திங்கள், அக்டோபர் 11, 2010

அபிராமி அந்தாதி 9 & 10

பாடல் ஒன்பது
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே
விளக்கம்
எமது தந்தையான சிவபெருமானின் கண்ணாகவும், கருத்தாகவும் இருப்பவளே... (இவ்விடத்து கரிய நிறங்கொண்டவளே என்றும் பொருள் பகர்வோர் உண்டு) வண்ணம் நிறைந்த பொன்மலையான மேருமலையைவிட பெரிதானதும், தாயைச்சிறிது நேரம் பிர்ந்து அழுத திருஞானசம்பந்தனுக்கு பாலை வழங்கியதுமான பாரமாகிய உனது திருமுலைகளுடனும் அதில் படரும் நீ அணிந்துள்ள மாலைகளுடனும் செம்மையாகிய உனது திருக்கரத்தில் நீ ஏந்திய வில்லுடனும், அம்புடனும் உன் அழகிய புன்னகையுடன் என் முன்னே வந்து காட்சியளித்திடுவாய் என் அபிராமித் தாயே...
கருத்தன எந்தைதன் கண்ணன... இப்பதத்திற்கு விளக்கமாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறுவதுண்டு. கரிய நிறங்கொண்ட துர்க்கையே... என் தந்தையான சிவனின் கண்ணாக இருப்பவளே என்றும் பொருள் பகர்வர். உலகின் தாய் அல்லவா என் அபிராமித் தாய்... உலகில் படைக்கப்பட்ட அனைந்து மைந்தர்களுக்கும் பால் வழங்கும் அன்னையின் திருமுலைகள் மிகவும் பெரிதானது என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். அது எவ்வளவு பெரிதென்றால் மேருமலையை விட மிகப் பெரிது... அவளை லோகமாயா என்றும் மகாமாயே என்றும் வணங்குகின்றனர். ஏழைகளும், குடிசைகளில் வாழ்பவர்களும், மகமாயி என்று விளிக்கின்றனர். மகமாயியோ, மகாமாயேயோ... அன்னையவள் உலகின் தாய்... அழுகின்ற பிள்ளைகட்கு ஓடிவந்து அருட்செய்யும் உமையவள்.. அதனால்தான் அன்று பசித்து அழுத திருஞானசம்பந்தனுக்குத் தானே நேரில் வந்து தனது திருமுலைகளால் அமுதூட்டினாள்.. அத்தகைய பாரம் நிறைந்த உனது திருமுலைகளுடனும், அதில் படரும் உன் கழுத்தில் நீ அணிந்த மாலைகளுடனும், உனது செம்மைத் திருக்கரத்தில் நீ ஏந்தும் வில்லுடனும், அம்புடனும் அழகிய புன்னகையுடனும் நீ வந்து என் முன்னே காட்சியளித்திடுவாய் என்று அன்னையை அழைக்கின்றார் அபிராமிப் பட்டர். அன்னையின் புன்னகையைப் பற்றி அவர் செய்த வர்ணனை ரசிக்கத் தக்கது. முருத்தன மூரலும்.... மொட்டொன்று விரிவதைப் போன்ற புன்னகை... அன்னையே... நீ வாய் மூடி நிற்கும்போது உனது அதரங்கள் அழகிய மொட்டைப் போன்று காட்சியளிக்கின்றன... நீ புன்னகை சிந்தும்போது... அம்மொட்டு மலராக விரிவதைப் போன்று அழகாகக் காட்சியளிக்கிறது தாயே... என்று அன்னையைத் தன் முன் வந்து காட்சியளிக்குமாறு அழைக்கின்றார்.... எத்தனை அழகிய கற்பனை வளம் காணுங்கள்... கண்கள் மூடி அந்த அபிராமி அன்னையை இப்பாடல் பாடி அழைத்துப் பாருங்கள். உங்கள் குரல் கேட்டு அன்னை ஓடோடி வந்து உங்கள் சிந்தையில் புகுவாள்...
பாடல் பத்து.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

விளக்கம்
அருளே வடிவான உமையவளே... அபிராமித் தாயே... அன்று இமயத்து அரசன் இமவான் பெற்றெடுத்த செல்வமே... எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே... நான் நிற்கும் பொழுதும், அமரும் பொழுதும், கிடக்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், எல்லா நிலைகளிலும் நான் நினைப்பது உன்னைத் தான்.... நான் வணங்குவதோ உனது மலர்ப்பாதங்களையே...
இமவான் செய்த பேறு அவனுக்கு உமையவள் மகளாகப் பிறந்தது. ஆகையால்தான் அவள் மலைமகளென்று பெயர் பெற்றாள். மலையரசன் பெற்றெடுத்த மலைமகளே... என்று அபிராமிப் பட்டர் அன்னையை விளிக்கின்றார். எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே.... வேதங்கள் எழுதப் பட்டவை, செவி வழி நின்றவை என்ற இருபெரும்பிரிவுகளாகத் தென்படுகின்றன. (இவற்றைப் பற்றிய அறிவு எமக்கு அதிகம் இல்லை.. அறிந்தோர் எழுதுங்கள்..) தாயானவள் எழுதிய மறைக்கும் எழுதப் படாத மறைக்கும் மூலமானவள்... இவ்விடம் எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே.. என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது... அந்த வேதங்கள் அல்ல என்று நான் கருதுகிறேன்... என்றும் எழுதாத மறைபொருள் அன்னையின் திருநாமமே... அந்தண குலத்திற்பிறந்து அன்னைக்குரிய மந்திரங்கள் ஓதுவோரை மட்டும்தான் அன்னை காத்தருள்கிறாளா?? இல்லவே இல்லை.. யாரொருவர் அவள் திருநாமத்தை கொச்சைமொழியில் உச்சரித்தாலும் ஓடிவந்து அருள்வது அன்னையின் பெருங்கருணை அல்லவா?? அத்தகைய எழுதா மறையில் ஒன்றியிருக்கும் அன்னையே... அரும்பொருளே என்று அன்னையை அபிராமிப் பட்டர் அழைக்கின்றார்.. அழியாத முக்திநிலையானவளே..... நான் நிற்கும் போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் அமரும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் படுத்திருக்கும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் நடக்கும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். என்று தனது எல்லா நிலைகளிலும் அன்னையின் நினைவுகளே தன் சிந்தையில் குடிகொண்டிருப்பதாக அபிராமிப் பட்டர் தெரிவிக்கின்றார். மேலும் நான் என்றென்றும் வணங்குவது உன் மலர் போன்ற பாதங்களைத்தான்..... அன்னையே..... எனக்கு அருளிச்செய்....... என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர். தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.. நன்றி..

கருத்துகள் இல்லை: