ஞாயிறு, அக்டோபர் 10, 2010

அபிராமி அந்தாதி - 7 & 8

பாடல் ஏழு
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
விளக்கம் :
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், திங்களைத் தன் சடையில் அணிந்திருக்கும் உனக்கன்பான சிவனும், திருமாலும் என்றும் வணங்கித் துதிக்கும் சிவந்த பாதங்களைக் கொண்ட செந்தூரம் அணிந்த பேரழிகியே, மத்தின் சுழற்சியில் அகப்பட்டு அங்கும் இங்கும் சுழலும் தயிரைப் போல் எனது உயிரும் பிறப்பு, இறப்பு என்னும் வாழ்க்கைச்சுழலில் அகப்பட்டுத் துன்புறுகிறது. தளர்வுறுகிறது. அப்படித் தளர்ச்சியடையாத ஒரு நல்ல கதியை எனக்கு அருள்வாயாக....
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி... இப்பதத்திற்குப் பல்வேறு பொருள் கொள்ளலாம். நான் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியை அபிராமிப் பட்டர் எண்ணியிருக்கலாமோ என்று எண்ணி இவ்விடம் விளக்கமளித்துள்ளேன்.. வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அன்னையின் தியானத்தில் மூழ்கி இன்பமெய்து வந்த அபிராமிப் பட்டர் சரபோசியின் அதிகாரத்தால் துன்பங்கொள்ள நேர்ந்தது. அச்சமயம் அன்னையை வரவழைத்து உண்மையை நிருபிப்பதற்காக எழுந்த பாடல்களல்லவா அபிராமி அந்தாதி..? இதே நாளில் காலையில் உன்னை எண்ணி, தியானித்து, தரிசனம் செய்து மகிழ்வடைந்திருந்தேன்.. இப்போது பார் துன்பத்தில் கிடந்து உழல்கிறேன்.. என்றும் பொருள் கொள்ளலாம். என் ஆவி, என் மனது தளர்ச்சியடையாத ஒரு கதியை எனக்குத் தந்தருள்தாயே... வெளிப்படு... உன்னை எண்ணி நான் மனம் மகிழ்ந்திருந்த வேளையில் நான் அளித்த ஒரு பதிலால் எனக்கேற்பட்ட இழுக்கினைப் போக்க ஓடிவா என்றும் அழைத்திருக்கலாம். பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளால் என்றென்றும் வணங்கித் துதிக்கப் படும் சேவடிகள் கொண்ட செந்தூரத் திலகம் அணிந்த பேரழகியே என்று அன்னையை விளிக்கிறார்.
சரியப்பா.. பிரம்மன் அன்னையை வழிபடட்டும். அவள் அண்ணன் திருமால் அவளை வணங்கட்டும். அதென்ன அவளது கணவன் சிவன் அவளை வணங்குவது??? இது எப்படியாகும்?? என்ற ஒரு வினா இவ்விடத்து எழுகிறது... சக்தி வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கை அவளே ஆதி சக்தி என்பதுதான். அவள்தான் மும்மூர்த்திகளைப் படைத்து அவர்களுக்காத் தன் சக்திகளை மூன்றாகப் பிரித்து முப்பெருந்தேவியராக அருளிச்செய்தாள். எனவே அவளை எருதேரறும் எங்கள் பரமன் வணங்குவதில் வியப்பொன்றுமில்லை.. இன்னொன்றும் சொல்லலாம். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று பேசுகின்ற இக்காலத்தில் கணவனை மனைவி வணங்கும் போது, மனைவியைக் கணவன் வணங்குவதில் தவறேது.. அந்தக் காலத்திலேயே எங்கள் பரமர் உமையவளுக்கு சக உரிமை கொடுத்தார் என்றும் கொள்ளலாம்... அன்பர்களின் கருத்து இவ்விடம் என்னவோ....???

பாடல் எட்டு
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
விளக்கம்..
என் தந்தையான சிவபெருமானின் துணையாக விளங்கும் பேரழகியான அபிராமித் தாயே... செந்தூர வண்ணங்கொண்டவளே... அன்றொருநாள் உன் அன்பர்களுக்கெல்லாம் துன்பம் விளைவித்த மகிடனின் தலைமேல் நின்று அவனை அளித்த காளியே.. நீல நிறமாய் நின்ற துர்க்கையே... இந்த உலகுக்கே நீ தாயாக இருந்தாலும், என்றும் அழியாத கன்னிகையாய் இருப்பவளே... வேதங்களைத் தம் கரத்தில் தாங்கும் பிரம்மதேவனின ஒரு முகத்தைத் தனது கரத்தில் தாங்குபவளே... உனது மலர்ப்பாதங்களே என் சிந்தையுள் நீங்காது நிறைந்துள்ளன.. எனக்கு என்றென்றும் துன்பத்தைக் கொடுக்கும் உலகத்தின் மீதான பாசம் எனும் தொடரை வந்து துண்டித்து எனக்குக் கருணை செய்....
கடந்த பாடலில் சிவன் வந்து வணங்கும் சேவடிகளைக் கொண்ட அபிராமியே என்று விளிக்கும் அபிராமிப் பட்டர், இப்பாடலில் நீ என் தந்தையின் துணையாக நிற்கிறாய் என்று போற்றுகின்றார். பேரழகு கொண்டு என் தந்தைக்குத் துணையாய் என்றென்றும் நிற்பவளே... (மனைவி வேறு துணைவி வேறு அல்ல என்பதை இவ்விடத்து நினைவிற்கொள்க...இருவரும் ஒருவரே....) நீ என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி.... இங்கே பார் இந்த உலகம் துன்பமயமானது... இத்துன்பங்களுக்குக்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்துபார்த்தேன் தாயே... நான் உலகம் மீது கொண்ட பற்றும் பாசமும் தொடர்வதால்தான் துன்பம் என்னைத் தொடர்கிறது.. தாயே நீ வந்து என் துன்பங்களையெல்லாம் வேறோடு அறுத்துவிடு... செந்தூரத் திலகம் அணிந்தவளே... செந்தூர வண்னங்கொண்டவளே.... அன்றைக்கு ஒருநாள் உனது அன்பர்களையெல்லாம் துன்பம் செய்தான் மகிடன் என்றொரு அசுரன்.. தனது அளவுக்கு அதிகமான அகந்தையால் அவன் அப்படிச் செய்தான். நீ அப்போது என்னசெய்தாய்.. துர்க்கையாக அவதரித்தாய்... அவனை வதம் செய்தாய். அவன் தலைமேல் நின்றாய்... நீலி... நீல நிறங்கொண்ட காளியே.... அழியாத கன்னிகை... உலகத்து மாந்தரனைவரையும் பெற்றெடுத்த தாயல்லவா நீ... ஆனாலும் என்றென்றும் அழியாத கன்னிகையாய்க் காட்சி தருகிறாய்.... ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள்... வேதநூல்களைத்தன் கையில் தாங்குகின்ற பிரம்மதேவனுக்கு ஒருமுறை ஏற்பட்ட அகந்தையை நீக்கியருள அவனது ஐந்து முகங்களுள் ஒன்றைப் பிரித்தெடுத்து உன் கையில் வைத்திருக்கிறாயே.... உனது மலர்ப்பாதங்கள் எப்போதும் என் சிந்தையில் நீங்காது நிற்கின்றன...
இருவேறு உண்மைகள் இப்பாடலில் வெளிப்படுகின்றன. துன்பத்திற்கடிப்படை பாசம், அந்த பாசத்தை அறுத்துவிடவேண்டி அன்னையிடம் முறையிடுகிறார். மேலும் இவ்விடத்து எதற்காக அகந்தை கொண்ட மகிடனைப் பற்றிய நினைவூட்டல்... ? தாயே... அன்று அகந்தை கொண்ட மகிடனை அழித்தாயே... இன்றைக்கு என் மனத்தில் இருக்கின்ற அகந்தைகளை அழித்துவிடம்மா என்று வேண்டுகிறார்... பிரம்மனின் அகந்தையை அழித்தவள் அவனது ஒரு திருமுகத்தைத் தன் கையில் தரித்தாள்... பிரம்மனை சக்தியானவள் படைக்கும் போது அவனுக்கு ஐந்து திருமுகங்களைத் தந்தருளினாள்... ஆனால் பிரம்மதேவனுக்கேற்பட்ட செருக்கினை அவரிடமிருந்து பிரித்தெடுக்க அவனது ஒரு திருமுகத்தைக் கொய்து தன் கையில் தரித்தாள்... பிரம்மனின் அகந்தைக்கும், மகிடனின் அகந்தைக்கும் என்ன வேறுபாடு... ? மகிடன் தனக்கேற்பட்ட தலைச்செருக்கால் மானுடர்க்கும், தேவர்க்கும் சொல்லொண்ணா துன்பமளித்தான்.. தன் அன்பர்களை அவனிடமிருந்து காக்க அன்னை துர்க்கையாக அவதரித்தாள் அவனை அழித்து அருட்செய்தாள்... ஆனால் பிரம்மனின் அகந்தையால் யாருக்கும் துன்பமேற்படவில்லை. அது அவருக்கே துன்பமாய் இருந்தது... கர்வம் தலைக்கேறியதால் யாரையும் மதியாதிருந்த அவரது செருக்கினை அடக்கியருள அவனது ஒரு திருமுகத்தை மட்டும் பிரித்தெடுத்துக் கொண்டாள் அன்னை....
எனவே எனது அகந்தையால் எனக்கும் துன்பம் வேண்டாம், அது மிகுதிப்பெற்று அயலாருக்கும் துன்பம் வேண்டாம், பாசத்தின் தொடர்ச்சியால் வருந்துன்பமும் எனக்கு வேண்டாம் தாயே... என்னைக் காத்தருள்.... என்பது அபிராமிப் பட்டரின் வேண்டுதல்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம். நன்றி..

கருத்துகள் இல்லை: