வியாழன், அக்டோபர் 21, 2010

அபிராமி அந்தாதி 29 & 30

பாடல் இருபத்தொன்பது


சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா


சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்


முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த


புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே

விளக்கம் : அபிராமி அன்னையே... நீயே சகல சித்தியாகத் திகழ்கிறாய், சகல

சித்திகளையும் வழங்கும் தெய்வமாகிய பராசக்தியும் நீயே.. பராசக்தி

தழைக்கக் காரணமான பரமசிவமும் நீயே. அப்பரமசிவத்தை எண்ணித் தவம் செய்யும்

அடியவர்களுக்குக் கிடைக்கும் முக்தியும் நீயே.. முக்திக்குக் காரணமும்

நீயே.. முக்திக்குக் காரணமாக மனத்துள் தோன்றிய புத்தியும், புத்தியின்

உட்பொருளும் என சகலமும் ஆகி நின்று எம்மைக் காக்கும் திரிபுரசுந்தரி

நீயே அல்லவா?

சகலமும் அபிராமி... எங்கும் அபிராமி. எதிலும் அபிராமி என்று சகலத்தையும்

அபிராமி மயமாகவேக் காட்டும் பாடல் இது. எட்டுவித சித்திகளைச்

சொல்வார்கள். அணிமா (அணு அளவிற்கு சிறிய உருவை எடுத்துக் கொள்ளுதல்),

மஹிமா (பிரபஞ்சத்தின் அளவிற்கு உருவை பெரிதாக்கிக் கொள்வது), கரிமா

(எடையை அதிகரித்தல்) லஹிமா (இலகுவான எடையைக் கொண்டிருப்பது), ப்ராப்தி

(நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்வது), ப்ராகாம்யா

(எண்ணியதெல்லாம் அடைதல்), ஈசித்வா (எல்லா பொருட்கள் மேலும் ஆதிக்கம்

செலுத்துவது), வசித்வா (எல்லா பொருட்களையும் எல்லாரையும்

வசப்படுத்துவது). இவையே அவ்வெட்டு சித்திகள். தவமுயற்சியில் நெடுங்காலம்

ஈடுபட்டு வருவோர்க்கு இவ்வெண்சித்திகளில் ஏதேனும் ஒன்று கிட்டும் என்பது

நம்பிக்கை... இச்சித்திகள் பெற்றோரை சித்தர் என்றழைப்பர்... அபிராமிப்

பட்டர் அன்னை அபிராமிதான் இவ்வெட்டு சித்திகளாகக் காணப்படுகிறாள்

என்கிறார். மேலும் சித்திகளை அளிக்கக்கூடிய தெய்வமாகிய பராசக்தியும்

நீயே...பராசக்தி தழைத்தெழும் பரமசிவமும் நீயே... சக்தியும் நீயே...

சிவமும் நீயே... முன்னர் ஒருமுறை அன்னையே சிவத்தைப் படைத்தாள் என்று

பகர்ந்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து சிவத்திலிருந்து சக்தி தழைத்தாள்

என்கிறார். மேலும் அப்பரமசிவத்தை நோக்கித் தவமிருக்கும் தவமுனிகளுக்குக்

கிடைக்கக் கூடிய முக்தியும்... பிறப்பிலிருந்து விடுதலை... பந்த

பாசங்களிலிருந்து, அனைத்துக் கட்டுக்களிலிருந்தும் விடுதலையளிக்கும்

முக்தியும் அன்னை அபிராமியே... அம்முக்திக்கு வித்தும் நீயே.. முக்திக்கு

வித்தாவது யாது?? தவநெறி.. எனவே தவநெறிகளும் நீயே... "வித்தாகி முளைத்து

எழுந்த புத்தியும்..." அத்தவநெறிகளுக்குச் செல்லும்படி முனிவர்களை

அறிவுறுத்திய ஞானமும் அன்னை அபிராமியே... "புத்தியினுள்ளே புரக்கும்

புரத்தை அன்றே" ஞானத்தின் உட்பொருளும் என சகலமும் ஆகி நிற்பது என் தாயான

திரிபுர சுந்தரி அன்னை அபிராமியே... உன்னையன்றி யார்? அன்னையை விடுத்து

அபிராமிப் பட்டருக்கு வேறு யாரையும் தெரியாது.... எல்லாம் அன்னை

அபிராமியே...

"சர்வம் சக்தி மயம்" என்று எளிதில் இப்பாடலுக்கு உரை எழுதிடலாம். எல்லாம்

அன்னை... காணுமிடமெல்லாம், கவனம் உறையுமிடமெல்லாம் அன்னையைக் காண்பது

அபிராமிப் பட்டரின் பக்தி... அன்னை அபிராமியே... இவர் கொண்டிருந்த

பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது எங்களுக்கும் அருளிச் செய்வாயாக....



பாடல் முப்பது

அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை

நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்

சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-

ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.



விளக்கம் : அபிராமி அன்னையே... பராசக்தித் திருவுருமாக ஒரே இறைசக்தியாகத்

தோற்றமளிப்பவளே... அவரவர் எண்ணங்களுக்கேற்ப பல்வேறு இறைவுருவுகளிலும்

காட்சியளிப்பவளே... இறைசக்தியை உருவமற்றது என்றென்னும் அன்பர்களுக்கு

அரூபமாக நின்று அருள்பவளே... என் தாயான உமையவளே... பாவக் கடலில்

வீழ்வதற்கு முன்னரே என்னைத் தடுத்தாட்கொண்டாய். என்னை நின் அடிமையாகக்

கொண்டபின்னர் இல்லை என்று சொல்வது உனக்குத் தகுமோ? இனி நான் என்ன

செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், காத்துக் கரையேற்றுவது உன்

திருவுள்ளமன்றோ....?

"அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய்" பாவம் இது புண்ணியம் எது என்று நான்

அறியாத காலத்தில், நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே... நான் பாவக்

கடலில் விழவிருந்த வேளையிலே.... என்னை விழாது தடுத்து உனது பேரருளால்

ஆட்கொண்டாய்... இதனால் நான் பாவக் கடலில் விழுந்து விடவில்லை அம்மா...

உனக்கு ஆட்பட்டு உன்னடிமையாக நான் இருக்கையிலே நான் எப்படி

விழுந்திடுவேன்... "கொண்டது அல்ல என்கை நன்றே உனக்கு?" ஆனால் இன்று

பார்... உன்னை எண்ணி நான் தியானித்திருந்த வேளையில் அறியாது உரைத்த

வார்த்தைகளுக்காக என்னைக் கொடுந்தீயில் தள்ளிவிட இம்மாந்தரெல்லாம்

காத்திருக்கின்றனர்... இதோ இருபத்தொன்பது பாடல்களைப் பாடிவிட்டேன்..

இருபத்தொன்பது கயிறுகள் உரியிலிருந்து அறுக்கப் பட்டுவிட்டன.. இது

முப்பதாவது பாடல். இப்பாடல் முடிந்தபின் இன்னொரு கயிறும் அறுபடும்..

ஆனால் நீ இன்னும் வெளிப்படவில்லையே... நீ என்னை உன் அடிமை இல்லை

என்றுரைக்கப் போகிறாயா? வெளிப்படாது மறைந்தே இருக்கப் போகிறாயா? அவ்வாறு

என்னை மறுதலித்தல் உனக்குத் தகுதியான செய்கையா அம்மா? மாறுபட்ட வழியில்

வேண்டுதல் செய்யும் தந்திரம் இது... நம் பகுதியில் ஆலயத்துக்கு நன்கொடை

சேகரிக்கச் செல்வோர் செய்யும் தந்திரம் போன்றது.. "அண்ணாச்சி... இவ்ளோ

செலவு ஆகும்னு உத்தேசிச்சிருக்கு... உங்கள மாதி பெரியாளுங்கதான் இதத்

தாங்கிக்கிடனும்.. அதனால இதெல்லாம் நீங்க ஏத்துக்கிடாம யார்

ஏத்துக்கிடுவா? உங்களுக்கு மனசில்லாட்டாலும், உங்க அந்தஸ்த

காப்பத்துறதுக்காகவாவது இதச் செஞ்சே ஆவணும்" இப்படிப் பேசும்

பேச்சுக்களுக்கு உடனே பலன் கிடைப்பதுண்டு... தன்னைக் காத்திட அன்னை

விரைந்து வரவேண்டும் என்று அபிராமிப் பட்டரும் இப்படி வேண்டுகிறார்.

"இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின்

திருவுளமோ" இனி நான் என்ன செய்தாலும், மன்னிக்கவே இயலாத

பெருங்குற்றத்தைப் புரிந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு நடுக்கடலில் சென்று

விழுந்தாலும், காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் அல்லவா? மிக நல்ல

வேண்டுதல் இது.. கொடிய பாவங்களிலிருந்து மீள இயலாத அன்பர்கள் இப்பாடலைத்

தொடர்ந்து பாடி வாருங்கள்.. அன்னையே உங்களைக் காத்தருள்வாள். என்னை உன்

அடிமை என்று சொன்னாயே அம்மா... இனிமேல் என்னைப் பாவங்கள் செய்யாது காக்க

வேண்டியது உன் திருவுள்ளம் அல்லவா? அப்படி நான் செய்தாலும் கூட என்னைக்

காத்துக் கரையேற்றவது அன்னையே உனக்குக் கட்மையல்லவா? நான் நடுக்கடலில்

சென்று விழுந்தாலும் கரையேற்றுவது உன் பொறுப்பு அல்லவா?? "கற்றூணைப்

பூட்டிக் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று அப்பர்

பெருமான் ஈசன் மீது நம்பிக்கை வைத்து பாடியதும், ஈசன் அருளால் அக்கற்றூணே

மிதவையாகி அவரை மீட்டு வந்த வரலாறு இவ்விடம் நினைவுக்கு வருகிறது..

இறைவன் மீது நம்பிக்கை... முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென இப்பாடல்

நமக்கு அறிவுறுத்துகிறது.. என்னதான் நடந்தாலும் சரி... நம்மைக் காக்க

அன்னை கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கையை நம் மனத்துள் விதைக்கும்

பாடல் இது... அன்னையின் பேரருள் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் நம்மைக்

காக்க நம்மோடு இருக்கும்... "என் வாயின் வார்த்தைகள் புறப்படுகிறதுக்கு

முன்னமே நீர் அதை அறிந்திருக்கின்றீர்" புனித விவிலியத்தில் ஒரு கவிஞனது

பாடல் இறைவனைப் பற்றி மேற்கண்டவாறு உரைக்கின்றது. இறைவனை விடுத்து நாம்

எங்கும் செல்ல இயலாது... நம்மை இறைவன் எப்போதும் நம்மோடு இருந்தே

காக்கின்றான்... அபிராமிப் பட்டரின் இப்பாடல் அப்படிப் பட்ட பரிபூரண

நம்பிக்கையை நம் மனத்துள் ஏற்படுத்துகிறது.. எனது பள்ளி

வாழ்க்கையின்போது, ஒரு கிறித்தவ அன்பர் உரைத்த கருத்துக் கதை இது..ஒரு

சிறுவன் தன் தந்தையோடு திருவிழாவுக்குச் சென்றான்.. அங்கேயோ மிக அதிகமான

நெரிசல்.. புதிதாய் முளைத்த பொம்மைக் கடைகள்.. மிட்டாய்க் கடைகள்..

இராட்டினம் என்று வேடிக்கை பார்க்கவே சிறுவனுக்கு ஆர்வம். தந்தை

உரைத்தார் "மகனே. என் கைகளை இறுகப் பற்றிக்கொள்.. கூட்டத்தில் நீ

தொலைந்து விடுவாய்... என்னையே பற்றிக் கொண்டு நட" என்று.. மகனோ.."அப்பா..

நான் உங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில் கை

வலியெடுத்து விட்டாலும் விட்டு விடுவேன்.. அல்லது வேடிக்கை பார்த்துக்

கொண்டிருக்கும் போது என்னை மறந்து விட்டு விடுவேன்.. அல்லது நெரிசலில்

நாம் போகும்போது வலிவிலந்த என் கை கூட்ட நெரிசலில் தானாகவே விலகிவிடும்..

எனவே.. நீங்கள் என் கையைப் பற்றிக் கொள்ளுங்கள்." என்று உரைத்தான். மகன்

கரத்தைத் தந்தை பற்றிக் கொண்டார்..மகனோ எவ்விதக் கவலையுமின்றி வேடிக்கை

பார்த்துக் கொண்டே நடந்தான்... பாதுகாப்பாக இருந்தான்.. "இறைவா நான்

உன்னைப் பற்றிக் கொண்டேன். என்னை வழி நடத்து" என்று வேண்டும்போது, மாயை

நிறைந்த உலகில் நாம் வழி தவறிச் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. இதையே

" இறைவா.. நீயே என் கரத்தைப் பற்றி வழி நடத்து" என்று வேண்டும்போது அவனே

நம் கரங்களைப் பற்றிச் செல்கிறான். எல்லாவித மாயையையும் நாம் எளிதில்

கடந்து விடலாம். பரிபூரண நம்பிக்கையை நாம் அன்னைமேல் வைத்தால் மட்டுமே

இது சாத்தியம்.. அபிராமிப் பட்டருக்கு அன்னை மேல் அப்படிப் பட்ட

நம்பிக்கை இருந்ததை இப்பாடல் சுட்டிக் காட்டுகிறது.

"ஒன்றே பல உருவே, அருவே, என் உமையவளே. " உலகமெல்லாம் பரவி நிற்கும் ஒரே

இறைசக்தியான அன்னை பராசக்தியே... அன்பர் விரும்புமிடத்து அவர் விரும்பும்

வடிவில், கலைமகளாக, அலைமகளாக, மலைமகளாக, நான்முகனாக, நாராயணனாக,

முக்கண்ணனாக, ஆனைமுகனாக, ஆறுமுகனாக, என பல்வேறு வடிவுகளிலும்

காட்சியளிப்பவள் நீயே... இறைவனுக்குக் குறிப்பிட்ட உருவமில்லை.. அவன்

அரூபமானவன் என்று உரைப்போரிடத்து நீயே அவ்வருபமாகத் தோன்றுகின்றாய்...

அனைத்தும் என் தாயாகிய உமையவள் நீயே.... என எல்லா சக்திகளும்,

பராசக்தியான அன்னை அபிராமியே.. நீதான் என்றுரைக்கிறார் அபிராமிப்

பட்டர்..

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி..

1 கருத்து:

அபிராமி சொன்னது…

அருமை அருமை..🙏