்பத்திரண்டு

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்

வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

விளக்கம் : அபிராமி அன்னையே.. ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்த என் அம்மா... நான் கொடிய ஆசையெனும் கடலில் மூழ்கி, கொஞ்சம் கூட இரக்கமற்ற எமனது கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டப்பட்டு துன்பம் மிக அடைய இருந்தேன். என்னை, மணம் வீசும் அழகிய தாமரை போன்ற நின் திருப்பாதங்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்து ஆண்டு கொண்டாய். உன் பேரன்பினை நான் என்னவென்று சொல்லுவேன்?

இவ்வுலகில் நாம் பெறும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நம் மனத்தில் உள்ள ஆசையே.. ஆசையை ஒழித்தார் மட்டுமே துன்பமின்றி வாழ இயலும். அன்னை அபிராமியே நான் ஆசையெனும் கடலில் அகப்பட்டுக் கொண்டேன்.. அவ்வமயம் அங்கே அருளற்ற - கொஞ்சமும் இரக்கமற்ற கூற்றுவனின் கையிலுள்ள பாசக் கயிறு என்னைப் பிடிக்க வந்தது. நான் அப்பாசத்தில் அகப்பட்டிருந்தால் என் துன்பம் இன்னும் மிகுதியாக இருந்திருக்கும்.. அவ்வயமம் எனக்கு அதைப் பற்றிய எண்ணமே இல்லை.. கண் அது போன போக்கு.. கால் அது போன போக்கு... என்றே போய்க்கொண்டிருந்தேன்... ஆனால் உனது பேரன்பு என்ன செய்தது தெரியுமா? "நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுகேன் " உனது பாதங்கள் எனும் மணம் வீசும் அழகிய தாமரை மலர்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்தாய்.. உனக்கு அடியவனாக்கினாய்... அப்பேரன்பை நான் என்னவென்றுரைப்பேன்.. எனக்கு உன்னைத் தெரியவே தெரியாது.. நீயே உலகைப் படைத்தவள் என்ற ஞானம் எனக்கு இல்லவே இல்லை... நீதான் தெய்வம் என்ற உணர்வு என்னுள் இல்லவே இல்லை... ஆயினும் நீயே வலியவந்து உன் திருவடித் தாமரைகளை என் தலைமேல் வைத்தாய். அன்னையே உன் திருவடித் தாமரைகள் என் தலைமேல் பட்டவுடன் நான் உனக்கு அடியவனானேன்.. நீ என்னை அருளாட்சி செய்து கொண்டாய்... உனது அன்பு அளப்பறியது.. என்ன காரணத்தாலோ நீ என்மீது இப்படிப் பட்ட அன்பினை வத்து அருட்செய்தாய். அளவிட இயலாத உன் அன்பினை நான் எவ்வாறு உரைப்பேன்...ஈசனது இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் என் அபிராமித் தாயே......?

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

கருத்துகள் இல்லை: