சனி, அக்டோபர் 09, 2010

அபிராமி அந்தாதி


தொடர்ந்து விளக்கங்களைக் காணலாம்..
பாடல் ஐந்து.
பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே

விளக்கம் :
மூன்று நிலைகளிலும் பொருந்தியிருப்பவளே, புகழுரை செய்வதற்கேற்ற அழகுடன் கூடிய முலைகளும், அதன் பாரத்தால் வருந்துவது போன்ற மெல்லிய இடையும் கொண்ட மனோன்மணியே... நீண்ட சடையைக் கொண்ட சிவபெருமான் அன்று அருந்திய நஞ்சினை அமுதமாக்கிய அம்பிகையே... தாயே அபிராமியே... அழகிய தாமரை மலர் மீது மிக அழகாக அமர்ந்திருக்கும் தாயே... ஆதியும் அந்தமுமானவளே... உன் திருவடிகளை என் தலைமேல் ஏற்கிறேன்...
எத்தனை அழகிய வரிகள் காணுங்கள்...
முப்புரைக்கும் பொருந்தியவள்... என்ற சீர்களைக் காணுமிடத்து... எம்முப்புரை எனும் வினா எழுகிறது... எல்லாவற்றையும் நாம் அதிக இடங்களில் மூன்றாகக் காண்கிறோம்.. பிரம்மா, திருமால்., சிவன் ஆகிய மும்மூர்த்திகள், கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியர்கள், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்கள், கடந்த காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்கள். இவ்வாறு பல மூன்று நிலைகளைக் காண்கிறோம்... இதில் அம்மை அபிராமி எம்மூன்று நிலைகளுக்கும் பொருந்தியவள்...??? அபிராமிப் பட்டருக்கு மட்டுமல்ல... நமக்கும் தெரிந்த உண்மை அதுதான்... அன்னை அபிராமி எல்லா மூன்று நிலைகளுக்கும் பொருந்தியவள். அல்லது அவற்றைத் தனக்குள்ளே அடக்கியவள் என்று பொருள் கொள்ளலாம். பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, சிவ சக்தியாக நிற்பவளும் அவளே... முப்பெருந்தேவியராகி அவர்கட்குத் துணை நிற்பவளும் அவளே. படைப்பவளும் அவளே... காப்பவளும் அவளே... அழிப்பவளும் அவளே... முக்காலத்திலும் பூலோக மாந்தர்க்குத் தெய்வமாய் இருப்பவளும் அவளே...அதைத்தான் அபிராமிப் பட்டர் "பொருந்திய முப்புரை" என்று ஒரே சொல்லில் குறிப்பிடுகின்றார்.
"செப்புரை செய்யும் புணர் முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி.." புகழ்ந்து பாடக்கூடிய அழகுடன் கூடிய முலைகளின் பாரத்தால் வருந்தும் மெல்லிய இடையக் கொண்ட மனோன்மணித் தாயே... என்பது இதன் பொருள்... ஒருமுறை நமது நண்பர் ஒருவர் எழுப்பிய வினா இது..."ஒரு தெய்வதத்தைப் பக்தன் இப்படிப் புகழலாமா? இதைப் போன்ற அங்க வர்ணணை செய்யலாமா?" என்று.. ஒரு ஆபாசக் கதையைப் படிக்கும்போது இதைப் போன்ற வரிகளால் அல்லது இதைப் போன்ற அங்க வர்ணனைகளால் நம் மனத்தில் ஏற்படும் உணர்வுகளுக்கும், அபிராமி அந்தாதியைப் படிங்குங்காலை நம் மனத்தில் எழும் உணர்வுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கவனித்துப் பாருங்கள்.. ஓர் அரசனை அவன் தரும் பொருளுக்காகப் புகழும் புலவனே என்னென்னவோ கற்பனை செய்து பாடுகிறான்.. ஆனால் உலகையாளும் லோக மாயா அன்னை அபிராமியைத் தன் கண்குளிரக் கண்ட அபிராமிப் பட்டரால் அவளை அவள் அங்கங்களை வர்ணணை செய்யாது இருக்க இயலுமா?? கண்களை மூடி இப்பாடலைத் தியானித்துப் பாருங்கள்... அன்னையின் அழகிய உருவமே தோன்றுமன்றி அவ்விடம் காமத்திற்கிடமில்லை.
"வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை" கடந்த பாடல்களிலும் சரி இந்தப் பாடலிலும் சரி அபிராமிப் பட்டர் சிவபெருமானை நினைத்தருள அவரது நீண்ட சடைகளை நினைவு படுத்துகிறார். நீண்ட சடைமீது அவருக்கிருந்த காதலோ..?? அமரர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவால் அவர்கள் கடைந்த பாற்கடலில் இருந்து நஞ்சு வெளிப்பட்டதல்லவா?? அவ்வமயம் உலகம் அழியும் நிலை ஏற்பட்டது.. அந்தக் கொடிய நஞ்சின் வலிமையை யாராலும் தாங்கிங்க் கொள்ள இயலவில்லை.. அனைவரும் கயிலை சென்று அப்பனை வழிபட்டனர். பக்தர்கள் குறை கண்டு பொறுப்பாரா ஈசன்? உடனே எழுந்து அந்நஞ்சைத் தம் கைகளில் எடுத்துக் குடித்து விட்டார். "ஐயஹோ... இதென்ன சோதனை... உலகைக் காக்க பரம்பொருள் நஞ்சருந்தி விட்டாரே... அவருக்கு என்ன ஆகுமோ?" என்று எண்ணிய உமையவள் தனது திருக்கரங்களால் அவரது கழுத்தைப் பிடிக்க அக்கொடிய நஞ்சி அவ்விடமே தங்கிற்று.. சிவனுக்குப் புதியதோர் அணிகலனாக, பாம்பாக அது கிடைத்தது. மேலும் அந்நஞ்சின் பாதிப்பால் அவரது கழுத்து நீல நிறமாக மாறித் திருநீலகண்டன் என்ற புதியதொரு பெயரும் வழக்கில் வந்தது. அப்பெருமைக்குக் காரணமான அம்பிகையே... அபிராமித் தாயே.. என்கிறார் அபிராமிப் பட்டர்.
"அம்புயமேல் திருந்திய சுந்தரி" நீரில் மீது காணப்படும் அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் சுந்தரியே... பேரழகியே.... தான் காணும் பெண்டிரையெல்லாம் அன்னை அபிராமியாகக் கண்டது அபிராமிப் பட்டரின் சிறப்பு.. அப்படிக் கண்ட பெண்டிரிலெல்லாம் அபிராமியே பேரழகி என்று குறிப்பிடுகிறார்.
"அந்தரி பாதம் என் சென்னியதே" ஆதியும் அந்தமுமான என் அபிராமித் தாயே... உன் பாதங்களை என் தலைமேல் அணிகிறேன்... அத்தனை பணிவு.... பாடலை முழுதும் படித்துப் பாருங்கள். நண்பர் எழுப்பிய வினா ஞாயிறு கண்ட பனி போல் காணாது ஓடிவிடும்..

பாடல் ஆறு
சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

விளக்கம் :
செந்தூர வண்ணங்கொண்ட அழகிய என் அழகிய அபிராமித் தாயே... தாமரை மலர் போன்ற அழகுடைய உன் பொற் பாதங்களை எப்போதும் என் தலைமேல் வைத்துள்ளேன்.. எப்பொழுதும் என் சிந்தையில் நிலைத்திருப்பது உனது திருமந்திரமே... நான் எப்போதும் கூடியிருப்பது உன் அன்பர்களையே... எமது செயல்கள் அவர்களை முன்னிட்டே நிகழ்கின்றன. நாள்தோறும் நான் முறையாகத் தவறாது படிப்பது உனது மேலான ஆகம வழிமுறைகளையே...
தாயே... என் தலையைப் பார்... உனது அழகிய பொற்தாமரைப் பாதங்கள் அவ்விடத்து உள்ளன... அன்னையின் பாதங்களை சிரத்தில் கொள்வது எத்தகைய புண்ணியம்... கடந்த பாடலில் உனது திருவடிகளை என் தலைமீது ஏற்கிறேன் என்றுரைத்த அபிராமிப் பட்டர், இப்பாடலில் என் தலை மீது எப்போதும் உன் பொற்பாதங்களை வைத்திருக்கிறேன் தாயே எனக் குறிப்பிடுகின்றார். மேலும் எனது சிந்தையுள்ளே எப்போது நிறைந்திருப்பது உனது திரு மந்திரம்தான். உன் புகழ் பாடும் மந்திரங்கள் தவிர எனக்கு வேறு மந்திரங்களே தெரியாது தாயே... பார் என் சிந்தைகளைப் பார்.. அவை உனது திருமந்திரங்களால் நிறைந்திருக்கின்றன. அவையே எனது வாயின் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. செந்தூர வண்ணங்கொண்ட அழகிய பெண்ணே... என் அபிராமித் தாயே... இங்கே பார்... நான் கூடியிருப்பது உன் அடியார்களிடம் மட்டும்தான்... அவர்களை முன்னிட்டே நான் செயல் புரிகின்றேன்... இதனை வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம்.. அன்னையின் அடியார்கள் மட்டுமே அபிராமிப் பட்டரைக் கூடியிருப்பார்கள். அறியாதோர் அவரைப் பித்தரென்று இகழ்ந்து கொண்டல்லவா இருந்தார்கள்... எனவே அவர் கூடியிருந்ததெல்லாம் அன்னையின் அடியார்க் கூட்டத்தோடுதான்.. அவர் செய்த செயல்களெல்லாம் அவர்களை முன்னிட்டு அன்னையின் புகழ் பாடும் செயல்கள்தான்... பின்னர் எதற்காக அவர் தன்னை நிருபிப்பதற்காக சரபோஜி மன்னரிடம் நிலவைக் கொண்டுவருவேன் பிரயத்தனம் செய்ய வேண்டும்..? அங்கும் வெளிப்பட்டு நின்றது அன்னையின் திருவருள் அல்லவா?? பக்தன் தனது பக்தியை வெளிப்படுத்துகிறானோ இல்லையோ... அன்னையானவள் உண்மைப் பக்தனின் பக்தியைப் பாரறியத் தானே வெளிப்படுகிறாள்.. தன்னை வெளிப்படுத்தி நிலவினைக் காட்டிய அபிராமியின் கதை அனைவரும் அறிந்ததுதான் அல்லவா?? அந்தக் கதையை அன்னைத் தன்னை வெளிப்படுத்திய பாடல் வரும் வேளை காண்போம். இங்கே பாருங்கள்... அபிராமிப் பட்டர் தன் செயல்களெல்லாம் அன்னையின் அன்பர்களை முன்னிட்டே நடைபெறுவதாகக் கூறுவது அவரது பரந்த பக்தியினைக் காட்டுகிறது. மேலும் அவர் குறிப்பிடுவது தான் முறையாகக் கற்கும் அன்னையின் ஆகம விதிகளை... தாயே... அபிராமியே... நான் நாள்தோறும் படிப்பது எல்லாவற்றிற்கும் மேலான உனது ஆகம நெறிமுறைகளையே....
இன்று இருபாடல்கள். மொத்தம் ஆறு பாடல்களைப் பார்த்திருக்கின்றோம்.. இந்த ஆறு பாடல்களையும் தினமும் தவறாது படியுங்கள்... விளக்கத்தில் ஏதேனும் பிழையிருப்பின் தயவு செய்து தெரியப் படுத்துங்கள். மீண்டும் தொடரும் பாடல்களின் விளக்கங்களோடு நாளை சந்திப்போம்...

2 கருத்துகள்:

Jeeva Jagadesh சொன்னது…

Good Kanthaswamy Nice to read abirami anthathi with explanation. Good Work keep it up

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

Thanks Jeeva Jagadesh.