வெள்ளி, அக்டோபர் 15, 2010

அபிராமி அந்தாதி 17 & 18

நண்பர்களே... அடுத்த பாடல்களைப் பார்ப்பதற்கு முன் சில துளிகள்...

இன்று துர்காஷ்டமி.. இன்றைய தினம் வாழும் கலை ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன்.. எங்கள் ஆசிரமத்தின் மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுவது நவராத்திரி தினங்களே... அதிலும் துர்காஷ்டமி அன்று நடைபெறும் மஹா சண்டி யாகத்தைக் காணவரும் கூட்டம் அதிகம். கடந்த வருடம்தான் முதன்முறையாக அந்த யாகத்தைக் காணும் பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது. எனவே இந்த ஆண்டும் கலந்து கொண்டேன்.. சக்திப் பிரவாகத்தைக் கண்டேன்.. யாகத்தை நிறைவு செய்யும் வேளையில் அன்னையின் சக்தி அவ்விடம் குருதேவர் வடிவில் தாண்டவமாடுவதைக் கண்டு அடியேனின் கண்களில் கண்ணீர்... அபிராமிப் பட்டரின் "நான் முன் செய்த புண்ணியம் எது என் அம்மே!" என்ற வரிகளே என் மனத்தின் முன் நின்றன.. நாம் செய்வதெல்லாம் அயோக்கியத்தனம். ஆயினும் இக்கடையேனையும் கடைத்தேற்ற அன்னையே நின் திருவருளைக் காணும் பாக்கியத்தைத் தந்தருள் செய்தாயே... என்ற நினைவு வந்தபோது அழுகையைக் கட்டுப் படுத்த இயலவில்லை... குருதேவர் உருவில் அன்னைத் தன் திருக்காட்சியைக் காட்டி விட்டுச் சென்று விட... அன்னையே... நின் பேரருளைக் கண்டபின் ஏது வேண்டும்..? நின்னடியாரோடு கூடி இன்று நின்னருளைக் கண்டேனே... அம்மையே...என்று பாடிக்கொண்டே இருந்தேன்... இறுதியில் கும்பத்தை வேத பாடசாலையின் முதல்வர் திருமிகு. சுந்தரேச ஐயர் தன் தலைமீது சுமந்து சுற்றி வந்த போது சக்தியின் திருவருள் அவர் மீதும் வந்தாடியது.. அதைக் காண்கையில் எனக்கு அவ்விடம் காளியே நேரில் ஆடிச்செல்வது போல் தோன்றியது... இன்றைய தினத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... "புண்ணியம் செய்தனமே மனமே" என்ற பட்டரின் வரிகளைத் திரும்ப திரும்ப எனது நா உச்சரித்துக் கொண்டே இருந்தது... அன்னையின் திருவருளோடு இன்றைய பதிவு இதோ உங்கள் பார்வைக்காக....

அபிராமிப் பட்டரின் பாடலுக்கு முன்னர் அவ்விடத்து எம் மனத்தில் எழுந்த கவி ஒன்று அன்பர்களின் பார்வைக்காக...

"நெஞ்சத்துப் பொய்யனடி...


                 நேயங்கெட்ட பாவியடி.....


தஞ்சமென்று நின்பதந்தாழ்


               தொண்டர்க்கெல்லாம் தூரனடி...


வஞ்சனையே பணியென்னும்


               வல்லரக்கர் நேசனடி...


அஞ்சேலென் றெனையேற்க


                அம்மை நீ வந்ததென்ன??"

இனி அபிராமிப் பட்டரோடு செல்வோம்...

பாடல் பதினேழு

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்


துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி


பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்


மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே

விளக்கம் :

அபிராமி அன்னை மிகவும் அதிசயமான வடிவத்தைக் கொண்டவள் (அதென்ன அதிசயம் ? விடை பாடலின் இறுதியில் வருகிறது) அழகிய தாமரை மலர் முதற்கொண்டு அனைத்து மலர்களும் வணங்கிப் போற்றும் வெற்றித்திருமுகத்தைக் கொண்ட கொடிபோன்ற பேரழகி.. அவளின் துணைவர் யாரெனில் ரதியின் கணவனான மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியென்றாக தன் பார்வையாலேயே அவனை எரித்தவர். அப்படிப்பட்ட சிவபெருமானது மதியை வென்று அவரது இடப்பாகத்தைப் பெற்றுக்கொண்டாயே... இதுவல்லவோ அதிசயம்...

முந்தைய பாடலில் அபிராமிப் பட்டர் அதிசயம் என்று குறிப்பிட்டது எங்கும் விரிந்த பரப் பிரம்மமான அன்னை அடியேன் அறிவிற்கு எட்டும் அளவிற்கு குறுகிய அவளது பெருங்கருணை... இவ்விடத்து அவர் சிவனும் சக்தியும் இணைந்து தோற்றமளிக்கும் சிவசக்தி உருவத்தைக் குறிப்பிடுகிறார். அர்த்த நாரீஸ்வரராக, அம்மையப்பனாக அவளின் தோற்றத்தைக் கண்ட அபிராமிப் பட்டருக்கு அது ஒரு அதிசயமாகத் தோன்றுகிறது... அபிராமியை இதுவரை பெண்ணுருவிலேயேக் கண்டுவந்த அவருக்கு அம்மையப்பனாக அன்னை காட்சியளிக்கிறாள்... இதென்ன திருக்கோலம்... ? இடப்பாகம் பெண்ணுரு... வலப்பாகம் ஆணுரு.... விந்தையாக இருக்கிறதே... இதுவரை இதைப் போன்ற உருவத்தை நாம் கண்டதே இல்லையே... என்று அவர் வியக்கும் போது அது அவருக்கு அதிசயமாகப் படுகிறது...

இவ்விடத்து இன்னொரு நோக்கும் உள்ளது... அன்னையின் திருவுரு அம்மையப்பனாகக் கண்டதை அதிசயம் என்று உரைத்தாரோ அல்லது.... மன்மதனைத் தன் பார்வையால் எரித்த ஈசனது மதியை வென்று அவரது இடப்பாகத்தைத் தன்னதாக்கிக் கொண்டாளே... அதனை அதிசயம் என்று உரைத்தாரோ என்பது அபிராமிப் பட்டருக்கே வெளிச்சம்... மூன்றாவது நோக்காக... இவ்விரண்டையும் சேர்த்து அன்னையின் திருவுரு ஓர் அதிசயம் என்றும் அழைத்திருக்கலாம்...

"அரவிந்தம் எல்லாம் துதி சய ஆனன சுந்தர வல்லி" தாமரை முதலான மலர்கள் எல்லாம் போற்றி வணங்கும் வெற்றித் திருமுகத்தைக் கொண்ட சுந்தரவல்லியே... கொடியைப் போன்ற மென்மையான பேரழகியே.... நீயோ கொடியைப் போன்றவள்... ஆனால் மலர்கள் உன்னைத் துதி செய்கின்றன.. அதற்குரிய வெற்றித் திருமுகத்தைக் கொண்டவள் நீ... இது ஒரு அதிசயம் அன்னையே... என்று அபிராமிப் பட்டர் வியக்கிறார்....

"துணை" நின் துணைவன் யார் தெரியுமா? "இரதி பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்" இரதியின் பதியான மன்மதனது வெற்றியானது தோல்வியாகத் தன் கண்களால் பார்த்தவர்... தன் கண்களால் அவனை எரித்து அரூபியாக்கியவர்.... மன்மதனின் மலர்க்கணைகளால் தீண்டப் பட்டோர் மீள்வது இல்லை... அவன் செல்லுமிடமெல்லாம் வெற்றிதான். (அதிக விளக்கம் தேவை இல்லை என்று எண்ணுகிறேன். சுருக்கமாக "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" போதும் அல்லவா) அப்படிப் பட்ட மன்மதன் எவ்விடம் தோற்றுப் போனான் தெரியுமா??? ஒரு முறை அமரர்கள் ஈசனது தயை வேண்டி நிற்கையில் அவரோ தியானத்திலிருந்து எழுந்த பாடில்லை... அவ்வமயம் மன்மதனை அழைக்க அவன் செருக்கோடு முன்வந்து தன் மலர்க்கணைகளால் ஆண்டவனைத் தொடுகிறான்... ஆனால் நிகழ்ந்ததோ வேறு... அவன் எல்லாவிடத்தும் பெற்று வந்த வெற்றிகளெல்லாம் ஈசனது முன்னே தோல்வியாயிற்று... அவருக்கு வந்ததே கோபம். தனது நெற்றிக் கண்ணால் அவனைக் கண்டார்... அதன் வெப்பம் தாளாது மன்மதன் தன் உருவிழந்தான்... ஈசனுக்கு அப்படிப் பட்ட பெயருண்டு... யாராலும் வெல்ல இயலாத மன்மதனையும் வென்றவர்... எனவே இவரை வெல்ல யாராலும் இயலாது... அப்படிப் பட்ட ஈசனது அறிவையும் நீ வென்று விட்டாயே தாயே... அவரது அறிவை வென்று, அவர்தம் இடப் பாகத்தை உனதாக்கிக் கொண்டாயே... என்று அபிராமிப் பட்டர் வியக்கிறார்... தனது பாடலால் நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறார்...

பாடல் பதினெட்டு

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்


செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே


அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து


வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.



விளக்கம் : அபிராமி அன்னையே... ஈசனது இடப் பாகத்தை கவர்ந்து கொண்டாயல்லவா? அவ்விறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் மனத்துள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை ஆற்கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, என் உயிரைக் கவர காலன் கோபத்துடன் வரும் வேளை தோன்றி அருள வேண்டும்.

இவ்விடத்து அபிராமிப் பட்டர் தனது மரணவேளை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார்.. இவ்வமயம் அங்கேயும் காலன் காத்திருக்கின்றான்... அபிராமிப் பட்டர் குறிப்பிட்டது போல் இவ்விரவில் முழு நிலாத் தென்படாவிடில் காலன் கட்டிய கயிற்றால் பிறவியை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை பட்டருக்கு... ஆனால் அவருக்கோ அன்னை தன்னைக் காப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.. .நூறு பாடல்கள் முடிந்த பின்னரும் அன்னையின் பதில் வராவிடில் தானே மரணத்தைத் தழுவிக்கொள்வதாக ஆணையிட்டுள்ள அபிராமிப் பட்டர் "வெவ்விய காலன்" தன் மேல் வரும்போது அன்னை இப்படிப் பட்டத் திருக்கோலத்தோடு தன்னருகே தோன்ற வேண்டும் என்று பட்டியலிடுகிறார்...

எப்படிப் பட்ட தோற்றமாம்??? கடந்த பாடலில் சொன்னாரல்லவா ஈசனது இடப்பாகத்தை நீ கவர்ந்து கொண்டாய் என்று? அவ்வீசனும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடன் வா.... என்றழைக்கிறார். ஏன்? காலன் வரும் வேளை மனித மனது இன்பத்துடன் இருப்பதில்லை... ஊழ் பிடித்த இவ்வூணுடலை விட்டு வெளியேறும் வேளை நாம் அதன் மீது கொண்ட பந்தத்தால் ஈர்க்கப் பட்டு அவதியுறுகிறோம்.. அழுகிறோம்... ஆனால் தாயே... நான் அழக்கூடாது... அதற்கு என்ன செய்ய வேண்டும்... நீ அந்த ஈசனோடு மகிழ்ந்திருக்கும் திருக்கோலத்தோடு வந்து அருள் செய்... நான் மகிழ்வேன்... என்னை அக்காலன் கவர்ந்து செல்லட்டும் என்கிறார்.. மேலும் உங்களது திருமணக் கோலத்தோடு காட்சியளியுங்கள் என்கிறார்... அம்மை மற்றும் அப்பனின் திருமணக் கோலத்தைக் காணக் கண்கோடி வேண்டுமல்லவா? மதுரை மாநகரில் நடைபெறும் சொக்கநாதார் - மீனாட்சியின் திருமணக் கோலத்தைக் கண்டு வாருங்கள் அவ்வின்பம் என்னவென்பது உங்களுக்குப் புரியும்... அப்படிப் பட்ட திருமணக் கோலத்தை முன்னரே தமது தியானத்தில் கண்டு மகிழ்ந்தவர் அபிராமிப் பட்டர். எனவே அப்படிப் பட்டத் திருக்கோலத்தைத் தனது மரணவேளையில் கண்டு இன்புற வேண்டும் என்கிறார்... மேலும் " சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும்" வேண்டுமென்கிறார். தாயே உனது பொற்பாதங்களைக் காணும் முன்னர் என் மனது அசுத்தங்களால் நிறைந்திருந்தது... உனது அழகிய பொற்பாதத்தை நான் கண்ட பின்னர் அப்பாதங்களால் அடியெடுத்து வைத்து நீ என் மனத்துள் புகுந்தாய்... என் மனத்தில் இருந்த அசுத்தங்களெல்லாம் தீர்ந்து போயின.. நீ என்னை ஆண்டாய்........ அப்படி என்னை நீ ஆள்வதற்குக் காரணமான உனது பொற்பாதங்களையும் காலன் என்னைக் கவர மிகுந்த கோபத்தோடு வரும் வேளை நான் காண வேண்டும்... நீ காட்சி தந்தருள வேண்டும் என்பது அபிராமிப் பட்டரின் வேண்டுகோள்..

தொடரும் பாடல்களின் விளக்கத்தை அடுத்த மடலில் காணலாம். துர்காஷ்டமி அன்று மனத்தில் எழுந்த ஆனந்தத்தோடு இம்மடலை வரைந்திருக்கின்றேன்... நீங்களும் அவ்வானந்ததோடு பாடல்களைப் படித்து இன்புறுங்கள்.. மீண்டும் சந்திப்போம்..

கருத்துகள் இல்லை: