புதன், அக்டோபர் 20, 2010

அபிராமி அந்தாதி 27 & 28

பாடல் இருபத்தேழு


உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு


படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே


அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்


துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே



விளக்கம் : அபிராமி அன்னையே... நீ என்னை வஞ்சனை செய்யும் இப்பிறவி நோயை உடைத்தெறிந்தாய். என் உள்ளமெலாம் உன்னையே நினைத்து உருகும் அன்பினைப் படைத்தாய். இந்த யுகத்தில் நின் திருவடித்தாமரைகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியினையே எனக்கு அளித்தாய். என் மனத்துள் உண்டான அழுக்கையெல்லாம் உனது அருளெனும் நீரால் துடைத்தழித்தாய். பேரழகியே... உன் பேரருளை நான் என்னவென்று உரைப்பேன்.

பிறப்பு ஒரு வஞ்சனை என்பது அபிராமிப் பட்டரின் கருத்து.. எனவேதான் பெரும் மகான்கள் எல்லோரும் மீண்டும் பிறவியே வேண்டாம் என்றுரைத்தனர்.. பிறந்த பின்னர் உலகில் பல்வேறு கட்டுக்களால் நாம் கட்டப்பட்டு வஞ்சனைக்குள்ளாகிறோம். ஆசை, ஆணவம், சினம், மாயை இவற்றால் கட்டுண்டு நம் பிறவிப் பயனை மறந்து போகிறோம்... ஆனால் என் அபிராமி அன்னையே.. நீ இவ்வஞ்சனையை உடைத்து என்னைக் காத்தாய். "உள்ளம் உருகும் அன்பு படைத்தனை" உன்னையே எண்ணி உருகிக் கொண்டிருக்கும் அன்பு உள்ளத்தை என்னுள் படைத்தாய்... அன்னையை எண்ணி உருகிக் கொண்டிருக்கும் உள்ளம் அன்பு செய்ய மறுக்குமோ? பின்னர் ஏன் அபிராமிப் பட்டர் இவ்விடத்து உருகும் அன்புள்ளம் என்று குறிப்பிடுகிறார்.? இறைவனை வணங்குதலும், அவனுக்குத் தொண்டு செய்தலும், அவன் ஆலயத்திருப்பணிகளை மேற்கொள்வது மட்டுமே இறைப்பணி என்றாகி விடுமா? உள்ளத்து அன்பு வேண்டாமா? யார் மீது அன்பு வேண்டும்? எல்லார் மீதும் வேண்டும்... அன்னையைத் தொழுவோர், அன்னையை மறுப்போர் என்று அனைவர்பாலும் அன்பு செலுத்தும் உள்ளம் வேண்டும். இறைமறுப்புக் கொள்கையை பரப்பிவந்த பேரறிஞர் அண்ணாவோ "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்" என்றுரைத்தார். "இந்தச் சிறியோரில் யாருக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்" என்றுரைத்தார் இயேசு நாதர். அன்னையை உண்மையாக எண்ணி உருகும் உள்ளத்தில் மட்டுமே இத்தன்மை கொண்ட அன்பு பெருகி வரும்.. அன்னை மேல் அன்பு கொள்ளும் உள்ளம் எல்லார் மீதும் அன்பு செலுத்தும். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றுரைத்த வள்ளலார் உள்ளத்திலுள்ள அன்பு கிடைக்கும். நண்பர்களெல்லாம் ஒரு முறை நவதிருப்பதி ஆலயங்களுக்குச் சென்றிருந்தோம். எங்கும் நிறைந்த அந்த திருமாலை ஓர் ஆலயத்தில் கண்டு (எத்திருப்பதி என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை) மகிழ்ந்திருந்த வேளை, திடீரென யாரோ யாரையோ திட்டும் குரல் கேட்டு கண் திறந்தேன். என்னவென்று நோக்கினால், ஒரு குருக்கள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பெரிய துளசி மாலையைக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்பக்கம் நின்று கொண்டிருந்த விதவைப் பெண்ணொருத்தி தற்செயலாகத் திரும்ப அவளது கரம் அம்மாலை மீது பட்டுவிட்டது.. "நீ எப்படிப்பட்டவள் தெரியுமா? நீ தொட்ட இந்த மாலையை என் பெருமாளுக்கு நான் எப்படி சாத்துவேன்?" என்று கத்த ஆரம்பித்து விட்டார். அந்த பெண்ணோ அழத்தொடங்கி விட்டார்.. நமக்கோ மனமெல்லாம் கோபம் பொங்கி வந்தது.. எல்லோர் மனத்திலும் குடியிருக்கும் பெருமாள் அப்பெண்ணின் மனத்திலும் குடியிருக்க மாட்டானா? எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று வியந்தேன். இதைப் போன்ற நிகழ்வுகளும், பல்வேறு சாதியினருக்கு ஆலயநுழைவு மறுக்கப்பட்ட நிகழ்வுகளுமே இறைமறுப்புக் கொள்கையாளர்களை நம் தேசத்தில் பிறக்கச் செய்தது.. ஆனால் இறைவன் மீது நாம் உண்மையான அன்பு கொண்டிருந்தால், நம் மனத்தில் அனைவர் மீதும் பாராட்ட வேண்டிய உண்மை அன்பு வந்து சேரும்.. இதைப் போன்ற குருக்கள் எத்தனை காலம் பணிசெய்தாலும், அவர்தம் பணியை இறைவன் அன்போடு ஏற்றுக் கொள்வதேயில்லை..

"பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை " நின் திருவடித் தாமரைகளுக்கே பணிசெய்யும் பணியை எனக்கு அளித்தாய்.. எத்தனை பாக்கியம்... ! அன்னையின் திருப்பாதங்களுக்குத் திருத்தொண்டு செய்யும் பணியை மட்டுமே தன் பணியாகக் கொண்டிருந்தார் அபிராமிப் பட்டர். வேறெந்த பணியும் இல்லை.. காலை கண் விழிக்கும் வேளை முதல் இரவு கண் அயரும் வேளை வரை அன்னையைக் காண்பது, அவள் நினைவுகளால் தியானத்தில் மூழ்கியிருப்பது, அவளை அலங்கரிப்பது, அவளைத் தொழுவது என்று என்றென்றும் அவளது திருவடிகளுக்கே திருத்தொண்டு புரிந்து கொண்டிருந்தார். அதனை சற்றே கர்வத்தோடு இவ்விடத்து உரைக்கிறார்.

"நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை" என் மனம் பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்தது.. கோபம், வஞ்சகம், பொறாமை, காமம், களவு, .... இன்னுமிது போன்ற பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்த என் மனத்தை நீ உன் அருளென்னும் நீரால் துடைத்து அழித்தாய்.. அன்னையின் அருள் மனத்துள் வந்துவிட்டால், அவ்விடம் குடிகொண்ட கசடுகள் மாயமாகி விடும்.. இதுவே அன்னை தரும் பேரருள்..

பேரழியே.. உன் பேரருளை என்னவென்றுரைப்பேன்.. !? அவள் பெருமையெல்லாம் சொல்லிவரும் அபிராமிப் பட்டருக்கு அன்னையின் அருளாட்சியால் அவளது பல்வேறு பெருமைகள் நினைவுக்கு வருகின்றன. இத்தனைதான் சொன்னோம்...இன்னும் சொல்லவேண்டியன பல உள்ளனவே... அன்னையே... இதனை நான் எங்ஙனம் உரைப்பேன்.! என்று வியந்து பாடுகிறார்..

பாடல் இருபத்து எட்டு

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்


புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்


அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்


செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

விளக்கம் : சொல்லோடு எங்ஙனம் அதன் பொருள் கூடி வருகின்றதோ, அதைப் போன்று ஆனந்த நடனமாடும் உனது துணைவரான ஈசனோடு இணைந்து ஓருடலாய் நிற்கும் நறுமணம் வீசக்கூடிய பூங்கொடியைப் போன்றவளாகிய அபிராமி அன்னையே... அன்றலர்ந்த மலரைப் போன்ற உன் திருவடிகளை இரவும் பகலும் எப்பொழுதும் தொழும் அடியவர்களுக்கே, அழியாத அரச போகமும், முக்தி நிலைக்குச் செல்லவேண்டிய தவநெறிகளும், அதன் பயனான சிவலோக வாழ்வும் கிட்டும்.

"சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே." பொருளற்ற சொற்கள் சொற்களில்லை.. சொல்லெனச் சொல்ல வேண்டுமெனில் அச் சொல்லிற்குப் பொருள் வேண்டும். ஈசனைச் சொல் என்று சொன்னால் நீயே அதன் பொருள்.. சொல்லும் பொருளும் எவ்வண்ணம் இணைந்தே இருக்கின்றனவோ அதைப் போன்று ஆனந்த நடனமாடும் நின் துணைவரான ஈசனுடன் என்றென்றும் இணைந்து ஓருடலாய் நிற்கும் நறுமணம் வீசும் பூங்கொடியைப் போன்ற என் அபிராமி அன்னையே...

"நின் புதுமலர்த் தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே" இன்று மலர்ந்த புத்தம்புது மலரினைப் போன்று தோன்றும் உனது திருவடிகளை அல்லும் பகலும் தொழுகின்ற அடியவர்களுக்கே.... பல பாடல்களில் அன்னையின் திருவடியைத் தாமரை மலருக்கு ஒப்பிட்டு வந்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவை புது மலரினை ஒத்தவை என்பது சிறப்பு.. புத்தம் புது மலர் எவ்வாறு இருக்கும்? என் அன்பு மகளைக் காணும்போது இவ்வெண்ணமே என் மனத்துள் தோன்றியது.. தலை முதல் பாதம் வரை அத்தனையும் புதுத் தளிரைப் போன்றது... அத்தனை மென்மையாக இருக்கின்றது.. என் மனைவியிடம் கூட "எவ்ளோ அழகா செஞ்சிருக்காங்க பாரு" என்று சொல்லி சொல்லி வியந்தேன்.. எல்லாமே புதிதாய்க் காணும்போது அழகுதான். மென்மைதான்.. அன்னை அபிராமியின் பாதங்கள் புத்தம் புது மலரினைப் போன்று அபிராமிப் பட்டருக்குத் தோன்றுகிறது... அப்படிப் பட்ட உன் பாதங்களை இரவென்றெண்ணாது, பகலென்றெண்ணாது எந்நேரமும் தொழுகின்ற அடியவர்களுக்கு....

என்னவெல்லாம் கிட்டும்? அழியாத அரசு... எல்லா அரசுகளும் ஓர்நாள் அழிந்து விடும்.. (இன்றைய மொழியில் கவிழ்ந்துவிடும்.. !!!!) பாண்டியப் பேரரசு, சோழப் பேரரசு, சேரப் பேரரசு என்று தமிழகத்தை ஆண்ட அரசுகளும் சரி, உலகையே ஆளப் புறப்பட்ட ஆங்கிலேய அரசும் சரி... எத்தனை பெரிய சக்தி படைத்த அரசுகளும் ஓர் நாள் அழிந்தே போய்விடும்... ஆனால் அழியாத அரசு என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது யாது?? அது ஆன்மீகத்தால் உள்ளத்தை ஆளுகின்ற அன்பு அரசு.. இன்றைக்கும் நம் உள்ளங்களையெல்லாம் ஆண்டுகொண்டிருக்கக் கூடிய அபிராமிப் பட்டருக்குக் கிடைத்த உன்னத அரசு...

வேறென்ன கிட்டும்? செல்லும் தவநெறி.. எங்கே செல்வதற்கான தவநெறி.? இறப்புக்குப் பின்னான உலகு சொர்க்கமா? அல்லது நரகமா? என்பதைத் தீர்மானிப்பவை நாம் செய்யும் புண்ணிய பாவங்களே.. எனவே நல்லுலகமான சொர்க்கத்துக்குச் செல்வதற்குரிய அரும்பணியான தவநெறிகள் அன்னையைத் தொழுவோர்க்கு வந்து சேரும்.

வேறு? சிவலோகம்... அம்மையுடன் அப்பன் அருளாட்சி செய்யும் சிவலோகத்தில் வாழக்கூடிய வாய்ப்பு.. சிவலோக பதவியடைந்தார் என்று நாம் மரித்த பின்னர் நமது நினைவிடத்தில் கல்வெட்டில் எழுதிவைத்தால் மட்டும் சிவலோக பதவி நமக்குக் கிட்டிவிடுமா? இல்லவே இல்லை... அன்னையின் கருணை நமக்குக் கிட்டினால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அறிந்தோர் தயவு செய்து மடல் எழுதுங்கள். மீண்டும் சந்திப்போம் நன்றி...

கருத்துகள் இல்லை: