செவ்வாய், அக்டோபர் 19, 2010

அபிராமி அந்தாதி 25 & 26

எங்கள் அன்பு மகளை வாழ்த்தியருளிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் அடியேனின் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.. தொடர்ந்து அபிராமி அந்தாதியைக் கவனிப்போம்..


பாடல் இருபத்தைந்து

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க


முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்


அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே


என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே

விளக்கம் : மும்மூர்த்திகளுக்கும் அன்னையான அபிராமித் தாயே... இந்த உலகத்தாருக்குக் கிடைத்த அரிய மருந்தான என் அபிராமியன்னையே... இப்பிறவியில் உன்னடியார்களைப் பின் தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய திருப்பணிகளைச் செய்து என் பிறவித் துன்பத்தை வேரறுக்கும் வாய்ப்பினை நான் முற்பிறப்பில் செய்த தவங்களின் வாயிலாக அடைந்தேன். என்னே உன் பெருமைகள்... ! இப்பொழுது மட்டுமல்ல... இனிமேல் எக்கணமும் உனை நான் மறவாது தொழுது கொண்டிருப்பேன்.

"பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்"... உலகத்தோர் இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் அடுத்த பிறப்பில் தமது தகுதியை நிர்ணயம் செய்யும் என்று நம்புகிறார்கள்.. இதற்கெனவே தான தர்மங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.. ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடும் போது இப்பிறப்பின் எதிர்கால நன்மைகளுக்காக வேண்டுகின்றனர்.. இனி எனக்கு பிறவி கிடையாது என்று முழங்கும் அபிராமிப் பட்டர், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். உன் திருவடியைப் பற்றியிருக்கக் கூடிய உனது அடியார்களைப் பின் தொடர்ந்து அவர்கட்கு வேண்டிய திருப்பணிகளை நான் செய்து வருகிறேன். எனவே எனக்கு இனிமேல் பிறவி கிடையாது.. இத்திருப்பணிகளை நான் மேற்கொள்ள வேண்டிய புண்ணியம் எனக்கு எங்ஙனம் கிடைத்தது தெரியுமா? நான் முற்பிறப்பில் பல தவங்களை இயற்றி இவ்வரத்தினைப் பெற்றேன். பொருட்செல்வம் மிகப் பெற்றோர், தாம் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் இந்நிலையை அடைந்ததாகப் பெருமைப் பட்டுக்கொள்கின்றனர்.. ஆன்மீக வழியில், உயர்ந்த நிலையை அடைந்த பெரியோர் யாரும் தமது முற்பிறவிப் பயனால் இது எமக்குக் கிட்டியது என்று முழங்கியதில்லை.. ஆனால் அபிராமிப் பட்டர் மிக உறுதியாக தனது கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். மூன்று உண்மைகள்.. ஒன்று. தான் முற்பிறப்பில் செய்த தவங்கள். இரண்டு. அத்தவங்கள் வாயிலாக இப்பிறப்பில் அபிராமி அன்னையின் அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டு. மூன்று. அத்திருத்தொண்டின் வாயிலாக இப்பிறப்புத் துன்பத்தை நீக்குதல். வேறெந்த பிறப்பும் ஏற்படாத உன்னத நிலையை அடைதல். இம்மூன்று உண்மைகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது அன்னையின் அடியாருக்குச் செய்யும் திருத்தொண்டுதான். எங்கள் குருதேவர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கூறுவார் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். இவற்றுள் நிகழ்காலம் மட்டுமே நிதர்சனமான உண்மை. எனவே நீ எக்கணமும் இக்கணத்தில் இரு.. என்று... அபிராமிப் பட்டரும் தன் நிகழ்கால நிலைக்குக் காரணத்தையும், அதனால் வருங்காலத்தில் தனக்கு ஏற்பட இருக்கும் உன்னத நிலையையும் இவ்விருவரிகளில் தெளிவுபடுத்திவிடுகிறார். முன்னர் ஒரு பாடலில் "நான் முன் செய்த புண்ணியம் எது என் அம்மே" என்று பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்துத் தான் செய்த புண்ணியம் என்ன என்பதை உணத்துகிறார்.

"முதல் மூவருக்கும் அன்னே" அன்னை அபிராமியே மும்மூர்த்திகளைப் பெற்றெடுத்தாள் என்பதை இன்னுமொருமுறை தனது பாடலின் வாயிலாகக் கூறுகிறார். "உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே" எதுவும் தேவையில்லை அன்னை அபிராமியை விடுத்து... என்னும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் அபிராமிப் பட்டர் அன்னை அபிராமி உலகத்தாருக்குக் கிடைத்த ஒரு அரிய மருந்து என்கிறார். அபிராமியை எண்ணித் துதித்தால் எந்தவித காயமும் ஆறிப்போகும். எல்லாவித நல்நிலையும் தேடிவரும் என்பதே நிச்சயமான உண்மை. உலகத்தார் செய்த புண்ணியம் அவ்வருமருந்தினைப் பெற்றிருப்பது. "என்னே.?" உனது பெருமைகளையெல்லாம் எங்ஙனம் உரைப்பேன்...? "இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே" அன்னையை மறப்பது அபிராமிப் பட்டரால் இயலுமா? எக்கணமும் உன்னை மறவாது தொழுவேன் என்று பறைகிறாரே.... துன்பத்தில் இறைவனை நினைப்பது, இன்பத்தில் இறைவனை மறப்பது .. இதுதான் உலகத்தார் வாடிக்கை.. எனவேதான் குந்தி தேவி, கண்ணனிடம் தனக்கு எப்பொழுதும் துன்பங்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டினாள். அத்துன்பங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தால், இறைவனை என்றும் மறவாது தேடிக்கொண்டே இருப்போம் என்பது அவரது கருத்து.. ஆனால் அபிராமிப் பட்டரால் அன்னையை மறப்பது முடியுமா? என்றும் மறப்பதில்லை... ஆயினும் தொழுதல் என்பது வேறு... மறவாதிருத்தல் என்பது வேறு.. அன்னையை மறவாது நினைப்பது மட்டுமே புண்ணியம் தரும் செயலல்ல... நாத்திக அன்பர்கள் தினம் ஒருமுறையாவது "இறைவன் இல்லை" என்று சொல்லி இறைவனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இறைவனின் திருவருள் கிட்டுமா? எனவே தொழுதல் முக்கியம்.. இனிமேல், எக்கணமும் உன்னைத் தொழுது கொண்டேயிருப்பேன் என் அன்னை அபிராமியே... என்று அபிராமிப் பட்டர் மொழிகின்றார்.

பாடல் இருபத்தாறு

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்


காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு


சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்


நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

விளக்கம் : அபிராமித் தாயே... உன்னை என்றும் தொழும் அடியவர் யாரெனில் பதினான்கு உலகையும் படைத்து, காத்து, அழித்துத் தொழில் புரியும் அந்த மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் சிவபெருமான். நறுமணம் வீசும் கடம்பப் பூவினை கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் அழகிய என் அபிராமித் தாயே... மணம் வீசுகின்ற உனது திருவடிகளில் எளியேனான என் நாவிலிருந்து தோன்றிய கீழான சொற்களை சாத்துகிறேன். அக்கீழான சொற்கள் நின் திருவடிகளில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது நல்லதொரு நகைச்சுவை..

"ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்" கடந்த பாடலில் அன்னையின் அடியவர்க்கு திருத்தொண்டு புரிதலைப் பற்றிப் பேசிய அபிராமிப் பட்டர் அவ்வடியவர்களில் சிறந்த மூவரைப் பற்றி இவ்விடம் பேசுகிறார். பதினான்கு உலகையும் படைத்து, காத்து, அழிக்கும் தொழில் புரியும் அம்மும்மூர்த்திகள். நீ அவர்களைப் படைத்தாய்.. அவர்கள் இவ்வுலகினைப் படைத்தனர். அவர்கள் படைத்த உலகோரும் உன்னைத் தொழுகின்றனர். நீ படைத்த அம்மும்மூர்த்திகளும் உன்னைத் தொழுகின்றனர்... மும்மூர்த்திகளும் உனக்கு அடியவர்கள்... "கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே" நறுமணம் கமழும் கடம்பப் பூவினை கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் அழகிய பெண்ணே... " மணம் நாறும் நின் தாளிணைக்கு" மும்மூர்த்திகள் உனக்கு அடியார்கள்.. உன் கூந்தலில் இருப்பதோ நறுமணம் வீசும் கடம்பப் பூ.. நீயோ அழகிற்சிறந்தவள். இது போன்ற பெருமைகளால் மணம் வீசும் உன் திருவடிகளில்..... "என் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே" என் நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் உன் பாதங்களில் ஏற்பு பெற்றிருப்பது நல்ல நகைச்சுவை... இவ்விடத்து தனது நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது அபிராமி அந்தாதியை... நமக்கெல்லாம் அபிராமி அந்தாதியே வேதம்.. அன்னையின் புகழ்பாடும் சிறந்த பாடல் நூல். ஆனால் அதை எழுதிய அபிராமிப் பட்டரோ எளியவன் என் நாவில் இருந்து புறப்பட்ட கீழான வார்த்தைகள் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்.. ஆனால் அதையும் நீ ஏற்றுக் கொண்டாயே... இது சிறந்த நகைச்சுவை என்கிறார். மும்மூர்த்திகளாலும் தொழப் படுபவள் நீ.. அவர்கள் உன்னை என்ன சொல்லித் துதிப்பார்கள்?? நாமறியோம்... தேவாதிதேவர்களெல்லாம் உன்னை என்ன சொல்லித் துதிப்பார்கள்?? நாமறியோம்.. எம் சிற்றறிவுக்கெட்டிய சிறு சொற்களால்,, கீழான சொற்களால் உன்னைத் துதிக்கிறேன்... அதையும் நீ ஏற்றுக் கொள்கிறாயே... இதென்ன நகைச்சுவை... ? என்கிறார். இவ்விடத்து அன்னை அபிராமி எளியோர் சொல்லையும் தம் கவனத்தில் ஏற்கும் கருணையுடைவள் என்ற அவளது பெருமையும், அன்னையைத் துதி செய்ய மிகச்சிறந்த பாடல்களைப் பாடிவிட்டு இதெல்லாம் மிகவும் கீழான சொற்கள் என்று கூறும் அபிராமிப் பட்ட்ரின் எளிமையும் தன்னடக்கமும் இப்பாடலின் மூலம் வெளிப்படுகின்றன..அபிராமிப் பட்டரின் பாடல்களையே அவர் அவ்வாறு சொல்லும்போது, அறியாது விளக்கமளிக்கும் இவ்வடியேனின் சொற்களெல்லாம் எவ்விடம்தான் போகும்?

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம். நன்றி.

1 கருத்து:

Sivamjothi சொன்னது…

"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.

என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!


http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html