புதன், அக்டோபர் 13, 2010

அபிராமி அந்தாதி 13 & 14

பாடல் பதின்மூன்று
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

விளக்கம் : பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்த அபிராமித்தாயே... ! அப்பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்த வண்ணம் காத்து வருபவளே... பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொண்டவளே... நீலநிறங்கொண்ட கழுத்தினையுடைய சிவனுக்கும் மூத்தவளே... என்றென்றும் இளமையாகக் காட்சியளிக்கும் கண்ணனுக்கும் இளையவளே.. மாபெரும் தவம் செய்பவளே... உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவது முடியுமா????
கடந்த பாடலில் ஏழுலகையும் பெற்றெடுத்தவளே என்று அபிராமியன்னையை விளிக்கும் அபிராமிப் பட்டர் இப்பாடலில் புவனங்கள் பதினான்கையும் பெற்றெடுத்த தாயே... என்று விளிப்பது சற்றே முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.. நமது சிற்றறிவுக்குத் தோன்றிய சிறு விளக்கத்தை இவ்விடத்துத்தந்துள்ளேன்... அன்பர் மோகனரங்கம் போன்ற பெரியோர் இது தவறெனில் திருத்தி, சரியான கருத்தைப் பதிவிடுக (வலைப்பதிவிலும்தான்...) நாம் சிறுவயதில் பள்ளியில் பயிலும் நேரத்தில் கதை சொன்ன பெரியோர்களெல்லாம் ஏழு என்ற எண்ணைக் கணக்கில் கொண்டனர். ஏழு கடல், ஏழு மலை... என்றெல்லாம் இளவரசியைத் தேடும் கதைகள் அவை... அவை போல் அச்சமயத்தில் மாந்தர் வாழும் பூவுலகம் ஏழு என்ற கணக்கு வழக்கில் வழக்கில் இருந்தது.. மேலும் அமரலோகம் ஏழு என்ற கணக்கும் வழக்கில் இருந்திருக்கலாம் என்பது நமது கணிப்பு... எனவேதான் மாந்தர் வாழும் ஏழுலகையும் படைத்தவளே என்று கடந்த பாடலில் குறிப்பிடும் பட்டர்... இவ்விடத்து மாந்தர் வாழும் பூலோகம் ஏழு, அமரர் வாழும் தேவலோகம் ஏழு என்று கருதி புவனங்கள் பதினான்கையும் பெற்றெடுத்த தாயே... என்று பாடியிருக்கலாம்... இது எமது ஒரு கணிப்புதானேயன்றி, இதைத்தாண்டி விளக்கமளித்திட தேர்ந்த வேத ஞானம் எமக்கு இல்லை... அறிந்தோர் பெரியோர் அறிவித்தால் அறிந்து கொள்வோம்.... (ஈரேழுலகும் எனக்குறவாக... கந்தர் சஷ்டி கவசம்)
பூத்தவண்ணம் காத்தவளே... ஈரேழு பதினான்குலகையும் எங்ஙனம் பெற்றெடுத்தாயோ... அவ்வண்ணவமே காப்பவளே.... முன்னர் ஒரு பாடலில் குறிப்பிட்டது போல் உலகைக்காக்க நஞ்சுண்டு, தமது கழுத்து நீல நிறமானதால், திருநீலகண்டர் எனப் பெயர் பெற்ற சிவபெருமானுக்கும் மூத்தவளே.... அவ்விடத்துச் சொல்ல மறந்ததொரு செய்தியை (?) இவ்விடத்துத் தருகிறேன்... கல்லூரி பயிலும்போது மொழிப்பாடத்தில் கோளறு திருப்பதிகத்தின் "வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்.." எனும் பாடல் இருந்தது... இதற்கு விளக்கமளிக்கும்போது எமது தமிழாசிரியர் திரு. பெரியநாயகம் ஜெயராஜ் ஒரு தமாசான செய்தியைக் கூறினார். வேடிக்கைக்காக மட்டுமே.. சிவனையும் சக்தியையும் இன்றைய தம்பதியருக்கு ஒப்பிட்டுக் கூறினார் ஒரு முறை சிவனுக்கும் சக்திக்கும் ஏதோ கருத்து வேறுபாடு... அவ்வமயம் சிவனை சக்தி துரத்தி கொண்டு வர (அதே சமயம் அங்கே பாற்கடலைக் கடைந்த விடம் துரத்திவர அமரர்களும் அசுரர்களும் சிவலோகத்தை நோக்கி ஓடி வர... ) அவ்விடத்து வந்த நஞ்சைக் கையால் அள்ளி சக்தியின் தொல்லையிலிருந்து மீண்டு விடலாம் என்று குடித்து விட்டார். நின்று விட்டார். இதையறியாத அன்னையோ... சிவனை மாய்த்துவிட அவர் கழுத்தை நெறித்தாள்... இதனால்தான் அந்த நஞ்சு அவ்விடத்து நின்று சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற அழகியதொரு பெயரைப் பெற்றுத் தந்தது....விடமும் ஒழிந்தது. அனைவரும் காப்பாற்றப் பட்டனர்... சக்தியும் சிவனும் சிரித்து மகிழ்ந்தனர்... என்று குறிப்பிட்டார்...
ஆக அப்படிப்பட்ட சிவனுக்கும் மூத்தவள் என் அபிராமி அன்னை என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர் (பலமுறைக் குறிப்பிட்ட செய்திதான்... அன்னை சக்தியே அகிலத்தைப் படைத்தாள்.. அவளே ஆதிசக்தி என்பது சக்தி வழிபாடு செய்வோரின் கருத்து).
என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே... இவ்விடத்துப் பாருங்கள்... என்றும் ஆனந்தமளிக்கும் திருநாமத்தைக் கொண்ட கண்ணபிரானை நினைவூட்டுகிறார். ஊழிக்காலத்து உலகம் அழியும் வேளையில் கண்ணபிரான் சிறு குழந்தையாக ஆலிலையில் மிதந்து வருவார் என்பது வைணவர்களின் நம்பிக்கை... எனவே என்றென்றும் இளமையாகத் தோற்றமளிக்கும் முகுந்தனுக்கு மலைமகள் தங்கைமுறையாவாள்... எனவேதான் என்றும் மூப்பெய்தாத முகுந்தனுக்கு இளையவளே... என்று விளிக்கின்றார்...
இவ்விடத்தும் ஒரு முரண்பாடு... சிவனுக்கு மூத்தவளாம், முகுந்தனுக்கு இளையவளாம்... எப்படி இது திண்ணம்?? என்று வினவுவோர் உண்டு... மீண்டும் பழைய பல்லவிதான்... ஆதிசக்தியே அகிலத்தைப் படைத்தாள்... மும்மூர்த்திகளைப் படைத்தாள். அவர்களுக்குத் துணையாகத் தாமே முப்பெருந்தேவியராக உருவெடுத்தாள்...புரிந்ததல்லவா???
மாத்தவளே... மா தவம் புரிபவளே.... மாபெரும் தவ வலிமை கொண்ட என் அபிராமி அன்னையே.... உனைவிடுத்து வேறொரு தெய்வத்தை நான் வணங்க முடியுமா??? உன்னை மட்டும்தான் வணங்க இயலும் என்று இப்பாடலை முடிக்கிறார் அபிராமிப் பட்டர்...

பாடல் பதினான்கு
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே
விளக்கம் : எங்கள் பிராட்டியான அபிராமி அன்னையே... என்றும் உன்னை வணங்கும் தேவர்கள், அரக்கர்கள் . உன்னை என்றும் தியானத்தில் கொண்டு திசைகொரு முகம் கொண்டிருக்கும் பிரம்மன், நாராயணன், உன்னைத் தன் அன்பால் பந்தமெனக் கொண்ட என்றும் அழிவில்லாத பரமானந்தரான பரமசிவன் இவர்களெல்லாம் தவமிருப்பது உன்னைத் தரிசனம் செய்வதற்காகத்தான். உன் கருணையைப் பெறுவதற்காகத்தான்... ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த பூவுலகில் உன்னை வணங்கித் தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது வியப்பிற்குரியது.
அன்னையே.. அபிராமித்தாயே... பார்... அமரர் அனைவரும் உன் கருணையைப் பெற்வதற்காக உன்னை எண்ணித் தவமியற்றுகின்றனர். அவர்களைப் போலத்தான் அசுரகுலத்துதித்தோரும் உன் கருணைக்காகக் காத்திருக்கின்றனர். சிந்திப்பவர் நற்றிசை முகர்... என்றென்றும் உன்னை எண்ணியே தியானம் செய்யும் நல்திசை முகர்... நான்கு திசைகளுக்கும் ஓரொரு முகமாகக் கொண்ட நான்முகர் பிரம்மரும் உன் கருணைக்காகத்தான் காத்திருக்கின்றார்... காத்தற்கடவுளான அத்திருமாலும் காத்திருப்பது உனது அருளுக்காகத்தான். தனது அன்பால் உன்னைப் பந்திப்பவர்... கட்டிப் போடுபவர்... என்றும் அழியாப் பரமானந்தரான பரமசிவனும் உன்னருளைப் பெறக் காத்துக் கிடக்கின்றார்.. ஆனால் இவர்களையெல்லாம் விட இந்தப் பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு - உன்னைத் தரிசனம் செய்வோருக்கு...வணங்குவோருக்கு.... எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே... மிக எளிதாக உன் கருணை கிடைக்கின்றது எங்கள் பிராட்டியான அபிராமியே....
காணுங்கள்.. யாருக்குமே கிடைத்திடாத அருமையான தேவியின் கருணை இவ்வுலகில் பிறந்த மாந்தருக்குக் கிடைப்பதை எண்ணி அபிராமிப்பட்டர் வியப்பதை....! அதுதான் அபிராமி அன்னையின் பெருங்கருணை... அவள் அருளைப் பெறுவதற்கு மந்திரங்கள் செபிக்க வேண்டாம்... மறைகள் ஓத வேண்டாம்... விரதங்கள் காக்க வேண்டாம்... அன்னையின் திருநாமத்தையே மனத்தில் தியானித்து அவளது உருவைத் தரிசித்தாலே போதுமானது.. அவளது கருணை மிக எளிதில் நமக்குக் கிடைத்துவிடும்... இது அபிராமிப் பட்டரின் வாக்கு... நாமும் நம் மனத்தில் இவ்வழகிய நவராத்திரி நாட்களில், அன்னையைத் தியானித்து அபிராமி அந்தாதியைப் பாடி அவள் அருளைப் பெறுவோமாக...
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்... நன்றி... தங்களது மேலான கருத்துக்களைப் பின்னூட்டம் இடுங்கள்... எங்கேனும் நமது விளக்கத்தில் தவறு இருப்பின், தயவுசெய்து தெரியப் படுத்துங்கள்.. திருத்திக்கொள்ளலாம். நன்றி...

கருத்துகள் இல்லை: